மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 3 - மனக் குழப்பம்

     பராந்தகன் குறும்பாகச் சிரித்துக் கொண்டே, “மிக்க மகிழ்ச்சி! யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இதில் என்னைக் கலந்து கொண்டு அபிப்பிராயம் சொல்வதில் என்ன இருக்கப் போகிறது...? தஞ்சை மன்னரின் குடும்பத்தில் பெண் கொடுத்து நாம் உறவு கொள்வது மிகவும் பெருமை யுடையது தான். ஆனால் ஒரு குழப்பம்...” என்றான்.

     “என்ன?” என்றார் புலிப்பள்ளியார் ஆத்திரம் மிக்கவராக.

     “இளந்திரையரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவது நானோ தமையனோ - இல்லை, அனுபமா! அவளையும் கொஞ்சம் கலந்தாலோசிக்க வேண்டும். அவள் ஒரு வீரனுக்குத்தான் மாலை இடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி நிறுத்தினான் பராந்தகன்.

     இதைக் கேட்டதும் புலிப்பள்ளியாருக்கு ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டன. “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் முத்தரையரின் புத்திரர் இளந்திரையர் வீரரல்ல என்று சொல்லுவது போலல்லவா இருக்கிறது?” என்றார்.

     “ஒரு பெரிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் தங்களுக்கு இப்படித் திடீரென்று கோபமும் ஆத்திரமும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை. அனுபமா ஒரு வீரனுக்குத்தான் மாலையிடுவேன் என்று சொல்கிறாள் என்று சொன்னேனே தவிர இளந்திரையர் ஒரு வீரரல்ல என்று நான் சொல்லவில்லை. இளந்திரையர் ஒரு வீரர் என்றோ வீரர் இல்லை என்றோ முடிவு செய்வது அனுபமாவைச் சேர்ந்தது” என்றான் பராந்தகன்.

     “இளந்திரையர் ஒரு வீரர்தான். ஆனால் அவருடைய வீரத் தன்மையை அறிவதற்கு நமக்குச் சந்தர்ப்பம் ஏற்படாததுதான் ஒரு பெரிய குறை” என்றான் ஆதித்தன்.

     புலிப்பள்ளியார் தம் மனத்தில் எழுந்த கோபத்தைச் சிறிது அடக்கிக் கொண்டவராக, “மகாவீரராகிய முத்தரைய பூபதியின் குமாரரை ஒரு வீரரா என்று நீங்கள் சந்தேகிப்பது மிகவும் வேடிக்கை. இளந்திரையரின் வீரத்தை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கா விட்டாலும் அவருடைய தந்தையாரின் வீரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் போய் விடாது. சந்தர்ப்பம் ஏற்படும் போது எங்கள் இளவரசர் இளந்திரையரின் வீரத்தையும் தாங்கள் உணராமலா இருக்கப் போகிறீர்கள்?” என்றார்.

     “சந்தர்ப்பம் கிடைத்தபோது என்று சொல்வானேன்? அதற்கான சந்தர்ப்பத்தை நாமே ஏற்பாடு செய்துவிட்டால் போகிறது...” என்றான் பராந்தகன்.

     “அதுவும் நல்ல யோசனைதான்” என்றான் ஆதித்தன்.

     “வேடிக்கையாக இருக்கிறதே! எங்கள் இளவரசரின் வீரத்தை நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்புகிறீர்களா...? இதை எங்கள் அரசர் அறிந்தால் மிகவும் வருத்தப் படுவார்...” என்றார் புலிப்பள்ளி கொண்டார்.

     “நாங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பவில்லை. அனுபமா சோதனை செய்து பார்க்க விரும்பினால்...?” என்றான் பராந்தகன்.

     “ஆம்! அவள் விருப்பம் அப்படித்தான் இருக்கும்” என்றான் ஆதித்தன்.

