மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 23 - ஓலை சொன்ன செய்தி

     காஞ்சி பல்லவ மன்னன் அரண்மனையில் மந்திராலோசனை சபை கூடியிருந்தது. மந்திரி மண்டலத்தாரும், முக்கியமான மக்கள் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர்.

     “தஞ்சை முத்தரையர் கொடும்பாளூர் மீது படையெடுக்கத் தீர்மானித்து நம்மையும் அதற்கு உதவி செய்யத் தூது அனுப்பியிருக்கிறார். நமது படைகளும் ஆயத்தமா யிருப்பதாகச் சேனாபதி கூறினார். இருக்கட்டும். சிம்மவர்மன் எங்கே?” என்று மன்னன் நந்திவர்மன் கேட்டதும் சபையில் உள்ளவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

     சேனாபதி உதயசந்திரன் எழுந்து, “மகாராஜா! சிம்மவர்மரும் கலங்கமாலரையரும் இரண்டு நாட்களுக்கு முன்பு குதிரைகளில் ஏறிக் கொண்டு எங்கோ சென்றனர். நல்ல நிசி வேளையில் அவர்கள் புறப்பட்டதனால் எனக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. உடனே நம் ஒற்றர்களை அனுப்பி அவர்கள் அறியாவண்ணம் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல உத்தரவிட்டேன். ஒற்றர்கள் இன்னும் திரும்பவில்லை” என்று வணக்கமும் கம்பீரமும் கலந்த குரலில் கூறினான்.

     “அப்படியா? சிம்மவர்மனின் போக்கு வரவர நம்பிக்கை யளிப்பதாக இல்லை. அவனிடம் உண்மை அன்பு பாராட்டும் என்னை அவன் வெறுப்பதன் காரணம் எனக்குத் தெரியாமல் இல்லை. ராஜ்ய ஆதிக்கத்தில் அவனுக்கு ஆசை விழுந்து விட்டது. அதுதான் என்னிடம் குரோதமாக வளர்ந்திருக்கிறது. நான் இதை நன்றாக அறிந்தும் அவனிடம் நான் வெளிப்படையாக எதையும் குறிப்பிட்டுப் பேசினதில்லை. அவன் நமது அரசாங்கத்துக்கு விரோதமாக ஏதாவது சதி செய்து கொண்டிருப்பான்.”

     “அரசே! போதாக் குறைக்கு அந்த மகாபாவி கலங்கமாலரையனும் அவனோடு சேர்ந்து கொண்டிருக்கிறான். இனிமேல் அவர்களிடமிருந்து நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது!” என்றான் சேனாபதி.

     இந்தச் சமயம் கொடும்பாளூரிலிருந்து தூதன் வந்திருப்பதாக அரண்மனைக் காவலன் ஒருவன் சேனாபதியிடம் வந்து சொன்னான். சேனாபதி அவனை உள்ளே அழைத்து வரும்படி சொல்லியனுப்பினான்.

     கொடும்பாளூரிலிருந்து வந்த தூதன் மிகவும் மரியாதையாக மந்திராலோசனை மண்டபத்துக்குள் வந்து மன்னனையும் மற்றுமுள்ள பிரமுகர்களையும் வணங்கினான். பிறகு ஒரு ஓலையை எடுத்துச் சேனாபதியிடம் கொடுத்தான். சேனாபதி அவனை ஒரு ஆசனத்தில் அமரும்படி சுட்டிக் காட்டிவிட்டு, ஓலையைப் பிரித்துப் படிக்கலானான்:

     “மேன்மை தங்கிய பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்ம மகாராஜா அவர்களுக்கு!

     மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் ஆவலில், கொடும்பாளூர் ஆதித்தன் வணக்கமுடன் எழுதுவது:

     நீதி நெறி வழுவாத ஆட்சியினால் நெடுந்தூரம் வரையில் புகழ் பெற்று விளங்கும் மகாராஜாவாகிய தங்கள் ராஜ்யத்தில், சதிகாரர்கள் வலுப்பெற்று விளங்குகிறார்கள் என்னும் விஷயம் தங்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கலாம். தங்கள் சகோதரர் சிம்மவர்மர் தங்களுக்கே கேடு சூழ நினைத்துப் பலவிதமான சதிக் காரியங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடைசியாக அவர் எங்கள் ராஜ்யத்துக்கு வந்து தங்களுக்கு எதிராக எங்கள் உதவியைக் கோரினார். கலங்கமாலரையரும் சோழ அரசுக்கு எதிராக எங்கள் உதவியைக் கோரி இங்கு வந்தார். இருவருடைய சதி உள்ளங்களும் அவர்களையே கவிழ்த்து விட்டன. இங்கே அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். எங்கள் அருமை நண்பர் பூதுகரும் அந்த முயற்சியில் தான் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். அவர் மீதும் சதிக் குற்றத்தைச் சுமத்தக் கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் பெரு முயற்சி செய்தனர். அறிஞர் பூதுகருக்குத் தங்களிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. தங்களை நேரில் சந்திக்கச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இடம் தராததனால் அவர் வரவில்லை.

