உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 13 - யார் அந்தப் பெண்? புலிப்பள்ளியாரைத் திருபுவனி தனியே சந்தித்துப் பேசியது தவறு என்று அருந்திகை இடங்காக்கப் பிறந்தாரிடம் எடுத்துரைத்தாள் அல்லவா? மேலும் அருந்திகை தொடர்ந்து கூறினாள்: “திருபுவனியிடம் எதையேனும் சொல்லி மிரட்டி இருக்கலாம் அல்லவா? பாவம் பெண் தானே? பயந்து ஏதேனும் தவறான யோசனைகள் செய்திருப்பாள். இந்த விபரீதம் நேர்ந்ததற்குக் காரணம் அதுவாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கிறேன். நான் புலிப்பள்ளியாரைப் பற்றி இப்படிச் சொல்கிறேனே என்று கோபப்படாதீர்கள். என் மனத்தில் பட்டதைச் சொல்கிறேன்” என்றார். பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் மனம் குழம்பியபடியே, “உங்கள் மீது எனக்கென்ன கோபம்? உங்கள் மனத்தில் தோன்றியதை நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி இருந்தாலும் இருக்கலாம்” என்று கூறினார். “அப்படித்தானிருக்க வேண்டுமென்று நானும் ஆரம்பத்திலேயே நினைத்தது உண்டு” என்றார், அங்கு நின்று கொண்டிருந்த இடங்காக்கப் பிறந்தாரின் ஆலோசனையாளர்களில் ஒருவர். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பொற்கோமன் மிகவும் ஆத்திரமும் கோபமும் கொண்டவனாக, “இளவரசி! நீங்கள் சொல்வது பிசகு. நீங்களும் கொடும்பாளூர் இருக்கு வேளிர்களும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியின் விபரீதம் தான் இது. பரம்பரையாக இடங்காக்கப் பிறந்தாரின் வம்சத்தினர் சோழ வம்சத்தினரிடம் மிக்க மரியாதையும் பக்தியும் வைத்திருக்கின்றனர். இன்றும் அந்த மரியாதையும் பக்தியும் குறைந்து விடவில்லை. ஆனால் நீங்கள் தான் எங்களுக்குத் துரோகம் செய்ய விரும்புகிறீர்கள். எங்களை விரோதம் செய்து கொள்வதற்குப் பார்க்கிறீர்கள்” என்று கூறினான். இதைக் கேட்டதும் அருந்திகையும் சிறிது ஆத்திரம் கொண்டவளாக, “இல்லை, நீங்கள் நினைப்பது தவறு. பழையாறையிலிருந்து அனுதாபத்தோடு இங்கு வந்த என்னிடம் நீங்கள் இப்படிப் பேசக் கூடாது” என்றாள். இடங்காக்கப் பிறந்தார் தம் மகனைச் சமாதானம் செய்து கண்டிப்பவர் போல, “பொற்கோமா! இளவரசியாரிடம் இப்படியெல்லாம் பேசுவது தவறுதான். அவர்களுக்குப் பரம்பரையாக நம்முடைய குடும்பத்தாரிடமுள்ள விசுவாசம் போய்விடுமா...?” என்றார். பொற்கோமனின் கோபம் அடங்குவதாயில்லை. “நான் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. உண்மையை அறிந்துதான் பேசுகிறேன். இந்நாட்டில் பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஒழித்து மறுபடியும் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் நமக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆனாம் நம்மிடம் தங்கள் சூழ்ச்சிகளைக் காட்டுவதில் அவர்களுக்கு எவ்வித லாபமுமில்லை. நாம் புலிப்பள்ளியாரோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதைப் பழையாறையைச் சேர்ந்தவர்களும், கொடும்பாளூரார்களும் விரும்பவில்லை. இதை எப்படியேனும் தடுக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன். புலிப்பள்ளியார் நேற்று