உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 11 - திடுக்கிடும் செய்தி! கொடும்பாளூரில் புலிப்பள்ளியார் ஒரு நாள் தங்கியதிலேயே அவரும் அவருடைய மெய்காப்பாளரும் படாதபாடு பட நேர்ந்ததல்லவா? இன்னும் இரண்டொரு நாட்கள் தங்குவதென்றால் இன்னும் எத்தகைய அனுபவமெல்லாம் ஏற்படுமோ என்று அவர் பயந்தார். அவர் பதைபதைப்போடு, “இல்லை, நான் அவசியம் தஞ்சைக்குப் போக வேண்டும். இது மன்னரின் உத்தரவு. நான் இங்கே வந்தது மன்னரின் விருப்பப்படி இளவரசருக்காகப் பெண் கேட்கத்தான். அந்தக் காரியம் முடிந்துவிட்டது. அதற்குரிய பதிலை எதிர்பார்த்து மன்னர் ஆவலோடு காத்திருப்பார். நான் உடனே தஞ்சைக்குச் செல்வது தான் உசிதம். இப்பொழுது என்னை அதிகம் வற்புறுத்தாதீர்கள். இன்னொரு சமயம் வருகிறேன்” என்றார். “ஆமாம்! நீங்கள் இங்கே எதற்காக வந்தீர்கள் என்பதையே நான் அடியோடு மறந்து விட்டேன். உங்கள் மன்னரிடம் பெண் கொடுக்கும் விஷயமாக இங்கே நடந்த பேச்சுக்கள் அனைத்தையும் தவறாமல் சொல்லுவீர்கள் என்றே நம்புகிறேன். முக்கியமாக, சோழ வம்சத்தினருக்குக் கொடும்பாளூரார்களிடம் பெண் கொள்ளும் பாத்தியதை இருக்கும் வரையில் தஞ்சை மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றுவது கடினம் தான் என்பதை மாத்திரம் மறக்காமல் சொல்லுங்கள். இருப்பினும் எங்களாலான முயற்சிகள் அனைத்தையும் செய்கிறோம்” என்று கூறினான் ஆதித்தன். அந்த சமயம், “ஆகட்டும், சொல்கிறேன்” என்றுபுலிப்பள்ளியாரால் சொல்ல முடிந்ததே தவிர வேறு எந்த விதமான பதிலும் சொல்லத் தோன்றவில்லை. “அப்படி யென்றால் அமைச்சர் அவர்கள் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்யட்டுமா?” என்று கேட்டான் பராந்தகன். “அதிலென்ன சந்தேகம்? அமைச்சருக்கு மாத்திரமல்ல, அவருடைய மெய்காப்பாளர்களின் பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய். பாவம்! அவர்கள் தங்கள் அவயவங்களை இழந்த நிலையில் தங்கள் நகருக்குத் திரும்புவது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. தஞ்சையிலிருந்து வந்திருக்கும் குதிரைகளோ, பல்லக்குகளோ போதாதிருந்தால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து அனுப்பு. நம்முடைய அரண்மனைக்கு வந்திருக்கும் விருந்தினர்களை மிக்க மரியாதையுடன் வழியனுப்புவதுதான் நமது முதற்கடமையாக இருக்க வேண்டும்” என்றான் ஆதித்தன். “அதையெல்லாம் ஒரு குறைவுமில்லாமல் செய்து விடுகிறேன்” என்றான் பராந்தகன். ‘இதோடு விட்டார்களே’ என்று எண்ணிப் புலிப்பள்ளியார் ஆசனத்திலிருந்து மெதுவாக எழுந்து எல்லோருக்கும் வணக்கம் செலுத்தி விட்டு, “நான் சென்று வருகிறேன். நீங்கள் செய்த உபசாரத்துக்கு மிக்க நன்றி” என்றார் முகத்தில் சந்தோஷக் குறியை வரவழைத்துக் கொண்டு. அவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த அருண்மொழியார் புலிப்பள்ளியாரை நெருங்கி அவரை ஆலிங்கனம் செய்து கொண்டு மிகுந்த அன்போடு, “இந்தக் கொடும்பைமா நகரில் நான் உங்களைச் சந்திக்க நேர்ந்து, உங்களோடு சிறிது நேரமாவது