மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 19 - அரிஷ்டநேமியின் ஆசிரமம்

     பொழுது புலர்ந்தது. புள்ளினங்கள் யாவும் இனிய குரலினால் கட்டியம் கூறிக் காலைப் பொழுதை வரவேற்றன.

     குன்றுகள் சூழ்ந்த அந்தப் பிரதேசத்தில் அருணோதயம் ஆகும் தருணத்தில் இயற்கை அன்னை பல ஜால வேலைகளைச் சிருஷ்டித்து, பூமிக் குமரிக்கு என்னென்னவோ பொன்னாபரணங்களை யெல்லாம் சூட்டி அலங்கரித்த வண்ணம் இருந்தாள். உதய சூரியனின் வரவு கீழ்த் திசையில் இருந்த ஓர் உயரமான குன்றின் உச்சியின் மேலிருந்து அற்புதமாகத் திகழ்ந்தது; அது கதிரவன் அந்தப் பிரதேசத்தின் வனப்புகளை யெல்லாம் பார்வையிட வருவது போல் இருந்தது.

     காலை இளம் பரிதி வீசும் கதிர்களின் செழுமையினால், அங்கிருந்த பசும் புல் போர்த்திய குன்று மரகத மலையாகவே காட்சி அளித்தது.

     கீழே அடர்த்தியாக வளர்ந்திருந்த பசும் புல்களின் நுனிகளிலே அமர்ந்திருந்த பனித் துளிகள் சூரிய பகவானைத் தங்கள் அகத்திலே கொண்டு வைரத்துகள் போல் பிரகாசித்தன. அந்தப் பனித் துளிகளின் அன்பை ஏற்றுக் கொள்பவர் போல் அவைகளைத் தம் கிரணங்களினால் இழுத்துத் தம்முடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சூரியதேவன்.

     பறவைக் கூட்டங்கள் கலகலத் தொனியுடன் வானத்தில் பறந்து குதூகலம் அடைந்தன.

     காட்டு மலர்களெல்லாம் கதிரவன் வரவால் மகிழ்ச்சி பொங்கித் ததும்ப, அவைகள் சுமந்து கொண்டிருந்த பனி நீரைச் சிந்தி, செங்கதிர்த் தேவனுக்கு ஆராதனை செய்து மலர்ச்சியடைந்தன.

     கூட்டம் கூட்டமாக வெகு தூரம் தெரிந்த குன்றின் தொகுதிகளைப் பார்க்கும் போது அவைகள் கதிரவனுக்குச் சிரம் குனிந்து வணக்கம் செலுத்துவதாகத் தோன்றின.

     விண்ணில் சஞ்சரித்த சிறு சிறு முகிற் கூட்டங்கள் காலைக் கதிரவனின் ஒளி பட்டு வெள்ளி வரம்புகளுடன் ஜ்வலித்துக் கொண்டிருந்தன.

     ஜைன முனிவரான அரிஷ்டநேமி உதயத்துக்கு முன் எழுந்து வெளியே சென்று வருவது வழக்கம்.

     அரிஷ்டநேமி வேகமாக ஆசிரமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

     அவர் நடந்து வந்து கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையில் ஒரு பெண் கொடி துவண்டு கிடந்தது. தடாகத்திலிருந்து பறித்து எறியப்பட்ட தாமரைக் கொடி போல் அவள் மேனி வாடியிருந்தது. அவள் முகமும் ஆபரணங்கள் ஏதும் இன்றியே, அந்தத் தாமரை மலரைப் போலவே அழகா யிருந்தது.

     அவளைக் கண்டதும் ஜைன முனிவர் உள்ளத்தில் அளவு கடந்த கருணை உணர்ச்சி பொங்கியது.

     பரபரப்புடன் அந்தப் பெண்ணுக்கு உயிர் இருக்கிறதா என்று பரீட்சித்துப் பார்த்தார். அவள் இலேசாக மூச்சு விடுவது தெரிந்ததும், அவர் முகத்தில் நம்பிக்கை ஒளி பிறந்தது. உடனே அவளைத் தூக்கிக் கொண்டு, அவர் தம் ஆசிரமத்தை நோக்கி நடந்தார்.

