டாக்டர் சம்பத்

நாடகத்தில் கோர சம்பவம்

     அது எங்கள் சபாவின் வருஷாந்திரக் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம். ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய 'லீலாவதி - சுலோசனா.'

     அன்று சபேசய்யர் சுலோசனையாகவும், குற்றாலம் பிள்ளை லீலாவதியாகவும் வேஷம் தரித்திருந்தார்கள். நாடகம் மெதுவாக நகர்ந்தது. லீலாவதி தன் தங்கைக்குப் பாலில் விஷத்தைக் கலந்து கொடுக்கும் கட்டம் வந்தது. சுலோசனை தன் 'சகோதரி' பரிவுடன் கொடுத்த பாலை வாங்கி நாஸுக்காகக் குடித்துவிட்டு, மரணத்தின் இன்பத்தைப் பற்றிப் பாடிக்கொண்டே, பக்கத்தில் அலங்கரித்திருந்த மஞ்சத்தில் போய் ஒய்யாரமாகப் படுத்தாள்.

     அதுவரை அந்தக் காட்சியின் அகப் பதைப்பை எடுத்துக்காட்டுவது போல் நாடக மேடையை இருள் நிறைந்ததாகச் செய்திருந்தார்கள். சுலோசனை படுக்கையில் சாய்ந்தவுடன் அந்தப் படுக்கையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்குகள் மின்னல் தோன்றி மறைவதுபோல் இரண்டு விநாடிகள் எரிந்து அவிந்தன. திரையும் விடப்பட்டது.

     ஹார்மோனியக்காரர் இடைக்காலத்தைக் கழிப்பதற்காக ஒரே பாட்டைத் திருப்பித் திருப்பிப் புரட்டிக்கொண்டிருந்தார். சிறிது நேரமாயிற்று. திரை எழவேயில்லை. நான் மேடையின் பின்புறத்திலிருந்து வெளியே வந்து முதல் வரிசையிலிருந்த டாக்டர் சம்பத் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். அவ்வளவு தாமதத்திற்கு என்ன காரணமென்று பார்த்து வரலாமென்று ஆசனத்திலிருந்து எழுந்தேன்.

     அதே சமயம் ஸ்டேஜ் மானேஜர் திரு. ராமானுஜம் திரையிலிருந்து வெளிப்பட்டு, அரங்கத்திலிருந்து இறங்கி எங்களிடம் வந்தார். அவர் முகம் வெளுத்து வியர்த்திருந்தது. அவர் நேராக டாக்டர் சம்பத்திடம் வந்து ரகசியமாக ஏதோ சொன்னார். அன்று நாடகத்திற்காக விசேஷமாக வந்திருந்த டிப்டி கமிஷனரிடமும் ஏதோ சொல்லியழைத்தார். அவர்களுடன் நானும் புறப்பட்டேன்.

     திரு.ராமானுஜத்துடன் நேராக நடிகர்கள் வேஷம் போடும் இடத்திற்குப் போனோம். அங்கே ஒரு புறத்தில் எலெக்ட்ரிக் வெளிச்சத்தில் கோரமான தோற்றத்துடன் முகத்தை வலித்துக்கொண்டு, சுலோசனை வேஷத்தில் சபேசய்யர் இறந்து கிடந்தார்.

     அவர் அருகில் போனவுடன் ராமானுஜம் டாக்டரிடம் "டாக்டர்! கொஞ்சம் பாருங்கள். சபேசய்யர் மாரடைப்பினால் இறந்து போய்விட்டாரா?" என்றார் பதட்டத்துடன்.

     அவருடைய கேள்வியால் திடுக்கிட்டவர்போல் டாக்டர் சம்பத் அவரை நிமிர்ந்து பார்த்தார். பிறகு குனிந்து இறந்தவரது உடலைப் பரிசோதித்துவிட்டு "மாரடைப்புமில்லை. ஒன்றுமில்லை. ஏதோ விஷத்தினால் இறந்திருக்கிறார்" என்றார்.

     டிப்டி கமிஷனர் "ஒரு நிமிஷம்" என்று சொல்லிவிட்டு மேடையின் முன்புறம் சென்றார். அவர் உத்தரவுப்படியே போலீஸார் ஜனங்கள் உள்ளே வந்துவிடாதபடி காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். டிப்டி கமிஷனர், சுலோசனை வேஷம் போட்ட சபேசய்யருக்கு உடம்பு சௌக்கியமில்லையென்றும், ஆகையால் நாடகம் மேலே நடக்காதென்றும், ஜனங்கள் கலவரமில்லாமல் கலைந்து போய்விட வேண்டுமென்றும் அறிவித்தார். கூட்டம் கலைய ஆரம்பித்தது.

