மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 8 - வைகைமாலையின் தோழி

     வைகைமாலையின் நடனத்துக்கேற்ப இளம் வயதுடைய பௌத்த பிக்ஷுணி யாழோடு இழைந்த இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். அந்தக் கூடத்துக்குப் பூதுகன் வந்த சமயம் அவர்கள் இருவரும் மெய்மறந்த நிலையில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தார்கள்.

     அகன்று வட்ட வடிவமாகத் தோன்றிய அக்கூடத்தைச் சுற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் - கூடத்தைச் சுற்றிலுமுள்ள சுவர்களில் பலவித நாட்டிய முத்திரைகளைக் குறிக்கும் சித்திரப் படங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

     வைகைமாலை தன் ஆட்டத்தினிடையே எதேச்சையாகத் திரும்பிய போது அங்கு பூதுகன் நிற்பதைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தவள் போல் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டாள். வைகைமாலை தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டதும், அந்த பிக்ஷுணி அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள் போல் சட்டென்று தன் பாட்டை நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். எதிர்பாராத வண்ணம் ஒரு வாலிபன் அந்த இடத்துக்கு வந்ததைப் பார்த்ததும் அவளுக்குச் சிறிது வெட்கமும் திகைப்பும் ஏற்படவே வீணையைக் கீழே வைத்து விட்டு எழுந்து நின்றாள்.

     "ஏன்? இன்னும் சிறிது நேரம் ஆடலாமே?" என்று சொல்லிக் கொண்டே பூதுகன் அங்கிருந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டான்.

     எதிர்பாரா வண்ணம் அந்த இடத்துக்குப் பூதுகன் வந்தது வைகைமாலைக்குச் சிறிது ஆச்சரியத்தையும் திகைப்பையும் தான் கொடுத்தது. அவள் பூதுகனிடம் நெருங்கி, "நீங்கள் இப்பொழுது இங்கு வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் விருப்பப்படி நீங்கள் காரியத்தை நிறைவேற்றாமல் இங்கு வரக்கூடாதென்று சொல்லியிருக்கிறேன் அல்லவா? இப்பொழுது என்ன? எல்லாம் எவ்வளவு தூரம் இருக்கிறது...?" என்றாள்.

     "வைகைமாலா! உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாத வரையில் இந்தப் பூதுகன் உயிரோடு வாழ விரும்ப மாட்டான். உன்னிடம் தனியாகச் சில வார்த்தைகள் பேசவேண்டும்..." என்று சொல்லியபடியே அவளுக்குச் சற்றுத் தூரத்தில் நிற்கும் பிக்ஷுணியைப் பார்த்தான். அந்த பிக்ஷுணி வெட்கமும் நாணமும் கொண்டவளாகத் தலை குனிந்த வண்ணமே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முக நிலை அவள் மனத்தில் எழுந்த கவலையையோ திகிலையோதான் எடுத்துக் காட்டுவதாக இருந்தது. வைகைமாலை அந்த பிக்ஷுணி இங்கு இருப்பதால் தான், பூதுகன் தன்னோடு சில ரகசியங்களைப் பேச அச்சப்படுகிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் போல், அந்த பிக்ஷுணியைப் பார்த்துக் கண்களால் ஜாடை காட்டினாள். அவளும் உடனே அதை உணர்ந்து கொண்டவள் போல மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

     அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்றவுடன், பூதுகன், "வைகைமாலா! நான் முயற்சி எடுத்துக் கொண்ட காரியத்தின் நிமித்தமாகவேதான் இப்பொழுது இங்கு வந்திருக்கிறேன். உன் விருப்பப்படி காரியத்தை நிறைவேற்றாத வரையில் இங்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம். நான் உளவு பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த இடமே அமைந்து விட்டால் நான் என்ன செய்ய முடியும்? நீயே என்னிடம் சொல்லாமல் பல ரகசியங்களை ஒளித்து வைத்துக் கொண்டு என்னை ஏன் அல்லல்பட வைக்கிறாய்? சதிகாரர்கள் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே இருக்கிறார்கள் என்ற ரகசியம் இன்றுதான் எனக்குப் புரிந்தது... அதுவும் உன் வீட்டுக்கே இவர்களில் சிலர் வருகிறார்கள் என்ற இந்த இரகசியம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது" என்று கூறினான்.

     வைகைமாலை ஆச்சரியமும் திகிலும் அடைந்தவளாய், "என் வீட்டிலேயே நீங்கள் உளவு பார்க்க வந்தீர்களா? அப்படி என்ன உங்களுக்குச் சந்தேகம் ஏற்படக்கூடிய நிலையில் காரியங்கள் இங்கே நடக்கின்றன?" என்று கேட்டாள்.