     ஆசிரமத்தில் இருந்த ஒரு மேடையில் அந்தப் பெண்மணியைக் கிடத்திவிட்டு, தம் வளர்ப்பு மகள் சுகேசியை அழைத்தார். அவள் அப்பொழுதுதான் தண்ணீர் கொண்டு வருவதற்குச் சுனைப்பக்கம் சென்று தண்ணீர்ப் பானையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

     “அப்பா, அழைத்தீர்களா?” என்று கேட்டு விட்டு அவரை நெருங்கினாள்.

     “சுகேசி! கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் கொண்டு வா அம்மா! பாவம்! இந்தப் பெண் வழியிலே மயக்கமாகப் பிரக்ஞையற்று விழுந்து கிடந்தாள். நான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்” என்றார் அரிஷ்டநேமி.

     சுகேசி, உடனே பரபரப்புடன் ஓடிச் சென்று பானையிலிருந்து குளிர்ந்த நீர் கொண்டு வந்தாள். மயக்கமாகக் கிடந்த பெண்மணியின் முகத்திலே தெளித்தாள். அவள் சில நிமிஷங்களில் மயக்கம் தெளிந்து எழுந்தாள். உடனே தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அவள் உடம்பு இலேசாக நடுங்கியது. பேசக் கூட முடியாமல் அவள் களைத்துப் போயிருந்தாள்.

     சுகேசி ஒரு நொடியில் உள்ளே சென்று பாலும் பழமும் கொண்டு வந்தாள்.

     “இந்தா, இதைச் சாப்பிடு!” என்று அன்போடு கூறிப் பால் குவளையை அவளிடம் கொடுத்தாள்.

     அந்தப் பெண்மணி பால் அருந்தியதும் சற்றுக் களை தெளிந்தவளாகக் காணப்பட்டாள்.

     “நான் எங்கே யிருக்கிறேன்? நீ யார் அம்மா?” என்று அந்தப் பெண்மணி கேட்டாள் மிகவும் மெலிந்த குரலில்.

     சுகேசி அவள் கரங்களை மிகவும் அன்போடு பற்றிக் கொண்டு, “பயப்படாதே! நீ இருப்பது ஜைன முனிவர் அரிஷ்டநேமியின் ஆசிரமம். வழியில் மயங்கி விழுந்து கிடந்த உன்னை எடுத்துக் கொண்டு வந்து இங்கே சேர்த்தார். நான் அவர் மகள். என் பெயர் சுகேசி. நீ உன்னுடைய பெயரைச் சொல்லவில்லையே!” என்றாள்.

     “நான் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்தவள். கஷ்டப்படுவதற்கென்றே பிறந்தவள். என் பெயர் மாலவல்லி. ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி நான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். நான் இங்கு இருப்பதில் உங்களுக்கு ஏதாவது சிரமமாயிருக்குமோ?” என்றாள் அந்தப் பெண்.

     “எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை, அம்மா! நீ இங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கியிருக்கலாம். என்னையும் சுகேசியையும் தவிர, இந்த ஆசிரமத்தில் வேறு யாரும் இல்லை. உலகில் மனிதனாய்ப் பிறந்தவனின் முக்கிய கடமை இயன்ற வரையில் பிறருக்கு உதவுவதுதான். நீ இங்கு இருப்பது சுகேசிக்கு நல்ல துணையா யிருக்கும்” என்றார் அரிஷ்டநேமி.

     மாலவல்லி இரு கரங்களையும் கூப்பி அவரை வணங்கி, “அநாதையாய்க் கிடந்த என்னைக் காப்பாற்றி உயிர்ப் பிச்சை அளித்தீர்கள். அதற்கு நான் என்றும் தங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் சில காலம் இந்த உடலில் உயிர் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. நான் ஒரு பெரிய அபாயத்திலிருந்து தப்பி ஓடி வந்திருக்கிறேன்...” என்று கண்ணீருக்கிடையே கூறினாள்.

     “குழந்தாய்! கலங்காதே. கண்ணீரைத் துடைத்துக் கொள். அருகதேவன் அருளால் உனக்குச் சகல நன்மைகளும் உண்டாகும். நீ மிகவும் களைத்துப் போயிருக்கிறாய். குளித்துவிட்டுச் சாப்பிடு!” என்று கூறி அரிஷ்டநேமி தியானத்துக்கு எழுந்தார்.

