உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 10 - மறுபடியும் சந்திப்பா? புலிப்பள்ளியார் பயந்து விட்டதைக் கண்டதும், “அதற்குள் உங்களை நான் மிரட்டும் அளவுக்கு வந்து விடவில்லை. நீங்கள் பயப்படாதீர்கள். உங்களை முதலைக் கிணற்றிலே தள்ளிவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. என்னைப் போன்ற நல்ல நண்பர்களிடம் இந்த ரகசியங்களை மறைப்பது நல்லதல்ல என்று உங்களுக்கே தெரிய வேண்டாமா...?” என்றான் பராந்தகன். புலிப்பள்ளியார் சிறிது நேரம் யோசித்தார். அந்தச் சமயத்தில் அவனிடம் எதையும் மறைத்துப் பேசுவது ஏதேனும் அபாயத்தை விளைவிக்கும் என்பதை அவர் உணர்ந்தார். “நான் உங்களிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. காஞ்சியில் ஒருநாள் இரவு பூதுகர் ஒரு புத்த சமயப் பள்ளியிலிருந்து வெளியே வரும்பொழுது கலங்கமாலரையர் அவரைத் தடியால் தாக்கி மயக்கமுறச் செய்து எங்கோ ஒரு தனி அறையில் அடைத்து வைத்திருந்தாராம். ஆனால் மறுநாள் அந்த அறையைத் திறந்து பார்த்தபோது பூதுகரைக் காணவில்லையாம். அவர் இருக்குமிடம் தெரியவில்லை. இதுதான் உண்மை” என்றார். “அப்படியென்றால் பூதுகர் தப்பித்துக் கொண்டு விட்டார். உயிருடன் தான் இருக்கிறார், இல்லையா?... கலங்கமாலரையர் தான் ஏமாந்து போய் விட்டார் இல்லையா...?” “ஆமாம், கலங்கமாலரையரிடம் முரட்டுத்தனம் அதிகமாக இருக்குமே தவிர, புத்திசாலித்தனம் போதாது” என்றார். “பூதுகர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டவரையில் மனத்துக்கு ஒரு ஆறுதல். கடவுள் நாஸ்திகர்களைக் கூட எதற்காகவோ இவ்வுலகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கருதி அவர்களை எல்லாம் அபாயத்திலிருந்து காப்பாற்றுகிறார்” என்றான் பராந்தகன். “அது உண்மை. உங்களுக்கெல்லாம் பூதுகரைப் பற்றி இவ்வளவு கவலை இருக்குமென்று நான் நினைக்கவில்லை.” பராந்தகன் சிரித்தான்: “சோழ சாம்ராஜ்யத்தின் எழுச்சி பூதுகரைப் போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது. இந்தக் கொடும்பாளூர் அரச சபையில் அந்த உத்தம வீரரை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டோம். ஆனால் அவர் ‘சோழ மன்னர் சபையில் ஒரு சேவகனாக இருந்தாலும் இருப்பேனே தவிர, எந்த சாம்ராஜ்யத்தின் சிம்மாசனம் கிடைப்பதாக இருந்தாலும் கூட வேண்டாம்’ என்று சொல்லி விட்டார். இத்தகைய உண்மை நெஞ்சம் கொண்ட தீர புருஷரைப் பற்றி என்னைப் போன்றவன் கவலைப்படாமல் எப்படி இருக்கமுடியும்?” என்றான். புலிப்பள்ளியார் அவனுக்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை. அவர் உடம்பில் ஏற்பட்டிருந்த சிரமம் சிறிது தணிந்திருந்ததால் இனிமேல் அவ்விடத்திலிருந்து புறப்படுவதே நலமென்று அவருக்குத் தோன்றியது. “சரி; இனிமேல் நாம் கிளம்பலாமல்லவா...?” என்றார். “தாராளமாக...!” என்று சொல்லிப் பராந்தகன் எழுந்தான். பாதாளலோகம் போலிருந்த அச் சிறைக்கூடத்திலிருந்து மேலே ஏறிச் செல்வது