மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 6 - “மாலவல்லியா?”

     வைகைமாலையும் அருந்திகையும் அங்கு வந்த சமயம் சுதமதி பிரக்ஞை இழந்தவளாகத் தரையில் கிடந்தாள். பராந்தகன் பதற்றமடைந்தவனாக நின்று கொண்டிருந்தான். புலிப்பள்ளியார் ஏதோ குற்றம் செய்துவிட்டவர் போல் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தார். வைகைமாலையும் அருந்திகையும் அங்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே வியப்போடும் பரபரப்போடும் பராந்தகனின் முகத்தைப் பார்த்தனர். புலிப்பள்ளியாரைப் பார்த்ததுமே வைகைமாலையின் முகம் சுருங்கிப் போய்விட்டது.

     அந்த சமயத்தில் அங்கு நடந்த விவரங்கள் அத்தனையும் வைகைமாலையிடம் சொல்லுவது நல்லதல்ல என்று தோன்றியது. “ஒன்றுமில்லை, தஞ்சை அமைச்சரவர்கள் அவர் இயற்கையாக உள்ள முன்கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டார். அதைக் கேட்டுச் சுதமதி மூர்ச்சையுற்றாள்” என்றான் பராந்தகன்.

     “ஒரு அமைச்சராக இருப்பவருக்கு, ஒரு பெண் எதிரில் எத்தகைய வார்த்தைகள் சொல்லலாம் என்று தெரியாமல் போனதுதான் விந்தை!” என்றாள் அருந்திகைப் பிராட்டி.

     “தஞ்சை அமைச்சர் எங்களை ஏதோ ஒரு வழியில் பழி தீர்க்க நினைக்கிறார் என்பதை நான் கொஞ்ச நாட்களாக அறிவேன். எங்களைப் போன்ற பெண்களிடம் அவருடைய வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள நினைப்பதுதான் விநோதம்” என்றாள் வைகைமாலை மிகுந்த ஆத்திரத்துடன்.

     “இப்பொழுது இதையெல்லாம் பற்றிப் பேசுவதற்குரிய சந்தர்ப்பமல்ல. முதலில் மூர்ச்சையுற்ற சுதமதியைப் போய்க் கவனிக்க வேண்டும்” என்றான் பராந்தகன்.

     வைகைமாலை கீழே விழுந்து கிடந்த சுதமதிக்குச் சமீபமாக உட்கார்ந்து அவளுடைய தலையை எடுத்துத் தன் மடி மீது வைத்துக் கொண்டாள். “அக்கா! இப்படி மயக்கம் போட்டு விழும்படியாக அமைச்சர் சொன்ன வார்த்தைதான் என்ன?” என்று கேட்டாள்.

     அங்கிருந்து அருந்திகைப் பிராட்டி ஓடோடிச் சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தாள். அவளுக்குப் பின்னால் அனுபமாவும் நாலு அரண்மனைத் தாதிகளும் ஓடோடி வந்தனர். சில விநாடியில் ஆதித்தனும் அருண்மொழியாரும் அரண்மனை வைத்தியரும் இன்னும் பலரும் அந்த இடத்தில் கூடிவிட்டனர்.

     ஆதித்தன் என்ன நடந்தது என்று விசாரித்த போது பராந்தகன் அவன் காதோடு ஏதோ சொன்னான். ஆதித்தன் வியப்பும் திகைப்பும் அடைந்தவனாகச் சிறிது நேரம் நின்று விட்டுத் தன்னை ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டான். புலிப்பள்ளியாரைப் பார்த்து, “கொஞ்சம் என்னோடு வாருங்கள், போவோம்” என்று அவரை அழைத்துக் கொண்டு சென்றான். புலிப்பள்ளியாரும் வேறு வழியில்லாதவராய் அவனோடு சென்றார்.

     அருண்மொழியார் அங்கு ஏதோ நடந்திருப்பதை உணர்ந்து அந்தச் சந்தர்ப்பத்தில் தாம் அங்கு இருப்பது உசிதமாகாதோ என்று எண்ணியவராக மெதுவாக நகர்ந்தார்.

