உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 21 - இரு நண்பர்கள்! காஞ்சீபுரத்திலிருந்து வெளியூர் போகும் நெடுஞ்சாலை இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்த புளிய மரங்களுடன் நெடுந்தூரம் வரையில் குளிர் நிழல் படர்ந்த சோலையாகவே விளங்கியது. மனோகரமான காலை நேரம். சூரியோதயம் ஆகி ஒரு ஜாமம் இருக்கும். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் உச்சியில் வசந்த காலத்தின் இளந்தென்றல் உலாவிய போது சலசலவென்று இலைகள் அசையும் இனிய ஓசை எழுந்தது. பறவையினங்கள் எழுப்பிய மதுரமான அமுத ஒலிகள் அமர கீதமாகப் பெருகிக் கொண்டிருந்தன. மனித சஞ்சாரமற்ற அந்தப் பாதையில் குதிரைகள் மெதுவாகக் காலடி வைக்கும் ஒலியைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. அந்த இரண்டு குதிரைகளின் மீதும் பிரயாணம் செய்து கொண்டிருந்த பிரயாணிகள் இருவரும் மௌனமாகவே சென்றார்கள். குதிரைகள் இரண்டும் நீண்ட நெடுந்தூரப் பிரயாணம் காரணமாக அலுத்துக் களைத்துப் போயிருந்தன என்பது அவைகளின் தளர் நடையிலிருந்து தெரிந்தது. குதிரைகளைப் போலவே அந்தப் பிரயாணிகள் இருவரும் சோர்ந்து போயிருந்தனர். அந்தக் குதிரைகளில் ஒன்று கம்பீரமான தோற்றங் கொண்டது. வெள்ளை நிறங்கொண்ட அந்தப் புரவி சர்வ லக்ஷணங்கலும் பொருந்தியதாயிருந்தது. அவ் வெண் புரவியில் அமர்ந்திருந்தவனும் ராஜ குடும்பத்துக்கேற்ற கம்பீரமான ஆகிருதியுடனும், மேலங்கி, தலைப்பாகையுடனும் காணப்பட்டான். இன்னொரு குதிரை கபில நிறம் கொண்டது; அந்த வெள்ளைக் குதிரையை விடத் தோற்றத்தில் சற்றுச் சிறியதாயிருந்தது. அந்தக் குதிரையின் மேல் அமர்ந்திருந்தவன் தலையை முண்டனம் செய்து கொண்டு காஷாய உடை தரித்திருந்த புத்த பிக்ஷுவாகக் காணப்பட்டான். அவர்களது குதிரைகள் தான் ஒரே பாதையில் சென்றனவே தவிர அவர்களுடைய உள்ளங்கள் வெவ்வேறு திசைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. அவர்கள் வேறு யாரும் அல்ல; சிம்மவர்மனும் கலங்கமாலரையரும் தான். இருவரும் ஒருவரையொருவர் வெளிப் பார்வைக்கு நேசித்தனரே தவிர, உண்மையில் ஒருவரையொருவர் கொன்று விடும் அளவுக்கு அவர்கள் உள்ளங்களில் குரோதத் தீ கனன்று கொண்டிருந்தது. பகிரங்கமாக அவர்கள் பகைமை பாராட்டிக் கொள்ள முடியாமல் இருந்ததற்குக் காரணம், ஒருவரையொருவர் மிஞ்சக் கூடிய அளவுக்கு அவர்கள் வஞ்சக நெஞ்சம் படைத்தவர்களா யிருந்ததுதான். வஞ்சகமான முறையில், காஞ்சீபுரத்துப் பல்லவ சிம்மாசனத்தைக் கைப்பற்ற வேண்டும் என்னும் கொடிய எண்ணம் சிம்மவர்மனின் உள்ளத்தில் நீண்ட நாட்களாகத் தழைத்து வந்தது. அதற்கு உறுதுணையா யுள்ளவர்களை யெல்லாம் சிம்மவர்மன் தன்னுடைய நண்பர்களாகக் கொண்டு பழகி வந்தான். அவனுடைய தீய எண்ணத்துக்குப் பூதுகன் ஆதரவாயிருப்பவன் போல் வெளிப்படையில் காட்டிக் கொண்டான். ஆனால் கலங்கமாலரையரால் அவனை அப்படி எளிதில் ஏமாற்ற முடியவில்லை. சிம்மவர்மன் விழிப்புடன் இருந்தபடியினால் அவர் கைவரிசை செல்லவில்லை. கலங்கமாலரையரை ஒழுத்துக் கட்டிவிடலாம் என்றால், பல்லவ சேனாபதி உதயசந்திரனோடு அவர் நெருங்கிய