உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 4 - புலிப்பள்ளியாரின் புகைச்சல் கலங்கமாலரையரின் சூழ்ச்சி வலையைப் பற்றிப் பராந்தகனும் புலிப்பள்ளியாரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கொடும்பாளூர் வீரர்கள் பழையாறைச் சோழ வம்சத்தினரை அழிக்க விட மாட்டார்கள் என்று பராந்தகன் கூறினானல்லவா? “கலங்கமாலரையரின் சூழ்ச்சியை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? கலங்கமாலரையரின் ராஜதந்திரம் அங்குதான் கொஞ்சம் பலவீன மடைந்ததாகி விட்டது. அதோடு மட்டுமல்ல; தஞ்சை மன்னர் உங்களோடெல்லாம் நட்புரிமை பாராட்டுவது கூட அவருக்குப் பிடிப்பதில்லை. எங்கள் இளவரசர் கொடும்பாளூர் இளவரசியை மணந்து கொள்ள ஆசைப்படுவது கூட அவருக்குப் பிடிக்கவில்லை. இளவரசரையும் மன்னரின் மனத்தையும் என் மனத்தையும் மாற்றுவதற்காக எவ்வளவோ பாடுபட்டார். மன்னர் சிறிது மனம் மாறினாலும் இளவரசர் கொடும்பாளூர் இளவரசியைத் தான் மணப்பேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்து விட்டார். அதிலிருந்து தான் இளவரசரின் மனத்திலுள்ள ஆழ்ந்த காதலும் பற்றுதலும் எனக்கு விளங்கின...” என்றார் புலிப்பள்ளியார். “இது அனுதாபப்படக்கூடிய விஷயந்தான்” என்றான் பராந்தகன். “நாம் அனுதாபப்படுவதில் பலன் என்ன?” என்றான் ஆதித்தன். “அது உண்மை. முக்கியமாக நம்மைப் போல் அனுபமாவுக்கும் அனுதாபம் ஏற்பட வேண்டுமே?” என்று கூறினான் பராந்தகன். “ஒரு பெண் இன்னொரு ஆண் மகனின் உள்ளத்தில் பொங்கிய காதலை உள்ளபடி உணர்ந்தாளானால் அவள் மனமும் உருகாமல் இருக்காது. சாதாரணமாகவே பெண்களின் மனம் மிகவும் இளக்கமுள்ளது” என்றார் புலிப்பள்ளியார். “சாதாரணப் பெண்களின் மனம் இளக்கமானதுதான். ஆனால் வீரர் குலத்துதித்த பெண்களின் மனம் மிகவும் கடினமானது. அதுவும் எங்கள் அனுபமா இருக்கிறாளே, மிகவும் நெஞ்சழுத்த முள்ளவள். அவள் கனவுகள் வேறு. அவள் காதல், கண்ணோட்டமெல்லாம் வேறெங்கோ நிலைத்திருக்கிறது. இதை நினைக்கும் போதுதான் எங்கள் மனம் சங்கடமடைகிறது” என்றான் ஆதித்தன். “அவள் மனப் போக்கை உங்களால் மாற்ற முடியாதா? இவ் விஷயத்தில் எங்கள் மன்னரின் ஆவல் மட்டுமல்ல, இந்த சாம்ராஜ்யத்தையே ஒரு குடையின் கீழ் ஆண்டு வரும் பல்லவ சக்கரவர்த்தியின் மன ஆவலையும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்” என்றார் புலிப்பள்ளியார். “ஒரு காரியம் என்றால் யோசிக்காமல் இருப்போமா? இது யோசித்து முடிவு செய்ய வேண்டிய விஷயம் தான். நீங்கள் சில காலம் பொறுத்திருந்தால் அவளைக் கலந்தாலோசித்து அவள் மனத்தை மாற்றி விவாகத்தைச் சிறப்பாக நடத்த முடிவு செய்யலாம்” என்றான் ஆதித்தன். “ஆமாம்! ஆமாம்! அப்படித்தான் செய்ய வேண்டும்” என்றான் பராந்தகன். “சில நாட்கள் பொறுப்பதில் எவ்விதத் தடையுமில்லை. நான் இங்கு வந்ததற்கு எங்கள் மன்னருக்கு ஏதேனும் நம்பிக்கையாகச் சமாதானம் சொல்ல வேண்டாமா?” என்றார் புலிப்பள்ளியார். “இவ்வளவு அனுபவமும் கெட்டிக்காரத்தனமும் உள்ள அமைச்சராக விளங்கும் உங்களுக்கு, மன்னருக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் சமாதானம் சொல்லத்தானா தெரியாது?” என்றான் பராந்தகன். “அது எனக்குத் தெரியும். அவருக்கு நம்பிக்கையும் சமாதானமும் ஏற்படும்படியாகச் செய்து