     புலிப்பள்ளியார் சிறிது அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “தேர்ச்சி பெறாத ஒரு சிறு பெண் வீரத்தைப் பற்றிச் சோதனை நடத்தப் போகிறாளா? அழகாய் இருக்கிறது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவள் விருப்பப்படி விவாகம் செய்வதென்றால் அப்புறம் உங்களைப் போன்றவர்களுக்குள்ள மதிப்புத்தான் என்ன?” என்றார்.

     “இதில் எங்களுடைய மதிப்புக்குக் குறைவு ஏற்பட்டு விட என்ன இருக்க்றது? ஒரு பெண்ணின் விருப்பம் சிறந்ததாக இருந்தல் அவள் விருப்பத்துக்கு ஏற்ப அவளுக்கு மணாளனைத் தேட நினைக்கிறோம். இதில் என்ன தீமை இருக்கிறது? இதில் என்ன மதிப்புக் குறைவு இருக்கிறது? ஒரு பெண்ணின் சிறந்த விருப்பங்களை அறிந்து அதற்கேற்ற முறையில் காரியம் செய்வதுதான் நம்முடைய மதிப்பை உயர்த்தும். அதிலும் மற்றக் குலத்தில் உதித்த பெண்கள் மனம் எப்படி இருப்பினும் இந்த வீரர் குலத்து உதித்த மங்கையர்களின் மன விருப்பமெல்லாம் இப்படித்தான் இருக்கும்” என்றான் பராந்தகன்.

     இதைக் கேட்டதும் புலிப்பள்ளியாருக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன. “அப்படி யென்றால் தன்னிச்சையாக இல்லாமல் குடும்பத்திலுள்ள பெரியவர்களின் அபிப்பிராயங்களுக்கு அடங்கி நடக்கும் பெண்களெல்லாம் சிறந்த வீரர்கள் குலத்தில் உதிக்காத பெண்கள் என்று அர்த்தமா?” என்றார் படபடப்போடு.

     “அமைச்சர் பெருமானுக்கு இப்படித் திடீர் திடீரென்று கோபம் வருவதுதான் எனக்கு ஆச்சர்யமா யிருக்கிறது. வீரர் குலத்தில் உதித்த பெண்ணா, இல்லையா என்பது அவர்கள் பெற்றோர்கள் இருக்கும் நிலையைப் பொறுத்தல்லவா? அனுபமா வீரர் குலத்தில் உதித்த பெண். அவள் விருப்பம் இப்படி இருக்கிறது என்று சொல்வதில் ஏதேனும் குற்றமிருக்கிறதா...?” என்றான் ஆதித்தன் சாவதானமான குரலில்.

     “பொதுவாக நான் சொல்வது ஒரே ஒரு வார்த்தைதான். பல்லவ பூபதியின் ஆலோசனைப்படியும் விருப்பப்படியும் தஞ்சை மன்னர் தங்களுடைய சகோதரியைத் தமக்கு மருமகளாக்கிக் கொள்ள விரும்புகிறார். இதை மனத்தில் எண்ணித் தங்களுக்குச் சம்மதமா இல்லையா என்று தெரிவிப்பதுதான் இப்பொழுது உசிதமானது” என்றார் புலிப்பள்ளியார் கண்டிப்பான குரலில்.

     “பல்லவ மன்னரின் விருப்பமும் அபிப்பிராயமும் அப்படி இருக்கலாம். அதற்கு எவ்வளவோ காரணங்களும் இருக்கலாம். அதில் குற்றமில்லை. ஆனால் இவ்விஷயத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய பெண்ணின் விருப்பத்தையும் அறிந்து நடப்பதுதான் சிறந்ததாகும். இடங்காக்கப் பிறந்தார் தம் மகளின் மனோநிலையை அனுசரிக்காமலேயே அவளை ஒருவனுக்கு விவாகம் செய்து கொடுக்க வாக்குறுதி அளித்தது போல் நாங்கள் வாக்குறுதி அளிக்க முடியாது” என்றான் பராந்தகன்.

     இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியைத் தம் மகன் கோளாந்தகனுக்கு விவாகம் செய்து கொடுக்க நிச்சயித்திருக்கும் விஷயம் கொடும்பாளூர் வரையில் எட்டி இருப்பதை அறிந்து புலிப்பள்ளி கொண்டார் திகைப்புற்றார். “உங்கள் வார்த்தையிலிருந்து இடங்காக்கப் பிறந்தார் தம் மகளை என் புதல்வனுக்கு விவாகம் செய்து கொடுக்கப் போவதாக வாக்களித்திருக்கும் விஷயம் தங்கள் வரையில் எட்டியிருக்கிறது என்று தெரிகிறது. அதை நானே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முன்னதாகவே தங்களுக்குத் தெரிந்ததில் மிகவும் சந்தோஷம். இடங்காக்கப் பிறந்தார் தீர ஆலோசனை செய்யாமல் இக்காரியத்தில் இறங்கி விடவில்லை. அவர் தம் மகளின் அபிப்பிராயத்தைக் கேட்கவில்லை என்பதற்காக அவரைத் தாழ்வாகப் பேசிவிட வேண்டாம். நெடுநாட்களாகக் காணாமல் போய் அகப்பட்டுக் குடும்பத்துக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு என்ன தெரியும்? அவளுடைய ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டுமென்பது அவசியமில்லை அல்லவா...?” என்றார் புலிப்பள்ளியார்.

     “அது உண்மை. நெடுநாட்கள் வரையில் குடும்பத்தாரோடு சம்பந்தமில்லாது இருந்த பெண் எப்படி இருந்தாள்? அவள் நிலையென்ன? அவள் நோக்கமென்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு காரியத்தை முடிவு செய்வதும் தவறுதான்” என்றான் ஆதித்தன்.

     “இதில் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவுமே இல்லை. முடிவு செய்த வரையில் வேறு எதுவுமே இல்லை. கள்வர்களால் அபகரிக்கப்பட்டு ஒரு இசைக் கணிகையிடம் விலைக்கு விற்கப்பட்ட அவள் அனாதையாக விடப்பட்டு புத்த பிக்ஷுணியாகி விட்டாள். அவள் மீண்டும் தன் குடும்பத்தாரோடு சேர்ந்த பிறகு முற்றிலும் மனம் மாறி இருக்கமாட்டாளா? தன் வீட்டுக்கு வந்த பிறகும் சில நாட்கள் சீவர ஆடையையே அவள் அணிந்திருந்தாளாம். ஆனால் பிறகு மனம் மாறி நல்ல ஆடை ஆபரணங்களையெல்லம் அணியத் தொடங்கி விட்டாளாம்...” என்றார்.

     “அது உண்மைதான். அவள் சீவர ஆடையைக் களைந்து பட்டாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டது உண்மைதான். ஆனால் அவளைத் தங்களுடைய புதல்வருக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதாக உத்தேசம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் அவள் பட்டாடை ஆபரணங்களைக் களைந்து விட்டு மறுபடியும் சீவர ஆடையை அணிந்து கொண்டு விட்டாள் என்பது தங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்” என்றான் பராந்தகன்.

     “அப்படியா...?”

     “இதற்குத்தான் பெண்களைக் கலந்து கொள்ளாமல் அவர்கள் விவாகத்தைப் பற்றி நாமே முடிவு செய்வது தவறு என்று சொல்லுகிறேன். அனுபமாவைக் கலந்து ஆலோசிக்காமல் அவளை முத்தரையரின் புத்திரருக்கு விவாகம் செய்து கொடுப்பதாக நாம் முடிவு செய்தால் அவளும் இடங்காக்கப் பிறந்தாரின் மகளைப் போல நல்லாடைகளை யெல்லாம் களைந்து விட்டுச் சீவர ஆடைகளை அணிந்து எங்கேனும் கிளம்பி விடுவாளோ என்று பயமாக இருக்கிறது” என்றான் ஆதித்தன்.