     பிறகு சுகேசியும் மாலவல்லியும் சுனைக்குப் போய் நீராடி விட்டு வந்தனர். மாலவல்லிக்குக் களைப்புத் தீர்ந்து தெம்பும் உற்சாகமும் வந்தன. சுகேசியும் அவளும், தேனும், தினைமாவும், பாலும் பழமும் சாப்பிட்டனர்.

     “மாலவல்லி! உனக்கு இந்த ஆகாரங்கள் பிடிக்கின்றனவோ இல்லையோ! இந்தக் கானகத்தில் வசிக்கும் எங்களுக்கு இவைகளெல்லாம் சாப்பிட்டுப் பழகிப் போய் விட்டன!” என்றாள் சுகேசி.

     “சுகேசி! இந்த ஆகாரம் தேவாமிர்தமா யிருக்கிறது. நகர்ப்புறங்களில் கிடைக்கும் ஆகாரங்கள் பலவிதமாக அறுசுவை ருசி பேதங்களுடன் தயாரிக்கப் பட்டிருக்கும். அவற்றைப் பக்குவம் செய்து பரிமாறுவதே தனிமாதிரியாயிருக்கும். இங்கே கிடைக்கும் ஆகாரங்களில் அந்த வீண் ஆடம்பரங்களெல்லாம் இருக்காது. ஆனால் இந்த உணவில் இருக்கும் முக்கியமான ருசி ஒன்று அங்கே இருக்காது. அது என்ன சொல்லு, பார்க்கலாம்!” என்று மால்வல்லி புன்முறுவலுடன் கேட்டாள்.

     சுகேசி அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, “எனக்கு அதைப் பற்றியெல்லாம் என்ன தெரியும்? நான் மனித சஞ்சாரமற்ற காட்டுப்பிரதேசத்திலேயே சின்னஞ் சிறு வயது முதல் வாழுபவள். நீ குறிப்பிடும் முக்கியமான ருசி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நீயே சொல்லி விடு!” என்றாள்.

     “அந்த முக்கியமான ருசி என்ன தெரியுமா? தன்னலமற்ற அன்பு! நீ உணவில் அன்பையும் கலந்து அளித்திருக்கிறாய். அது நகர்ப்புறங்களிலே கிடைக்காது. அப்படிக் கிடைத்தாலும் ஒரு காரணம் பற்றிப் பிறந்த அன்பாகத் தான் இருக்கும்!” என்றாள் மாலவல்லி.

     “நீ பொல்லாதவள். மிகவும் அழகாகப் பேசுகிறாய். முதன் முதலில் உன்னைப் பார்த்ததிலிருந்தே உன்னிடம் எனக்கு இனம் தெரியாத அன்பு உண்டாகிவிட்டது. ஆகவே, அன்பின் உறைவிடம் என்று உன்னைத் தான் சொல்ல வேண்டும்” என்றாள் சுகேசி.

     “ஆகா! நீயும் அழகாகத்தான் பேசுகிறாய். அது இருக்கட்டும். உன்னைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே!”

     “என்னைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு விவரம் தெரிந்த நாட்களாக இந்தக் குன்றுகளையும் வனங்களையும் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை. ஆதரவு அற்று, நரபலியிடும் பயங்கரக் காபாலிகர்களிடம் சிக்கி உயிர்துறக்க இருந்த என்னை இந்த ஜைன முனிவர் காப்பாற்றித் தம்முடைய ஆதரவில் வளர்த்து வருகிறார். இவர் தான் என் தாய், தந்தை, குரு, தெய்வம்... என் வரலாறு கிடக்கட்டும். உன்னைப் பற்றி நீ ஒன்றுமே சொல்லவில்லையே! பெரிய அபாயத்திலிருந்து தப்பி வந்திருப்பதாகச் சொன்னாய். அது என்ன அபாயம்?” என்று கேட்டாள் சுகேசி.