என்னோடு தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த உண்மையைச் சொன்னார். இந்த விவாக சம்பந்தத்தைத் தடுத்து விடுவதனால் மறுபடியும் இந்நாட்டில் சோழர் தனியரசு ஏற்பட்டு விடப் போகிறதா? இதெல்லாம் பைத்தியக்காரச் சூழ்ச்சி. எனக்கு நன்றாகத் தெரியும். இவர்களின் சூழ்ச்சியினால் தான் திருபுவனி இந்த மாளிகையிலிருந்து கடத்திக் கொண்டு போகப் பட்டிருக்கிறாள். நந்திபுர நகரத்து இடங்காக்கப் பிறந்தார்க்குப் பெரிய படை பலம் இல்லாவிட்டாலும் வீரமும், நெஞ்சில் உரமும் நிறைய உண்டு என்பதை மற்றவர்கள் மறந்து போனதுதான் மிகவும் ஆச்சர்யம்...” என்றான். தம்முடைய மகனின் ஆவேசம் நிறைந்த பேச்சு இடங்காக்கப் பிறந்தாரின் மனத்தைக் கலங்க வைத்தது. அவனுடைய வார்த்தைகளில் ஏதேனும் சிறிது உண்மையிருப்பினும் அவன் அப்பொழுது அப்படிப் பேசியது தவறு என்று தான் அவருக்குப் பட்டது. இருப்பினும் மகளை இழந்த துயரத்தில் மனம் குழம்பியிருக்கும் அவர் அப்பொழுது அவனைச் சமாதானம் செய்யக் கூடாத நிலையில் தான் இருந்து வந்தார். “இளவரசியாரிடம் இப்படி எல்லாம் பேசாதே. தவறு” என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டார். அருந்திகைப் பிராட்டி பொற்கோமனின் துடிதுடிப்பும் ஆவேசமும் நிறைந்த பேச்சைக் கேட்டு மனங் கலங்கிவிடவில்லை. அவள் அலட்சியமான சிரிப்போடு அமைதியான குரலில், “நீங்கள் நினைப்பது தவறு. தவறான அபிப்பிராயங்கள் மனத்தில் ஆழப்பதிந்து விட்டபடியால் தவறாகப் பேசவும், தவறான காரியங்களைச் செய்யவும் துணிந்திருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும். மற்றவர்கள் உங்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளும் முறையில் சோழ வம்சத்துக்குள் கொஞ்சம் பெருமையையும், ஆதிக்கத்தையும் எப்படிக் குலைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கலாமே தவிர, நாங்கள் உங்கள் வாழ்க்கையைக் குலைக்க முயற்சி செய்யவில்லை என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு விரோதியல்ல. உங்கள் நன்மையைக் கோருகிறவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற மோகத்தில் உங்களுக்கு எதுவும் தெளிவாகாமல் போனதில் ஆச்சரியமில்லை. எல்லாம் பின்னால் தான் உங்களுக்குத் தெரியும். பழையாறை நகருக்குச் சமீபமாக இருக்கும் நீங்கள், பரம்பரையாகச் சோழ மன்னர்களின் அன்பிலும், ஆதரவிலும் வாழ்ந்த நீங்கள், அவர்களுக்கு விரோதியாவது உங்களுக்கு மிகுந்த கெடுதலைத்தான் உண்டாக்கும் என்பதை மாத்திரம் நினைவில் பதிய வைத்துக் கொண்டால் போதும். நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டுச் சட்டென்று போய்ப் பல்லக்கில் அமர்ந்து பல்லக்குத் தூக்கிகளுக்குச் சைகை காட்டினாள். இளவரசியாரின் பல்லக்கும் பரிவாரங்களும் பழையாறையை நோக்கிச் சென்றன. அருந்திகைப் பிராட்டிக்கு உண்மை விளங்கி விட்டது. திருபுவனியாகத் திகழ்ந்த மாலவல்லி கோளாந்தகனை மணம் செய்து கொள்ள வேண்டுமே என்ற பயத்தினால் எங்கோ மறைந்து விடவில்லை என்கிற ரகசியம் அவளுக்குத் தெளிவாக