மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 25 - வாழ்க விஜயாலயன்!

     சீர்குலைந்து போன சோழ ராஜ்யம் நீண்ட காலத்துக்குப் பிறகு இன்று மீண்டும் பூரணப் பொலிவுடன் விளங்கியது. உற்சாகமற்று ஓய்ந்து பாழாகிக் கிடந்த பழையாறை நகர் வீதிகளெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்தன. மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் சாதாரண சிறுசிறு இல்லங்களும் பால் வண்ணச் சுதை தீட்டப்பட்டு இந்திரலோகமாகக் காட்சியளித்தன. தேவாலயங்களும், அவைகளைச் சேர்ந்த மண்டபங்களும், வேத பாடசாலைகளும், யாக சாலைகளும், செம்மண் பட்டையும் சுதைப்பட்டையும் தீட்டப்பட்டு மங்களகரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

     ஆடவர்கள் புத்தாடைகளைப் புனைந்து கூட்டம் கூட்டமாகப் பழையாறை வீதிகளில் குதூகலத்துடன் வளைய வந்தனர். பொங்கிப் பிரவாகமெடுக்கும் புதுப்புனல் போல் சோழ நாட்டு மக்களின் கூட்டமும், கொடும்பாளூர், காஞ்சீபுரம், கொங்கு நாடு, பாண்டிய நாடு, வேங்கி நாடு முதலிய பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த மக்கட் கூட்டமும் தெருக்களிலும், வீதிகளிலும் நேரம் செல்லச் செல்லப் பெருகிக் கொண்டிருந்தது.

     காவிரிப் படுகையின் செழுமையில் கொழுகொழுவென்று வளர்ந்து அசைந்தாடும் பூங்கொடிகளைப் போல் தோற்றமளித்த சோழ நாட்டு இளம் பெண்கள் கிண்கிணி நாதத்துடன் சிரித்து, அமுதொழுகும் அழகுத் தமிழில் பைங்கிளியைப் போல் மொழிந்தனர். அவர்கள் கூந்தலில் அணிந்திருந்த மல்லிகை, முல்லை முதலிய மலர்களின் நறுமணம் கம்மென்று ஊர் முழுவதும் பரவியது. கன்னிப் பெண்களின் முல்லைச் சிரிப்பு அவர்களின் காதலர்களை யெல்லாம் கிறங்க வைத்தது.

     சோழ நாட்டின் பழம் பெரும் நகரமான பழையாறை நகர் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

     ராஜ வீதிகளில் உயர் சாதிப் புரவிகளும், மத்தகஜங்களும் மகோன்னதமாக அலங்கரிக்கப்பட்டு அணி அணியாக அலங்கார நடை போட்டன.

     தேவாலயங்களில் நடக்கும் ஆராதனை காலத்து மணியோசையும், வீதிகளில் வீறு நடை போடும் யானைகளின் மணியோசையும் நகரம் முழுவதும் நிரம்பிக் கணகணவென்று எதிரொலித்தன.

     சோழ அரசை அமைக்க வொட்டாமல் ஒரு எதிர்ப்புக் குழு மிகவும் பலமாக அமைந்திருக்கிறது என்றும், அது பலமான சதிச் செயல்களைப் புரிந்து வருகிறது என்றும், மேற்படி சதிச் செயல்களின் காரணமாக மாபெரும் போர் நிகழக் கூடும் என்றும் கேள்வியுற்றுச் சோழ நாட்டு மக்கள் பெரிதும் கலவரமடைந்திருந்தனர். யுத்தம் வருகிறதே என்று அவர்கள் பீதியடைந்து அதனால் கோழையாகி விடவில்லை. தன்னிகரற்று விளங்கிய பல்லவ சக்கரவர்த்தியின் பகை ஏற்படுகிறதே என்று தான் மனம் கலங்கினார்கள். சோழ நாட்டை ஆள வேண்டிய விஜயனுக்கு இந்தப் போரில் வெற்றி கிட்ட வேண்டும் என்று இறைவனைச் சதா பிரார்த்தித்தனர்.

