உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அவதாரம் பாளையங்கால் ஓரத்திலே, வயற்பரப்புக்கு வரம்பு கட்டியவை போன்ற பனைவிளைகளுக்கு அருகே குலமாணிக்கபுரம் எனச் சொல்லப்பட்ட குலவாணிகபுரம் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் யாதவர்களும் கொடிக்கால் 'வாணியர்'களுமே ஜாஸ்தி. மருந்துக்கு என்று வேளாண் குடிகளும் கிராமப் பரிவாரங்களான குடிமகன், வண்ணான் முதலிய பட்டினிப் பட்டாளங்களுக்கும் குறை கிடையாது. ஊரில் செயலுள்ளவர்கள் யாதவர்களே. கிருஷ்ணக் கோனார் என்ற கிருஷ்ணசாமிதாஸ் யாதவர்களுக்குள் யோக்கியர் என்ற பெயர் வாங்கியவர். யோக்கியர் என்றால் அயோக்கியத்தன்மையில் இறங்காதவர் என்றே அர்த்தம். சந்தர்ப்பவசதி இல்லாததினாலோ என்னவோ நல்லவராகவே பெயரெடுத்து வந்திருக்கிறார். ஆனால் விதி, உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவரை காத்திருந்துவிட்டு, அவருக்கு ஒரு குழந்தையை - ஆண் பிள்ளையை - மட்டும் கொடுத்து மனைவியை அகற்றி அவருடைய நடமாடும் சொத்துக்களான கால்நடைகளிடையே கோமாரியைப் பரப்பி விளையாடியது. வெகு சீக்கிரத்தில் கஷ்டங்களை அறியலானார். சாப்பாட்டுக்கும் கஷ்டம் வந்தது. குழந்தையை வைத்துக்கொண்டு பராமரிப்பது தலைக்கட்டு நிர்வாகத்தை விடக் கஷ்டம் எனத் தோன்றியது கிழவனாருக்கு. பையனுக்கு இசக்கிமுத்து எனப் பெயரிட்டு, இசக்கியின் அருள் விட்டவழி என ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் ஏற்படும் நிராதரவில் பிறக்கும் திருப்தியைப் பெற்றார். குழந்தையும் நாளொரு ஏமாற்றமும் பொழுதொரு கஷ்டமும் அனுபவித்து வளர்ந்து வந்தது. விதியின் கொடுமையைக் கண்டு சீற்றமடைந்தோ என்னவோ, இயற்கை அவனுக்குத் தன் பரிபூரண கிருபையை வருஷித்தது. உடலும் மனமும் வறுமையின் கூர்மையிலே தீட்சண்யப்பட்டு வளர்ந்தது. இசக்கிமுத்துவைப் பார்த்தால், மனம் அவன் காலடியில் விழுந்து கெஞ்சும். ஆனால் அதே மனம் அவனுக்காகக் கண்ணீர் வடிக்கும். அவனது முகச்சோபை அப்படி. குழந்தையின் துடிவைக் கண்டு கோனார் அவனுக்கு 'நாலெழுத்து படிச்சுக்கொடுத்து உத்தியோகம் பார்க்கும்படி செய்விக்க வேணும்' என ஆசைப்பட்டு, திண்ணைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். புது விசயங்களைக் கிரகிக்க இசக்கியிடம் இருந்த ஆவலுக்கு ஏற்றபடி திண்ணை வாத்தியாரின் அறிவுப் பொக்கிஷம் விசாலமாக இல்லை. அதன் விளைவாகக் கல்வியரங்கம் மாறியது. கோனார் மறுபடியும் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பாளையங்கோட்டை சாமியார் பள்ளிக்கூடத்திற்குப் பிரயாணமானார். எம்மதத்தவரானாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத்தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துடன் ஓரளவு தர்மச்செலவு