மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 17 - எதிர்பாராத சந்திப்பு

     காஞ்சீபுரத்து வீதியொன்றில் இரவு வேளையில் கலங்கமாலரையரால் கடுமையாகத் தாக்குண்ட பூதுகனுக்கு நினைவு தப்பி விட்டது. கலங்கமாலரையர் உடனே அவனை அப்புறப்படுத்த நினைத்து, அவன் தலைப் பக்கமாகச் சென்று இரு கைகளாலும் அவனைத் தூக்க முற்பட்டார்.

     இந்தச் சமயத்தில் “நில், நகராதே!” என்ற இடி குரல் கேட்டதும், எதற்கும் கலங்காத கலங்கமாலரையரின் நெஞ்சம் கூடக் கலக்கி விட்டது என்பது அவர் சிறிது நடுங்கித் திரும்பிப் பார்த்ததிலிருந்து தெரிந்தது.

     அப்பொழுது அங்கே கம்பீரமான ஒரு புரவியிலிருந்து ஒருவன் இறங்கினான். அவனுடன் இன்னும் சில குதிரை வீரர்கள் வந்திருந்தனர். முதலில் வந்தவன் அவர்களுக்குச் சைகை காட்டியதும் அந்த வீரர்கள் மறுகணம் குதிரையிலிருந்து இறங்கிக் கீழே கிடந்த பூதுகனைத் தூக்கிக் குதிரையில் வைத்துக் கொண்டு வேகமாகச் சென்று விட்டனர்.

     கலங்கமாலரையர் கலக்கம் தெளிந்து அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தார்.

     “யார்? என்ன? சிம்மவர்மரா?” என்று குழப்பத்துடன் கேட்டார்.

     “ஏன்? நீ என்னை இந்தச் சமயத்தில் இங்கே எதிர்பார்க்கவில்லை, இல்லையா?” என்று கேட்டான் சிம்மவர்மன்.

     “இல்லை, இல்லை. வெகு நாளைய ராஜத்துரோகி இன்று என் கையில் சிக்கினான். அவனைக் கொண்டு போய்த் தனியிடத்தில் வைத்துத் தக்கபடி தண்டிக்க எண்ணியிருந்தேன்... தாங்கள்... வந்து...”

     “...குறிக்கிட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டேன், இல்லையா? கலங்கமாலரையரே! கலங்காதேயும். உமது காரியத்தைக் கவனித்துக் கொண்டு போம். பூதுகன் என் பாதுகாப்பில் இருக்கும் விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று கூறிவிட்டு, சிம்மவர்மன் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான். கலங்கமாலரையர் மௌனமாக அங்கிருந்து மறைந்தார்.

     பூதுகனைத் தூக்கிச் சென்ற வீரர்கள் வெகுதூரம் சென்று, தேனார்மொழியாளின் மாளிகை வாசலில் வந்து குதிரைகளை நிறுத்தினர். சிம்மவர்மன் தன் குதிரையினின்றும் இறங்கி, மாளிகையின் உள்ளே சென்று, கதவை இலேசாகத் தட்டினான். உடனே கதவும் திறக்கப்பட்டது. வாசலில் இருந்த வீரர்களுக்குச் சைகை காட்டி அவனை உள்ளே எடுத்து வரச் சொன்னான்.

     மயக்கமுற்றிருந்த பூதுகனை அந்த வீரர்கள் மெதுவாகக் குதிரையிலிருந்து இறக்கி உள்ளே கொண்டு போனார்கள். கூடத்தைக் கடந்து இரண்டு மூன்று கட்டுக்களைத் தாண்டி, பின்புறம் வழியாக மேன்மாடத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

     அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த பெண்மணி கலவரமடைந்து, “ஐயோ...! பூதுகரா? அவருக்கு என்ன நேர்ந்தது!” என்று கேட்டுக் குலுங்கக் குலுங்க விம்மினாள்.