     தஞ்சை முத்தரையர் படை கொடும்பாளூரை நோக்கிச் செல்லுகிறது என்பதும் அதற்குத் துணையாக மாபெரும் பல்லவ சைன்யமும் சேர்ந்து கொள்ளப் போகிறது என்பதும் பழையாறை நகரை எட்டி அந்நாட்டு மக்கள் உள்ளங்களில் வீர உணர்ச்சியை உண்டாக்கியிருந்தன. யுத்தம் பழையாறைக்கு வரலாம் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். கடைசியில் யுத்தம் நின்று விடவே எல்லோருக்கும் ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆயினும், விஜயனுக்குப் பட்டாபிஷேகமும் திருமணமும் நடக்கப் போகின்றன என்னும் செய்தி அவர்களது கொதிப்பை அடக்கிக் குதூகலத்தில் ஆழ்த்தியது.

     அரண்மனைச் சபா மண்டபம் தோரணங்களாலும், மலர் மாலைகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல தேசத்து மன்னர்கள் சபா மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தனர். சபா மண்டபத்தின் முன் வாசலில், தமிழகத்தின் தனிப்பெரும் மங்கல வாத்தியமான நாதசுரம் இன்னிசையைப் பரப்பிக் கொண்டிருந்தது.

     பட்டாபிஷேகத்துக்குரிய வேளை நெருங்கி விட்டது என்பது அங்கு நடந்த பரபரப்பான காரியங்களிலிருந்து நன்கு தெரிய வந்தது.

     “ஜய விஜயீபவ!” என்று மறை பயின்ற மறையவர்கள் ஆசி கூற, மங்கல வாத்தியங்கள் முழங்க, “வெற்றிவேல்! வீரவேல்!” என்று ஆயிரம் ஆயிரம் வீரர்களின் கண்டங்கள் ஒலிக்க, நாட்டு மக்களெல்லாம் “வாழ்க! வாழ்க!” என்று ஏக காலத்தில் கூற விஜயாலயச் சோழனின் முடிசூட்டு விழா இனிது நடந்தது.

     முடிசூட்டு விழாவும் சோழ அரசனின் திருமண விழாவும் சேர்ந்து கொண்டமையினால் மக்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

     இரவு அரண்மனை நடன மண்டபத்தில் கலா ரஸிகர்களும், இசை வல்லுநர்களும், தாள வாத்திய நிபுணர்களும் ஏராளமாக வந்து குழுமியிருந்தனர்.

     சோழ ராஜாக்கள் பரம்பரையாக வீற்றிருந்து தனிப்பெருமை தந்த சிம்மாசனத்தில் விஜயனும் தேவி அநுபமாவும் கண்ணைப் பறிக்கும் ஆடையாபரணங்களுடன் அமர்ந்திருந்தனர். விஜயன் நவமணி பதித்த கிரீடம் புனைந்து, ஆர, கேயூர, கடக கங்கணங்கள் அணிந்து பசும் பொன்னாடை உடுத்துக் கம்பீரமான தோற்றத்துடன் விளங்கினான். எழிலரசியான அநுபமா, தெய்வ மகளின் இணையற்ற வனப்புடன், அழகுக்கு அழகு செய்யும் அணிகலன்களுடன் விஜயனுக்கு அருகில் நாணத்தினால் முகம் சிவக்க அமர்ந்திருந்தாள்.

     அப்பொழுது நடன உடையுடன் வைகைமாலை சபா மண்டபத்தில் பிரவேசித்தாள். தேவராஜனது சபையில் நடனம் புரியும் ஊர்வசியும் திலோத்தமையும் நாணித் தலை குனியும்படி யிருந்தது அவள் அழகிய தோற்றம்.

     மறுகணம் நடனம் ஆரம்பமாயிற்று. சுதமதி யாழை மீட்டினாள். மாலவல்லி தன் தீங்குரலெடுத்துப் பாடினாள்.

     குயிலும் கிளியும் பாட்டில் கூவின; தோகை விரித்த மயில் ஆடியது; சபையினரின் உள்ளங்களிலெல்லாம் வைகைமாலை நிறைந்து நின்றாள்; மின்னல் வெட்டும் நேரத்தில் சபா மண்டபம் தேவேந்திர சபையாக மாறியது. அருமையான அந்த நடனம் சபையோரை ஆட்கொண்டு விட்டது.