செய்யும் சேவையைச் சேர்த்துக்கொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதிபத்தியத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்து கொண்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிற மத மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதிபத்தியமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தாபனமாக இரண்டு நோக்கங்களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குலைத்து வருகிறது. இப்படிப்பட்ட ஸ்தாபனம் ஒன்றின் ஸ்தல சர்வாதிகாரி அர்ச். ஞானானந்தச் சாமியார். இவர் ஸ்தல கிருஸ்துவர்களின் ஒரு வகுப்பாருக்கு மோட்சத்தில் இடம் போட்டுக்கொடுக்கும் வேலையுள்ள ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று இங்கிலீஷும் சரித்திரமும் போதித்து வருகிறார். இவர் வசம் கோனார் தம் குழந்தையை ஒப்புக்கொடுத்தார். சாமியார் இலவசப் படிப்பும், அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனையும் கொடுப்பதாக வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. "பிள்ளையை எப்படியும் நாலெழுத்து வரும்படி செய்விக்க வேண்டும்" என காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தார். குழந்தையும் சோற்று மூட்டையுடன் புஸ்தகச் சுமையையும் தாங்கி பாளையங்கால் கரை மேலாகக் கல்வி யாத்திரை செய்துவந்தான். படிப்பு ஏழாவது வரை வந்தது. பையனுக்கும் சாமியாருக்கும் திடீர் புயலாக லடாய் ஏற்பட்டு கிழவரின் நிதானத்தைக் குலைத்தது. இந்தக் காலமும் சாமியார் செய்த பிற மத பிரச்சாரத்தைப் பிரமாதமாகப் பொருட்படுத்தவில்லை. கிருஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றாலும் கிருஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும், அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது. மேலும் புண்ணைக்காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிருஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை நம்பும்படி தன் வயிற்றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியாசம் ஒன்றுமில்லை எனவே இவன் நினைத்து வந்தான். அதனால் அவன் இந்த முயற்சிகளைச் சட்டை செய்யவில்லை. ஆனால் இது மட்டும் இந்த மனஸ்தாபத்தில் இல்லை. ஈராயிர வருஷங்களாக மதப்பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்துபோன ஒரு ஸ்தாபனத்தின் கோளாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது லட்சியத்திலோ கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முயலுவதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும். இது மன விகாரங்களில் புகுத்தும் சுழிப்புகள் அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்றுவிடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்துவிடுகின்றன. இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறு குழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு, பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டான். தகப்பனுக்கும் மகனுக்கும், இருவரும் அன்னியோன்னியப் பரிவுகள் நடந்துகொள்ள வசதியளிக்கும் நிர்க்கதியான நிலைமையிலிருந்தும் மனம் ஒன்றாமல், அந்தஸ்து கொடுத்து வாங்கும் தூரத்தைக் குறைக்காமலே நடந்துவந்ததால், பள்ளிக்கு முழுக்குப்போட ஏற்பட்ட காரணத்தைக் கூற முடியவில்லை. மதம் மாறச் சொன்னார், முடியாது என்றதால் விரட்டப்பட்டதாக அறிவித்துவிட்டான். தெய்வமாகப் பாவித்து வந்த சாமியாரின் ஆசையைப் பூர்த்தி செய்துவிட்டால்தான் என்ன, எந்த மதத்து மோட்சமானால் என்ன என்றே கிழவருக்குப்பட்டது. மேலும் ஹிந்து தர்மம், தாழ்ந்த வகுப்புகள் 'பொட்டுக்கட்டி' தன் விசேஷ பரிவைக் காட்டிவரும் சில வகுப்பின் ஆசாரங்கள் மாமிச உணவை விலக்கி வைக்காதிருப்பதால், இவ்வகுப்புக்களிலிருந்து பிற மதங்களுக்குப் போகிறவர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்பு அவ்வளவாக அறுந்துவிடுவதில்லை. அதனால் கோனாருக்கு பையன் செய்த வேலை பிடிக்கவுமில்லை; புரியவுமில்லை. இருந்தாலும் அவனைக் கண்டிக்கவில்லை. வேறு பள்ளியில் சேர்க்க முயலவுமில்லை. இந்த நிலையிலே இசக்கிமுத்தின் மனவுலகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதாவது அவன் தன்னை அறிந்துகொண்டான். ஒரு நாள் ஏனோதானோ என்று வில்லுப்பாட்டின் ஆவேசத்திற்கு இணங்க அவன் கக்கிய வார்த்தைகள் இத்தனை நாட்களாக ஊமைக் கவிஞனாக அனுபவித்துவந்த இன்பங்களை எல்லாம் இசையில் கொட்டினான். சில சமயங்களில் பிரமிக்கும் இசைக்கனவுகளை எழுப்பியது. ஆனால் பல வார்த்தைப் படாடோ ப இடி முழக்கங்கள், கனவைச் சிதைக்கும் கரகரப்புகளுடன் பிறந்தனவென்றாலும் பொதுவாக, முறையாகத் தமிழ் படிப்பது என்ற சம்பிரதாயத்தால் ருசி கெட்டுப் போகாததினால் பாட்டில் உண்மையும் தெளிவும் தொனித்தது. ஆனால் புராதனச் செல்வங்களில், தொடர்பும் பரிச்சயமும் இல்லாததினால் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பிறந்தவுடன் தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு ஓடும் குழந்தையின் அசாதாரணத் தன்மையைப் பெற்றிருந்தது. ஆனால் இசக்கிமுத்துவின் பாட்டு, இசக்கிமுத்தின் 'வெளிவராத ரகசியமாக' இருந்து வந்தது. இப்படியாக மனக்கனவுகளைப் பாடுவதும் கிறுக்குவதும் கிழிப்பதுமாகக் காலங்கழித்தான் இசக்கிமுத்து. 2 ரூபமற்ற, நாமமற்ற, அனாதியான, பொருளற்ற, பொருளுக்கு அப்பாற்பட்ட அந்த வஸ்து, அதாவது வஸ்து என்ற வரம்புக்கு மீறியதும், வரம்பே இடிந்ததுமான ஏதோ ஒன்று என்ற ஒன்றல்லாத, பலவும் அல்லாத அந்த 'அது' சிந்திக்க ஆரம்பித்தது; தன்னை உணர ஆரம்பித்தது; தன்னை உணர்ந்து தன்னையே உணரவும் அஞ்ச ஆரம்பித்தது. பூர்த்தியாகாத ஆசை வித்துக்கள் மாதிரி கொடுமையின் குரூரத்தின் தன்மைகள் தன் சித்த சாகரத்தின் அடியில் அமுங்கியும் குமிழிவிட்டு, பிரபஞ்சம் என்ற தன்னையே கண்டு அஞ்சியது. தன்னையே நோக்கியது. தானான மனிதர்கள், தன்னுள் ஆன மனிதர்கள், தன்னைக் கையெடுத்து வணங்கி தன்மீதே இலட்சியங்களைச் சுமத்தி, நன்மை நலம் மோட்சம் என்ற கோவில்களைக் கட்டுவது கண்டு கண்ணீர் விட்டது. அவர்கள் நம்புவது தான் அல்ல என்று அவர்களிடம் அறிவிக்க விரும்பியது, துடிதுடித்தது. 