மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 24 - திருபுவனியின் திருமணம்

     நந்திபுர நகரம் மிகவும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்துக் காவலரான பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகை தேவேந்திர சபையைப் போல் தோற்றம் அளித்தது. வீதிகளெல்லாம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு நகரம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது.

     இடங்காக்கப் பிறந்தாரின் அருமை மகள் திருபுவனிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்னும் செய்தி நகர மக்களை யெல்லாம் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. பல வருஷங்களுக்கு முன்பு கள்வர்களால் அபகரிக்கப்பட்டு எங்கோ மறைவாக வைக்கப்பட்டிருந்த திருபுவனி இப்பொழுது தன் பிறந்த நாட்டுக்குத் திரும்பி வந்து விட்டாள் என்பதனால் மக்களுக்கு விசேஷ மகிழ்ச்சி உண்டாயிருந்தது.

     பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையில் பல தேசத்துப் பிரமுகர்களும் வீரர்களும் ஏராளமாகக் குழுமியிருந்தனர். சேனைத் தலைவர்களும், குறுநில மன்னர்களும், பல ராஜ்யங்களிலிருந்து வந்திருந்த ராஜப் பிரதிநிதிகளும் அவரவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த விடுதிகளில் சௌகரியமாகத் தங்கியிருந்தனர்.

     பலவித மங்கள வாத்தியங்கள் ஒலிக்க விவாக முகூர்த்தம் ஆரம்பமாகியது. சுகேசி என்ற திருபுவனிக்கும் கங்கநாட்டு அரசன் பிருதிவீபதிக்கும் அமோகமாக விவாகம் நடந்தேறியது. விவாக மண்டபத்தில் மணத் தவிசுக்கருகில் நின்று மனப்பூர்வமாக ஆசி கூறியவர்களில் பூதுகன் முன்னணியில் இருந்தான். பட்டாடை புனைந்து பீதாம்பரம் போர்த்திக் கொண்டு பூதுகன் திவ்விய சுந்தர ரூபனாகத் திகழ்ந்தான்.

     அமுழ்தொழுகும் அழகுத் தமிழில் இயற்றப்பட்ட திருமண வாழ்த்துக்கள் தங்கத் தகடுகளில் பொறிக்கப்பட்டு ஏராளமாக வந்து குவிந்திருந்தன.

     முத்து விதானத்தில் விசேஷ அலங்காரங்களுடன் அமைக்கப்பட்ட மணத்தவிசில் சுகேசியும் பிருதிவீபதியும், இந்திராணியையும் தேவேந்திரனையும் போல் அமர்ந்திருந்தனர். அங்கே ஒரு தனி ஆசனத்தில் ஜைன முனிவர் அரிஷ்டநேமி அமர்ந்திருந்தார். இன்னொருபுறம் குடந்தைச் சோதிடர் சந்தகரும் காஞ்சீபுரத்து விருந்தினர் விடுதிக் காவலனும் அமர்ந்திருந்தனர். கொடும்பாளூர் மன்னன் ஆதித்தனும் அவன் தம்பி பராந்தகனும் அமர்ந்திருந்தனர். கங்க நாட்டு மந்திரிமார்களும் படைத் தலைவர்களும் மரியாதைக்கு உரிய பெருந் தரத்து அதிகாரிகளும் வந்திருந்தனர்.

     விதம் விதமான வண்ணச் சேலைகளை யணிந்து கொண்டு கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்த பெண்கள் மணப் பந்தலில் வான வில்லின் வர்ண ஜாலங்களை எழுப்பினர். அவர்கள் கூந்தலை அலங்கரித்த வண்ண மலர்களின் நறுமணம் அகிற் புகையின் மணத்துடன் கலந்து கமழ்ந்தது.

     பெண்கள் பகுதியில் வைகைமாலையும் சுதமதியும் புத்தாடையணிந்து மிகவும் உற்சாகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையில் பிக்ஷுணிக் கோலத்தில் மாலவல்லி அமர்ந்திருந்தாள்.

