உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
யுத்த காண்டம் 10. இலங்கை காண் படலம் இராமன் பரிவாரங்களுடன் மலைமேல் ஏறுதல் அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று பொருந்திய காதல் தூண்ட, பொன் நகர் காண்பான் போல, பெருந் துணை வீரர் சுற்ற, தம்பியும் பின்பு செல்ல, இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன், இப்பால். 1 செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல, இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடுங் கமலக் கையான், பொரு வலி வய வெஞ் சீயம் யாவையும் புலியும் சுற்ற, அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி அரசு அனையன் ஆனான். 2 கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம் புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர் தம் புரமும், பொற்பும், சிதைவு செய் குறியைக் காட்டி, வட திசைச் சிகரக் குன்றின், உதயம் அது ஒழியத் தோன்றும், ஒரு கரு ஞாயிறு ஒத்தான். 3 துமிலத் திண் செருவின் வாளிப் பெரு மழை சொரியத் தோன்றும் விமலத் திண் சிலையன், ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன், அமலத் திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன, கமலத் திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான். 4 மல் குவடு அனைய திண் தோள் மானவன், வானத்து ஓங்கும் கல் குவடு அடுக்கி வாரிக் கடலினைக் கடந்த, காட்சி நல் குவடு அனைய, வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான், பொன்குவட்டு இடையே தோன்றும் மரகதக் குன்றம் போன்றான். 5 இராமன் இளவலுக்கு இலங்கையின் சிறப்பை எடுத்துக் கூறுதல் அணை நெடுங் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து ஐயன், பிணை நெடுங் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை, துணை பிரிந்து அயரும் அன்றிற் சேவலின் துளங்குகின்றான், இணை நெடுங் கமலக் கண்ணால் இலங்கையை எய்தக் கண்டான். 6 'நம் திரு நகரே ஆதி வேறு உள நகர் கட்கு எல்லாம் வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை, இந்திரன் இருக்கை என்பர்; இலங்கையை எடுத்துக் காட்டார்; அந்தரம் உணர்தல் தேற்றார், அருங் கவிப் புலவர் அம்மா! 7 'பழுது அற விளங்கும் செம் பொன் தலத்திடைப் பரிதி நாண முழுது எரி மணியின் செய்து முடிந்தன, முனைவராலும் எழுத அருந் தகைய ஆய, மாளிகை இசையச் செய்த தொழில் தெரிகிலவால், தங்கண் சுடர் நெடுங் கற்றை சுற்ற. 8 'விரிகின்ற கதிர ஆகி, மிளிர்கின்ற மணிகள் வீச, சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புறத் தொடரும் தோற்றம், அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் எரிகின்றதாயே காண், இக் கொடி நகர் இருந்தது இன்னும்! 9 'மாசு அடை பரந்து நீண்ட மரகதத் தலத்து மானக் காசு அடை சமைந்த மாடம், கதிர் நிறக் கற்றை சுற்ற, ஆசு அறக் குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக, பாசடைப் பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப, பாராய்! 10 'தீச் சிகை சிவணும் சோதிச் செம் மணிச் செய்த தூணின் தூச் சுடர் மாடம் ஈண்டித் துறுதலால், கருமை தோன்றா மீச் செலும் மேகம் எல்லாம், விரி சுடர் இலங்கை வேவ, காய்ச்சிய இரும்பு மானச் சேந்து ஒளி கஞல்வ, காணாய்! 11 'வில் படி திரள் தோள் வீர! நோக்குதி - வெங் கண் யானை அல் படி நிறத்த வேனும், ஆடகத் தலத்தை, ஆழ, கல் படி வயிரத் திண் கால் நகங்களின் கல்லி, கையால் பொற் பொடி மெய்யில் பூசி, பொன்மலை என்னப் போவ! 12 'பூசல் விற் குமர! நோக்காய் - புகர் அற விளங்கும் பொற்பின் காசுடைக் கதிரின் கற்றைக் கால்களால் கதுவுகின்ற வீசு பொன் கொடிகள் எல்லாம், விசும்பினின் விரிந்த மேக - மாசு அறத் துடைத்து, அவ் வானம் விளக்குவ போல்வ மாதோ! 