திருத்தக்கதேவர்

அருளிய

சீவக சிந்தாமணி

... தொடர்ச்சி - 3 ...

அசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையைப் பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை படக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான். 201

அண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடுகளிற்று எருத்தின் இட்ட
வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான். 202

எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும்
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய்
கழி பெரும் காதலாள்கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான். 203

வலம் புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக்
கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான். 204

எனக்கு உயிர் என்னப் பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனைத் திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான். 205

காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளிக் கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான். 206

பெரும் பெயர்ப் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றித்
திருந்தினாற்கு இன்று காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே. 207

கைம் மலர்க் காந்தள் வேலிக் கண மலை அரையன் மங்கை
மைம் மலர்க் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆகக்
கொய்ம் மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப்
பெய்ம் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே. 208

நீல் நிற வண்ணன் அன்று நெடுந் துகில் கவர்ந்து தம் முன்
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேல் நிறத் தானை வேந்தே விரிபுனல் தொழுனை ஆற்றுள்
கோல் நிற வளையினார்க்குக் குருந்து அவன் ஒசித்தது என்றான். 209

காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப் பட்டது அன்றே
நாம வேல் தடக்கை வேந்தே நாம் இது தெரியின் என்றான். 210

படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான். 211

ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செங் கணனானும்
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திர தத்தன் என்பான். 212

அளந்து தாம் கொண்டு காத்த அருந் தவம் உடைய நீரார்க்கு
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான். 213

மூரித் தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும நுண்நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரித் தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான். 214

இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புனமா மலர் வேய் நறும் பூங் குழலாள்
மனமாம் நெறி ஓடிய மன்னவனே. 215

கலையார் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலையார் தடமும் முனியாது படிந்து
உலையாத் திருவின் அமிர்து உண்டு ஒளிசேர்
மலையார் மணி மார்பன் மகிழ்ந்தனனே. 216

விரி மா மணி மாலை விளங்கு முடித்
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
எரி மா மணி மார்பனும் ஏந்திழையும்
அரு மா மணி நாகரின் ஆயினரே. 217

நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே. 218

பஞ்சி அடிப் பவளத் துவர் வாய் அவள்
துஞ்சும் இடைக் கனவு மூன்று அவை தோன்றலின்
அஞ்சி நடுங்கினள் ஆய் இழை ஆயிடை
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே. 219

விசயை, அருகப் பெருமானை வணங்குதல்

பண் கெழு மெல் விரலால் பணைத் தோளி தன்
கண் கழூஉச் செய்து கலை நலந் தாங்கி
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள். 220

விசயை சச்சந்தனை வணங்கி, தான் கண்ட மூன்று கனவுகளைக் கூறுதல்

இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம் பரி மான் நெடுந் தேர் மிகு தானை அத்
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே. 221

தான் அமர் காதலி தன்னொடு மா வலி
வானவர் போல் மகிழ்வு உற்ற பின் வார் நறும்
தேன் எனப் பால் எனச் சில் அமிர்து ஊற்று எனக்
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள். 222

தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே. 223

சச்சந்தன் கனவின் பயனைக் கூறத் தொடங்குதல்

வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான். 224

நன்முடி நின் மகனாம் நறு மாலைகள்
அன்னவனால் அமரப்படும் தேவியர்
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் எனப்
பின்னதனால் பயன் பேசலன் விட்டான். 225

அசோகமரம் வீழ்ந்ததன் பயனைச் சச்சந்தன் கூற, விசயை துன்பம் கொள்ள, சச்சந்தன் ஆறுதல் கூறுதல்

இற்று அதனால் பயன் என் என ஏந்திழை
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
அற்றது ஓர் கோதையின் பொன் தொடி சோர்ந்தாள். 226

காவி கடந்த கண்ணீரொடு காரிகை
ஆவி நடந்தது போன்று அணி மாழ்கப்
பாவி என் ஆவி வருத்துதியோ எனத்
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான். 227

தண் மலர் மார்பு உறவே தழீஇயினான் அவள்
கண் மலர்த் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு எனப்
பண் உரையால் பரவித் துயர் தீர்த்தான். 228

காதலன் காதலினால் களித்து ஆய் மலர்க்
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழத்
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போது உகு மெல் அணைப் பூ மகள் சேர்ந்தாள். 229

பண் கனியப் பருகிப் பயன் நாடகம்
கண் கனியக் கவர்ந்து உண்டு சின்னாள் செல
விண் கனியக் கவின் வித்திய வேல் கணி
மண் கனிப்பான் வளரத் தளர் கின்றாள். 230

கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ்வாய் விளர்த்துக்
     கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள்
     பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று
     ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல்
     நங்கை நலம் தொலைந்ததே. 231

சச்சந்தன் கவலையுறுதல்

தூம்பு உடை நெடுங் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
தேம்புடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். 232

