மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 8 - பாம்புப் பாதை

     புலிப்பள்ளியாரின் மெய்காப்பாளருக்கு அளித்த தண்டனையைக் குறித்துப் பராந்தகன் கேலி செய்து கொண்டிருந்தான் அல்லவா? அதைக் கேட்டுப் புலிப்பள்ளியாருக்கு ஏற்பட்ட எரிச்சல் தாங்க முடியவில்லை.

     “அன்னியர்கள் இவ்வளவு பெரிய பிரமிக்கத்தக்க கோட்டையைச் சிருஷ்டித்தவர்கள் அதற்குத் தகுந்த பாதுகாப்பையும் ஏற்படுத்தித்தானே இருப்பார்கள் என்று நினைக்காமல் போனது தான் புத்திக் குறைவான காரியம்” என்றான் ஆதித்தன்.

     “இது ஒரு சாதாரண விஷயமல்ல. தஞ்சை மன்னருக்கே பெருத்த அவமதிப்பை ஏற்படுத்தியது போலாகும்” என்றார் புலிப்பள்ளியார் ஆத்திரமும் கோபமும் பொங்கி எழ.

     “அப்படியா? எங்களுக்குத் தெரியாது. இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் அதையும் தெரிந்து கொண்டோம்” என்றான் பராந்தகன்.

     “அப்படிச் சொல்வதை விட நீங்கள் அறியாமலேயே சில காரியங்களில் பிரவேசித்து உங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்கிறீர்கள் என்று சொன்னால் அதைக் காட்டிலும் மிக நன்றாய் இருந்திருக்கும்” என்றான் ஆதித்தன்.

     இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு விஜயனும் வரவே, பராந்தகன் அவனை அன்போடு அழைத்து வந்து ஒரு ஆசனத்தில் அமர்த்தி, “எங்கள் கோட்டைப் பாதுகாப்பாளர்களில் இவரும் ஒருவர். பாவம்! இவர் கண்களில் தஞ்சை அமைச்சரின் மெய்காப்பாளர்கள் சிக்கிக் கொண்டார்கள்” என்றான்.

     இவ்வளவு நேரமும் பேசாமலிருந்த அருண்மொழியார் ஆச்சரியமுற்றவராக, “இவரா உங்கள் கோட்டைக் காவலாளர்? வேடிக்கையாக இருக்கிறதே? இவர் பழையாறை நகர் இளவரசரல்லவா...?” என்றார்.

     “ஆம்! பழையாறை நகர் இளவரசன், கொடும்பாளூர் கோட்டைக் காவலன். இதில் என்ன தவறு? ஒரு இளவரசனாக இருப்பவன் ஒரு கோட்டையின் காவலனாகவும் இருக்கக் கூடாதா...?” என்றான் விஜயன்.

     “இதில் தான் ஏதோ சூது இருக்கிறது என்று அப்பொழுதே சொன்னேன். சாதாரணக் கோட்டைப் பாதுகாப்பாளர்கள் தஞ்சை வீரர்களை வீழ்த்தினார்கள் என்றால் என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய மெய்காப்பாளர்களை வஞ்சகமாகக் கொல்ல வேண்டுமென்றே இந்தச் சதி நடந்திருக்கிறது” என்று புகைச்சலோடு சொல்லிய வண்ணம் ஒரேயடியாகத் துள்ளிக் குதித்தார் புலிப்பள்ளியார்.

     “ஒரு சதியும் நடக்கவில்லை. அவர்களைப் பிடித்த விதிதான் கோட்டைக் காவலர்களை ஏமாற்றிவிட்டு அவர்களைக் கோட்டைக்குள் நுழைய முயற்சி செய்ய வைத்தது. அவர்கள் செய்த தவறுக்குத் தக்க தண்டனையை அனுபவித்தார்கள்” என்றான் விஜயன்.

     “ஒரு சாதாரணச் சிறுவனுக்கு இவ்வளவு துணிச்சலா? சோழ சாம்ராஜ்யம் நிலை குலைந்து போன பின்பும் அவர்கள் அடங்கவில்லையே...?” என்றார் புலிப்பள்ளியார்.