விடுகிறேன். நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து இந்த நல்ல காரியத்தை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் முடிக்கப் பாருங்கள்” என்றார் புலிப்பள்ளி கொண்டார். “நாங்கள் முடிக்காமல் இருப்போமா? இதுதானே எங்கள் கவலை. ஆனால் இதில் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது. நெடுநாட்களாகச் சோழ வம்சத்தினருக்கும் எங்களுக்கும் பெண் கொடுத்துக் கொண்டதினால் நெருங்கிய சம்பந்தமும் தொடர்பும் இருக்கிறதென்பது தங்களுக்கெல்லாம் தெரியாத விஷயமல்ல. முக்கியமாகப் பழையாறையிலிருந்த எங்கள் மாமன் குமராங்குஜ சோழரின் மகன் விஜயனுக்கும் எங்கள் அனுபமாவுக்கும் குழந்தைப் பருவத்திலிருந்தே நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அவர்களுடைய நட்பு காதலாகப் பரிணமித்திருக்கிறது. அவளுக்கென்னவோ அவனிடம் தீவிரப்பற்றுதலும் மோகமும் ஏற்பட்டிருக்கின்றன. உறவு முறையிலுள்ள நாங்கள் அவர்களுடைய பழக்கத்தைத் தடுக்க முடியவில்லை. பாரம்பர்யமாகப் பெண் கொடுத்துப் பெண் எடுப்பதினால் ஒரு உரிமையை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். இப்பொழுது விஜயனுக்கு அனுபமாவிடம் உரிமை கொண்டாடும் அதிகாரம் ஏற்பட்டு விட்டது. அனுபமாவுக்கும் அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று எண்ணம் இருப்பதால் அவள் மனத்தை மாற்றுவது சிறிது கடினம் என்றுதான் படுகிறது” என்றான் ஆதித்தன். “சோழ வம்சத்தினர் ஒரு காலத்தில் பிரசித்தியும் பெருமையும் உடையவர்களாக இருந்தார்கள். அந்தக் காலத்தில் உங்கள் குடும்பத்தினர் அவர்களோடு சம்பந்தம் செய்து கொண்டதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் இன்றுள்ள நிலை வேறு. இன்று அவர்கள் இருக்கும் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? உங்களுக்குச் சரிசமமான சம்பந்தம் வேண்டாமா? இன்று உங்களுக்குள்ள பெருமை என்ன? தஞ்சையர்கோனுக்குள்ள பெருமை என்ன? இதைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்” என்றார் புலிப்பள்ளியார். “சிந்தித்துப் பார்க்க வேண்டியதுதான். சிந்தித்துப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறோம். நாங்கள் சிந்தித்து என்ன பயன்? காதல் கண்மூடித்தனமானது. மனத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் அது தராதரம் பார்ப்பதில்லை. இளவரசிக்கு எல்லாவற்றையும் நாங்கள் தான் விளக்க வேண்டும்” என்றான் ஆதித்தன். “நீங்கள் முயன்றால் புத்திசாலியான அவள் உணர்ந்து கொள்ளாமல் இருக்க மாட்டாள்” என்றார் புலிப்பள்ளியார். “கூடுமானவரையில் நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்றான் ஆதித்தன். “அதுவரையில் சந்தோஷம். உங்கள் முயற்சி வெற்றி யளிக்கட்டும்.” “சந்தோஷம், விவாகம் பற்றிய ஆலோசனை இதோடு முடிவுற்றது என்று நினைக்கிறேன். நான் மதுரை அமைச்சரோடு தோட்டத்தில் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் பணியாள் வந்து அழைத்ததினால் அவரை அங்கேயே விட்டு விட்டு வரும்படி நேரிட்டது. பாவம்! அருண்மொழியார் எனக்காகக் காத்திருப்பார். நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பராந்தகன் சென்றான். மதுரை அமைச்சர் என்ற