     வைகைமாலையின் முக பாவத்திலும், ஹஸ்த அபிநயங்களிலும், வெண்ணெய் திருடிய கண்ணன், வேய்ங்குழ லூதிய மாதவன், கோபியரை மயக்கிய கோபாலன், அறிதுயிலமர்ந்த அரங்கநாதன், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், வண்ண மயிலேறிய வடிவேற் பெருமான் ஆகிய எத்தனை எத்தனையோ தோற்றங்கள் தோன்றி மறைந்தன.

     இந்தத் தோற்றங்களை யெல்லாம் பூதுகன் ரசித்த விதமே அலாதியாயிருந்தது; கண் இமைக்காமல் அவன் மெய்ம் மறந்து போனான்.

     மாலவல்லியின் இனிய கண்டத்திலிருந்து அமுத கீதமாகப் பிரவாகமெடுத்த தமிழிசை யாவரையும் கிறங்கச் செய்தது.

     தேவகானமாக ஒலித்த அந்த இசை இன்பத்தில் பிருதிவீபதி தன்னை மறந்த லயத்தில் அமர்ந்திருந்தான்.

     நடனம் முடிந்து, விருந்து வைபவங்களெல்லாம் முடிந்தன.

*****

     மனோரம்மியமான மாலை வேளை. அந்தி மங்கும் தருணத்தில் அஸ்தமன சூரியன் நந்தவனத்தில் மலர்க் கொடிகளையும், பசுமை போர்த்து நெடிதுயர்ந்த மரங்களையும் தன் பொற் கிரணங்களினால் பொன் மயமாக்கிக் கொண்டிருந்தான்.

     அரண்மனை நந்தவனத்தில், வண்ண வண்ணப் பூக்களினால் மூடப்பட்ட அழகிய செய்குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்ட சந்திரகாந்தக் கல்லினாலான சுகாசனத்தில் பூதுகனும் வைகைமாலையும் அமர்ந்திருந்தனர்.

     வைகைமாலையின் கரங்களைப் பற்றிய வண்ணம் பூதுகன், “அன்பே! இன்று உன் நடனம் பிரமாதம். இதுவரையில் நீ எத்தனையோ முறை ஆடியிருக்கிறாய். நானும் ஒவ்வொரு தடவையும் மதுவுண்ட வண்டென மயங்கியிருக்கிறேன். ஆனால் இன்று நீ ஆடிய மாதிரி என்றுமே ஆடியதில்லை. இத்தனை நாட்களாக இந்த அபார வித்தையை என்னிடம் கூடக் காட்டாமல் எங்கே ஒளித்து வைத்திருந்தாய்?” என்று கேட்டான்.

     இதைக் கேட்ட வைகைமாலை நாணத்தினால் சிவந்த முகத்தோடு, “அதிகமாகப் புகழாதீர்கள். இன்று என் நடனம் தரம் உயர்ந்திருந்ததாக உங்களுக்குத் தோன்றினால் அதற்குக் காரணம் நீங்கள் தான். கார்மேகத்தைக் கண்டு தான் மயில் களிநடம் புரியும். ஆகவே மயிலின் சிறப்பான நடனத்துக்குக் கார்மேகம் தானே காரணமாகிறது? தங்கள் திருமுன் நான் எத்தனையோ தடவை ஆடியிருக்கிறேன். நேற்று உங்கள் முகத்தில் இருந்த உற்சாகமும் ஒளியும் இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை. உங்கள் உற்சாகத்துக்குக் காரணம், தாங்கள் முழு மூச்சோடு மெய்வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், பகைவர்களால் ஏற்பட்ட அவமதிப்பைப் பொருட்படுத்தாமல் உருவாக்க முயன்ற சோழ ராஜ்யம் இன்று பூரண மலர்ச்சியுடன் உருவாகி விட்டது தான். உங்கள் உள்ளத்தில் ஓடும் மகிழ்ச்சி அலைகள் என் உள்ளத்திலும் உடம்பிலும் பாய்ந்து என்னை மெய்மறக்கச் செய்து விட்டன. அதனால் தான் நேற்று என் நடனம் உங்களுக்குப் பிரமாதமாக இருந்திருக்கிறது...”

     “வைகைமாலை! நீ நடனம் பயின்றது எனக்குத் தெரியும். இத்தனை அழகாகப் பேசுவதற்கு யாரிடம் கற்றாய்?”

     “கேட்க வேண்டுமா, பிரபு! சகல கலா வல்லவராகிய தங்களிடமிருந்து தான். என்னிடம் தாங்கள் காணும் கலைகளுக்கெல்லாம் உறைவிடம் தாங்கள்தான்!”

