உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை ... தொடர்ச்சி - 6 ... 11. பாத்திரம் பெற்ற காதை மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் மணிபல்லவத்திடை மணிமேகலை தான் வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் காவதம் திரிய கடவுள் கோலத்துத் தீவதிலகை செவ்வனம் தோன்றிக் 'கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய இலங்கு தொடி நல்லாய்! யார் நீ?' என்றலும் 'எப் பிறப்பு அகத்துள் "யார் நீ" என்றது பொன் கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்! 11-10 போய பிறவியில் பூமி அம் கிழவன் இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை யான் என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம் மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது பூங் கொடி அன்னாய் யார் நீ?' என்றலும் ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த தீவதிலகை செவ்வனம் உரைக்கும் 11-20 'ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு பழுது இல் காட்சி இந் நல் மணிப் பீடிகை தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் தீவதிலகை என் பெயர் இது கேள் தரும தலைவன் தலைமையின் உரைத்த 11-30 பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர் கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி உரியது உலகத்து ஒருதலையாக ஆங்கனம் ஆகிய அணி இழை! இது கேள் ஈங்கு இப் பெரும் பெயர்ப் பீடிகை முன்னது மா மலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து 11-40 ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மா பெரும் பாத்திரம் மடக்கொடி! கேளாய் அந் நாள் இந் நாள் அப் பொழுது இப் பொழுது நின்னாங்கு வருவது போலும் நேர் இழை! ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும் 11-50 நறு மலர்க் கோதை! நின் ஊர் ஆங்கண் அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்' என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி தீவதிலகை தன்னொடும் கூடி கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும் எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில் தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும் பாத்திரம் பெற்ற பைந் தொடி மடவாள் மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி 11-60 'மாரனை வெல்லும் வீர! நின் அடி தீ நெறிக் கடும் பகை கடிந்தோய்! நின் அடி பிறர்க்கு அறம் முயலும் பெரியோய்! நின் அடி துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின் அடி எண் பிறக்கு ஒழிய இறந்தோய்! நின் அடி கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின் அடி தீ மொழிக்கு அடைத்த செவியோய்! நின் அடி வாய்மொழி சிறந்த நாவோய்! நின் அடி நரகர் துயர் கெட நடப்போய்! நின் அடி உரகர் துயரம் ஒழிப்போய்! நின் அடி 11-70 வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது!" என்ற ஆய் இழை முன்னர் போதி நீழல் பொருந்தித் தோன்றும் நாதன் பாதம் நவை கெட ஏத்தித் தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும் 'குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம் நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் 11-80 இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின் அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் அரும் பசி களைய ஆற்றுவது காணான் திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் வந்து தோன்றிய வானவர் பெருந்தகை மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி 11-90 பிழையா விளையுளும் பெருகியது அன்றோ? ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உயிர்க் கொடை பூண்ட உரவோய் ஆகி கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி 11-100 உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி 11-110 வெயில் என முனியாது புயல் என மடியாது புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் 11-120 சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை ஈங்கு நின்று எழுவாய்' என்று அவள் உரைப்பத் தீவதிலகை தன் அடி வணங்கி மா பெரும் பாத்திரம் மலர்க் கையின் ஏந்திக் கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு வானூடு எழுந்து மணிமேகலை தான் 'வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழு நாள் வந்தது என் மகள் வாராள்! வழுவாய் உண்டு!' என மயங்குவோள் முன்னர் 11-130 வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் 'இரவிவன்மன் ஒரு பெரு மகளே! துரகத் தானைத் துச்சயன் தேவி! அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் வாய்வதாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு அறவண அடிகள் தம்பால் பெறுமின் 11-140 செறி தொடி நல்லீர்! உம் பிறப்பு ஈங்கு இஃது ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும்!' என தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் 'பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் எழுக' என எழுந்தனள் இளங்கொடி தான் என் 11-146 12. அறவணர்த் தொழுத கதை ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள் யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய் நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும் மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் 12-10 ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும் அளித்த பிறப்பின் ஆகிய கணவனை களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும் 'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால் பூங் கொடி நல்லாய்! கேள்' என்று உரைத்ததும் 12-20 உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம் தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும் தெய்வம் போய பின் தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் 'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் 'போக' என மடந்தை போந்த வண்ணமும் மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் 12-30 மணிமேகலை உரை மாதவன் கேட்டு தணியா இன்பம் தலைத்தலை மேல் வர 'பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம் ஆதி முதல்வன் அடி இணை ஆகிய பாதபங்கய மலை பரவிச் செல்வேன் கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் 12-40 "மா பெருந் தானை மன்ன! நின்னொடும் தேவியர் தமக்கும் தீது இன்றோ?" என அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப "பழ வினைப் பயன் நீ பரியல்" என்று எழுந்தேன் 12-50 ஆடும் கூத்தியர் அணியே போல வேற்று ஓர் அணியொடு வந்தீரோ?' என மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் 'பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய் தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல் அறம் பெருகாதாகி இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு 12-60 செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டு என உணர்தல் அல்லது யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது சலாகை நுழைந்த மணித் துளை அகவையின் உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும் ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச் சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் 12-70 மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் சக்கரவாளத்துத் தேவர் எல்லாம் தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில் பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி இரும் பெரு நீத்தம் புகுவது போல 12-80 அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம் உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம் கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் அவிர் ஒளி காட்டும் மணியே போன்று மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப் புத்த ஞாயிறு தோன்றும்காலை திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா 12-90 வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் 12-100 போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன் மடக்கொடி! மாதர் நின்னால் வருவன இவ் ஊர் ஏது நிகழ்ச்சி யாவும் பல உள ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்! ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும் பாதபங்கய மலை பரசினர் ஆதலின் ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு 12-110 ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப் பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய் ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் பசிப் பிணி தீர்த்தல்' என்றே அவரும் தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என் 12-121 |