உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பயம் அன்று பொழுது போகவில்லை. தேகாரோக்கியத்திற்குக் கடல் காற்று நல்லதாமே! பீச் ரோட்டில் நடந்து கொண்டே போனேன். எவ்வளவு தூரம் போனேன் என்று எனக்குத் தெரியாது. கடற் காற்றும் மனவோட்டத்திற்குச் சாந்தியளித்தது. நானும் நடந்துகொண்டே போனேன். ஏறக்குறைய திருவல்லிக்கேணி ரேடியோ ஸ்டாண்டு கூப்பிடு தூரத்தில் வந்து விட்டது. காலும் வலித்தது. பாதையின் பக்கத்திலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன். நல்ல நிலா. அடி வானத்திலே மெல்லிய பூப்பஞ்சை வைத்து ஜிகினா வேலை செய்தது மாதிரி வெண் மேகங்கள் - எனது வரையற்ற மனம்போல் - கடலையும் வானையும் பிரித்துக் கட்டின. மேலே சிதறுண்ட கனவுகள் போல், இலட்சியங்கள் போல், நட்சத்திரங்கள். பின்புறத்திலே கடல். ஆமாம்! கடல், எனது எண்ணங்களைத் தட்டிக் கொடுக்கும் பாவனையாக அலை எழுப்பி 'உம்' 'உம்' என்று ஒப்புக்கொள்ளும் கடல். மனதிற்குக் குதூகலம் வந்தது. கால்கள் நடப்பதற்கு மறுத்தன. வீட்டிற்குச் சென்று என்னத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறேன்! இன்னும் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப் போனால் என்ன? இருக்கும்பொழுது... பெரிய ஆஜானுபாகுவான வெள்ளைக்காரன். குறுகக் கத்தரித்து விடப்பட்ட தலை, அகன்ற நெற்றி, நீண்ட நாசி, குறுகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, மெல்லிய, மனவுறுதியைக் காண்பிக்கும் உதடுகள், கிரேக்க சிற்பியின் கனவு போன்ற தேக அமைப்பு. மொத்தத்தில், புத்தியும் தேக பலமும் கூடிக் கலந்து பரிணமித்த மனிதன். அந்தக் கண்களில், எதிலும் ஆசை பூர்த்தியாகாத நோக்கு. அறியவேண்டிய அவா. ஐந்து நிமிஷம் சும்மாயிருப்பது சாவுக்கு நிகர் என்று உழைப்பில் நாட்டம் மிகுந்த தேகப் படபடப்பு. பொதுவிலே, அந்தப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தங்கள் இரத்தத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தார்களே, அந்த நாடோ டிகள், இந்த மகத்தான கூட்டத்தின் தனிக் குணம் இந்த வெள்ளைக்காரனின் ஒவ்வொரு சலனத்திலும் தெரிந்தது. வந்தவன் என் பக்கத்தில் நேராக வந்து உட்கார்ந்தான். அவனிடத்தில் அந்த மிடுக்கு. வெள்ளையரின் சாம்ராஜ்யப் பெருமையில் பிறந்த அந்த மிருகத்தனம், அது அவனிடம் காணப்படவில்லை. கண்ணிலே நல்ல குணம்; கட்டுறுதியுள்ள உடல். எனக்கு அவனிடம் பேசவேண்டுமென்ற ஆசை எப்படி ஆரம்பித்தது? அவனுக்கு அந்தப் பிரச்னையே தோன்றவில்லை. சாதாரணமாக, இயற்கையாக மனிதனுக்கு மனிதன் பேசுவது மாதிரி என்னை வசப்படுத்திவிட்டான். புதிய அன்னிய நண்பன் என்ற ஹோதா எங்களுக்குள் மறைந்து போயிற்று. பேசுவது ஒரு தனிக் கலை. அது அவனுக்குத் தெரிந்து இருந்தது. சளைக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசுவது என்றால் ஒரு மனிதனுடைய தனிப்பிரசங்கம் என்று நினைத்து விடுகிறார்கள் பலர். அவன் அப்படியல்ல. பக்கத்திலிருப்பவனைப் பதில் சொல்ல வைத்துச் சம்பாஷணைப் பந்தை உருட்டி விடுவதில் நிபுணன். அன்று பல சங்கதிகள் பேசி