     “நிச்சயம் செய்தாலும் செய்து விடுவாள், அனுபமா. தன்னுடைய திருமண விஷயத்தில் அவ்வளவு தீவிரமாக இருக்கிறாள் அவள். நாம் இந்தக் காரியத்தில் மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும்” என்றான் பராந்தகன்.

     புலிப்பள்ளியாருக்குப் பராந்தகனின் வார்த்தைகளும், ஆதித்தனின் வார்த்தைகளும் குழப்பத்தை அளித்தன. முக்கியமாக அவர் குழப்பத்துக்குக் காரணமாக இருந்தது பராந்தகன் அறிவித்த செய்திதான். இடங்காக்கப் பிறந்தாரின் பெண் திருபுவனி பட்டாடைகளைக் களைந்து மறுபடியும் சீவர ஆடைகளை அணிந்து கொண்டு விட்டாள் என்ற செய்தியை இப்பொழுதுதான் அவர் கேள்விப்படுகிறார். அவருக்குத் திகைப்பும் குழப்பமும் ஏற்படாமல் எப்படி இருக்கும்? இச்செய்தி இதுவரையில் அவருக்குத் தெரியாதது ஆச்சர்யம்தான். உண்மையாகவே திருபுவனி மறுபடியும் பிக்ஷுணிக் கோலம் பூண்டிருப்பாள் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. திருமணத்துக்காக நாள் குறிப்பிட்டு இடங்காக்கப் பிறந்தார் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் என்பதுதான் அவர் நேற்று வரையில் அறிந்து கொண்ட செய்தி. இன்று பராந்தகன் இப்படிச் சொல்லவே அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் தான் அவருக்கு ஏற்பட்டது. “இடங்காக்கப் பிறந்தாரின் மகள் மறுபடியும் சீவர ஆடை அணிந்து கொண்டு விட்டாளா? இதை என்னால் நம்ப முடியாது. இதையெல்லாம் யோசித்தால் எனக்கும் இடங்காக்கப் பிறந்தாருக்கும் ஏற்பட இருக்கும் உறவைத் தடுக்கச் சில வஞ்சகர்கள் சூழ்ச்சி செய்வது போல்தான் இருக்கிறது” என்று கூறினார்.

     “பதற்றப் படாதீர்கள். குழப்பமடைந்து அவசரமாக ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். உங்களுக்கும் இடங்காக்கப் பிறந்தாருக்கும் ஏற்படப் போகும் உறவை எவரும் சதி செய்து தடுத்து விட முடியாது. ஏனென்றால் இடங்காக்கப் பிறந்தார் தம் மகளை உங்கள் புத்திரருக்கே திருமணம் செய்து கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். அவரை விட அவருடைய மகன் பொற்கோமன் தம் சகோதரியை பிக்ஷுணிக் கோலத்திலேயே பலாத்காரமாகத் தங்களுடைய புதல்வர் கோளாந்தகருக்கு விவாகம் செய்து வைக்க உறுதி பூண்டிருக்கிறார். அப்படி இருக்க உங்களுக்கு அவர்களுடைய உறவு ஏற்படாமல் போகக் காரணம் என்ன இருக்கிறது?” என்றான் பராந்தகன்.

     இதைக் கேட்டதும் புலிப்பள்ளி கொண்டாரின் மீசை துடித்தது. அவர் படபடப்போடு “இதென்ன அநியாயம்! பிக்ஷுணிக் கோலத்திலேயே திருமணம் செய்து கொடுக்கத் தயாராய் இருக்கிறார்களா? இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்றார்.

