உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 18 - பூதுகன் எங்கே? அங்கு வந்த தேனார்மொழியாளைப் பூதுகன் நிமிர்ந்து பார்த்தான். அவள் முகந்தான் எத்தனை அழகாக மலர்ந்திருந்தது! தீர நெஞ்சையும் திடங்குலைய வைக்கும் அவள் அழகு அந்த இரவு வேளையில் தனிச் சோபையுடன் திகழ்ந்தது. சாளரத்தின் ஊடே பாய்ந்து வந்த நிலாக் கதிர் அவள் எழில் உருவத்துக்கு மேலும் மெருகு கொடுத்தது. பூதுகன் முன்பு அவளை வெறுத்து ஒதுக்க முற்பட்டாலும், தேனார்மொழியாளின் உள்ளம் பூதுகனை மறந்துவிடவில்லை. ஆனால் பூதுகனது இயல்பை அவள் ஒரு முறை அறிந்து கொண்டு விட்டாளாதலால், மீண்டும் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி அவனுடைய வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. அவள் உள்ளம் முழுவதும் பூதுகன் தான் நிறைந்திருந்தான். “தேனார்மொழி! என்ன ஒரே யோசனையில் ஆழ்ந்து விட்டாய்?” என்று கேட்டுப் பூதுகன் அவளைச் சுயநினைவுக்குத் திருப்பினான். “...யோசனை ஒன்றும் இல்லை, சுவாமி! சிம்மவர்மனிடம் தாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். தங்களுக்கு இருக்கும் அபார சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தேன். சிம்மவர்மன் இலேசுப்பட்டவன் அல்ல; மிகவும் தந்திரக்காரன். பல்லவ சிம்மாசனத்தின் மீது அவனுக்கு வெகு காலமாக ஒரு கண் உண்டு. தன்னுடைய நோக்கம் நிறைவேறுவதற்காக அவன் எதையும் செய்யக்கூடியவன். அவன் காரணம் இல்லாமல் யாரிடமும் நட்புப் பூணமாட்டான். தங்களிடம் அவன் இத்தனை அன்பு காட்டுவதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது. அவனை உங்கள் பக்கம் திருப்ப என்ன சொக்குப்பொடி போட்டீர்கள்?” என்று குன்றாத அதிசயத்துடன் கேட்டாள் தேனார்மொழியாள். பூதுகன் சிரித்துக் கொண்டே, “தேனார்மொழி! இதில் அதிசயம் என்ன இருக்கிறது? எதன் மீதிலாவது ஒருவனுக்கு ஆசை விழுந்துவிட்டால் அவன் அதற்கு அடிமையாகி விடுகிறான். பிறகு அவனுடைய ஆசை நிறைவேறுகிற வரையில் அவன் புத்தி வேறு எதிலும் செல்லுவதில்லை. தன் இச்சைக்கு உதவியாக யாரையும் பயன்படுத்திக் கொள்ள அவன் தயங்க மாட்டான். அதுவும் சிம்மவர்மனைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆசை வெறி ராஜ்ய ஆதிபத்ய ஆசை. அது மிகவும் பொல்லாதது! அந்தப் பொல்லாத ஆசை நிறைவேறுவதற்கு யாராவது பயன்படுவார்கள் என்று தெரிந்தால் அவன் அவர்களிடம் அன்பாயிருக்கிறான்! அவ்வளவுதான்; வேறொன்றுமில்லை” என்றான். “...சுவாமி! தங்களுக்கு எப்படி அவனைப் பற்றி இவ்வளவு நன்றாய்த் தெரிகிறது...?” என்று கேட்டள் தேனார்மொழி. “‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்னும் பழமொழியை நீ கேட்டதில்லையா? நானும் அவனைப் போலவே ஒரு தனி அரசை நிறுவுவதற்குத்தானே இத்தனை பாடுபடுகிறேன்! ஆனால் என் ஆசை சிறிதும் தன்னலமற்றது. சோழ அரசை நிறுவும் ஆசையில் யாருடைய நலனும் பாதிக்கப்படக் கூடாது என்பதே என்னுடைய விருப்பம். பிறருக்குச் சொந்தமானதை நான் பறிக்க ஆசைப்படவில்லை. கரிகால் வளவன், நெடுமுடிக்கிள்ளி முதலிய மதிப்புக்குரிய மாபெரும் சோழ மன்னர்கள் பரம்பரையாக ஆண்டு