பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்

இயற்றிய

முல்லைப் பாட்டு

கார் பருவத்தின் வருகை

நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி 5

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டல்

அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10

பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப

நல்ல வாய்ப்புகள்

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 15

இன்னே வருகுவர், தாயர் என்போள்

பெருமுது பெண்டிரின் தேற்ற மொழிகள்

நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீ நின் 20

பருவரல் எவ்வம் களை, மாயோய்! என,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப

பாசறை அமைப்பு

கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25

வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ,
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி

பாசறையின் உள் அமைப்பு - யானைப் பாகரின் செயல்

உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35

கல்லா இளைஞர், கவளம் கைப்ப

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை 40

பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணம் ஆக,

அரசனுக்கு அமைத்த பாசறை

வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,

மங்கையர் விளக்குகளை ஏந்துதல்

குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,

மெய்காப்பாளர் காவல்புரிதல்

நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50

அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ

நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்

பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55

தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப

வன்கண் யவனர்

மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60

வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65

படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,

பாசறையின் கண் வேந்தன் மனநிலை

மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து,
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70

தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு
வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து,
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்;
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75

முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து

பாசறையில் வெற்றி முழக்கம்

பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

இன் துயில் வதியுநன் காணாள். துயர் உழந்து, 80

நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85

இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின

அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்

வென்று, பிறர்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, 90

விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப,

மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்

அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95

தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி,
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், 100

அரசனது தேரின் வருகை

முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே.

தனிப் பாடல்கள்

வண்டு அடைந்த கண்ணி வளர் ஆய்ச்சி வால் நெடுங் கண்
சென்று அடைந்த நோக்கம் இனிப் பெறுவது - என்றுகொல்
கன்று எடுத்து ஓச்சி, கனி விளவின் காய் உகுத்து,
குன்று எடுத்து நின்ற நிலை? 1

புனையும் பொலம் படைப் பொங்கு உளை மான் திண் தேர்
துனையும் துனைபடைத் துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாராமுன்னம்,
கடல் முகந்து வந்தன்று, கார்! 2