வார்த்தையைக் கேட்டதும் புலிப்பள்ளியார் திகைப்படைந்தார். அந்தச் சமயத்தில் மதுரை அமைச்சர் கொடும்பாளூருக்கு வரக் காரணம் என்ன என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. அவர் ஆதித்தனின் முகத்தை வியப்போடு பார்த்துக் கொண்டே, “மதுரை அமைச்சர் இங்கு வந்திருக்கிறாரா?” என்று கேட்டார். “ஆம்! அருண்மொழியார் நேற்று வந்தார். சாதாரண விருந்தினராகத் தான் வந்திருக்கிறார். அவர் சில நாட்கள் இங்கே தங்கினாலும் தங்கலாம்” என்றான் ஆதித்தன். “நீங்கள் அவர் சாதாரண விருந்தினராக வந்திருப்பதாகச் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. பல்லவ சாம்ராஜ்யத்துக்கு நேர் வைரியாக இருக்கும் பாண்டிய மன்னரின் அமைச்சர் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிய சிற்றரசராகவும் நெருங்கிய நட்பினராகவும் இருக்கும் ஒரு அரசரிடம் வந்து விருந்தாளியாக இருந்து நட்புரிமை பாராட்டுவதென்றால் இதில் ஏதோ விபரீதம் இருக்கத்தான் வேண்டும்!” “இதில் விபரீதமாக எடுத்துக் கொள்வதற்கு எதுவுமே இல்லை. நான் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அடங்கியவன் தான்; நட்பினன் தான். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள ஒருவரோடு நட்புப் பாராட்டுவது விபரீதமென்றால் இதில் ஏதேனும் அர்த்தமுண்டா? இன்றல்ல, நெடு நாட்களாக அருண்மொழியார் எங்களுக்கு நட்பினர். அவர் அடிக்கடி இங்கு வந்து போவது வழக்கம். இதைத் தவறாக எடுத்துக் கொள்வது விவேகமாகாது. நீங்கள் இங்கே வந்து போவதில்லையா? அதைப் போலத்தான்” என்றான் ஆதித்தன். புலிப்பள்ளி கொண்டார் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பவர் போல் இருந்துவிட்டு, “உங்கள் மனம் நல்லதாக இருக்கலாம். ஆனால் எதிரிகளின் மனம் உங்கள் மனம் போல் இருக்கும் என்று நம்பிவிட முடியாது. அருண்மொழியார் அரசியல் சதுரங்கத்தில் கைதேர்ந்தவர். விருந்தாளி போல் வந்து விஷம் வைத்துவிடுவார்” என்றார். “அப்படியா...? அவரைப் பற்றி நீங்கள் இப்படியெல்லாம் கருதுவது சகஜம். அவரை நம்பாதது இயற்கை. ஏனென்றால் நீங்கள் தஞ்சை மன்னரின் அமைச்சரல்லவா? ஆனால் மதுரை அமைச்சர் அருண்மொழியாரைப் பற்றி நினைப்பது போல் என்னை நினைத்து விடாதீர்கள். ஒரு சரியான ஆண்மகன் இன்னொருவருடைய வலையில் அவ்வளவு எளிதாகச் சிக்கி விட மாட்டான்” என்றான் ஆதித்தன். “உங்களை நம்பலாம். ஆனால் உங்களுக்கு அவருடைய நட்பு மிகவும் ஆபத்தானது, தகாதது என்பதுதான் என் அபிப்பிராயம்!” “எனக்கு எப்படி இந்த நட்பு தகாததாகவோ ஆபத்தானதாகவோ இருக்குமென்பதுதான் விளங்கவில்லை” என்றான் ஆதித்தன் வியப்புடன். “எப்படியா? பல்லவ மன்னருக்கு நீங்கள் பாண்டிய மன்னரின் அமைச்சரோடு நட்பு பாராட்டுவது பிடிக்காது. அதனால் பல்லவ மன்னரின் விரோதம் உங்களுக்கு ஏற்படும். அவருடைய விரோதம் உங்களுக்கு ஏற்பட்டால் அது ஆபத்தாக முடியாதா?” என்றார். “பல்லவ மன்னரின் விரோதம் எனக்கு ஏற்படும் என்பதற்காக ஒரு அரிய நண்பரை நான் இழக்கச் சித்தமாயில்லை” என்றான் ஆதித்தன், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே. “நீங்கள் இவ்வளவு அலட்சியமாக இதைச் சொல்லி விட முடியாது. நீங்கள் எல்லாவற்றையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். பல்லவ மன்னருக்கு ஜன்ம வைரியாக இருக்கும் பாண்டிய மன்னரின் அமைச்சரோடு கூடிக் குலாவுவது பல்லவர்கோன் மனத்தில் சந்தேகத்தைத்தான் எழுப்பும்.” “பிறர் மனத்தில் எழும் சந்தேகங்களுக்கெல்லாம் நாம் எப்படிப் பொறுப்பாளியாக முடியும்?” “பொறுப்பாளியாக முடியாதுதான். ஆனால் பிறர் மனத்தில் சந்தேகங்கள் எழும் வண்ணம் நாம் நடந்து கொள்ளக் கூடாதல்லவா?” ஆதித்தன் ஏளனமாகச் சிரித்தான். “ஒரு சுத்த வீரன் பிறருடைய சந்தேகங்களுக்கெல்லாம் பயந்து தன் மனசாட்சியைக் கொன்று அடிமைப்பட்டுக் கிடந்து கோழையாக மாட்டான்” என்றான் ஆத்திரத்துடன். “அப்படி என்றால் நீங்கள் இவ் விஷயத்தில் பல்லவ மன்னரின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளச் சித்தமாயிருக்கிறீர்கள், இல்லையா?” “நான் ஒருவரிடம் நட்பு பாராட்டுகிறேன் என்பதற்காக ஒருவர் என்னை விரோதியாகக் கருத நேர்ந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” “நீங்கள் மிகவும் பிடிவாதமாகப் பேசுகிறீர்கள். இதனால் வரக்கூடிய தீமையையும் உணர்ந்தால் உங்களுக்கு நன்மை” என்றார். “நான் பிடிவாதம் பிடிக்கவில்லை. பல்லவ மன்னர் பெரும் படை கொண்டு இவ்வுலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளக்கூடிய திறமையுடையவராக இருக்கலாம். நாம் அவருக்கு அடங்கி விசுவாசம் காட்டக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அதற்காகத் தன் சொந்த வாழ்வில் பிணைந்திருக்கும் நட்பு, உறவு, காதல், கடமை இவைகளை யெல்லாம் துறக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதி யென்றால் அவரிடம் அன்பு பாராட்டி உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய சொந்தமான உணர்ச்சிகளையும் சிதைத்துக் கொண்டு வாழவேண்டுமென்று அர்த்தமில்லை. இதற்கு எங்கள் நெஞ்சம் இடம் கொடுக்காது. தஞ்சை மன்னர் முத்தரையர் போன்றவர்கள் வேண்டுமானால் தங்களுடைய சொந்த மன உணர்ச்சிகளையும் அடிமையாக்கிப் பல்லவ மன்னரின் தயவுக்காகக் காத்துக் கிடக்கட்டும். நாங்கள் அப்படிப்பட்டவர்களல்ல” என்றான் ஆவேசத்தோடு. ஆதித்தன் ஆவேசத்துடனும், கண்டிப்பான குரலிலும் பேசியதைக் கேட்ட புலிப்பள்ளியாருக்குச் சிறிது ஆத்திரமும் கோபமும் எழுந்தன. “எங்கள் மன்னர் முத்தரையரைப் பற்றியா இப்படிச் சொல்கிறீர்கள்? அவர் உங்களைப் போல் மனசாட்சியை விற்றவரல்ல. நட்புத் துரோகம் செய்கிறவரல்ல. இப்பொழுது நீங்கள் ஆத்திரமாகவும் கோபமாகவும் பேசுவது எதில் கொண்டு போய் விடும் என்பதை உணராததுதான் வருத்தமாயிருக்கிறது. பல்லவ மன்னர் சீறி யெழுந்தால் என்ன நடக்கும் என்பதை இனிமேலாவது மனப்பதற்றத்தை அடக்கிக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்” என்றார் படபடப்போடு. ஆதித்தன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்ற எண்ணத்தின் பேரில்தான் தஞ்சை மன்னர் தங்களை இங்கு அனுப்பி இருக்கிறார் என்ற ரகசியம் இப்பொழுதுதான் புரிந்தது. தூதுவரைப் போல் வந்த உங்களிடம் வீரப்பிரதாபங்கள் பேச நான் விரும்பவில்லை” என்று சொல்லிக் கொண்டிருக்கும் தருணத்தில் அவர்களிருந்த இடத்துக்குப் பராந்தகனும் மதுரை அமைச்சர் அருண்மொழியாரும் வந்து சேர்ந்தனர். தாங்கள் அங்கு வந்த சமயம் புலிப்பள்ளி