ஏதோ மலை மீது ஏறிச் செல்வது போலிருந்தது. அந்தப் படிகளில் ஏறி நடப்பது சிறிது சிரமத்தைக் கொடுத்தாலும் பாதையில் எங்கும் இருள்சேராமல் இருந்தது, புலிப்பள்ளியாரின் மனத்துக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. மேல்நோக்கிச் செல்லும் படிகளின் முடிவான கட்டத்தை அடைந்து சிறிது தூரம் நடந்ததும் கோட்டையின் தெற்கு வாசலை அடைந்து விட்டோம் என்பதைப் புலிப்பள்ளியார் உணர்ந்து கொண்டார். “இதுதானே தெற்கு வாசல்? போதும், போதும். இதுவரையில் கோட்டையைப் பார்த்த வரையில் எனக்குத் திருப்திதான். இனிமேல் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இப்படியே அரண்மனைக்குப் போய் விடுவோம்” என்றார். “நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும் பொழுது நான் என்ன சொல்ல முடியும்? உங்களுக்குக் கோட்டையின் மற்ற இடங்களையும் காட்டாத வரையில் எனக்கு மனக் குறைதான். இருந்தாலும் உங்களை அதிக சிரமப்படுத்த விரும்பவில்லை. உங்கள் அபிப்பிராயப்படி அரண்மனைக்கே போய் விடுவோம்” என்றான். பராந்தகன் மற்ற இடங்களையும் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தாமல், அத்தோடு விட்டது அவருக்குப் பெருத்த ஆறுதலைக் கொடுத்தது. அவர்கள் அரண்மனைக்கு வந்த சமயத்தில் சபாமண்டபத்தில் வைகைமாலையின் நடனம் நடந்து கொண்டிருந்தது. அவளுடைய நடனத்துக்கு அனுசரணையாகச் சுதமதி யாழை மீட்டித் தேவாரப் பண் ஒன்றை மெய்மறந்த நிலையில் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள். வைகைமாலையும் சுதமதியும் உற்சாகத்தோடும் சந்தோஷத்தோடும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்பதைக் கண்டு, பராந்தகனுக்கு மாத்திரமல்ல, புலிப்பள்ளியாருக்கும் மிக வியப்பாகவே இருந்தது. சபை நடுவே இருந்த சிம்மாசனத்தில் ஆதித்தன் கம்பீரமாக வீற்றிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் மதுரை அமைச்சர் அருண்மொழியாரும் மற்றுமுள்ள ராஜப் பிரதானிகளும் அமர்ந்திருந்தனர். மற்றொரு புறத்தில் அருந்திகை, அனுபமா முதலியவர்கள் தோழிப் பெண்கள் சூழ அமர்ந்திருந்தனர். ஆதித்தன் புலிப்பள்ளியாரையும் பராந்தகனையும் கண்டதும் எழுந்து, “வாருங்கள்! வாருங்கள்!” என்று உபசரித்தான். ஆதித்தன் அமர்ந்திருந்த ஆசனத்துக்குச் சமீபமாக உள்ள இரு ஆசனங்களில் புலிப்பள்ளியாரும் பராந்தகனும் அமர்ந்தார்கள். நாட்டியமாடிய வைகைமாலை சபையில் ஏற்பட்ட சிறு சலசலப்பைக் கண்டும் காணாததுபோல் தன் நாட்டியத்திலேயே கவனத்தைச் செலுத்தினாள். சுதமதி யாழை மீட்டிக் கொண்டே இசை இன்பத்தில் மூழ்கி இருந்தாள். அப்பொழுது அங்கு யார் வந்தார்கள், என்ன நடந்தது என்பதே அவளுக்குத் தெரியாது. வைகைமாலையின் நடனமும் சுதமதியின் இனிய கானமும் அச்சபையிலுள்ளோரைக் கவர்ந்துவிட்டன. எல்லோரும் மெய்மறந்த நிலையில் இருந்தனர் என்றேதான் சொல்ல வேண்டும். அப்பொழுது அங்கு வந்த பராந்தகனின் மனத்தையும் அந்த இனிய இசையும் எழில் நிறைந்த