வரும்பொழுது நான் முதலில் நினைத்தது சரிதான் என்று பட்டது. அவன் மகத்தான நாடோ டி. துருவங்களிலிருந்து, அக்னிப் பிழம்பான பாலைவனங்கள் வரை, உலகத்தில் அவனுக்குத் தெரியாத பாகம் கிடையாது. அதுமட்டுமல்ல. நல்ல ரஸிகன். அவன் மனம் ஒரு இலட்சிய உலகில் வசித்து வந்தது. அதனால், ஒரு பூர்த்தியாகாத ஆசை, ஓர் ஆதர்சம், அவனைப் பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு சென்றது. அவன் இஷ்டப்பட்டாலும், அவனால் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க அவனது மனம் இடங்கொடாது. "நீங்களும் பயந்திருக்கிறீர்களா?" என்று அவரது தேக அமைப்பை உற்று நோக்கினேன். அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. அவரும் சிரித்துக்கொண்டு, "நானும் பயந்திருக்கிறேன். நீங்கள் ஏன் சந்தேகப்படவேண்டும்?" என்று கொண்டே தன் பையிலிருந்த ஒரு சுங்கானை எடுத்து நிரப்பி விட்டு, ஒரு இழுப்பு இழுத்து, புகையை மிகுந்த ஆர்வத்துடன் ரஸித்தார். கண்கள் ஏதோ யோசிப்பது போல் கனவு கண்டன. "ஆமாம், நான் பயந்திருக்கிறேன். நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். பயம் தைரியசாலிக்கும் அசையாத நெஞ்சு படைத்தவனுக்கும்தான் வரும். கோழைத்தனம், பயமல்ல. பயம் மனதில் தோன்றும் ஒரு நடுக்க நினைப்பு. உள்ளத்தையே, உயிரையே அப்படிக் குலுக்கிவிடுகிறது. சாவு நிச்சயம் என்று நாம் எதிர்பார்க்கும் சமயத்தில் பயம் தோன்றாது. ஆமாம் தெரிந்த அபாயத்தில் பயம் தோன்றாது. அது எதிர்பாராத சம்பவங்களில், இன்னதென்று அறியமுடியாத ஒரு சக்தியின் சூழ்ச்சியில், மிகவும் சாதாரணமான தொந்தரவுகளில் வந்துவிடும். குண்டுக்கும் கத்திக்கும் அஞ்சாதவன், நள்ளிரவில் திடீரென்று பிசாசைக் கண்டால், பயம், புத்தியை வலிமையைச் சிதற அடிக்கும். பயம் இன்னதென்று தெரிந்து கொள்வான். "எனக்குப் பயம் என்றால் இன்னதென்று தெரியும். ஒரு தடவை பட்டப் பகலில் - அது பத்து வருஷங்களுக்கு முந்தி - அனுபவித்தேன். மற்றொருதரம் போன டிசம்பரில் ஓர் இராத்திரியில் அனுபவித்தேன். "ஆம்! நான் எத்தனையோ தடவை எமனுடன் போராடியிருக்கிறேன். மனிதனுடைய மிருகத்தனத்தின் பேரில் எனது சக்தியால் வெற்றி பெற்றிருக்கிறேன். எத்தனை சண்டைகள்! தரையிலும் கடலிலும்! அவைகளில் ஒரு தடவையாவது பயந்தேனா! "நான் பத்து வருஷங்களுக்குமுன் ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம் உயிர் துச்சம்! சாவிற்கு எப்பொழுதும் தயார். அதுதான் மனிதனுக்கு வரும் தீங்கில் எல்லாம் லேசானது என்று நினைக்கிறார்கள் அந்தப் பிரதேசத்திலிருப்பவர்கள். அங்கு அந்தப் பாதுகாப்பற்ற இரவிலே கவலையற்ற தூக்கம். எங்களுக்கு, எங்கள் நாட்டிலே அப்படியல்ல, ஒவ்வொரு வினாடியும் செத்துக் கொண்டிருக்கும் கோழைத்தனம். நீங்களே பாருங்களேன் மேல்நாட்டு அரசியல்களின் சந்தேகத்தை! ஆயுதம்! படைகள்! ஆயுதம்! சந்தேகம்! சந்தேகம்..." சற்று மௌனம். "அப்பொழுது நடந்ததுதான். நான் தெற்கு ஊர்க் காள் பாலைவனத்தைக் கடந்துவிட்டேன். உலகத்திலுள்ள பிரதேசங்களிலே அது பார்க்கவேண்டிய இடம். பாலைவனம் என்றால், இந்தக் கடற்கரையோரத்திலே