     பூதுகர் மேலுள்ள ஆத்திரத்தைப் பல்லவ ராஜ்ய இசைக் கணிகையான தேனார்மொழியாள் மீது காட்டி அநியாயமாக அவளைச் சிறைப்படுத்தி யிருக்கின்றனர். உண்மையை விசாரித்து நியாயம் வழங்க வேண்டியது தங்கள் கடமை.

     நானும் என் சகோதரனும் பல்லவ சக்கரவர்த்தியினிடமும் அவர் ஆட்சியிலும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு யார் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் கிடையாது. யாரையும் சூழ்ச்சியினால் அடக்கியாள விரும்பவில்லை. பழைமையான சோழ ராஜ்யம் பழையாறை நகருக்குள்ளேயே மங்கிப் போகாமல் வளம் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த விருப்பத்தையும் நாங்கள் தவறான பாதையில் சென்று அடைய ஒரு சிறிதும் விரும்பவில்லை. அதன் காரணமாக நாங்கள் தங்களுடைய மனக் கசப்பையும் பெற விரும்பவில்லை. சோழ அரசை மீண்டும் நிறுவி, அதற்கு உரிமையாளனாகிய விஜயாலயனுக்கு முடி சூட்டுவதன் மூலம் தங்கள் பேரரசுக்கு நாங்கள் எத்தகைய தீங்கையும் நினைக்கவில்லை. தீங்கு செய்யவும் முடியாது என்பது தாங்கள் அறிந்ததே.

     தங்களுடன் நட்புப் பூணவும் நல்லுறவைப் பேணவும் பேரார்வத்துடன் காத்திருக்கிறோம். தாங்கள் இங்கு விஜயம் செய்து, பழையாறையில் நடக்கவிருக்கும் சோழ அரசு நிறுவும் மகத்தான விழாவுக்கு ஆசி கூற வேண்டும் என்று பெரிதும் விழைகிறோம்.

     தங்கள் வணக்கமுள்ள
     ஆதித்தன்.”

     ஓலையைப் படித்து முடித்ததும் சபையில் சந்தோஷ ஆரவாரம் எழுந்தது. சக்கரவர்த்தி நந்திவர்மன் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

     “சேனாபதி! எனக்கு வெகு நாட்களாகக் கொடும்பாளூர்ச் சகோதரர்களிடம் பிரியமுண்டு. அவர்கள் தந்தை பூதிவிக்கிரம கேசரி ராஜ தந்திர நிபுணர். நம்மிடம் பரம விசுவாசமுள்ளவர். சிம்மவர்மன் அவர்கள் மீது ஏதாவது கோள் புனைந்து கூறிக் கொண்டேயிருந்தான். அதனால் நான் கூடச் சிறிது மனத்தில் மாறுபாடான அபிப்பிராயம் கொள்ள நேர்ந்தது. இந்த ஓலை அவர்களுடைய மனப்பான்மையை நன்கு எடுத்துக் காட்டிவிட்டது. அவர்களுடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்று கூறிச் சக்கரவர்த்தி எல்லோருடைய முக பாவங்களையும் கவனித்தார்.

     “அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!” எல்லோரும் ஒருமுகமாக அபிப்பிராயம் கூறினார்கள்.