'எந்திர ஊர்தியைச் செய்க' என அறிவு என்னும் அமைச்சன் கூறல்

காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். 233

சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்

அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். 234

பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. 235

பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய
கோல நல் மாமயிலும் கொடு சென்றவன்
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். 236

நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். 237

மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்

ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். 238

பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. 239

சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்

காதி வேல் வல கட்டியங் காரனும்
நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல்
ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குணக் கோதினுள் கோது அனான். 240

மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல்
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறுமின் என்னவே. 241

தருமதத்தன் அறிவுரை கூறுதல்

அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான்
தரும தத்தன் என்பான் இது சாற்றினான். 242

தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
குவளையே அளவுள்ள கொழுங் கணாள்
அவளையே அமிர்தாக அவ் அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான். 243

விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே. 244

தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப்
பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. 245

திலக நீள் முடித் தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். 246

அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. 247

உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார். 248

யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின்
தேவர் என்பது தேறும் இவ் வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார். 249

தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே. 250

வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். 251

குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகளாவார். 252

நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய். 253

பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல்
இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். 254

கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப்
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான். 255

தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்

தார்ப் பொலி தரும தத்தன் தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவளப் பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள் என வியர்த்துப் பொங்கி
நீர்க் கடல் மகரப் பேழ்வாய் மதனன் மற்று இதனைச் சொன்னான். 256

தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லிக் கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும் போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான். 257

கட்டியங்காரன் சினந்து கூறுதல்

நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக்
கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். 258

என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார்
உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான். 259

தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்

விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்புக் கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான். 260

கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்

நிலத் தலைத் திருவனாள் தன் நீப்பரும் காதல் கூர
முலைத் தலைப் போகம் மூழ்கி முகிழ் நிலா முடிகொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடும் கோறல் எண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான். 261

கோன் தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சிச் சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே. 262

பருமித்த களிறும் மாவும் பரந்தியல் தேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்திச்
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே. 263

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்

நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி!
பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி!
கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான். 264

திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான். 265

புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக்
கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல்
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான். 266

விசயை துன்புறுதல்

நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்னக்
கொங்கு அலர் கோதை மாழ்கிக் குழை முகம் புடைத்து வீழ்ந்து
செங் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள். 267

மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்திப்
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப் பொம்மல் வெம் முலையினாட்குச்
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே. 268

சாதலும் பிறத்தல் தானும் தம் வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளைத் தோளி என்றான். 269

தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச்
செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா. 270

வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர விம் உயிர்த்து இனையை ஆதல்
ஒண் தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான். 271

உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளஞ் சிங்கம் அன்னான். 272

விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்

என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆர் உயிர்க் கிழத்தி தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறித்
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள். 273

சச்சந்தன் கோபங்கொள்ளல்

நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள்
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான். 274

சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்

முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில்
குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை
மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே. 275

அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம்
வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான். 276

மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப்
பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே. 277

சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே. 278

வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே. 279

உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறை மகன் இரும் களிறு நூற
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி. 280

நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான். 281

நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான். 282

மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான். 283

புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே. 284

ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே. 285

குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கிக்
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான். 286

நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான். 287

ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான். 288

சச்சந்தன் வீழ்தல்

போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத்
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான். 289

தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது
     புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல்
     இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த
     அறச் செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா
     நாகமுடன் விழுங்கிற்று அன்றே. 290

பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின்
     நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக்
     கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி
     மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய்
     விண்ணோர்க்கு விருந்து ஆயினானே. 291

சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்

செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ்
     தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத்
     தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறை
     போய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து
     இரங்கிப் பள்ளி படுத்தார்களே. 292

சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்

மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச்
     செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்
     உள் அரங்கி மூழ்கக் காமன்
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்
     பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்
     மின்னுப் போல் புலம்பினாரே. 293

அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு
     வேந்தன் கிடந்தானைத் தான்
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்
     கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்
     ஏற்பச் சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்
     பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார். 294

கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்
     ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்
     நின்று திருவில் வீசும்
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்
     கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது
     என்பார் கோல் வளையினார். 295

பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய்
     ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத்
தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு
     பிடிகள் போலத் துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி
     அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி
     இனிப் பூவா பிறர் பறிப்பவே. 296

அவலங்களுக்கிடையே கட்டியங்காரன் மன்னன் ஆதல்

செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு
     அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல்
     எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப்
பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை
     அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான்
     பூமகளை எய்தினானே. 297

சீவகன் பிறப்பு

களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன். 298

எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள். 299

மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே. 300



சீவக சிந்தாமணி : 1 2 3 4 5