மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 7 - பிக்ஷுவின் ஏமாற்றம்!

     புத்தபிக்ஷுணி கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கலங்கமாலரையரும் பூதுகனும் அவள் செல்வதையே வியப்புடன் நோக்கினர். இந்தச் சமயத்தில் அந்த புத்த விஹாரத்திலிருந்து வேறொரு உருவமும் வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் அவர்களுக்குச் சமீபம் வந்ததும் அது யாரென்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அன்று பூசை வேளையில் அந்தப் பெண் மீது எந்த பிக்ஷு குற்றம் சுமத்தினாரோ, அவரே தான் என்று தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு ஏற்படவில்லை. அந்த பிக்ஷு முன்னால் சென்ற அந்தப் பெண்ணைப் பின்பற்றிச் செல்லுகிறவர் போல் அந்தச் சோலையைத் தாண்டி நடந்தார். பூதுகன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, "கலங்கமாலரையரே! இதென்ன துறவு வாழ்க்கை? ஒரு பெண்ணைப் பற்றிய கவலை தான் ஒரு துறவியின் கொள்கையா? ஒரு நடத்தையை உளவு பார்த்து அவள் மீது குற்றம் சுமத்துவது தான் ஒரு புத்த பிக்ஷுவின் இலட்சியமா? இப்படிப் பட்ட கவலையில் மூழ்கி இருக்கும் ஒரு பிக்ஷு எப்படிக் கடைத்தேற முடியும்? புத்த பெருமான் புத்த வக்கத்தில் சொல்லுகிறார், 'கண்ணைக் காத்தல் நலம், உள்ளத்தைக் காத்தல் நலம்; இவை எல்லாவற்றையும் காத்துக் கொள்ளும் பிக்ஷு சகல துக்கங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறான்' என்று. கலங்கமாலரையரே! பாவம்! இந்த பிக்ஷு எதைக் காக்கப் பாடுபடுகிறார் என்பது உங்களுக்குப் புரிந்து விட்டதா?"

     ஏதோ யோசனையில் இருந்தவர் போலிருந்த மாலரையர் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல், "பூதுகா! இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது. இதை எப்படியேனும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்!" என்றார்.

     "அது ஒரு கடினமான காரியமல்ல. நீங்கள் ஒரு புத்த பிக்ஷு என்ற நிலையில் அவர்களைப் பின் தொடர்ந்து போவது உசிதமாகாது. நீங்கள் உங்கள் இருப்பிடத்துக்குச் செல்லுங்கள். நான் இதைக் கவனித்துக் கொள்கிறேன்" என்றான்.

     மாலரையருக்கு அவனுடைய யோசனை மிகவும் நலமானதாகவே பட்டது. "ஆம்! உன் யோசனை சிறந்ததுதான். நான் போகிறேன். நீ இப்பொழுதே அவர்களைப் பின் தொடர்ந்து சென்று விஷயத்தை அறிந்து கொள்வது நலம்" என்றார்.

     பூதுகன் அதற்கு மேலும் அங்கு தாமதிக்கவில்லை. அந்த பிக்ஷுணியைத் தொடர்ந்து சென்ற பிக்ஷுவின் பின்னால் அவனும் நடந்தான்.