கோவணம் மாதிரி நீண்டு கிடக்கிறதே இப்படியிருக்குமென்றா நினைத்துக் கொண்டீர்! அது மணல் சமுத்திரம், எங்கு பார்த்தாலும், மணல், மணல், மணல். திடீரென்று ஒரு பேய்க்காற்று வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இவ்வளவு நேரம் செத்துக் கிடந்த மாதிரி இருந்த மணல் அலைமேல் அலையாக எழும்பிக் குவியும். "அந்த எல்லையற்ற மௌனத்திலே மணல் மலைகள் பெரிதும் சின்னதுமாக இருக்கும். அதில் ஏறி ஏறி இறங்க வேண்டும், பாலைவனத்தைக் கடக்க வேண்டுமானால். அங்கே நிழலா? "குதிரைகள் முட்டளவு மணலில் புதைந்துதான் நடக்கும். களைப்பு என்பதற்கு அர்த்தம் அந்தக் குதிரைகளுக்குத் தெரியும். அதில் ஏறிச்செல்ல வேண்டிய விதிபடைத்த மனிதனுக்குத் தெரியும். "அப்பொழுது நாங்கள் இருவர் சென்றோம். கூட நான்கு ஒட்டகங்கள், எங்களுடைய சாமான்களுக்கு; அதன் ஓட்டிகள். எங்களால் பேசமுடியாது அவ்வளவு நாவரட்சி; கானலினாலும், களைப்பினாலும் மூச்சுத் திணறுகிறது. திடீரென்று எங்களில் ஒருவன் பயந்து ஓலமிட்டான். நாங்கள் திடுக்கிட்டு நின்றோம். ஆமாம்! திடுக்கிட்டு விட்டோ ம்! அந்தப் பிரதேசத்திலே வழி தவறிய பிரயாணிகளுக்குத்தான் அந்தக் காரணம் சொல்ல முடியாத நிகழ்ச்சி தெரியும். "எங்கோ கிட்டத்தான். எவ்வளவு கிட்டவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு முரசொலி! அதற்குத்தான் பாலையின் முரசு என்று பெயர். முதலில் காதுகளைத் துளைக்கும்படியாக, மனது இடிந்து, சுக்கலாகப் போகும்படியாகக் கேட்டது. சற்று நேரம் ஒன்றுமில்லை. பிறகு அந்தச் சாவின் அறிகுறியான, பயங்கரமான மௌனத்தை வெருட்டி, எல்லையற்ற வானத்தை நிறைத்து முழங்கியது அந்த முரசொலி. "ஒட்டகக்கார அராபியர்கள் 'ஐயோ! மரணம் நெருங்கிவிட்டது' என்று கூவினார்கள். "அவர்கள் கூவி முடியவில்லை. என்னுடைய நண்பன் குதிரையிலிருந்து விழுந்தான். சூரிய கிரணத்தினால் தாக்கப்பட்டு, அவனை உயிர்ப்பிக்க வெகு கஷ்டப்பட்டோ ம். முரசொலி, டம், டம், டம் என்று காதைத் தொளைத்தது. எனது இறந்த நண்பனைக் கூர்ந்து கவனித்தேன். பயம் தோன்றியது. "பயம்! "நெஞ்சை அப்படியே அமுக்கி உயிரைக் கசக்கிவிடும் பயம்! அதற்குச் சந்தேகமில்லை. பயந்தான். "சுற்றி நாலுபுறமும் மணற்குன்றுகள். ஜன சஞ்சாரத்திற்கும் எங்களுக்கும் இடையே இருநூறு மைல். எனது நண்பன் இறந்து போனான். நான் எப்பொழுதோ?... "அந்த முரசு - 'அதன் காரணம் என்ன?' என்று நான் கேட்டேன். "பலர் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்று சொல்லுவது? தூரத்திலுள்ள மேளங்களின் சப்தம் காற்றில் கலந்து எதிரொலிக்கிறது என்கிறார்கள். அங்கிருக்கும் ஒருவிதப் பனையின் ஓலை. சலசலப்பதின் சப்தம் என்கிறார்கள். உண்மையில் அது கானல் இருக்கிறதே அது மாதிரி ஒளியின் சப்த மயக்கம். பிறகுதான் ஸயன்ஸ்படி அது எந்தக் காரணத்தினால் உண்டானது என்று தெரிந்து கொண்டேன். பயந்தது நிச்சயம்... இன்னொரு தடவை பயந்தேனே அது பிரான்ஸ் தேசத்துக் காடுகளில். "அன்று, இரவு வெகு சீக்கிரம் வந்துவிட்டது. அவ்வளவு மேகம். நல்ல மழைக்காலம். அப்பொழுது