     டாக்டர் எதிரில் பரக்க விழித்துக்கொண்டு நின்ற குற்றாலம் பிள்ளையை (லீலாவதி வேஷம் போட்டவர்) வெறித்துப் பார்த்துக் கொண்டே, "கொலையாக இருக்கலாம்; அல்லது தற்கொலை, தற்செயலாக நேர்ந்த விபத்து ஏதாவதாக இருக்கலாம்" என்றார்.

     அதற்குள் டிப்டி கமிஷனர் திரும்பி வந்து சேர்ந்தார். அவர் டாக்டர் சொன்ன கடைசி வாக்கியத்தைத் தொடருவதுபோல் நேராகப் பால் வைத்திருந்த கூஜாவினிடம் சென்றார். அந்தக் கூஜா ஒரு ஸ்டூலின் மேல் தனியாக இருந்தது. டிப்டி கமிஷனர் அதிலிருந்து ஒரு சொட்டுப் பாலையெடுத்துக் கையில் விட்டுப் பார்த்தார். டாக்டரும் அவரருகில் போய் அதைப் பார்த்தார். கூஜாவை முகர்ந்தார். பிறகு 'அதில் இல்லை' என்று சொல்லிவிட்டு எங்களிடம் திரும்பி வந்தார்.

     அதுவரை அந்தக் கோர சம்பவத்தினால் திடுக்கிட்டு மூலைக்கொருவராக ஒடுங்கி நின்று கொண்டிருந்த நடிகர்கள் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டனர். டாக்டர் சம்பத் "அவருக்குப் பால் கொடுக்கப்பட்ட டம்ளர் எங்கே?" என்றார்.

     குற்றாலம் பிள்ளை பதட்டத்துடன் "அதை இப்போதுதான் அலம்பிக் கொட்டிவிட்டுத் தண்ணீர் குடித்தேன்" என்றார்.

     டாக்டர் அவருடைய பதிலைக் கேட்டவுடன் "எங்கே கொட்டினீர்கள்?" என்றார்.

     குற்றாலம் பிள்ளை "அதோ, அங்கே" என்று ஒரு மூலையைக் காட்டினார். அவர் அதைச் சொல்லி முடிக்குமுன் டாக்டர் அந்த இடத்தையடைந்துவிட்டார். அவர் அந்த இடத்திற்குப் போய் மண்டிபோட்டு உட்கார்ந்து கீழே குனிந்து எதையோ உற்றுப் பார்த்தார். ஒரு நிமிஷம் அப்படியே இருந்துவிட்டு, எழுந்து திரும்பி வந்தார்.

     வந்தவுடன், "அந்தக் கூஜாப் பாலில் சர்க்கரை போட்டிருக்கிறதா?" என்று ராமானுஜத்திடம் கேட்டார்.

     ராமானுஜம், "இல்லை, சர்க்கரை போடாத பால்தான் கொண்டு வருவது வழக்கம். இங்கே வந்த பிறகு நடிகரின் இஷ்டத்தைக் கேட்டு சர்க்கரை போடுவோம்" என்று பதிலளித்தார்.

     "சபேசய்யர் குடித்த பாலில் சர்க்கரை போட்டிருந்ததா?"

     "ஆம் போட்டிருந்தது. காலணாவுக்கு வாங்கிக்கொண்டு வரச் சொன்னேன்."

     "யார் வாங்கி வந்தது?"

     "சபா வேலையாள் நடேசன்."

     "அவன் இங்கே இருக்கிறானா?"

     நடிகர்கள் கூட்டத்தின் பின்னால் லாயத்துக் குதிரைபோலக் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்த நடேசன் கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்லுவதுபோல் உலர்ந்த குரலில் 'எஜமான்' என்று கேட்டுக்கொண்டே முன்னால் வந்தான்.

     டாக்டர் சம்பத், "இப்படி வா நடேசா, பயப்படாதே, இன்று எங்கே சர்க்கரை வாங்கினாய்?" என்றார்.

     "மாமூலுப்போல எதுத்தாப்போல இருக்கற சாயபு கடையிலேதாங்க."