13 'நூல் படத் தொடர்ந்த பைம் பொன் சித்திரம் நுனித்த பத்திக் கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி, சால்பு அடுத்து, அரக்கன் மாடத் தனி மணி நடுவண் சார்த்தி, மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது - இம் மூதூர். 14 'நல் நெறி அறிஞ! நோக்காய் - நளி நெடுந் தெருவின் நாப்பண் பல் மணி மாடப் பத்தி நிழல் படப் படர்வ, பண்பால் தம் நிறம் தெரிகிலாத, ஒரு நிறம் சார்கிலாத, இன்னது ஓர் குலத்த என்று புலப்படா, புரவி எல்லாம். 15 'வீர! நீ பாராய் - மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற, மாரனும் மருளச் செய்த மாளிகை, மற்றோர் சோதி சேர்தலும் தெரிவ; அன்றேல், தெரிகில; தெரிந்த காட்சி நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை. 16 'கோல் நிறக் குனி வில் செங் கைக் குமரனே! குளிர் வெண் திங்கள் கால் நிறக் கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி வால் நிறத் தரளப் பந்தர், மரகதம் நடுவண் வைத்த, பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப, பாராய்! 17 'கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே! கொள்ள நோக்காய் - நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர், ஓர் நாகர் பாவை, காள வார் உறையின் வாங்கும் கண்ணடி, விசும்பில் கவ்வி வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த வண்ணம்! 18 'கொற்ற வான் சிலைக் கை வீர! கொடி மிடை மாடக் குன்றை உற்ற வான் கழுத்தவான ஒட்டகம், அவற்றது உம்பர்ச் செற்றிய மணிகள் ஈன்ற சுடரினைச் செக்கர் ஆர்ந்த கற்றை அம் தளிர்கள் என்னக் கவ்விய நிமிர்வ, காணாய்! 19 'வாகை வெஞ் சிலைக் கை வீர! மலர்க் குழல் புலர்த்த, மாலைத் தோகையர் இட்ட தூமத்து அகிற் புகை முழுதும் சுற்ற, வேக வெங் களிற்றின் வன் தோல் மெய்யுறப் போர்த்த தையல்- பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் பாராய்! 20 'காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்தது, ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த பாவ பண்டாரம் அன்ன, செய்குன்றம் பலவும், பாராய்! 21 'பிணை மதர்த்தனைய நோக்கம் பாழ்பட, பிடியுண்டு, அன்பின் துணைவரைப் பிரிந்து போந்து, மருங்கு எனத் துவளும் உள்ளப் பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர், பருவம் நோக்கும் கண மயில் குழுவின், நம்மைக் காண்கின்றார் தம்மைக் காணாய்! 22 'நாள்மலர்த் தெரியல் மார்ப! நம் பலம் காண்பான், மாடத்து யாழ் மொழித் தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார், "வாழ்வு இனிச் சமைந்தது அன்றே" என்று மா நகரை எல்லாம் பாழ்படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு பாராய்!' 23 இராவணன் வானர சேனையைக் காண, கோபுரத்தின் மேலே ஏறுதல் இன்னவாறு இலங்கைதன்னை இளையவற்கு இராமன் காட்டி, சொன்னவா சொல்லாவண்ணம் அதிசயம் தோன்றும் காலை, அன்ன மா நகரின் வேந்தன், அரிக் குலப் பெருமை காண்பான், சென்னிவான் தடவும் செம்பொற் கோபுரத்து உம்பர்ச் சேர்ந்தான். 24 மிகைப் பாடல்கள் கண்டு அகம் மகிழ்ந்து, ஆங்கு அண்ணல், கடி நகர் இலங்கை மூதூர் விண்தலம் அளவும் செம் பொற் கோபுரம், விளங்கும் வீதி, மண்டபம், சிகர கோடி, மாளிகை, மலர்க் கா ஆதி எண் திசை அழகும் நோக்கி, இளவலுக்கு இயம்புகின்றான். 6-1 |