     இளம் பருவத்தினளான அந்த பிக்ஷுணி அந்த நிலவிடையே நிழல் உருவம் நகர்ந்து செல்வது போல் அந்தச் சோலையைத் தாண்டி, கடற்கரையைக் கடந்து, பட்டினப்பாக்கத்தை நோக்கி நடந்தாள். அவளைத் தொடர்ந்து சென்ற பிக்ஷுவும் அவள் எங்கே செல்கிறாள் என்பதை அறிய நினைப்பவர் போல் அவளுக்குப் பத்தடி பின்னால் நடந்து கொண்டிருந்தார். பூதுகன் அந்த பிக்ஷுவுக்குப் பத்தடி பின்னால் நடந்து கொண்டிருந்தான். அந்த அழகான நிலவொளியில், அகன்ற வீதிகளும், அழகான கட்டடங்களும் நிறைந்த அந்தப் பட்டினப்பாக்கம், அந்தச் சமயத்திலும் அமர உலகம் போலக் காட்சியளித்தது என்றால் கரிகாலன் போன்ற பேரரசர்கள் அங்கு வாழ்ந்த நாளில் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமா? வானளாவி நிற்கும் மாடமாளிகைகளோடு கூடிய ராஜ வீதிகள், ரத வீதிகள், பெரிய வணிகர்களும் பிரபுக்களும் வாழ்ந்த வீதிகள், அமைச்சர்கள் சேனாதிபதிகள் முதலியோர் வசித்த வீதிகள், ரத சாரதிகள், போர் வீரர்கள், யானைப் பாகர்கள் முதலியோர் வாழ்ந்த வீதிகள், அதற்கடுத்து வேதியர்கள், சோதிடர்கள் முதலியோர் வசித்த வீதிகள், அதை அடுத்து இசை வல்லுனர்கள், நாட்டியக் கணிகையர்கள் முதலியோர் வாழ்ந்த வீதிகள், ஒன்றுக்குப் பின் ஒன்றாக அந்த வீதிகள்தான் எவ்வளவு அழகாக அமைக்கப்பட்டிருந்தன! இத்தகைய அழகிய நகரைச் சிருஷ்டிக்கக் கரிகாலன் எத்தகைய பாடுபட்டானோ? ஒவ்வொரு வீதியிலும் அந்த வீதிகளில் உள்ள ஒவ்வொரு வீடும் அங்கு வாழ்பவர்களின் தகுதிக்கு உரிய முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வீதிகளிடையே அழகான தேவாலயங்களும், யானை, குதிரை முதலியன கட்டுவதற்கான கூடங்களும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருந்தன. அமைதி நிறைந்த அந்த நடுநசிப் பொழுதில் அந் நகரின் பூரண எழிலும் - அழிவுற்ற சாம்ராஜ்யத்தின் பெருமைகளை யெல்லாம் ஏதோ கனவில் நினைவுக்குக் கொண்டு வருவது போலத் தான் இருந்தது. ஒரு வம்ச அரசர்களின் சாம்ராஜ்யம் அழிந்து விட்டது. ஆனால் இன்னும் அந்த சாம்ராஜ்ய பாரம்பரியத்தில் வந்த பெருமக்கள் நகரில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். எந்தெந்த வீதியில் எத்தகையவர்கள் இருந்து வந்தார்களோ, அத்தகையோரின் சந்ததிகள் தான் அந்தந்த வீதிகளில் வாழ்ந்து வந்தனர். அமைச்சரின் மகன் அமைச்சனாக இல்லாவிட்டாலும், போர் வீரனின் மகன் போர் வீரனாக இல்லாவிட்டாலும் சாம்ராஜ்யம் அழிந்தும் அதன் பெருமை அழியாதிருப்பது போல, தங்கள் முன்னோரின் பெருமை தங்களுக்கு இல்லாவிட்டாலும் அத்தகைய வீரமும் திறமையும் உள்ளவர்களாகத்தான் இருந்தனர். கடந்த நாட்களைப் போன்ற நாட்களும் திரும்ப வரும் என்ற கனவோடு.

     அந்த இளம் பிக்ஷுணி பட்டினத்து ராஜ வீதிகளைத் தாண்டி, ரத வீதி தாண்டி, இன்னும் பல வீதிகளையும் கடந்து, இசைவாணர்களும் நாட்டியக் கணிகையர்களும் வாழும் வீதிக்கு வந்தாள். ஒரு காலத்தில் கோவலனும், மாதவியும் மகிழ்ந்திருந்த வீதியல்லவா அது? எடுக்க எடுக்கக் குறையாது அன்னமளிக்கும் அக்ஷய பாத்திரத்தை ஏந்தி உலகில் பசிப்பிணியைத் தீர்த்துப் புரட்சி செய்து காட்டிய மணிமேகலை பிறந்த வீதியல்லவா அது! இப்பொழுதும் அந்தப் பெருமைகளை, எழில் மிக்க உல்லாச கூடங்களையும் மாடங்களையும் தழுவி நிற்கும் நிலவு சொல்லிச் சொல்லி மன ஆதங்கமடைவது போல் தானிருந்தது.

