உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 7 - இதென்ன விந்தை? அருந்திகைக்கும் பராந்தகனுக்கும் சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது. “நீங்கள் ஒரு கவிஞராகும் அபாயத்திலிருந்து உங்களையும் உலகத்தையும் மீட்க நான் எதையும் தியாகம் செய்யத் தயாராய் இருக்கிறேன். போகட்டும், வீணாக விளையாடாதீர்கள். நாம் பேசிக் கொண்டிருந்த விஷயம் வேறு. அதை விட்டு இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் நீங்கள் ஏதாவது பேசி மழுப்பப் பார்க்காதீர்கள். புலிப்பள்ளியார் சுதமதியிடம் என்ன சொன்னார்? எனக்கு முழு விவரமும் வேண்டும். சாதாரண விஷயத்துக்கே இப்படி ஒரு பெண் மயக்கம் போட்டு விழ நேர்ந்தால், அது கடுமையானதாக இருந்தால் இன்னும் என்ன நேர்ந்திருக்குமோ...?” என்றாள் அருந்திகை. “அது உண்மை. சுதமதி இவ்வளவு பலஹீனமாய் இருப்பாள் என்று நான் நினைக்கவில்லை. வீண் மிரட்டலுக்கெல்லாம் இப்படிப் பயந்தால்...?” “உண்மையில் புலிப்பள்ளியாரின் வார்த்தைகள் வீண் மிரட்டலாக இருக்காது. வீண் மிரட்டலுக்கெல்லாம் தன் சகோதரி பயப்படக் கூடியவளல்ல என்று வைகைமாலை சொல்கிறாள். புலிப்பள்ளியார் அவள் இதயத்தையே குலைக்கும் வண்ணம் ஏதோ கடுமையான வார்த்தைகள் சொல்லி இருக்க வேண்டும் என்று தான் வைகைமாலை நினைக்கிறாள். சுதமதியும் வைகைமாலையிடம் எதையோ சொல்லப் பயப்படுகிறாள் என்று நன்றாகத் தெரிகிறது...” “பயப்படலாம். ஆனால் சுதமதி தான் புலிப்பள்ளியார் என்ன சொன்னார் என்பதைச் சொல்லி விட்டாளே. நடந்தது அவ்வளவுதான். ஆனால் அந்த வார்த்தைகளையே புலிப்பள்ளியாரின் வாக்கிலிருந்து கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் பயங்கரமாய் இருந்திருக்கும். அவ்வளவுதான். அதிருக்கட்டும், நீ நெற்றியில் இட்டுக் கொண்டிருக்கும் திலகம் இருக்கிறதே, அது இரண்டு வளைந்த புருவங்களிடையே பிரகாசிப்பது இரண்டு வில்லிலிருந்து கிளம்பிய ஒரு அம்புபோல் தோன்றுகிறது. ஆனால் எப்படி இரண்டு வில்லிலிருந்து ஒரு அம்பு கிளம்பும் என்பதுதான் விநோதமாயிருக்கிறது. இமையென்ற நாண் கயிற்றிலிருந்து புறப்பட்ட அந்த அம்பு வேறு எதையோ குறியாகக் கொண்டதாக இருந்தாலும் என் இதயத்தை நோக்கிப் பாய்வது போல இருக்கிறது” என்றான் பராந்தகன். “மறுபடியும் கவிதா ரசனையில் இறங்கி விட்டீர்களா? இதென்ன விபரீதம்? நான் போகிறேன்...” என்று சொல்லிச் சிறிது கோபம் கொண்டவள் போல் கிளம்பினாள் அருந்திகைப் பிராட்டி. “அடாடா! அதற்குள் இவ்வளவு கோபமா? இதோ நான் உன்னை வர்ணிப்பதை விட்டு விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, அவளுடைய மெல்லிய கரத்தைத் தொட்டு இழுத்து நிறுத்தினான் பராந்தகன். “நீங்கள் புலிப்பள்ளியார் சுதமதியிடம் என்ன சொன்னார் என்ற உண்மையை என்னிடம் சொல்லப் போகிறீர்களா இல்லையா?” என்றாள் அருந்திகை சிறிது கோபத்துடன். “நீ கேட்டதற்குத்தான் முடிவாகப் பதில் சொல்லி விட்டேனே? வீணாக அதைக் கேட்டுக் குழப்பாதே. உன்னோடு கொஞ்சம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பேசலாமென்று இங்கே வந்தால்...” என்று இழுத்தான். “நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பேசவேண்டுமென்பதுதான் என் விருப்பமும். ஆனால் புலிப்பள்ளியார் சுதமதியிடம் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளாத வரையில் என் மனத்தில் நிம்மதியே ஏற்படாது. ஏன் என்னிடம் சொல்வதற்குக் கூடவா உங்களுக்குப் பயம்?” என்றாள் அருந்திகை. “உன்னிடம் சொல்லலாம். ஆனால் அதனால் உன் மனத்தில் நிம்மதி ஏற்பட்டுவிடாது. குழப்பமும் கவலையும் தான் அதிகரிக்கும்.” “அப்படிப்பட்ட விஷயமா அது?” “உங்களைப் போன்ற பெண்களுக்கெல்லாம் கொஞ்சம் மன அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடிய விஷயம் தான். வைகைமாலையின் காதலரைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்றான் பராந்தகன். “தெரியும். பெரிய நாஸ்திகவாதியாக விளங்கும் பூதுகர் தான் அவளது காதலர் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாள்.” “ஆம்! அந்தப் பூதுகர் கலங்கமாலரையரின் கையில் சிக்கி இருப்பதாகவும், கலங்கமாலரையர் இவ்வளவு நேரம் அவரை உயிருடன் வைத்திருப்பதே சந்தேகம் என்றும் புலிப்பள்ளியார் சொல்லிச் சுதமதியின் இருதயத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.” “அப்படியா? அதனால் தான் சுதமதி அப்படி மூர்ச்சையுற்று விழுந்திருக்கிறாளா? இதை வைகைமாலை கேட்டால் நிச்சயம் அவளுடைய நிலையும் கேவலமாகிவிடும்” என்றாள் அருந்திகை அச்சத்தோடு. “இதனால் தான் இந்த ரகசியத்தைச் சொல்லாமல் வைத்திருந்தேன். நீயும் இதை வைகைமாலையிடம் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. பூதுகருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டிருக்குமென்று நானும் அருண்மொழியாரும் நம்பவில்லை. நம்முடைய ஏவலாளர்கள் எங்கும் இருக்கிறார்கள். இருக்கட்டும். வைகைமாலை உன்னிடம் ஏதேனும் சொன்னாளா?” என்று கேட்டான் பராந்தகன். “அவள் மூலமாக எனக்கொரு ரகசியம் விளங்கியது. நந்திபுர நகரிலுள்ள இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனி அவருடைய மகளல்ல; சிறந்த நாட்டியக்காரியாக விளங்கிய அலையூர் கக்கை என்பவளின் பேத்தியாகிய மாலவல்லிதான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.” “அப்படியா? அவளை ஏன் அங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறாள்? இதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும். அவளைக் காவிரிப்பூம் பட்டினத்து புத்த விகாரத்திலிருந்து கடத்திக் கொண்டு வரச் சூழ்ச்சி செய்தவர் கலங்கமாலரையர் என்று தெரிகிறது. அதோடு மட்டுமல்ல; அவளைப் புலிப்பள்ளியாரின் மகன் கோளாந்தகனுக்கு வேறு மணம் முடித்து