     உடனே பராந்தகன், “நீங்கள் சிறிது நேரம் இங்கே இருப்பது நல்லது” என்றான். அருண்மொழியாரும் அவன் விருப்பத்துக்கு இணங்கி இருக்கச் சம்மதித்தார். பராந்தகன் அங்கு கூடி இருந்த மற்றவர்களைச் சமிக்ஞை செய்து அனுப்பினான்.

     அருந்திகைப் பிராட்டி தான் கொண்டு வந்த தண்ணீரைச் சுதமதியின் முகத்தில் தெளித்து துடைத்தாள். சுதமதி மெதுவாகக் கண் விழித்துச் சுற்றிலும் பார்த்துவிட்டுச் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

     புலிப்பள்ளியார் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் தான் அதிர்ச்சியினால் மூர்ச்சையுற்று விழுந்தது எல்லாவற்றையும் உணர்ந்தாள். புலிப்பள்ளியாரின் வார்த்தைகளை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரவே அவளுக்குப் பயங்கரமாக இருந்தது. மறுபடியும் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொள்வதே அவளுக்கு மிகக் கடுமையானதாகப் பட்டது. தனக்கு அருகில் தன் சகோதரி வைகைமாலை உட்கார்ந்திருப்பதை அவள் உணர்ந்து கொண்டாள். வைகைமாலையின் முகத்தைப் பார்க்கவே அவள் நெஞ்சில் திடம் ஏற்படவில்லை. அவள் கண்களில் கண்ணீர்தான் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

     சுதமதியின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகுவதைக் கண்ட வைகைமாலை திகிலும் குழப்பமும் அடைந்தவளாக, “அக்கா! ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது? புலிப்பள்ளியார் என்ன சொன்னார்?” என்று கேட்டாள்.

     புலிப்பள்ளியார் பூதுகனைப் பற்றித் தன்னிடம் சொல்லியதை வைகைமாலையிடம் சொன்னால் என்ன நேருமோ என்று பயந்தவளாக, “நாம் தஞ்சை மன்னரின் விருப்பத்துக்கு இணங்க அவருடைய சபையில் சென்று நாட்டியமாடுவதற்கு மறுத்ததற்காக நம்மைச் சரியானபடி பழிவாங்கப் போவதாகச் சொன்னார். அவருடைய வார்த்தைகளை என்னால் பொறுக்க முடியவில்லை. மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். வேறொன்றும் இல்லை” என்றாள் சுதமதி.

     புலிப்பள்ளியார் தன்னிடம் பூதுகனைப் பற்றிச் சொல்லியவைகளைச் சுதமதி அப்படியே சொல்லி அவளுக்கும் கலக்கத்தை உண்டாக்கி விடுவாளோ என்று பயந்தான் பராந்தகன். சுதமதி வைகைமாலையிடம் வேறு ஏதோ சொல்லி மழுப்பிவிட முயல்வதைப் பராந்தகன் பார்த்து மன ஆறுதல் அடைந்தான். “அந்த மனிதர் மிகவும் முன்கோபக்காரராகவும் பதற்ற சுபாவமுள்ளவராகவும் இருக்கிறார். இப்படிப்பட்ட குணசீலர்களுக்குத் தான் அமைச்சர் பதவியும் கிடைக்கிறது. எந்த மன்னனுக்கு அழிவு காலம் நெருங்குகிறதோ, அவனுக்குத் தான் இப்படிப்பட்ட மந்திரிகளெல்லாம் அமைவார்கள். சரி! சுதமதி மிகவும் களைப்போடிருக்கிறாள், அருந்திகை! அவளை மெதுவாக அந்தப்புரத்துக்கு அழைத்துப் போ. அவளிடம் யாரும் எதுவும் கேட்க வேண்டாம். முதலில் அவளுடைய உடல் நிலை சரியாகட்டும்” என்றான். அருந்திகையும் வைகைமாலையும் சுதமதியை அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றனர்.