     "சர்க்கரை மடித்து வந்த காகிதம் இங்கே எங்காவது இருக்கும். யாராவது தேடிப்பாருங்கள்." அதுவரை சிலைகள்போல சுவாசத்தைக்கூட அளந்து விட்டுக்கொண்டிருந்த நடிகர்களிடையே கொஞ்சம் அசைவு தோன்றியது. ஒருவர் பின்புறம் குனிந்து, "இதோ இருக்கிறது" என்று ஒரு காகிதத் துண்டை நீட்டினார்.

     அதை வாங்கி டாக்டர் சம்பத் பத்திரமாக மடித்து டிப்டி கமிஷனரிடம் நீட்டினார். பிறகு அவரிடம் "என் வேலை முடிந்தது. நாளை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின்போது மறுபடி பார்த்துக் கொள்கிறேன். சபேசய்யர் விஷத்தினால் இறந்திருக்கிறார். செம்பிலுள்ள பாலில் விஷம் இல்லை. அவர் குடித்த பாலில்தான் இருந்திருக்க வேண்டும். இனி உங்கள் பொறுப்பு" என்றார்.

     அவசரம் அவசரமாகக் கேள்வி கேட்டல், குறுக்கு விசாரணைகள் எல்லாம் நடந்தன. லீலாவதி வேஷம் போட்ட குற்றாலம் பிள்ளைக்கும் சபேசய்யருக்கும் தொழில் முறையில் போட்டியுண்டு. இருவரும் போலீஸ் கோர்ட்டில் பிரபல வக்கீல்கள். போன வருஷம் குற்றாலம் பிள்ளைக்குக் கிடைக்கவிருந்த பப்ளிக் பிராசிகூட்டர் வேலை சபேசய்யரின் குறுக்கீட்டினால் வேறு ஒருவருக்குப் போய்விட்டது.

     வேலைக்கார நடேசன் முதலில் சபேசய்யரிடம் வேலை செய்து கொண்டிருந்தான். சபேசய்யர் ஒரு பெரிய ஸ்திரீ லோலன். நடேசன் அவருடைய கையாள். சபேசய்யரைப் பற்றி ஊரில் கொஞ்சம் வதந்தியும் உண்டு. இரண்டொருதடவை மயிரிழையில் பகிரங்க அவமானத்திலிருந்து தப்பியிருக்கிறார். அவர் சிபாரிசின் மேல்தான் நடேசனுக்கு சபாவில் வேலை கிடைத்தது.

     குற்றாலம் பிள்ளையும், நடேசனும் கைது செய்யப்பட்டனர். டிப்டி கமிஷனர் உத்தரவுப்படி அங்கிருந்த சாமான்களுக்கும் மொத்தமாகக் கொட்டகைக்கும் பாரா போடப்பட்டது.

2

     மறுநாள் நான் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனபோது டாக்டர் சம்பத்தும், ஜெனரல் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரும் பிரேத பரிசோதனையை முடித்துவிட்டு வெளியே வந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டவுடன் டாக்டர் சம்பத் புன்னகை செய்து வரவேற்று, ஆஸ்பத்திரி டாக்டரிடம், "இவர்தான் என் நண்பர் ரெங்கசாமி, உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்டர் (போதகர்)" என்று அறிமுகம் செய்துவைத்தார்.

     நான் ஆவலுடன், "பிரேத பரிசோதனை முடிந்ததா?" என்றேன்.

     "ஆம், முடிந்தது. கடைசியில் சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லையென்று தெரிந்தது!"

     "ஆனால்...?"

     "எங்களுக்கே தெரியவில்லை அவர் எப்படி இறந்தாரென்று. அவருடைய முகத்து நரம்புகளும், கழுத்து நரம்புகளும் ஏதோ கொடிய வலிப்பு நோயால் இறந்திருப்பதாகக் காட்டுகின்றன" என்றார் டாக்டர்.

     அங்கிருந்து இருவரும் நாடகக் கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்தோம். டாக்டர் சம்பத் நான் அவரோடு இருப்பதைக்கூட மறந்து அந்த இடத்திலிருந்த திரைகளையும் சிறு படுதாக்களையும், படங்களையும் புரட்டி புரட்டி ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியாக முந்திய இரவில் என்னால் தள்ளிவிடப்பட்ட மஞ்சம் ஒரு புறத்தில் கிடந்தது. டாக்டர் அதனிடம் போய் நின்று யோசனையொன்றும் அற்ற பித்தன்போல அதைப் பார்த்துக் கொண்டு நின்றார். நான், "எங்கள் சபாவில்தானா இந்தமாதிரி பயங்கரமெல்லாம் ஏற்படவேண்டும்? அப்படியானால் உங்கள் பரிசோதனை முடிவைப் போலீஸாருக்கு அறிவிக்க வேண்டாமா?" என்றேன்.