     “கர்வம் அடங்கவில்லையே என்று சொல்லாதீர்கள். அவர்கள் வீரமும் ஆண்மையும் அழியவில்லையே என்று சொல்லுங்கள்” என்றான் பராந்தகன்.

     “அப்படியா! மகாவீரராக விளங்கும் தஞ்சை முத்தரையரின் விரோதம் எதை விளைவிக்கும் என்பதை அறியாததுதான் இந்தச் சிறுவனின் துரதிருஷ்டம்” என்று கூறினார் புலிப்பள்ளியார்.

     “இன்னொருவருடைய விரோதம் என்னைப் போன்றவனுக்கு வீரத்தைத்தான் விளைவிக்கும். அவருடைய விரோதத்துக்காக நாங்கள் எங்களுடைய சுய கௌரவத்தை இழந்து விட முடியாது” என்றான் விஜயன் கம்பீரமாக.

     இதைக் கேட்டதும் புலிப்பள்ளியார் மிகவும் ஆத்திரம் கொண்டவராக, “இச்சிறுவன் பேசுகிறதைப் பார்த்தால் இப்பொழுதே போருக்குச் சன்னத்தனாக நிற்பான் போலிருக்கிறதே. இது நிச்சயம் தீமைதான் விளைவிக்கும். சிறுவர்களால் ஏற்படும் விரோதம் பெரியவர்களுக்குத்தான் பெரிய தீமையை ஏற்படுத்தி விடும், தெரியுமா?” என்றார்.

     “சிறியவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் புத்திசாலித்தனமென்பது தனி. சிறுவர்கள் புத்திசாலித்தனத்தோடு நடந்து கொண்டால் அவர்களையும் நாம் மதிக்க வேண்டியதுதான். விஜயன் மிகவும் புத்திசாலி. அதோடு தன் குல மதிப்பையும் பெருமையையும் உணர்ந்தவன். அவன் எப்பொழுதும் தன் சுய மதிப்பையோ கௌரவத்தையோ விட்டுக் கொடுப்பதில்லை. அவன் யாரையும் வீணாக விரோதித்துக் கொள்ள மாட்டான். அவனைப் பற்றி எங்களை விட வேறொருவரும் அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்க முடியாது. அவன் சிறுவனாயிருந்தாலும் அமைச்சர் அவர்கள் அவனையும் சிறிது மதித்துத்தான் பேச வேண்டும்” என்றான் ஆதித்தன்.

     “அப்படியா? அவமானம். இவ்வளவு அவமதிப்புக்குப் பின்னும் இந்நகரில் நான் ஒரு விநாடி கூட இருக்க விரும்பவில்லை. ஒரு விருந்தினராக வந்தவரை எத்தகைய மரியாதையுடன் நடத்த வேண்டுமென்று அறியாததுதான் விந்தையிலும் விந்தை” என்று கூறிப் பதைபதைப்போடு ஆசனத்திலிருந்து எழுந்தார் புலிப்பள்ளியார்.

     ஆதித்தன் அவரை நெருங்கி அவர் தோளைத் தொட்டு ஆசனத்தில் இருத்தி, “கோபப்படாதீர்கள், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விருந்தினராக வந்தவர் எவ்வளவு தூரம் நல்ல எண்ணத்தோடும் உண்மையான மனத்தோடும் இருக்கிறாரோ, அந்த அளவுக்குத்தான் வந்த இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உங்களை எத்தகைய முறையில் உபசரிக்க வேண்டுமோ, அத்தகைய முறையில் நாங்கள் உபசரிக்கத் தவறியதில்லை. ஆனால் இங்கே உங்களுக்குக் கிடைத்த மரியாதையோ, அவமரியாதையோ உங்களுடைய செய்கையினால் தான் ஏற்பட்டன என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் மெய்காப்பாளர்கள் கோட்டைக் காவலாளர்களால் தண்டிக்கப்பட்டது, நமக்குத் தெரியாமல் ஏற்பட்ட காரியம். இப்பொழுதே அவர்களை விடுதலை செய்யச் சொல்கிறேன். அவர்கள் தங்கள் தேகத்திலுள்ள காயங்களுக்குத் தக்கபடி சிகிச்சை செய்துகொண்டு நல்லபடியாகவே தஞ்சை நகருக்குப் போகலாம். விருந்து தயாராகிவிட்டது. இனிமேல் இதைப்பற்றிப் பேசுவதில் பயன் இல்லை. வீண் விரோதமும் மனக் கசப்பும்தான் ஏற்படும். அதை நான் விரும்புவதில்லை. வாருங்கள், உணவருந்தப் போவோம்” என்று சொல்லி உபசரித்தான்.