நாட்டியமும் கவர்ந்து விட்டனவென்றால் கேட்க வேண்டுமா? ஆனால் புலிப்பள்ளி கொண்டாரின் மனம் மாத்திரம் இசையிலோ நாட்டியத்திலோ லயிக்கவில்லை. எப்படி லயிக்கும்? இயற்கையாகவே அவருக்கு இசைக் கலையிலோ நாட்டியக் கலையிலோ பற்றுதலோ ரசிகத் தன்மையோ கிடையாது. அதிலும் அப்பொழுது அவர் இருந்த நிலையைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மனத்தில் புகைந்து புகைந்து எழுந்த ஆத்திரமும் கோபமும் அப்பொழுது அவர் நிலையைத் தடுமாற வைத்திருந்தன. அவர் நன்றாக உணர்ந்து கொண்டு விட்டார், அவ்வூரில் இன்னும் சில நாழிகைகள் தங்கினால் கூடத் தம்மைப் பயித்தியமாக்கிவிடுவார்கள் என்று. கொடும்பாளூரார்கள் தம்மை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறார்கள் என்பதும் அவர்கள் தஞ்சை மன்னருக்கோ பல்லவ சக்கரவர்த்திக்கோ பயந்து அடங்கி இருக்கக் கூடிய நிலையில் இல்லை என்பதும் அவருக்குத் தெளிவாக விளங்கின. அதோடு பாண்டிய மன்னரின் துணையினால் தான் கொடும்பாளூரார்களுக்குத் தைரியமும் கர்வமும் ஏற்பட்டிருக்கின்றன என்று எண்ணினார். மதுரை அமைச்சருக்கு அவர்கள் காட்டும் உபசாரமும், ஆதரவும் பாண்டிய மன்னரும் கொடும்பாளூர் இருக்கு வேளார்களும் பல்லவ மன்னருக்கு எதிராக ஏதோ சதி செய்கின்றனர் என்பதைத் தான் எடுத்துக் காட்டின. அப்பொழுது அவருக்கு அருண்மொழியார் மீது இருந்த ஆத்திரம்தான் எல்லை மீறியதாக இருந்தது. தமது இனிமையான பேச்சினாலும் தந்திரத்தினாலும் கொடும்பாளூராரைத் தம் வலையில் சிக்க வைத்துவிட்ட அருண்மொழியாரை ஏதேனும் ஒரு வகையில் வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று அவர் தீர்மானித்தார். எல்லாவற்றையும்விடத் தம் மெய்க்காப்பாளர்களின் அவயவங்களைச் சேதப்படுத்தியது தான் அவர் மனத்தை மிகவும் கலக்கியது. எப்படியாவது கொடும்பாளூரார்களை ஒழித்துக் கட்டிவிட்டால்தான் தஞ்சை மன்னரும், முக்கியமாக, பல்லவ சக்கரவர்த்தியும் நிம்மதியாக வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்தார். கொடும்பை நகருக்கு வந்து பலவித ரகசியங்களை அறிந்து கொண்டு தஞ்சைக்குச் செல்வோம் என்ற தன்னம்பிக்கையோடு வந்த அவருக்கு ஏமாற்றத்துடனும் அவமானத்துடனும் தஞ்சை மன்னர் முத்தரையரிடம் போய் நிற்க வேண்டுமே என்ற திகில்தான் அதிகமாக இருந்தது. அரசாங்கத்தில் தமக்கு எதிரி போல் இருக்கும் கலங்கமாலரையர் தம்முடைய ஏமாற்றத்தையும் தோல்வியையும் கண்டு எப்படிக் கொக்கரிப்பார் என்பதை நினைக்கும் போதுதான் அவர் மனம் இடிந்து சுக்குநூறாகி விடும் போலிருந்தது. எப்படியும் இனிமேல் கொடும்பாளூரில் தங்கியிருப்பது தவறு என்று அவருக்குப் பட்டது. அவருடைய கவனம் வைகைமாலையின் நாட்டியத்திலோ, சுதமதியின் பாட்டிலோ லயித்து நிற்கா விட்டாலும் அவர்கள் இருவரும் துயரமற்றவர்களாக ஆடுவதிலும் பாடுவதிலும் சிரத்தை செலுத்துவது அவருக்குச் சிறிது சந்தேகத்தை அளித்தது. அதற்குள் பூதுகனைப் பற்றி ஏதேனும் நல்ல