உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் ... தொடர்ச்சி - 3 ... 5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல், கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை புதை இருள் படாஅம் போக நீக்கி, உதய மால் வரை உச்சித் தோன்றி, 5 உலகு விளங்கு அவிர் ஒளி மலர்கதிர் பரப்பி வேயா மாடமும்; வியன் கல இருக்கையும்; மான் கண் காதலர் மாளிகை இடங்களும்; கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்; 10 கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் கலந்து, இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்; வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும், பூவும், புகையும், மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்; 15 பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும், கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்; தூசும், துகிரும், ஆரமும், அகிலும், மாசு அறு முத்தும், மணியும், பொன்னும், அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா 20 வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகும் பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர், மீன் விலைப் பரதவர், வெள் உப்புப் பகருநர், 25 பாசவர், வாசவர், பல் நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்; கஞ்ச காரரும், செம்பு செய்குநரும், மரம் கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும், கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும், 30 பொன் செய் கொல்லரும், நன்கலம் தருநரும், துன்ன காரரும், தோலின் துன்னரும், கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி, பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்; குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும், 35 வழுவின்றி இசைத்து, வழித் திறம் காட்டும் அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்; சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் - கோ வியன் வீதியும்; கொடித் தேர் வீதியும்; 40 பீடிகைத் தெருவும்; பெருங்குடி வாணிகர் மாட மறுகும்; மறையோர் இருக்கையும்; வீழ்குடி, உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும், காலக் கணிதரும், பால் வகை தெரிந்த பன் முறை இருக்கையும்; 45 திரு மணி குயிற்றுநர், சிறந்த கொள்கையொடு அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும்; சூதர், மாகதர், வேதாளி கரொடு நாழிகைக் கணக்கர், நலம் பெறு கண்ணுளர், காவல் கணிகையர், ஆடல் கூத்தியர், 50 பூ விலை மடந்தையர், ஏவல் சிலதியர், பயில் தொழில் குயிலுவர், பன் முறைக் கருவியர், நகை வேழம்பரொடு வகைதெரி இருக்கையும்; கடும் பரி கடவுநர், களிற்றின் பாகர், நெடுந் தேர் ஊருநர், கடுங் கண் மறவர், 55 இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும்; பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும் - இரு பெரு வேந்தர் முனையிடம் போல இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய 60 கடை கால் யாத்த மிடை மரச் சோலைக் கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும், நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, 'வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனத் 65 தேவர் கோமான் ஏவலின் போந்த காவல் பூதத்துக் கடை கெழு பீடிகைப் புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும், பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி; 70 'பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும், நீங்கி; வசியும், வளனும், சுரக்க' என வாழ்த்தி; மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும், மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர- 75 மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும், பட்டின மருங்கின் படை கெழு மாக்களும், முந்தச் சென்று, முழுப் பலி-பீடிகை, 'வெந் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனப் பலிக் கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக' என - 80 கல் உமிழ் கவணினர், கழிப் பிணிக் கறைத் தோல், பல் வேல் பரப்பினர் மெய் உறத் தீண்டி, ஆர்த்து, களம் கொண்டோ ர் ஆர் அமர் அழுவத்து, சூர்த்து, கடை சிவந்த சுடு நோக்குக் கருந்தலை, 'வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க' என, 85 நற் பலி-பீடிகை நலம் கொள வைத்து, ஆங்கு, உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க் கண் முரசொடு வான் பலி ஊட்டி- இரு நிலமருங்கின் பொருநரைப் பெறாஅச் செரு வெங் காதலின், திருமாவளவன், 90 வாளும், குடையும், மயிர்க் கண் முரசும், நாளொடு பெயர்த்து, 'நண்ணார்ப் பெறுக இம் மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள் எனப் புண்ணியத் திசைமுகம் போகிய அந் நாள்- 'அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய, 95 பகை விலக்கியது இப் பயம் கெழு மலை' என, இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை, கொடுவரி ஒற்றி, கொள்கையின் பெயர்வோற்கு, மா நீர் வேலி வச்சிர நல் நாட்டுக் கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும், 100 மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும், பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும், 105 நுண்வினைக் கம்மியர் காணா