     அந்த இளம் பிக்ஷுணி நாட்டியக் கணிகையர்கள் வாழும் அந்த வீதியை அடைந்தது, அவளைத் தொடர்ந்து வந்த பிக்ஷுவுக்கு ஆச்சர்யத்தை அளித்ததோ இல்லையோ பூதுகனுக்குச் சிறிது ஆச்சரியத்தைத்தான் அளித்தது. இத்தகைய இளம் பருவத்திலுள்ள ஒரு பிக்ஷுணி இந்த வீதியை அடைந்தது தனக்காகக் காத்திருக்கும் தன் காதலனை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டான் பூதுகன். அவனுக்கு இவ்வளவு நேரமும் உளவு பார்ப்பதில் இருந்த ஆர்வமும் சுவாரசியமும் குறைந்து விட்டது. 'இதென்ன? சகஜம்! இந்தப் பருவத்தில் இதை யார் கட்டுப்படுத்த முடியும்?'

     பௌத்த பிக்ஷுணி என்பதால் ஒரு இளம் வயது நங்கையின் மனத்திலிருந்து இத்தகைய ஆசைகள் அழிந்து விடுமா? இதைப் பின் தொடர்ந்து வந்து உளவு பார்த்துத் தெரிந்து கொள்வதனால் என்ன லாபம்? உலகத்தில் ஒவ்வொரு ஜீவனும் இன்பம் அனுபவிக்கத்தானே பிறந்திருக்கின்றன? பௌத்த பிக்ஷுணி இன்ப வேட்கையைத் தீர்த்துக் கொள்வதனால் என்ன பாவம் இருக்கிறது? இந்த உலகத்தில் இன்பம் அனுபவிக்கும் வரையில் தான் சுவர்க்கம். துக்கம் அனுபவிக்கும் வரையில் இதுதான் நரகம். சுவர்க்கம் என்று தனியாக எதுவும் இல்லை. நரகம் என்று தனியாக எதுவும் இல்லை. கடவுள், மதம், ஆத்மா, சுவர்க்கம், நரகம், தவம், விரதம், தியானம், பூசை என்றெல்லாம் மனிதன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஏன் உழல வேண்டும்? இதிலிருந்தெல்லாம் தங்கள் மன இச்சைக்காகச் சிறிது விலகி நிற்பவர்களை மனிதன் ஏன் தூஷிக்க வேண்டும்? ஏன் திரஸ்கரிக்க வேண்டும்? புத்தர் பெருமான் உலகத்தின் துக்கத்தையெல்லாம் துடைத்தெறிவதற்குத்தானே முயன்றார்? பிறருடைய இன்பங்களுக்கு இடையூறாக நின்று அவர்களுக்குத் துக்கத்தையும் துயரத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்று திட்டம் வகுத்தாரா? இந்த உலகில் பற்றை விட்டு இந்த உலகின் நலனுக்காகத் துறவு பூணும் மனிதர்களைத்தானே தம்முடைய சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயன்றார்? பருவத் துடிப்பு நிறைந்த இத்தகைய இளம் பெண்களையெல்லாம் பிக்ஷுணிகளாக்கிக் கட்டுப்படுத்தி அவர்களுடைய இன்ப வாழ்க்கையை யெல்லாம் சீர்குலைக்க வேண்டுமென்று அவர் நினைத்தாரா? ஒரு இளம் பெண்ணைப் பற்றி முன்னதாகவே யோசிக்காமல் சங்கத்தில் அனுமதித்து அவளைப் பிக்ஷுணியாக்கிய பிறகு, அவளுடைய நடைமுறைகளைக் கண்காணிக்கப் புகுவது பின்புத்திதானே? இவள் ஒழுங்கு தவறியவள் என்றால் இவளைத் தொடர்ந்து இவளுடைய நடத்தைகளை உளவு பார்க்க முயற்சி செய்யும் அந்த பிக்ஷுவினுடைய யோக்கியதையைப் பற்றி என்ன சொல்வது? பிறருடைய தினசரி வாழ்க்கை முறையில் குறுக்கிடும் இந்த பிக்ஷுவை யல்லவா முதலில் விசாரித்துத் தண்டனை அளிக்க வேண்டும்? போகட்டும் - இந்தப் பயித்தியக்கார பிக்ஷுவைப் போல் நானும் ஏன் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து உளவு பார்க்க வேண்டும்?

     இவ்வாறு அவன் எண்ணியவனாக அப்பொழுதே அங்கிருந்து திரும்ப நினைத்தான். ஆனால், அடுத்த கணம் அவனுக்கு மேலும் ஒரு பேராச்சர்யத்தைக் கொடுக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த பௌத்த பிக்ஷுணி அங்கொரு மாளிகையின் வாயிலை யடைந்து கதவைத் தட்டிய போதுதான் அவனுக்கு இத்தகைய திகைப்பும் வியப்பும் ஏற்பட்டன. அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டவுடனே திறக்கப்பட்டது. அவ்விளம் பிக்ஷுணி அந்த வீட்டுக்குள் நுழையவும் கதவு மறுபடியும் தாளிடப்பட்டு விட்டது.

     அவளைத் தொடர்ந்து வந்த பெரிய பிக்ஷு மிகவும் ஏமாற்றம் அடைந்தவர் போல் தயங்கியபடியே அந்த வீட்டின் வாசலில் நின்றார். அந்த பிக்ஷுவைத் தொடர்ந்து வந்த பூதுகன் சிறிது ஆத்திரமும் வேகமும் கொண்டவன் போல் பிக்ஷுவின் பின்னால் வந்து அவருடைய தோளைப் பிடித்து உலுக்கினான். அந்த பிக்ஷு பேயால் அறையப்பட்டவர் போல் நடுங்கிய வண்ணம் திரும்பிப் பார்த்தார். நிலவொளியில் பூதுகனின் முகமும் அதில் நிறைந்திருந்த கோபமும் ஆத்திரமும் அவருக்கு நன்கு தெரிந்தன.

     பூதுகன் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, "அடிகள் என்ன இப்படிப் பார்க்கிறது? இந்த வேளையில் அதுவும் இந்த வீதிக்கு இப்படிப்பட்ட கோலம் தரித்தவர்கள் வரக்கூடாதென்பது மததருமமாய் இருக்கலாம்; ஆனால், அது மனித தர்மம் என்று நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் - இது பாபமல்ல. ஒருவன் தன் இச்சையை அடக்கிக் கொண்டு, விரும்பும் இன்பத்தைத் துறந்து அடங்கி வாழ்வதுதான் மகா பாபம் என்பதுதான் என் சித்தாந்தம். அடிகள் அச்சப்படுவானேன்? தாராளமாகக் கதவைத் தட்டலாம்" என்றான்.

     பிக்ஷு ஏதோ தடுமாறியவர் பரபரவென்று விழித்தார். "நீ சொல்வது போல் நான் அத்தகைய விருப்பத்தைக் கொண்டு இங்கு வரவில்லை. நான் வந்தது வேறு காரணம். 'புலனடக்கத்தோடு, நிதான உணர்வுடனும், நல்லறத்திலே நாட்டத்துடனும், நிறைந்த வீரியத்துடனும், இன்பங்களை எதிர்பாராமல் வாழ்ந்து வருவோனை, பாறைகள் நிறைந்த மலையைச் சூறாவளி அசைக்க முடியாதது போல் மாறன் வெல்ல முடியாது' என்று ததாகதரே சொல்லி இருக்கிறார்" என்றார்.

     "ஓகோ! அப்படியா? அறிந்து கொண்டேன். அடிகளார் இத்தகைய வீதிகளுக்கு வர வேறு காரணம் என்ன இருக்கப் போகிறது? பிக்ஷை ஏற்க வந்திருக்கலாமோ? அதுவும் இந்த நடு நசியில்...? பிக்ஷா பாத்திரமும் தங்கள் கையில் இல்லையே?" என்றான்.