     “மகாராஜா! நல்ல சமயத்தில் இந்த ஓலை வந்து நமக்கு உதவியது. நமக்குச் சம்பந்த மில்லாத விஷயங்களில் நாமாகச் சம்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு போருக்குப் போவது அரச தர்மம் அல்ல என்பது மட்டும் அல்ல. அது நமது பரந்த பல்லவ சாம்ராஜ்யத்துக்கே இழுக்குக் கற்பிப்பதும் ஆகும். தங்கள் மூதாதையர்களெல்லாம் வீரத்திலும் தீரத்திலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினார்கள். அவ்வழி வந்த தாங்கள் தங்கள் பரம்பரைக் கௌரவத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்பதே எனது அபிப்பிராயம். நான் இன்று இதைச் சபை கூட்டியதும் எடுத்துக் கூறலாம் என்று தீர்மானித்திருந்தேன். நம்மிடம் நேரடியாகப் பகைமையே சிறிதும் கொள்ளாத கொடும்பாளூர் மீது நாம் படை எடுத்துச் செல்வது முறையல்ல. மேலும், தஞ்சை மன்னர் முத்தரையரின் ஆட்சிக்கு வல்லரசுகளினால் ஏதாவது அபாயம் வருவதாயிருந்தால் நாம் படையெடுத்துச் சென்று அவருக்கு உதவியாயிருப்பது நியாயம். இப்பொழுது சோழ அரசு அமைவதில் நமக்கு ஒன்றும் மாறுபாடான அபிப்பிராயம் இல்லை. தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டாருக்காக நாம் எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்துச் செல்வது உசிதமல்ல. புலிப்பள்ளி கொண்டார் தம் சுயநலத்துக்கு நம்மைப் பயன்படுத்திக் கொள்ளுவதை நாம் அங்கீகரிக்க முடியாதல்லவா!” என்று நிதானமாகவும் உறுதியாகவும் முதல் அமைச்சர் கூறவே சபையோர் அதை ஒருமுகமாக வரவேற்றனர்.

     முதல் அமைச்சரின் இந்தப் பேச்சு மன்னன் நந்திவர்மனுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாயிருந்தது.

     “முதல் அமைச்சரே! உமது அபிப்பிராயம் மிகவும் சரி. நான் பரிபூரணமாக ஆதரிக்கிறேன்!” என்று சந்தோஷத்துடன் கூறினார்.

     “...அப்படியானால் கொடும்பாளூரை நோக்கிப் படையெடுத்துச் செல்வதாக இருந்த யோசனையை...” என்று சேனாபதி சற்றுத் தயங்கினார்.

     “உடனே நிறுத்தி விட வேண்டியதுதான். தஞ்சை அரசருக்கு உடனே இது விஷயமாக ஓலை அனுப்பி விடுங்கள்!” என்று கூறினார் சக்கரவர்த்தி.

     “அதுதான் நியாயமான காரியம். சக்கரவர்த்தியின் பெருமைக்கு அதுதான் உகந்தது!” என்று சபையிலிருந்த பிரமுகர்கள் ஒருமுகமாகத் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவித்தனர்.

*****

     தஞ்சை முத்தரையரின் சைன்யம் புலிப்பள்ளி கொண்டார் மகன் கோளாந்தகன் தலைமையில் பேராரவாரத்துடன் புறப்பட்டது.

     அலங்கரிக்கப்பட்ட மத்தகஜங்கள் முன்னாலே கம்பீரமாகச் செல்ல, அவற்றுக்குப் பின்னாலே அணி அணியாக ஆயுதம் தாங்கிய வீரர்கள் அழகிய அசுவங்களில் ஆரோகணித்துச் சென்றனர்.

     வீரர்கள் போட்ட ஆரவாரம் வானளாவ எழுந்தது. குதிரைகளின் குளம்படிகளிலிருந்து கிளம்பிய புழுதி வான வீதியையே மறைத்தது.

     வேல்களும் வாள்களும், ஈட்டிகளும் காலை வெய்யிலில் பளீர் பளீர் என்று மின்னின.

     போருக்குச் செல்லும் புரவிகள் கனைக்கும் பேரொலியும், யானைகள் பெருங்கூட்டமாகப் பிளிறும் ஓசையும், காலாட்படைகளின் வீர வாசகங்களும் வழி நெடுக எதிரொலியிட்டன.

     தஞ்சையை விட்டுப் புறப்பட்ட படை காட்டுப் பகுதியில், அஸ்தமன வேளையில் தங்கியது. கூடாரங்கள் போடப்பட்டன.

     சூரியன் மலைவாயில் விழுந்து, வானம் முழுதும் செந்நிறம் பூசிக் காணப்பட்டது. அந்தி மயங்கும் வேளையில் வீரர்கள் யாவரும் நெடும் வழி நடந்த அலுப்புத் தீர, உற்சாகமாகப் பாட்டுப் பாட ஆரம்பித்தனர். ஒருபுறம் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு அறுசுவை உண்டி தயாராகிக் கொண்டிருந்தது.

     வீரர்கள் யாவரும் ஆவலோடு பல்லவ சைன்யத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சேனாபதிக் கோலங் கொண்ட கோளாந்தகன் அமைதியில்லாமல் இங்குமங்கும் நடப்பதும் பெருமூச்சு விடுவதுமாக இருந்தான்.