மரபின; துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின இவை தாம் ஒருங்குடன் புணர்ந்து, ஆங்கு, உயர்ந்தோர் ஏத்தும் அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும், 110 வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக் கடைமுக வாயிலும், கருந் தாழ்க் காவலும், உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக் கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றிக் 115 கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது, உள்ளுநர்ப் பனிக்கும் வெள் இடை மன்றமும்- கூனும், குறளும், ஊமும், செவிடும், அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி, பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று, 120 வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்- வஞ்சம் உண்டு மயல்-பகை உற்றோர், நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர், அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர், கழல் கண் கூளிக் கடு நவைப் பட்டோ ர், 125 சுழல வந்து, தொழத் துயர் நீங்கும், நிழல் கால் நெடுங் கல் நின்ற மன்றமும்- 'தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர், அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர், அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர், 130 பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர், என் கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர்' என, காதம் நான்கும் கடுங் குரல் எடுப்பிப் பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும் அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து, 135 உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும், நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து, பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்- மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் ஐ வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ- 140 வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி, வால் வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள், விழவின், கடைநிலை, சாற்றி- தங்கிய கொள்கைத் தரு நிலைக் கோட்டத்து, 145 மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து- மரகதமணியொடு வயிரம் குயிற்றி, பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை, நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும், கிம்புரிப் பகு வாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து, 150 மங்கலம் பொறித்த மகர வாசிகைத் தோரணம் நிலைஇய, தோம் அறு பசும் பொன் பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை, பாவை விளக்கு, பசும் பொன் படாகை, தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து, 155 மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு- ஐம் பெருங் குழுவும், எண் பேர் ஆயமும், அரச குமரரும், பரத குமரரும்; கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர், இவர் பரித் தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி; 160 அரைசு மேம்படீ இய, அகநிலை மருங்கில், 'உரைசால் மன்னன் கொற்றம் கொள்க' என, மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக் கொண்ட தண் நறுங் காவிரி, தாது மலி பெருந்துறை, 165 புண்ணிய நல் நீர் பொன்குடத்து ஏந்தி, மண்ணகம் மருள, வானகம் வியப்ப, விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி- பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும், 170 வால் வளை மேனி வாலியோன் கோயிலும், நீல மேனி நெடியோன் கோயிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலும், மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீமுறை ஒருபால்- 175 நால் வகைத் தேவரும், மூவறு கணங்களும், பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்- அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும், 180 திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்- கொடித் தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித் தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்- கண்ணுளாளர், கருவிக் குயிலுவர், பண் யாழ்ப் புலவர், பாடல் பாணரொடு, 185 எண் அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்- முழவுக் கண் துயிலாது, முடுக்கரும், வீதியும், விழவுக் களி சிறந்த வியலுள் ஆங்கண்- காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா மாதர்க் கொடுங் குழை மாதவி தன்னோடு 190 இல் வளர் முல்லை, மல்லிகை, மயிலை, தாழிக் குவளை, சூழ் செங்கழுநீர், பயில் பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து, காமக் களி மகிழ்வு எய்தி, காமர் பூம் பொதி நறு விரைப் பொழில் ஆட்டு அமர்ந்து, 195 நாள் மகிழ் இருக்கை நாள் அங்காடியில் பூ மலி கானத்துப் புது மணம் புக்கு, புகையும் சாந்தும் புலராது சிறந்து, நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்துக் குரல் வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு, 200 திரிதரு மரபின் கோவலன் போல, இளி வாய் வண்டினொடு, இன் இள வேனிலொடு, மலய மாருதம் திரிதரு மறுகில் கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு, இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி, 205 அங்கண் வானத்து அரவுப் பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்! நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர் வாய் துவலைத் திரு நீர் மாந்தி, மீன் ஏற்றுக் கொடியோன், மெய் பெற, வளர்த்த, 210 வான-வல்லி வருதலும் உண்டு கொல்! 