     இதைக் கேட்டதும் பராந்தகன் அவரிடம் பரிவும் அனுதாபமும் கொண்டவன் போல் அவருக்குச் சமீபமாக நெருங்கி வந்து அமர்ந்தான். மிகவும் அந்தரங்கத்துடன், “நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் நல்லதாகப் போய்விட்டது அவர்களுக்கு. நீங்கள் அப்படிச் சொல்ல வேண்டுமென்பதற்காகவே அவர்கள் இச் சூழ்ச்சிகளெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் பெண்ணை உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாய் வாக்குறுதி அளித்த பின் திருபுவனியின் அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கிறார்கள். அவளுக்கு உங்கள் புத்திரன் கோளாந்தகனைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. இவ்விஷயத்தை அறிந்த பின் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை எப்படி மீறுவது என்று தெரியாமல் அவளை மறுபடியும் பிக்ஷுணிக் கோலமே கொள்ளச் செய்தால் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று கருதி இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள் அவர்களுடைய சூழ்ச்சியைத் தகர்த்தெறிய வேண்டுமென்றால் அப் பெண் சீவர ஆடை அணிந்து பிக்ஷுணிக் கோலத்திலேயே இருந்தாலும் தயங்காமல் விவாகத்தை முடித்துக் கொண்டு விடுவதுதான் புத்திசாலித்தனமாகும்” என்றான் பராந்தகன்.

     பராந்தகனின் வார்த்தைகளைக் கேட்ட புலிப்பள்ளியாருக்குக் குழப்பத்தின் மேல் குழப்பம் தான் ஏற்பட்டது. அவர் படபடப்பான குரலில், “இந்தச் செய்திகளெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

     “பழையாறை நகரிலிருந்து இங்கு வந்திருந்தவர்கள் சொன்னார்கள். இந்தச் செய்தி எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது. நான் கேள்விப்பட்ட விவரங்களைத் தான் உங்களுக்குச் சொன்னேன். இதைத் தவிர இன்னொரு செய்தியும் கேள்விப்பட்டேன். அதுவும் எவ்வளவு தூரம் உண்மையோ...?” என்றான் பராந்தகன்.

     புலிப்பள்ளியார் மேலும் பதற்றம் மிக்கவராக, “அதென்ன விஷயம்?” என்று வினவினார்.

     “இடங்காக்கப் பிறந்தாரின் மகளுக்குச் சித்த சுவாதீனமில்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்களாம். அவள் ஒரு நிலையில் நின்று பேசுவதாகவும் தெரியவில்லையாம். அதோடு, நினைத்தால் புத்த பிக்ஷுணி போல் சீவர ஆடை அணிந்து கொள்கிறாளாம். மறுகணம் அவைகளைக் களைந்தெறிந்துவிட்டுப் பட்டாடை ஆபரணங்களெல்லாம் அணிந்து கொள்கிறாளாம். இதையெல்லாம் கேட்க விநோதமா யில்லையா...?” என்றான் பராந்தகன்.

     “மிகவும் விநோதமாகத்தான் இருக்கிறது” என்றான் ஆதித்தன். அவன் வார்த்தைகளை ஆமோதிப்பவன் போல்.

     புலிப்பள்ளியார் எவ்வித பதிலும் சொல்லாமல் சித்தம் கலங்கியவர் போல் உட்கார்ந்திருந்தார்.

     “இதைப்பற்றி எண்ணி நீங்கள் குழப்பமடையவே கூடாது. அவர்களே ஏன் அந்தப் பெண்ணைச் சித்த சுவாதீனம் இல்லாதவள் போல் நடிக்கச் சொல்லி இருக்கக் கூடாது? இதைப் பற்றி யெல்லாம் நீங்கள் யோசிக்கவே யோசிக்காதீர்கள். அவள் பித்துப் பிடித்தவள் போல் நடந்து கொண்டாலும் தீவிரமாக நின்று திருமணத்தை முடிக்கப் பாருங்கள். சூழ்ச்சியினால் பிறரை ஏமாற்றி விடலாம் என்று நினைப்பவர்களைச் சூழ்ச்சியினாலேயே நாம் ஏமாற்றி விட வேண்டும். இவ்விஷயத்தில் உங்களுக்கு அவசியமான உதவிகளைச் செய்யத்தக்க மனிதர்கள் இருக்கிறார்கள். நானே அவர்களுடைய உதவி உங்களுக்குக் கிடைக்கும் வண்ணம் செய்கிறேன். உண்மையாகவே அப்பெண்ணுக்குப் பைத்தியமா அல்லது வெறும் வேஷமா என்பதை அறிந்து சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு அபிப்பிராயம் இருக்குமானால், அவர்களுடைய உதவி உங்களுக்கு வேண்டி யிருக்குமென்று பட்டால் சொல்லுங்கள். அவரைக் கொண்டு உங்களுக்கு வேண்டிய உதவிகளை யெல்லாம் செய்யச் சொல்லுகிறேன்” என்றான்.

