மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 5 - பூதுகனுக்கு ஆபத்தா...?

     புலிப்பள்ளியாரும் அருண்மொழியாரும் சமாதானமாகப் போய்விட்டது பராந்தகனுக்குத் திருப்தியை அளித்தது.

     “அமைச்சர் பெருமான் இருவரும் இப்பொழுதாவது ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு நட்பு பாராட்டிக் கொள்வதில் மகிழ்ச்சி. பொதுவாக அரசர்களை விட அமைச்சர்களுக்குத்தான் பெருமை அதிகம். மேலும் அரசர்களின் பெருமையையும் புகழையும் காப்பாற்றுகிறவர்கள் அமைச்சர்கள்தான். அதிலும் தஞ்சை மன்னருக்குப் புலிப்பள்ளியாரும், மதுரை மன்னருக்கு அருண்மொழியாரும் அமைச்சர்களாக அமைந்தது அந்த அரசர்கள் செய்த பெரும் பாக்கியமாகத்தான் இருக்க வேண்டும்” என்றான் பராந்தகன்.

     “அதில் என்ன சந்தேகம்? ஆனால் இப்படிப்பட்ட சிறந்த அமைச்சர்களின் நிர்வாகத்தில் இருக்கும் அரசாங்கத்தில் தான் சில புல்லுருவிகளும் இருக்கிறார்கள். உதாரணமாகத் தஞ்சையில் சேனாதிபதியாக இருந்த கலங்கமாலரையர் எத்தகைய கேவலமான காரியங்களிலெல்லாம் ஈடுபடுகிறார் தெரியுமா? இதனால் விவேகியாகவும் தர்மநியாயம் தெரிந்தவர்களாகவும் இருக்கும் அமைச்சர்களுக்கு எவ்வளவு சங்கடங்கள் ஏற்படுகின்றன தெரியுமா?” என்றான் ஆதித்தன்.

     “ஆமாம்! அது கொஞ்சம் பரிதாபப்படக் கூடிய விஷயம்தான். அதிலும் மன்னர்கள் அந்தப் புல்லுருவிகளின் வலையில் விழுந்து விடுவதுதான் மிகப் பரிதாபம்...” என்றான் பராந்தகன்.

     “இனிமேல் கலங்கமாலரையரின் சூழ்ச்சிகளெல்லாம் பலிக்காது. தஞ்சை மன்னரின் படைகளெல்லாம் என் மகன் கோளாந்தகன் அதிகாரத்தில் இருக்கின்றன. கலங்கமாலரையர் போர் வீரர்களிடம் மதிப்பு இழந்து விட்டார்” என்றார் புலிப்பள்ளியார்.

     “உயிருக்குப் பயந்து துறவறம் பூண்டவருக்கு எப்படி வீரர்களிடம் மதிப்பு இருக்கும். அதிலும் நல்ல வீரரும் இளைஞருமாகிய உங்கள் குமாரன் சேனாதிபதி பதவிக்கு வந்ததும் இயற்கையாகவே போர் வீரர்களின் மனம் மாறிப் போய் இருக்காதா?” என்றான் பராந்தகன்.

     “இருப்பினும் தஞ்சை அரசருக்குக் கலங்கமாலரையர் மீது இருக்கும் நம்பிக்கையும் அபிமானமும் குறைந்ததாகத் தெரியவில்லையே...” என்றான் ஆதித்தன்.

     “துறவுக்கோலம் பூண்ட பின்னும் தஞ்சை மன்னருக்கு அனுகூலமான காரியங்களைச் செய்ய அவர் பலவித சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அல்லவா? அப்படி இருக்கும் போது மன்னருக்கு அபிமானம் எப்படிக் குறையும்?” என்றான் பராந்தகன்.