     “ஆம்! இதுதான் சரியான யோசனை. எல்லோரும் நடந்தவைகளை மறந்து சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது தான் எனது பிரார்த்தனையும்” என்றார் அருண்மொழியார்.

     “என் மெய்காப்பாளர்கள் உடலில் காயம்பட்டுக் கைதிகளாக இருக்கும் நிலையில் எனக்கு விருந்து வேறு வேண்டுமா...? என் மனத்தில் சந்தோஷமும் சாந்தியும் ஏற்படுமா...?” என்றார் புலிப்பள்ளியார் மிக வியாகூலத்தோடு.

     “வருந்தாதீர்கள். இது ஏதோ தவறுதலாக ஏற்பட்டு விட்டது என்று தான் நான் நினைக்கிறேன். இதற்காகத் தாங்கள் மன வருத்தமோ கோபமோ அடைய வேண்டாம். நம் போன்ற அமைச்சர்களுக்கு இவ்விஷயங்களில், இப்படிப்பட்ட சமயங்களில் சிறிது பொறுமையோடு இருக்க வேண்டியது தான். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். வாருங்கள் போவோம்!” என்று கூறி அருண்மொழியார் புலிப்பள்ளியாரின் இரு கரங்களையும் பிடித்து அழைத்தார்.

     புலிப்பள்ளியார் சிறிது தயங்கினார். ஆனால், அவர் முகத்தில் சிறிது சமாதானக் குறி தென்பட்டது. ஆனால், அவர் முகத்தில் தோய்ந்திருந்த குழப்பமும் அழியாமல் தானிருந்தது. அவர் மெதுவாக அவர்களோடு சென்றார்.

     விருந்தும் சம்பிரமமாகத் தான் நடந்தது. எல்லோரும் சம நிலையில் அமர்ந்து மிகவும் சந்தோஷத்தோடும் குதூகலத்தோடும் பேசிக் கொண்டே தான் சாப்பிட்டனர். ஆனால் முக்கிய விருந்தினராகிய தஞ்சை அமைச்சர் மட்டும் மிகவும் மன வருத்தம் கொண்டவராய் மற்றவர்களுடைய பேச்சிலும் உணவிலும் சிரத்தை காட்டாமல் இருந்தார்.

     கோட்டை மேற்கு வாசலில் தூணோடு பிணைத்துக் கட்டப்பட்டிருந்த புலிப்பள்ளியாரின் மெய்காப்பாளர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களுடைய காயங்களுக்குத் தக்கபடி சிகிச்சை செய்யப்பட்டு விருந்து மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பாவம், கையும் காலும் வெட்டுண்ட அவர்கள் தனித்து எப்படி வர முடியும்? அரண்மனைச் சேவகர்களின் உதவியோடு தான் அவர்கள் வரமுடிந்தது. அவர்களைப் பார்த்ததும் புலிப்பள்ளியாரின் மனம் விம்மிப் பொருமியது. அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் என்ன? அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டால்தான் என்ன? அவர்கள் இழந்த அங்கங்களைத் திரும்பிப் பெற முடியுமா? புலிப்பள்ளியாருக்குத் தம்முடைய மெய்காப்பாளர்களைப் பார்க்கப் பார்க்கத் திகிலும் கோபமும் புகைந்து எழுந்தன. என்ன அவமானம்? தம்முடைய மெய்காப்பாளர்களின் அங்கங்களைச் சேதம் செய்துவிட்டு அவர்களுக்கு விருந்து உபசாரம் செய்வதுதான் மேலும் அவமானத்தை விளைவிப்பது போல் இருந்தது. அவர் மனத்தில் ஏற்பட்ட கோபமும் ஆத்திரமும் அவர் முகத்தைக் கடுமையாக்கியதே தவிர வார்த்தைகளாக வெளிவரவில்லை. அவர் ஒருவரோடும் பேசாமல் குமைந்த வண்ணம் உட்கார்ந்திருந்தார்.