     பூதுகன் சிரித்தான். "உன்மீது சந்தேகம் இல்லை. இங்கு வருகிறவர்கள் மீது தான் எனக்குச் சந்தேகம். இந்த நேரத்தில், அதுவும் இந்த வீட்டில் ஒரு பௌத்த பிக்ஷுணிக்கு வேலையென்ன? அவள் யார்?" என்று கேட்டான்.

     வைகைமாலை சிரித்தாள். அந்த அழகியின் சிரிப்பு பூதுகனை மயக்குவதற்காக ஏற்பட்டதாக இல்லை. அவனுடைய தவறான அபிப்பிராயத்தை ஏளனம் செய்வது போலத்தான் இருந்தது.

     "இந்த பௌத்த பிக்ஷுணிக்கு இங்கென்ன வேலையா? இவ்வளவு நேரம் அவள் இங்கு என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை உங்கள் கண்ணால்தானே பார்த்தீர்கள்? இன்னிசை வித்தையில் தேர்ந்தவர்கள் எத்தகைய நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் அந்த வித்தை அவர்களை விட்டு அகன்று விடாது என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? அவளுக்கு இந்த உலகத்தில் ஏதேனும் ஆசை இருந்தால் அது பாட வேண்டும் என்ற ஆசைதான். அவள் பாடுவதற்காகத்தான் இங்கு வருகிறாள்" என்றாள்.

     "தெரிகிறது, அவள் நன்றாகப் பாடக் கூடியவள் என்பதை அறிந்து கொண்ட பின்னும் அதை நான் தெரிந்து கொள்ள முடியாதா? ஆனால் அவள் பாடுவதற்காக மட்டும் இங்கு வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவள் யார்? அவளுடைய நட்பு உனக்கு எப்படி ஏற்பட்டது?" என்று வியப்புடன் கேட்டான் பூதுகன்.

     "அவளைப் பற்றி ஏன் இவ்வளவு சந்தேகம் உங்களுக்கு?" என்று வினவினாள் வைகைமாலை.

     "சந்தேகப்படுவதற்கு எத்தனையோ இருக்கின்றன. அவளுடைய வாழ்க்கை விவரம் முழுதும் உனக்குத் தெரியுமா? இந்த இளம் வயதில் அவள் ஏன் இத்தகைய துறவுக் கோலம் பூண வேண்டும்? அதுவே எனக்குப் பெரிய சந்தேகமாயிருக்கிறது."

     "உங்களுடைய சந்தேகம் நியாயமானதுதான். அவளைப் பற்றிய வரலாறுகளெல்லாம் எனக்குத் தெரியும். 'அலையூர் கக்கை' என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் பிரசித்தி பெற்ற நாட்டிய கணிகையாகத் திகழ்ந்தாள். அவளைப் பற்றிய அநேக கதைகள் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வேத்தியல் கூத்து ஆடுவதிலும் தேவாலயங்களில் சாக்கைக் கூத்து ஆடுவதிலும் அவளைப் போன்ற திறமைசாலிகள் அந்தக் காலத்திலும் இல்லை, இந்தக் காலத்திலும் இல்லை என்று பேசிக் கொள்வார்கள். அவளுடைய கொள்ளுப் பேத்திதான் இவள். இவள் பெயர் மாலவல்லி. இவளைப் போலப் பாடுகிறவர்கள் இந்தக் காலத்தில் இல்லையென்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். இனிமேல் யாரேனும் பிறந்தாலும் பிறக்கலாம். இவளுடைய தாயும் என்னுடைய தாயும் நெருங்கிய தோழிகள். இதன் காரணமாகவே நானும் இவளும் நெருங்கிய நட்பு கொண்டவர்களாகி விட்டோம். இவள் இந்த வேளையில் தர்மத்தை மீறிப் பௌத்த விஹாரத்திலிருந்து இங்கு வருவாளானால், அது எனக்காகவும், உயர்ந்த சங்கீதத்துக்கு உயிர் கொடுப்பதற்காகவும் தான். இதைத் தவிர இதில் ரகசியம் வேறு எதுவுமில்லை. இதை உளவு கண்டு பிடிப்பதனால் உங்களுக்கு ஒரு லாபமும் ஏற்படப் போவதில்லை" என்றாள் வைகைமாலை.