     எல்லோரும் சென்ற பின் பராந்தகனும் அருண்மொழியாருமே தனித்திருந்தனர். பராந்தகன் ஆழ்ந்த சிந்தனையிலுள்ளவன் போல் அமர்ந்திருந்தான். அவன் நிலையை உணர்ந்த அருண்மொழியார் அடக்கமான குரலில், “புலிப்பள்ளியார் இப்படியெல்லாம் ஒரு குழப்பத்தை விளைவிப்பார் என்று நான் நினைக்கவேயில்லை. அவருடைய வீண் மிரட்டல்களுக்கு இந்தப் பெண் இப்படிப் பயப்பட்டிருக்க வேண்டாம்...” என்றார்.

     “புலிப்பள்ளியார் கூறிய வார்த்தைகள் வீண் வார்த்தைகளல்ல. எனக்கே சிறிது குழப்பத்தையும் அச்சத்தையும் விளைவிக்கக் கூடியதாய்த்தான் இருந்தன. தஞ்சை மன்னரைச் சேர்ந்தவர்களின் சூழ்ச்சி உச்ச நிலையை அடைந்திருப்பதாகத்தான் தெரிகிறது.”

     “சாம்ராஜ்ய விஷயங்களில் அவர்கள் சூழ்ச்சி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதாரண நாட்டியக் கணிகையர்களாகிய பெண்களை ஏன் அவர்கள் விரோதிகளாகக் கருதுகின்றனர்?” என்றார் அருண்மொழியார்.

     “சாதாரண நாட்டியக் கணிகையர் என்றால் அவர்களுக்குப் பயமிருக்காது. ஆனால் வைகைமாலை அப்படிப்பட்டவளல்ல. நாட்டில் அவளுக்கு நல்ல புகழ் இருக்கிறது. அதோடு அவள் சோழ பரம்பரையினரையும் கொடும்பாளூராரையும் மிகவும் மதிக்கிறாள்...” என்றான் பராந்தகன்.

     “பாவம்! இதற்காக என்ன செய்யமுடியும்? இயற்கையாக அந்தப் பெண்களின் இருதயம் அப்படி இருக்கிறது...” என்று சொன்னார் அருண்மொழியார்.

     “உங்களுக்குப் பூதுகரைப் பற்றித் தெரியுமா?” என்று வியப்போடு கேட்டான்.

     “ஆகா! தெரியும்!”

     “அவர் ஒரு நாஸ்திகவாதி என்று தானே உங்களுக்குத் தெரியும்?”

     “இல்லை. அவர் அரசியல் சூழ்ச்சிக்காரர் என்றும் எனக்குத் தெரியும்!”

     “அவரோடு உங்களுக்குப் பழக்கம் ஏதாவது உண்டா?”

     “எப்பொழுதோ ஒரு தடவை பார்த்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இப்பொழுது காஞ்சியில் இருப்பதாகக் கூட எனக்குச் செய்தி எட்டியிருக்கிறது” என்றார் அருண்மொழியார்.

     “அவர் காஞ்சியில் இருப்பதாக உங்களுக்குச் செய்தி எட்டி இருக்கிறதா? அவர் சௌக்கியமாகத்தானே இருக்கிறார்? அவர் இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியுமா?” என்றான் பராந்தகன் பதற்றத்துடன்.

     “எனக்குப் பத்து தினங்களுக்கு முன் உளவாளிகள் மூலம் செய்தி கிடைத்தது. அவர் காஞ்சி யாத்திரீகர்கள் விடுதியில் தங்கி இருப்பதாகத்தான் எனக்குச் செய்தி கிடைத்தது. அவருடைய நலனுக்கு என்ன கெடுதல் ஏற்பட்டிருக்கப் போகிறது?”

     “பூதுகர் மிகவும் சாமர்த்தியசாலியாக இருந்தாலும் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகராகிய காஞ்சியில் அவருக்கு அபாயம் இருந்து கொண்டுதானே இருக்கும்!” என்றான் பராந்தகன்.

     “அது உண்மை. அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விட்டதா?”