3 கிருஷ்ணக் கோனார் அந்திம தசையென்னும் அஸ்தமனக் கிரணங்கள் தன்மீது விழுவதைக் கண்டுவிட்டார். அர்த்தமற்ற புதிராக இருந்துவரும் பெரிய மாறுதலின் காலம் அணுகுவதை உணர்ந்துவிட்டார். இனி எப்படியோ? இதுவரை நடந்து வந்த வாழ்வுப் பாதை பிறப்பு என்ற சித்த வான் வளையத்தைத் தொடும் அந்த மங்கிய எல்லையிலிருந்து அன்றுவரை ஏற்பட்ட மாற்றங்கள், கொந்தளிப்புக்கள், சுழல்கள் எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கும். அப்பொழுது ஆட்டிய அதிர்ச்சிகள் அற்று நோக்கும் தன்மையைப் பெற்றார். இன்னும் ஒரு ஆசை மட்டும் பூர்த்தியாகவில்லை. அவனுக்குக் கலியாணத்தைச் செய்துவிட்டால் தன் கடமை பரிபூரணமாக நிறைவேறியதாகவே அவர் தீர்மானித்தார். லெட்சுமி என்ற பெண் இசக்கிமுத்துக்கு உடலதிர்ச்சிகளில் இருக்கும் இன்பத்தைக் காட்ட அவ்வூர்ப் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டாள். புதுக்குடித்தனம் என்னும் பதினெட்டாம் பெருக்கு களிபுரண்டு கொந்தளித்துச் சுழித்து ஓடியது. மனக்கனவுகள் என்ற தெப்பம் இசக்கிமுத்துக்கு நிலை தடுமாறி குதித்து முழுங்கிச் சென்றது. கனவுகள் புது வடிவம், நிஜ வடிவம் பெற்றன. அவன் பாட்டை எழுதுவதை நிறுத்திவிட்டான். நேரில் நிறைவுபெற்ற மனம் பாட்டில் துள்ளிப் பொங்கவில்லை. அவன் கனவுகள் நாத வடிவம் பெறாமல் நாள் மணிக்கணக்கில் நிஜ 'தரிசன'த்தில் ஒடுங்கியது. 4 எல்லாம் தானாகவும், தன்னில் வேறாகவும், வேறு என்ற பேதமற்றும் இருக்கும் அது தன் தொழிலில், தன் நியதியில், தன் இயற்கைத் தன்மையில் சந்தேகம் கொண்டது. பயம் கொண்டது. தன் தொழிலைத் தானே நிறுத்த இயலாமல், தவித்தது. தனக்குத் தன் தொழில் தெரியவில்லை எனக் குமைந்தது. சிருஷ்டித் தொழில் கலையின் நியதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் கண்டது. தான் நிலையாமல் தன் பூர்த்தியாகா ஆசைகள் தன் தொழிலில் விழுவது கண்டு தனக்குத்தான் பயிற்சியில்லை, கலையில்லை அதாவது சிருஷ்டித்தன்மைக்குத் தான் லாயக்கில்லை என நினைத்தது. வருஷம் முழுவதும் பதினெட்டாம் பெருக்காக இருக்க முடியுமா? வெவ்வேறு நிலையில் உள்ள உணர்ச்சி, பிரவாகம் போல ஒன்றையொன்று மோதி பொதுநிலையடையும்வரை கொந்தளிப்பும் சுழற்சியும் இருக்கும். நிலைமை சமப்பட்டவுடன் வேகம் குறையாது போனாலும் மேலுக்குத் தெரியாமல் இருக்கும். இசக்கிமுத்தின் மனத்துடிப்பு இந்த நிலையை அடைந்ததின் பயனாக, அதன் நிதானத்தைத் தப்பிதமாகக் கருதும்படி