மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 9 - பார்த்தவரையில் போதும்!

     பூதி விக்கிரம கேசரி கொடும்பாளூர் கோட்டையைக் கட்டியது பற்றிப் பெருமையாகப் பராந்தகன் விவரித்தான் அல்லவா? அதைக் கேட்டதும், “இதை எப்படிச் சாமர்த்தியம், சாகசம் என்று சொல்லிக் கொள்ள முடியும்? காற்று வசதி இல்லாமல் ஒரு கோட்டையைக் கட்டுவது ஒரு பெருமையா...?” என்றார் புலிப்பள்ளியார்.

     “காற்று வசதிக்கு வேண்டிய முறையில்தான் இக் கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. அந்தச் சாளரங்கள் எல்லாம் இப்பொழுது திறந்துவிடப் படவில்லை.”

     “ஏன் அவைகளைத் திறந்து விடக்கூடாது?” என்று கேட்டார் புலிப்பள்ளியார்.

     “திறக்கலாம். ஆனால் அவைகளைத் திறப்பதும் மூடுவதுமே ஒரு மர்மம். தவிர, காற்றுக்காக அவைகளைத் திறந்துவிட்டால் காற்றுமாத்திரம் வருவதில்லை. வெளிச்சமும் வந்துவிடும். அதனால் தான் அவைகளைத் திறப்பதில்லை. இது மர்மங்கள் நிறைந்த கோட்டையல்லவா...?” என்றான் பராந்தகன்.

     புலிப்பள்ளியாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்பொழுது அவனோடு இருளில் நின்று பேசித் தர்க்கம் செய்வதை விட எப்படியாவது வெளியே போனால் போதுமென்றாகிவிட்டது. “போதும் பார்த்த வரையில் எனக்குத் திருப்தி. போய் விடலாம்” என்று கூறினார்.

     “இல்லை. இன்னும் முழுதும் நீங்கள் பார்க்கவில்லை. இன்னும் எவ்வளவோ இடங்களை நீங்கள் பார்க்க வேண்டும். இன்னும் வடக்கு வாசலுக்கே நாம் வரவில்லையே?”

     “இல்லா இடங்களும் இப்படித்தானே இருக்கும்?” என்றார் புலிப்பள்ளியார் அலுப்போடு.

     “எல்லா இடங்களும் இப்படி இருக்காது. கோட்டையின் ரகசியங்களும் மர்மங்களும் எங்கெங்கெல்லாம் இல்லையோ, அங்கெல்லாம் காற்று வசதியும் வெளிச்சமும் இருக்கும்” என்றான் பராந்தகன்.

     “அப்படியென்றால் இந்தக் கோட்டையில் முக்கால்வாசி இடம் மர்மம் நிறைந்ததாகவும் இருள் நிறைந்ததாகவுமே இருக்கும்போல் இருக்கிறதே?”

     “ஆம், அப்படித்தான்” என்றான் பராந்தகன்.

     புலிப்பள்ளியார் மிகவும் குழப்பம் நிறைந்தவராய், “வெளிச்சமும் காற்றுமில்லாமல் இங்கே சுற்றிக் கொண்டிருப்பதில் பயனென்ன? போதும், எப்படியாவது வெளியே போய் விடுவோம்” என்றார் கெஞ்சும் குரலில்.

     “இந்தக் கோட்டையிலுள்ள மற்ற ரகசியமான இடங்களையும் உங்களுக்குக் காட்டாமல் இருக்க என் மனம் இடங் கொடுக்கவில்லை. கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காதீர்கள். இதோ வடக்குவாசலை நெருங்கி விட்டோம். வெளிச்சமும் வந்து விடும்” என்று சொல்லிக் கொண்டே நடந்தான் பராந்தகன்.

     “இதோ வடக்கு வாசல் வந்துவிட்டது. உங்கள் மனத்துக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டிருக்கும். கவலைப்படாதீர்கள். வடக்கு வாசலோடு கோட்டைக்குள் நுழைந்து போனால் மேற்கு வாசலை அடையலாம். மேற்கு வாசலிலிருந்து தெற்கு வாசல்... தெற்கு வாசலிலிருந்து மறுபடியும் கிழக்கு வாசலுக்கு வந்து அங்கிருந்து அரண்மனைக்குப் போய்விடுவோம். கவலைப்படாதீர்கள்” என்றான் பராந்தகன்.