வைக்க நினைக்கிறார்கள். அது இருக்கட்டும், வைகைமாலை மாலவல்லியைப் பற்றி வேறு ஏதேனும் சொன்னாளா?” என்றான் பராந்தகன். “அவள் வேறு எதுவும் சொல்லவில்லை. அவள் தனக்குத் தெரிந்தவள் என்று மட்டும் தான் சொன்னாள்.” “மாலவல்லியைப் பற்றி அவளுக்கு இன்னும் ஏதாவது தெரிந்திருக்கும். அதை மெதுவாகக் கேட்டுத் தெரிந்து கொள். அவளிடம் பூதுகரைப் பற்றிச் சொல்லி மனத்தைக் கிளறி விட்டு விடாதே. சுதமதியின் மன நிலையை எண்ணி இன்று மாலை வைத்திருந்த நாட்டியக் கேளிக்கைகளை யெல்லாம் கூட நிறுத்தி விட்டோம்.” “நான் அவளிடம் அப்படியெல்லாம் எதுவும் சொல்லிவிட மாட்டேன். எனக்குத் தெரியாதா? புலிப்பள்ளியார் சுதமதியிடம் என்ன சொன்னார் என்பதை அவள் அறிந்து கொள்ள வேண்டும் என்றே துடியாக இருக்கிறாள். இருந்தாலும் நான் அவளுக்கு ஏதேனும் சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். பூதுகர் விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவலை செலுத்துங்கள். பூதுகருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்கிற செய்தி சுதமதியின் வாயால் வராமல் இருந்தால் நல்லதுதான். அவளுக்குத் தன் தங்கையின் நலனைப் பற்றிக் கவலை இருக்காதா? அவள் சொல்லமாட்டாள் என்று தான் நினைக்கிறேன். நான் நாளை புறப்பட்டுப் பழையாறை செல்கிறேன். என்னோடு வைகைமாலையையும் சுதமதியையும் அழைத்துக் கொண்டு செல்கிறேன். வைகைமாலை இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியைப் பார்க்கும் வண்ணம் ஏதேனும் ஏற்பாடு செய்கிறேன். வைகைமாலை அவளைப் பார்த்துவிட்டால் அவள் தான் மாலவல்லியா இல்லையா என்பது விளங்கி விடும் அல்லவா?” என்றாள் அருந்திகை. பராந்தகன் சிறிது பதற்றம் அடைந்தவனாக, “அதற்குள் அவசரப்படாதே. வைகைமாலையிடமிருந்து மாலவல்லியைப் பற்றி இன்னும் ஏதேனும் விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டபின் அதற்குத் தகுந்த வண்ணம் காரியங்கள் செய்ய வேண்டும். நான் இவ்விடத்திலிருந்து புலிப்பள்ளியாருக்குச் சரியான பாடம் கற்பித்து அனுப்பப் போகிறேன். அதோடு அவரிடமிருந்து பூதுகனைப் பற்றிய இன்னும் சில ரகசியங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது என் ஆவல். நானும் அருண்மொழியாரும் அதை எப்படியாவது தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மிகவும் பதற்றத்தோடும் வேகத்தோடும் விஜயன் அங்கே வந்து நின்றான். அப்பொழுது அவன் இருந்த கோலம் பராந்தகனுக்குச் சிறிது வியப்பை அளிக்கக்கூடியதாக இருந்தது. அருந்திகைப் பிராட்டியும் விஜயனின் நிலை கண்டு திகைப்புற்றவளாய் நின்றாள். விஜயன் கையேந்திய வாளுடன் நின்றான். அவ்வாளில் படிந்திருந்த ரத்தக்கறை காயாமல் இருந்தது. அவன் மார்பில் ஒரு சிறு காயம்பட்டு அதிலிருந்து உதிரம் வழிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அவனைக் கண்ட பராந்தகன் பரபரப்போடு