     இவ்வளவு நேரமும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அருண்மொழியார் சிரித்துக் கொண்டே மெதுவான குரலில், “தஞ்சை மன்னர் கலங்கமாலரையர் தமக்குச் சாதகமான வழியில் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டிருக்கலாம். உலகமும் நினைக்கலாம் - ஆனால் உண்மை வேறு - பல்லவ மன்னருக்கும் தஞ்சை மன்னருக்கும் விசுவாசமுள்ளவர் போல் நடந்து கொண்டாலும் அவர் பல்லவ மன்னருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும் அவருடைய சகோதரர் சிம்மவர்மருக்கு ஆப்த நண்பர் என்பது உலகத்துக்குத் தெரியாது... இவ்விஷயம் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு நேர் வைரிகளாக இருக்கும் எங்களுக்குத் தான் நன்கு தெரியும்” என்றார்.

     “கலங்கமாலரையர் பல்லவ சாம்ராஜ்யத்தைக் கவிழ்க்கச் சிம்மவர்மரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்கிறாரா...?” என்றார் புலிப்பள்ளியார் பதற்றத்தோடும் கலக்கத்தோடும்.

     அருண்மொழியார் சிரித்துக் கொண்டே, “நியாயமாகப் பார்க்கப் போனால் இந்த அந்தரங்கத்தை உங்களுக்குச் சொல்லக் கூடாது. ஏனென்றால் உங்களுக்கு நான் எதிரி. இருப்பினும் இந்த ரகசியத்தை உங்களிடம் ஏன் சொன்னேனென்றால் நீங்களும் என்னைப் போல் ஒரு அமைச்சர். நீங்கள் கண் விழித்துக் கொள்ள வேண்டும். ஏமாந்தவராகி விடக் கூடாது என்பதற்காகத்தான். தவிர, எங்களுடைய குறிக்கோள் பல்லவ சாம்ராஜ்யத்தைக் குலைக்க வேண்டுமென்பதே, தவிர நந்திவர்மரை அகற்றிவிட்டுச் சிம்மவர்மரைச் சிம்மாசனம் ஏற்ற வேண்டுமென்பதல்ல - உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் கலங்கமாலரையருக்கும், சகோதரருக்குத் துரோகம் நினைக்கும் சிம்மவர்மருக்கும் நாங்கள் ஒரு நாளும் உதவி செய்ய மாட்டோம்” என்று கூறினார்.

     “ஆமாம்! அவர்களால் ஏற்படும் சாதகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. எதிராளிகளைக் கவிழ்க்க நினைத்த அந்தத் துரோகிகள் நம்மையும் தானே கவிழ்க்க நினைப்பார்கள்!...” என்றான் பராந்தகன்.

     “எனக்குக் கலங்கமாலரையர் மீது எப்போதுமே சந்தேகம் உண்டு. ஆனால் இப்பொழுது தான் உண்மையை உணர்ந்து கொண்டேன். இனிமேல் நான் வெகு ஜாக்கிரதையுடன் நடந்து கொள்வேன்” என்றார் புலிப்பள்ளியார்.

     “ஜாக்கிரதையாக நடந்து கொள்வது ஒரு பெரிய காரியமல்ல. இப்படிப்பட்ட மகா துரோகிகளுக்குச் சரியான தண்டனை அளிக்க வழி செய்ய வேண்டும். இவர்களை யெல்லாம் இப்படியே விட்டு விட்டால் மிகவும் கெடுதல்” என்றான் பராந்தகன்.

     “ஆமாம்! தன்னுடைய அரசருக்கு ஒருவன் பெரிய துரோகம் செய்துகொண்டு வருவதை ஒரு அமைச்சர் அறிந்து கொண்ட பின் வாளாவிருப்பது தகாது” என்றான் ஆதித்தன்.

     “நான் பேசாமலிருந்து விடுவேனோ? அந்தக் கலங்கமாலரையனை என்ன பாடு படுத்துகிறேனென்று பாருங்கள்!” என்றார் புலிப்பள்ளியார் ஆத்திரத்துடன்.