     “அது நிச்சயமாகத் தெரியவில்லை. பூதுகர் கலங்கமாலரையரின் கையில் சிக்கி இருப்பதாகவும் இவ்வளவு நாள் அவர் உயிரோடு இருப்பதே துர்லபம் என்றும் புலிப்பள்ளியார் சொன்னார். இந்த வார்த்தையைக் கேட்டுத்தான் மனம் பொறுக்காமல் சுதமதி மூர்ச்சையுற்று விழுந்தாள்!” என்றான் பராந்தகன்.

     “அப்படியா...? பூதுகருக்கு ஏற்பட்ட ஆபத்தைக் கேட்டதும் சுதமதி மூர்ச்சையுற்றாள் என்றால் அவளுக்கும் அவருக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டோ...”

     “சுதமதிக்கும் பூதுகருக்கும் அவ்வளவு நெருங்கிய சம்பந்தமில்லை. ஆனால் அவர் வைகைமாலையின் காதலர்!”

     “அப்படியா! இந்தச் செய்தியை வைகைமாலை கேட்காதவரையில் நல்லதாகப் போய்விட்டது. இந்தச் செய்தியை அவளே கேட்டிருந்தால் இன்னும் எப்படி முடிந்திருக்குமோ?”

     “இன்னும் அந்த அபாயம் நீங்கிவிட வில்லை. இந்தச் செய்தியைச் சுதமதி அவளிடம் தெரிவித்து விட்டால் எப்படி முடியுமோ என்ற பயம் தான் எனக்கு!” என்றான் பராந்தகன்.

     “சுதமதி தன் தங்கையிடம் சொல்ல மாட்டாள். இந்தச் செய்தியைக் கேட்டதும் தன் நிலையே இப்படியாகி விட்டதே, வைகைமாலை இதைக் கேட்டதும் எப்படிப் பொறுப்பாள் என்று அவளுக்குத் தெரியாதா? சுதமதி ஒருபோதும் இதை வைகைமாலையிடம் சொல்ல மாட்டாள்.”

     “சொல்லாமலிருந்தால் நல்லதுதான். ஆனால் இவ்விஷயத்தில் அப்பெண்களை நாம் சமாதானம் செய்து கொண்டிருப்பதுதான் நல்லது.”

     “அது மாத்திரம் போதாது. உண்மையாகவே பூதுகருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்” என்றார் அருண்மொழியார்.

     “ஆம்! புலிப்பள்ளியாரிடமிருந்தும் இன்னும் சில உண்மைகளை அறிந்து கொள்ளலாம்...” என்றான் பராந்தகன்.

     “அவரிடமிருந்து ரகசியங்களைக் கிரகிப்பது அவ்வளவு கஷ்டமல்ல. அவருக்கு அடிக்கடி கோபம் வரும்படியாகப் பேசிக் கொண்டிருந்தால் போதும். எல்லா ரகசியங்களும் வெளியாகிவிடும்.”

     “சரி, வாருங்கள்! அவரைச் சந்திப்போம்” என்று அருண்மொழியாரை அழைத்துச் சென்றான் பராந்தகன்.