     மாலவல்லியைப் பார்த்ததிலிருந்து சுகேசிக்கு அவளிடம் ஒரு தனி அன்பு உண்டாகி விட்டது. மேலும் மாலவல்லியைப் பார்த்தால் அவளுக்குத் தன்னுடைய பிரதிபிம்பத்தையே பார்ப்பது போலிருந்தது. இதன் காரணமாகவும் அவள் மீது ஏற்பட்ட பாசம் எல்லை மீறிப் பெருகியது.

     மாலவல்லி மறுமொழி ஒன்றும் கூறாமல் எங்கேயோ பார்வையைச் செலுத்திய வண்ணம் இருக்கவே, சுகேசி அவளைப் பார்த்து, “...நான் உன் மனசு நோகும்படி ஏதாவது சொல்லி விட்டேனா? உன்னுடைய வரலாற்றைச் சொல்லுவதில் உனக்கு விருப்பம் இல்லையென்றால் நான் உன்னை வற்புறுத்தவில்லை...!” என்றாள்.

     “சுகேசி! நீ கேட்டதில் ஒரு தவறும் இல்லை. எனக்கே உன்னிடம் என்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று தான் ஆசை. துயரம் நிறைந்த என் கதையைச் சொல்ல நினைத்ததும் சிறிது மனக்கலக்கம் உண்டாயிற்று. அதனால் தான் கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தேன். நான் பிறந்து வளர்ந்த கதையைச் சொல்லுவதற்குச் சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை. இசைக் கணிகையர் மரபில் பிறந்த நான் காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவள். ஒரு காலத்தில் பல்லவ ராஜ சபையில் அரண்மனைப் பாடகியாகவும் இருந்தேன்...”

     சுகேசி இதைக் கேட்டதும் பெரிதும் வியப்படைந்தாள்.

     “அரண்மனைப் பாடகியாகவா இருந்தாய்? ஆகா! அது எத்தனை பாக்கியம்! ஏன் நீ அந்த நல்ல பதவியை விட்டு விட்டு இப்படி அவதிப்பட வேண்டும்?” என்று வியப்புடன் கேட்டாள் சுகேசி.

     மாலவல்லி அவளைத் தழுவிக் கொண்டு மேலும் சொல்லுவாள்:

     “சுகேசி! நீ உலகம் தெரியாதவள். நீ தெரிந்து கொண்டிருக்கும் உலகம் சூது, வாது, துயரம் எதையுமே அறியாதது. ஆனால் நான் என் வாழ்க்கை அநுபவத்தில் தெரிந்து கொண்டிருக்கும் உலகம் பயங்கரமானது; முள் நிறைந்த புதர் போன்றது; நச்சுப் பொய்கை போன்றது. இத்தகைய கொடுமையான உலகத்தில் அன்பு, அழகு இவைகளுக்கு எதிரிடையாகப் பெரும் முதலைகள் போல், குலம், அந்தஸ்து, மதம் இவைகளெல்லாம் விழுங்கக் காத்திருக்கின்றன. எந்த அழகைக் கண்டு என் குழந்தைப் பிராயம் முதல் எல்லோரும் என்னைப் பாராட்டிச் சீராட்டினார்களோ, அந்த அழகே எனது இன்ப வாழ்வுக்கு நிரந்தர அபாயமாக முளைத்து விட்டது. ஆகவே, இன்ப சுகங்களை யெல்லாம் வெறுத்து, அன்புருவமான புத்தர் பெருமானின் பாதங்களில் லயித்து, பிக்ஷுணியாகி விட்டேன். அப்படியான பின்பும் என் ஊழின் தொடர்பு என்னை விடவில்லை. நிரபராதியான என் மீது ஒரு கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. அதன் காரணமாக, புத்த விஹாரத்தை விட்டு வெளியேறினேன். நந்திபுரத்துக்கு அருகில் அந்நகர் காவலர் இடங்காக்கப் பிறந்தாரின் சேவகர்களால் பிடித்துச் செல்லப்பட்டேன். அங்கு எனக்குக் கட்டாயத் திருமணம் செய்விக்கும் அளவுக்கு என் விதி சதி செய்துவிட்டது.”

     இதற்குப் பிறகு மாலவல்லி சுகேசியிடம், களவர்களால் அபகரித்துச் செல்லப்பட்ட இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனி என்ற எண்ணத்தில் தன்னை அவர்கள், தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டாரின் மகன் கோளாந்தகனுக்கு மணம் முடிக்க முற்பட்டதை விவரமாகக் கூறினாள்.

     திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது புலிப்பள்ளி கொண்டார் மாலவல்லி யார் என்பதைக் கண்டு கொண்டதையும், அவளை மிரட்டி உடனே வெளியேறச் சொன்னதையும் சுகேசியிடம் மாலவல்லி கூறினாள்.

*****

     நந்திபுரத்தில், பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையில் தனி அறையில் அடைபட்டிருந்த போது மாலவல்லி அடைந்த அநுபவங்கள் அதி விநோதமானவை. பாவம், பேதைப் பெண்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவள் தவித்துப் போனாள். நீண்ட காலமாக, குழந்தைப் பிராயம் முதலே களவரிடம், சிக்கிக் கொண்டபடியினால் தங்கள் மகள் சற்றுச் சித்தம் வேறுபட்டிருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்.

     தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார், திருபுவனியைத் தனிமையில் சந்தித்துப் பேசச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு அவள் அறைக்குப் போனார்.

     “பெண்ணே! நீ யாரென்பது எனக்குத் தெரியும். நீ உண்மையைச் சொல்ல மாட்டாய். இதோ நான் சொல்லுகிறேன். நீ இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியில்லை. உன் பெயர் மாலவல்லி. நீ ஒரு இசைக் கணிகை. இனி நீ இங்கே ஒரு கணப்போதும் தாமதிக்கக் கூடாது. உடனே எங்கேனும் ஓடிப் போய்விடு. இல்லையென்றால், திருபுவனிக்கும் உனக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையைக் கொண்டு பெரிய குடும்பத்துக்கே அழிவு தேடப் பார்த்தாய் என்ற குற்றத்தை ருசுவாக்கி உன்னைச் சிறைப்படுத்துவேன்!” என்று பயமுறுத்திவிட்டுத் தஞ்சைக்குப் போய் விட்டார், அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார்.

     அதற்குப் பிறகு மாலவல்லியினால் அங்கே இருக்க முடியவில்லை. இரவோடு இரவாக நந்திபுரத்தை விட்டு யாருமறியாமல் வெளியேறி நெடுந்தூரம் நடந்து, காஞ்சீபுரம் சென்று, பிறகு அரிஷ்டநேமியின் ஆசிரமத்தை அணுகினாள்.

     இந்த வரலாற்று விவரங்களைக் கேட்டதும் சுகேசியின் நயனங்களில் அவளையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.

     “மாலவல்லி, உனக்கு ஏற்பட்ட துன்பங்கள் தாங்கொணாதவை. இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையிலிருந்து தப்பிய நீ, காஞ்சீபுரத்துக்கு ஏன் போனாய்?”

     “சுகேசி! காஞ்சீபுரத்தில் பூதுகர் இருப்பதால் அவரிடம் போய்ச் சேர்ந்து விட்டால் அவருக்கு உறுதுணையாக இருந்து அவர் முயற்சிகளுக்கு இயன்ற உதவியைச் செய்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் காஞ்சீபுரம் போனேன். ஆனால் அங்கும் எனக்கு அமைதி கிடைக்கவில்லை. என்னைத் தேடிக் கண்டுபிடிப்பதில் பல வீரர்கள் தீவிரமாக முனைந்திருக்கிறார்கள் என்னும் விஷயம் அங்கே போன சிறிது நேரத்துக்கெல்லாம் எனக்குத் தெரிய வந்தது. உடனே அங்கிருந்து யார் கண்களிலும் படாமல் வெளியேறிக் கடும் நடை நடந்து இந்த மலைப் பிரதேசத்துக்கு வந்தேன்... களைப்பினால் சோர்ந்து பாதையிலேயே விழுந்து விட்டேன்... பிறகு உன் வளர்ப்புத் தந்தை என்னைக் கண்டு காப்பாற்றினார்...” என்று மாலவல்லி மிகவும் தழுதழுத்த குரலில் கூறினாள்.