கொண்டாருக்கும் ஆதித்தனுக்கும் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிக் கடுமையான விவாதம் நடந்திருப்பதாகப் பராந்தகனும் அருண்மொழியாரும் உணர்ந்து கொண்டனர். கோபத்தை அடக்க மாட்டாதவராக ஆசனத்திலிருந்து பதற்றத்தோடு எழுந்த புலிப்பள்ளியார் பராந்தகனையும் அருண்மொழியாரையும் கண்டதும் தம் சீற்றத்தை ஒரு விதமாக அடக்கிக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்தார். ஆதித்தனுக்கு ஏற்பட்டிருந்த கோபத்தை அவன் முகக் குறியால் அறிந்து கொண்ட பராந்தகன் எது விஷயம் பற்றி அவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டிருக்கும் என்பதை அறிந்து கொள்ளத் துடித்தான். புலிப்பள்ளியார் முன் கோபமும் பதற்றமும் உள்ளவர் என்பதை அவன் மிக எளிதாக உணர்ந்து கொண்டிருந்தான். கோபம் வரும் நேரத்திலெல்லாம் அவர் நீரிலிருந்து எடுத்துத் தரையில் போட்ட மீன் போல் குதிப்பது அவனுக்கே வியப்பாக இருக்கும். எப்படியோ அவர்களுடைய விவாதம் மிக உச்ச நிலையை அடைந்த சமயத்தில் தான் வந்து விட்டது அவனுக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. ஆதித்தனுக்கும் புலிப்பள்ளியாருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையாக வாக்குவாதம் நடக்கும் தருணத்தில் தாம் அங்கு வந்தது தவறு என்று அருண்மொழியாரும் சிறிது தயங்கினார். “தாங்கள் தஞ்சை அமைச்சரோடு ஏதோ ஒரு முக்கியமான விஷயம் பற்றிக் கடுமையாகப் பேசிக் கொண்டிருக்கும் சமயம் நாங்கள் வந்து விட்டோம் என்று நினைக்கிறோம். இந்தச் சமயத்தில் நாங்கள் வந்தது ஏதேனும் இடையூறை ஏற்படுத்தி இருக்குமோ என்று நினைக்கிறேன்” என்றான் பராந்தகன். “நீங்கள் வந்தது எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை. இந்தச் சமயத்தில் நீங்கள் இருவரும் வந்தது வரவேற்கத் தக்கதுதான். அப்படியொன்றும் முக்கியமான விஷயங்களில் எங்களுக்குள் சர்ச்சை ஏற்பட்டு விடவில்லை. இரு அமைச்சர்கள் நமது அரண்மனைக்கு விருந்தினராக விஜயம் செய்துள்ளனர். நமது உள்ளம் தூய்மையானது. இவ்விருவரையும் வித்தியாசம் பாராமல் உபசரிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால் இவ்விருவருமே ஏதோ வஞ்சக எண்ணத்தோடும் சூழ்ச்சியோடும் நம்மை நெருங்கி இருந்தார்களானால் நாம் என்ன செய்ய முடியும்? மதுரை அமைச்சர் இங்கு விருந்தினராக வந்திருப்பது பற்றித் தஞ்சை அமைச்சர் கொஞ்சம் வித்தியாசமாகக் கருதுகிறார். அவர் ஏன் அப்படிக் கருத வேண்டும் என்பது பற்றிச் சிறிது விவாதம் செய்தேன்; அவ்வளவு தான். தஞ்சை அமைச்சர் சிறிது முன்கோபமும் பதற்றமும் உடையவராக இருக்கிறார். அதன் காரணமாக எனக்கும் சிறிது கோபம் ஏற்பட்டு விட்டது. அவ்வளவுதான்!” என்றான் ஆதித்தன். இதைக் கேட்டதும் அருண்மொழியார் சிறிது மனவருத்தம் அடைந்தவராக, “தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளியாரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டதே என்ற ஆவலில் தான் நான் இங்கே வந்தேன். ஆனால் உங்கள் விருந்தினராக வந்திருக்கும் என் மீது சந்தேகப் படுகிறார் என்பதை அறிந்ததும் எனக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டு விட்டது. ஒரு அரச சமூகத்தில் அமைச்சராக இருந்து பணிபுரியும் ஒருவர் திடீரென்று என்னைப் போன்றவர்கள் மீது சந்தேகப்படுவது