செய்திகள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமோ என்று அவர் சந்தேகப்பட்டார். எப்படி இருப்பினும் பூதுகனை ஒழித்து விட்டால் வைகைமாலை, சுதமதி இருவரது வாழ்க்கையும் குலைந்துவிடும் என்பதை அவர் அன்று காலை நடந்த சம்பவங்களிலிருந்தே நன்கு உணர்ந்து கொண்டிருந்தார். அதோடு பூதுகனை ஒழித்துக் கட்டிவிட்டால் சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றிக் கனவு காண்கிறவர்கள் கனவெல்லாம் வீண் கனவாகிவிடும் என்று அவர் எண்ணினார். நாட்டியம் ஒருவிதமாக முடிவடைந்தது. சபையிலுள்ள கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. ஆதித்தன் தன் ஆசனத்தை விட்டு எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்தான். அருண்மொழியாரும் பராந்தகனும் அவனுடைய உத்தரவை எதிர்பார்ப்பவர்கள் போல் அவன் முகத்தைப் பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தனர். ஆதித்தன் சபையிலுள்ள கூட்டம் கலைந்ததும் புலிப்பள்ளியாரைப் பார்த்து, “அமைச்சரே! வைகைமாலையின் நடனம் எப்படி?” என்று கேட்டான். மனம் குழம்பியவாறு இருந்த புலிப்பள்ளியார் அப்பொழுது தான் கண்விழித்துக் கொண்டவர் போல், “நடனமா? நாட்டியம்தானே! நன்றாக இருந்தது. பல்லவ மன்னரின் சபையிலும் தஞ்சை மன்னரின் சபையிலும் இதைவிடச் சிறந்த நாட்டியத்தை யெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்!” என்றார். “அப்படியா? இருக்கலாம். இதில் அதிசயப்படுவதற்கு இல்லையே?” என்றான் ஆதித்தன். “அந்தச் சபைகளில் நடைபெறும் நடனங்களை இதை விடச் சிறந்ததாகச் சொல்லித்தானே ஆக வேண்டும்? எப்பொழுதுமே தஞ்சை அமைச்சர் தம்முடைய சுய கௌரவத்தை விட்டுக் கொடுப்பதில்லை!” என்று கூறினான் பராந்தகன். அருண்மொழியார் மெல்லிய குரலில், “தலையை அறிந்தவர்களுக்குத் தான் இது தெரியும். இதெல்லாம் சபையைப் பொறுத்த விஷயமல்ல. தஞ்சை அரண்மனையிலுள்ள நடன அரங்கோ, காஞ்சியில் உள்ள நடன அரங்கோ இதை விட அழகாகவும், அலங்காரமாகவும் இருக்கலாம். இதில் நாட்டியமாடுகிறவர்களின் திறமைதான் கவனிக்கப்பட வேண்டும். நானும் எவ்வளவோ நாட்டியங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி எல்லோருடைய மனத்தையும் கவரக்கூடிய மிக அற்புதமான முறையில் ஒரு பெண் நாட்டியமாடி நான் பார்த்ததே இல்லை. இசையும் நாட்டியத்துக்கு ஏற்றாற்போல் சிறப்பாக அமைந்திருந்தது” என்றார். “மதுரை அமைச்சர் நான் சொல்லுவதற்கு நேர் எதிராக ஏதாவது சொல்ல வேண்டுமென்று நினைக்கிறார்” என்று குறைப்பட்டார் புலிப்பள்ளியார். “உங்களுக்கு நேர் எதிரிடையாக ஏதாவது சொல்ல வேண்டுமென்று மதுரை அமைச்சர் இந்த வார்த்தைகளைச் சொன்னதாக நான் கருதவில்லை. கலை விஷயத்தில் நன்கு தெரிந்து ஆராய்ந்து முடிவு செய்யும் பண்புதான் நமக்குத் தேவை. வீண் குதர்க்கமான மனப் பண்பு இல்லாமல் ஒரு கலையை ரசிப்பவர்களுக்குத் தான் அதன் உண்மையும் உயர்வும் விளங்கும். போகட்டும், தாங்கள் கோட்டை முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டீர்களா? நீங்கள் கோட்டையைச் சுற்றிப் பார்த்ததில் எனக்கு மிகவும் திருப்தி. தாங்கள் நடக்கும்போது ஒரு விதமாக நடப்பது போல் இருக்கிறதே, என்ன காரணம்?” என்று கேட்டான் ஆதித்தன். அவனுடைய கேள்விக்குப் புலிப்பள்ளியாரால் பளிச்சென்று பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது அவருக்குச் சிறிது அவமானமாக இருந்தது போலிருக்கிறது. அவர் தயங்கியபடியே, “கோட்டையைச் சுற்றிப் பார்க்கும் பொழுது ஒரு இடத்தில் முழங்காலில் இடித்து விட்டது; அவ்வளவுதான். கோட்டை மிகவும் அற்புதமாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அனேக இடங்களில் ஒரே இருட்டாக இருக்கிறது. காற்று வசதியும் போதாது” என்றார். “முதன் முதலாகப் பார்க்கிறவர்களுக்கு அப்படித்தான் இருக்கும். தாங்கள் இன்னும் இரண்டு மூன்று தடவைகள் வந்து பார்த்தீர்களானால் எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்றான் ஆதித்தன். ஆதித்தனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பராந்தகன் சிரித்துக் கொண்டே, “அமைச்சர் அவர்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது எனக்குத் தெரியாது. முழங்காலில் எங்கோ இடித்ததை நான் கவனிக்கவில்லை. நீங்கள் இரண்டொரு இடங்களில் இடறி விழுந்ததுதான் எனக்குத் தெரியும். நான் கூட ஒரு இடத்தில் உங்களைத் தூக்கி விட வில்லையா?” என்று கூறினான். பராந்தகனின் வார்த்தை புலிப்பள்ளியாருக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது. மேலும் அவனோடு வார்த்தைகள் பேசிக் கோட்டையைச் சுற்றிப் பார்த்த விநோதத்தை வெளிக் கிளப்ப வேண்டாம் என்று எண்ணி மனப் புகைச்சலை அடக்கிக் கொண்டார். அதிலும் பாண்டிய மன்னரின் மந்திரி அருண்மொழியாரின் எதிரே தமக்கேற்பட்ட அவமானத்தை வெளிக்காட்டிக் கொள்ளவே அவருக்கு வெட்கமாயிருந்தது. அவர் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, “ஆமாம்! சாதாரணமாகத்தான் இரண்டொரு இடங்களில் இடறி விழுந்து விட்டேன். முழங்காலில் கொஞ்சம் நோவெடுக்கிறது, அவ்வளவுதான். உங்கள் தந்தையார் சிருஷ்டித்திருக்கும் கோட்டை மிகவும் நன்றாகத்தானிருக்கிறது. அந்த இருட்டுத்தான்...” என்று இழுத்தார். “சில இடங்களில் இருட்டாக இருக்குமென்றுதான் பராந்தகனை உங்களோடு அனுப்பினேன். அங்கெல்லாம் மேலும் கீழுமாகப் படிகள் இருந்திருக்கும். அங்கெல்லாம் மிக ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் நடந்திருக்க வேண்டும். போகட்டும். உங்களைப் போன்றவர்கள் எங்கள் நகரத்துக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க ஆவல் கொண்டு வந்ததே எங்களுக்குப் பெருமைதான். உங்கள் மன்னர் கொடும்பாளூர் கோட்டையின் அற்புதங்களைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலோடு இருப்பார். தாங்கள் மன்னர் முத்தரையர் அவர்களுக்குக் கொடும்பாளூர் கோட்டையைப் பார்த்த