அவனை நெருங்கி அவன் தோளில் கையை வைத்து, “இதென்ன கோலம்? யாரோடு இப்பொழுது போரிட்டுவிட்டு வருகிறாய்?” என்றான். “ஒன்றுமில்லை. பெரிய போரல்ல. சாதாரணச் சண்டைதான். எதிரிகளின் சூழ்ச்சி அளவுக்கு மீறி விட்டது. புலிப்பள்ளியாரை இன்னமும் இங்கே விட்டு வைத்திருப்பது பிசகு. அவரோடு வந்த நான்கு உளவாளிகளின் கைகளையும் கால்களையும் பதம் பார்த்த என் வாள் புலிப்பள்ளியார் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறது...” என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது அருந்திகைப் பிராட்டி அவன் மார்பிலிருந்து கசிந்து கொண்டிருந்த உதிரத்தைத் தன் மேல் ஆடையால் துடைத்தாள். பராந்தகன் என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவிதமாக ஊகித்துக் கொண்டவனாக, “எனக்குத் தெரியும். பெண் கேட்க வந்திருப்பவர் போல் வந்திருக்கும் புலிப்பள்ளியார் வேறு ஏதோ கருத்துடன் தான் இங்கே வந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இந்தக் கொடும்பாளூர் கோட்டையின் மீது எல்லோருக்கும் ஒரு கண். அதனுடைய மர்மங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்தான் எதிராளிகளுக்கு மிகுந்த கவலை. நீ அந்த வஞ்சகர்களை யெல்லாம் எங்கே கண்டாய்? பாவிகள்! உன் கண்ணிலா அவர்கள் அகப்படவேண்டும்? இன்று காலையிலிருந்து உன் உடைவாளுக்குச் சரியான வேலைதான் போலிருக்கிறது” என்றான். “நீங்கள் காலையில் சோலையிலிருந்து கிளம்பிய பொழுது கோட்டைப் பாதுகாப்பாளரை எச்சரிக்கை செய்துவிட்டு வந்தீர்கள். இருப்பினும் எனக்கு அது போதுமென்று படவில்லை. உண்மையாகவே புலிப்பள்ளியார் இக் கொடும்பாளூர் கோட்டையின் ரகசியங்களை அறிந்து கொண்டு போகத்தான் வந்திருப்பார் என்று எனக்குத் தோன்றியது. அவர் மாத்திரமல்ல; அவரோடு இன்னும் சிலரும் வந்திருக்க வேண்டுமென்று நான் கருதினேன். அவர் உங்களோடு அரண்மனையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் கோட்டை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முற்படலாம் என்று தோன்றியது. கோட்டையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவது நல்லது என்று எனக்குப் பட்டது. மேற்குக் கோட்டை வாசலில் நான்கு பேர்கள் கோட்டைக் காவலர்களோடு ஏதோ பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவர்கள் உடையிலிருந்து அவர்கள் அன்னியர்கள் என்பது நன்கு விளங்கியது...” என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டான். “சரிதான். அவர்கள் தஞ்சையிலிருந்து வந்த உளவாளிகள் என்று தெரிந்து கொண்டு உடனே அவர்கள் மீது பாய்ந்து சண்டை போடத் துவங்கி இருப்பாய் நீ...” என்றான் பராந்தகன். இதைக் கேட்டதும் அருந்திகை சிறிது கோபம் கொண்டவளாக, “விஜயனை அவ்வளவு அவசர புத்தியுள்ளவனாக நினைத்து விடாதீர்கள். அவன் சொல்வதை முழுவதும் கேட்பதற்கு முன்னால் நீங்களாக