     இதைக் கேட்டதும் புலிப்பள்ளியார் மனத்தில் பெரும் திகில் ஏற்பட்டது. பராந்தகன் அன்று அந்தக் கோட்டை இருளிலும் புழுக்கத்திலுமே அவரைப் போட்டு வாட்டி உயிரை வாங்கி விடத் தீர்மானித்திருக்கிறான் என்றே அவர் முடிவு செய்துவிட்டார். “போதும், இதோடு விடுங்கள். இவ்வளவு தூரம் பார்த்ததே என் தேகத்துக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்து விட்டது. இனிமேல் தாங்காது” என்றார் அவர் மிகவும் துடிப்போடு.

     “இங்கு இருந்தது போல் அங்கெல்லாம் இருட்டாக இருக்குமோ என்ற பயம்தானே உங்களுக்கு? நீங்கள் கவலைப்படாதீர்கள். கோட்டைக் காவலர்களை ஒரு தீப்பந்தம் கொளுத்திக் கொடுக்கும்படி கட்டளை இடுகிறேன். அதைக் கொண்டு நாம் மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்து விடலாம். உண்மையில் கொஞ்சம் வெளிச்சம் இருந்தால் கோட்டையின் மர்மங்கள் புலனாகும்” என்றான் பராந்தகன்.

     “சரி, போவோம். தீப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். நடுவில் அது எங்கேயாவது அணையாமலிருக்க வேண்டும்” என்றார் புலிப்பள்ளியார் மிகுந்த சந்தேகத்தோடு.

     “அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அணையாத தீப்பந்தமாகவே கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். அதை நீங்களே வேண்டுமானாலும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.”

     வடக்கு வாசல் நெருங்க நெருங்க வெளிச்சம் அதிகமாகியது. காற்று ஜிலு ஜிலுவென்று அடித்தது. புலிப்பள்ளியாரின் பெருத்த தேகத்தில் குளிர்ச்சியான காற்றுப்பட ஏதோ தாம் சுமந்திருந்த பெரிய பளுவையே இறக்கி விட்டாற் போல் இருந்தது. வடக்கு வாசல் வந்த போது வெளியே நிற்கும் காவலாளர்களை அழைக்கும் சமிக்ஞையாகப் பராந்தகன் இருமுறை கையைத் தட்டினான். வாசலில் நின்ற காவலாளிகளில் ஒருவன் ஓடி வந்து பராந்தகன் எதிரில் வணங்கி நின்றான். பராந்தகன் அதிகாரத் தொனியில், “நல்லதாக ஒரு தீப்பந்தம் சீக்கிரம் தயார் செய்து கொண்டு வா” என்றான்.

     அந்தக் காவலாளி ஏதோ சொல்ல நினைத்தவனாகச் சிறிது தயங்கி நின்றான். பராந்தகன் அவனைக் கடுமையாகப் பார்த்துக் கொண்டே, “என்ன தயக்கம்? போ, சீக்கிரமாகக் கொண்டு வா” என்று கூறினான்.

     காவலாளி, “உத்தரவு” என்று பணிவுடன் சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்றான்.

     அவன் சென்றதும் பராந்தகன் கேலியாகச் சிரித்துக் கொண்டே, “இந்தக் கோட்டையின் ரகசியங்களைக் காப்பாற்றுவதில் எங்களை விட இந்தக் காவலாளர்களுக்குத்தான் அதிகக் கவலை. நான் உங்களுக்குக் கோட்டையின் அந்தரங்கங்களையெல்லாம் காட்ட வேண்டுமென்று விரும்பித் தீப்பந்தம் கொண்டு வரச் சொன்னேன். அதற்கு அவன் தயங்குகிறான். பார்த்தீர்களா?” என்றான்.

     “சில அரண்மனைச் சேவகர்களே அப்படித் தான். அவர்களுக்கு ஏதேனும் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் போதும். நம்மையே அதிகாரம் செய்யத் துணிந்து விடுகிறார்கள். ஆனால் எங்கள் தஞ்சை அரண்மனையில் இப்படி இருக்க மாட்டார்கள். அங்கே எல்லோருக்கும் என்னைக் கண்டால் நடுக்கம் தான். என்னுடைய வார்த்தைகளுக்குப் பதில் பேச மாட்டார்கள். நான் சொல்லியதைச் செய்யத் தயங்கவும் மாட்டார்கள்” என்றார்.