     “எனக்கு இவ்விஷயத்தில் தக்க மனிதர்களின் உதவி வேண்டியதுதான். அப்படி உதவி செய்யக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை நானே சென்று பார்க்கிறேன்” என்றார்.

     “கோடீச்சுவரத்தில் சந்தகர் என்ற சோதிடர் இருக்கிறாரே, உங்களுக்குத் தெரியுமா?” என்றான் பராந்தகன்.

     “சந்தகரா! சோதிட சாஸ்திரத்தில் கரைகண்டவராயிற்றே. மாந்திரீக வித்தையில் மகா நிபுணராயிற்றே? பராந்தகா! இந்தச் சமயத்தில் அதுவும் இந்தக் காரியத்தில் சந்தகரின் நட்பு தஞ்சை அமைச்சருக்கு அவசியம் வேண்டியதுதான்” என்று கூறினான் ஆதித்தன். பராந்தகனின் யோசனையை அங்கீகரிப்பவன் போல்.

     “சந்தகரா! அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சோதிடத்திலும் மாந்திரீகத்திலும் மகா நிபுணர்தான். ஆனால் அந்த மனிதர் இந்நாட்டில் பல்லவ சாம்ராஜ்யத்தைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யும் சிலருக்கு அந்தரங்கமானவர் என்று கலங்கமாலரையர் என்னிடம் கூறி இருக்கிறார். அப்படிப்பட்டவர்களின் நட்பு எனக்கு எப்படி நன்மை விளைவிக்கும்...?” என்று கேட்டார் புலிப்பள்ளி கொண்டார்.

     “சந்தகர் பல்லவ சாம்ராஜ்யத்தைக் கவிழ்க்க நினைப்பவரோடு சேர்ந்தவரோ, பாண்டிய சாம்ராஜ்யத்தைக் குலைக்க நினைப்பவர்களோடு நட்பு பாராட்டுகிறவரோ, அதைப் பற்றி நமக்கென்ன கவலை? அவருடைய ஜீவனம் சோதிடம். அவரிடம் பலர் வருவார்கள். போவார்கள். நீங்கள் அவரைத் தொழில் துறையில் தானே நெருங்கப் போகிறீர்கள்? அவருடைய மனக் கொள்கைகள் பல விதமாக இருக்கலாம். அவரால் நமது காரியங்கள் பலனடையுமா என்பதைத் தானே நீங்கள் முக்கியமாகக் கருத வேண்டும்?” என்றான் பராந்தகன்.

     “நீங்கள் சொல்வதும் உண்மைதான். கலங்கமாலரையர் அடிக்கடி என்னிடம் சொல்லி இருப்பதால் நான் அப்படிச் சொன்னேன். ஆனால் கலங்கமாலரையருக்கே சிலரைக் கண்டால் பிடிக்காது. அவர் சொல்கிற ஒவ்வொன்றையும் நான் ஒப்புக் கொள்கிறவனல்ல” என்றார் புலிப்பள்ளி கொண்டார்.

     “ஒரு அமைச்சராக இருப்பவர் ஒரு சாதாரண சேனாதிபதியாக இருக்கும் ஒருவருடைய வார்த்தை எல்லாவற்றையுமே எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? அப்புறம் அமைச்சர் என்ற மதிப்புக்குத் தான் என்ன உயர்வு? நீங்கள் நன்கு படித்தவர்கள். அதோடு சாதுர்யமாக நடக்கக் கூடியவர்கள். அரசாங்கக் காரியத்தில் நல்ல அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவர்கள்” என்று புகழ்மாலை சூட்டினான் பராந்தகன்.