புலனாகியது. முதல் நாள் வந்த புலிப்பள்ளியார் அவளிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். அவள் உண்மையாக இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனி அல்ல என்று தெரிந்து கொண்டிருக்கும் அவர் அவளுடைய உண்மை நிலை பற்றிக் கேட்டிருக்க வேண்டும். அதோடு மட்டுமல்ல; பூதுகன் இறந்தது பற்றியும் சந்தகர் சிறை பிடிக்கப்பட்டதைப் பற்றியும் அவளிடம் சொல்லி இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கேட்டதும் அவள் மனம் திகிலடைந்து அந்த இடத்தை விட்டுச் சமயம் பார்த்து ஒருவர் கண்ணிலும் படாமல் இரவோடு இரவாக வெளியேறியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நந்திபுர நகரத்திலிருந்து திரும்பியதும் அருந்திகை விஜயனிடம் எல்லா விவரங்களையும் சொன்னாள். விஜயனும் அவளுடைய அபிப்பிராயங்களை ஒப்புக் கொண்டான். மாலவல்லி அப்பொழுது காஞ்சியை நோக்கித்தான் போயிருக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தனர். விஜயனின் மனம் துடித்தது. எப்படியாவது அவளை இடங்காக்கப் பிறந்தாரின் ஏவலாளர்களின் கையில் சிக்காத வண்ணம் தடுத்துக் காப்பாற்றி விட வேண்டும் என்று தீர்மானித்தான். அவனே மாலவல்லியைத் தேடிப் புறப்படலாமா என்று துடிப்பில் இருந்தான். அப்பொழுது அருந்திகை பிராட்டி அவனைத் தடுத்து வேறு யாரேனும் குதிரை வீரர்களை அனுப்புவதுதான் உசிதம் என்று சொன்னாள். விஜயனும் அவள் வார்த்தையை ஏற்றுக் கொண்டு நல்ல குதிரை வீரர்கள் இருவரை அழைத்து, எப்படியேனும் இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வரும்படி கட்டளையிட்டான். விஜயனால் அனுப்பப்பட்ட பெருஞ்சிங்கன், வில்லவன் என்ற குதிரை வீரர்கள் இருவரும் குடந்தை நகர் வந்து மிகச் சாமர்த்தியமாக இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியைப் பற்றி அங்கு உலாவி வந்த வதந்தியை விசாரித்து விட்டு, அங்கு அவளைத் தேடுவதற்குச் சிலரை உளவாளிகளாக வைத்து விட்டுக் காஞ்சியை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் பல ஊர்களைக் கடந்து வேளூர்சாலைக்கு வந்த பொழுது இரவு நெருங்கி விட்டது. பல ஊர்களிலும் அவர்கள் திருபுவனியைத் தேடி அலைந்ததனால் மிகவும் களைப்படைந்திருந்தனர். அந்த இரவு வேளையில் அவளைத் தேடுவது கடினம் என்று பட்டது. நெடுந்தூரம் சுற்றியதனால் அவர்களும் அவர்கள் ஏறி வந்த குதிரைகளும் களைப்படைந்திருந்தாலும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. மறுநாள் காலைக்குள் காஞ்சிமா நகரை அடைந்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் அவர்கள் இருந்தனர். தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்த அவர்கள் முடிவு செய்ததனால் குதிரைகளை விரட்டாமல் மெதுவாகவே நடத்திக் கொண்டு வந்தனர். முன் நிலவுக் காலம். இரு புறமும் மரங்கள் அடர்ந்த அந்தச் சாலை மிகவும் ரமணீயமாக விளங்கியது. சிலு சிலுவென்று அவர்களை வந்து தழுவிய குளுமையான காற்று பிரயாணத்தினால் ஏற்பட்ட அவர்கள் உடல் சிரமத்தைப் போக்குவதாயிருந்தது. அந்தச் சாலையும் எவ்வித மேடு