லெட்சுமிக்கு மனப்பண்பு இருந்ததால், அவனுக்குத் தப்பிதம் செய்துவிட்டாள். நிதானப் போக்கை அசட்டை என்று நினைத்ததின் விளைவாக சந்தர்ப்ப விசேஷத்திற்கிணங்க விபரீதம் விளைந்துவிட்டது. விளைந்ததும் இசக்கிமுத்துக்குத் தெரிந்தது. நாதப்பிசகு ஏற்படாமல் ஒலிக்கும்படி செய்துவந்த அவனது மன வீணையின் நரம்புகள் அறுந்து தொங்கும்படி உணர்ச்சி வாசித்து விளையாடிவிட்டன. உன்மத்தன் ஆனான். பூர்வஜன்மம் என்ற வசதி இருக்கிறதோ என்னவோ, மனித ஜீவனுக்கு உள்ள விசேஷ வசதிகளையும் சக்திகளையும் நம்மால் அறிய முடியாது. இசக்கிமுத்து அவளை மன்னிக்கும் மனப்பண்பு படைத்திருந்தான்; நபும்சகத்தால் விளையும் சகிப்புத்தன்மையல்ல; பரிபூரண மன்னிப்பு. ஆனால் மனம் அறுந்து தொங்கியது. கொழுந்து விடாவிட்டாலும் கங்கு அவியவில்லை. சில சமயம் சித்தம் அளந்து கட்ட முடியாத விபரீத அளவுக்கு மனம் பேயுருக்கொண்டு குமுறியது. தன்னையே தின்று தணிந்தது. மனசின் குதியாட்டத்தைக் கண்டு அஞ்சிய இசக்கிமுத்து அதன் கடிவாளம் தன் கைக்குச் சிக்கும்படி பண்படுத்த லயக்குறைவு இல்லாததால் இசை எழுப்ப விரும்பினான். பாட்டு உண்மையில் துடிதுடிப்புடன் பொங்கியது. வார்ப்பில் பரிபூரண அழகு முன்போல் அனாயசமாக விழவில்லை. கற்பனையில் கைப்பு தட்டியது. கனவை ஏமாற்றம் ஏந்தி நின்றது. நிராகரித்தான். கலைவாணியின் வழி சிருஷ்டியின் வழி என்பதை உணர்ந்து அறிந்தவன்; அறிந்து உணர முயன்றவன் அல்ல. மனப்பண்புதான் கவிதையின் மார்க்கம் எனக் கண்டான். மனிதனுடைய பரிபூரண லட்சியமான தெய்வக் கனவில் மனசை லயிக்கவிட்டால்தான் பாட்டில் பண்பு பிறக்கும் என நினைத்தான். லட்சுமியை விட்டுப் புறப்பட்டான். சமூகத்தை மறந்து வெளிப்பட்டான். மன லட்சியத்தின் பூத உருவமான ஹிமயத்தை நோக்கினான். நடந்தான். 5 அந்த அது மனித உருவம் கொண்டு, மனிதன் நினைக்கும் தான், தானல்ல என் மனிதனிடம் பறையடித்து அறிவித்து, தன் சுமையை இறங்கிக் கொள்ள விரும்பியது. மனித உருக்கொண்டது. தாடியும் மீசையும் நரைத்துப் பழுத்த கிழவனாராக உருவெடுத்தது. ஹிமயத்தில் காலடி வைத்தது. நடந்தது. ரூபத்திலே தெளிவு இருப்பதை உணர்ந்தது. தன்மீது சுமை இல்லையோ எனக்கூடச் சந்தேகித்தது. ஆனால் பொறுப்பை மறந்துவிடவில்லை. ஏனென்றால் அதனால் அதை மறக்க முடியவில்லை. நடந்தது... நடந்து வந்தது... இசக்கிமுத்தும் நடந்து வருகிறான். அவன் முகத்தை தாடியும் சிகையும் மறைத்தது. ஆனால் மனக்கொதிப்பின் புகை மண்டலம்போல் முகத்தைச் சுற்றிச் சிதறிப் பறந்தது. 6 இருவரும் சந்தித்தனர். அது அவனைச் சந்தித்தது; அவன் அதைச் சந்தித்தான். "நான், நானில்லை" என்றது அது. "நான், நானில்லை" என்றான் அவன். "யோகத்தில் அமருவோம்" என்றான் அவன். இருவராக அமர்ந்தனர்; ஒருவராக இருந்தனர். அது அவனில் தன்னைக் கண்டது. அவன் அதில் தன்னைக் கண்டான். முல்லை, 1947 |