வந்த சோழ ராஜ்யம் மீண்டும் பொலிவுடன் திகழ வேண்டும். அது தான் என் ஆசை. இந்த ஆசை நியாயமற்றது என்று யாரும் சொல்ல முடியாது. பாரில் புகழுடன் விளங்கிய சோழப் பேரரசு இன்று பழையாறை நகருடன் மங்கிக் கிடக்கிறது. சோழ ராஜ்யம், மீண்டும் ஒளியுடன் திகழுவதற்கு உறுதுணையாகவுள்ள எக்காரியத்தையும் நான் விட்டு வைக்க முடியாது.” “உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் நீங்கள் உங்கள் கோரிக்கை ஈடேறச் சிம்மவர்மனின் உதவியை நாடுவதுதான் எனக்குப் பெரிதும் வியப்பாயிருக்கிறது. அவன் பெரிய சதிகாரன்!” “தேனார்மொழி! சிம்மவர்மன் எத்தகையவன் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும். அவன் என்னைத் தன்னுடைய காரியங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிறகு தீர்த்துக் கட்டிவிட நினைக்கிறான். இதே காரியத்துக்காகத்தான் இவன் கலங்கமாலரையனுடன் நட்புக் கொண்டவன் போல் நடிக்கிறான். கலங்கமாலரையன் வஞ்சனையின் உருவம். அவனுக்கும் சிம்மவர்மனிடம் நெடுநாட்களாகப் பகை உண்டு. அவர்கள் ஒருவரையொருவர் தீர்த்துக் கட்டச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தான் நான் என் முயற்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பெரிதும் ஆவலாயிருக்கிறேன்.” “மிகவும் பிரமாதமான யோசனைதான். ஆனால் சிம்மவர்மன் விஷயத்தில் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையா யிருக்க வேண்டும். அவன் உங்களை இங்கே சிறையில் வைத்திருப்பது போல் தான் வைத்திருக்கிறான். அவனுடைய காரியங்களுக்கு நீங்கள் அனுகூலமா யிருக்கும் வரையில் தான் அவன் உங்களுக்கு நண்பனாயிருப்பான்.” “தேனார்மொழி! எனக்கு அது நன்றாய்த் தெரியும். அவனுடைய நட்பையும் பகைமையையும் நான் என்னுடைய முயற்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடுவேன். அவன் என்னை இப்பொழுது சிறையில் வைத்திருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்தச் சிறை இப்பொழுது என் முயற்சிகளுக்கு மிகவும் சாதகமாயிருக்கிறது. ஆகையினால், அனுமன், இந்திரஜித்தன் எய்த பிரம்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் நானும் சிம்மவர்மனின் சூழ்ச்சிக்கு இணங்கியவன் போல் இருக்கிறேன். அவ்வளவு தான். எந்தக் கணமும் நான் இவ்விடத்திலிருந்து தப்பி விடுவேன். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் நான் இங்கிருந்தபடியே கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்!” என்று கூறிவிட்டுப் பூதுகன் தேனார்மொழியாளை ஏற இறங்க ஒரு தடவை கூர்ந்து நோக்கினான். அவன் பார்வையில் தேனார்மொழியாளுக்குத் தேகம் முழுவதும் ஒருமுறை சிலிர்த்தது. “சுவாமி! அடியாளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதையோ சொல்ல நினைத்து மனத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது, உங்கள் பார்வை...!” என்றாள் தேனார் மொழியாள். பூதுகன் ஒரு முறை தொண்டையைக் கனைத்துக் கொண்டே, “...தேனார்மொழி! நீ என்னிடம் கொண்டிருக்கும் அன்புக்காக எவ்விதமான தியாகத்தையும் செய்வாயல்லவா?” என்றான். “...