பள்ளங்களும் வளைவுகளும் இல்லாமல் நேராக இருந்ததால் குதிரைகளும் தங்கள் ஆயாசம் தீரத் தூங்கிக் கொண்டே நடப்பது போல நடந்தன. பெருஞ்சிங்கன் கதை சொல்வதில் நிபுணன். அவன் தோழன் வில்லவன் கதை கேட்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவன். பெருஞ்சிங்கன் தன் பாட்டனுக்குப் பாட்டன் பூர்வீகச் சோழ மன்னர்களிடம் சேனா வீரனாய் இருந்து விளைவித்த வீரப் பிரதாபங்களையெல்லாம் மிகுந்த வர்ணனையோடு சொல்லிக் கொண்டு வந்தான். வில்லவனும் தான் பாட்டனைப் பற்றியோ அல்லது பாட்டனுக்குப் பாட்டனைப் பற்றியோ இவ்வளவு அழகாகக் கதை சொல்ல முடியவில்லையே என்ற மன ஆதங்கத்தோடு கேட்டுக் கொண்டு வந்தான். கதைப் போக்கில் மெய்மறந்திருந்த அவர்கள் கவனத்தை வேறு ஏதோ சத்தம் கிளர்ச்சி கொள்ளச் செய்தது. “கொஞ்சம் பேசாமலிரு. ஏதோ சத்தம் கேட்கிறது” என்றான் வில்லவன். பெருஞ்சிங்கன் கதை சொல்வதை நிறுத்திக் கொண்டு சத்தத்தைக் கவனமாக ஊன்றிக் கேட்டான். தடதடவென்று குதிரைகள் ஓடும் சத்தம் கேட்டது. அந்தச் சாலையிலேயே தங்களுக்கு முன்னால் வேறு யாரோ குதிரைகளில் செல்கிறார்கள் என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் யாராயிருக்கும் என்பதைப் பற்றி அப்பொழுது சிந்திக்க அவர்களுக்கு இஷ்டமில்லை. அவர்கள் யாராயிருந்தாலும் தங்கள் குதிரைகளைத் துரிதப்படுத்தி அவர்களைப் பிடித்து விட வேண்டுமென்றுதான் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. முன்னால் செல்கிறவர்கள் அவர்கள் கண்களுக்குப் படாவிட்டாலும் அந்த இரவு வேளையில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் அவர்கள் அதிக தூரத்தில் போகவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. “குதிரையைக் கொஞ்சம் துரிதப்படுத்து. அவர்கள் யாரென்று பார்த்து விடலாம்” என்று சொல்லிவிட்டுப் பெருஞ்சிங்கன் தன் குதிரையை உசுப்பி விட்டான். இவ்வளவு நேரமும் எவ்விதக் கவலையுமின்றித் தூக்கத்திலே நடந்து வந்த குதிரைகளுக்குத் திடீரென்று தங்களை உசுப்பி விரட்டுவது பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றிக் கண்விழித்துக் கொண்டு கொஞ்சம் துரிதமாகவே ஓடத் தொடங்கின. சிறிது நேரத்தில் முன்னால் செல்லும் இரு குதிரை வீரர்கள் அவர்கள் கண்களில் பட்டார்கள். முன்னால் போகிறவர்களின் குதிரைகள் முன்னிலும் துரிதமாக ஓடத் தொடங்கின. அவர்கள் பின்னால் வரும் தங்களுக்குப் பயந்து இன்னும் துரிதமாகச் செல்வதை அறிந்த பழையாறை வீரர்கள், ஒருவேளை அவர்கள் கள்வர்களாக இருக்க வேண்டும், அல்லது தங்களைக் கள்வர் என்று தவறாகக் கருதிப் பயந்து ஓட நினைக்கும் வியாபாரிகளாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். எப்படியும் அவர்களைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குதிரைகளை அதிவேகமாக விரட்டினர். முன்னால் இரு குதிரைகள் ஓடுவதைக் கண்ட பழையாறை வீரர்கள் ஏறியிருந்த குதிரைகளும் அவைகளைப் பிடிக்க ஆவல் கொண்டு அதி வேகமாகப் பறந்தன. சில வினாடி நேரத்தில் பழையாறை வீரர்கள் அவர்களுக்கு முன்னால் சென்று அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டனர். அந்த மனிதர்கள் பெருஞ்சிங்கனும் அவன் தோழனும் நினைத்தபடி கள்வர்களோ வியாபாரிகளோ அல்லவென்று சட்டென்று தெரிந்து கொண்டார்கள். அந்த மங்கிய நிலவொளியில் அவர்களுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் வேறு யாருமில்லை. நந்திபுர நகரத்து ஏவலாளர்கள் தான். இதற்கு மேல் அவர்களும் திருபுவனியைத் தேடிக் கொண்டுதான் செல்கிறார்கள் என்பதைச் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டுமா? “ஓ! நீங்களா... நாங்கள் வேறு யாரோ திருடர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணித் துரத்தினோம். அதனால் பாதகமில்லை. தெரிந்தவர்கள்தானே...? வழித்துணையாச்சு. சரி! எங்கே இப்படி பயணம் புறப்பட்டீர்கள்?” என்று கேட்டான் பெருஞ்சிங்கன். நந்திபுர நகர ஏவலாளர்களில் ஒருவன், “இது உங்களுக்குத் தெரியாதா? எங்கள் காவலரின் மகள் மறுபடியும் எங்கோ ஓடிப் போய் விட்டாள். அவளைத் தேடி அழைத்துக் கொண்டு வரும் பணி எங்களுக்கு இடப்பட்டுள்ளது” என்றான். “சரிதான் - நல்லது - அப்படித்தான் உங்களைக் கண்டதுமே எங்களுக்குத் தோன்றியது. எங்கள் மன்னரும் எங்களை அந்தக் காரியத்துக்காகவேதான் அனுப்பினார். பல இடங்களில் தேடி உளவு விசாரித்து விட்டோம். எதுவுமே புலனாகவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்ததோ?” என்றான் பெருஞ்சிங்கன். “நாங்களும் பல இடங்களில் தேடி அலைந்து விட்டோம். எங்களுக்கும் புலனாகவில்லை...” “சரிதான் - இப்பொழுது நீங்கள் எங்கே போகிறீர்கள்...?” என்று கேட்டான் வில்லவன். “அந்தப் பெண் காஞ்சியில் இருப்பாளோ என்ற சந்தேகம்...” “அப்படியென்றால் காஞ்சிக்குப் போகிறீர்கள்...? நாங்களும் அங்கு தான் செல்கிறோம். எங்களுக்கும் நல்ல துணை” என்றான் பெருஞ்சிங்கன். “இது ஏதோ கதையாகத் தானிருக்கிறது - ராமாயணம் போல - எங்கள் காவலர் இன்னும் பல திசைக்குப் பலரை அனுப்பி இருக்கிறார். சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போனதும் ராமன் பல திசைகளுக்கும் சீதையைத் தேட வானர சேனைகளை அனுப்பியது போல்” என்றான் நந்திபுர நகர வீரன். பெருஞ்சிங்கன் கலகலவென்று சிரித்தான். அந்த இரவு கூடச் சிரிப்பது போல எதிரொலி செய்தது. “வானர சேனையா... பொருத்தம் தான். எங்கள் அரசர் அந்தப் பெண்ணைத் தேட வானர சேனையை அனுப்பவில்லை. எங்களைத் தான் அனுப்பி இருக்கிறார்” என்றான். “போகட்டும். அந்தப் பெண்ணை ராவணனைப் போல் யாரோ தூக்கிக் கொண்டு தான் போயிருப்பார்கள் என்று உங்கள் காவலர் நினைக்கிறாரோ?” என்றான் வில்லவன். “ஆமாம்! எங்கள் காவலரின் குமாரர் அப்படித்தான் அபிப்பிராயப்படுகிறார். நாங்களும் அப்படி நினைத்துத்தான் புறப்பட்டிருக்கிறோம்.” “அப்படியா... அது பைத்தியக்கார எண்ணம் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். துவராடை அணிந்து புத்த பிக்ஷுணிக் கோலத்திலிருக்கும் அந்தப் பெண்ணை யாரும் வந்து கடத்திக் கொண்டு போக நினைக்க மாட்டார்கள். அவளாகத்தான் போயிருக்க வேண்டும்” என்றான் பெருஞ்சிங்கன். “அதுவும் தவிர உங்கள் காவலருக்கு