     “பதற்றப் படாதீர்கள். அவசரப்பட்டும் ஆத்திரப்பட்டும் எதையும் செய்துவிடக் கூடாது. இன்று கலங்கமாலரையர் வஞ்சக நெஞ்சம் கொண்டு பலவித சூழ்ச்சிகள் செய்தாலும் அவர் துறவற நிலையிலுள்ளார். துறவறம் எய்திய ஒருவன் மீது கண்டபடி குற்றம் ருசுப்பிக்கப்படாமல் அவன் தண்டிக்கப்படுவானானால் உலகம் நிந்திக்கும். ஒரு புனிதமூர்த்தியின் மெய் வழியில் ஏற்பட்ட ஒரு உன்னத மதத்துக்கும் உலகத்தில் இழுக்கு ஏற்படும்” என்றார் அருண்மொழியார்.

     “கலங்கமாலரையரைப் போன்ற துரோகிகளுக்கெல்லாம் இடமளிக்கும் அம்மதம் எப்படிப் புனிதம் உடையதாகும்?” என்றான் பராந்தகன்.

     “அப்படிச் சொல்லாதீர்கள். நெல்லோடு கல் கலந்திருப்பது போல் எல்லா மதத்திலும் இப்படிச் சிலர் இருக்கிறார்கள். நெல்லைத் தூற்றி விட்டால் பதர்கள் அப்பால் போய் விழுவது போல் சத்திய மார்க்கத்தில் பற்றில்லாதவர்கள் அங்கு தரித்து நிற்க முடியாது. அதோடு கெட்டவர்களும் நல்லவர்களோடு சேர்ந்தால் ஒரு வேளை உத்தமர்களாகி விடலாம். நான் சைவ மதத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் புத்தர் பெருமானிடம் பெரும் பக்தி கொண்டவன். வைஷ்ணவர்கள் சொல்வார்கள், பகவான் யுகத்துக்கு யுகம் பிறந்து தர்மத்தை நிலைநாட்டுகிறார் என்று. மக்கள் மனம் குழம்பி நின்ற காலத்தில் அனேக ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இப் புண்ணிய பூமியில் ஒரு புனிதமூர்த்தி அவதரித்தார். புத்தனென்னும் அந்தப் பேரொளி உள்ளத்தாலும் உருவத்தாலும் மக்களின் மனத்தை வசீகரித்தது. ஆயிரம் ஆண்டுகள் சென்ற பின்பும் அக்கருணாமூர்த்தி திருவுருவம் நம் நெஞ்சில் நடமாடுகிறது. அந்தப் புனித வள்ளலின் ஞான மார்க்க உபதேசங்கள் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. இப்படிப்பட்ட புண்ணியமூர்த்தி இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இம்மண்ணகத்தே வந்து பிறப்பாரோ? இன்று அந்தப் புனித வள்ளலின் வழியைப் பின்பற்றும் உத்தம சீலர்கள் இருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் எண்ணிப் பார்க்கும் காலத்தில் நாம் அம்மதத்தைக் கௌரவிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இவ்வளவும் நான் எதற்குச் சொல்கிறேனென்றால் நம்மில் பலர் பல சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். அரசியல் சம்பந்தப்பட்ட வரையில் நாம் ஜன்ம வைரிகளாயினும் மதம் சம்பந்தப்பட்ட வரையில் இத்தகைய பகை உணர்ச்சியை வளர்ப்பது அபாயகரமானதாக முடியும். அரசியல் பகை உணர்ச்சி அரசியலில் உள்ளவர்களை மட்டும்தான் பாதிக்கும். ஆனால் மதத்தில் ஏற்படும் பகை உணர்ச்சி மக்கள் எல்லோரையும் பாதிக்கும். இந்நாட்டில் மதமென்பது பலவித வர்ண வேறுபாடுகளோடு இருந்தாலும் அது பிறவியிலிருந்தே மனிதனோடு ஒட்டிய வாழ்க்கைப் பண்பாடாகி விடுகிறது” என்றார்.

