மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 14 - ஆசிரமத்துக்கு ஆபத்து!

     பெருஞ்சிங்கன் தன் பார்வையைத் திருப்பி அந்தப் பெண்ணைப் பார்த்து, “நாங்கள் சிறிது நேரம் இங்கு களைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறோம்” என்று கூறினான்.

     “தாராளமாக...” என்று அப்பெண் உபசாரமாகச் சொல்லி விட்டுச் சட்டென்று உள்ளே சென்றாள். குதிரை வீரர்கள் யாவரும் குதிரையிலிருந்து இறங்கி அந்தக் குகைக்கு வெளிப்புறத்திலிருந்த சிறிய மண்டபத்தில் அமர்ந்தனர். அந்தச் சமயத்தில் அந்தக் குகைக்குள் அந்தப் பெண் வேறு யாருடனோ ஏதோ பேசுவது கேட்டது. சில விநாடி நேரத்தில் அவர்கள் எதிரில் வயதான ஜைன சந்நியாசி ஒருவர் வந்து நின்றார். “நீங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்களா? சந்தோஷம். வாருங்கள், இங்கே தாராளமாகத் தங்கி இருக்கலாம். பிரயாணத்தினால் மிகவும் களைப்படைந்தவர்கள் போல் தோன்றுகிறது. சமீபத்தில் உள்ள சுனைக்குச் சென்று காலைக் கடனை முடித்துக் கொண்டு வந்தீர்களானால் ஏதேனும் ஆகாரம் செய்யலாம். மனித சஞ்சாரமற்ற இடத்தில் தெய்வாதீனமாக வரும் உங்களைப் போன்றவர்களை உபசரிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார். அந்த சந்நியாசியின் அன்பான மொழிகள் அவரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைக்கும் வண்ணம் இருந்தன. முனிவரின் ஆக்ஞைப்படி தங்கள் காலைக்கடனை முடித்துக் கொள்வதற்காகச் சுனையை நோக்கி நடந்தனர். அவர்கள் சுனையை நாடிப் போய்க் கொண்டிருக்கும் பொழுது நந்திபுரத்து வீரன் தன் நண்பனிடம் மெதுவான குரலில் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்த பெருஞ்சிங்கன் “நீ நினைப்பது முட்டாள்தனம். காணாமல் போன திருபுவனி தான் இந்தப் பெண் என்று எந்தக் காரணத்தினால் முடிவு கட்டுகிறாய்?” என்று கேட்டான்.

     “அவளுடைய அங்க அடையாளங்களிலிருந்துதான் நான் தெரிந்து கொண்டேன். சீவர ஆடையைக் களைந்து வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறாள்” என்றான் நந்திபுர நகர வீரன்.

     “அப்படியா...? இப்படி நினைப்பதும் புத்திசாலித்தனம் தான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் நெடு நாட்களாக இந்த மலைப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறவள் போல் தோன்றுகிறது. எதையும் தீர விசாரிக்காமல் முடிவு செய்து விடக்கூடாது. எனக்குத் தோன்றவில்லை, அவள் இடங்காக்கப் பிறந்தாரின் மகளாய் இருப்பாளென்று” என்றான் வில்லவன்.

     “அவள் நம்மைக் கண்டதும் மிகவும் பயந்தவள் போல் மிரண்டு விழித்தாள். அதிலிருந்தே நான் தெரிந்து கொண்டு விட்டேன், நாம் தேடிக் கொண்டு வரும் பெண் இவள் தானென்று” என்று பிடிவாதமாகச் சொன்னான் நந்திபுர நகர வீரன்.

     “உன் கோணல் புத்திக்குத் தோன்றியது அவ்வளவுதான். சரி! உன் தீர்மானப்படியே அவள் உங்கள் காவலரின் மகளாக இருக்கட்டும். அவளை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான் பெருஞ்சிங்கன்.