சுவாமி! தங்களுக்கு என் மீது அது விஷயத்தில் ஐயம் ஏற்பட்டிருந்தால் அது என் துர்ப்பாக்கியம்தான். சிம்மவர்மனோ, கலங்கமாலரையனோ தங்களுக்குக் கேடு சூழ நினைத்தால் தங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.” “தேனார்மொழி! உன் மன உறுதியை மெச்சுகிறேன். உன் உள்ளத் துணிவைச் செயலில் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் அதிக தூரத்தில் இல்லை என்று என் உள்மனம் சொல்லுகிறது...!” “...சுவாமி! தாங்கள் சொல்லுவது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! தங்களுக்கு இங்கேயிருப்பது சௌகரியக் குறைவாயிருக்கிறதா? நான் எதாவது தவறுதலாக நடந்து கொள்கிறேனா?” என்று தேனார்மொழியாள் பதற்றத்துடன் கேட்டாள். பூதுகன் சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ ஒரு தவறும் செய்யவில்லை. நான் இங்கிருப்பது கலங்கமாலரையனுக்குத் தெரிந்து விட்டால், நான் இங்கிருக்க முடியாது” என்று கூறினான். “கலங்கமாலரையரால் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சிம்மவர்மர் இது விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பார்.” “கலங்கமாலரையனை உனக்குத் தெரியாது; எதற்கும் கலங்காத நெஞ்சம் படைத்தவன். அவன் ஒரு பொழுதும் சும்மா இருக்க மாட்டான். நரி மாதிரி தந்திரக்காரன். ஆகையால் நீயும் என்னால் துன்பப்பட நேரிடலாம்!” என்று கூறிப் பூதுகன் பெருமூச்செறிந்தான். “சுவாமி! தாங்கள் அதற்காகச் சிறிதும் ஆயாசப்பட வேண்டாம். நான் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்ளுவேன்...!” என்றாள் தேனார்மொழியாள். இந்தச் சமயம் வாசற் கதவு தட்டப்படும் ஓசை ‘டக் டக் டக்’ என்று சங்கேதமாகக் கேட்டது. தேனார்மொழியாளும் பூதுகனும் அந்த ஓசையைக் கவனமாகக் கேட்டனர். அந்த ஓசை மீண்டும் கேட்டது. தேனார்மொழியாள் உடனே பதற்றமடைந்து பரபரப்புடன், “சுவாமி! யாரோ கதவைத் தட்டுகிறார்கள்... நான் போய் யாரென்று பார்த்துவிட்டு வருகிறேன். தாங்கள்... ஜாக்கிரதையாக...” என்று அவள் மேலே கூறுவதற்குள், பூதுகன் இடைமறித்தான். “தேனார்மொழி! பதற்றங் கொள்ளாதே. நீ தைரியமாகப் போய் வாசல் கதவைத் திறக்கலாம். வந்திருப்பது யார் என்று எனக்குத் தெரியும்...” உடனே தேனார்மொழியாள் ஓடிப் போய் வாசல் கதவைத் திறந்தாள். “தேனார்மொழி! சௌக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த மனிதரைப் பார்த்ததும் தேனார்மொழியாளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆச்சரியத்தினால் திகைத்து நின்ற அவளைப் பார்த்து அந்த மனிதர் கதவைச் சாத்தும்படி கையினால் சமிக்ஞை காட்டிவிட்டு உள்ளே சென்றார். கதவைச் சாத்திவிட்டுத் தேனார்மொழியாளும் அவரைப் பின் தொடர்ந்தாள். “...