     “...மாலவல்லி! உனக்கு இங்கேயும் ஆபத்து நிறைய இருக்கிறது. நந்திபுரத்து வீரர்களும் பழையாறை வீரர்களும் உன்னைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக இங்கே கூட ஒரு முறை ஏக அமர்க்களம் ஏற்பட்டது. நந்திபுரத்து வீரர்கள் என்னைப் பிடித்துத் தூக்கிச் செல்ல முயன்றனர். நல்ல சமயத்தில் பழையாறை வீரர்கள் அவர்களைத் தடுத்து என்னை விடுவித்தனர்” என்று கூறினாள் சுகேசி.

     “உன்னைத் திருபுவனி என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். விபரீதம் தான்...! அது இருக்கட்டும்... சுகேசி! உன் வயதுக்கு இப்பொழுது உனக்கு கல்யாணம் ஆகியிருக்க வேண்டுமே! இது விஷயத்தில் உன் தந்தை முயற்சி செய்ய வில்லையா?” என்று கேட்டாள் மாலவல்லி.

     ஏற்கனவே சிவந்திருந்த சுகேசியின் முகம் மேலும் குப்பென்று சிவந்தது. ஆனால் அவள் மாலவல்லிக்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

     உடனே மாலவல்லி அவளை நெருங்கித் தழுவிக் கொண்டு, “சுகேசி! உன மனசுக்குள் யாரையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என்னிடம் கூடச் சொல்ல மாட்டாயா? எனக்கென்னவோ உன்னைப் பார்த்தது முதல் உன் அழகுக்கு ஏற்ற வாலிபனைத் தேடி உனக்கு அவனுக்கும் விவாகம் செய்து வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. உம்! உன்னை அடைவதற்கு எந்த நாட்டு இளவரசனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ!” என்று கூறி மாலவல்லி சுகேசியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

     சுகேசி தலைகுனிந்து கொண்டிருந்தாள். மாலவல்லி அவளது அழகிய முகத்தைத் தூக்கி நிமிர்த்தினாள். ‘என்ன இது! சுகேசியின் கண்களிலிருந்து கண்ணீர் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்தோடுகிறதே!’

     “சுகேசி, ஏன் கண்ணீர் விடுகிறாய்? என்னிடம் சொல்ல மாட்டாயா? நீ யாரையாவது நேசிக்கிறாயா?” என்று மிகவும் உருக்கமாகக் கேட்டாள் மாலவல்லி.

     சுகேசி கண்களைத் துடைத்துக் கொண்டு, “மாலவல்லி! உன்னிடமாவது மனம் விட்டுப் பேசினால் தான் எனக்குக் கொஞ்சம் அமைதி கிட்டும். காட்டு மல்லிகைக் கொடி மாதிரி கவலையற்றுக் காட்டுப் பிரதேசத்திலேயே வளர்ந்த எனக்கு உலகமே தெரியாமலிருந்ததில் அதிசயமென்ன இருக்கிறது? அப்படியிருக்க என் உள்ளம் ஒரு இளைஞரிடம் ஈடுபட்டு விட்டது. சில மாதங்களுக்கு முன்பு, ஒரு இளைஞரும் சோதிடர் ஒருவரும் இங்கே வந்தார்கள். அந்த வாலிபர் முகம்... மிகவும்... அழகாயிருந்தது. என்னை யறியாமலே என் உள்ளம் அவரை நாடியது. என் விருப்பத்தை அறிந்தவர் போல் தந்தையும், என்னைப் பற்றிய வருங்காலப் பொறுப்பை அந்த வாலிபரிடமே ஒப்படைத்தார். என்னைத் தூக்கிப் போக முயன்ற முரடர்களிடமிருந்து அந்த வீர வாலிபர் போராடி என்னைக் காப்பாற்றினார்!”

     “அவர் உன்னை விரும்பினாரா? உன்னிடம் தமது உள்ளன்பை வெளியிட்டாரா?”

     “...இல்லை. நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. எங்கள் விழிகள் தான் சந்தித்தன...!” அப்பப்பா, இதைச் சொல்லி முடிப்பதற்குள் சுகேசிக்குத்தான் எத்தனை வெட்கம்!

     “சுகேசி! அந்த வாலிபர் இப்பொழுது எங்கே யிருக்கிறார்?”