     அப்பொழுது அவருடைய நிலையை உணர்ந்த பராந்தகனுக்கு அந்தச் சமயம் அவரை அங்கிருந்து வேறெங்கேயாவது அழைத்துச் செல்வதுதான் உசிதமாகப் பட்டது. அவன் மெதுவாக அவரிடம் நெருங்கி, “வருகிறீர்களா, கோட்டையைப் பார்க்கச் செல்வோம். உங்களைப் போன்றவர்களுக்குக் கோட்டையைச் சுற்றிக் காட்டுவதில்தான் எங்களுக்குப் பெருமை. இதைக் காலையிலேயே தெரிவித்திருந்தால் இவ்வளவு நடந்திருக்காது. ஏதோ நடந்தது நடந்து விட்டது. நீங்கள் வாருங்கள்” என்று மிக்க அன்போடும் மரியாதையோடும் அழைத்தான்.

     புலிப்பள்ளியார் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். அப்பொழுது அவருக்கு இருந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் கோட்டையைச் சுற்றிப் பார்க்க ஏண்டும் என்று இருந்த ஆவல் மறைந்திருந்தது. அப்பொழுது பராந்தகனிடம் ‘கோட்டையைச் சுற்றிப் பார்க்கும் அபிப்பிராயம் இப்பொழுது எனக்கு இல்லை’ என்று கூட அவர் சொல்லிவிடலாம். ஆனால் அவர் கொடும்பாளூர் வந்த முக்கிய காரணம் கோட்டையைச் சுற்றிப் பார்த்து அதன் மர்மங்களை அறிந்து கொண்டு போக வேண்டும் என்பதுதானே. தமக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவாரா? அவர் ஒருவிதமாகத் தம் மனத்தைச் சமாதானம் செய்து கொண்டு, “சரி! வாருங்கள்” என்று சொல்லி எழுந்தார்.

     அவரும் பராந்தகனும், கோட்டையை நோக்கிச் சென்றனர். பராந்தகன் மெதுவாக அவரோடு பேசலானான். அவன் புலிப்பள்ளியாரிடம் மிகவும் அனுதாபம் உள்ளவன் போல், “உங்களைப் போல் நேர்மையோடு நடப்பவர்களையெல்லாம் சாம்ராஜ்ய ஆசை கொண்ட வஞ்சகர்கள் எவ்வகையிலாவது தாழ்மைப்படுத்தப் பார்க்கிறார்கள். எங்கேயாவது கொண்டு போய்ச் சிக்க வைக்க நினைக்கிறார்கள்” என்றான்.

     புலிப்பள்ளியார் எவ்வித பதிலும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். மறுபடியும் பராந்தகன் பேசத் தொடங்கினான். “கலங்கமாலரையருக்கு உங்களிடம் இவ்வளவு பகைமை ஏற்பட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை. உங்களோடு மட்டுமல்ல, உங்கள் மகனையுமல்லவா படுகுழியில் தள்ள நினைத்து விட்டார்...?” என்றான். இந்த வார்த்தையைக் கேட்ட பின்புதான் புலிப்பள்ளியார் சிறிது விழித்துக் கொண்டார். அவர் வியப்போடு பராந்தகனைப் பார்த்துக் கொண்டே, “நீங்கள் சொல்வது எனக்கொன்றும் புரியவில்லையே!” என்றார்.