சுவாமி! தாங்கள் இங்கே தான் இருக்கிறீர்களா? இத்தனை நாட்களாக உங்களை நான் பார்க்கவே இல்லையே!” என்றாள் தேனார்மொழியாள் வியப்பினால் விரிந்த நயனங்களுடன். “தேனார்மொழி! நான் பகிரங்கமாக வந்தால் பார்த்திருக்கலாம். சோதிடம் பார்த்துக் கொண்டு நிம்மதியாக என் ஊரோடு இருந்த எனக்கு இப்பொழுது பல வேலைகள் சேர்ந்து கொண்டன. ஆகையினால் சாவகாசமாக உன்னை வந்து பார்க்க முடியவில்லை... சரி! இப்பொழுது நான் பூதுகரைப் பார்த்துப் பேச வேண்டும்” என்று கூறிவிட்டு மேன்மாடத்தை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளிலே வெகுவேகமாக ஏறினார் வந்த மனிதர். பூதுகனுக்கு அவரைப் பார்த்ததும் முகத்தில் ஆவல் பொங்கியது. “வாருங்கள், சந்தகரே! வாருங்கள்!” என்று கரங் குவித்து முகத்தில் ஆர்வம் பொங்க அவரை வரவேற்றான் பூதுகன். சோதிடர் சந்தகரும் அவனைக் கை கூப்பி வணங்கினார். இருவரும் ஆசனத்தில் அமர்ந்தனர். மெதுவான குரலில் பூதுகன் அவரைப் பார்த்து, “ஏதாவது மிகவும் முக்கியமான தகவல் இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் தாங்கள் இந்த இரவு நேரத்தில் என்னைத் தேடி இங்கே வருவீர்களா?” என்றான். “உங்கள் ஊகம் முற்றிலும் சரிதான். மிகவும் முக்கியமான செய்தியொன்று கொண்டு வந்திருக்கிறேன்...!” “என்ன செய்தி? கொடும்பாளூரிலிருந்து ஏதாவது செய்தி வந்ததா?” “பூதுகரே! வெளியூர்ச் செய்தி எதுவும் இப்பொழுது வரவில்லை. உள்ளூர் விவகாரம்தான் நமக்கு எல்லாவிதத்திலும் தொல்லை தருவதாயிருக்கிறது. இருக்கட்டும். உங்களை நான் ஒன்று முக்கியமாகக் கேட்க வேண்டும். இந்த இசைக் கணிகை... தேனார்மொழியாள் எப்படி? அவள் அரண்மனைப் பாடகியல்லவா? சிம்மவர்மனுக்கும் அவள் மிகவும் வேண்டியவள் என்று கேள்வி. அவள் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும்...” “சந்தகரே! அவளைப் பற்றி நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். அவள் என்னிடம் அளவு கடந்த அன்பு கொண்டு விட்டாள். அதை என்னிடமே வெளியிட்டாள். நான் அவளைத் திரஸ்கரித்து விட்டேன். ஆனால் அந்த ஆசை இன்னும் அவள் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கிறது. ஆகையினால் அவள் எனக்கு எவ்விதக் கெடுதியும் செய்யத் துணிய மாட்டாள். சிம்மவர்மனும் தன் காரியத்தில் குறியாயிருக்கிறான். அவன் நினைவெல்லாம் பல்லவ சிம்மாசனத்தைப் பற்றித்தான். அதற்கு என்னுடைய உதவியைத் தான் பூரணமாக நம்பியிருக்கிறான். அது இருக்கட்டும். உள்ளூர் விவகாரம் கவலை தருவதாகச் சொன்னீர்களே... அது என்ன?” “அது மிகவும் முக்கியமானது. கலங்கமாலரையன் உங்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விட்டான். சிம்மவர்மன் உங்களோடு நட்புக் கொண்டதிலிருந்து, அவன் பல்லவ சேனாபதி உதயசந்திரனோடு மிகவும் இழைந்து கொண்டிருக்கிறான். ஒரே கல்லில் இரண்டு மாம்பழங்களை வீழ்த்தும் நோக்கத்தில் அவன் மூர்த்தண்யமாக வேலை செய்து வருகிறான்...” “சரிதான். இனி நான் இங்கேயிருப்பது சரியல்ல. சந்தகரே! நான் வெளியேறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் யாவும்...” “...ஆயத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. நீங்கள் உடனே புறப்பட்டு விட வேண்டும். ஒரு கல் தூரம் வெளியூருக்குச் செல்லும் சாலையோடு நடந்தால் அங்கே உங்களுக்காகக் குதிரை காத்துக் கொண்டிருக்கும். பொழுது புலருவதற்கு முன்பு நீங்கள் இந்த நகரத்து எல்லையைத் தாண்டிப் போய் விடலாம். நான் வருகிறேன்...” என்று கூறி விட்டுச் சந்தகர் அங்கிருந்து புறப்பட்டார். உடனே பூதுகன் அங்கிருந்து புறப்பட ஆயத்தம் செய்து கொண்டான். தேனார்மொழியாள் அங்கு வந்தாள். “சுவாமி! வெளியே போகிறீர்களா? இந்த இரவு வேளையில்...!” “...