     “அவர் காஞ்சிக்குப் போவதாகச் சொல்லிப் போனார்.”

     “அவர் பெயர் தெரியுமா?”

     “தெரியாது!”

     “இது அதிசயமான காதலாக அல்லவா இருக்கிறது? போகட்டும். அவருடன் வந்தாரே, அவருடைய பெயராவது தெரியுமா?”

     “உம்... ஆமாம்... அவர் பெயர் சந்தகர். குடந்தை நகரத்துச் சோதிடர்!”

     இதைக் கேட்டதும் மாலவல்லியின் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தோன்றியது.

     “சுகேசி! நீ அதிர்ஷ்டக்காரிதான். வலுவில் உன்னை ஒரு அழகர் தேடி வந்தாரல்லவா? அது இருக்கட்டும். அவர் எப்பொழுது வருவதாகச் சொன்னார்?” என்று மிகுந்த ஆவலோடு கேட்டாள் மாலவல்லி.

     “குறிப்பாக எதுவும் சொல்லவில்லை. அவசரக் காரியமாகக் காஞ்சீபுரத்துக்குச் செல்லுவதாகவும், திரும்பி வரும் போது என்னை அவசியம் தம்மோடு அழைத்துக் கொண்டு போவதாகவும் சொன்னார்!”

     “சுகேசி! நீ வருத்தப்படாதே. அந்த வாலிபன் யாரென்று கண்டறிந்து உன்னை அவனுக்கு எப்படியாவது மணம் முடித்து வைக்கிறேன். இதற்காக நான் எத்தகைய தியாகத்தையும் செய்யக் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன். இது சத்தியம்! சுகேசி, நீ எப்போதாவது அவரைக் காண நேர்ந்தால் உன்னால் அவரை உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியுமா?”

     “மாலவல்லி! நீ என்னத்துக்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரியும். என் உள்ளத்தில் இருப்பதை உன்னிடம் மறைப்பதில் பயனில்லை. அவர் இங்கே வந்தால், அவரை நான் கண்ணால் பார்ப்பதற்கு முன்பே என் கருத்தால் அவர் வரவைக் கண்டு கொண்டு விடுவேன். என் நினைவில்... அவர்... சதா நிறைந்திருக்கிறார்; நெஞ்சோடு எப்போதும் உறவாடுகிறார்...” என்று நாணத்தினால் குனிந்த தலையுடன் சுகேசி கூறினாள்.

     மாலவல்லி சுகேசியை இறுகத் தழுவிக் கொண்டாள்.

     சூரியன் மலைவாயில் விழும் தருணமாதலால் மேற்கே சொக்கர் வானத்தைத் தீட்டி, சிவப்பு வர்ணக் குழம்பில் அவனும் குதித்துத் தன்னுடைய செங் கிரணங்களினால் குன்றுகளுக்கும் சிவப்பு வர்ணம் பூசினான்.

     மெல்லிய தன் இடையில் ஒரு மண் குடத்துடன் சுகேசி தண்ணீர் கொண்டு வரச் சுனைக்குப் புறப்பட்டாள். மாலவல்லி எவ்வளவோ வற்புறுத்தித் தானும் வருவதாகக் கூறியும் அவள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

     மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில் தங்கக் கொடி நடந்து செல்லுவது போல், அசைந்து ஆடிக் கொண்டு சென்றாள் சுகேசி.

     சுனைக்குச் சென்று நீர் மொண்டு கொண்டு கொஞ்ச தூரம் வந்ததும், ‘டக்டக்’, ‘டக்டக்’ என்ற குதிரைக் குளம்புகளின் சத்தம் துரித கதியில் கேட்டது. சுகேசி சற்றுத் தயங்கி ஒலிவந்த திசையைப் பார்த்தாள். மறுகணம் குதிரை அவள் இருந்த இடத்தை நோக்கியே வந்தது. சித்திரப் பாவையைப் போல் அயர்ந்து நின்றுவிட்ட சுகேசியின் அருகே வந்ததும் குதிரை நின்றது. குதிரை மேலிருக்கும் வீரனைப் பார்த்ததும் சுகேசியின் கரிய பெரிய விழிகள் ஆச்சர்யத்தினால் விரிந்தன.