தொடர்பு கொண்டு சிம்மவர்மனையே கண்காணிக்கலானார். ஆகவே, சிம்மவர்மனால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. பூதுகனுடைய புத்தி சாதுர்யத்திலும், வாக்கு வன்மையிலும் சிம்மவர்மனுக்கு அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. தன்னுடைய எண்ணம் கைகூட வேண்டுமானால் பூதுகனுடைய உதவியை அவசியம் பெற்றாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். அதனால் தான் அடிபட்டு விழுந்த பூதுகனை எடுத்துப் போய்க் காப்பாற்றி, தேனார்மொழியாள் இல்லத்தில் ஒருவரும் அறியாமல் வைத்திருந்தான். சிம்மவர்மனுடைய சூழ்ச்சியைப் பூதுகன் நன்றாய் அறிந்திருந்தபடியினால், அந்தச் சூழ்ச்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். சிம்மவர்மனுடைய செயல்களை யெல்லாம் ரகசியமாக ஒற்றர்கள் மூலம் அறிந்து வந்த கலங்கமாலரையர், தேனார்மொழியாள் இல்லத்தில் பூதுகன் இருந்ததைக் கண்டுபிடித்து விட்டார். பிறகு பூதுகன் மீது சதிக் குற்றம் புனைந்து அவனைச் சிறைப்படுத்தப் பல்லவ சேனாபதியின் மூலம் ஏற்பாடு செய்தார். இந்த ஏற்பாட்டைச் சோதிடர் சந்தகர் மூலம் அறிந்து கொண்ட பூதுகன் காஞ்சீபுரத்திலிருந்து வெளியேறி விட்டான். பூதுகன் வெளியேறியது கலங்கமாலரையருக்குத் தெரியாது. சிம்மவர்மனுக்கும் தெரியாது. கொடும்பாளூராருடன் நட்புப் பூணுவது தன் ராஜதந்திர நோக்கங்களுக்குப் பெரிதும் சாதகமாயிருக்கும் என்ற எண்ணத்தினால் சிம்மவர்மன் கொடும்பாளூருக்குப் போகத் தீர்மானித்தான். இந்தத் தீர்மானத்துக்கு வித்து ஊன்றியவன் பூதுகன் தான். அத்துடன் அவன் எப்பொழுது புறப்பட வேண்டும் என்பதையும் அவனே தீர்மானித்துச் சொல்லி விட்டான். ஆதிக்க வெறியினால் உந்தப்பட்ட சிம்மவர்மன் பூதுகனின் சூழ்ச்சியை அறிந்து கொள்ளாமல், கொடும்பாளூருக்கு உடனே புறப்பட்டு விட்டான். கொடும்பாளூர் இளவரசர்களான ஆதித்தனுக்கும், பராந்தகனுக்கும் கலங்கமாலரையரை நன்கு தெரியுமாதலால், அவரையும் அழைத்துப் போவது உசிதமாயிருக்கும் என்று பூதுகன் சிம்மவர்மனிடம் சொல்லியிருந்தான். ஆகவே, கலங்கமாலரையரையும் கொடும்பாளூருக்குத் தன்னோடு வருமாறு சிம்மவர்மன் அழைத்தான். சோழ ராஜ்யம் உருவாவதற்கு வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பூதுகனைத் தோல்வியடையச் செய்வதற்காகத் தாம் கொடும்பாளூராருடன் தொடர்பு கொள்ளுவது அநுகூலமாயிருக்கும் என்று கலங்கமாலரையர் நினைத்தார். கொடும்பாளூர்ச் சகோதரர்கள் சோழ ராஜ்யம் அமைப்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்கள் என்பதும் பழையாறை விஜயனுக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பதும் கலங்கமாலரையருக்குத் தெரிந்ததுதான். இதன் காரணமாக அவர்களுக்குத் தஞ்சை மன்னர் மாறன் முத்தரையரிடம் கூடப் பகை ஏற்பட்டிருந்தது அவருக்குத் தெரியாததல்ல. மேற்கூறியவைகளெல்லாம் நன்கு தெரிந்திருந்ததனால் தான் கலங்கமாலரையர், பூதுகனைப் பல்லவ ராஜ்யத்துக்கு விரோதி என்று பகிரங்கமாக நிரூபிப்பதற்குப் பல சூழ்ச்சிகளை வெகுநாட்களாகச் செய்த வண்ணம் இருந்தார். ஆனால், பூதுகன் விஷயத்தில் அவருடைய