     பௌத்த பிக்ஷுவுக்கு அந்தச் சமயம் பூதுகனிடமிருந்து எளிதில் தப்ப முடியும் என்று தோன்றவில்லை. அந்தச் சமயம் அவனுக்கு நயமாகவே பதில் சொல்லி எப்படியாவது அந்த இடத்தை விட்டு அகன்றால் போதும் என்று அவருக்குத் தோன்றியது. "சங்கத்தைச் சேர்ந்த பௌத்த பிக்ஷுணி ஒருத்தி இங்கு வந்தாள். அவளைக் கவனிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன்" என்றார் சிறிது தயக்கத்தோடு.

     பூதுகன் 'கலகல'வென்று ஒரு ஏளனச் சிரிப்புச் சிரித்தான். "பிக்ஷுக்கள் என்றால் பிக்ஷுணிகளைக் கவனிக்கத்தானே இருக்கிறார்கள்? இதில் ஒன்றும் தவறில்லை. அடிகளார் பிக்ஷுணியைக் கவனித்தாகி விட்டதா? அந்த பிக்ஷுணி எங்கேயோ?" என்றான்.

     "அவள் இந்த வீட்டுக்குள் போய் விட்டாள். நான் போகிறேன். அவள் எங்கே வருகிறாள் என்று கவனிக்கத்தான் வந்தேன். அவ்வளவு தான்" என்று கூறினார் பிக்ஷு.

     "அவ்வளவுதானா? இந்த வீட்டுக்குள்ளேயா சென்றாள்? நீங்கள் அச்சப்பட வேண்டாம். தாராளமாய் வீட்டுக் கதவைத் தட்டுங்கள். இன்னும் தீரத் தெளிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு விடலாம். அவளைத் தொடர்ந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டு இவ்வளவு மாத்திரம் தெரிந்து கொண்டு போவது போதாது என்று நினைக்கிறேன்" என்றான் அவன் பரிகாசமாக.

     பூதுகன் தன்னை மிகவும் விபரீதமான சூழ்நிலையில் சிக்க வைக்க நினைக்கிறான் என்பதை அவனுடைய ஏளனம் நிறைந்த வார்த்தை மூலமாக அறிந்து கொண்டார் அவர். அந்தச் சமயத்தில் அவனோடு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அவ்விடமிருந்து சென்று விட நினைத்தார். அவர் ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டவராக, "நாங்கள் எந்த வீட்டிலும், அதுவும் இந்த நேரத்தில் நுழையவே கூடாது. அது எங்கள் தருமத்துக்கு விரோதம். சங்கத்தில் சேர்ந்த ஒரு பிக்ஷுணி தருமத்துக்குப் புறம்பாக நடந்தால், அதனால் சங்கமே பாழாகி விடும். இப்படிப்பட்டவளைச் சங்கத்திலிருந்து விலக்குவதுதான் உத்தமமான காரியம். இந்த பிக்ஷுணியைப் பற்றிச் சிறிது சந்தேகம். அதைக் கவனிக்க வேண்டுமென்று தான் வந்தேன். ஒரு பிக்ஷுணி இந்த நேரத்தில் தனக்குரிய இடமாகிய விஹாரத்திலிருந்து வெளியே வருவது சாதாரண காரியமா? எனக்கு அவளைப் பற்றித் தெரிந்தவரையில் போதும். பௌர்ணமியன்று இரவு நடக்கும் பாபப் பிராயச்சித்த சடங்கான பாடி மோஹ்ஹத்தில் அவளைச் சங்கத்திலிருந்து நீக்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விடுகிறேன்..." என்று சொல்லி, அந்த இடத்திலிருந்து அதி வேகமாகக் கிளம்பினார் பிக்ஷு.