     “அப்படியா? தஞ்சை அரண்மனையின் அதிகாரம் வேறு. கொடும்பாளூர் அரண்மனையும் அதன் அதிகாரமும் வேறு. சிறு ஊழியர்களானாலும் அவர்கள் ஆலோசனையையும் கேட்பது என்பது இங்கு வழக்கமாகி விட்டது” என்றான் பராந்தகன்.

     வெளியே வேகமாகச் சென்ற காவலாளி கையில் ஒரு தீப்பந்தத்துடன் ஓடி வந்தான். பராந்தகன், “அதை இங்கே கொடு” என்று அதிகாரத் தொனியோடு சொல்லி, அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டான். “வாருங்கள், போவோம்” என்று சொல்லி நடந்தான். புலிப்பள்ளியார் அவனைத் தொடர்ந்தார். அவர்கள் சிறிது தூரம் சென்றார்கள். எங்கும் ஒரே வெளிச்சமாக இருந்ததே தவிர, ஒரு இடத்திலாவது இருள் கப்பி இருந்ததாகத் தெரியவில்லை. பராந்தகன் ‘இந்த இடத்தைப் பாருங்கள். அந்த இடத்தைப் பாருங்கள்’ என்று உபசாரமாகச் சொல்லிக் கொண்டு சென்றானே தவிர, அந்த இடங்களில் எவ்வித அதிசயங்களோ மர்மங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆயிரங்கால் மண்டபம் போல எங்கே திரும்பினாலும் கல் தூண்களைப் பார்க்க முடிந்ததே தவிர வேறொன்றையும் காண முடியவில்லை. திடீரென்று அவர்கள் ஒரு அழகான மண்டபத்துக்கு வந்தார்கள். சுற்றிலும் இருந்த தங்க மெருகிட்ட தூண்களும், ஆசனங்களும், தரையில் விரிக்கப்பட்டிருந்த ரத்தினக் கம்பளங்களும், சுற்றிலும் தொங்க விடப்பட்டிருந்த பட்டுத் திரைச் சீலைகளும் அது ஒரு அழகான, அற்புதமான சபா மண்டபம் என்பதைத்தான் எடுத்துக் காட்டின.

     “இதுதான் சபா மண்டபம்” என்றான் பராந்தகன்.

     “ஓஹோ! அப்படியா? மிகவும் அழகாக இருக்கிறது. இந்த இடத்திலெல்லாம் இவ்வளவு வெளிச்சம் இருக்கிறதே? தீப்பந்தம் எதற்கு?” என்றார்.

     “இங்கெல்லாம் வெளிச்சம் இருக்காதோ என்று நினைத்து இதைக் கொண்டு வரச் சொன்னேன். இது கைவசம் இருப்பதும் நல்லதுதான். பாதகமில்லை. திடீரென்று எங்கேயாவது இருட்டு இருந்தால் உதவியாக இருக்குமல்லவா?” என்று சொல்லி, “இதை நீங்கள் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிப் புலிப்பள்ளியாரிடம் அந்தத் தீப்பந்தத்தைக் கொடுத்தான்.

     புலிப்பள்ளி கொண்டார் அந்த தீப்பந்தத்தை வாங்கி வைத்துக் கொண்டு சபா மண்டபம் போல் தோன்றும் அந்த இடத்தில் ஏதேனும் மர்மங்கள் இருக்குமோ என்று பார்த்துத் தெரிந்து கொள்ள நினைக்கிறவர் போல் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். கண்ணைக் கவரும் அலங்காரத்தோடும் சித்திர வேலைப்பாட்டோடும் அமைந்த அம் மண்டபத்தில் எவ்வித மர்மமும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

     “மண்டபத்தைப் பார்த்து விட்டீர்களா? இந்தக் கோட்டைக்குள்ளேயே இதுதான் மிகவும் முக்கியமான மர்மங்கள் நிறைந்த இடம்” என்றான்.

     “இதில் என்ன மர்மம் இருக்கிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே? இது ஒரு அழகான மண்டபம். அவ்வளவு தானே?” என்றார் புலிப்பள்ளியார்.