     “உங்களுக்குப் புரியாது. இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியை உங்கள் மகன் மணம் செய்து கொள்வதில் அவருக்குக் கொஞ்சங்கூட விருப்பம் இல்லை. அதை எப்படியாவது தடுத்து விட வேண்டுமென்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்” என்றான் பராந்தகன்.

     “புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறாரா? இதை என்னால் நம்ப முடியாது. கலங்கமாலரையர் தானே இடங்காக்கப் பிறந்தாரின் மகளை என் மகனுக்கு மணம் முடித்துக் கொள்ள முயற்சி செய்யும்படி என்னைத் தூண்டி விட்டார்...?” என்றார் புலிப்பள்ளியார்.

     “இதுதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிற கதை. உண்மையில் இடங்காக்கப் பிறந்தாரின் மகள் அவளுடைய சொந்த மகளே அல்ல என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார். இதென்ன வஞ்சகம், பார்த்தீர்களா?” என்றான் பராந்தகன்.

     “இடங்காக்கப் பிறந்தாரின் மகள் அவருடைய சொந்த மகளில்லையா...? இப்படி ஒரு புரளி கிளம்பியிருக்கிறதா...? அப்படியென்றால் அந்தப் பெண் யாராம்...?” என்றார்.

     “அந்தப் பெண் யாரோ இசைக் கணிகையாம். காஞ்சியில் இருந்தவளாம். அவள் ஏதோ மன விரக்தி கொண்டு துறவுக் கோலம் பூண்டு புத்த சங்கத்தில் சேர்ந்தவளாம்” என்றான் பராந்தகன்.

     “இசைக் கணிகையா...? காஞ்சியில் இருந்தவளா? இப்படி ஒரு புரளியா? இப்படி ஒரு புரளியைக் கலங்கமாலரையர் கிளப்பியிருக்க முடியாது. வேண்டுமென்று வேறு யாரோ தான் செய்திருக்க வேண்டும். நெடுநாட்களுக்குப் பிறகல்லவா இடங்காக்கப் பிறந்தாரின் மகள் அகப்பட்டிருக்கிறாள். அவளைப் பற்றி எதைச் சொன்னாலும் உலகம் நம்பலாமல்லவா?” என்று அலட்சியமாகப் புலிப்பள்ளியார் கூறினார்.

     பராந்தகன் சிரித்துக் கொண்டே, “இந்தப் புரளியைக் கிளப்பி விட்டவர் கலங்கமாலரையர் தான் என்பதை நீங்கள் நம்பாதது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. அவரை நம்பித்தானே நீங்களும் தஞ்சை மன்னரும் மோசம் போய்க் கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் இந்தப் புரளியை நீங்கள் சாதாரணமாக மதிப்பிட்டு அலட்சியம் செய்துவிட முடியாது. இதிலும் ஆதாரம் இருக்கிறது என்று தான் தெரிகிறது...” என்றான்.

     “ஆதாரம் இருக்கிறதா? முதலில் புரளி என்று சொல்லிவிட்டு அதற்குத் தக்க ஆதாரம் இருக்கிறது என்று சொல்வது தான் பெரிய புரளியா யிருக்கிறது” என்றார் புலிப்பள்ளியார் அலட்சியமாக.

     “ஆம்! ஆதாரத்தோடு கூடிய புரளி ஒரு வகை. ஆதாரமில்லாது கிளம்பும் புரளி ஒரு வகை. இது ஆதாரத்தோடு கூடிய புரளி. இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனி என்று சொல்லிக் கொள்ளப்படும் பெண் முன்பு சோழ மன்னர் சபையில் சிறந்த நாட்டியக் கணிகையாக விளங்கிய அலையூர் கக்கை என்பவளின் பேத்தியும், பல்லவ மன்னர் சபையில் சில காலம் இசைக் கணிகையாக இருந்தவளுமாகிய மாலவல்லி என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவ்வளவு ஆதாரத்தோடு ஒரு புரளி கிளம்பினால்...” என்று சொல்லி நிறுத்தினான் பராந்தகன்.