     “இந்த உண்மையை நீங்கள் தான் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். தஞ்சை மன்னர் முத்தரையருக்கு ஏதோ நன்மைகள் செய்வதுபோல் கலங்கமாலரையர் பல காரியங்கள் செய்திருக்கிறார். அவை எனக்குப் பிடிப்பதில்லை. இருந்தாலும் அரசாங்கத்தில் கலங்கமாலரையருக்குத்தான் அதிக மதிப்பு இருக்கிறது. என்னுடைய மகன் கோளாந்தகன் தான் கலங்கமாலரையர் வகித்த சேனாதிபதிப் பதவியை இன்று வகிக்கிறான். அவன் இந்தப் பதவி வகிப்பதில் கூடக் கலங்கமாலரையருக்கு விருப்பமில்லை...” என்றார்.

     “அவர் தான் துறவிக் கோலம் பூண்டு விட்டாரே - அவருக்கு ஏன் இன்னும் இந்த ஆசையெல்லாம்?” என்றான் ஆதித்தன் மெதுவாக.

     “உண்மையாகத் துறவிக் கோலம் பூண்டிருந்தால் அல்லவா அவருக்கு இந்த ஆசை எல்லாம் இருக்காது?” என்றான் பராந்தகன்.

     “ஆமாம்! கலங்கமாலரையர் ஏன் திடீரென்று துறவுக்கோலம் பூண்டார் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. எப்படியோ அவர் துறவுக்கோலம் பூண்டதினால் தான் என் மகன் சேனாதிபதியாக முடிந்தது. ஆனால் அவர் பௌத்த பிக்ஷுவான பின்பும் இன்னும் ஏன் அரசாங்கக் காரியங்களில் கவலை கொள்கிறார் என்பதுதான் தெரியவில்லை. காவிரிப்பூம் பட்டினத்து புத்த சேதியத்தில் இருந்தவர் திடீரென்று இப்பொழுது காஞ்சிக்குப் போயிருப்பதாகத் தெரிய வருகிறது. எதிலும் நேரடியான முயற்சியில் ஈடுபடுவதுதான் எனக்குப் பிடிக்குமே தவிர இப்படியெல்லாம் வேஷம் மாறி மறைந்து ஒளிந்து நின்று செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவே பிடிக்காது” என்றார்.

     “அடாடா! உங்களுடைய சுபாவம் எனக்குத் தெரியாதா? கலங்க மாலரையர் புத்த பிக்ஷுக்கோலம் பூண்டு திரிவது ஏதோ சூழ்ச்சி செய்வதற்காக என்பதை விட இப்படித் துறவுக்கோலம் பூண்டு விட்டால் தம் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் இருக்கலா மல்லவா?”

     “ஆமாம்! அந்த உண்மையையும் நீங்கள் அறிந்திருப்பது வியப்பாகத் தானிருக்கிறது. முக்கியமாகப் பழையாறையிலுள்ள சோழ அரசரின் மகளை அவர் கொன்று விட ஏதோ சூழ்ச்சி செய்வதாகத் தெரிகிறது. இதை அறிந்த சில வீரர்கள் அவரைப் பழி தீர்த்து விட நினைத்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாகத் தான் அவர் துறவுக் கோலம் பூண்டு திரிகிறார் என்று நினைக்கிறேன்” என்றார் புலிப்பள்ளியார்.

     “அதுதான் உண்மை. பழையாறையிலுள்ள சோழ வம்சத்தினரை நாசமாக்க ஒருவன் முயற்சி செய்யும் வரையில் கொடும்பாளூரிலுள்ள வீரர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்களல்லவா?” என்றான் பராந்தகன் மிகுந்த படபடப்போடு.