     சுதமதியை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்ற அருந்திகை சிறிது நேரம் மஞ்சத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளும்படி வேண்டினாள். ஆனால் சுதமதி அதை விரும்பவில்லை. அவள் மிகுந்த மனக் குழப்பம் உடையவள் போலிருந்தாள். அவள் முகத்திலிருந்த வாட்டமும், கண்களிலிருந்த கலக்கமும் அப்படியே இருந்தன. தன் சகோதரியின் நிலையை உணர்ந்த வைகைமாலையின் மனத்திலும் ஏதோ திகிலும் குழப்பமும் ஏற்பட்டன. புலிப்பள்ளி கொண்டாரின் வார்த்தைகள் சாதாரண மிரட்டலல்ல. ஏதோ திடுக்கிடும் வண்ணம் தான் சொல்லியிருக்கிறார் என்று அவள் உணர்ந்து கொண்டாள். சாதாரண மிரட்டல் எதற்குமே சுதமதி அஞ்சியவள் அல்ல. இப்படி அவள் நிலைகுலைந்து மயக்கமுற்று விழுந்ததற்குக் காரணம் ஏதோ பயங்கரமானதாகத்தானிருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதைச் சுதமதியிடம் கிளறிக் கேட்டு அறிந்து கொள்ள அவள் உள்ளம் துடித்தது. இருப்பினும் அவளை எதேனும் வற்புறுத்திக் கேட்டால் அவள் மறுபடியும் மயக்கமுற்று விழுந்து விடுவாளோ என்று பயந்தாள். இவ்விஷயத்தைச் சுதமதியைக் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட அருந்திகை மூலம் பராந்தகனைக் கேட்டுத் தெரிந்து கொண்டு விடலாம் என்று அவள் எண்ணினாள். அவள் மெதுவாக அருந்திகையைத் தனிமையில் அழைத்துக் கொண்டு போய், “அக்காவுக்கு ஏக்கம் வரும்படி புலிப்பள்ளியார் என்னதான் சொல்லியிருப்பார்?” என்று கேட்டாள்.

     “என்ன சொல்லி இருப்பார்? அவர் சொல்லியதைத்தான் அவள் சொன்னாளே? ‘எங்கள் அரச சபையில் நீங்கள் நாட்டியமாட மறுத்ததினால் உங்களைச் சிரசாக்கினை செய்து விடுகிறேன்’ என்று சொல்லியிருப்பார். இந்த வெறும் மிரட்டலுக்குச் சுதமதி இப்படிப் பயப்பட்டிருக்க வேண்டாம்” என்றாள் அருந்திகைப் பிராட்டி.

     “புலிப்பள்ளியார் அப்படி மிரட்டியிருக்க மாட்டார். அதைப் போன்ற மிரட்டல்களையெல்லாம் நாங்கள் நிறையக் கேட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் அவள் பயப்பட மாட்டாள். அவர் வேறு ஏதோ சொல்லியிருக்கிறார். நிச்சயம் அது அவள் மனத்தைக் கலக்கக்கூடிய விஷயமாகத்தான் இருக்க வேண்டும்” என்றாள் வைகைமாலை.

     “அப்படியா? அவர் வேறு என்ன தான் சொல்லி இருப்பார் என்று நீ நினைக்கிறாய்?”

     “அதுதான் தெரியவில்லை. அதை அவளிடம் கிளறிக் கேட்கவும் அச்சமாக இருக்கிறது. புலிப்பள்ளியார் என்ன சொன்னார் என்று இளைய மன்னருக்குத் தெரியுமல்லவா? நீங்கள் தான் இதை அவரிடம் மெதுவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து என்னிடம் சொல்ல வேண்டும்” என்றாள் வைகைமாலை.

     “அவர் என்னிடம் சொல்லமாட்டார். ஒருவேளை நானும் அவ்விஷயத்தைக் கேட்டு மயக்கமுற்று விழுந்து விடுவேனோ என்று பயப்படுவார்” என்றாள் அருந்திகை சிரித்துக் கொண்டே.

     “‘நான் மயக்கமுற்று விழவில்லை. என்னிடம் சொல்லுங்கள்’ என்று சொன்னால் அவர் உங்களிடம் சொல்லி விடுவார்” என்றாள் வைகைமாலை.

     “சரி! நான் கேட்டுப் பார்க்கிறேன். தஞ்சை மன்னரைச் சேர்ந்தவர்கள் செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் எப்பொழுதும் விநோதமாகவும் நினைக்கக் கூடாததாகவும் இருக்கும். அதிலும் புலிப்பள்ளியாரும் கலங்கமாலரையரும் செய்யும் காரியங்கள் மிக விநோதமாகத்தான் இருக்கும். கலங்கமாலரையர் ஒரு துறவி போல் வேடம் போட்டுக் கொண்டு திரிகிறார். புலிப்பள்ளியாரோ துறவுக் கோலம் பூண்ட ஒரு பெண்ணைத் தம் மகனுக்கு மணம் முடித்து வைக்கப் பார்க்கிறார். என்ன விந்தை!” என்றாள், அருந்திகை பெருமூச்சு விட்டபடியே.