எனக்கு வழி காட்டியாக ஒரு குடியானவன் வந்தான். வானத்திலே மேகங்கள் ஒன்றையொன்று பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு ஓடின. காற்று சண்டனாக வந்துவிட்டது. மரங்கள் தலைவிரித்தாடின. மரக்கிளைகள் பரிதாபகரமாக, பயங்கரமாக, முக்கி முனங்கிக்கொண்டு உறுமின. என்ன கம்பளிச்சட்டை போட்டுக்கொண்டு இருந்தும் குளிர் எலும்பைத் தாக்கியது. "இனிமேல் செல்ல முடியாது என்று கண்டு, பக்கத்திலிருந்த ஒரு காவல்காரனின் குடிசைக்கு அழைத்துச் சென்றான். அந்தக் காவல்காரன் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு திருடனைச் சுட்டுக்கொன்றவன். அதிலிருந்து அந்தத் திருடனுடைய பேய் வந்து அவனைத் தொல்லை செய்வதுமாதிரி அவனுக்கு ஒரு பிராந்தி - பயம். அவனுடன் அவனுடைய இரண்டு புத்திரர்களும் அவர்களுடைய மனைவிகளுடன் வசித்து வருகிறார்கள். இது அந்தக் குடியானவன் எனக்குப் போகும் பொழுது கூறினான். "இருள் அதிகமாகி விட்டதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கடைசியாகத் தூரத்திலே சற்று வெளிச்சம். நெருங்கினோம். ஒரு குடிசை கொஞ்சம் பெரியதுதான். வழிகாட்டி கதவைத் தட்டினான். உள்ளிருந்து பயத்தினால் திக்கு முக்கடித்த ஒரு குரல் யார் என்று கேட்டது. குடியானவன் பதில் சொல்லக் கதவு திறந்தது. உள்ளே சென்றோம். "நான் உள்ளே கண்ட காட்சியை ஒரு நாளும் மறக்க முடியாது. அந்த அறையின் நடுவில் பஞ்சுப்பெட்டிபோல் நரைத்த ஒரு கிழவன் கையில் குண்டு போட்ட துப்பாக்கியுடன் நின்றான். இரண்டு முரடர்கள் கையில் கோடரியை ஏந்திய வண்ணம் நின்றார்கள். சற்று தூரத்தில் வெளிச்சம் படாத இருட்டுப் பாகத்தில் இரண்டு பெண்கள் சுவரின் பக்கமாகத் திரும்பி முழங்காலில் நின்று கொண்டு இருந்தார்கள். "திடீரென்று கிழவன் பெண்களைப் பார்த்து எனது சௌகரியத்திற்கு ஒரு அறையைச் சுத்தம் செய்யச் சொன்னான். அவர்கள் அசையவில்லை. "மறுபடியும் கிழவன் சொன்னான்: 'முன்பு ஒரு மனிதனைக் கொன்றேன். போன வருஷம் அவன் வந்தான். இன்றும் அவன் வருவான்!' "அந்தக் குரலைக் கேட்டதுமே எனது மனம் கிடுகிடுத்துப் போய்விட்டது. இரத்தம் அப்படியே உறைந்து போய்விட்டது... இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றேன். முடியவில்லை. "கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்துறங்கிற்று. அதற்கு இந்தப் பயம் தெரியுமா? "வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சடசடா' என்று ஒரு இடி முழக்கம். கண்ணை வெட்டும் மின்னல். சாத்தான் உடனே பிரசன்னமாயிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். "அங்கிருந்தவர்கள் எல்லாம் ஏதோ மந்திர சக்தியில் கட்டுப்பட்டவர்கள் போல, எதையோ எதிர்பார்ப்பவர்கள் போலக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். வெகுதூரம் நடந்ததினால் களைப்பு, இவர்களைத் தேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமம் எல்லாம் சேர்ந்து எனக்குத் தூக்கத்தை வருவித்தது. படுக்கப்போக எழுந்தேன். அப்பொழுது அந்தக் கிழக்காவல்காரன், ஒரே