     உணர்ச்சி வசத்தோடு அருண்மொழியார் பேசுவதை ஆவலோடு கேட்டுக் கொண்டு வந்த ஆதித்தன், “தாங்கள் சொல்வதெல்லாம் சரியே. ஆனால் கலங்கமாலரையரைப் போன்ற கயவர்களைத் தண்டிப்பதினால் புத்த மதத்துக்கு என்ன இழிவு ஏற்பட்டு விடப் போகிறது? இதற்காக இவ்வளவு தூரம் நீங்கள் பேச வேண்டிய சிரமம் எதற்கு என்று தான் புரியவில்லை” என்றான்.

     “தஞ்சை மன்னர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர். இன்றுள்ள நிலையில் ஜைன சமயத்தினர்கள் தான் புத்த மதத்தினருக்குப் பூரண வைரிகளாக இருந்து வருகின்றனர். புத்த சமயத்தினர் ஏதேனும் சிறு பிசகு செய்திருந்தால் கூட அதைப் பெரிது பண்ணிக் காட்டுகிறார்கள் சமண மதத்தினர். அப்படி இருக்கக் கலங்கமாலரையரைப் போன்றவர்கள் செய்யும் குற்றத்தை சமயத்தின் பெயரால் போட்டு அச்சமயத்துக்குப் பெரும் இழுக்கைத் தேடுவதையே தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு விடுவார்களோ என்ற பயம். அதனால் தான் சொல்ல வேண்டியிருந்தது. அதுவும் புத்தர் பெருமானிடமுள்ள பெரும் பக்தியின் காரணமாகவே சொன்னேன்.”

     “வாஸ்தவம். நான் கலங்கமாலரையருக்குத் தக்க தண்டனை வாங்கித் தரப் போவது மாத்திரம் நிச்சயம். ஆனால் இதனால் புத்த மதம் இழிவு படுத்தப்பட மாட்டாது என்பதை மதுரை அமைச்சர் நிச்சயம் நம்பலாம்” என்றார் புலிப்பள்ளியார்.

     இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ யாழ் ஒலியும் சதங்கைச் சத்தமும் கேட்டன. அருண்மொழியார் அந்த இனிய நாதம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர் போல் ஆதித்தனின் முகத்தைப் பார்த்தார்.

     ஆதித்தன் சிரித்துக் கொண்டே, “இன்று அமைச்சர்களுக்குச் சாதாரண விருந்தோடு மட்டுமல்ல, மாலையில் நல்ல இசையோடு கூடிய நாட்டிய விருந்தொன்றும் காத்திருக்கிறது. பூம்புகாரிலிருந்து வைகைமாலை என்னும் நாட்டியக் கணிகை வந்திருக்கிறாள். அவளோடு அவளுடைய சகோதரியும் சிறந்த இசைக் கணிகையுமான சுதமதி என்பவளும் வந்திருக்கிறாள்” என்றான்.

     “வைகைமாலையா...?” என்று சிறிது திகைப்படைந்தவர் போல் கேட்டார் புலிப்பள்ளியார்.

     வைகைமாலை என்ற பெயரைக் கேட்டதும் புலிப்பள்ளியார் ஏன் அப்படித் திகைப்படைந்தார் என்பதுதான் பராந்தகனுக்குப் புரியவில்லை. அந்தச் சமயத்தில் அதைப்பற்றிக் கிளறிக் கேட்கக் கூடாது என்று விட்டு விட்டான். அன்று மத்தியானம் விருந்துக்குப் பின் பராந்தகன் புலிப்பள்ளியாரைச் சந்தித்த பொழுது, “இன்று காலை நீங்கள் வைகைமாலையின் பெயரைக் கேட்டதும் அப்படி ஏன் திகைப்படைந்தீர்கள்?” என்று கேட்டான்.