     “இவர் தம் மகனுக்குத் துறவுக் கோலம் பூண்ட பெண்ணை மணம் முடித்து வைக்கப் பார்க்கிறாரா? அந்தப் பெண் யார்?” என்றாள் வைகைமாலை.

     “அவள் ஒரு புத்தபிக்ஷுணி, நந்திபுர நகரத்து இடங்காக்கப் பிறந்தாரின் மகள். அவள் பெயர் திருபுவனி. அவள் அழகாக இருக்கிறாள். அதோடு மிகவும் புத்திசாலியாகவும் தெரிகிறது. ஏன் தான் அவளுக்கு இந்த யௌவன வயதில் துறவறத்தில் பற்றுதல் ஏற்பட்டதோ?”

     “அப்படியா? அவள் இப்பொழுது எங்கே இருக்கிறாள்?”

     “இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையில்தான் இருக்கிறாள்.”

     “குடும்பத்திலிருக்கும் பெண்ணுக்கு எப்படித் துறவு வேஷத்தில் பற்றுதல் ஏற்பட்டது?”

     “அவள் குடும்பத்திலிருந்தவள் இல்லை. இப்பொழுதுதான் இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையில் இருக்கிறாள். அவள் சிறு குழந்தையாக இருக்கும்பொழுதே கள்வர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். அவள் புத்தப் பள்ளியில் சேர்ந்து புத்த பிக்ஷுணியாகி விட்டாள். இப்பொழுதுதான் அவள் அகப்பட்டாள். நெடு நாட்களுக்குப் பிறகு அகப்பட்ட தம் மகளைத் துறவறக் கோலத்துடனேயே தம் மாளிகையில் சிறைப்பிடித்து வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார் இடங்காக்கப் பிறந்தார். அதோடு மட்டுமல்ல, துறவுக் கோலத்திலுள்ள அவளைக் கல்யாணம் செய்து கொடுக்கவும் துணிந்துவிட்டார். புலிப்பள்ளியாரும் தம் மகன் கோளாந்தகனுக்கு அவளை மனைவியாக்கி வைக்கத் தீர்மானித்து விட்டார். இது விந்தையாக இல்லையா...?”

     “விந்தைதான். நெடு நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? அவள் எங்கே இருந்தாள்...?” என்றாள் வைகைமாலை.

     “அவள் உங்கள் ஊரில் - காவிரிப்பூம்பட்டினத்துப் புத்த சேதியத்திலிருந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்...”

     “காவிரிப்பூம்பட்டினத்துப் புத்த சேதியத்திலா...?” என்று சொல்லித் திகைப்படைந்து நின்றாள் வைகைமாலை.

     “ஆம்! இதைக் கேட்டதும் ஏன் இப்படி ஆச்சரியத்தில் மூழ்கி விட்டாய்? அந்தப் பெண்ணை உனக்குத் தெரியுமா?” என்றாள் அருந்திகை.

     “அவள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்...?”

     “அவள் பெயரா? திருபுவனி.”

     “திருபுவனியா...? தன் பெயர் திருபுவனி என்று அவளே சொன்னாளா...?”

     “அவள் சொல்லவில்லை. ஆனால் எல்லோரும் அவளை அப்படித்தான் அழைத்து வருகிறார்கள்.”

     “உண்மையாகவே அவள் இடங்காக்கப் பிறந்தாரின் மகள் என்று உங்களுக்குத் தெரியுமா...?”

     “அதுவும் எல்லோரும் சொல்லிக் கொள்வதினால் தான் தெரியும். எனக்குக் கூட அந்த விஷயத்தில் கொஞ்சம் சந்தேகம்தான். அவளை வேறு எங்கோ பார்த்த ஞாபகமாகக் கூட இருக்கிறது.”