     “தேனார்மொழி! பூதுகனுக்கு ஒன்றும் இல்லை. மண்டையில் பலத்த அடிபட்டிருக்கிறது. அதற்குத் தகுந்த சிகிச்சை செய்து இங்கு கொண்டு வந்திருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவன் கண் விழித்துக் கொள்ளுவான். அவனைச் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. பூதுகன் உன் மாளிகையில் இருப்பது ஒருவருக்கும் தெரியக் கூடாது. பொழுது விடிய இன்னும் ஒரு ஜாமம் இருக்கிறது. நான் உடனே போக வேண்டும். இன்று இரவு நான் இங்கு வருகிறேன்...!” என்று கூறிவிட்டுச் சிம்மவர்மன் ஓடிச் சென்று குதிரையில் ஏறி அதை வேகமாகச் செலுத்தினான். பூதுகனை மேன்மாடத்தில் ஒரு கட்டிலில் கிடத்திவிட்டு, வீரர்கள் வெளியே சென்றனர்.

     தேனார்மொழியாள் உடனே வாசற் கதவைத் தாளிட்டுவிட்டு மேன்மாடத்துக்குச் சென்றாள்.

     பூதுகன் மெய்மறந்து கட்டிலில் படுத்துக் கிடந்தான். விசாலமான அவன் மார்பும், உருண்டு திரண்ட புஜங்களும், கம்பீரமான வனப்புடன் திகழ்ந்த அவனது வதனமும் தேனார்மொழியாள் உள்ளத்தில், எப்பொழுதோ கிளர்ந்தெழுந்து கொழுந்து விட்டெரிந்த ஆசைக் கனலை மூண்டெழச் செய்தன.

     சிறிது நேரம் வைத்த விழி வாங்காமல் பூதுகனின் சௌந்தர்ய வதனத்தையே கூர்ந்து நோக்கினாள் தேனார்மொழியாள். மறுகணம் பைத்தியம் பிடிதவள் மாதிரி ஓடிச் சென்று சித்திர வேலைப்பாடுகளுடன் பொன்னாலான தூபக்காலை எடுத்து வந்து அதைச் சற்று விசிறி, நறுமணங் கலந்த பொடியை அதில் இட்டாள். உடனே அதிலிருந்து எழுந்த நறும்புகை அந்த மாடம் முழுதும் பரவி நன் மணத்தைப் பரப்பியது.

     சற்று நேரத்துக்கெல்லாம் தூரத்தில் கோழி கூவியது. பொழுது புலருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த தேனார்மொழியாள் பூதுகனை அமைதியாக இருக்க விட்டுவிட்டு, மேன்மாடத்திலிருந்து கீழே சென்றாள்.

     கலகலவென்று கூவிய புள்ளினங்களின் குரல்கள் அருணனின் வரவுக்குக் கட்டியங் கூறின. வைகறைப் போதுக்கே உரிய குளிர்ந்த மந்தமாருதம் மெல்லென வீசிக் கொண்டிருந்தது.

     உறக்கம் தெளிந்தவன் போல் பூதுகன் கண் விழித்தான். தான் எங்கிருக்கிறோம் என்பதே அவனுக்கு விளங்கவில்லை. குத்துவிளக்கெரியக் கோட்டுக் கால் கட்டிலின் மேல், மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மீது தான் படுத்திருப்பதின் மர்மம் புலனாகவில்லை அவனுக்கு. அவன் படுத்திருந்த அறையின் அலங்காரத்தைக் கொஞ்சம் கவனித்தான் பூதுகன். அழகிய சாளரங்களை மறைத்திருந்த நிலா வர்ணப் பட்டுத் திரைகள் மெல்ல ஆடி அசைந்தன. அகிற் புகையின் மணம் அறை முழுவதும் நிறைந்து அவனைக் கிறங்க வைத்தது.

     மறுகணம் சௌந்தர்ய பிம்பமாகத் தேனார்மொழியாள் அவன் முன் தோன்றினாள்.

     வியப்பினால் விரிந்த பூதுகனின் நயனங்கள் அவளிடமே லயித்து நின்றன.

     “தேனார்மொழி! நான் எங்கே இருக்கிறேன்? நீ இங்கே எப்படி வந்தாய்?” என்று கேட்டு எழுந்திருக்க முயன்ற பூதுகன் தலையில் மின்னலைப் போல் அதிர்ச்சி ஏற்படவே, அவன் மறுபடியும் பஞ்சணை மெத்தையில் சாய்ந்தான்.