     “இது ஒரு அழகான மண்டபமாக இருப்பதும் மர்மம்தானே... சரி! வாருங்கள், மேலே போவோம்” என்று சொல்லி நடந்தான் பராந்தகன். புலிப்பள்ளியாரும் கையில் தீப்பந்தத்துடன் அவனைப் பின்பற்றி நடந்தார்.

     புலிப்பள்ளியாருக்கு ஆத்திரமும் கோபமும் பொங்கி வந்தன. “பகல் வேளையில் நல்ல வெளிச்சமுள்ள இடத்திலேயே என் கையில் தீப்பந்தத்தைக் கொடுத்துப் பயித்தியக்காரன் போல உங்கள் பின்னால் வரும்படி செய்கிறீர்கள். எவ்வளவு தூரம் நான் இந்தத் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு வருவேன். நான் ஒரு அமைச்சன். தீப்பந்தம் பிடிப்பவனல்ல” என்றார்.

     “தீப்பந்தத்தின் உதவி உங்களுக்கு வேண்டாம் என்று பட்டால் அணைத்து இங்கேயே ஒரு இடத்தில் போட்டு விடுங்கள். அதற்காகக் கோபப்படாதீர்கள். நீங்கள் அமைச்சராக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான இடங்களில் தீப்பந்தத்தின் உதவியை நீங்கள் அலட்சியம் செய்துவிடக் கூடாது. அதை இங்கே கொடுங்கள்” என்று சொல்லித் தீப்பந்தத்தை வாங்கி அணைத்து, அதை ஒரு புறமாகப் போட்டுவிட்டு, “வாருங்கள், போவோம்...” என்றான்.

     புலிப்பள்ளியார் ஏதோ முனகியபடியே அவனைப் பின் தொடர்ந்து சென்றார். அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் பாதை வளைந்து, வளைந்து சென்றது. அந்தப் பாதையில் நடப்பதே தலை சுற்றும் போலிருந்தது. “இதற்குப் பாம்புப் பாதை என்று பெயர். அடுத்தாற் போல் வரப்போவது எலி வளைப் பாதை” என்று அவன் சொல்லிக் கொண்டு வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் குறைந்து இருள் சேருவது போலிருந்தது. உண்மையாகவே சிறிது நேரத்தில் மையிருட்டு குமைந்திருக்கும் ஒரு இடத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். ‘மறுபடியும் இப்படி ஒரு வாதனையா?’ என்று எண்ணிப் புலிப்பள்ளியாரின் மனம் குமைந்தது. அவர் அப்படியே திகைப்படைந்து நின்று விட்டார்.

     “மறுபடியும் ஒரே இருட்டாக இருக்கிறதே?” என்றார் புலிப்பள்ளியார்.

     “அப்படித்தான் இருக்கும். இதுதான் எலி வளைப்பாதை. ஜாக்கிரதையாக வாருங்கள். பாதை சரியாக இருக்காது. பாதையும் மிகக் குறுகலானதாக இருக்கும்...” என்றான் பராந்தகன்.

     “நன்றாக இருக்கிறது. இந்தப் பாதையில் எப்படி நான் நடப்பேன்? கையிலிருந்த தீப்பந்தத்தையும் போட்டு விட்டோம்” என்றார் அவர்.

     “நான் தான் அதைக் கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே? எனக்கு இப்படியெல்லாம் வரும் என்று தெரியும். நீங்கள் தான் தீப்பந்தம் எதற்கு என்று சொன்னீர்கள்...” என்றான் பராந்தகன்.

     “நீங்கள் மோசக்கருத்தோடு என்னைத் தவறான பாதையில் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றார் புலிப்பள்ளியார் கோபத்தோடு.

     “நீங்கள் தவறாகப் பேசுகிறீர்கள். நான் மோசக் கருத்து உள்ளவனாக இருந்தால் தீப்பந்தம் அவசியம் இருக்க வேண்டும் என்று சொல்லுவேனா? நீங்கள் தான் என் வார்த்தையை அலட்சியம் செய்தீர்கள்.”