     டாக்டர் சம்பத் அருகிலிருந்த ஒரு துண்டுத் திரையைப் புரட்டிப் பார்த்துக்கொண்டே, "அதை ஆஸ்பத்திரி டாக்டர் முன்னமேயே அறிவித்துவிட்டார். அதோடு ராத்திரியே அவர் விஷத்தால் இறக்கவில்லையென்று எனக்குத் தெரியும்" என்றார்.

     "எப்படி?" என்றேன் ஆச்சரியத்துடன்.

     "குற்றாலம் பிள்ளை அந்தப் பால் டம்ளரை அலம்பிக்கொட்டிய இடத்தில் குனிந்து பார்த்தேனல்லவா? அங்கு எறும்பு மொய்த்துக் கொண்டிருந்தது. டம்ளர் பாலில் விஷம் இருந்திருந்தால் எறும்பு கிட்டக்கூட வந்திராது. சரி, நாம் போவோமா?" என்றார் டாக்டர்.

     நாங்கள் கொட்டகை வாசலையடையும் சமயம், அருகில் வலது கைப்புறத்திலிருந்த டிக்கட் அறையில் யாரோ ஒருவர் எரிந்து கொண்டிருந்த எலெக்ட்ரிக் விளக்கை அவசரமாக அணைத்தார். அதைக் கண்ட டாக்டர் சட்டென்று அப்படியே நின்றுவிட்டார். நான் ஒன்றும் விளங்காமல் நின்றேன். உடனே டாக்டர் "நீங்கள் போய் மோட்டாரில் உட்காருங்கள்" என்று சொல்லிவிட்டு, திரும்பி மேடையை நோக்கி வேகமாக நடந்தார்.

     நான் அவர் சொல்லியபடி மோட்டாருக்குப் போகாமல் அவரைப் பின்பற்றினேன்.

3

     மூன்றாவதுநாள் காலையில் நான் போலீஸ் டிப்டி கமிஷனருடன் டெலிபோனில் பேசி, கொலையாளியைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்டுவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தேன். அடுத்த வினாடி டெலிபோன் மணி கணகணவென்று அடித்தது. எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு "யார் பேசுகிறது?" என்றேன்.

     "டாக்டர் சம்பத் பேசுகிறது. எம்.யு.ஸி. (மதராஸ் யுனைடெட் கிளப்)யிலிருந்து பேசுகிறேன். அங்கே என்ன செய்கிறீர்? ஏதாவது வேலையிருக்கிறதா? ஓஹோ! கமிஷனர் என்ன சொன்னார்? பாவம்! குற்றாலம் பிள்ளையையும் நடேசனையும் இன்று மாலையில் விட்டுவிடச்சொல்லலாம்" என்றார் டாக்டர். பிறகு, டாக்டர் குரலையும் சுபாவத்தையும் நன்றாக அறிந்திருந்த நான் உடனே புறப்பட்டு எம்.யு.ஸி.க்குப் போய்ச் சேர்ந்தேன்.

     டாக்டர் ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கையில் சுருட்டுடன் சிந்தனையில் மூழ்கியிருந்தார். என் வரவையறிந்தவுடன் அவர் சுருட்டைப் பக்கத்திலிருந்த மேஜை மேலிருந்த சாம்பல் தட்டில் வைத்துவிட்டு "அந்த நாற்காலியை இப்படி இழுத்துப் போட்டுக் கொண்டு உட்காருங்கள்" என்றார் புன்னகையுடன்.

     நான் நாற்காலியை இழுத்தும் அதில் உட்காராமலே, "என்ன கொலையில்லையா? தற்கொலையா?" என்றேன் பதட்டத்துடன்.

     "ஏன் இப்படிப் பதறுகிறீர்? முதலில் உட்காரும், எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்த பலனும் கௌரவமும் உமக்குத்தான்" என்று நிதானமாகப் பேசிக்கொண்டே மேஜை மேலிருந்த சுருட்டைக் கையில் எடுத்தார்.