     “...சுவாமி! தாங்கள் அலட்டிக் கொள்ளக் கூடாது. இப்பொழுது தாங்கள் தேனார்மொழியின் இல்லத்தில் இருக்கிறீர்கள்...” என்று தயக்கமும் பணிவும் கலந்த குரலில் கூறிவிட்டு, தேனார்மொழியாள் அவன் கட்டிலுக்கு அருகில் வந்து நின்றாள்.

     பூதுகன் படுத்தபடியே கண்களை மூடிக் கொண்டு சற்று நேரம் சிந்தித்தான். தேனார்மொழியாளின் அழகிய இல்லத்திலிருந்து தான் புறப்பட்டுப் போனது, புத்த பிக்ஷுணி காலநங்கையைக் கண்டது... பிறகு அங்கிருந்து வெளியேறியதும் கலங்கமாலரையரால் கடுமையாகத் தலையில் தாக்குண்டது முதலிய நிகழ்ச்சிகளெல்லாம் அவன் மனக்கண் முன் பளிச்சிட்டன.

     கண்களைத் திறந்து பூதுகன் தேனார்மொழியாளைப் பார்த்தான். அவள் அப்பொழுது தெய்வ அணங்கின் திவ்ய ரூபத்துடன் தோன்றினாள். நீராடித் துவட்டிய கூந்தலை வாரி முடித்திருந்தாள். அவளது அடர்ந்த கேசம் அலை அலையாய்ப் புரண்டு காற்றில் இலேசாகக் கலைந்து அவளுக்குத் தனி எழிலை அளித்தது. சந்திரன் போன்ற அவள் முக காந்தியை, அவளது இளம்பிறையை நிகர்த்த நெற்றியில் இலகிய சிந்தூரப் பொட்டு பளீரென்று எடுத்துக் காட்டியது. அவளது பொன்னான மேனியை அணைந்து கொண்டிருந்த நீல வண்ணப் பட்டுச் சேலை, காலைப் பொழுதில் அவளைக் கந்தர்வலோகப் பெண்ணாகக் காட்டியது. அவளுடைய அழகிய தளிர்க்கரங்கள் அவனை நோக்கிக் கூப்பிய வண்ணம் இருந்தன. முன்பு பூதுகன் அவள் முகத்தில் கண்ட வெறியோ, மயக்கமோ இப்பொழுது காணப்படவில்லை. அதற்கு மாறாக களங்கமற்ற பக்தி உணர்ச்சி வெளிப்பட்டது.

     பூதுகன், மிகுந்த சிரமத்துடன் எழுந்து தலையணையில் சாய்ந்த வண்ணம் அமர்ந்து, “தேனார்மொழி! நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு உயிர் கொடுத்த உனக்கு என்றென்றும் என் நன்றி உரியது!” என்று உள்ள நெகிழ்ச்சியுடன் கூறி, “என்னைக் காப்பாற்றி இங்கு கொண்டு வந்து சேர்க்க உன்னால் எப்படி முடிந்தது?” என்று மிகுந்த ஆவலோடு அவளைப் பார்த்துக் கேட்டான்.

     தேனார்மொழி மிகவும் பணிவுடன், “நீங்கள் கொஞ்சம் பழம் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அருகில் முக்காலியில் இருந்த பழத் தட்டை அவனுக்குச் சமீபமாக நகர்த்தினாள்.

     பூதுகன் பழத்தை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே, “தேனார்மொழி! நான் கேட்டதற்கு மறுமொழி ஒன்றும் நீ சொல்லவில்லையே! என்னை நீ எப்படிக் காப்பாற்றினாய்?” என்று கேட்டான்.

     “தங்களைக் காப்பாற்றியது... நான் அல்ல, சிம்மவர்மர். இன்று விடிய ஒரு ஜாமப் பொழுது இருக்கும் போது உங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தார். அப்பொழுது நீங்கள் நினைவு தப்பிய நிலையில் இருந்தீர்கள். நீங்கள் இங்கு இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னார். இன்று இரவு இங்கு வந்து உங்களைச் சந்திப்பதாகவும் சொன்னார்...” என்று தேனார்மொழியாள் மிகவும் தணிந்த குரலில் சொன்னாள்.