     மலர் மாரி பொழிய மணவினை முடிந்ததும், இடங்காக்கப் பிறந்தாரின் மகன் பொற்கோமன் எழுந்திருந்து பேசலானான்:

     “பெரியோர்களே! இந்த விவாகம் இவ்வளவு மகிழ்ச்சிக்கு இடையில் சுபமாக நடைபெறும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வெற்றிவேற் பெருமான் அருளாலும் பெரியோர்களின் ஆசியாலும் நன்கு நடைபெற்றது. என் அருமைத் தங்கை திருபுவனியை நாங்கள் சின்னஞ் சிறு வயதில் உயிருடன் இழந்து விட்டது நம் நகர மக்களுக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால் அந்த இளம் வயதில், திருபுவனி எங்கே சென்றாள், எத்தகைய விபத்துக்குள்ளானாள், அவளைக் காப்பாற்றியது யார் என்னும் விவரங்களெல்லாம் யாருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை. என் அருமைத் தங்கை திருபுவனியை, பங்கரக் காபாலிகர்களிடமிருந்து காப்பாற்றித் தமது சொந்த மகளைப் போல் பேரன்புடன் வளர்த்த பெருந்தகையாளர் இதோ இங்கே வீற்றிருக்கிறார். இவரது திருநாமம் அரிஷ்டநேமி முனிவர். தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரான இம் முனிபுங்கவருக்கு என் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என் தங்கை திருபுவனிக்கு முனிவர் இட்ட பெயர் சுகேசி. இனி அந்தப் பெயரும் இவளுக்கு உகந்த பெயராக விளங்கும். என் தங்கை பூர்வஜன்ம வினைக்கீடாகச் சில ஆண்டுகள் பெற்றோரையும் உற்றாரையும் விட்டுப் பிரிந்து கானகத்தில் வாழ நேர்ந்தாலும் முருகப் பெருமான் அருள் அவளுக்குப் பூரணமாக இருந்திருக்கிறது. இல்லையென்றால் ஜைன முனிவரின் பாதுகாப்பில் வளர்ந்த அவளைக் கங்கநாட்டு இளவரசர் பிருதிவீபதி சந்தித்திருக்க மாட்டார். அப்படி அவர் சந்தித்திருந்தாலும் அவரிடம் அவளை ஒப்புவிக்கும் எண்ணம் இந்த ஜைன முனிவருக்கு ஒருபாலும் ஏற்பட்டிராது. பாத்திரமறிந்து அவர் செய்த அந்தக் காரியம் இன்று மங்கள மணவினையாகப் பரிணமித்து விட்டது...!” என்று கூறிப் பொற்கோமன் சிறிது நிறுத்தினான்.

     இதுவரையில் மௌனமாக யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பூதுகன், “ஐயா! தயவு செய்து, உங்கள் தங்கை திருபுவனியைத் தேடி மீட்டுவரச் சென்ற இடத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளையும் அப்பொழுது எதிர்பாராத விதத்தில் புத்த சேதியத்தில் நேர்ந்து விட்ட ரவிதாஸன் கொலையைப் பற்றிய விவரங்களையும் எடுத்துச் சொல்லுங்கள். முக்கியமாக, வைகைமாலையின் உயிர்த் தோழியான மாலவல்லியின் மனம் நிம்மதியடையும்...!” என்று கூறி விட்டுப் பூதுகன் சற்றுத் தூரத்தில் அடக்கமே உருவாக அமர்ந்திருந்த மாலவல்லியையும், மற்றொரு புறம் குதூகலத்துடன் அவனை விரிந்த நயனங்களினால் விழுங்க முயன்று கொண்டிருந்த வைகைமாலையையும் பார்த்தான்.