     “இந்தக் கோட்டையில் இதுதான் நேரான பாதை. இதைத் தவிர வேறு பாதையே கிடையாது. இதைத் தவிர வேறு ஏதேனும் பாதை இருக்குமென்று நீங்கள் நினைத்தால் அந்தப் பாதையை நீங்களே கண்டுபிடித்துச் சிரமமில்லாமல் செல்வதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஆனால் என்னை விட்டு நீங்கள் பிரிந்தீர்களானால் என்னை மறுபடியும் கண்டுபிடிப்பது சிரமமாகப் போய்விடும். அதோடு நீங்களும் கோட்டையை விட்டு வெளியே வர முடியாது” என்றான் பராந்தகன்.

     பராந்தகனின் வார்த்தைகள் புலிப்பள்ளியாரின் மனத்தில் மேலும் மேலும் பீதியையும் நடுக்கத்தையும் உண்டாக்கின. அந்தச் சமயத்தில் அவனுடைய தயவைச் சம்பாதித்துக் கொண்டு எப்படியேனும் கோட்டையை விட்டு வெளியே சென்று விட்டால் போதுமென்று அவருக்குப் பட்டது. “இது மிகவும் அதிசயமான கோட்டை தான். இதைச் சாதாரணமாகச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆவலே தவிர என் மனத்தில் வேறு எவ்வித எண்ணமும் கிடையாது. இந்தக் கோட்டையின் மர்மங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற இச்சை எனக்கு இல்லை. முன்பு கண்ட இருள் பாதைகளை விட இது மிகவும் கடினமான பாதையாக இருக்கும் போலிருக்கிறது. முன்னால் செல்லும் நீங்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் நலமென்று நினைக்கிறேன்...” என்றார் மிகவும் தணிவான குரலில்.

     இருட்டில் அவருடைய முகம் பராந்தகனுக்குத் தெரியவில்லை. அவருடைய கெஞ்சுதலான வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. அவருடைய நயவஞ்சகமான இதயம் தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே?

     “என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு நீங்கள் வாருங்கள், பயப்படாதீர்கள். இன்னும் சிறிது தூரம் தான் இருக்கும்...” என்று சொல்லி அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அவன் ஒழுங்காக அந்தக் குறுகிய பாதையில் இருளில் சிரமமில்லாது நடப்பது புலிப்பள்ளியாருக்குச் சிறிது வியப்பை அளித்தது. அவனுடைய கையை அவர் பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்த இருளில் அவனோடு வேகமாக நடப்பது அவருக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. அவருக்கு மூச்சு வாங்கியது.

     அவர்கள் அந்தக் குறுகலான பாதையில் நடந்து வரும்போது பாதை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டு வந்தது. அதோடு இருளும் சிறிது சிறிதாக மறைந்து கொண்டு வந்தது. “இதோ கோட்டையின் சிறைக்கூடம் வந்தது. இனிமேல் அதிகக் கஷ்டமிருக்காது. வெளிச்சமிருக்கும்” என்று பராந்தகன் சொல்லிக் கொண்டு வரும்போது அவர்கள் குகை வாசல் போன்ற ஒரு இடத்துக்கு வந்தனர். எங்கும் வெளிச்சம் நிறைந்திருந்தது. வட்டமாக இருந்த அந்த வாசலில் இரும்புக் கதவு போடப்பட்டிருந்தது. பராந்தகன் அந்தக் கதவில் ஓர் இடத்தில் கை வைக்கவும் கதவு தானாகத் திறந்து கொண்டது. அவ்வாசலுக்கு அப்பால் கீழ் நோக்கிச் செல்லும் வண்ணம் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தப் பாதை ஏதோ பாதாளச் சுரங்கத்துக்குப் போவது போலிருந்தாலும் இருளில்லாது வெளிச்சம் நிறைந்த பாதையாகவே இருந்தது. புலிப்பள்ளியாருக்கு இது சிறிது ஆச்சரியத்தை விளைவித்தது. “இந்தப் பாதையில் வெளிச்சம் எப்படி வருகிறது?” என்று வியப்புடன் கேட்டார்.

     “அதுதான் மர்மம். வெளிச்சம் எப்படி வருகிறது என்பதை உங்களால் கண்டு பிடிக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கி நடந்து கொண்டிருந்தான் பராந்தகன். முடிவில்லாமல் கீழ் நோக்கிச் செல்லும் படிகள் இறங்கி நடந்து நடந்து புலிப்பள்ளியாரின் கால்கள் துவண்டுவிட்டன. “இப்படி இன்னும் எவ்வளவு தூரம் இந்தப் படிகள் இருக்கின்றன? பாதாள லோகம் வரை போகும் போலிருக்கிறதே...?” என்றார்.