ஒரு முடிவுக்கு வருவது உங்கள் அவசர புத்தியைத் தான் காட்டுகிறது” என்று கூறினாள். “முழுக் கதையும் நான் கேட்கத் தயார். எதிராளியைக் கண்ணால் கண்ட பின் ஒரு வினாடி கூட விஜயன் பொறுத்தாலும் அவன் கைவாள் பொறுத்திருக்காதே என்ற காரணத்தால் அப்படிச் சொன்னேன்!” என்றான் பராந்தகன். பராந்தகன் அலட்சியமாகச் சிரித்துவிட்டு, “நீ இவ்வளவு எச்சரிக்கையாக இருந்து காரியங்களை முடித்த வரையில் சந்தோஷம் தான். இதைப் போலப் புலிப்பள்ளியாரையும் செய்து விட அதிக நேரமாகிவிடாது. கொஞ்சம் பதற்றத்தை அடக்கிக் கொள். அவசரப்படாதே. இந் நகருக்குள் அவர் வந்து விட்டார். இந்நகரிலிருந்து நல்ல முறையில் அவர் மீண்டு செல்வது சிரமம்தான். உடனே உன் உடை வாளில் தோய்ந்திருக்கும் ரத்தத்தைக் கழுவி அதை உறையிலிட்டுக் கொண்டு அண்ணாவின் ஆலோசனை மண்டபத்துக்கு வா. வேறு அரசாங்கத்திலிருந்து நமது நகருக்கு விருந்தினராக வந்திருப்பவர்களுக்கு நல்ல விருந்து தயாராகி இருக்கிறது. எல்லோரும் கூடி இருந்து உண்போம். அவ் விருந்தினர்கள் நன்றாக உண்டு திருப்தி அடைந்த பின் நம் விசாரணையை வைத்துக் கொள்வோம். நம்மைப் போன்ற சுத்த வீரர்கள் விருந்தினராக வந்திருக்கும் ஒருவரிடம் அவர் வஞ்சக நெஞ்சம் படைத்தவராயினும் இவ்விடத்தே மன்னித்துப் போர்முகத்தில் சந்திப்பதுதான் சிறந்ததாகும். இப்பொழுது அவருக்கு நல்ல புத்தியைக் கற்பித்து அனுப்பிவிடுவதுதான் நல்லது” என்றான். விஜயன் தன் பதற்றத்தை சிறிது அடக்கிக் கொண்டு, “சரி! இதோ நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட யத்தனித்த போது, அருந்திகைப் பிராட்டி அவன் மார்பிலிருந்து கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை மறுபடியும் துடைத்தாள். அவளுடைய மேல் அங்கி முழுவதும் ரத்தக் கறை படிந்ததாக இருந்தது. விஜயன் சிரித்துக் கொண்டே, “இப்படி இந்த உடலில் எவ்வளவு காயங்கள் படப்போகின்றனவோ? ஆனால் அப்பொழுதெல்லாம் அந்தக் காயங்களிலிருந்து கசியும் உதிரத்தைத் துடைப்பதற்கு உன்னைப் போல் பித்துக் கொண்டவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான். விஜயனின் வார்த்தைகள் அருந்திகையின் மனத்தில் சுருக்கெனப் பாய்ந்தன. அவள் வெட்கமடைந்தவளாகத் தலை குனிந்து பதில் பேசாமல் நின்றாள். பராந்தகன் சிரித்துக் கொண்டே, “உன் சகோதரனின் வீர நெஞ்சம் அப்படி இருக்கிறது. அவன் மார்பில் சிறு காயம் பட்டு உதிரம் கசிவது கூட உனக்குத் தாளவில்லை. சாதாரணமாகப் பெண்கள் உள்ளமே கொஞ்சம் குழைவானதுதான். விஜயன் சொல்லிய வார்த்தைகளுக்காக நீ வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவன் மார்பில் பட்ட சிறு காயத்துக்கு நீ அனுதாபப்பட்டதினால் நீ வீரர் குலத்துதித்த பெண்ணல்ல என்று அர்த்தமல்ல. சரி! நீ போய் வைகைமாலையையும் சுதமதியையும் பார்த்துக் கொள். நான் சொல்லியவைகளை மறந்து போய்விடாதே. ஜாக்கிரதை!” என்றான். அருந்திகை