     “நான் திகைப்படையவில்லை. எங்கோ எனக்கு அப்படிப்பட்ட பெயரைக் கேட்டதுபோல் இருந்தது. அதனால் யோசித்தேன்...”

     “ஓகோ! எங்கே அவள் பெயரைக் கேள்விப்பட்டோம் என்று உங்கள் நினைவுக்கு வந்ததா?”

     “அதைத்தான் இன்னும் யோசித்துப் பார்க்கிறேன். நினைவுக்கு வரவில்லை.”

     “இதை யோசித்துப் பார்ப்பானேன்? அவள் ஒரு சிறந்த நாட்டியக்காரி. அவள் பெயர் மிகப் பிரசித்தம். அவளுடைய பெயரை ஒரு வழிப்போக்கன் சொல்லிக் கூட நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்” என்றான் பராந்தகன்.

     பராந்தகன் புலிப்பள்ளியாரோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த சுதமதி பராந்தகனுக்கு நமஸ்காரம் செய்து நின்றாள். சுதமதியைப் பார்த்ததும் புலிப்பள்ளியாரின் முகம் சிறிது மாறியது. அவர் ஏதோ அவமானத்தால் அவள் முகத்தைப் பார்க்க விரும்பாதவர் போல் தம் பார்வையை வேறெங்கோ செலுத்தினார்.

     புலிப்பள்ளியாரின் முக மாறுதலைக் கண்ட பராந்தகன் மனத்தில் ஏதோ சம்சயம் கொண்டவனாக, சுதமதியைப் பார்த்து, “சுதமதி! இவர்களை உங்களுக்குத் தெரியுமா? தஞ்சை முத்தரையரின் அமைச்சர், புலிப்பள்ளி கொண்டார்...” என்றான்.

     சுதமதி சிறிது அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “இவர்களை எனக்குத் தெரியும். ஒரு தடவை இவர்களைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்” என்றாள்.

     பராந்தகன் சிறிது ஆச்சரியமடைந்தவன் போல், “அப்படியா? ஒரு வேளை வைகைமாலைக்கு இவர்களைத் தெரிந்திருக்காது...” என்றான் மெதுவாக.

     “ஏன் அவளுக்கும் இவரை நன்றாகத் தெரியுமே...”

     புலிப்பள்ளியார் அப்பொழுதுதான் ஏதோ ஞாபகத்துக்கு வந்தவர்போல், “தெரியும், தெரியும். இப்பொழுதுதான் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அதுவும் நேரில் பார்த்தவுடன் தான் நினைவுக்கு வந்தது...” என்றார் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே.

     “இருக்கலாம், இருக்கலாம். உங்களைப் போன்ற அமைச்சர்களுக்கு எவ்வளவோ கவலைகள். அதில் இவர்களை யெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டிருப்பது கடினம் தான்” என்றான் பராந்தகன்.

     “அமைச்சர் அவர்கள் எங்களை மறந்திருந்தால் அது நாங்கள் செய்த பாக்கியம்தான். ஆனால் அமைச்சர் பெருமான் எங்களை மறந்துவிட்டது ஆச்சரியம் தான்.”

     “அப்படியென்றால் அமைச்சர் பெருமான் உங்களை மறக்காத அளவுக்கு உங்கள் சந்திப்பின் போது ஏதோ நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றான் பராந்தகன்.

     “அதெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமாகத்தான் இவர்களை ஒரு சமயம் சந்திக்க நேர்ந்தது” என்றார் புலிப்பள்ளியார்.

     “சரிதான். எங்கேனும் தேவாலயங்களில் நாட்டியம் நடந்த சமயத்தில் இவரைச் சந்தித்தீர்களோ?” என்று வினவினான் பராந்தகன்.

     “இல்லை. அமைச்சர் அவர்கள் பூம்புகாரில் எங்கள் மாளிகையிலேயே வந்து சந்தித்தார்கள்” என்றாள் சுதமதி.