     “பாதாளலோகத்தை நீங்கள் பார்த்ததில்லை அல்லவா...?” என்றான் பராந்தகன் சிரித்துக் கொண்டே.

     “சரிதான். என்னைப் பாதாளலோகம் பார்க்க அழைத்துச் செல்கிறீர்களா?” என்றார் புலிப்பள்ளியார்.

     “இல்லை. இப்படிக் கொஞ்ச தூரம் கீழே இறங்கிச் செல்லுவதற்கே பாதாள லோகம் போவது போலிருக்கிறது. மறுபடியும் மேலே ஏறிச் செல்லும்போது கைலாசத்தை நோக்கிப் போகிறோமோ என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே” என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

     “மறுபடியும் மேலே நோக்கிச் செல்ல வேண்டுமா...?” என்று மிகுந்த திகைப்போடும் கலக்கத்தோடும் கேட்டார் புலிப்பள்ளியார்.

     “மறுபடியும் மேலே போகாமல் இங்கேயே இருந்து விடலாம் என்று உங்கள் உத்தேசமா? இது கோட்டையிலுள்ள சிறைக்கூடம் என்று உங்களிடம் நான் சொன்னது ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் இங்கேயே இருப்பதில் தடை ஏதும் இல்லை” என்றான் பராந்தகன்.

     இதைக் கேட்டதும் புலிப்பள்ளியாரின் மனத்தில் திகில் அதிகமாகி உடலிலே நடுக்கமெடுத்தது. “இல்லை, கேட்டேன். எவ்வளவு தூரம் கீழே இறங்குகிறோமோ, அவ்வளவு தூரம் மேலே ஏறித்தானே ஆகவேண்டும்?” என்றார்.

     கீழே இறங்கி வந்து கொண்டிருந்த அவர்கள் திடீரென்று ஒரு சமதளத்துக்கு வந்து சேர்ந்தனர். சம சதுரமுள்ள முற்றம்போல் தோன்றிய அவ்விடத்தைச் சுற்றிலும் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட கூண்டுகள் போன்ற அறைகள் இருந்தன.

     பராந்தகன் அவரை அந்தக் கூண்டுகளுக்குச் சமீபமாக அழைத்துக் கொண்டு போய், “இவைகளில் தான் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம்” என்றான். அவன் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ இடி இடிப்பது போன்ற கர்ஜனை கேட்டுப் புலிப்பள்ளியார் நடுங்கி நின்றார்.

     “பயப்படாதீர்கள். ஒன்றுமில்லை. சிங்கம் தான்! அதோ அந்தக் கூண்டில் பாருங்கள்” என்று சொல்லி ஒரு கூண்டைச் சுட்டிக் காட்டினான். அந்தக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிங்கம் ஒன்று மிகுந்த ஆக்ரோஷத்துடன் உறுமிக் கொண்டே இரும்புக் கம்பிகளைப் பாதத்தால் அறைந்து கொண்டிருந்தது.

     “அது நரமாமிசம், சாப்பிட்டு நெடு நாட்களாகி இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு பக்கத்திலிருந்து ஏதோ உறுமுவது போலிருந்தது. “அதோ பாருங்கள், வேங்கைப் புலி. அதற்கும் ஆத்திரம் இருக்கிறது. நான் தனியாக வந்திருந்தால் அவை இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யாது. நான் வேறு புது மனிதர் ஒருவரை அழைத்து வந்திருப்பதைப் பார்த்துத் தங்களுக்குப் பலி கொடுக்கத் தான் அழைத்து வந்திருப்பானோ என்று நினைத்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன” என்று கூறினான் பராந்தகன்.

     இதைக் கேட்டதும் புலிப்பள்ளியாரின் உடலே நடுங்கிச் சிலிர்த்து வியர்த்துக் கொட்டியது. “நீங்கள்... வந்து... பலி கொடுப்பது வழக்கமா?” என்றார்.