சிறிது மனச் சமாதானமடைந்தவளாக, “சரி! நீங்களும் கொஞ்சம் பூதுகர் விஷயமாகக் கவலை செலுத்த மறந்து விடாதீர்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். பராந்தகன் ஒரு பெருமூச்சு விட்ட வண்ணம் தனக்குள் சிரித்துக் கொண்டே அரண்மனை ஆலோசனை மண்டபத்தை நோக்கிச் சென்றான். ஆலோசனை மண்டபத்தில் ஆதித்தனும் அருண்மொழியாரும் புலிப்பள்ளியாருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். பராந்தகன் அங்கு வந்த போது புலிப்பள்ளியார் ஏதோ கோபத்தோடும் மன வருத்தத்தோடும் இருப்பவர் போல் தோன்றினார். அவன் மிகவும் அனுதாபமும் அன்பும் கொண்டவன் போல் அவரை நெருங்கி, “விருந்து தயாராகி விட்டதாக நினைக்கிறேன். பசி நேரத்தில் உங்களோடு பேசிக் கொண்டிருந்தால் அடிக்கடி உங்கள் கோபத்துக்கு இலக்காகத்தான் நேரிடும்...” என்றான். இதைக் கேட்டதும் புலிப்பள்ளியார் ஆசனத்திலிருந்து துள்ளிக் குதித்து, “நான் அவ்வளவு கோபக்காரனா...?” என்று கூறினார். “நீங்கள் கோபக்காரரில்லை. கொஞ்சம் ஆத்திரக்காரர். சில சமயம் உங்கள் ஆத்திரம் கோபமாக மாறி விடுகிறது. அவ்வளவுதான்” என்றான் பராந்தகன். “இப்படி அடிக்கடி கோபப்படுகிறவர்களோடு பழகுவது கடினமல்ல. பழகப் பழக அவர்களுடைய கோபம் நமக்குச் சகஜமாகி விடும். தஞ்சை அமைச்சர் அவர்கள் அடிக்கடி கோபம் கொள்வதிலும் சில நன்மைகள் ஏற்படுகின்றன. கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் தானே அவர் மனத்திலுள்ளதை வைத்துக் கொள்ள முடியாமல் கொட்டி விடுகிறார். அவர் இப்படிக் கோபப்படாவிட்டால் பூதுகர் கலங்கமாலரையர் கையில் சிக்கியதும், ஆனால் அந்தப் பூதுகரே இப்பொழுது சிம்மவர்மரின் கையில் சிக்கியிருப்பதும் போன்ற உண்மைகள் தெரிய வருமா...? ஒரு கவலை விட்டது. எப்படியோ இனிமேல் பூதுகருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று அருண்மொழியார் சொல்கிறார். இனிமேல் சுதமதியின் மனத்திலும் வைகைமாலையின் மனத்திலும் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்தலாம்” என்றான் ஆதித்தன். “பூதுகர் உயிரோடு இருக்கிறாரா...? அவர் கலங்கமாலரையர் கையிலிருந்து சிம்மவர்மரின் கையில் சிக்கிக் கொண்டதும் நன்மைக்குத்தான். சில சமயங்களில் எதிராளிகளால் சிறைப்படுத்தப் படுவதும் லட்சிய சித்திக்குக் காரணமாகி விடுகிறது” என்றான் பராந்தகன். “தஞ்சை அமைச்சர் அவர்கள் விருந்துக்குப் பின் நமது கோட்டையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார். நீதான் அவரை அழைத்துக் கொண்டு போய் எல்லா இடங்களையும் காட்டி விட்டு வரவேண்டும்...” என்றான் ஆதித்தன். “அப்படியா...? நான் தயாராக இருக்கிறேன். நான் தான் அமைச்சர் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். நான் அமைச்சரோடு போகாவிட்டால் அமைச்சர் அவர்களுக்கு அபாயம் ஏதேனும் ஏற்படலாம். கோட்டைக் காவலாளர்கள் மிக