     "இந்த வழக்கில் உமக்கு யார் யார் மேல் சந்தேகம் எழுகிறது?" என்றார்.

     "இதில் பலர் இருப்பது போலல்லவா கேட்கிறீர்கள்? மறுபடி இந்த வழக்கில் கொலையாளியைக் கண்டுபிடித்த பலனும் கௌரவமும் எனக்குத்தான் என்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே."

     "அது கிடக்கட்டும். எல்லாம் தெளிவுபடுத்துகிறேன். இதில் உமக்கு யார் மேல் சந்தேகம், சொல்லும் பார்க்கலாம்."

     "முதலில் சபேசய்யர் எப்படி இறந்தார் என்று தெரியவேயில்லையே!"

     "ஆ! அதை மறந்துவிட்டேன். உமக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தல்லவா கேட்டுவிட்டேன். சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லை. மின்சாரத் தாக்குதலால் இறந்திருக்கிறார். அவர் பாலைக் குடித்துவிட்டுப் படுத்த மஞ்சத்தில்..."

     "நிஜமாகவா? எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? மஞ்சத்தில் என்ன இருந்தது?"

     "நான் சொல்லும்போதே இடைமறித்து அதையே கேட்கிறீரே? கொஞ்சம் நிதானமாகக் கேளும். சொல்லுகிறேன். முதலில் உமக்கு இதன் சம்பந்தமாக யார் யார் மேல் சந்தேகம் என்று சொல்லும் பார்க்கலாம்."

     "ஏன்? லீலாவதி வேஷம் போட்ட குற்றாலம்பிள்ளை, வேலைக்காரன் நடேசன், ஸ்டேஜ் மானேஜர் ராமானுஜம்... இவர்கள் மேல்தான் சந்தேகத்திற்கு இடமிருக்கிறது."

     "முக்கியமான ஆளை மாத்திரம் விட்டுவிட்டுச் சொல்லுகிறீரே!"

     "எனக்கு விளங்கவில்லையே! இதுவரையில் நமக்குத் தெரிந்துள்ள தகவல்களிலிருந்து இவர்கள் மேல்தான் சந்தேகிக்க இடம் ஏற்பட்டிருக்கிறது."

     "இவர்களில் யாருமில்லை கொலையாளி."

     "பின் யாரய்யா?" என்று பொறுமையை இழந்து கேட்டேன்.

     "நீர்தான்!" என்றார் டாக்டர் நிதானமாக. அதைக் கேட்டவுடன் நான் திடுக்கிட்டுவிட்டேன். டாக்டர் சம்பத் என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். என் உடல் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. முகத்தில் வியர்வையரும்பியதை என் உணர்ச்சிகளுக்கு மேல் உணர்ந்தேன்.

     டாக்டர் சம்பத் தமது வார்த்தைகளின் பலனைக் கவனிப்பவர் போலக் கொஞ்ச நேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, "எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிக் கடைசியில் ஒரு யோசனையும் சொல்லுகிறேன்! அதன்படி நடக்க இஷ்டமுண்டானால் நடவும். இல்லையானால் உமதிஷ்டம்" என்றார்.

     நான் பதிலே பேசவில்லை.

     டாக்டர் மேலே பேசினார்.

     "முதல் முதலாக ஸ்டேஜ் மானேஜர் ராமானுஜம் நம்மிடம் வந்து அந்தத் தகவலைச் சொல்லியபோது நான் தற்செயலாக உமது கண்களைப் பார்த்தேன். நீர் அதைக் கவனிக்கவில்லை. என் மனதில் ஏதோ தோன்றியது. பின்னால் மேடையின் மேல் போய் பிரேதத்தைப் பரீட்சித்தபோது சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லையென்பதுதான் தெரிந்ததேயல்லாமல் வேறொன்றும் தெரியவில்லை.

     மறுநாள் ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின்போது கூட அவர் மின்சார சக்தியால் மாண்டிருப்பார் என்று நான் சந்தேகிக்கவேயில்லை. அவர் கழுத்தில் ஒரு கறுத்த வடு மாத்திரம் இருப்பதைக் கண்டேன். ஆனால் ஆஸ்பத்திரி டாக்டர் பிரேதத்தின் முகம், கழுத்து நரம்புகளின் நிலைமையிலிருந்து அவர் ஏதோ வலிப்பு நோயால்தான் இறந்திருக்க வேண்டுமென்று யூகித்தார். நானும் அப்படியே இருக்கக்கூடுமென்றே கருதினேன்.