     “அப்படியா! விசேஷம் தான். அமைச்சர் பெருமான் உங்கள் மாளிகையையே நாடி வந்தார் என்றால் அதில் ஏதோ விசேஷம் இருக்கத்தான் வேண்டும்” என்றான் பராந்தகன்.

     “விசேஷ மொன்றுமில்லை. எங்கள் மன்னர் வைகைமாலையின் நாட்டியத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தஞ்சை அரண்மனையில் அவளுடைய நாட்டியத்தைக் கண்டு களிக்க விரும்பினார். அதை ஏற்பாடு செய்வதற்காகவே சென்றேன்” என்றார்.

     “அப்படியா? தகுதிதான். அவருடைய ஆவல் வரவேற்கக் கூடியது தான். அதற்கு அமைச்சர் அவர்களே பூம்புகாரிலுள்ள வைகமாலையின் மாளிகையைத் தேடிச் சென்றதும் உசிதம் தான். தஞ்சை மன்னர் எதிரே நாட்டியம் ஆடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் வைகைமாலையின் பாக்கியம்தான்” என்றான் பராந்தகன்.

     “அந்த பாக்கியம் வைகைமாலைக்குக் கிட்டவில்லை” என்றாள் சுதமதி.

     பராந்தகன் ஆச்சரியம் அடைந்தவன் போல் புலிப்பள்ளியாரின் முகத்தைப் பார்த்தான். புலிப்பள்ளியார் சிறிது ஆத்திரம் மிகுந்தவராக, “ஆமாம், அவளுக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லைதான். வலுவில் வரும் ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளினாற்போல் தஞ்சை அரண்மனையில் நாட்டியம் ஆட அவள் மறுத்துவிட்டாள். ஒரு பெரிய அரசாங்கத்தின் அமைச்சனாக விளங்கும் நானே அவர்கள் வீடு தேடிச் சென்று அழைப்பதைச் சிந்தித்துப் பார்க்காமல் அலட்சியம் செய்து விட்டார்கள்” என்றார் மிகுந்த கோபத்தோடு.

     “நாங்கள் அலட்சியம் செய்யவில்லை. நீங்கள் தேடி வந்ததும் உங்களை மிகவும் பய பக்தியோடுதான் உபசரித்தோம். வராத மனிதர் வீடு தேடி வரும்போது அலட்சியமாக இருப்போமா? ஆனால் அமைச்சர் பெருமானின் விருப்பத்துக்கு நாங்கள் இணங்க முடியவில்லை” என்றாள் சுதமதி.

     “எங்கள் மன்னரின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாதது எங்களுக்கு அவமானமில்லையா? எங்களை அலட்சியம் செய்ததாகாதா? வைகைமாலை தஞ்சை அரண்மனைக்கு வர மறுத்தது கூட மனத்துக்கு வருத்தத்தை அளிக்கவில்லை. ஆனால் அவளுடைய வார்த்தைகள் தான் என் மனத்தை மிகவும் புண்ணாக்கிவிட்டன” என்றார் அவர் துடிப்போடு.

     புலிப்பள்ளியாருக்கும் சுதமதிக்கும் ஏற்பட்ட விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த பராந்தகன் சிறிது பொறுமை இழந்தவனாக, “வைகைமாலை உங்களை அவமானப்படுத்தும் வண்ணம் எத்தகைய தகாத வார்த்தைகளைக் கூறினாள் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று கூறினான்.

     “அவளுடைய கர்வம் நிறைந்த வார்த்தை என்னை மாத்திரம் அவமானப்படுத்துவதாக இல்லை. தஞ்சை மன்னரையும், ஏன், பல்லவர்கோனையும் அவமானப்படுத்துவதாக இருந்தது...” என்றார் பதைபதைப்போடு.

     “அப்படியா...? அவள் அப்படி என்ன தகாத வார்த்தைகள் கூறினாள் என்பதைத்தான் நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான் பராந்தகன்.