இந்த உலகத்தில் யாரும் பகைவர்கள் இருப்பதாகக் கூடத் தெரியவில்லையே?” என்றான் வில்லவன். “எங்கள் காவலருக்குப் பகைவர்கள் இல்லை. ஆனால் எங்கள் காவலரின் மகளைத் தன் மகனுக்கு மணம் முடித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்த தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளியாருக்குப் பகைவர்கள் உண்டல்லவா? அவர்கள் செய்திருக்கலாமல்லவா?” என்றான் நந்திபுர நகர வீரர்களில் ஒருவன். “இருக்கலாம் - புலிப்பள்ளியார் தமக்கு வைரியாக யார் யாரைக் கருதுகிறாரோ, அவர்களை யெல்லாம் தமக்கும் வைரிகளாக உங்கள் காவலர் நினைக்கிறார் என்று தெரிகிறது - இல்லையா...?” என்றான் பெருஞ்சிங்கன். “புலிப்பள்ளியாரோடு பெண் கொடுத்துச் சம்பந்தம் வைத்துக் கொள்ள நினைத்தால் அப்படித்தானே நேரிடும்?” என்றான் நந்திபுர நகர ஏவலாளர்களில் ஒருவன். “அப்படித்தான் நேரவேண்டுமென்று என்ன விதியோ...? போகட்டும். தஞ்சை அமைச்சர் எங்கள் மன்னரைத் தங்களுக்கு விரோதியாகக் கருதுகிறார். அப்படியென்றால் உங்கள் காவலரும் எங்கள் மன்னரைத் தங்கள் எதிரியாகக் கருதுகிறாரா?” என்றான் வில்லவன். நந்திபுர நகரத்து ஏவலாலர் இருவரும் எவ்வித பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தனர். “என்ன ஒன்றும் பதில் இல்லையே?” என்றான் வில்லவன். அந்த வீரர்களில் ஒருவன் தயங்கியபடியே, “அப்படி இல்லை. உங்கள் மன்னருக்கும் எங்கள் காவலருக்கும் உள்ள உறவும் தொடர்பும் வேறு. அது ஒரு நாளும் அழியாது. சோழ வம்சத்தினர் மீது எங்கள் காவலருக்குப் பரம்பரையாகப் பக்தியும் விசுவாசமும் உண்டு. சோழ வம்சத்தினருக்கும் எங்கள் காவலரிடம் எல்லையற்ற அன்பும் மதிப்பும் உண்டு” என்றான். “அன்பும் மதிப்பும் இல்லாவிட்டால் எங்கள் மன்னர் உங்கள் காவலரின் மகள் காணாமல் போனதற்கு மிகவும் கவலை கொண்டு எங்களை ஊர் ஊராகத் தேடுவதற்கு அனுப்பி வைப்பாரா?” என்றான் பெருஞ்சிங்கன். “ஆமாம்! அதில் என்ன சந்தேகம்?” “ஒரு சந்தேகமும் இல்லை. எங்கள் மன்னர் எத்தகைய விசுவாசத்தோடு இருந்தாலும், தஞ்சை மன்னருக்கும் பல்லவச் சக்கரவர்த்திக்கும் பயந்து உங்கள் காவலர் துரோகம் செய்தாலும் செய்து விடுவார் போலிருக்கிறது” என்றான் வில்லவன். “பயப்பட்டால் என்ன? அவர்களோடு நட்புப் பாராட்டினால் என்ன? ஒரு நாளும் எங்கள் காவலர் சோழ வம்சத்தினருக்குத் துரோகம் இழைக்க மாட்டார்” என்றான் நந்திபுர நகர வீரன். அவர்களுக்கு வில்லவனின் வார்த்தைகள் மனத்தைக் குத்திக் காட்டி ஏளனம் செய்வது போலிருந்தன. அவர்களுக்குச் சிறிது ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டன. இருப்பினும் அந்தச் சமயத்தில் பழையாறை வீரர்களை எதிர்த்துச் சண்டை போடுவது நல்லதல்லவென்று எண்ணி மௌனமாகவே சென்றனர். அந்தச் சிறிய சாலையில் முன்னால் நந்திபுர நகர வீரர்களின் இரு குதிரைகளும் அவர்களுக்குப் பின் பழையாறை வீரர்களின் இரு குதிரைகளும் சென்றன. அவர்கள் இருபுறமும் மரங்கள் அடர்ந்த சாலையைக் கடந்து சிறு குன்றுகள் அடர்ந்த இடத்தை அடைந்த பொழுது, பொழுது புலர்வதற்கு அடையாளமாக வெள்ளி முளைத்தது. நிலவும் மறைந்து