     “அப்படியா...? அவள் எங்கேயாவது யாழ் வாசித்துக் கேட்டிருக்கிறீர்களா?” என்றாள் வைகைமாலை.

     “நீ கேட்பதைப் பார்த்தால் அந்தப் பெண்ணை உனக்குத் தெரியும் போலிருக்கிறதே...” என்றாள் அருந்திகை மிகுந்த ஆச்சரியத்துடன்.

     “எனக்கொரு சந்தேகம். நான் நினைக்கும் பெண்ணாக இருந்தால் அவள் யாழ் வாசிப்பாள். அவள் பெயர் திருபுவனியல்ல...”

     “அவள் யாழ் வாசிப்பாளா...? எனக்குத் தெரிந்தவரையில் உன் சகோதரி சுதமதி யாழ் வாசிப்பதைக் கேட்டிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் என் தகப்பனார் இருந்த போது பழையாறை நகரில் இந்திர விழாவில் பல்லவ மன்னர் சபையிலிருந்த இசைக் கணிகை ஒருத்தி வந்து யாழ் வாசித்தாள். அதைக் கேட்டிருக்கிறேன். அவள் பெயர் மறந்து விட்டது. அவள் சோழ மன்னர்கள் சபையில் பிரசித்தி பெற்ற நாட்டியக் கணிகையாய் இருந்த அலையூர் கக்கையின் பேத்தி என்று என் தகப்பனார் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். ஆமாம்! இப்பொழுது கொஞ்சம் ஞாபகம் வருகிறது. அந்த அலையூர் கக்கையின் பேத்தி இடங்காக்கப் பிறந்தாரின் பெண் திருபுவனியைப் போல்தான் இருந்தாள்...” என்றாள் அருந்திகை.

     “இப்பொழுது என் சந்தேகம் நிவர்த்தியாகி விட்டது. இடங்காக்கப் பிறந்தாரின் மாளிகையில் இருக்கும் பெண் உண்மையில் அவருடைய மகள் திருபுவனியல்ல. அலையூர் கக்கையின் பேத்திதான். அவள் பெயர் மாலவல்லி” என்றாள் வைகைமாலை.

     “மாலவல்லியா...? அவளை உனக்குத் தெரியுமா...?” என்று அருந்திகை கேட்டுக் கொண்டிருக்கும் போது பராந்தகன் அங்கு வந்தான். வைகைமாலை அருந்திகையைப் பார்த்துக் கண் ஜாடை காட்டி, “மறந்துவிடாதீர்கள். அதைக் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றாள்.

     அருந்திகை பிராட்டியோடு பேச வேண்டுமென்ற எண்ணத்துடன் பராந்தகன் அங்கு வரவில்லை. வைகைமாலையின் நிலை எப்படி இருக்கிறது என்பதைக் கவனிப்பதற்காகவே தான் அவன் அங்கே வந்தான். பராந்தகன் அங்கு வந்ததும் இளங் காதலர்கள் இருவருக்கிடையே நாம் இருக்கக் கூடாது என்று உணர்ந்தவள் போல் வைகைமாலை அவ்விடத்தை விட்டுச் சென்றதைப் பராந்தகன் உணர்ந்தான். வைகைமாலை அவ்விடத்தை விட்டு அகன்றது, பராந்தகனுக்குச் சிறிது நன்மையாகவே பட்டது. தன் காதலி அருந்திகைப் பிராட்டி மூலமாக வைகைமாலை அவளோடு என்ன பேசிக் கொண்டிருந்தாள் என்பதை அறிந்து கொள்ளவும் விரும்பினான்.

     அருந்திகை பராந்தகனை அன்பும் கோபமும் தழுவிய பார்வையோடு பார்த்துக் கொண்டு, “புலிப்பள்ளியார் சுதமதியை அவ்வளவு தூரம் பயமுறுத்தும் வரையில் நீங்கள் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்திருக்க வேண்டாம்” என்றாள்.