'இரு நில மன்னற்குப் பெரு வளம் காட்ட, திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம்' என, எரி நிறத்து இலவமும், முல்லையும், அன்றியும் கரு நெடுங் குவளையும், குமிழும், பூத்து, ஆங்கு 215 உள்வரிக் கோலத்து உறு துணை தேடிக் கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்!- மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல் உயிர் பருகும் பகு வாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்து, தன் அருந் தொழில் திரியாது, 220 நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி, பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு!-என உருவிலாளன் ஒரு பெரும் சேனை இகல் அமர் ஆட்டி, எதிர் நின்று விலக்கி, அவர் 225 எழுது வரிக் கோலம் முழு மெயும் உறீஇ, விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு- உடன் உறைவு மரீஇ, ஒழுக்கொடு புணர்ந்த, வடமீன் கற்பின், மனை உறை மகளிர்; 'மாதர் வாள் முகத்து, மணித் தோட்டுக் குவளைப் 230 போது புறங்கொடுத்துப் போகிய செங் கடை விருந்தின் தீர்ந்திலது ஆயின், யாவதும் மருந்தும் தரும் கொல், இம் மாநில வரைப்பு?' என கையற்று நடுங்கும் நல் வினை நடு நாள்- உள்ளக நறுந் தாது உறைப்ப, மீது அழிந்து, 235 கள் உக நடுங்கும் கழுநீர் போலக் கண்ணகி கருங் கணும், மாதவி செங் கணும், உள் நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன; எண்ணு முறை, இடத்தினும் வலத்தினும் துடித்தன- விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து என். 240 6. கடல் ஆடு காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) வெள்ளி மால் வரை, வியன் பெரும் சேடி, கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு, கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னொடு விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்சைவீரன்- 'தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் 5 இந்திர விழவு கொண்டு எடுக்கும் நாள் இது' என- 'கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டிக் கொடுவரி ஊக்கத்துக் கோ-நகர் காத்த தொடு கழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி, நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட 10 வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் திருந்து வேல் அண்ணற்குத் தேவன் ஏவ இருந்து, பலி உண்ணும் இடனும் காண்கும்; அமராபதி காத்து, அமரனின் பெற்று, தமரில் தந்து, தகைசால் சிறப்பின் 15 பொய் வகை இன்றிப் பூமியில் புணர்த்த ஐ-வகை மன்றத்து அமைதியும் காண்குதும்; நாரதன் வீணை நயம் தெரி பாடலும், தோரிய மடந்தை வாரம் பாடலும், ஆயிரம் கண்ணோன் செவிஅகம் நிறைய 20 நாடகம் உருப்பசி நல்காள் ஆகி, மங்கலம் இழப்ப வீணை, "மண்மிசைத் தங்குக இவள்" எனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய, அங்கு, அரவு-அல்குல் ஆடலும் காண்குதும்; 25 துவர் இதழ்ச் செவ் வாய்த் துடி இடையோயே! அமரர் தலைவனை வணங்குதும் யாம்? என- சிமையத்து இமயமும், செழு நீர்க் கங்கையும், உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும், வேங்கட மலையும், தாங்கா விளையுள் 30 காவிரி நாடும், காட்டிப் பின்னர், பூ விரி படப்பைப் புகார் மருங்கு எய்தி, சொல்லிய முறைமையின் தொழுதனன் காட்டி; மல்லல் மூதூர் மகிழ் விழாக் காண்போன், 'மாயோன் பாணியும், வருணப் பூதர் 35 நால் வகைப் பாணியும், நலம் பெறு கொள்கை வான் ஊர் மதியமும் பாடி, பின்னர்- சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க- பாரதி ஆடிய பாரதி-அரங்கத்துத் திரிபுரம் எரியத் தேவர் வேண்ட, 40 எரி முகப் பேர் அம்பு ஏவல் கேட்ப, உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்; தேர் முன் நின்ற திசைமுகன் காண, பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்; 45 கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள், அல்லியத் தொகுதியும்; அவுணன் கடந்த மல்லின் ஆடலும்; மாக் கடல் நடுவண், நீர்த் திரை அரங்கத்து, நிகர்த்து முன் நின்ற 50 சூர்த் திறம் கடந்தோன் ஆடிய துடியும்; படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த, குடை வீழ்த்து, அவர் முன் ஆடிய குடையும்; வாணன் பேர் ஊர் மறுகிடை நடந்து, நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்; 55 ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடி ஆடலும்; காய் சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்: செரு வெங் கோலம் அவுணர் நீங்க, 60 திருவின் செய்யோள் ஆடிய பாவையும்; வயலுழை நின்று, வடக்கு வாயிலுள், அயிராணி மடந்தை ஆடிய கடையமும்- அவரவர் அணியுடன்; அவரவர் கொள்கையின்; நிலையும், படிதமும், நீங்கா மரபின்; 65 பதினோர் ஆடலும், பாட்டின் பகுதியும், விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய்; தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய மாதவி மரபின் மாதவி இவள்' எனக் காதலிக்கு உரைத்து, கண்டு, மகிழ்வு எய்திய 70 மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் அந்தரத்துள்ளோர், அறியா மரபின், வந்து காண்குறூஉம் வானவன் விழவும், ஆடலும், கோலமும், அணியும், கடைக்கொள ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப; 75 பத்துத் துவரினும், ஐந்து விரையினும், முப்பத்து-இரு வகை ஓமாலி கையினும், ஊறின நல் நீர், உரைத்த நெய் வாசம் நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி; புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை 80 வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி; அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇப்; பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம், காலுக்கு அமைவுற அணிந்து; 85 குறங்குசெறி திரள் குறங்கினில் செறித்து; பிறங்கிய முத்தரை முப்பத்து இரு காழ் நிறம் கிளர் பூந் துகில் நீர்மையின் உடீஇ; காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய தூ மணித் தோள்வளை தோளுக்கு அணிந்து; 90 மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம், செம் பொன் கைவளை, பரியகம், வால் வளை, பவழப் பல் வளை, அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து; வாளைப் பகு வாய் வணக்கு உறு மோதிரம், 95 கேழ் கிளர் செங் கேழ் கிளர் மணி மோதிரம், வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி, காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து; சங்கிலி, நுண்-தொடர், பூண் ஞாண், புனைவினை, அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து; 100 கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு; இந்திர-நீலத்து இடை இடை திரண்ட சந்திர பாணித் தகை பெறு கடிப்பு இணை அம் காது அகவயின் அழகுற அணிந்து; 105 தெய்வ உத்தியொடு, செழு நீர் வலம்புரி, தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கு-அணி, மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து; கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து, பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்- 110 உரு கெழு மூதூர் உவவுத் தலைவந்தெனப் பெரு நீர் போகும் இரியல் மாக்களொடு மடல் அவிழ் கானல் கடல்-விளையாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டினன் ஆகி- பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப, 115 வைகறை யாமம் வாரணம் காட்ட, வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய; தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து; வான வண் கையன் அத்திரி ஏற, மான் அமர் நோக்கியும் வையம் ஏறி- 120 கோடி பல அடுக்கிய கொழு நிதிக் குப்பை மாடம் மலி மறுகின், பீடிகைத் தெருவின், மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து, ஆங்கு அலர், கொடி-அறுகும், நெல்லும், வீசி, மங்கலத் தாசியர் தம் கலன் ஒலிப்ப, 125 இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும் திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து; மகர வாரி வளம் தந்து ஓங்கிய நகர வீதி நடுவண் போகி; கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் 130 வேலை வாலுகத்து, விரி திரைப் பரப்பின், கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் மாலைச் சேரி மருங்கு சென்று எய்தி- வண்ணமும், சாந்தும், மலரும், சுண்ணமும், பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்; 135 செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்; காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்; கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்; நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்; இடை இடை, மீன் விலை பகர்வோர் விளக்கமும்; 140 இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை-விளக்கமும்; விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும்; மொழி பெயர் தேஎத்தோர் ஒழியா விளக்கமும்; கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும்; எண்ணு வரம்பு அறியா இயைந்து, ஒருங்கு ஈண்டி; 145 இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில் கடிப்பகை காணும் காட்சி-அது ஆகிய விரை மலர்த் தாமரை வீங்கு நீர்ப் பரப்பின் மருத வேலியின் மாண்புறத் தோன்றும் கைதை வேலி நெய்தல் அம் கானல்- 150 பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி; நிரை நிரை எடுத்த புரை தீர் காட்சிய மலைப் பல் தாரமும், கடல் பல் தாரமும், வளம் தலைமயங்கிய துளங்கு கல-இருக்கை- அரசு இளங் குமரரும், உரிமைச் சுற்றமும்; 155 பரத குமரரும், பல் வேறு ஆயமும்; ஆடு கள மகளிரும்; பாடு கள மகளிரும்; தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்- விண் பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலை நாள் போல, 160 வேறு வேறு கோலத்து, வேறு வேறு கம்பலை, சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி- கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப- 165 கடல் புலவு கடிந்த மடல் பூந் தாழைச் சிறை செய் வேலி அகவயின், ஆங்கு, ஓர் புன்னை நீழல், புது மணல் பரப்பில், ஓவிய எழினி சூழ உடன் போக்கி, விதானித்துப் படுத்த வெண் கால் அமளிமிசை, 170 வருந்துபு நின்ற வசந்தமாலை கைத் திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கிக் கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள், மா மலர் நெடுங் கண் மாதவி-தான்- என். வெண்பா வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு மாலைத் துயின்ற மணி வண்டு காலைக் களி நறவம் தாது ஊத, தோன்றிற்றே-காமர் தெளி நிற வெங் கதிரோன் தேர். |