ஒளி மங்கிக் காட்சியளித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் இருபுறமும் சிறிதும் பெரிதுமாக விளங்கிய மலைக் குன்றுகளிடையே வளைந்து வளைந்து சென்ற அப்பாதை கரடு முரடான தாகவே விளங்கியது. மனித சஞ்சாரமற்ற அந்த மலைக் கூட்டங்கள் துஷ்ட மிருகங்களும் கள்வர்களும் வசிப்பதற்கே தகுதியான இடம் போல் தோன்றியது. சூரியனின் எழுச்சிக்கு அறிகுறியாகக் கீழ்வானில் ஒளி பரவியது. இருள் பிரிந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள அனுகூலமாக எங்கும் பிரகாசம் பரவியது. முன்னால் சென்ற நந்திபுர நகர வீரர்களில் ஒருவன் திடீரென்று தன் குதிரையை நிறுத்தி, “அதோ பாருங்கள். யாரோ ஒரு பெண்” என்று சுட்டிக் காட்டினான். எல்லோருடைய பார்வையும் அவன் சுட்டிக் காட்டிய திசையில் சென்றது. ஒரு மண் குடத்தைச் சுமந்த வண்ணம் ஒரு பெண் அங்கிருந்த மலைக்குகை ஒன்றில் நுழைவதைக் கண்டனர். இருள் பிரியும் அந்த நேரத்தில் அந்தப் பெண்ணைக் கண்டவர்கள் ஏதோ மோகினிப் பிசாசு என்று தான் கிலி அடைந்திருப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வரிசையாக மலைக்குன்றுகள் அமைந்திருக்கும் அவ்விடத்தில் அப் பெண் சென்ற இடத்தை நோக்கி யாவரும் தங்கள் குதிரையைச் செலுத்தினர். தொடர்ச்சியான அம் மலைக் குன்றுகளிடையே வரிசையாகக் குடையப்பட்ட சில குகைகள் இருந்தன. அவைகள் சிறு கோயில்கள் போலவும், மண்டபங்கள் போலவும் காட்சி அளித்தன. அந்தச் சிறு குகைக் கோயில்கள் பார்வையிலிருந்தே ஜைனக் கோயில்கள் என்று எளிதாக விளங்கின. அவர்கள் அந்தப் பெண் எந்தக் குகைக்குள் நுழைந்தாளோ அந்தக் குகை வாசலில் வந்து தங்கள் குதிரையை நிறுத்தினர். குதிரைகள் வரும் குளம்படிச் சத்தம் கேட்டு அந்தக் குகைக்குள் சென்ற பெண் வெளியே வந்து பார்த்தாள். அழகான பெண், குதிரை மீது அமர்ந்த வண்ணமிருக்கும் அந்த நான்கு வீரர்களைக் கண்டதும் மனத்தில் ஏதோ பீதி கொண்டவளாக மிரள மிரள விழித்தாள். அவள் கண் பார்வையில் ஏதோ சந்தேகமும் பயமும் சூழ்ந்திருந்தன. அவளுடைய நீண்ட கூந்தல் அவளுடைய தோள்களில் சரிந்து விழுந்து புரண்டு கொண்டிருந்தது. அவள் உடுத்தியிருந்த துல்லியமான வெண்ணிற ஆடை அவளுடைய களங்கமற்ற மனத்தை எடுத்துக் காட்டியது. அந்தப் பெண் மிகுந்த பயத்தோடும் நடுக்கத்தோடும், “தாங்கள் யார்?” என்று கேட்டாள். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். பெருஞ்சிங்கன், “நாங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள். காஞ்சிமா நகருக்குச் செல்லுகிறோம். இடையே இந்தக் குகைக் கோயில்களைக் கண்டு பார்த்து விட்டுப் போகலாமென்று நினைத்தோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நந்திபுரத்து வீரர்களில் ஒருவன் தன் சகாவிடம் கண் ஜாடை காட்டி ஏதோ சமிக்ஞை செய்தான். மற்றவனும் அவனுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டவன் போல் இலேசாகத் தலையை அசைத்தான். பெருஞ்சிங்கன் அந்தப் பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய சமிக்ஞையைத் தெரிந்து கொண்டு கேலியாகச் சிரித்தான். |