     "வைகைமாலா! உன்னுடைய பேச்சு இனிமையாக இருக்கிறது. ஆமாம்! உன்னுடைய இதயம் கபடமற்ற இதயம். உன்னைப் போன்ற பெண்கள் உலகில் எதையும் எளிதாக நம்பி விடுவார்கள் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவள் அலையூர் கக்கையின் கொள்ளுப் பேத்தி எனத் தெரிந்து கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவள் சிறந்த பாடகி என்று அறிந்து கொண்டதிலும் எனக்குச் சந்தோஷம். ஆனால் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் எல்லாம் இவை அல்ல. நான் தெரிந்து கொள்ள வேண்டியது வேறு; இந்த இளம் வயதில் அவள் ஏன் துறவுக்கோலம் பூண வேண்டும் என்பதுதான்? அவளிடம் மனத்தைக் கவரும் அழகு இருக்கிறது. அதோடு நெஞ்சையள்ளும் இசைக்கலையும் இருக்கிறது. இப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கையில் என்ன வெறுப்பு ஏற்பட்டிருக்கும்...? ஏன் இந்தக் கோலம் பூண்டு திரிய வேண்டும்?" என்றான்.

     இதைக் கேட்டதும் வைகைமாலைக்குச் சிறிது குழப்பம் ஏற்பட்டது. வைகைமாலை சிறு குழந்தையாய் இருக்கும் காலத்தில்தான் அவளுக்கும் மாலவல்லிக்கும் நட்பு ஏற்பட்டது. வைகைமாலையின் தாய் பல்லவ மன்னரின் ராஜசபையில் ஒரு நாட்டியக் கணிகையாகச் சேவை செய்த போது வைகைமாலை சில வருடங்கள் காஞ்சியில் போய்த் தங்கி இருக்க நேர்ந்தது. அப்பொழுது பல்லவர் சபையில் சிறந்த பாடகியாகத் திகழ்ந்த மாலவல்லியின் தாய்க்கும் வைகைமாலையின் தாய்க்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஆனால் திடீரென்று வைகைமாலையின் தாய் இறந்து விடவே, அவளும், அவள் சகோதரி சுதமதியும் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கள் பாட்டியிடமே வந்து வசிக்க நேர்ந்தது. இதன் காரணமாக, மாலவல்லியோடு பல வருஷங்கள் அவளுக்குத் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு நாள் வைகைமாலை பௌத்த விஹாரத்துக்குத் தரிசனத்துக்குச் சென்றிருந்த போது அங்கு பிக்ஷுணிக் கோலத்தில் மாலவல்லியைப் பார்த்தாள்.

     சிறுவயதில் அவளைப் பார்த்தவளே ஆயினும் இப்பொழுது அவளை யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. மாலவல்லியை ஒருநாள் தன் வீட்டுக்கு வரும்படி வைகைமாலை வேண்டிக் கொண்டாள். மாலவல்லி தன்னுடைய பால்ய சிநேகிதையாகிய வைகைமாலையின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒருநாள் அவள் வீட்டுக்கு வந்தாள். அந்தச் சமயத்தில் வைகைமாலை பிக்ஷுணிக் கோலம் பூண்டதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தாள். மாலவல்லி தான் துறவுக் கோலம் பூண்டதற்குச் சரியான காரணங்கள் எதுவும் கூறவில்லை. மணிமேகலையைப் போல் உண்மையாக உலகத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பினால்தான், பிக்ஷுணிக்கோலம் பூண்டதாகச் சொன்னாள்.

     வைகைமாலை அவளிடம் மேலும் சில சமயங்களில் நிர்ப்பந்தித்துக் கேட்டபோது உலகத்தில் இன்பம், செல்வம், இளமை, சுகம் போன்றவைகளின் நிலையாமையைப் பற்றி எடுத்துக் கூறத் தொடங்கினாள். வைகைமாலையும் அவளுடைய இனிமையான வார்த்தைகளில் மயங்கி அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டாள். அதன் காரணமாக மாலவல்லியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் போயிற்று. நாளாக ஆக மாலவல்லி ஏன் துறவுக்கோலம் பூண்டாள் என்பதைக் கிளறிக் கேட்கும் நோக்கம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டது. உண்மையாகவே ஏன் அவள் துறவு மனப்பான்மையோடு பௌத்த சங்கத்தில் சேர்ந்திருக்கக் கூடாது என்று வைகைமாலைக்குத் தோன்றியது. ஆனால் உலகில் எதிலும் பற்றுதல் கொள்ளாதவள் போல் இருந்த மாலவல்லி பௌத்த சங்க விதிகளை மீறி ஒருவருக்கும் தெரியாமல் இரவு வேளைகளில் வைகைமாலையின் வீட்டை நாடி வந்து, கீதம் பாடுவதில் ஏற்பட்டிருக்கும் அடங்காத இச்சையும் மோகமும் வைகைமாலைக்குச் சில சமயங்களில் பேராச்சரியத்தைக் கொடுப்பதுண்டு.

     சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்களிலிருந்து ரசமான பகுதிகளை எடுத்து அழகாக இசையமைத்துப் பாடியது புத்த மதத்தின் மேல் அவளுக்குள்ள பக்தியையும் பற்றுதலையும் காட்டியது. ஒரு பௌத்த பிக்ஷுணி இசைக் கலையில் பற்றுதல் கொண்டு பாடுவது தர்ம விரோதம் என்று எப்படிச் சொல்ல முடியும்? எப்படியோ பூதுகன் மாலவல்லியைப் பற்றிய சந்தேகத்தைக் கிளப்பி விட்டது வைகைமாலையின் மனத்தில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. 'உண்மையாகவே மாலவல்லியின் வாழ்க்கையில் ஏதேனும் ரகசியம் புதைந்து கிடக்குமோ?' என்ற எண்ணம் வைகைமாலைக்கு ஏற்பட்டது. அவள் குழப்பத்தினிடையே "நீங்கள் சொல்லியபடியே மாலவல்லியின் வாழ்க்கையில் ஏதேனும் ரகசியம் இருக்கலாம். எனக்கும் அந்தச் சந்தேகம் ஆரம்பத்தில் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவளோடு பழகப் பழக அந்தச் சந்தேகம் என் மனத்திலிருந்து நீங்கிச் சாதாரணமாகவே அவள் துறவறத்தை விரும்பி ஒரு பௌத்த பிக்ஷுணி ஆகியிருக்கிறாள் என்ற எண்ணத்தில் இருந்து விட்டேன். நீங்கள் சொல்லியதன் பேரில் தான் எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் அவளுடைய வாழ்க்கையில் இந்தத் துறவத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவள் புத்த சங்கத்தில் சேர்ந்து ஒரு பிக்ஷுணியான பின் அவள் ஏதேனும் ரகசியமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவளாக எனக்குத் தோன்றவில்லை" என்றாள்.

     "உனக்குத் தோன்றாமல் போனதில் அதிசயம் ஏதும் இல்லை. ஆனால் நானும் அவளைப் பற்றித் திடமாக எதுவும் சொல்வதாக நினைத்துக் கொள்ளாதே. அவள் இங்கு வருவதை உளவு பார்க்கிறான் ஒரு பிக்ஷு. அவனை உளவு பார்த்துக் கொண்டு இங்கு நான் வந்தேன். பொதுவாகவே சொல்லுகிறேன். வைகைமாலா! சாம்ராஜ்ய நோக்கத்தில் ஈடுபடும் சூழ்ச்சிக்காரர்களெல்லாம் துவராடைக்குள் புகுந்து கொண்டு பல விதமான சூழ்ச்சிகளெல்லாம் செய்வதற்குப் பௌத்த சங்கங்கள் நிலைக்களமாகி விட்டன என்ற வருத்தம் தான் எனக்கு. அந்த பிக்ஷு ஏதோ அரசியல் நோக்கம் கொண்டு தான் பௌத்த சங்கத்தில் சேர்ந்திருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அவனை நான் எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறது. அது எனக்குச் சரியாக விளங்கவில்லை. அவன் இவளுக்கு விரோதமாக இவளைக் கவனிப்பதிலேயே நோக்கம் கொண்டவனாக இருப்பதால் இவளும் ஒரு அரசை ஸ்தாபிக்கவோ, அல்லது ஒரு அரசை வீழ்த்தவோ பாடுபடும் ஒருத்தியாகத்தானே இருக்க வேண்டும்? இவள் உன் வீட்டுக்கு வருவது அத்தகைய நோக்கத்தோடு இருக்கலாம்!"

     இதைக் கேட்டதும் வைகைமாலையின் சந்தேகமும் குழப்பமும் அதிகமாகி விட்டன. "நீங்கள் சொல்லிய பிறகு தான் எனக்கும் சந்தேகத்தின் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் நான் சில புத்திபிசகான காரியங்கள் செய்துவிட்டேன். மறுபடியும் இந் நாட்டில் சோழ சாம்ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று எனக்குள்ள ஆர்வத்தை அடிக்கடி என் பேச்சின் மூலம் அவளிடம் எடுத்துக் காட்டி விட்டேன்!"

     "அப்படியா! அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை. ஆனால் என்னைப் பற்றி நீ அவளிடம் ஒன்றும் சொல்லி விடவில்லையே?"