தேனார்மொழி, இப்பொழுது உன்னோடு பேச அவகாசம் இல்லை. நீ எனக்கு இந்த இல்லத்தில் இடங் கொடுத்து இத்தனை நாட்களாக ஆதரித்து வந்ததற்கு என் நன்றி என்றும் உனக்கு உரியது!” என்று கூறி விட்டு அவளுடைய மறுமொழிக்குக் காத்துக் கொண்டிராமல் பூதுகன் அந்த வீட்டுப் பின் வாசல் வழியாகவே வெளியே செல்லலானான். தேனார்மொழியாள் இதைக் கண்டு ஒன்றும் தோன்றாமல் திகைத்துப் போய் விட்டாள். விடிய ஒரு ஜாமப்பொழுது இருக்கையில் தேனார்மொழியாள் இல்லத்தின் வாசற் கதவு இடிக்கப்படும் ஓசை பலமாகக் கேட்டது. தேனார்மொழியாள் உடனே கதவைத் திறந்தாள். “அம்மணி! தாங்கள் தானே தேனார்மொழியாள் என்பவர்?” என்ற மிடுக்கான குரலைக் கேட்டுத் தேனார்மொழியாள் சற்றுத் திகைத்தாள். “...ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டாள் தேனார்மொழியாள். “உங்கள் வீட்டில் அடைக்கலம் அடைந்திருக்கும் பூதுகனை உடனே எங்களிடம் ஒப்புவித்துவிட வேண்டும்...!” “அவர் இங்கே இல்லை!” “அம்மணி, உங்களையும் சிறைப்பிடித்து வரும்படி சேனாபதி உத்தரவிட்டிருக்கிறார்!” என்றான் அந்த வீரன், மரியாதையும் மிடுக்கும் கலந்த குரலில். இதைக் கேட்டதும் தேனார்மொழியாளின் வனப்பு மிகுந்த வதனம் கோபத்தினால் குபீரென்று சிவந்தது. “உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் பூதுகனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்!” என்று அந்தக் குதிரை வீரன் அங்கிருந்த சேனை வீரர்களைப் பார்த்துக் கட்டளையிட்டான். உடனே வீரர்கள் தபதப வென்று தேனார்மொழியாளின் மாளிகைக்குள்ளே நுழைந்தனர். அதைக் கண்ட தேனார்மொழி அடிபட்ட பெண்புலியைப் போல் சீறினாள். “அரண்மனைப் பாடகியாகிய என்னைச் சிறையாக்கப் பல்லவ சேனாபதிக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” “அம்மணி! மன்னரின் உத்தரவு பெற்றுத்தான் சேனாபதி உங்களைச் சிறைப்பிடித்து வரும்படி என்னை இங்கே அனுப்பினார். இதோ மன்னரின் இலச்சினை பதித்த ஓலை!” என்று கூறி ஒரு ஓலையைக் காண்பித்தான் குதிரை வீரன். தேனார்மொழியாள் அந்த ஓலையை வாங்கிப் பார்த்து விட்டு, பெருமூச்சுடன் போய் வண்டியில் ஏறினாள். அப்பொழுது வீட்டுக்குள்ளே சென்ற வீரர்கள் வேகமாக வெளியே வந்து, “பூதுகனை உள்ளே காணோம்! எல்லா இடங்களையும் நன்றாகப் பார்த்து விட்டோம்!” என்றனர். உடனே குதிரை வீரன் ஆத்திரத்துடன், “...என்ன! பூதுகன் தப்பி விட்டானா? என்ன ஆச்சரியம்! இந்த மாளிகையின் உள்ளேயிருந்து யாரும் வெளியே போகாமலும். வெளியே யிருந்து யாரும் உள்ளே போகாமலும் காவல் இருங்கள். நாலாபுறங்களிலும் வீரர்களை அனுப்பிப் பூதுகனைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்கிறேன். இவளை ஜாக்கிரதையாகச் சிறைக்குக் கொண்டு போய்ச் சேருங்கள்!” என்று கூறிவிட்டுக் குதிரையைச் செலுத்தலானான். தேனார்மொழியாள் ஏறியிருந்த வண்டியும் அங்கிருந்து நகர்ந்தது. வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வீரர்கள் சென்றனர். |