பாய்ச்சலில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, 'அதோ வந்துவிட்டான்! வந்துவிட்டான்! காத்திருக்கிறேன்!' என்று கூக்குரலிட்டான். உடனே பெண்களும் ஓடிப்போய் முன்போல் சுவருடன் ஒட்டி நின்றார்கள். கிழவனுடைய புத்திரர்கள், மறுபடியும் கோடாலியைத் தூக்கிக் கொண்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த முயன்றேன். அப்பொழுது அந்த நாய் விழித்துக்கொண்டு பயங்கரமாக ஊளையிட்டது. அது ஏறக்குறைய மனிதனுடைய குரல் மாதிரி இருந்தது... "எல்லாரும் அந்த நாயையே கவனித்தோம். அசையாமல் நின்றுகொண்டு, எங்கள் கண்களுக்குத் தெரியாத எதையோ எதிர்நோக்குவது போல் தெரிந்தது. அதற்கு மயிர் எல்லாம் சிலிர்த்து நின்றது. "எனக்கு வழி காட்டி வந்த குடியானவன். 'நாய்க்குத் தெரிகிறது, நாய்க்குத் தெரிகிறது!' என்று கூப்பாடு போட்டான். அந்தத் திருடனைக் கொல்லும்பொழுது அந்த நாயும் கூட இருந்ததாம். "என்னை யறியாமல் பயம் என்னைப் பிடிக்கத் தொடங்கியது... அங்கிருந்தவர்கள் பயத்தால் எதையோ எதிர் நோக்கியிருந்தார்கள்... அந்த நாய் எதையோ பார்க்கத்தான் செய்தது... ஒரு மணி நேரம் இப்படி ஊளையிட்ட வண்ணமாக இருந்தது. அதன் குரல்! அதை நினைக்கும்பொழுதே குடல் நடுக்கம் எடுக்கிறது. காரணமில்லாத, அடக்க முடியாத பயம் என்னைப் பிடித்தது. எதற்குப் பயம்? எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ பயப்படக்கூடியது ஒன்று இருக்கிறது என்று தெரிந்தது. "என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவர்போல், ஒரு சின்னச் சத்தத்திலும் நெஞ்சு வெடித்துப்போகும் நிலைமையில் இருந்தோம். அந்த நாய் அறையைச் சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்தது... எங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. "என் கூட வந்த வழிகாட்டிக்கு இதைத் தாங்க முடியவில்லை. திடீரென்று எழுந்து ஓடி நாயைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவையடைத்து விட்டான். "அதற்கு அப்புறம் நிசப்தம்! இந்த நிசப்தம் எங்களுக்கு இன்னும் அதிகப் பயப் பிராந்தியை உண்டு பண்ணிற்று. திடீரென்று ஏதோ ஒன்று சுவரருகில் நிற்பதாகத் தோன்றிற்று. தொடுவதுபோல் திறக்க முயல்வது போல் தெரிந்தது. பிறகு... மறுபடியும் தெரிந்தது. பிரகாசமான கண்கள்! ஏதோ ஒரு குரல், ஈனஸ்வரத்தில். "சமையற்கட்டின் பக்கம் ஏதோ அமளி. அந்தக் கிழவன் சுட்டான். அவன் புத்திரர்கள் ஓடிவந்து கதவையடைத்து அதன்மீது மேஜையைச் சாத்தினர். அந்த துப்பாக்கிச் சத்தத்தில் எனது உயிரே போய்த் திரும்பியது. பயம்! உளறியடித்துக் கொண்டு நின்றேன். "அன்று இரவு முழுவதும் அப்படித்தான். விடியும் வரை கதவைத் திறக்க எங்களுக்குத் தைரியம் வரவில்லை. "வானம் வெளுத்தது. "சிறு வெளிச்சம் சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது. வெளியே சென்றோம். "அந்த நாய்தான். வாயில் குண்டுபட்டுச் சுவரடியில் இறந்து கிடக்கிறது." அந்த வெள்ளைக்கார நண்பர் சற்று மௌனமாக இருந்தார். பிறகு, "மனப்பிராந்தி இருக்கிறதே அதைப் போன்ற பயம் வேறு கிடையாது" என்றார். ஊழியன், 07-09-1934 |