சூழ்ச்சிகள் எதுவும் பலிக்கவில்லை. ஆயினும் கலங்கமாலரையர் தம் முயற்சியில் தளரவில்லை. காஞ்சீபுரத்து வீதியில் பூதுகன் தன்னந் தனியாகப் போய்க் கொண்டிருந்த போது அவர் அவனைப் பழி தீர்த்துக் கொண்டார். ஆனால் தக்க சமயத்தில் சிம்மவர்மன் தலையிட்டதனால் பூதுகன் கலங்கமாலரையரின் பிடியிலிருந்து தப்ப முடிந்தது. பூதுகன் அவர் பிடியிலிருந்து தப்பினாலும், அவர் அவனைத் தம் பார்வையிலிருந்து தப்ப விடவில்லை. கண்காணித்துக் கொண்டே யிருந்தார். எப்படியாவது அவன் மீது சதிக்குற்றம் சுமத்தி விட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். பல்லவ சேனாதிபதி உதயசந்திரன் மூலம் தம் கடைசி முயற்சியைத் தொடங்கியிருந்தார். அம்முயற்சி பலித்து விட்டது என்ற எண்ணத்தினால் தான் அவர் உற்சாகமா யிருந்தார். சிம்மவர்மனிடம் கலங்கமாலரையருக்கு உள்ளூறப் பகை இருந்தாலும் கொடும்பாளூர்க்காரர்களின் உதவியைப் பெறுவதற்கு அவன் அவருடன் இருக்க வேண்டியிருந்தது. பல்லவ மன்னைன் சகோதரனான சிம்மவர்மனே அவருக்கு நண்பன் என்று தெரிந்தால் கொடும்பாளூர்க்காரர்கள் அவர் மீது அதிகமாக மதிப்பு வைப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். ‘கொடும்பாளூர்க்காரர்களுக்குக் கலங்கமாலரையர் மீது ஒரு கண் இருக்கிறபடியினால் நீங்கள் எப்படியாவது அவனை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும். அவனை அங்கு அழைத்துச் சென்றால் தான் அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்படும்’ என்று மிகவும் தந்திரமாகப் பூதுகன் சிம்மவர்மனிடன் கூறியிருந்தான். அதன் காரணமாகத்தான் சிம்மவர்மன் கலங்கமாலரையரைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்குச் சம்மதித்தான். இப்படி இருவரும் பலப்பல விதமாகச் சிந்தித்த வண்ணம் குதிரையின் மீது போய்க் கொண்டிருந்த போது தூரத்தில் கோட்டை மதில்கள் தெரிந்தன. “கலங்கமாலரையரே! அதோ தெரிகிறதே, அதுதானே கொடும்பாளூர்க் கோட்டை மதில்!” என்று சிம்மவர்மன் எதிரே சுட்டிக் காட்டினான். “ஆமாம், அது தான் கொடும்பாளூர்க் கோட்டை மதில். குதிரையைக் கொஞ்சம் வேகமாகத் தட்டி விட்டால் விரைவில் போய்ச் சேர்ந்து விடலாம்!” என்றார் கலங்கமாலரையர். சிம்மவர்மன், “ஆகா! அப்படியே செய்வோம்!” என்று கூறித் தன் குதிரையை வேகமாகச் செலுத்த ஆரம்பித்தான். கலங்கமாலரையரும் தமது குதிரையை வேகமாகச் செலுத்தலானார். குதிரைகள் இரண்டும் நாலுகால் பாய்ச்சலில் ‘டக் டக் டக் டக்’ என்று வேகமாக ஓடின. அந்த நெடுஞ்சாலை முழுவதும் ஒரே புழுதிமயமாக ஆயிற்று. ***** சிம்மவர்மனும் கலங்கமாலரையரும் கொடும்பாளூர் நகருக்குள் நுழைந்து கோட்டை வாசலுக்கு அருகே சென்றதும் கோட்டை வாசற் காவலர்கள் தடையேதும் சொல்லாமல் அவர்கள் இருவரையும் உள்ளே அனுமதித்தனர். அது சிம்மவர்மன் உள்ளத்தில் அகம்பாவத்தையும், கலங்கமாலரையரின் உள்ளத்தில் வியப்பையும் உண்டாக்கியது. சுற்றிச் சுற்றி, வளைந்து வளைந்து சென்ற பாதை வழியாக இருவரும் குதிரைகளைச் செலுத்திக் கொண்டு வெகு நேரம் சென்றனர். அவர்கள் உள்கோட்டை வாசலை அடைந்த