     சபையில் பரிபூரண மௌனம் நிலவியது. சபையிலுள்ள பிரமுகர்களும், அயல்நாட்டுத் தூதர்களும், நகர மக்களும் மிகவும் ஆர்வத்துடன் பொற்கோமன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லோரையும் விட மாலவல்லியின் முகத்தில் பொங்கிய ஆர்வம் கட்டுக்கு அடங்காததாக இருந்தது.

     “சபையோர்களே! நண்பர் பூதுகர் கேட்ட விஷயம் மிகவும் முக்கியமானது. நான் என் தங்கை திருபுவனியைத் தேடிக் கொண்டு ஊரூராக அலைந்தேன். அச்சமயம் பூம்புகார் புத்த சேதியத்தில் என் தங்கையைக் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் பார்த்தேன். பிக்ஷுணி உடையில் அவள் இருந்தாலும் அவளை நான் எளிதில் கண்டு கொண்டேன். உடனே அவளைத் தூக்கிக் கொண்டு செல்ல முற்பட்ட எனக்கு ஒரு பிக்ஷுவுடன் கடும் போர் புரிய நேரிட்டது. அவன் புலன்களையடக்கி, புனித மூர்த்தியான புத்தர் பிரானின் அடியவன் மட்டுமல்ல, போர் முறைகளை நன்கு அறிந்த நிபுணனும் கூட என்பது அவனுடன் போரிட ஆரம்பித்த சிறிது நேரத்தில் விளங்கி விட்டது. கடைசியில் வேறு வழியில்லாமல் அவனைக் கொல்ல நேரிட்டது. அவன் தான் ரவிதாசன். நான் என் தங்கையெனக் கருதிக் கொண்டு போன பெண் தான் மாலவல்லி. மாலவல்லிக்கும் திருபுவனிக்கும் விதிவசத்தால் ஏற்பட்ட உருவ ஒற்றுமையினால் நேர்ந்த விபரீதம் அது.

     “மாலவல்லி நந்திபுர நகரத்துக்குக் கொண்டு வரப்பட்டு அரண்மனையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டு விடவே, அவளுக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பு கற்பிக்கச் சௌகரியமாகப் போய்விட்டது. நிரபராதியாகிய அவளைச் சிறைப்படுத்திக் கொடுமைப்படுத்த நேர்ந்ததற்கு அவளிடம் இந்த மாபெரும் சபையில் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன்” என்று பொற்கோமன் உணர்ச்சியோடு பேசி முடித்ததும், சபையோர் அளவு கடந்த ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார்கள்.

     இதுகாறும் புகையுண்ட ஓவியம் போலவும், தடாகத்திலிருந்து பறித்து எறியப்பட்ட தாமரையைப் போலவும் பொலிவிழந்து கிடந்த மாலவல்லியின் முகத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டாயிற்று. மாசு நீங்கிய மதியைப் போல் பிரகாசித்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பிரவாகமெடுத்தது. உடனே வைகைமாலை எழுந்து ஓடிச் சென்று மாலவல்லியைத் தழுவிக் கொண்டாள்.

     சபையிலுள்ளோர் மந்திர அட்சதை தூவி ஆசி கூற, பிருதிவீபதிக்கும் சுகேசிக்கும் திருமணம் பூர்த்தியாயிற்று.

     ஆசி கூறிய பெருமக்கள் வரிசையில் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார், மதுரை அமைச்சர் அருண்மொழியார் முதலியவர்களும், பல்லவ சேனாபதி உதயசந்திரனும், புலிப்பள்ளியார் மகன் கோளாந்தகன் முதலியோரும் அமர்ந்திருந்தனர்.

     அரசவைக்குரிய ஆடம்பரங்களுடன் வீற்றிருந்த பிரமுகர்களையெல்லாம் மிகவும் மரியாதையுடன் வரவேற்றுப் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் உபசரித்துக் கொண்டிருந்தார்.