     “எங்கள் கடமையைச் செய்வோம். எப்படியாவது அவளைக் கடத்திக் கொண்டு போய் எங்கள் காவலரிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றான் நந்திபுர நகர வீரன்.

     எல்லோரும் சுனையை அடைந்து பல் விளக்கி விட்டுக் கிளம்பினர். “அந்தப் பெண்ணை எங்கள் எதிரில் கடத்திக் கொண்டு போவதென்பது முடியாத காரியம்...” என்றான் வில்லவன்.

     “நாங்கள் எங்கள் காவலரின் மகளைத் தேடி அழைத்துக் கொண்டு போவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் நீங்கள் இருவரும் எங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறீர்கள் என்பது இப்பொழுதுதான் விளங்குகிறது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்குப் பயந்து நாங்கள் கோழைகள் போல் ஓடி விட மாட்டோம்” என்றான் நந்திபுர நகர வீரனில் ஒருவன்.

     “அப்படியா! உங்கள் சாமர்த்தியத்தையும் தான் பார்ப்போமே” என்றான் பெருஞ்சிங்கன்.

     அவர்கள் அந்தக் குகை வாசலை அடைந்த பொழுது அந்தப் பெண் ஏதோ காரியமாகக் குகைக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் நந்திபுர நகர வீரர்களில் ஒருவன் அந்தப் பெண் மீது திடீரென்று பாய்ந்து அவளை அப்படியே தூக்கிக் குதிரையில் இருத்த முயற்சி செய்தான். இதைக் கண்ட வில்லவன் அவன் மீது பாய்ந்து அவனை அப்பால் பிடித்துத் தள்ளினான். அந்தப் பெண் வீறிட்டுக் கத்திய குரல் கேட்டு குகைக்குள்ளிருந்த வயதான ஜைன சந்நியாசி வெளியே வந்தார். “இதென்ன அநியாயம்? கேட்பாரில்லையா...?” என்று கத்தினார்.

     அந்தப் பெண் விக்கி விக்கி அழுது கொண்டே குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள். சில விநாடி நேரத்தில் பழையாறை வீரர்களுக்கும் நந்திபுர நகர வீரர்களுக்கும் பெருஞ்சண்டை மூண்டது. நெடுநேரப் போராட்டத்துக்குப் பின் நந்திபுர நகர வீரர்கள் களைப்படைந்து ஓடத் தலைப்பட்டனர். பழையாறை வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய குதிரைகளின் மீது ஏறிக்கொண்டே செல்லும்படி சொன்னார்கள். அவர்களும் வெட்கத்தோடு தங்கள் குதிரை மீது அமர்ந்து வந்த வழியிலேயே திரும்பிச் சென்றனர்.

     “இப்படிப்பட்ட ஆபத்தான சமயத்தில் உங்களைப் போன்ற வீரர்களை அந்த அருகத பரமேஷ்டி தான் அனுப்புகிறார். முன்பு ஒரு தடவை இப்படித்தான் இப்பெண்ணைக் கடத்திக் கொண்டு செல்ல நினைத்த முரடர்களிடமிருந்து இரண்டு வீரர்கள் வந்து காப்பாற்றினர். ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவதென்றால் இவ்வளவு ஆபத்தா? இந்தச் சந்நியாசிக்கு இந்தத் தொல்லைகளெல்லாம் எதற்கு? இவளை அழைத்துக் கொண்டு போய்க் காப்பாற்றுவதாகச் சொன்ன அந்த வாலிபன் எப்பொழுது வருவானோ? அவன் சுங்க நாட்டைச் சேர்ந்தவன் என்று சொன்னான். அவனோடு சோதிடன் ஒருவனும் வந்திருந்தான். நீங்களும் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? உங்களுக்குத் தெரியுமா?” என்றார் அரிஷ்டநேமி.