     அங்கிருந்து நாடகக் கொட்டகையில் போய்ப் பார்த்தோமல்லவா? அங்கு அந்த மஞ்சத்தைப் பற்றியும், சபேசய்யர் விதியைப் பற்றியும் நான் குறிப்பிட்டபோது, உமது முகம் நாடக இரவில் நான் உமது கண்களில் கண்டதை ஞாபகப்படுத்தியது. ஆனால் ஏன் என்று எனக்கே தெரியாது. பிறகு நாம் வெளியே வரும்போது அதைப்பற்றி நினைத்துக்கொண்டே வந்தேன். வாசலில் டிக்கட் அறையில் யாரோ சட்டென்று விளக்கையணைத்தார்களல்லவா? அந்தச் சிறு சம்பவம்தான் எனக்கு வழிகாட்டி உளவாக அமைந்தது.

     நாடகத்தில் சுலோசனை பாலருந்தும் காட்சி ஏறக்குறைய இருளிலேயே நடந்தது. ஆனால் அவள் மஞ்சத்தில் படுத்தவுடன் அந்த மஞ்சத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த விளக்குகள் பளிச்சென்று எரிந்து அணைந்தன. அது எனக்கு நினைவுக்கு வந்தது. மறுபடி உள்ளே ஓடினேன். மஞ்சத்தைப் பரீட்சித்தபோது நீரும் கூட இருந்தீர். அதில் ஒரு இடத்தில் மின்சாரக் கம்பி மேல் ரப்பர் உறை பிரிந்து இருந்தது. அதுவும் மஞ்சத்தில் படுப்பவர் கழுத்துக்குச் சரியாக. அதை நான் பார்த்தபோது நீர் என்ன சொன்னீர்? உமக்கு நினைவிருக்கிறதா? 'முட்டாள் பயல்கள். அன்றைக்கே இதைச் சரிப்படுத்தச் சொன்னேன். இன்னும் அப்படியே இருக்கிறது' என்று சொல்லவில்லையா?

     மறுபடி நாம் திரும்பியபோது கூட எனக்கு உம்மீது சந்தேகமேயில்லை. ஆனால் வீட்டிற்கு வந்தபிறகு தான் என் மனசில் ஒளி தோன்றியது. ஒன்றன் பின் ஒன்றாக உமது பல சிறு நடத்தைகள் நினைவு வந்தன. அன்றிரவு நாம் மேடைமேல் போனவுடன் அந்த மஞ்சத்தை ஒரு பக்கம் தள்ளி வைத்தது முதல் எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினேன்.

     ஆனால் நீர் கொலை செய்வதற்குக் காரணம் ஏதாவது வேண்டுமே. மேலே விசாரணை செய்தேன். நான் காரணம் சொல்ல வேண்டுமா?" என்று நிறுத்தினார்.

     என் தொண்டையிலிருந்து ஒரு சப்தம்தான் வந்தது. நெஞ்சு உலர்ந்துவிட்டது. அவர் முகத்தை நேரே பார்க்கவும் மாட்டாமல் முகத்தை மேஜை மேலிருந்த என் கைகளில் புதைத்துக் கொண்டேன்.

     "இப்பொழுது மாத்திரம்தானென்ன? சபேசய்யர் நிஜமாகவே ஒரு புழு என விசாரணையில் தெரிந்தது. நீர் அவனைக் கொன்றதில் உலகத்திற்கு ஒரு உபகாரம் செய்தீர்" என்றார் டாக்டர்.

     "ஆனாலும் நான் கொலையாளிதானே. சட்டம் என்னைத் தண்டிக்கும். அதோடு உலகமும் என் மனையின் மானத்தைப் பழித்துப் பேசும்."

     டாக்டர் சம்பத் தமது சட்டைப்பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். அதில் சபேசய்யர் தற்செயலாக மின்சாரம் தாக்கி இறந்ததாக விவரமாக எழுதப்பட்டிருந்தது. அதன்கீழ் அவரும் ஆஸ்பத்திரி டாக்டரும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள்.

     எனக்கு டாக்டர் சம்பத் உயிர்ப்பிச்சை கொடுத்தார். ஆனால் என் மனைவியின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தையும், என் கையில் உள்ள இரத்தக் கறையையும் யாரால் துடைக்க முடியும்?

மணிக்கொடி, 14-04-1935