     பூதுகனுக்கு நடந்தவை யாவும் இப்பொழுது விளங்கிவிட்டன. கலங்கமாலரையர் தன்னைப் பலமாகத் தாக்கிய போது சிம்மவர்மன் அங்கு வந்து அவரிடமிருந்து தன்னை மீட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறான் என்று ஊகித்து அறிந்து கொண்டான்.

     பூதுகன் ஆழ்ந்த யோசனையில் இருப்பதைப் பார்த்த தேனார்மொழியாள், “சுவாமி! அடியாளைப் பற்றித் தங்களுக்கு எவ்வித ஐயமும் வேண்டாம். நேற்று இரவு நான் தங்களிடம் அறிவிலியாக நடந்து கொண்டு விட்டேன். மன்னிக்க வேண்டும். தங்கள் உள்ளங் கவர்ந்த வைகைமாலையின் இன்ப வாழ்வுக்குக் குறுக்கே நான் ஒரு நாளும் நிற்க மாட்டேன். உத்தமராகிய உங்கள் உள்ளத் துணிவு, மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் வாழ்வின் லட்சியத்துக்கு என் உடல், பொருள், ஆவியாவற்றையும் தியாகம் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன்...” என்று உணர்ச்சி பொங்கும் குரலில் சொன்னாள். அப்பொழுது குவளை மலர் போன்ற அவள் நயனங்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் பொலபொலவென்று உதிர்ந்தன.

     “தேனார்மொழி! நான் அப்பொழுது நடந்தவற்றை யெல்லாம் உடனே மறந்து விட்டேன். நீ மிகவும் விவேகி. உன் மனமாற்றத்தை நான் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். தேனார்மொழி! நான் இப்பொழுது உன்னுடைய அடைக்கலப் பொருள். என் இருப்பிடம் யாருக்கும் தெரிந்து விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. சிம்மவர்மனின் நட்பு இந்தச் சமயத்தில் கிட்டுவது மிகவும் இன்றியமையாதது... அவன் நட்பைக் கொண்டு பல காரியங்களைச் சாதித்துக் கொண்டு விட வேண்டும். முள்ளைக் கொண்டு தான் முள்ளை எடுக்க வேண்டும். இவனும் நமக்குப் பகைவன் தான். என்றாலும் இவனால் நமக்குப் பெரிய காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றன. இதற்கெல்லாம் கலங்கமாரையர் எனக்குப் பேருதவி செய்திருக்கிறார்! அவருக்கு என் நன்றி உணர்ச்சியைச் சரியான ஒரு சந்தர்ப்பத்தில் காட்ட வேண்டும்... என்றென்றும் அவர் மறக்க முடியாத வண்ணம் அந்த உதவி நிலைத்திருக்க வேண்டும்! மேலும் அவரை வெளியே விட்டு வைப்பது நாட்டுக்கு ஆபத்து, நமக்கும் ஆபத்து. அந்தப் பாதகனால் நம் முயற்சிகள் எல்லாம் பாழாய்ப் போய்விடும் போலிருக்கின்றன. எப்படியாவது அவனைப் பிடித்துப் பாதுகாப்பில் வைக்க வேண்டும்!” என்று குறும்பு நகை தவழும் முகத்துடன் பூதுகன் கூறி விட்டுத் தலையைக் கையினால் பிடித்து விட்டுக் கொண்டான்.

     “...சுவாமி! தாங்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம்...” என்று கூறிவிட்டுத் தேனார்மொழி அறையின் கதவைச் சாத்திக் கொண்டு வெளியே போனாள்.

     பிறை சூடிய பெருமானது தாண்டவக் கோலத் திருவுருவில் மனத்தை லயிக்கவிட்டு, தேனார்மொழியாள் கண்களை இறுக மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தாள்.

     அப்பொழுது பரிவாதினி வீணையின் ஒலி அவள் செவிகளில் கேட்டது. அத்துடன் பூதுகனின் கண்டத்திலிருந்து எழுந்த கம்பீர நாதமும் கேட்டது.