     அந்த ஜைன முனிவரின் வார்த்தையைக் கேட்டுப் பழையாறை வீரர்கள் இருவரும் சிறிது சம்சயம் கொள்ளலாயினர். கங்க நாட்டைச் சேர்ந்த இளைஞனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆனால் சோழ நாட்டைச் சேர்ந்த சோதிடர் என்றதும் அவர்களுக்குச் சிறிது சந்தேகம் தான் ஏற்பட்டது. “சோழ நாட்டைச் சேர்ந்த சோதிடர் என்று சொன்னீர்களே, அவர் எப்படி இருந்தார்?” என்று கேட்டான் பெருஞ்சிங்கன்.

     அந்த ஜைன முனிவர் சொல்லிய அடையாளத்திலிருந்து அவர் கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகராகத்தான் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டனர்.

     “அந்தச் சோதிடன் பெயர் சந்தகர். அவரை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் கங்கபாடியிலிருந்து வந்த இளைஞரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இருந்தார்?”

     “அந்த வாலிபன் மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தான். தன்னை ஒரு சாதாரணப் போர்வீரன் என்று சொல்லிக் கொண்டான். ஆனால் அவனைப் பார்த்தால் ஒரு இளவரசன் போல் தான் தோன்றினான். அந்த இளைஞன் தான் என்னிடம் நெடு நாட்களாக வளரும் இந்தக் குணமான பெண்ணைத் தன் நாட்டுக்கு அழைத்துப் போய்த் தானே காப்பாற்றுவதாகச் சொன்னான். அவன் கூறிய வார்த்தைகளிலிருந்து அவனே இப்பெண்ணை மணம் புரிந்து கொள்வானென்றுதான் தோன்றியது. இந்தப் பெண்ணும் அந்த வாலிப வீரனிடம் தன் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறாள் என்று தெரிகிறது. அந்த வாலிபனின் வரவை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் அவள் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரிகிறது. என்னதான் ஒரு துறவியினுடைய குகையில் வாழ்ந்த பெண்ணாயினும் இந்த உலகத்தின் மோகம் அவளை விட்டு விலகிவிடவில்லை. பாவம்! பெண் தானே? அந்த வாலிபன் எப்பொழுது வருவான்; அவன் கையில் இவளை என்றைக்கு ஒப்படைப்போம் என்று தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் எவ்வளவு ஆபத்தோ? நீங்கள் காஞ்சிக்குத் தானே போகிறீர்கள்? அவர்களும் காஞ்சிக்குப் போவதாகத்தான் சொன்னார்கள். அங்கு அவர்களைப் பார்த்தால், சொல்லுங்கள்” என்றார்.

     பெருஞ்சிங்கன் மனத்தில் பலவித எண்ணங்கள் தோன்றின. அந்தப் பெண் அந்த முனிவரால் அனாதையாக வளர்க்கப்படுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டான். அதோடு அந்தப் பெண்ணை அதற்கு முன் யாரோ கடத்திச் செல்ல முயன்ற பொழுது சோதிடர் சந்தகரும் வேறொரு வீரனும் தடுத்துக் காப்பாற்றி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல நினைத்தவர்கள் யாரென்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள நினைத்தான். “ஏற்கனவே இந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல நினைத்த முரடர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” என்றான்.

     “யாரோ ஒரு புத்த பிக்ஷுவும் அவனைச் சேர்ந்த சிலரும் ஒரு நாள் இரவு திடீரென்று வந்து இந்தப் பெண்ணைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர். அந்தச் சமயம் அந்த வீர இளைஞனும் அந்தச் சோதிடரும் தெய்வாதீனமாக வந்து அவளைக் காப்பாற்றி என்னிடம் ஒப்படைத்தனர். அந்தச் சமயம் தான் அந்த வாலிபன் இந்தப் பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டு அவளைக் காப்பாற்றுவதாகச் சொன்னான்” என்றார்.