     “நன்று, நன்று! வைகைமாலை, முன்பு ஒருமுறை, ‘கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்...?’ என்று கேட்டு என்னைத் தடுத்தாய். இனி வண்டுக்கு, மலரில் புகுந்து மதுவுண்ணத் தடையேதும் இல்லையே?”

     “வானம் பொழியும் மழையை நுகர்ந்து பயிர் வளமடைய விரும்பினால் அதை யார் தடுக்க முடியும்? மேலும் வண்ண மலரில் மதுவுண்ணப் புகும் வண்டு அந்த மலரிடம் அநுமதி கேட்பதில்லையே?”

     “இந்தப் பூதுகன் பூவையரின் பூப்போன்ற நெஞ்சை அறிந்தவன். மலரைக் கசக்கி நுகரும் மடையனல்ல...!”

     “சுவாமி! விளையாட்டு போதும். மாலை மதியமும், இந்த மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றும், அந்த மென்காற்றில் விளைகின்ற சுகமும் வீணாகின்றன. வாருங்கள், அப்படிப் போகலாம்!” என்று கூறி வைகைமாலை நெடிதுயர்ந்த பூதுகனின் வலிமையான கரங்களைப் பற்றினாள்.

     சுகேசியும் பிருதிவீபதியும் வீணையை மீட்டி அதன் கான இன்பத்தில் திளைத்து இன்ப உலகத்தில் இருந்தனர்.

     “பிரபூ! தாங்கள் கூறுவது உண்மையா? இதைத்தான் நேற்று ‘ஒரு அதிசயச் செய்தி உனக்காகக் காத்திருக்கிறது’ என்று கூறினீர்களா? மாலவல்லி இசைந்து விட்டாளா?” என்று பரபரப்புடன் கேட்டாள்.

     “சுகேசி! மாலவல்லி இசைந்து விட்ட மாதிரிதான். முதலில் நீ உன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டாயல்லவா? இதற்கு மேல் நடக்க வேண்டியவைகளை நான் முடித்து விடுகிறேன். மீண்டும் ஒரு முறை கேட்கிறேன், சுகேசி. உண்மையாகவே உனக்கு மாலவல்லியிடம் கொஞ்சங் கூடப் பொறாமையில்லையா?”

     “பிரபூ! ஏன் அந்தச் சந்தேகம் என்னிடம் தங்களுக்கு ஏற்பட்டது?”

     “சுகேசி! பெண்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் அவர்கள் உள்ளத்தில், தனக்குத் தனி உரிமையாயிருக்கும் மனைவி என்ற ஸ்தானத்தை இன்னொருத்தியிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்குத் துணிவு இருப்பதில்லை. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எந்தப் பெண்ணும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை மேற்கொள்ள மாட்டாள். அதனால் தான்...”

     “...தாங்கள் எல்லாப் பெண்களையும் போல உங்கள் சுகேசியையும் நினைத்து விட்டீர்கள். உங்கள் விருப்பம் தான் அவள் விருப்பம்...!”

     “சுகேசி! மிகவும் சந்தோஷம். இதனால் உன் மனம் புண்படுமோ என்று சிறிது வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். இனி எனக்கு எவ்விதக் கவலையும் இல்லை!”

     அந்தி மயங்கும் வேளையில் இருவரும் கைகோத்த வண்ணம் சென்றனர்.

*****

     உதய சூரியன் இன்னும் தன் பிரயாணத்தைத் தொடங்கவில்லை. ஆனால் அவன் வரப்போகிறான் என்பதற்கறிகுறியான வெளிச்சம் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. சூரியோதய காலத்துக்கு மட்டுமே உரித்தான ‘சில்’லென்ற மென்காற்று வீசி நந்தவனத்தின் மலர்க்கொடிகளையும் செடிகளையும் அசைத்தது. அசைந்த செடிகளும் கொடிகளும் அவை இதுகாறும் சுமந்து கொண்டிருந்த பனிநீரைச் சிந்தின.

     மாதவிப் பந்தலின் கீழ் கல் மேடையில் மாலவல்லியும் பிருதிவீபதியும் மௌனமாக அமர்ந்திருந்தனர். பிருதிவீபதியே அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தான்.