     இதைக் கேட்டதும் “மாலவல்லியா?” என்று திகைப்படைந்து போய் நின்று விட்டார் புலிப்பள்ளியார்.

     ‘மாலவல்லி’ என்ற பெயரைக் கேட்டதும் புலிப்பள்ளியாரின் மனத்தில் சிறிது குழப்பம் தான் ஏற்பட்டது. அப்படிப்பட்ட பெயரை அவர் எங்கோ கேள்விப்பட்டிருப்பது போலவும் தோன்றியது. “மாலவல்லியா...?” என்றார் மறுபடியும் யோசனையோடு.

     “ஆம்! மாலவல்லிதான். அவளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமோ...?” என்றான் பராந்தகன்.

     “எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட பெயரை எங்கோ கேள்விப்பட்டதாக நினைக்கிறேன். போகட்டும். இது உண்மையாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றார்.

     “உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். இது தீர விசாரிக்க வேண்டிய விஷயம்” என்றான்.

     “ஆம்! இது தீர விசாரித்தறிய வேண்டிய சமாசாரம் தான். உண்மையாக அப்படி இருக்குமானால் நான் என் மகனுக்கு அந்தப் பெண்ணை மணம் முடித்து வைக்கும் எண்ணத்தை விட்டு விடப் போகிறேன்” என்றார்.

     “அவசரப்படாதீர்கள். இதெல்லாம் ஒரு சூழ்ச்சி. உண்மையில் அவள் மாலவல்லியாகத்தான் இருக்கும் என்று நம்ப முடியவில்லையல்லவா? சிறு குழந்தைப் பருவத்திலேயே இடங்காக்கப் பிறந்தாரின் மகள் காணாமல் போய்விட்டாள். ஏன் அந்தக் குழந்தை ஒரு இசைக் கணிகையின் வசம் அகப்பட்டு வளர்ந்திருக்கக் கூடாது. அந்தக் குழந்தைக்கு மாலவல்லி என்று பெயரிட்டுத் தன் மகள் என்று சொல்லி ஒரு இசைக் கணிகை வளர்த்திருக்கக் கூடாது? கடைசியில் அவள் இடங்காக்கப் பிறந்தாரின் குமாரிதான் என்ற உண்மை புலப்பட்டிருக்கக் கூடாது?” என்றான் பராந்தகன்.

     புலிப்பள்ளியாரின் மனக் குழப்பம் நீங்குவதாயில்லை. பராந்தகனின் வார்த்தைகள் மேலும் அவர் மனத்தைக் குழப்புவதாகத்தான் இருந்தது.

     “அப்படியும் இருக்கலாம். இதைத் தீவிரமாக விசாரிக்காமல் காரியத்தில் இறங்கக் கூடாது. என் மகனுக்குக் கேவலம் இசைக் கணிகையை மணம் முடித்து வைக்க ஒரு நாளும் நான் விரும்ப மாட்டேன்” என்றார் புலிப்பள்ளியார்.

     “உங்களைப் போன்ற அமைச்சர்கள் தங்களுடைய மகனுக்கு இப்படிப்பட்ட பெண்களை விவாகம் செய்து வைத்தால் உலகம் நகைக்காதா? ஆனால் இதன் உண்மையைத் தீவிரமாக விசாரித்து அறிய உங்களுக்குத் தக்க மனிதரின் உதவி மிக்க அவசியம் இல்லையா?” என்றான் பராந்தகன்.

     “ஆமாம்” என்றார் புலிப்பள்ளியார்.

     “இதற்கெல்லாம் தகுந்தவர் குடந்தை சோதிடர் சந்தகர்தான். இதைத்தான் முன்பே உங்களுக்கு நான் சொல்லி இருக்கிறேனே? எப்படியாவது அவருடைய நட்பை நீங்கள் பெற்று விட்டீர்களானால் போதும்” என்று கூறினான் பராந்தகன்.