     பெண்கள் அமர்ந்திருந்த பகுதியில் இளம் பெண்களின் கிண்கிணிச் சிரிப்பொலியும், இன்பப் பேச்சும் கேட்டுக் கொண்டிருந்தன. அவர்களுக்கு இடையில் அழகின் பிரதிபிம்பமாகத் தேனார்மொழியாள் அமர்ந்திருந்தாள். நொடிக்கொருதரம் பூதுகனது கம்பீரமான தோற்றத்தைக் கடைக்கண்ணால் பார்த்துப் புளகாங்கித மடைந்தவண்ணம் இருந்த அவளுக்கு இந்த உலகத்து நினைப்பே இல்லை.

     ஜைன முனிவர் அரிஷ்டநேமி எழுந்து எல்லோருக்கும் ஆசி கூறினார். அருக பரமேஷ்டியின் திவ்ய நாமங்களைக் கூறிப் பிருதிவீபதியையும், அவன் அருகில் பூங்கொடி போல் துவண்டு பூரிப்புடன் இருந்த மணப்பெண் சுகேசியையும் ஆசீர்வாதம் செய்தார்.

     “மகாஜனங்களே! மன்னர்களே! இன்று மணக்கோலத்தில் வீற்றிருக்கும் சுகேசி என் தவ வாழ்க்கையில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டாள்.

     ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு.’

     என்ற வான்புகழ் வள்ளுவர் வாசகத்தை இப்பேதைப் பெண் தவமே பெரிதென நினைத்து வாழ்ந்த என் உள்ளத்தில் அழுத்தமாகச் செதுக்கி வைத்தாள்.

     “சுகேசிக்கு வயது வளர்ந்தது. வனப்பும் போட்டியிட்டுக் கொண்டு வளர்ந்தது; என் கவலையும் கூடவே வளர்ந்தது.

     “தற்செயலாக நான் வசிக்கும் பிறதேசத்துக்கு வர நேர்ந்த பிருதிவீபதி இவளைப் பிடித்துச் செல்ல முயன்ற கள்ள பிக்ஷு கலங்கமாலரையரிடமிருந்தும், நந்திபுர நகரத்து வீரர்களிடமிருந்தும் இவளைக் காப்பாற்றி என்னிடம் ஒப்படைத்தான். பிருதிவீபதி தன்னைக் கங்கநாட்டு அதிபதியென்று உண்மையாக அறிமுகம் செய்து கொள்ளாவிட்டாலும் நான் அவனது கம்பீரமான தோற்றத்திலிருந்தும் பயமற்ற பேச்சிலிருந்தும் அவன் ஒரு நாட்டுக்கு அதிபதி என்பதைத் தீர்மானித்து விட்டேன். அது மட்டுமல்ல, சுகேசிக்கும் அவன் தான் அதிபதி என்று மனத்துக்குள் நிச்சயம் செய்து விட்டேன். இதன் பிறகு சில காலம் பிருதிவீபதியைச் சந்திக்க முடியாமல் பலவிதமான குழப்பங்கள் நேர்ந்தன. அந்தச் சமயத்தில் தான் நான் இருந்த ஆசிரமத்துக்கு மாலவல்லி வந்து சேர்ந்தாள். இளவரசர் பொற்கோமன் வந்து இருவரையும் அழைத்துச் சென்றார். இனிமேல் என் பொறுப்பு முடிந்தது. மணமக்கள் அன்பும் அஹிம்சையும் உள்ள மட்டும் வாழ்ந்திருக்கட்டும்!” என்று கூறிவிட்டு அரிஷ்டநேமி தம் இடத்தில் அமர்ந்தார்.

     சுகேசியும் பிருதிவீபதியும் அரிஷ்டநேமி முனிவரின் பாதங்களில் தலைகுனிந்து வணங்கினர்.

     சுகேசியின் கரிய பெரிய விழிகளிலிருந்து பொலபொலவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின.