     “என் நெஞ்சு துடிக்கிறது. அவள் சொல்லிய வார்த்தைகளை மறுபடியும் எடுத்துக் கூறக் கூட என் நா தயங்குகிறது. ‘நாங்கள் பரம்பரையாகச் சோழர்களின் சபையில் நாட்டியமாடுவதைத்தான் கௌரவமாகக் கருதி வந்திருக்கிறோம். சோழ சாம்ராஜ்யம் நிலைகுலைந்த பின் கொடும்பாளூர் அரண்மனையிலோ அல்லது தேவாலயங்களிலோ நாட்டியமாடுவதைத்தான் கௌரவமாகக் கருதுகிறோம்’ என்றாள். அதோடு மட்டுமல்ல, ‘தஞ்சை மன்னரென்ன, பல்லவ மன்னரே பல்லக்கு அனுப்பி வைத்தாலும் போக மாட்டோம்’ என்றாள். இதைக் கேட்டு நான் சகிக்க முடியுமா...? அதோடு மட்டுமல்ல, ‘உங்கள் மன்னர் என் நாட்டியத்தைப் பார்க்க விரும்பினால் என் மாளிகைக்கு வரச் சொல்லுங்கள். அல்லது எங்கேனும் தேவாலயங்களுக்கு வரச் சொல்லுங்கள்...’ என்றாள். அவளுக்கு எவ்வளவு மமதை? இதைக் கேட்டு நான் எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்?” என்றார் புலிப்பள்ளியார்.

     “இது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான். சுதமதி! அமைச்சருக்குக் கொஞ்சம் முன் கோபம் உண்டு. அதனால் அப்படிச் சொல்லியிருப்பார்கள். அவ்வளவு கோபத்தோடு சென்றவர் அப்புறம் உங்களையே மறந்து விட்டார், பார்த்தீர்களா? இப்படித்தான் தங்கள் மன்னர் மீது இருக்கும் விசுவாசத்தின் காரணமாக அவர்கள் கோபத்தோடு பேசுவது வழக்கம். இதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம்!” என்றான் பராந்தகன்.

     “என்ன இருந்தாலும் நாங்கள் ஸ்திரீகள் தானே? ஒரு பெரிய அரசாங்கத்தின் பொல்லாப்பு எங்களுக்கு ஏற்பட்டால் பயப்படாமல் எப்படி இருக்க முடியும்?” என்றாள் சுதமதி.

     “நீங்கள் சாதாரண ஸ்திரீகளா? பெரிய சூழ்ச்சிக்காரர்கள். பல்லவ சாம்ராஜ்யத்தையும் தஞ்சை மன்னரின் ஆட்சியையும் குலைக்க யார் யார் பாடுபடுகிறார்களோ, அவர்களெல்லாம் உங்களுக்குச் சினேகிதர்கள்” என்றார் புலிப்பள்ளியார் கோபத்தோடு.

     “அப்படியா... சாதாரணமாக ஒரு புகழ் பெற்ற நாட்டியக் கணிகைக்குப் பலதரப்பட்டவர்கள் நண்பர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொள்ளலாமா?” என்றான் பராந்தகன்.

     “நான் தவறான அபிப்பிராயத்தோடு பேசவில்லை. வைகைமாலை சிலரோடு சேர்ந்து பல்லவ சாம்ராஜ்யத்தையும் தஞ்சை முத்தரையரின் ஆட்சியையும் குலைக்கச் சதி செய்கிறாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். பூதுகன் என்ற நாஸ்திகவாதிக்கும் வைகைமாலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்றார் புலிப்பள்ளியார்.

     “பூதுகர் வைகைமாலையின் நாயகர். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதைப் பற்றிச் சந்தேகப்பட என்ன இருக்கிறது? ஒரு மனிதர் தம் காதலியைக் காணுவதற்காக அவள் வீட்டுக்கு வருவது கூடப் பிசகா?” என்று கேட்டாள் சுதமதி.