பேசிப் பழக வாய்ப்பு ஏற்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மீது ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் நீங்கள் மன்னித்தருள வேண்டும்” என்றார். அருண்மொழியாரின் ஆலிங்கனமும் அன்பு நிறைந்த இனிய வார்த்தைகளும் புலிப்பள்ளியாரின் மனத்தை உறுத்துவதாகத் தானிருந்தன. அந்தச் சமயம் அவர் இதை எதிர்பார்க்காதவர் போல் திகைப்படைந்து நின்று விட்டார். அருண்மொழியாரின் சகஜமான மனப்பான்மையும் அன்பு நிறைந்த பேச்சும் - கெட்ட எண்ணத்தோடும், பகைமை உணர்ச்சியோடும் இருந்த புலிப்பள்ளியாரின் மனத்தையும் சிறிது நெகிழ வைத்து வெட்கப்பட வைத்தன. “நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. உங்களைப் பற்றி நான் தவறாக நினைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நாம் இருவரும் நேர் பகைஞர்களான இரு அரசர்களின் சபையில் முக்கியமான பதவியில் அமர்ந்திருந்தாலும் நம்முடைய நட்பு என்றும் அழியாதிருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய பிரார்த்தனை” என்றார் புலிப்பள்ளியார் தழுதழுத்த குரலில். “ஈசனின் சித்தம் அப்படியே இருக்கட்டும்” என்றார் அருண்மொழியார். சிறிது நேரத்தில் புலிப்பள்ளியார் அமர்ந்திருந்த பல்லக்கும் அவருடைய மெய்காப்பாளர்கள் அமர்ந்திருந்த பல்லக்கும் கொடும்பாளூர் அரண்மனை வாசலிலிருந்து ராஜமரியாதையுடன் ஊர்வலம் போல் மேளதாளத்தோடு கிளம்பியது. புலிப்பள்ளியாரை நகர் எல்லை வரையில் சென்று வழியனுப்புவதற்காகப் பராந்தகன் ஒரு குதிரை மீது ஏறிக் கம்பீரமாக வீற்றிருந்தான். பல்லக்குகளுக்கு இரு புறத்திலும் வீரர்களைச் சுமந்த குதிரைகள் நின்றன. புலிப்பள்ளியார் கடைசி முறையாக எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்ட பின் பேரிகைகள் முழங்கப் பல்லக்குகள் கிளம்பின. அந்தப் பல்லக்குகள் கண் மறையும் வரையில் ஆதித்தனும் அருண்மொழியாரும் அரண்மனைப் பரிவாரங்கள் சூழ நின்று கவனித்து விட்டு அரண்மனைக்குள் சென்றனர். நகரின் எல்லையைக் கடந்ததும் பராந்தகன் குதிரையில் வீற்றிருந்த வண்ணமே புலிப்பள்ளியாரின் பல்லக்குக்குச் சமீபமாக வந்து, “சென்று வருகிறீர்களா? அவசியம் தாங்கள் இன்னொரு சமயம் எங்கள் நகருக்கு விஜயம் செய்து எங்களைச் சந்தோஷத்துக்குள்ளாக்க வேண்டும்” என்றான் பணிவான குரலில். பல்லக்கில் உட்கார்ந்திருந்த புலிப்பள்ளியார் விறைப்போடு பார்த்துக் கொண்டே பேசினார். “பார்ப்போம். ஆனால் அந்தச் சந்திப்பு வேறு விதமாகத்தான் இருக்கும். நீங்கள் வேண்டுமென்றே தஞ்சை மன்னரின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டு விட்டீர்கள். இது நிச்சயம். நீங்கள் விருந்தினராக வந்த எங்களை அவமானப்படுத்தியது மாத்திரம் சிறந்த காரியமாகாது. இனிமேல் இந்தக் கொடும்பாளூர் கோட்டையைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறது உங்கள் வீரம், சாமர்த்தியமெல்லாம்” என்றார் எச்சரிக்கை செய்கிறவர்போல. பராந்தகன் அவருக்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை. அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே தன் குதிரையைத் திருப்பி விட்டான். சோழவள நாட்டிலேயே சிறந்ததொரு நகரமாகத் திகழ்ந்த குடந்தைமா நகரிலே ஒரு பரபரப்பான செய்தி பரவியது. இந்தச் செய்தி எப்படி வந்ததோ? எங்கிருந்து முளைத்ததோ? ‘பரம நாஸ்திகவாதியான பூதுகன் காஞ்சிமா நகரில் எதிரிகள் வசம் சிக்கித் தாக்குண்டு இறந்தான்’. இது தான் நகர மக்கள் மூலைக்கு மூலை கூடி நின்று பேசிக் கொண்டிருந்த செய்தி. இதோடு மட்டுமா? பூதுகனின் அந்தரங்க நண்பராகத் திகழ்ந்த கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகரும் எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டார் என்ற செய்தியும் மக்கள் மனத்தில் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. கடவுள் உண்டு என்று நம்பும் எல்லா மதவாதிகளுக்கும் பூதுகன் ஒரு பெரிய எதிரியாக விளங்கினான் என்பது உண்மையே. அதிகம் தெரிந்து கொள்ளாமல் குருட்டுத்தனமான மத வெறி கொண்ட ஒரு சிலருக்கு மாத்திரம் பூதுகன் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் குதூகலம் ஏற்பட்டது. ஆனால் சிறந்த அறிவுள்ள மதவாதிகள் எல்லோருக்கும் பூதுகன் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் துக்கம் தான் ஏற்பட்டது. மக்களிடையே நாட்டுப்பற்றுக் கொண்டோர் எல்லோரும் பூதுகனுக்கும் சந்தகருக்கும் ஏற்பட்ட சதியைக் கேட்டுக் கலங்கிக் கண்ணீர் விட்டனர். கடவுளிடம் பற்றுதலற்ற நாஸ்திகவாதியாயினும் பூதுகனைப்போல் நெஞ்சுரமும், உண்மையும் கொண்ட தீர புருஷன் கிடைப்பது துர்லபம் என்றுதான் மக்கள் கருதினர். சாம்ராஜ்ய வெறியர்களின் சூழ்ச்சிதான் இது என்பதை உணர்ந்து கொண்ட நகர மக்கள் மிகுந்த கொதிப்பு அடைந்திருந்தனர். மறுபடியும் இப்பொன்னான நாட்டில் சோழ சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திச் சொர்க்கம் போன்ற சுகத்தை அனுபவிக்கலாம் என்று கனவுகண்ட மக்களின் உள்ளத்தில் பூதுகனைப் பற்றிய செய்தி ‘மறுபடியும் நல்வாழ்வு பெறுவோம்’ என்ற நம்பிக்கையையே பாழாக்கி விட்டது. துக்கம், கலக்கம், கோபம், வெறுப்பு, வீரம் முதலிய உணர்ச்சிகள் மக்கள் மனத்தில் எழுந்து குமுறிக் கொண்டிருந்தன. அந்தச் சமயம் குடந்தை மாநகரம் குருக்ஷேத்திரமாக விளங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். அடிக்கடி பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நடக்கும் போராட்டங்கள் அந்நகருக்குச் சமீபமாகவே நடந்தன. கரிகாலன், கோச்செங்கணான் முதலிய சோழப் பேரரசர்கள் ஆண்டு வந்த காலத்தில் பூம்புகார் தலைநகராக விளங்கினாலும் குடந்தைமா நகருக்கும் ஒரு மகிமை இருந்தது. அரசாங்கத்தின் பெரிய செல்வச்சாலையும், சிறைச்சாலையும், படைத்தளமும் குடந்தைமா நகரில்தான் இருந்தன. அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள் அந்நகரில் இருந்ததால் சோழ மண்டலத்திலேயே தலைநகருக்கு அடுத்தபடியாகக் குடந்தை நகருக்குப் பெருமை இருந்தது. இத்தகைய நகரின் பெருமை கால வெள்ளத்தில் அழிந்து விட்டதென்றால் உன்னதமாக விளங்கிய