     “சரி! எப்படியாவது சந்தகரின் நட்பைப் பெற நான் முயற்சி செய்கிறேன்” என்றார் புலிப்பள்ளியார் ஆழ்ந்த யோசனையோடு. அந்தச் சமயம் அவ்விருவரும் கோட்டையின் கிழக்கு வாசலை அடைந்தனர். பராந்தகன் கோட்டையைக் காட்டி, “இந்தக் கோட்டைக்கு நான்கு வாசல்கள். இப்பொழுது நாம் வந்திருக்கும் இடம் கிழக்கு வாசல். இன்று காலை உங்கள் மெய்காப்பாளர்களுக்குச் சோதனையை ஏற்படுத்திய இடம் மேற்கு வாசல். இதைத் தவிர இன்னும் எத்தனையோ இரகசிய வாசல்களெல்லாம் இதற்கு உண்டு. அவைகளெல்லாம் நம் கண் பார்வையில் அகப்படாது. அவ் வாசல்களெல்லாம் இக்கோட்டைக்குள் வரும் சுரங்கப் பாதைகளின் முடிவான இடங்களில் உள்ளன. சரி! நாம் கிழக்கு வாசல் வழியாகவே கோட்டைக்குள் சென்று பார்க்கலாமா?” என்றான் பராந்தகன்.

     “சரி!” என்றார் புலிப்பள்ளியார்.

     கோட்டை வாசலில் நின்று கொண்டிருந்த காவலர்கள் பராந்தகனைக் கண்டதும் வணங்கி வழிவிட்டனர். பராந்தகன் புலிப்பள்ளியார் பின் தொடர கோட்டைக்குள் நுழைந்தான். வாசற்படியிலிருந்து சிறிது தூரம் வரையில் வெளிச்சமாக இருந்தது. போகப் போக இருள் சூழ்வது போலிருந்தது. உண்மையிலேயே அவர்கள் இருள் நிறைந்த இடத்துக்குத்தான் வந்து சேர்ந்தனர்.

     மையிருட்டு. புலிப்பள்ளியாருக்கு எதுவும் விளங்கவில்லை. பராந்தகன், “கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கும். வாருங்கள்.” என்றான். பராந்தகன் அந்த இருளை லட்சியம் செய்யாமல் முன்னால் நடந்தான். ஆனால் அந்த இருட்டில் பராந்தகனின் உருவமே அவருக்குத் தெரியவில்லை. அவரும் அவ்விருட்டிடையே நடந்து கொண்டிருந்தார்.

     பராந்தகன் “வாருங்கள், வாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே இருட்டிடையே சென்றான்.

     அந்த இருட்டில் நடப்பது புலிப்பள்ளியாருக்குச் சிறிது சிரமமாகத்தான் இருந்தது. அவர் சிறிது ஆயாசத்துடன், “என்ன ஒரே இருட்டாய் இருக்கிறதே...?” என்றார்.

     “அப்படித்தான் இருக்கும். பயப்படாமல் வாருங்கள். எல்லா இடத்தையும் பாருங்கள்” என்றான்.

     பராந்தகனின் குரல் புலிப்பள்ளியாரின் செவியில் விழுந்ததே தவிர அவன் உருவம் அவர் கண்களில் படவில்லை. அவன் எந்தப் பக்கம் செல்கிறான்? நிற்கிறானா, நடக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. அவர் சுற்றித் தடுமாறிக் கொண்டே நடந்தார். அப்படி அவர் எவ்வளவு நேரம் தான் இருளில் நடக்க முடியும்? “இது என்ன ஒரே இருட்டாக இருக்கிறது? வெளிச்சமே வராதா?” என்றார்.

     “வெளிச்சமா? வரும், வரும். அதற்கு இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். வடக்கு வாசலுக்குச் சமீபமாகப் போகும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்துவிடும்” என்றான்.

     “வடக்கு வாசலுக்குச் சமீபமாகப் போனால்தான் வெளிச்சம் வருமா? இந்த இடமெல்லாம் ஏன் இருட்டாக இருக்க வேண்டும்...?” என்று கேட்டார் புலிப்பள்ளியார்.