     ஒரு பௌத்த பிக்ஷு இந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போனார் என்பதைக் கேட்டதும் பெருஞ்சிங்கன் ஆச்சர்யமடைந்தவனாக, “பௌத்த பிக்ஷு என்று சொன்னீர்களே அவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” என்றான். “அவரைப் பற்றி விவரமாக எனக்கொன்றும் தெரியாது. ஆனால் அவர் சோழ நாட்டைச் சேர்ந்தவரென்றும், பூர்வாசிரமத்தில் அரசாங்கத்தில் பெரும் பதவி வகித்தவரென்றும், இப்பொழுது ஏதோ சாம்ராஜ்யச் சூழ்ச்சி செய்வதற்காகவே துறவுக் கோலம் பூண்டு திரிவதாகவும், அந்த வாலிபர் மூலமாகவும் சோதிடர் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். சன்மார்க்கக் கொள்கைகளை உலகில் நிலைநாட்டப் பிறந்த மகான் பெயர்களைச் சொல்லிக் கொண்டு ஏற்படுத்தப்படும் சமயங்களில் இத்தகைய சூழ்ச்சிக்காரர்களும் வஞ்சகர்களும் புகுந்து அந்த உத்தம சீலர்களின் உயர் லட்சியங்களுக்கு இழுக்கை உண்டாக்குகிறார்களே என்ற கவலை தான் எனக்கு. புத்த பிக்ஷுவின் வேடத்தில் திரியும் அந்தக் கயவனுக்குப் பல்லவ சக்கரவர்த்தியின் சகோதரன் சிம்மவர்மர் நெருங்கிய நண்பரென்று கேள்விப்பட்டேன். சிம்மவர்மர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவராயிருந்து, அதைக் காப்பாற்றுகிறவர் போல் பேசித் திரிந்தாலும் அவரும் பலவித தீமையான காரியங்களைச் செய்து வருகிறார் என்று அறிந்தேன். அவர் தான் இப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு வரும்படி அந்தப் புத்த பிக்ஷுவையும் மற்றவர்களையும் அனுப்பியதாகத் தெரிந்தது. எப்படியோ அந்த ஆபத்திலிருந்து எங்களைக் காப்பாற்ற இரண்டு உத்தம வீரர்களைக் கடவுள் தான் அனுப்பியிருக்க வேண்டும்.”

     ஜைன முனிவரின் வார்த்தைகளிலிருந்து அந்த புத்த பிக்ஷுவாக வந்தவர் கலங்கமாலரையர் தான் என்பதை எளிதாக அறிந்து கொண்டான் பெருஞ்சிங்கன். அந்தப் பெண்ணை அவர் கடத்திச் செல்ல முயற்சித்ததிலிருந்து அந்தப் பெண்ணைப் பற்றி ஏதோ அந்தரங்க ரகசியம் இருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. “கடைசியில் அந்தப் புத்த பிக்ஷு என்னவானார். அவரை விட்டு விட்டார்களா...?” என்று கேட்டான்.

     “அவர்கள் அந்த பிக்ஷுவுக்குச் சரியான தண்டனை கொடுப்பதாக இருந்தார்கள். நான் துறவுக் கோலத்தில் இருப்பவரை ஹிம்சிக்க வேண்டாம், நற்புத்தி புகட்டி அனுப்புங்கள் என்று வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வார்த்தைக்கு இணங்கி அப் பிக்ஷுவின் சீவர ஆடைகளைக் களையச் செய்து, சாதாரண ஆடைகளை அணிந்து கொள்ளச் செய்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள்” என்றார் அரிஷ்டநேமி முனிவர்.

     “சரிதான். இந்தப் பெண் எத்தனை நாட்களாக உங்களிடம் வளர்கிறாள்? இவள் பெற்றோரு யார்? உங்களுக்குத் தெரியுமா?” என்றான் வில்லவன்.