     அறிவிலும் அன்பிலும் சிறந்த அரிஷ்டநேமி அவளைக் கனிவோடு பார்த்தார். அவரது விழிக்கடைகளிலும் கண்ணீர்த் துளிகள் கடலில் பிறந்த நன்முத்துப் போல் சுடர்விட்டன. இந்த அரிய காட்சியைக் கண்ட சபையோர் அனைவரும் மனம் உருகி விட்டனர்.

     “குழந்தாய் சுகேசி! நீ புத்திசாலி. உனக்கு நான் புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை. ஒரு கன்னிகை கண் நிறைந்த கணவனை அடைவதுதான் பாக்கியம். கணவன் தான் அவளுக்கு உலகம், உற்றார், உறவினர் எல்லாம்” என்று கூறி எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் முனிவர் அரிஷ்டநேமி.

     கல்யாண விருந்து முடிந்து விருந்தினர் எல்லாரும் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர்.

     பால் நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. அந்த இரவையும், இன்ப நிலவையும், மெல்லென வீசும் மந்தமாருதத்தையும், நகரம் முழுவதும் அமர்க்களமாக்கிக் கொண்டிருந்த திருமண வைபவத்தையும் மறந்து, இடங்காக்கப் பிறந்தார் மாளிகையின் வேயா மாடத்தில் சுகேசியும் பிருதிவீபதியும் அமர்ந்திருந்தனர்.

     “சுகேசி! உன்னை நினைத்தால் என் மனம் கலங்குகிறது. உனக்கு ஏற்ற மணவாளன் நான் அல்ல. கள்ளமறியாத உள்ளம் படைத்த கனகமணி விளக்கு நீ; கைகூடாத காதல் என்னும் புயலில் சிக்கி, வழி தெரியாமல் அலையும் அதிர்ஷ்ட ஹீனன் நான்” என்று பிருதிவீபதி கனிவும் கசிவும் கலந்த குரலில் சொன்னான்.

     “பிரபூ! நான் மகா பாவி. இதயம் ஒன்றிய காதலர்களுக்குக் குறுக்கே முளைத்த காளான். மாலவல்லி உண்மையை என்னிடம் அப்பொழுதே மறைக்காமல் இருந்திருந்தால், இந்தத் தவறு நேர்ந்திருக்காது. கன்னிப் பருவத்தில் நான் முதன் முதல் கண்ட கட்டழகர் தாங்கள் தான். கானக வாழ்வில் வானுலகையே கண்டு வஞ்சமறியாது வாழ்ந்தவள் நான். என்னைப் பெற்றவர்கள் யாரென்று தெரியாமல் முனிவர் ஆசிரமத்தில் வாழ்ந்தேன். பிறகு தாங்கள் என் உள்ளத்தில் புகுந்து சலனம் விளைவித்தீர்கள். அந்த இன்ப அனுபவத்தின் எல்லையில் நான் அரச வம்சத்தைச் சேர்ந்தவள் என்னும் உண்மை தெரிய வந்ததும், மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன். கடைசியில் நான் தங்களுக்கு உரிமைப் பொருளாகப் போகிறேன் என்று தெரிந்ததும் என் உள்ளம் கரைகடந்த உற்சாகத்தில் மிதந்தது.

     “தங்களை முதன் முதல் கண்டதுமல்லாமல், என்னைப் பிடித்துக் கொண்டு போக வந்திருந்த முரட்டு மனிதர்களிடமிருந்து என்னை மீட்க வந்த தங்களது அன்புக்கர ஸ்பரிசமும் கிடைக்கப் பெற்றேன். அருணனைக் கண்ட அரவிந்த மலர் போல் இனம் தெரியாத இன்பத்தில் மலர்ந்தேன். அப்பொழுது முதல் என்னை மறந்தேன். பார்க்கும் பொருள்களிலெல்லாம் தங்களையே பார்த்தேன்; கனவிலும் உங்களையே கண்டேன்...” என்று கூறும் போதே சுகேசிக்குத் தொண்டையை அடைத்தது.