போது நடுப்பகல் நேரம் கடந்து விட்டது. அங்கே ஆதித்தனும் பராந்தகனும் மிகவும் ஆவலோடு கலங்கமாலரையரையும் சிம்மவர்மனையும் வரவேற்றனர். சிம்மவர்மனும் கலங்கமாலரையரும் அன்று கொடும்பாளூர் அரண்மனை விருந்தினரா யிருந்தனர். ஆதித்தவர்மனும் பராந்தகனும் அவர்களிடம் காட்டிய அன்பு பிரமிக்கத் தக்கதாயிருந்தது. சிம்மவர்மனும் கலங்கமாலரையரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இருவரும் தங்கள் தங்கள் சூழ்வினைக்கு ஏற்பப் பலவிதமான யோசனைகளோடு மிகவும் ஆனந்தமாயிருந்தனர். ஆதித்தனும், பராந்தகனும் கொடும்பாளூர் அரண்மனைச் சபா மண்டபத்தில் சிம்மவர்மனுக்கும் கலங்கமாலரையருக்கும் ஒரு வரவேற்பு உபசாரம் அளித்துக் கௌரவித்தனர். ***** மறுநாள் காலை சிம்மவர்மனுக்கும் கலங்கமாலரையருக்கும் கொடும்பாளூர்க் கோட்டையைக் காட்ட ஆதித்தன் தானாக இசைவான் என்று அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. பராந்தகன் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கோட்டையின் உள் பகுதிக்குச் சென்றான். இறங்க இறங்க எல்லையே இல்லாமல் சென்று கொண்டிருந்த பாதாளப் பாதை கலங்கமாலரையரையே கலங்க வைத்து விட்டது. பிறகு வளைந்து வளைந்து செல்லும் பாம்புப் பாதை வந்தது. அந்தப் பாதையில் நடந்து அவர்கள் இருவருக்கும் தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. “கலங்கமாலரையரே! முன்பு ஒரு சமயம் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் இங்கு வந்திருந்தார். அவருக்கும் இதே மாதிரி கோட்டையைக் காட்டிக் கொண்டு வந்தேன். அவருக்குப் பாதாளப் பாதையில் இறங்கி வரும் போதே கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. பாவம், மிகவும் சிரமப் பட்டுப் போய்விட்டார். ‘எப்படியாவது வெளியே போனால் போதும். கோட்டையைப் பார்த்த வரையில் திருப்தி’ என்றாகி விட்டது அவருக்கு. ஆனால் அவர், பாவம்! கௌரவத்தை விட்டுக் கொடுக்கச் சிறிதும் அவருக்கு விருப்பமில்லை. மனசை விட்டு எதையும் சொல்ல முடியாமல் தவித்துப் போய்விட்டார்!” என்றான் பராந்தகன். அவன் இப்படிக் கூறியது சிம்மவர்மனுக்கு ஏதோ போலிருந்தது. “நண்பரே! நான் அப்படிக் களைத்து போய் விடவில்லை. இதற்கு முன்பு இந்தக் கோட்டைக்கு வந்ததில்லையாகையால், பாதையின் வளைவுகளும், நெளிவுகளும், திருப்பங்களும் சிறிது குழப்பமாயிருக்கின்றன, அவ்வளவுதான்!” என்று கொஞ்சம் சூடாகவே மறுமொழி கூறினான். பராந்தகன், “நான் தங்களைக் குறைவாகவே கூறவில்லை. புலிப்பள்ளி கொண்டாரின் நிலையைக் கூறினேன்... இனி மிகவும் ஜாக்கிரதையாக வரவேண்டும். அந்தகாரப் பாதையில் போகப் போகிறோம். உங்களுக்கு அலுப்பாயிருந்தால் சற்று இங்கேயே இருந்து இளைப்பாறி விட்டுப் போகலாம்” என்றான். கலங்கமாலரையர், “...