அவ்வளவு புத்திசாலித்தன மாகாது” என்றார் அடக்கமான குரலில். இதைக் கேட்டதும் அடங்கி இருந்த புலிப்பள்ளியாரின் ஆத்திரமும் கோபமும் மறுபடியும் பீறிட்டு எழுந்தன. அவர் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்தார். “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நான் ஒரு புத்தியில்லாதவன், அமைச்சர் பதவிக்குத் தகுதியற்றவன் போலல்லவா இருக்கிறது?” என்றார். பராந்தகன் சட்டென்று அவருக்குச் சமீபமாக நெருங்கி அவரது தோளைத் தொட்டு அழுத்தி ஆசனத்தில் இருத்தி, “அடாடா! நீங்கள் இப்படிக் கோபப்படலாமா? உங்களை அமைச்சர் வேலைக்குத் தகுதியற்றவர் என்று யாரால் சொல்ல முடியும்? தஞ்சை முத்தரையரின் ஆட்சியில் அமைச்சராக இருப்பதை யாரேனும் குறை சொல்ல முடியுமா? கோபப்படாதீர்கள். திடீர் திடீரென்று கோபப்படுவது அவ்வளவு லட்சணமாகாது என்ற கருத்தில் மதுரை அமைச்சர் அவர்கள் சொன்னார்களே தவிர வேறு வித்தியாசமாக எதுவும் சொல்லிவிடவில்லை” என்றான். “ஆம்! விருந்தினராக வந்த இடத்தில் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள பகை உணர்ச்சியைக் காட்டிக் கொள்வது அழகாகாது. நீங்கள் இருவரும் இந்த இடத்தில் நட்புரிமை கொண்டு பழகுவதுதான் நல்லது. அப்புறம் வேறு இடங்களில் வேண்டுமானால் உங்கள் பகை உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளலாம்” என்றான் ஆதித்தன். “நான் ஒரு அமைச்சன் - என்னைப் போல் அவரும் ஒரு அமைச்சர். இருவரும் தாங்கள் பணிபுரியும் அரசருக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் வந்த இடத்தில் பகைமையைக் காட்டிக் கொள்வதினால் தான் மிகவும் ராஜ விசுவாசத்தோடு நடந்து கொள்வதாக நினைத்து விடக் கூடாது. இத்தகைய சந்தர்ப்பத்தில் பகை யுணர்ச்சி தெரியும்படி நடந்து கொள்வது பெருந்தன்மைக்குக் குறைவானது என்று தான் நான் கருதுகிறேன்” என்றார் அருண்மொழியார். “பெருந்தன்மைக்குக் குறைவான முறையில் நான் நடந்து கொள்ள மாட்டேன். ஆதித்தரே! மதுரை அமைச்சர் தான் மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பேசிவிட்டு நான் மரியாதைக் குறைவாக நடப்பதாகச் சொல்லுகிறார். இதை நான் சகித்துக் கொண்டிருக்க முடியாது” என்றார். “உண்மையாகவே உங்களுக்குப் பெருந்தன்மை இருக்குமானால் சகிப்புத் தன்மையோடு இருக்க வேண்டியதுதான். இந்த இடத்தில் சகிப்புத் தன்மை காட்ட முடியாவிட்டால் அது உங்கள் துரதிருஷ்டம்” என்றான் பராந்தகன். “நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்த நினைக்கிறீர்கள்” என்றார் புலிப்பள்ளியார் ஆத்திரத்தோடு. ஆதித்தன் கலகலவென்று சிரித்தான். “நாங்கள் உங்களை அவமானப்படுத்தவுமில்லை. நீங்களாகவே தான் உங்கள் மனக்கசப்பை யெல்லாம் வெளியே காட்டிக் கொண்டு அவமானத்துக்குள்ளாகிறீர்கள். நீங்கள் உங்கள் அரசருக்காக ஏதோ ஒரு காரியத்தைச் சொல்லிப் பதில் தெரிந்து கொண்டு போக வந்தீர்கள். உங்கள் காரியத்துக்குரிய பதில் கிடைத்து விட்டது. அதோடு நிற்காமல் உங்களைப் போல் விருந்தினராக வந்திருக்கும் மதுரை அமைச்சரைப் பற்றித் தவறாகப் பேசியதுமல்லாமல் எங்களுக்கும் உபதேசம் செய்யத் தொடங்கி விட்டீர்கள். உங்களுடைய வார்த்தைகளுக்குத் தக்க பதிலை நாங்கள் கொடுக்கத்தானே வேண்டியிருக்கிறது. இதில் கோபப்படுவதினால் என்ன