     பராந்தகன் கேலியாகச் சிரித்துக் கொண்டே, “பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்தான். ஆனால் அதை என்னால் தடுக்க முடியவில்லை. சுதமதி இப்படித் திடீரென்று மயக்கமுற்று விழுந்து விடுவாள் என்று நான் நினைக்கவுமில்லை. நல்லவேளை! வைகைமாலையும் அங்கு இல்லாமல் போனாளே? வைகைமாலைக்கு அப்படி ஏதேனும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று தான் எனக்குப் பயம்...” என்றான்.

     “புலிப்பள்ளியார் சுதமதியிடம் என்ன சொன்னார் என்று வைகைமாலைக்குத் தெரியாத வரையில் அவளுக்கு எதுவும் நேராது. அந்த விஷயம் தான் மர்மமாக இருக்கிறதே...” என்றாள் அருந்திகை பராந்தகனைச் சந்தேகக் கண்களோடு பார்த்துக் கொண்டே.

     “ஆமாம்! அவ்விஷயம் அவளுக்குத் தெரியாமலிருக்க வேண்டுமே என்ற பயம் தான் எனக்கு” என்றான் பராந்தகன்.

     “எவ்விஷயம்?” என்றாள் அருந்திகை ஆவலோடும் பதற்றத்தோடும்.

     பராந்தகன் அப்பொழுதுதான் விழிப்படைந்தவன் போல், “அதுவா...? ஒரு விஷயம். அது அவளுக்குத் தெரியக் கூடாது. அது சாதாரண விஷயம் தான். அதிருக்கட்டும், விஜயன் எங்கே? எங்கே உன் முகத்தைக் காட்டு... உன் முகம் காலையில் மலர்ந்த தாமரை போலிருக்கிறது. நடுப்பகலில் நிழலிருந்தும் சிறிது வாட்டமுற்ற ரோஜா மலர் போலிருக்கிறது. மாலை வேளையில்...” என்று அவன் சொல்லிக் கொண்டு வரும் போது அருந்திகை இடைமறித்தாள். “இதழ்விரிப்போமா வேண்டாமா என்று தயங்கி நிற்கும் அல்லி மலர் போல இருக்கிறது என்று ஏதாவது சொல்லுங்கள். இந்த வர்ணனை எல்லாம் வேண்டுமென்று இப்பொழுது யார் கேட்டார்கள்...?” என்றாள்.

     “அழகைக் கண்டவன் பிறருடைய விருப்பத்துக்காகவோ வேண்டுகோளுக்காகவோ அதைப் புகழ்வதில்லை. வர்ணனை செய்வதில்லை. அவனுடைய இருதயம் அழகின் வசம் ஒட்டி விடுகிறது. அந்தச் சமயம் அவன் அதைப் புகழாமலோ வர்ணனை செய்யாமலோ இருக்க முடிகிறதில்லை. ஒரு உண்மையான கவிஞன்...”

     “நீங்கள் கவிஞரல்ல...”

     “அழகில் மனத்தைப் பறிகொடுத்து விட்டானானால் ஒரு சாதாரண மனிதன் கூடக் கவிஞனாகி விடலாம்.”

     “நீங்கள் கவிஞராவதை நான் சிறிதும் விரும்பவில்லை...”

     “எப்பொழுதுமே நான் கவிஞனாகி விடமாட்டேன். உன்னைப் பார்க்கும் நேரத்தில் மட்டும் என்னால் கவிஞனாகாமல் இருக்க முடியாது.”

     “அப்படியென்றால் உங்களை நான் பார்க்கவே இல்லை. அந்தப் பழி எனக்கு எதற்கு?” என்று கேட்டாள் அவள் சிரித்துக் கொண்டே.

     “அந்தப் பழி உன்னைச் சேராது. உன்னைச் சரணடைந்து நிற்கும் எழிலைத் தான் சேரும்!”

     “அப்படி என்றால் அந்த எழில் எனக்கு வேண்டாம்.”

     “இதென்ன விபரீதமாக இருக்கிறதே? எழிலை விரும்பாத பெண் உண்டா?” என்று அதிசயித்தான் பராந்தகன்.