     “பலி கொடுக்கும் மனிதர்களை இவ்வளவு மரியாதையாக அழைத்து வர மாட்டோம். வேறு விதமாகத்தான் அழைத்து வருவோம். அவர்கள் கைதிகள் அல்லவா?”

     “கொடும்பாளூரில் கைதிகளையெல்லாம் இப்படித்தான் மிருகங்களுக்குப் பலி கொடுப்பது வழக்கமா?”

     “எல்லாக் கைதிகளையுமே பலி கொடுப்பதில்லை. புத்த சமயத்தில் பெரிய குற்றங்களைச் செய்த கைதிகளையும் எதிரிகளையும் தான் அப்படிச் செய்வது வழக்கம்” என்றான் பராந்தகன்.

     சிறிது தூரம் சென்றதும் இருவரும் ஒரு பெரிய முற்றத்துக்கு வந்து சேர்ந்தனர். அந்த முற்றத்துக்கு நடுவேயிருந்த மேடையில் அமர்ந்து கொண்டு, “சுரங்கப் பாதையில் இவ்வளவு தூரம் வந்தது, உங்களுக்கு மிகுந்த களைப்பாக இருக்கும். மறுபடியும் நாம் இந்த இடத்தை விட்டுச் செல்ல நெடுந் தூரம் மேலே ஏறிச் செல்ல வேண்டும். கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்து இளைப்பாறி விட்டுச் செல்வது நல்லதுதானே?” என்றான் பராந்தகன்.

     “ஆமாம், சிறிது நேரம் களைப்பாறினால் நல்லது” என்று அவரும் சொல்லி அந்த மேடையில் அமர்ந்தார்.

     “காலையில் நீங்கள் சுதமதியிடம் பூதுகனைப் பற்றிக் கொடுத்த தகவல் அவளுக்கு மிகவும் அதிர்ச்சியை உண்டாக்கி விட்டது. அதோடு இவ்விஷயத்தைக் கேட்டால் வைகைமாலையும் மிகவும் மனவாட்டம் அடைந்து விடுவாள். உங்களைப் போன்ற அமைச்சர்கள் இம்மாதிரி பெண்களின் மனம் அதிர்ச்சியுறும் வண்ணம் எவ்விஷயத்தையும் சொல்வது உத்தமமல்ல என்பதுதான் என் அபிப்பிராயம். அதிருக்கட்டும், உண்மையாகவே பூதுகருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

     “கலங்கமாலரையரின் கையில் சிக்கியவர்கள் உயிர் தப்ப முடியாது என்பது தான் என் அபிப்பிராயம்.”

     “இருக்கலாம். ஆனால் பூதுகருடைய சாமர்த்தியத்தைப் பற்றியும் நாம் குறைவாக மதிப்பிட முடியாதல்லவா? போகட்டும். உங்களுக்கு அதன் விவரமெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பூதுகர் எங்கே எப்படிக் கலங்கமாலரையரின் கையில் சிக்கினார் என்பதைத் தெரியப்படுத்தினீர்களானால் நலம்.”

     “அதெல்லாம் அரசாங்க விஷயம். ரகசியம் சொல்வதும் தவறு.”

     “இதெல்லாம் சொல்லக்கூடாத ரகசியம் என்றால் பூதுகர் கலங்கமாலரையர் கையில் சிக்கி இருக்கிறார், அவருடைய உயிருக்கு அபாயம் என்ற ரகசியத்தை மாத்திரம் நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்?” என்றான் பராந்தகன்.

     “எனக்குத் தெரியும், எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாதென்று” என்றார் அவர் விரைப்பாக.

     பராந்தகன் சிரித்துக் கொண்டே, “அப்படியா? கேட்பவர்கள் பீதியடையும் வண்ணம் விவரமில்லாமல் எதையாவது சொல்லிவிட்டால் அவர்கள் சாதாரணமாய் விட்டுவிட மாட்டார்கள். தயவு செய்து நீங்கள் இந்தக் கோட்டைச் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதற்குள் என்னிடம் விவரமாக எல்லாவற்றையும் சொல்லுவது நலம் என்று நினைக்கிறேன்” என்றான்.

     “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்னை இந்தச் சிறையில் வைத்து மிரட்டி ரகசியங்களை அறிய நினைப்பது போலல்லவா இருக்கிறது?” என்றார் புலிப்பள்ளியார் துடிப்போடு.