பயன்? அமைதியாக உட்காருங்கள். மனத்தில் உள்ள குரோதத்தை மறந்து பழகுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அது பொன்னான சந்தர்ப்பமல்லவா? நீங்கள் ராஜ விசுவாசமுள்ளவர்கள் தான். உங்கள் ராஜவிசுவாசத்தை எந்த இடத்தில் எந்த முறையில் காட்ட வேண்டுமோ அந்த முறையில் காட்டுவதுதான் நலம். ஆனால் இந்த இடத்தில் நீங்கள் என்னுடைய விருந்தினராக வந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் மனத்திலுள்ள பகை யுணர்ச்சியைக் காட்டி எங்கள் மனத்துக்கு வருத்தம் ஏற்படும்படி செய்ய வேண்டாம்” என்று கூறினான். மிகவும் வருத்தம் நிறைந்த முகக்குறியோடு தோன்றிய அருண்மொழியார் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. “நான் தஞ்சை அமைச்சரிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறேன். அவருடைய குணங்களைப் பற்றிப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் முன்கோபமுள்ளவர் என்று சிலர் சொன்னது இப்பொழுது நிரூபணமாகி விட்டது. இருந்தாலும் கோபம் உள்ள இடத்தில் தான் குணமிருக்கும் என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட கோபம் உள்ளவர்கள் தான் சிறப்பான பல காரியங்கள் செய்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். இன்று தஞ்சை மன்னருக்கு ஏற்பட்டுள்ள பெருமை அவருக்கு அமைச்சராக விளங்கும் புலிப்பள்ளி கொண்டாரால்தான் என்று எங்கும் வதந்தியாக இருக்கிறது. அந்த வதந்தி மிகையானதல்ல என்ற விஷயம் இப்பொழுதுதான் விளங்கியது. என்னிடம் அவர் பகையுணர்ச்சி காட்டுவதற்காக நான் வருத்தப்படவில்லை. அப்படித் தானிருக்க வேண்டும். உண்மையில் நான் பாண்டிய மன்னரின் அமைச்சர். பாண்டிய மன்னர் பல்லவ மன்னருக்கும் தஞ்சை மன்னருக்கும் வைரி. அம் மன்னரிடம் மந்திரியாக இருக்கும் என்னை அவர் வைரியாகக் கருதியதில் குற்றம் ஏதுமில்லை. இதுதான் அவருடைய பிடிவாதமான, உண்மையான ராஜ விசுவாசத்தைக் காட்டுகிறது...” என்றார். அருண்மொழியாரின் வார்த்தையைக் கேட்டுப் புலிப்பள்ளியாரின் முகத்திலும் சிறிது மலர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் விவாதம் முற்றி விபரீதம் நிகழ்ந்து விடுமோ என்று பயந்தான் பராந்தகன். ஆனால் அவ்வாறு நிகழாமல் இருவரும் சமாதானமாகப் போய்விட்டதை அறிந்து கொண்ட பராந்தகன், “எப்படியோ ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு சமாதானமடைந்து வீண் கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் எங்களைக் கௌரவித்தால் சரிதான்” என்றான். “என் மனத்தில் எவ்விதக் கசப்பும் இல்லை, யாரிடமும் குரோதமில்லை. நானும் மதுரை அமைச்சர் அருண்மொழியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று பாண்டிய மன்னருக்குள்ள பெருமையும் புகழும் அவருக்கு அமைச்சராக விளங்கும் அருண்மொழியாரால்தான் என்று எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். அவரிடம் எனக்குப் பெருமதிப்பு உண்டு. ஆனால் நான் இந்தக் கொடும்பாளூருக்கு வந்த சமயம் அவரும் வந்திருக்கிறார் என்பது சிறிது சந்தேகத்தைக் கொடுத்தது. அதன் காரணமாகச் சிறிது ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டது. அவ்வளவுதான்...” என்றார் புலிப்பள்ளியார். |