இல்லை, இல்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டுப் பிறகு இளைப்பாறிக் கொள்ளலாம்!” என்றார். பிறகு மூவரும் கோட்டைப் பாதையில் தொடர்ந்து சென்றனர். கலங்கமாலரையர் பாதையின் மர்மங்களையும் தந்திரங்களையும் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் மிகவும் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டே போனார். சிம்மவர்மனும் மிகவும் கவனமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே போனான். அந்தகாரப் பாதையில் செல்ல ஆரம்பித்ததும் பராந்தகன் ஒரு விதமான கீச்சுக் குரலில் கத்தினான். உடனே ஒரு வீரன் சுளுந்து கொளுத்திக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தான். அந்தச் சுளுந்தைக் கையில் வாங்கிக் கொண்டு பராந்தகன் முன்னால் நடந்து சென்றான். அவனைத் தொடர்ந்து கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் போனார்கள். அந்தகாரப் பாதையில் மையிருட்டு சூழ்ந்திருந்தபடியினால், கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் தடுமாறியவண்ணம் சென்றனர். பராந்தகன் கையில் இருந்த சுளுந்தின் ஒளி அந்தப் பேரிருட் பாதையில் ‘மினுக் மினுக்’கென்று பிரகாசித்தது. திடீர் என்று படிக்கட்டுகள் கீழே இறங்குவதும், திடீர் என்று மேல் நோக்கிச் செல்லுவதுமாக அந்தப் பாதை ஒரே மர்மமாகச் சென்றது. வெகு நேரம் கழித்துப் பாதையில் எங்கிருந்தோ சிறிது ஒளி பரவத் தொடங்கியது. ஆகவே சுளுந்துக்கு அவசியம் இருக்கவில்லை. ஒரு வீரன் வந்து பராந்தகனிடமிருந்து சுளுந்தை வாங்கிக் கொண்டு மறைந்தான். கலங்கமாலரையருக்கும் சிம்மவர்மனுக்கும் இப்பொழுதுதான் மூச்சு தாராளமாக வந்தது. மனசுக்குள் இருந்த திகிலும் கொஞ்சம் தணிந்தது. திடீரென்று வெய்யில் உறைத்தது. இப்பொழுது சூரியன் நடுவானத்தை அடைந்திருந்தான். “நண்பர்களே! நாம் பகல் உணவை முடித்துக் கொண்டு மீண்டும் கோட்டையைப் பார்க்கலாம், வாருங்கள்!” என்று கூறி பராந்தகன் அவர்கள் இருவரையும் அங்கேயிருந்த ஒரு அழகிய மாளிகைக்குள்ளே அழைத்துச் சென்றான். மாளிகையின் கூடம் மிகவும் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. திவ்விய போஜனம் பரிமாறப்பட்டுத் தயாராயிருந்தது. அரண்மனைப் பரிசாரகர்கள் மிகவும் பணிவுடன் காத்துக் கொண்டிருந்தனர். கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் கை, கால், முகம் கழுவிக் கொண்டு உணவு பரிமாறப்பட்டிருந்த இடத்துக்கு வந்தனர். வெகுதூரம் நடந்து வந்த அலுப்பும் களைப்பும் மேலிட்டிருந்தபடியினால் விருந்தினர்கள் இருவரும் ஆவலோடு சாப்பிட்டனர். பராந்தகனும் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டான். “உங்கள் தகப்பனார் பூதிவிக்கிரமகேசரி பெரிதும் பாராட்டுக்கு உரியவர் என்பதில் ஐயமில்லை. பகைவர்களை மனத்தில் எண்ணிக் கொண்டே, இந்த மர்மக் கோட்டையைக் கட்டியிருக்கிறார்” என்றார் கலங்கமாலரையர். “என் தகப்பனார் பகைமையை மனத்தினாலும் எண்ணியவர் அல்ல; யார் மீதும் வீணாகப் பகைமை பாராடியவரும் அல்ல. அவர் நண்பருக்கு நண்பர்; பகைவருக்கு நிச்சயம் பகைவர் தான்.