     “பண்ணில் ஓசை பழந்தனில் இன்சுளை
     பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
     வண்ணம் இல்லி வடிவு வேகுயவன்
     கண்ணினுண் மணி கச்சியே கம்பனே”

     என்ற தித்திக்கும் தீந்தமிழ்த் தேவாரப் பாடல் தேனார்மொழியாள் செவிகளில் தேனாகப் புகுந்து ஒலித்தது. உடனே அவள் மேன்மாடத்துக்கு விரைந்து பூதுகன் இருந்த அறைக்குள் புகுந்தாள்.

     அப்பொழுது பூதுகன்,

     “கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
     கொங்கு தண்கும ரித்துறை ஆடிலென்
     ஓங்குமா கடல் ஓதநீர் ஆடிலென்
     எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே”

     என்ற அப்பர் பெருமானின் அற்புதத் தேவாரப் பாடலை பாவத்தோடு பாடிக் கொண்டிருந்தான். பாட்டு முடிந்ததும் பரிவாதினி வீணையை வைத்து விட்டு, பூதுகன் தேனார்மொழியாளை நிமிர்ந்து பார்த்தான்.

     அவள் கண்களில் நீர் மல்கப் பாடலைச் செவி மடுத்த வண்ணம் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள்.

     “தேனார்மொழி! உன் வீட்டுக்கு வந்ததும் அப்பர் பெருமான் தேவாரம் ஒன்றைப் பரிவாதினியில் இணைத்துப் பாடவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனக்குக் கடவுளிடம் நம்பிக்கை யில்லா விட்டாலும், பிறருக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதற்காக எத்தகைய பக்திப் பனுவல்களையும் நான் பாடச் சித்தமாயிருப்பது வழக்கம்!” என்றான் பூதுகன்.

     “எந்த நோக்கத்தோடு பாடினாலும் இறைவன் அதை அன்போடு ஏற்றுக் கொள்கிறான் என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அற்புதமாகப் பாடுகிறீர்கள். உங்களுடைய திவ்ய கானம் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளுக்கே அர்ப்பணமாக்கப்பட வேண்டியது...” என்றாள் தேனார்மொழியாள் பரவசத்துடன்.

     “ஹஹ் ஹஹ் ஹா” என்று பலமாகச் சிரித்துவிட்டுப் பூதுகன், “தேனார்மொழி! நான் உனக்காகத்தான் அந்தப் பாடலைப் பாடினேன். அதைச் சிவபெருமானுக்கு அர்ப்பணமாக்க விரும்புகிறாய்!” என்றான்.

     “சுவாமி! அது தெய்வாம்சம் பொருந்திய கானம். அதனால் தான் அப்படிச் சொன்னேன்” என்றாள் தேனார்மொழியாள்.

     இந்தச் சமயத்தில் வாசற்புறத்தில் யாரோ கதவைத் தடதடவென்று இடிக்கும் சத்தம் கேட்டது.

     தேனார்மொழியாள் உடனே கீழே இறங்கிச் சென்றாள்.

     வாசற் கதவைத் திறந்ததும், சிம்மவர்மன் உள்ளே நுழைந்தான்.

     “தேனார்மொழி! பூதுகரை நான் இப்பொழுது பார்க்கலாமா?” என்று கேட்டுக் கொண்டே, சிம்மவர்மன் மேன் மாடத்தை நோக்கி நடந்தான்.

     வாசற் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்த தேனார்மொழியாள், சிரித்துக் கொண்டே, “ஆகா! தாராளமாய்ப் பார்க்கலாம். இதற்கு என்னுடைய உத்தரவு எதற்கு?” என்று குறும்பாகக் கேட்டாள்.

     “தேனார்மொழி! நீ யார் தெரியுமா? பல்லவ ராஜ்யத்தின் அரண்மனை இசைக் கணிகை. உன்னிடம் உத்தரவு பெறாமல் உன் விருந்தாளியை நான் சந்தித்துப் பேசுவது நியாயமா?” என்று கேட்டுக் கொண்டே மேன்மாடத்துக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றான் சிம்மவர்மன்.

     சிம்மவர்மனைக் கண்ட பூதுகன், “வாருங்கள்!” என்று கை கூப்பி வரவேற்றான்.