சோழ சாம்ராஜ்யத்தின் சரிவுதானே காரணமாக இருக்க வேண்டும்? சோழ அரசர்கள் ஆண்டபோது அந்நகரில் இருந்த பெரிய பொக்கிஷம் அப்பொழுது பல்லவர் ஆட்சியில் அங்கில்லை என்றாலும் சிறைச்சாலையும் படைத்தளத்தின் ஒரு பகுதியையும் அந் நகரிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியம் பல்லவ மன்னருக்கு இருந்தது. முன்பு சோழ மன்னர் ஆட்சியிலிருந்ததை விட இப்பொழுது சிறைச்சாலையில் கைதிகள் அதிகமாக இருந்தனர். காவலும் கட்டுப்பாடும் அதிகமாக இருந்தன. படை வீரர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்குள்ள அதிகாரமும் உரிமையும் அதிகமாக இருந்தன. இரு பெரும் பகுதிகளாகக் குடந்தைக் கீழ் கோட்டம், காரோணம் என்று பிரிக்கப்பட்ட அந் நகரின் இரு பகுதிகளிலும் அரசாங்க அதிகாரிகளும், நன்கு படித்தவர்களும், பக்திமான்களுமே நிறைந்திருந்தனர். எல்லோரும் படித்தவர்களும் பக்திமான்களுமாக விளங்கியதால் ஆத்மார்த்திக விஷயங்களில் மிகுந்த சிரத்தை செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். எப்படி இருந்தால் என்ன? ஒரு காலத்தில் செல்வம் கொழித்த அந் நகரில் பஞ்சமும் வறுமையும் தலைவிரித்தாடின. ‘சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக் குடந்தை’ என்று பெருமையாகப் பாடப்பட்ட அந்நகரில் ‘பசி, பட்டினி’ என்ற குரலைக் கேட்பது சகஜமாகி விட்டது. பல்லவ மன்னர் காஞ்சியிலிருந்த வண்ணமே மக்களின் பஞ்சத்தைப் போக்க ஏதோ முயற்சி செய்து கொண்டு தான் இருந்தார். பாவம்! நந்திவர்மருக்குச் சோழ நாட்டு மக்களின் வறுமை நிலையைக் கவனிப்பதை விடத் தம் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றும் கவலையே அதிகமாக இருந்தது. சோழ நாட்டில் அங்குமிங்குமாக ஆண்ட சிற்றரசர்களும் மக்களிடம் கவலை காட்டுகிறவர்களாக இல்லை. பல்லவ மன்னரின் கீழிருந்து அவருடைய பிரதிநிதி ஆட்சி புரியும் சிற்றரசர்கள் பல்லவ மன்னருக்கு அடங்கி இருந்து தங்கள் நலனைக் காத்துக் கொள்வதில் சிரத்தையாக இருந்தார்களே தவிர, மக்களிடையே பரவியுள்ள பஞ்சத்தையும் வறுமையையும் நீக்குவதற்கு வேண்டிய பணிகளைச் செய்கிறவர்களாக இல்லை. அந்தச் சமயம் சோழ நாட்டு மக்களின் மனக்கொதிப்பு எப்படிப் பட்டதாக இருக்கும்? அதிலும் ஒருபுறம் அரசியல் போராட்டம். இன்னொரு புறம் மதவாதிகளின் போராட்டம். இவைகளுக்கிடையே பஞ்சம், வறுமை இவைகள் வேறு தாண்டவமாடினால் குடந்தைமா நகர மக்களின் மன உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதை வர்ணிக்க வேண்டுமா? பல்லவ சாம்ராஜ்யத்தின் கீழ் சிறு சிறு ஊர்களை ஆண்ட சிற்றரசர்களைக் கண்காணிக்கும் அதிகாரம் தஞ்சையை ஆண்ட முத்தரையரிடம் தான் இருந்தது. இது பல்லவ மன்னர் அவருக்கு அளித்த அதிகாரமல்ல. மற்ற அரசர்களைவிட முத்தரையர் ஆண்ட பகுதியும், அவருடைய சேனை பலமும் அதிகமாய் இருந்ததாலும், அவருக்கு அப்பொழுது பல்லவ மன்னரிடம் செல்வாக்கு அதிகமாயிருந்ததாலும் இயற்கையாகவே அந்த அதிகாரம் அவருக்கு ஏற்பட்டு விட்டது. முத்தரையரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல் சிற்றரசர்கள் இருந்தாலும் பலர் அந்தரங்கமாக