     பிருதிவீபதி சுகேசியை அன்போடு அணைத்துக் கொண்டு, “சுகேசி! வருந்தாதே. உன் உள்ளம் என்னை நாடியதில் ஒரு தவறும் இல்லை. மாலவல்லியின் இன்ப வாழ்வில் உனக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதா, சுகேசி?” என்று கேட்டான்.

     “பிரபூ, ஆணையிட்டுச் சொல்ல வேண்டுமா? இவ்வடியாள் பொய்சொல்லி அறியாதவள். மாலவல்லியின் வாழ்வு மலருவதற்காக நான் எத்தகைய தியாகத்தையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். என் இன்ப வாழ்வையே துறக்க வேண்டுமென்றாலும் சரிதான்!” என்று சுகேசி தலைநிமிர்ந்து சொன்னாள்.

     அவளுடைய தேகமெல்லாம் புளகம் உண்டாகிப் பூரித்தது. முழுமதியை நிகர்த்த அவள் வதனம் முழுச் சோபையுடன் பிரகாசித்தது. விசாலமான அவளது நயனங்கள் பிருதிவீபதியின் கம்பீரமான வதனத்தில் மயங்கி நின்றன.

     “பிரபூ! தாங்கள் என் கணவர்! கடவுள்; அரசர். இப்பொழுது அரசராக இருந்து, மாலவல்லிக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள். தங்கள் கட்டளையை நான் நிறைவேற்றத் தவறினால் என்னைத் தங்கள் கைவாளுக்கு...” என்று சுகேசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிருதிவீபதி மாதுள மலரை நிகர்த்த அவளது வாயைப் பொத்தினான்.

     “அன்பே, சுகேசி! உன் அன்பின் ஆழத்தைச் சோதித்தேன். உன் வாள் விழிகள் என் கை வாளை எப்பொழுதோ மழுங்கச் செய்து விட்டன. உனக்குக் கட்டளையிடும் சக்தி எனக்கு இல்லை. நீ மாசற்ற மாணிக்கம்! உன்னை மனைவியாக அடைந்த நான் உண்மையில் பாக்கியசாலி!”

     “பிரபூ, மாலவல்லிக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தாங்கள் சொல்லவில்லையே?”

     “சுகேசி! நீ அவளுக்காக எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன் என்று சொல்லிவிட்டாய். அதைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன். நாளை உனக்கு ஓர் அதிசயச் செய்தி காத்திருக்கும். இப்பொழுதே அதைப்பற்றிப் பேசி, இந்த இன்பம் நிறைந்த வேளையை வீணாக்க வேண்டாம்.”

     “பிரபூ! என்னிடம் தங்களுக்கு நம்பிக்கை யில்லையா? ஏதோ புதிர் போடுகிற மாதிரி பேசுகிறீர்களே! இந்த வெண்மதியும் அதன் தண்ணிலவும், உங்களுக்கே அடிமையாகி விட்ட அடியாளும் எங்கே போய்விடப் போகிறோம்? மாலவல்லியின் வாழ்வை மலரச் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?”

     “சுகேசி! இரவும், இளந் தென்றலும், இளமதியும், இன்ப உணர்ச்சியும் எங்கும் போய்விட மாட்டா என்றாலும், அவை எப்பொழுதும் யாரையும் கிறங்க வைப்பதில்லை. வானத்தில் கூடும் கார்மேகம் எப்பொழுதும் மழையைப் பொழிவதில்லை. நாம் வேண்டுமென்று விரும்பிய போதெல்லாம் தென்றலை வரவழைத்துக் கொள்ள முடியாது...!”

     பிருதிவீபதி இப்படிக் கூறி முடித்ததும் வானவீதியில் வெண்முகிற் கூட்டங்கள் சந்திரனை இலேசாக மறைத்தன.

     நிலா மலர்ந்த அன்றைய இரவு அவர்கள் இருவருக்கும் வீணாகப் போய்விடவில்லை.