     “இவள் குழந்தைப் பருவத்திலிருந்தே என்னிடம் தான் வளர்ந்து வருகிறாள். இவளுடைய பெற்றோர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. பல வருடங்களுக்கு முன் சோழ நாட்டில் திருப்புறம்பயத்துக்குச் சமீபமாக இவளை ஒரு கபாலிகன் காளிக்குப் பலி கொடுக்க நினைத்த பொழுது நான் காப்பாற்றிக் கொண்டு வந்தேன். அன்றிலிருந்து நான் தான் வளர்க்கிறேன்” என்றார்.

     இவள் ஒரு வேளை இடங்காக்கப் பிறந்தாரின் மகளாகவே இருப்பாளோ என்று ஒரு சந்தேகம் பெருஞ்சிங்கன் மனத்தில் ஏற்பட்டது. அவன் அந்த ஜைன முனிவரிடம், “இப்பொழுது இந்தப் பெண்ணை இரண்டு வீரர்கள் தூக்கிச் செல்ல நினைத்தார்களே, அவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

     “எனக்கு எப்படித் தெரியும்? அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்கள் என்று தான் நினைத்தேன். அழகான பெண்ணென்றால் மோகம் தலைக்கேறி விடுகிறது. இதிலிருந்து நாம் உலகத்தைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினம் தான்” என்றார் அரிஷ்டநேமி.

     “அவர்கள் மோகத்தினால் இந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல நினைக்கவில்லை. உண்மை வேறு. அவர்கள் நந்திபுர நகரைச் சேர்ந்தவர்கள். நாங்கள் பழையாறை நகரைச் சேர்ந்தவர்கள். நந்திபுரத்து நகரக் காவலரின் மகள் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே காணாமற் போய்விட்டாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்த பிக்ஷுணிக் கோலத்திலிருந்த அவளை எங்கிருந்தோ அழைத்து வந்து மாளிகையில் அடைத்து வைத்து, அவளுக்கு மணம் முடிக்கவும் தீர்மானித்திருந்தனர். ஆனால் அந்தப் பெண் ஒருவருக்கும் தெரியாமல் மறுபடியும் எங்கோ மறைந்து விட்டாள். அவளைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துச் செல்ல வந்த ஏவலாளர்கள் தான் அவர்கள். இங்கு அவர்கள் வந்ததும், இந்தப் பெண்ணைப் பார்த்ததும் இவள் தங்களுடைய காவலரின் மகள் தான் என்று தீர்மானித்துப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு செல்வதற்கு முயன்றனர். அதைத்தான் நாங்கள் தடுத்து விட்டோம்” என்றான்.

     இதைக் கேட்டதும் அரிஷ்டநேமி முனிவர் மிகவும் ஆச்சர்ய மடைந்தார். “அப்படியா...? நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்றார்.

     “எங்கள் மன்னரும் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரும்படி எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதனால் நாங்களும் அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு காஞ்சியை நோக்கிப் புறப்பட்டோம். இடையே இப்படி நடந்தது” என்றான் பெருஞ்சிங்கன்.

     அரிஷ்டநேமி முனிவர் சிறிது நேரம் யோசித்தார். “உண்மையாகவே இவள் நந்திபுரத்துக் காவலரின் மகளாகவே இருந்தாலும் இருக்கலாம்...” என்று கூறினார்.

     “இவள் அவருடைய மகள் என்றால் புத்த பிக்ஷுணிக் கோலத்திலிருந்த பெண் யார்?” என்றான் வில்லவன்.

     “அவள் யாரோ? ஒருவேளை அவளே அவருடைய மகளாக இருந்தாலும் இருக்கலாம்” என்றார் ஜைன முனிவர்.

     “இது குழப்பமாகத்தான் இருக்கிறது. இருக்கட்டும். அந்த ஏவலாளர்கள் தவறான அபிப்பிராயத்தோடு போயிருக்கிறார்கள். ஆகையால் இந்தப் பெண்ணுக்கு எப்பொழுதும் ஆபத்து உண்டு என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். இந்த ஆபத்திலிருந்து இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கு எப்படியாவது முயற்சி செய்தாக வேண்டும்” என்றான் பெருஞ்சிங்கன்.