     சிம்மவர்மனும் பதிலுக்கு வணங்கி விட்டு, அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்து, “நண்பரே! இப்பொழுது தங்கள் உடல் நலம் பூரணமாகச் சௌக்கியமடைந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்றான்.

     “ஆகா! இப்பொழுது எனக்கு ஒன்றும் இல்லை. தங்களுடைய அன்பான கவனிப்பு இருக்கும் போது என் உடம்பு தேறுவதற்குக் கேட்பானேன்? எனக்கு இப்பொழுது இருக்கும் கவலை யெல்லாம் மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றித்தான். முக்கியமாகக் கலங்கமாலரையரைப் பற்றித்தான் நான் அதிகமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வேஷதாரி சுதந்திரமாக வெளியே திரிந்து கொண்டிருப்பது நம் இருவருடைய முயற்சிகளுக்கும் பெரிய இடைஞ்சல் என்பதைத் தீர்மானமாகக் கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு என்னிடம் நீண்ட காலமாகத் தீராப் பகை. அவனைத் தீர்த்துக் கட்டுவதற்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஒருமுறை அவன் உயிர் என் கையில் ஊசலாடியது. அவனை அலை கடலில் தூக்கி எறிந்தேன். பிறகு கருணை காட்டி விட்டு விட்டேன். சோழ அரசு நிறுவ நான் முயலுவது அவனுக்குச் சற்றும் பிடிக்காத விஷயம்!” என்றான் பூதுகன்.

     “நண்பரே! வெகு நாட்களாகத் தங்களுடைய நட்பை அடைய எனக்கு விருப்பம். உங்கள் முயற்சிகளுக்கு உதவியாயிருப்பது இனி என் கடமை. என்னுடைய முயற்சிகளுக்கு உங்களுடைய உதவி என்றும் எனக்குத் தேவை. நம் இருவருடைய முயற்சிகளுக்கும் குறுக்கே நிற்பவர் யாராயிருந்தாலும் அவர்கள் நம் இருவருக்கும் பொதுப் பகைவர்கள். ஆகவே, உங்கள் பகைவனாகிய கலங்கமாலரையன் எனக்கும் பகைவன் தான். அவன் இப்பொழுது என்னுடைய காரியங்களை ரகசியமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான். எனக்கும் அவனிடம் வெகு நாட்களாகக் காரணம் தெரியாத ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. அவன் மீது எப்போதும் எனக்கு ஒரு கண். அன்று அவன் உங்களை மறைமுகமாகத் தாக்கியபோது கூட அதனால் தான் நான் உங்களுக்கு உதவ முடிந்தது. அன்று இரவு நான் உங்களைத் தூக்கிக் கொண்டு வந்ததிலிருந்து கலங்கமாலரையனுக்கு என் மீது கடும்பகை உண்டாகி விட்டது. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை!”

     “சிம்மவர்மரே! கலங்கமாலரையனுக்கு இந்தப் பல்லவ ராஜ்யத்தில் எப்படிச் செல்வாக்கு ஏற்பட்டது?”

     “கலங்கமாலரையன் சாம, தான, பேத, தண்டம் முதலிய சதுர்வித உபாயங்களிலும் கைதேர்ந்தவன். கோள்கள் புனைந்து சொல்லுவதில் மிகவும் நிபுணன். பல்லவ சேனாபதி உதயசந்திரனை அவன் மெல்லத் தன் கையில் போட்டுக் கொண்டான். தன்னுடைய வஞ்சகத் தூண்டில் முள்ளுக்கு இரையாக என்னை உபயோகப் படுத்திக் கொண்டான். என்னைப் பற்றி பலவிதமாகச் சேனாபதி உதயசந்திரனிடம் கோள்கள் சொல்லி அவனுக்கு என்மீது வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கிறான் என்று என்னுடைய ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது. இனி மேல் அவனைச் சும்மா விட்டு வைக்கக் கூடாது. இது சம்பந்தமாக யோசனை கேட்கத்தான் உங்களை நாடி வந்தேன்!”