விவரங்கள் அனைத்தையும் எடுத்துச் சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன். தஞ்சை மன்னர் அவர்களும் ஒரு தடவை எங்கள் கோட்டையை வந்து சுற்றிப் பார்த்தார்களானால் நாங்கள் இன்னும் பெருமையுள்ளவர்களாவோம்” என்றான் ஆதித்தன். “அதிலென்ன சந்தேகம்? அமைச்சர் அவர்கள் மனம் வைத்து விட்டால், தஞ்சை மன்னர் அவர்கள் நமது நகருக்கு விஜயம் செய்வது சிரமமல்ல” என்று கூறினான் பராந்தகன். “நான் மன்னரிடம் அவசியம் சொல்கிறேன்” என்றார் புலிப்பள்ளியார் இழுத்தாற்போல். “சொல்லுவது மாத்திரம் போதாது, அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து எங்கள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செய்து ஆனந்தத்தை அனுபவிக்கும்படி செய்ய வேண்டும்” என்றான் பராந்தகன். புலிப்பள்ளியாருக்கு அப்பொழுது அவர்களோடு பேசிக் கொண்டிருப்பதை விட விடைபெற்றுக் கொண்டு உடனேயே ஊருக்குத் திரும்புவதுதான் நல்லதாகப்பட்டது. “மன்னரிடம் எல்லாவற்றையும் தவறாமல் சொல்லுகிறேன். இனிமேல் நான் இங்கு அதிக நேரம் தாமதிக்க முடியாது. எனக்குத் தஞ்சை நகரில் எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றன. மன்னரும் என் வருகைக்காகக் காத்திருப்பார். மன்னிக்கவும். நான் இப்பொழுதே புறப்படுவதுதான் நல்லது. எனக்கு விடை கொடுங்கள்” என்றார். “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? எங்கள் விருந்தினராக வந்திருக்கும் தாங்கள் இவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு விடுவீர்கள் என்று நினைக்கவில்லை. மதுரை அமைச்சர் அவர்கள் எங்கள் விருப்பத்துக்கு இணங்கி இன்னும் இரண்டொரு தினங்கள் இங்கே தங்கிச் செல்ல உத்தேசித்திருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு தினங்கள் நாட்டிய விருந்தை அனுபவிக்கலாமே என்று சுதமதியையும் வைகைமாலையையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தாங்களும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அரண்மனை விருந்தோடு அற்புதமான கலை விருந்தையும் அனுபவித்து ஆனந்தமடையலாமே என்று நினைக்கிறேன்” என்றான் ஆதித்தன். “அதற்கு என்ன? அமைச்சர் அவர்கள் கூடக் கோட்டையில் இன்னும் அனேக இடங்களைச் சுற்றிப் பார்க்கவில்லை. அவர்கள் நம்முடைய விருப்பத்துக்கு இணங்கி இங்கே தங்குவார்களானால் அவர்களுக்கு மனக்குறையின்றிக் கோட்டையின் மற்ற இடங்களையும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டி விட வேண்டுமென்பதுதான் என் ஆவல்” என்றான் பராந்தகன். “அப்படியா...? நகரைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதென்றால் ஒரு நாள் போதாதுதான். கோட்டையைப் பார்க்கவாவது அமைச்சர் சில நாட்கள் தங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றான் ஆதித்தன். அவர்கள் வார்த்தையைக் கேட்ட புலிப்பள்ளியாருக்குத் திகில் ஏற்பட்டது. எப்படியாவது அவர்கள் தம்மைக் கொன்று விட நினைக்கிறார்கள் என்று தான் அவர் தீர்மானித்தார். |