அவரிடம் ஆத்திரமும் பகையுணர்ச்சியும் கொண்டிருந்தனர். இவர்களெல்லாம் ஒரு சமயத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாமல், சமண, புத்த, சைவ, வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுவதும் கடினமாக இருந்தது. இவர்களுக்குள் பல பிணக்குகள் இருந்தாலும் பல்லவ மன்னரின் போர் முரசு கேட்டதும் அவர்கள் ஒற்றுமையாகி விடுவார்கள். அறிவாளிகள் நிறைந்திருந்த காரணத்தாலோ என்னவோ கொடிய பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் தத்துவ விசாரங்களில் மக்களுக்கு மிகுந்த பற்றுதல் இருந்தது. புத்தமும் சமணமும் தலை ஓங்கி நின்ற அந் நகரில் அவைகளின் சிறப்பு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கிய காலம் அது. சைவ சமயத்திலும் வைஷ்ணவ சமயத்திலும் மக்கள் மிகுந்த பற்றுதல் உள்ளவர்களாகி அச்சமயங்கள் உன்னத நிலையை அடைந்திருந்த சமயம் அது. பல்லவ மன்னர்களுள் குணபரணாக விளங்கிய மகேந்திர பல்லவனின் ஆட்சிக் காலத்தில் குடந்தை நகரில் வந்திருந்து மக்களைப் பக்தி மார்க்கத்தில் திருப்ப முயற்சி செய்த சைவப் பெரியார் திருநாவுக்கரசரும் வைஷ்ணவ அடியார் திருமிழிசை ஆழ்வாரும் விதைத்த விதை அன்று பெருமரமாகி நின்றது போல்தான் அன்று சைவமும் வைஷ்ணவமும் மேலோங்கி நின்றன. சைவ வைஷ்ணவர்களின் பலம் மேலோங்கி நின்றாலும் புத்த ஜைன மதத்தினரும் மனம் தளராமல் பிரசாரம் செய்து வந்தனர். ‘குடந்தைக் கீழ் கோட்டத் தெம் கூத்தனார்’ என்று திருநாவுக்கரசு சுவாமிகளால் பாடிப் புகழப்பட்ட சிவபெருமானின் திருக்கோவில் ஒரு புத்த விஹாரத்துக்குச் சமீபமாகச் சிறிதாக அமைந்திருந்தது. பெரிய ஆராமத்தோடு கூடிய அந்த புத்த விகாரத்துக்குப் பகவமுனி என்ற தவச் சிரேஷ்டர் தலைவராக விளங்கினார். அவருக்குச் சீடராக நூற்றுக் கணக்கான பிக்ஷுக்கள் இருந்தனர். எப்படி இருப்பினும் நாளுக்கு நாள் புத்தசங்கத்தில் தோன்றியுள்ள பலவித ஊழல்கள் அந்த உத்தம புருஷரின் மனத்தை வாட்டத் தொடங்கின. அதோடு பூம்புகார் புத்தசேதியத்தில் ஏற்பட்ட கொலையைப் பற்றிய செய்திகள் அவருக்குப் புத்த, தரும சங்கங்களில் உள்ள நம்பிக்கையை அடியோடு போக்கி விட்டன. மனக் கலக்கத்தோடு அவர் காவிரிக் கரையைத் தனித்த ஒரு இடத்தில் இருந்து சித்தத்தை அடக்கித் தியானத்தில் இருந்தார். தியான நிலையிலிருந்து அவர் எழுந்த போது அன்பே சிவம் என்ற சைவ சமயக் கோட்பாட்டை லட்சியமாகக் கொண்டவராகத் திரும்பினார். அவர் தீவிர தேச பக்தராகி விட்டதை யறிந்த அனேக புத்த பிக்ஷுக்கள் அவருடைய வழியைப் பின்பற்றத் தொடங்கினர். பகவ முனிவரும் அவருடைய சீடர்களும் சைவ சமயத்தைத் தழுவியது குடந்தையில் புத்த தரும, சங்கங்களின் அஸ்திவாரத்தையே தகர்த்து விட்டது. அன்று குடந்தை மக்கள் ஒன்று கூடிப் பழையாறை நகரை நோக்கிச் சென்றனர். அப்பொழுதுதான் கொடும்பைமா நகரிலிருந்து வந்த விஜயனும் அவன் சகோதரி அருந்திகையும் குடந்தை மக்கள் அறிவித்த திடுக்கிடும் செய்தியைக் கேட்டு வியப்படைந்தனர். |