‘சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்.’ என்ற வான்புகழ் வள்ளுவரின் வாக்குப்படி, பகைவர்களின் ஊக்கமும் உற்சாகமும் குலையும் வண்ணம் கோட்டைக்கு அரண் அமைத்திருக்கிறார்” என்றான் பராந்தகன். எந்த விதத்திலாவது அவனது நட்பைப் பெற விரும்பிய சிம்மவர்மன், “பராந்தகரே! தாங்கள் கூறியது மிகவும் சரி. நண்பர்களை உத்தேசித்து, சில காரியங்களைச் செய்வது போலவே, பகைவர்களை உத்தேசித்தும் நல்ல பாதுகாப்பான அரண் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான்!” என்றான். சாப்பிட்டு முடிந்ததும் சிறிது நேரம் சென்று இளைப்பாறி விட்டு மூவரும் புறப்பட்டனர். மிகவும் சாதுர்யத்தோடு தந்திரமாக அமைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய சிறைச்சாலைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டே சென்று விசாலமான மண்டபத்தை அடைந்தனர். அங்கே சுவரையொட்டிய மூலையில் குமிழி போன்ற ஆணிகள் இரண்டு அமைக்கப்பட்டிருந்தன. அவைகளைக் கண்ட கலங்கமாலரையர் கவனம் முழுவதும் அவைகளின் மீதே தங்கி விட்டது. சிம்மவர்மனும் அவற்றைக் கவனிக்கத் தவறவில்லை. மெதுவாகக் கலங்கமாலரையர் அவற்றின் அருகே சென்று பார்த்தார். சிம்மவர்மனும் அவரைப் பின் தொடர்ந்து சென்றான். அந்த ஆணிகளில் ஏதோ மர்மம் அடங்கியிருக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தனர். “பராந்தகரே, இந்தக் குமிழி என்னத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது?” என்று கேட்டான் சிம்மவர்மன். “அந்தக் குமிழி... கீழே செல்லும் வழிக்காகத்தான். அதில் ஒன்றும் விசேஷம் இல்லை...” என்று கூறிவிட்டுப் பராந்தகன் எதையோ மறைப்பவன் போலச் சற்றுத் தயங்கி நடக்கலானான். கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் பராந்தகன் கூற்றில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்தனர்; ஒருவரை யொருவர் ஊடுருவி விடுவது போல் பார்த்துக் கொண்டனர். மறுகணம் குமிழியை நெருங்கினர் இருவரும். சிம்மவர்மன் மிகவும் பலத்துடன் குமிழியைப் பற்றித் திருகினான். பராந்தகன் சட்டென்று அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டு, “நண்பர்களே! அது மிகவும் அபாயமானது. அதைத் தொடாதீர்கள். நாம் போக வேண்டிய வழி இதோ கீழே போகிறது, வாருங்கள்!” என்று கூறினான். அவன் பேச்சைக் கேட்க, கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் அங்கே இல்லை. மறுகணம் அவர்கள் நின்று கொண்டிருந்த தரை நழுவிக் கீழே ‘விர்’ரென்று போகத் தொடங்கியது. கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் கலங்கிப் போய்விட்டனர். எத்தனையோ முயன்று பார்த்தும் அந்தப் பாதாளப் பிரயாணத்தை அவர்களால் நிறுத்த முடியவில்லை. வரவர அது மிகவும் வேகமாகக் கீழே போய்க் கொண்டேயிருந்தது. “நண்பர்களே! நான் சொன்னதைக் கேட்கவில்லை. உங்களைப் பாதாளக் கிடங்கிலிருந்து மீட்டுக் கொண்டு வரும் சூத்திரம் இங்கே இல்லையே!” என்று பராந்தகன் கூறியது அவர்கள் இருவர் செவிகளிலும் மிகவும் இலேசாக விழுந்தது. வெகுநேரம் கழித்து நண்பர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த பிரயாணம் சட்டென்று தடைப்பட்டது. நாலுபுறமும் கருங்கல்லினால் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்த காராக் கிருகத்துக்கு அவர்கள் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டனர். |