     அவன் இந்தப் பெரும் போரில் எப்படியாவது தனக்கு வெற்றி கிட்ட வேண்டுமே என்று மனத்துக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். கொடும்பாளூர்ச் சகோதரர்கள் கலங்கமாலரையரையும் சிம்மவர்மனையும் எப்படியோ சாமர்த்தியமாகச் சிறையில் அடைத்து விட்டார்களே என்று கோளாந்தகன் மனசுக்குள் வியந்து கொண்டிருந்தான். அத்தகைய ராஜதந்திர சாமர்த்தியம் வாய்ந்த கொடும்பாளூர்ச் சகோதரர்களிடம் எப்படிச் சண்டையிட்டு வெல்லப் போகிறோம் என்று அவன் மனத்துக்குள் சிறிது அச்சம் தலைக்காட்டாமலில்லை. அவனது அச்சத்துக்கு ஏற்றாற்போல், பல்லவ ராஜ்யத்தின் உதவிப்படை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இன்னும் இந்த இடத்துக்கு வந்து சேரவில்லை. நேரம் செல்லச் செல்லக் கோளாந்தகன் உள்ளத்தில் பதை பதைப்பும் இதயத் துடிப்பும் அதிகமாயின. அவனுடைய நடையில் முன்பு இருந்த மிடுக்கும் கம்பீரமும் இப்பொழுது இல்லை. மாலை நேரம் போய் இரவு வந்து விட்டபடியால் ஏராளமான தீவர்த்திகள் மூலைக்கு மூலை கொழுந்து விட்டெரியச் செந்நிற ஒளி பரவியது. தீவர்த்திகளிலிருந்து கிளம்பிய கரும்புகை வான மண்டலம் வரையில் சென்று, உதய சந்திரனையே கருந்திரையினால் மறைக்க முயன்றது.

     தஞ்சை மன்னர் மாறன் முத்தரையர் கொடும்பாளூர் மீது படையெடுக்கத் துணிந்ததற்கு முக்கிய காரணம், பல்லவ சைனியம் தாராளமாக உதவிக்கு வருகிறது என்று தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் உறுதியாகச் சொன்னதுதான். பல்லவ சைனியத்தின் உதவியில்லா விட்டால் கொடும்பாளூர்க் கோட்டையை முற்றுகையிடுவது பகற் கனவாகி விடும் என்பது முத்தரையருக்கு நன்கு தெரிந்ததுதான். கொடும்பாளூர்க் கோட்டையை முற்றுகையிட்ட பெருமை தமக்குக் கிடைக்க வேண்டும் என்னும் அற்ப ஆசை வெகு நாட்களாக முத்தரையருக்கு உண்டு. முத்தரையர் உள்ளத்தில் இந்த ஆசை விழுந்ததற்கு மற்றொரு காரணம் அவர் மகன் இளந்திரையன் உள்ளத்தில் கொடும்பாளூர் இளவரசி அனுபமாவிடம் அத்தியந்த பிரேமைத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததுதான்.

     இளந்திரையன் உள்ளத்தில் அனுபமாவுக்குத் தனி இடம் இருந்தது. அவளைத் தான் மணந்து கொள்ள வேண்டுமானால் அவளுக்கும் தன்னை மணந்து கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டுமே என்னும் ஒரு சாதாரண உண்மை அந்த மந்த மதியினனுக்குத் தெரியாமல் இருந்தது தான் அதிசயம்.

     போர்க்கோலம் கொண்டிருந்த முத்தரையர் மகன், இளந்திரையன் அடிக்கடி வாளை உருவுவதும் மீண்டும் உறையில் இடுவதுமாக இருந்தான். திடீரென்று உறுவிய வாளைச் சுழற்றி எதிரிகளை மாய்ப்பதுபோல் உறுமிப் பாய்வான். மறுகணம் எதிரிகளைக் கண்டு பயந்தவன் போல் மருண்டு வாளைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடிப்பான்.

     இம்மாதிரி தருணத்தில், குதிரைக் குளம்பொலி ‘டக் டக் டக் டக்’ என்று கேட்டது. வீரர்கள் யாவரும் பல்லவ சைன்யம் உதவிக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்தார்கள். உடனே அவர்களிடையே ஒரு உற்சாகம் காணப்பட்டது. கோளாந்தகனின் நடையில் சோர்வு நீங்கி ஒரு பரபரப்பு ஏற்பட்டது. உடைகளை ஒரு முறைக்குப் பல முறைகள் சரி செய்து கொண்டு விம்மித நடை போட்டான். ஆனால் ஒரே ஒரு குதிரை தான் வெகு வேகமாக வந்தது. சிம்மக் கொடியுடன் வந்ததிலிருந்து பல்லவ வீரன் என்று தெரிந்தது.