     பூதுகன் அவரைத் தடுத்து நிறுத்திச் சிறிது நேரம் அவரோடு எதேனும் வம்பு செய்யலாம். ஆனால் அப்படிச் செய்ய அவனுக்கு மனமில்லை. அந்தச் சமயத்தில் அவரை விட்டுவிடத் தீர்மானித்தான். அவன் சிரித்துக் கொண்டே, "அடிகளாருக்குக் கடைசியாக ஒரு வார்த்தை - பூதுகன் என்ற நாஸ்திகனைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அவன் தான் நான். எனக்கும் புத்தர், தருமம், சங்கம் இவைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். ததாகதரின் உபதேச மொழிகளில் ஒன்றை மாத்திரம் உங்களுக்குச் சொல்லி உங்களை விட்டு விடுகிறேன். 'ஒரு பிக்ஷு தன் சகல பாவங்களையும் தன்னிடமிருந்து நீக்கிக் கொள்ளவே எப்பொழுதும் முயற்சி செய்ய வேண்டும். எப்பொழுதும் தான் செய்யும் கர்மங்கள் நற்கர்மங்கள் தானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவைகளுக்கு ஆதாரமாக இருப்பது அவன் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான். மாதக்கணக்காக மூடன் தர்ப்பைப் புல்லின் முனையினால் துளித் துளியாக உணவை எடுத்து உண்டு வந்தாலும், இருதயத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு தர்மத்தை நன்கு அறிந்தவர்களின் பதினாறில் ஒரு பகுதிக்குக் கூட அவன் ஈடாக மாட்டான்" என்றான்.

     அந்த இடத்தில் அதிக நேரம் நின்றால் பூதுகன் ததாகதரின் மற்ற உபதேசங்களையும் தனக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விடுவானோ என்று பயங்கொண்டவர் போல அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தார் அந்த பிக்ஷு. பூதுகன் அந்த பிக்ஷு தலைமறையும் வரையில் அங்கு நின்றபடியே பார்த்துவிட்டு, அந்த மாளிகையின் வாயிற் கதவை வந்து தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. கையில் தீபம் ஏந்திய வண்ணம் வந்து வாயிற் கதவைத் திறந்த நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி முகத்தில் மகிழ்ச்சிக்குறி தோன்ற, "வாருங்கள்! உங்கள் வருகை அத்தி பூத்தாற் போல் இருக்கிறது. இரண்டு தலைமுறைகளுக்குப் பின் சோழ சாம்ராஜ்யத்தை இந்த நாட்டில் நிலை நிறுத்திய பிறகு தான் நீங்கள் வருவீர்களோ என்று நினைத்தேன்" என்று உபசார வார்த்தைகள் சொல்லி அவனை உள்ளே அழைத்துச் சென்றதிலிருந்து ஏற்கனவே அவன் அந்த இடத்திலுள்ளவர்களோடு நெருங்கிப் பழகியவன் என்பதைத் தான் எடுத்துக் காட்டியது.

     பூதுகன் சிரித்துக் கொண்டே, "அது இருக்கட்டும், சுதமதி! வைகைமாலை எங்கே?" என்றான்.

     "அவளுக்கென்ன? ஆட்டத்திலும் பாட்டத்திலுமே காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைக்கிறாள். இரவு பகல் என்று பார்க்காமலேயே அப்பியாசம் நடக்கிறது. ஏனென்றால் அவள் ஆட்டத்தைப் பார்த்து இவள் பாட்டுக்குச் சோழ மன்னன் மான்யம் கொடுத்தது போல் யாராவது கொடுத்து விடப் போகிறார்கள் அல்லவா?" என்று பூதுகனிடம் சொல்லிக் கொண்டு வரும் போது அம்மாளிகையின் பின் கூடத்திலிருந்து இசையொலியும் நாட்டியமாடும் சதங்கை யொலியும் கேட்டன. பூதுகன் சுதமதியின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் உள் கூடத்திற்குச் சென்றான்.

     அது மிகவும் அழகான மாளிகை. வெளிக்கூடத்தை விட உள்கூடம் நாட்டியம் ஆடுவதற்காகவே அரங்கு போல் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. கூடத்துக்கு நேராக அமைக்கப்பட்டிருந்த மேடையில் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. புத்த பெருமான் தியானத்தில் அமர்ந்திருப்பது போலச் சலவைக்கல் படிமம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அமர உலகத்து அரம்பையர்களில் ஒருத்தியே அங்கு வந்து நடனம் ஆடுவது போல் வைகைமாலை நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். அது கூடப் பூதுகனுக்கு ஆச்சரியத்தை விளைவிக்க வில்லை. அவள் நாட்டியத்துக்குத் தகுந்தாற் போல் யாழை மீட்டிப் பாடிய ஒரு உருவம் தான் அவனைத் திகைக்க வைத்தது.