முரடர்கள். அன்னியர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. இன்று காலை தஞ்சை அமைச்சர் அவர்களின் மெய்காப்பாளர்கள் கொஞ்சம் அசட்டுத்தனமாகக் கோட்டைக்குள் பிரவேசிக்க நினைத்த போது கோட்டைக் காவலாளர்களால் கைகால்களை இழந்து நிற்கிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் அமைச்சர் பெருமானுக்கும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டாமா...?” என்றான் பராந்தகன் அலட்சியமாக. இந்த வார்த்தையைக் கேட்டதும் புலிப்பள்ளியார் துள்ளிக் குதித்து, “கோட்டையைச் சாதாரணமாகப் பார்த்து விட்டு வரச் சென்ற என்னுடைய மெய்காப்பாளர்களா கையையும் காலையும் இழந்தார்கள்? இதென்ன விந்தை! அவர்களை அப்படிச் செய்யக் கோட்டைக் காவலாளர்களுக்குத்தான் எத்தகைய துணிச்சல்? இது உண்மைதானா?” என்றார். “நாங்கள் பொய் சொல்லும் வழக்கமில்லை. அவர்களைக் கூட கோட்டை மேற்கு வாசலில் ஒரு தூணோடு பிணைத்துக் கட்டி வைத்திருப்பதாகத் தெரிகிறது...” என்றான் பராந்தகன். “அப்படியா...?” என்று துடித்தார் புலிப்பள்ளியார். “அப்படியா என்றால்? எப்படி என்று போய்ப் பார்த்தால் விளங்கி விடும்” என்றான் பராந்தகன். ஆதித்தன் மிகவும் மனவருத்தமும் அனுதாபமும் கொண்டவன் போல், “இப்படி நடந்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர்கள் தான் ஏதோ புத்தி பிசகாகக் காவலர்களை மீறிக் கோட்டைக்குள் நுழையத் துணிந்த போது அவர்களைத் தண்டித்த வரையில் சரிதான். ஆனால் அவர்களை ஒன்றாகச் சேர்த்துத் தூணோடு பிணைத்துக் கட்டி வைத்திருப்பது தகாது. விருந்தினர்களாக வந்தவர்களை இப்படி நடத்துவது நமது பெருமைக்குக் குறைவு” என்றான். “ஆம்! நமது பெருமைக்குக் குறைவு ஏற்படாமல் அவர்களை மன்னித்து விட்டு விட வேண்டியதுதான். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யட்டுமா?” என்றான் பராந்தகன். “அவர்களை விடுதலை செய்வதோடு மட்டுமல்ல; அவர்கள் காயத்துக்குத் தக்க சிகிச்சையும் செய்து அவர்களிடம் ஒழுங்காக அனுப்பவேண்டும். அவர்கள் கோட்டையைப் பார்க்க வேண்டுமென்று நம்மிடம் சொல்லியிருந்தால் வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கலாம். இப்படிக் காவலாளிகளிடம் போய்ச் சிக்கிக் கொண்டிருக்க வேண்டாம்” என்றான் ஆதித்தன். “இதை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய மெய்காப்பாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. மிகுந்த பராக்கிரமசாலிகள். அவர்களை ஒரு சாதாரணக் கோட்டைக் காவலர்கள் போரில் வெற்றி கொள்வதென்றால், இதில் ஏதோ சூது இருக்கிறது” என்றார் புலிப்பள்ளியார். “உண்மை. சூது இருக்கத்தானிருக்கிறது. சூதாகத்தானே கோட்டைக்குள் நுழையப் பிரயத்தனப்பட்டார்கள்? கோட்டையைக் காப்பவர்களும் சாதாரண வீரர்கள் அல்ல. மிகுந்த பராக்கிரமசாலிகள் தான்” என்றான் பராந்தகன் கேலியாக. |