?

     அதுவரை மனிதன் காலடிச் சுவடே படாத பிரதேசங்கள் வழியாகக் குருவும் சிஷ்யனுமாக இருவர் சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் நடந்து கொள்ளும் மாதிரியைத் தவிர மற்றப்படி வித்தியாசம் தெரியவில்லை. இருவரும் ஒரே வயதினர்; ஒரே விதமான நரைதிரை; ரொம்ப நெருங்கிக் கவனித்தால் ஒருவர், சொல்லளவில், சிறிது இளையவர் மாதிரித் தெரியும். ஆனால், முகத்தில் சிந்தனையின் அசைவு ஏற்படும்பொழுதெல்லாம் மூப்பு தானே வெளிப்படும்.

     இருவரும் ஹிமய சிகரப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாலைவனம் வழியாகச் செல்லுகின்றனர். உயிரைக் கருவறுக்கும் குளிர். தூரத்திலே எட்டாத இலட்சியம்போல் நிற்கிறது கைலயங்கிரி.

     கால்கள் அப்பொழுதுதான் விழுந்த பனிச் சகதிகளில் அழுந்துகின்றன. சில இடங்களில் பனிப்பாறைகளில் வழுக்குகின்றன.

     பார்வையின் கோணம் கதிக்க விழத்தக்க ஒரு திருப்பத்தில் வந்து நின்றார் குரு.

     "அதோ தெரிகிறது பார்த்தாயா கைலயங்கிரி, உயர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக வானைக் கிழித்துக்கொண்டு! சிகரத் திலகம் போல அதன் உச்சியில் வான்தட்டில் தெரிகிறதே ஒரு நட்சத்திரம் - பிரகாசமாக - அதைப் போலத்தான் இலட்சியம், தெய்வம்!" என்று சுட்டிக் காட்டினார் குரு. கண்களில் சத்தியத்தைக் கரைகண்ட வெறி ததும்பி வழிகிறது.

     "பிரபோ! நிமிர்ந்து நின்று என்ன பயன்? உயிரற்றுக் கிடக்கிறதே! பிரகாசமாக இருந்தால் மட்டும் போதுமா? ஒருவன் எட்டிப் பிடிப்பதற்காக அது இருந்தென்ன அல்லது கண்ணுக்குத் தெரியாமல் போய் என்ன?"

     "ஒருவன் தொட்டால் உலகம் தொட்ட மாதிரி!"

     "உலகம் அவனை இழந்துவிடுவதனாலா?"

     "இல்லை, உலகத்தை அவன் இழப்பதனால்..."

     இருவரும் தலைநிமிர்ந்து நின்று சிகரத்தைப் பார்த்தபடி யோசனையிலாழ்கின்றனர்.

     "இல்லை, நான் சொன்னது பிசகு!" என்று தலைகுனிகிறார் குரு.

தினமணி, வருஷமலர் - 1938