     பராந்தகன் கலகலவென்று சிரித்தான். “இது உங்களுக்கு விளங்கவில்லையா? இந்த இடங்களில்தான் கோட்டையின் மர்மங்கள் இருக்கின்றன” என்றான்.

     “இவ்விடங்களில்தான் கோட்டையின் மர்மங்கள் இருக்கின்றனவா? ஒன்றும் விளங்கவில்லையே. ஒரே இருளாகத்தான் இருக்கிறது” என்றார் புலிப்பள்ளியார்.

     “மர்மங்கள் என்றால் எளிதில் விளங்கி விடுமா? அப்படித் தெரியும்படி வைப்பார்களா? மர்மங்கள் எப்பொழுதும் இருட்டில் தான் புதைந்து கிடக்கும்” என்றான் பராந்தகன்.

     பராந்தகனின் வார்த்தையைக் கேட்டுப் புலிப்பள்ளியாரின் நம்பிக்கை கரைந்து விட்டது. அவர் மனம் பெரிய ஏமாற்றத்தில் அழுந்தி விட்டது. அப்பொழுது அவர் முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் குறியை அந்த இருளில் பராந்தகன் எப்படித் தெரிந்து கொண்டிருக்க முடியும்? கோட்டையின் மர்மங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை இடிந்து விட்டாலும் அப்பொழுது அவர் அங்கிருந்த இருளில் வந்து சிக்கித் தடுமாறுவது ‘உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்’ என்ற கதியில் தான் இருந்தது. அந்த இருட்டில் பாதையும் நேராக இல்லை. ஆங்காங்கு படிகள் அமைக்கப்பட்டுக் கீழும் மேலுமாக இருந்தது. எங்கு படிகள் இருக்கின்றன, எங்கு படிகள் இல்லை என்று அவருக்குத் தெரியாததால் இரண்டொரு இடங்களில் அவர் இடறி விழும்படி நேர்ந்தது. அவர் இடறி விழுந்த இடங்களிலெல்லாம் பராந்தகன் அவரைத் தூக்கிவிட்டுத் தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டான். அவருடைய முழங்கால்களில் சிறிது காயம் ஏற்பட்டு நோவு ஏற்பட்டது. அதைத் தவிர நடப்பதற்கும் சிரமமாய் இருந்தது.

     “காலையில் உங்கள் மெய்காப்பாளர்கள் கோட்டைக்குள் சென்று சுற்றிப் பார்க்க வேண்டுமென்று தங்களுடைய ஆவலை எங்களிடம் தெரிவித்திருந்தார்களானால் உங்களைப் போல் அவர்களையும் சிரமமில்லாமல் எல்லா இடத்தையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருப்பேன்” என்றான் பராந்தகன்.

     பராந்தகனின் வார்த்தையைக் கேட்டப் புலிப்பள்ளியாருக்கு ஆத்திரம் தான் அடிவயிற்றிலிருந்து பொங்கி எழுந்தது. இருந்தாலும் அதை அவர் அடக்கிக் கொண்டு விட்டார்.

     இருள்தான் கப்பி இருந்ததென்றால், அங்கு கொஞ்சம்கூடக் காற்று வசதியும் இல்லை என்பதை அப்பொழுதுதான் புலிப்பள்ளியார் உணர்ந்தார். அவருடைய தடித்த தேகம் புழுக்கத்தினால் திணறியது. மூச்சு விடுவது கூடச் சிரமமாக இருந்தது. கோட்டையைப் போய்ப் பார்த்தவரையில் போதும், எப்படியாவது வெளியே சென்று வெளிச்சத்தையும் காற்றையும் கண்டால் போதுமென்றாகிவிட்டது அவருக்கு. “இந்த இடத்தில் காற்று வருவது கூடக் கடினமாக இருக்கிறதே...” என்றார்.

     “காற்றுகூடப் புகாத வண்ணம் ஒரு கோட்டையைக் கட்டியதுதான் என் தந்தையார் பூதி விக்கிரமகேசரி மன்னரின் பெருமையைக் குறிக்கிறது!” என்றான் பராந்தகன்.