     "உங்களைப் பற்றிச் சொல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும். எப்பொழுதும் உங்களைப் பற்றிய நினைவாகவே நான் இருக்கும்போது?"

     "என்னைப் பற்றி அவளிடம் சொல்லி விட்டாயா? நம்முடைய காதல் விவகாரங்கள் மட்டும் தானே அவளுக்குத் தெரியும்? நான் இங்கு எதற்காகப் பாடுபடுகிறேன், என் லட்சியம் என்ன என்ற ரகசியம் அவளுக்கு...!"

     "... அதெல்லாம் தெரியாது. உங்கள் மீது எனக்குள்ள அன்பைத்தான் நான் அடிக்கடி அவளிடம் சொல்லி இருக்கிறேன். அதைத் தவிர நீங்கள் பெரிய நாஸ்திகர் என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறேன்."

     "பிழைத்தேன். நீ உன்னுடைய ஆர்வத்தில் என்னுடைய ரகசிய நடவடிக்கைகளை யெல்லாம் சொல்லி விட்டாயோ என்ற பயம் தான் எனக்கு. நீ இந்த உலகத்திலேயே மிகவும் சிறந்த சௌந்தர்யவதி என்று மட்டும்தான் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் நீ இந்த உலகிலேயே மிகவும் சிறந்த புத்திசாலி என்ற உண்மையையும் தெரிந்து கொண்டு விட்டேன். உன்னைக் காதலியாக அடைந்தவன் சோழ சாம்ராஜ்யத்தைப் போல் ஒரு சாம்ராஜ்யமல்ல, முந்நூறு சாம்ராஜ்யங்களை ஏற்படுத்தவும் ஏற்படுத்தலாம்; நினைத்தால் அழிக்கவும் அழிக்கலாம்" என்றான், அவளுடைய கன்னத்தை மெதுவாகத் தட்டியவாறு.

     "வீணாகப் பரிகாசம் செய்யாதீர்கள். நீங்கள் முந்நூறு சாம்ராஜ்யங்களையும் ஏற்படுத்தவும் வேண்டாம்; அழிக்கவும் வேண்டாம். ஒரே ஒரு சோழ சாம்ராஜ்யத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு உங்களால் ஆன முயற்சிகளை யெல்லாம் செய்யுங்கள், அது போதும்" என்றாள் வைகைமாலை.

     "ரொம்ப சரி, முந்நூறு சாமராஜ்யங்கள் வேண்டாமென்றால் எனக்குச் சிரமம் குறைவு. சோழ சாம்ராஜ்யத்தை மட்டும் எப்படியாவது ஏற்படுத்தி விடுகிறேன். அதிருக்கட்டும் - நீ இந்நாட்டில் சோழ அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற வார்த்தைகளைச் சொல்லும் போது அவள் உன் அபிப்பிராயத்துக்கு ஆதரவாகப் பேசுகிறாளா? அல்லது அதற்கு எதிர்ப்பாகப் பேசுகிறாளா?"

     "அவளும் என் வார்த்தைகளை ஆதரித்துத்தான் பேசுகிறாள். அதை நினைக்கும் போது அவள் நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறவள் என்று தோன்றவில்லை?"

     "வைகைமாலை, நீ களங்கமற்ற உள்ளம் படைத்தவள். எல்லாவற்றையும் நம்புகிறாய். உளவு பார்த்து எதிரிகளை ஒடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எதிரிகளின் கொள்கைகளைத் தாங்களும் ஆதரிப்பது போல் நடித்தால்தான் அவர்களிடமிருந்து இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்ற சூழ்ச்சியோடு காரியம் செய்பவர்களாய் இருப்பார்கள். பிறர் மாத்திரம் அல்ல. நானும் அப்படித்தான். இன்று மாலை நான் சம்பாதிவன புத்த விஹாரத்துக்குச் சென்ற போது அங்கொரு பௌத்த பிக்ஷுவுடன் நெருங்கி அவருக்கு ஆதரவாகப் பேசுவது போல் பேசிப் பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டேன். அதைப் பற்றிப் பின்னால் உனக்கு விவரமாகச் சொல்கிறேன். இப்பொழுது நீ எப்படி மாலவல்லியிடமிருந்து விஷயங்களைக் கிரகிப்பாய் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அவள் என்னோடு பேசுவாளா? பேசினால் கொஞ்சமாவது அவளைப் பற்றிய உண்மையான விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்...?" என்று வைகைமாலையிடம் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது புத்த பிக்ஷுணியாகிய மாலவல்லி வந்து நின்றாள்.