     “...அது சரிதான்! கலங்கமாலரையனை நம் காரியங்களுக்குத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டு பிறகு கடைசியாகத் தீர்த்துக் கட்ட முயல்வதுதான் விவேகம். மேலும், பல்லவ ராஜ்யத்தின் மேலும் உங்களுக்கு இருக்கும் விசேஷ அபிமானம் எனக்குத் தெரிந்ததுதான். உங்கள் முயற்சி வெற்றி பெறுவதற்கு இன்னும் பலமுள்ள பலருடைய உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படும். கொடும்பாளூர் சிற்றரசானாலும் பலத்தில் மேம்பட்டு விளங்குகிறது. அவ்வூர் மன்னன் பூரிவிக்கிரம கேசரி பிரமாதமாகக் கட்டியிருக்கும் மர்மங்கள் நிறைந்துள்ள கோட்டையை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். கலங்கமாலரையனையும் மெதுவாக அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விட்டால் பிறகு அவனுடைய கொட்டத்தை அடக்குவது மிகவும் எளிதாகிவிடும். நீங்கள் சோழ ராஜ்யம் நிறுவுவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டினால் தான், கொடும்பாளூர்ப் புலிகளான ஆதித்தன், பராந்தகன் இருவரிடமும் நட்புகொள்ள முடியும். ஏனென்றால் அவர்கள் இருவரும் சோழ அரசு நிலைநாட்டுவதில் தீவிரமாயிருக்கிறார்கள்...” என்று கூறினான் பூதுகன்.

     “பல்லவ சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதுதான் என் லட்சியம். அதற்கு இடையில் சோழ அரசு உருவாவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. நான் கொடும்பாளூரில் இதை ஆதரித்துப் பேசுகிறேன். இருக்கட்டும்... அவர்கள் நட்பு எனக்குக் கிட்டுவது சாத்தியமா?” என்று கேட்டான் சிம்மவர்மன்.

     “ஏன் சாத்தியமாகாது? கொடும்பாளூரார்க்குப் பல்லவ ஆட்சியில் வெறுப்பு விருப்பு தனிப்பட்ட முறையில் சிறிதும் இல்லை. மேலும், பல்லவ ராஜ்யத்தின் மீது உங்களுக்கு இருக்கும் நாட்டம் அவர்களுடைய முயற்சிகளுக்கு உதவியாக அமைய முடியுமானால் அவர்களுடைய நட்பை நீங்கள் பெறுவதில் சிரமம் இருக்காதல்லவா? கொடும்பாளூர் தனிப்பட்ட சோழ ராஜ்யம் நிறுவுவதில் சிரத்தை காட்டுகிறது என்பது தானே உங்கள் யோசனை? என்னுடைய நட்பை நீங்கள் பெற்று விட்டதனால் அதைப் பற்றி நீங்கள் சிறிதும் யோசிக்க வேண்டாம்...” என்றான் பூதுகன்.

     பூதுகனுடைய இந்த வார்த்தை சிம்மவர்மனை மேலும் யோசனையில் ஆழ்த்தி விட்டது. “ஆமாம், அது நல்ல யோசனை தான். ஆனால்...” என்று இழுத்தான்.

     “ஆனால் என்ன? சிம்மவர்மரே! அது விஷயத்தில் என்னுடைய பூரண ஒத்துழைப்பு இருக்குமா என்று தானே யோசிக்கிறீர்கள்? உங்களுக்குச் சிறிதும் ஐயம் வேண்டாம். இந்தப் பூதுகன் என்றுமே தன் நண்பர்களைக் கைவிட்டதில்லை. அவன் நண்பர்கள் அவனிடம் எந்த நோக்கத்துடன் பழகுகிறார்களோ, அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்து வைப்பதில் அவன் உறுதுணையா யிருப்பான்!” என்று கூறிப் பூதுகன் சிரித்தான். அந்தப் புன்னகை பொருள் பொதிந்து விளங்கியது.

     “சரி, நான் பிறகு வந்து உங்களைச் சந்திக்கிறேன். ஒரு விஷயம் முக்கியம். நீங்கள் இங்கே தங்கியிருப்பது யாருக்கும் தெரியக் கூடாது. சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டுச் சிம்மவர்மன் அங்கிருந்து புறப்பட்டான்.

     சிம்மவர்மன் சென்றதும் தேனார்மொழியாள் அங்கே வந்தாள்.