     அவன் நேரே சேனாபதி கோளாந்தகனிடம் சென்று குதிரையை விட்டு இறங்கி மிகவும் மரியாதையுடன் ஒரு ஓலையை அவனிடம் கொடுத்தான். தீவர்த்திகளின் ஒலியில் அந்த ஓலையை வாங்கிப் படித்த கோளாந்தகன் முகம் வெளிறியது.

     உடனே இளந்திரையனும் மற்ற வீரர்களும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

     “வீரர்களே! பெரிய ஏமாற்றத்தில் நாம் இப்பொழுது சிக்கிக் கொண்டிருக்கிறோம். பல்லவ சைன்யம் நமக்கு உதவிப் படையாக வரவில்லை. பல்லவ சக்கரவர்த்தி பழையாறை சென்று விஜயனுக்கு முடிசூட்டி வைக்க இசைந்து விட்டாராம்” என்று பலத்த குரலில் கோளாந்தகன் கூறினான்.

     உடனே சேனை வீரர்களிடையே மாபெரும் ஆரவாரம் எழுந்தது. வீர வாசகங்களைப் பேசி வீர நடை போட்டுக் கொண்டு வந்த வீரர்கள் அனைவரும் சோர்ந்து விட்டனர்.

     “வீரர்களே! நாம் இப்பொழுதே, இரவுக்கு இரவே நம் தலைநகரை நோக்கிச் சென்று விட வேண்டியதுதான். பல்லவர் படை நமக்கு உதவிக்கு வராததுடன், பல்லவ சக்கரவர்த்தி விஜயனுக்குப் பட்டம் சூட்டி வைக்க இசைந்திருக்கிறார் என்பது நமக்கெல்லாம் அதிர்ச்சி தரும் செய்தி. பொழுது விடிந்த பின்பு நாம் புறப்பட்டோமானால், எதிரிகளை நினைத்து, பயந்து பின்வாங்குவதாக மக்கள் நினைத்து விடக்கூடும். அதற்கு நாம் இடங் கொடுக்கக் கூடாது. உடனே சந்தடி செய்யாமல் புறப்பட்டு விட வேண்டும்” என்று சேனாபதி கோளாந்தகன் கூறவே சேனை வீரர்கள் அனைவரும் உடனே புறப்படுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலாயினர்.

     அடிக்கப்பட்ட கூடாரங்கள் துரித கதியில் பிரிக்கப்பட்டன; களைத்துப் போய் இளைப்பாறிக் கொண்டிருந்த குதிரைகளுக்குச் சேணங்களைப் பூட்டி வீரர்கள் புறப்படலானார்கள்.

     அசைந்தாடிக் கொண்டு புல்லையும் தழையையும் தின்று கொண்டிருந்த யானைகளை அவற்றின் பாகர்கள் உசுப்பி விட்டுக் கொண்டிருந்தனர்.

     இந்தச் சமயத்தில், வெகு வேகமாக ஒரு குதிரை வீரன் அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்ட சேனாபதி கோளாந்தகன், பரபரப்புடன் அவனிடம் சென்றான்.

     “சேனாபதியவர்களே! மதுரையிலிருந்து பாண்டியர் சைன்யம் கொடும்பாளூருக்கு உதவிப் படையாகச் செல்கிறது. இந்தச் செய்தி நம் அந்தரங்க வேவுக்காரர்களின் மூலம் எனக்குக் கிடைத்தது. அது பெரிய சைன்யமாம்...!” என்று கூறினான் அக் குதிரை வீரன்.

     “அப்படியானால் நாம் பின்வாங்கச் சிறிதும் தயங்கக் கூடாது. இனித் தஞ்சை மண்ணை மிதித்த பிறகுதான் மற்ற யோசனைகளெல்லாம்!” என்று கூறிவிட்டு, சேனை வீரர்களைச் சீக்கிரம் புறப்படும்படி கட்டளையிட்டான்.

     சிறிது நேரத்துக்கெல்லாம் வீரர்கள் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டனர்.

     இரவு வேளையில் நிலவொளியில், யானைகளும், குதிரைகளும், வாளேந்திய வீரர்களும் சென்றது ஏதோ கனவு உலகத்தில் நிகழும் காட்சியைப் போல் தோற்றமளித்தது.