     “பூதுகனைப் போன்றவர்களை, உங்களைப் போன்றவர்களெல்லாம் ஆதரிக்கும் வரையில், அவனைப் போன்ற நாஸ்திகவாதிகளை இந்நாட்டில் விட்டு வைக்கும் வரையில் நம்முடைய தர்மமே சீர்குலைந்து நாசமாகிவிடப் போகிறது...” என்றார் புலிப்பள்ளியார்.

     “நமது தர்மம் என்று எதைச் சொல்லிக் கொள்கிறோமோ, அது குலையாமல் இருப்பதற்கு அதன் காவலர்கள் ஒழுங்காக இருந்தாலே போதும். அதுதான் முக்கியம். எதிராளிகள் அதை அழித்து விடுவார்கள் என்று பயப்படவே வேண்டாம். தவிர, பூதுகரின் தர்மமும் நமது தர்மத்திலிருந்து பிறந்த தர்மம்தான்; ‘இருக்கிறது’ என்ற தத்துவத்திலிருந்து தான் ‘இல்லை’ என்ற தத்துவம் பிறந்திருக்கிறது. ‘இருக்கிறது’ என்று சொல்ல ஒருவன் இருக்கிற வரையில் ‘இல்லை’ என்று சொல்ல ஒருவன் இருப்பான். உலகம் உள்ள வரையில் இந்த வாதப் பிரதிவாதம் இருந்து கொண்டுதானிருக்கும். அப்படி இருந்தால் தான் சிறந்த தர்மங்கள் வளர்ந்து சீர்திருத்தம் அடையும்” என்றான் பராந்தகன்.

     “பூதுகர் நாஸ்திகவாதியாயினும் அவருடைய நடத்தையில் பிசகு சொல்ல முடியாது. அவருடைய செயல்கள் சத்தியத்தையும் நன்னெறியையும் கடைப்பிடிப்பனவாகத்தான் இருக்கும்...” என்றாள் சுதமதி.

     “கடவுள் இல்லை என்று சொல்லுவது கூடக் குற்றமாகாது. சத்தியமும் சீலமும் காப்பாற்றப் பட்டால்தான் நமது தர்மம் காப்பாற்றப் பட்டதாகும்” என்றான் பராந்தகன்.

     சுதமதியின் வார்த்தைகளையும் பராந்தகனின் சொற்களையும் கேட்டுக் கொண்டிருந்த புலிப்பள்ளியாரால் தம் மனப் புகைச்சலை அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. “நீங்கள் பூதுகனுக்குப் பரிந்து பேசுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவனுடைய நாஸ்திக தர்மத்தைப் பற்றி நான் பேசவரவில்லை. ஆனால் அவன் இந்நாட்டில் மறுபடியும் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று கனவு காண்கிறான். அதனால் தான் அவனிடம் உங்களுக்குப் பற்றுதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவனை நாங்கள் இப்படியே விட்டு வைத்திருக்க முடியாது. இன்று அவன் காஞ்சியில் கலங்கமாலரையரின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியாது. கலங்கமாலரையன் கையில் சிக்கிய யாரும் தப்பி வாழ முடியுமா? இன்று பூதுகன் உயிரோடு இருக்கிறானோ இல்லையோ என்று சந்தேகம்...” என்றார் ஆத்திரத்தோடும் கர்வத்தோடும்.

     புலிப்பள்ளியாரின் வார்த்தையைக் கேட்ட சுதமதி ‘ஹா’ என்று வீறிட்டுக் கத்தினாள். சுதமதியின் அலறலைக் கேட்டுப் பக்கத்து அறையில் பேசிக் கொண்டிருந்த வைகைமாலையும் அருந்திகைப் பிராட்டியும் பதற்றத்தோடு ஓடி வந்தார்கள்.