     “மாலவல்லி! உன் முடிவு இதுதானா? நீ முன்பு என்னிடம் வைத்திருந்த அன்பை இவ்வளவு சுலபத்தில் எப்படி மறந்தாய்? அரச பரம்பரையில் வந்தவர்கள் பல மனைவியர்களை மணந்திருக்கின்றனர் என்பது நீ அறியாததா? மேலும், சுகேசி உன் உடன் பிறந்த தங்கை மாதிரி. அவளும் நீயும் உருவ ஒற்றுமையில் சிறிதும் வேற்றுமையின்றி ஒரே மாதிரியிருப்பதனால் தானே சமீப காலத்தில் என்னென்னவோ சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. உன்னால் சுகேசியும், சுகேசியினால் நீயும் பலவிதத்திலும் சிரமங்களுக்கு ஆளாகி விட்டீர்கள். அதற்குத் தகுந்த பரிகாரம் வாழ்நாள் முழுதும் இணைபிரியாமல் ஒரே இடத்தில் வாழ்வது தான். உங்கள் இருவருடைய உருவ ஒற்றுமையின் காரணமாகத்தான் நான் கூடத் திணறிப் போனேன்.”

     “தாங்கள் சொல்லுவதெல்லாம் சரி தான். நான் தங்களிடம் கொண்டிருந்த காதலை மறக்கவில்லை. சுகேசியினிடம் எனக்குச் சிறிதும் வருத்தமில்லை. என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட இன்னல்களுக்குக் காரணம் என் அழகு. அதன் மீது எனக்குத் தாங்கொணா வெறுப்பு ஏற்பட்டு விட்டது. விரக்தியடைந்த என் உள்ளத்தில் மகா புருஷரான கௌதம புத்தரின் திருவுருவம் அடிக்கடி தோன்றுகிறது. மானிட வாழ்வின் ஆசாபாசங்கள் தான் துக்கத்துக்குக் காரணம் என்பதை அவர் எனக்கு இடைவிடாமல் அறிவுறுத்துகிறார். என் மனம் உலக வாழ்வில் விரக்தி கண்டுவிட்டது. சுட்ட மண் ஒட்டுவதில்லை; காய்ந்த மலர் தேனை உகுப்பதில்லை. இனி என் வாழ்வும் அத்தகையதுதான். அறவாழி அண்ணலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அறவாழ்வு வாழ்வதிலேயே என் மனம் ஈடுபட்டு நிற்கிறது. என்னைத் தடுக்காதீர்கள்!”

     மாலவல்லியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பெருகிப் பார்வையை மறைத்தன.

     “மாலவள்ளி! உன் இறுதித் தீர்மானம் இது தானா? உன் உள்ளம் என்னை மறக்கச் சித்தமாகி விட்டது. என்னால் முடியவில்லை. மாலவல்லி! சதா என் நினைவில் நிற்கும் உன் முகத்தை எப்படி மறப்பேன்?” என்று பிருதிவீபதி தழுதழுத்த குரலில் கேட்டான்.

     “சுவாமி! அந்த என் முகத்தைத் தாங்கள் அப்படியே சுகேசியிடம் காணலாம். போதிசத்துவரின் அருளினால் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் முக ஒற்றுமை கூட ஒரு நன்மைக்குத்தான் என்று தெரிகிறது... சரி, சூரியன் உதயமாகிவிட்டான். இனி நான் கணப் பொழுதும் இங்கிருக்க விரும்பவில்லை. எனக்கு விடைகொடுங்கள்...” என்று வணங்கினாள் மாலவல்லி.

     பிருதிவீபதி அயர்ந்து போய் நின்றான்.

     புத்தம் சரணம் கச்சாமி
     சங்கம் சரணம் கச்சாமி
     தம்மம் சரணம் கச்சாமி

     என்று மாலவல்லி கூறிய வண்ணம் கீழ்த் திசையை நோக்கித் தன் எல்லையற்ற பிரயாணத்தைத் தொடங்கினாள்.

     காலை இளம் பரிதியின் வெய்யிலில் அவளது உருவம் ஒரு ஓவியன் தீட்டிய நிழல் ஓவியம் போல் தோற்றமளித்து, வர வரச் சிறிதாகி, பார்வைக்கும் அப்பால் மறைந்து விட்டது.

(முற்றும்)