உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பொய்க் குதிரை "வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!" என்றெல்லாம் நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்று ஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான் கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது. பூக்கடைத் தெரு வழியாக நடந்துகொண்டிருக்கிறான். இரவு 7 மணியிருக்கும். மின்சார வெளிச்சமும், டிராமின் கண கணப்பும், மோட்டாரின் கிரீச்சலும் அவன் மன இருளுக்குப் பகைப்புலமாக இருந்தன. ரஸ்தாவின் ஓரமாக, உலகத்தின் பரபரப்பிற்கும், போட்டி ஆவேசத்திற்கும் வழிவிட்டு விலகி நடப்பவன் போல நடந்து கொண்டு போகிறான். ஜனங்கள் ஏகபோகமாக, இரைச்சலாக இடித்துத் தள்ளிக் கொண்டு செல்லுகிறார்கள். ஏதோ பிரக்ஞையற்றவன் போல் நடக்கிறான், வழிவிட்டுக் கொள்ளுகிறான், நடக்கிறான் - எல்லாம் பிரக்ஞையற்று. ரஸ்தாவில் ஒரு திருப்பம்; சற்று இருள் படர்ந்த வெளிச்சம்; பாதசாரித் திண்ணையிலே, அல்ல அதன் கீழே ஓர் ஓலைப் பாயின் சுருள்; எதேச்சையாகக் கண்கள் அதன்மீது படிகின்றன. ஓலைப் பாய்ச் சுருளா! ஓர் ஏழைக் குழந்தையின் தொட்டில்; சுருட்டிய பாயில் குழந்தை சுகமாக உறங்கியது. உறக்கமா? சீச்சி, என்ன நினைப்பு! அதன் தாயின் கஷ்டம் என்னவோ! கமலத்திற்கு ஒரு குழந்தை இருந்தால்... நினைப்பில் என்ன குதூகலம்...! சீச்சீ! இன்றும் சம்பளம் போடாவிட்டால் என்ன? நாளை போடுகிறான். அந்தக் குழந்தையின் தகப்பனை ஒப்பிட்டால் நாம் ராக்பெல்லர், ஏன், குபேரனல்லவா? இந்த உற்சாகம் மற்றக் கவலைகளை மறக்கடிக்கிறது. அன்று டிராமிற்குக்கூடச் செலவழிக்காமல் கொண்டு செல்லும் அந்த ஓரணாவை வைத்துக்கொண்டு... வழி நடை தெரியவில்லை; திருவல்லிக்கேணிவரை உற்சாகமாக நடக்கிறான். கமலா, பாவம் தனியாகக் கொட்டுகொட்டென்று உட்கார்ந்திருப்பாள். நவராத்திரிக் கொலு வைக்கக் கூடாத... என்ன ஜன்மம்... என்ன பிழைப்பு... அவளுக்கு அந்தச் சிறு சந்தோஷத்தையாவது கொடுக்க முடியாத பேடி... மௌண்ட் ரோட்டைத் தாண்டி திருவல்லிக்கேணிப் பக்கம் நெருங்கிவிட்டான். வல்லபாய் அக்ரகாரம் கிட்ட வந்துவிட்டது. வழியிலே ஒரு கூடைக்காரி. புஷ்பம்! நல்ல முல்லை, மலரும் பருவம் - கம்மென்ற வாசனை! கமலாவின் தலையில் வைத்தால் அவள் முகத்தில் வரும் புன்சிரிப்பாவது பசியை ஆற்றுமே! உடனே கூடைக்காரியிடம் வேறு யோசனையில்லாது புஷ்பத்தை வாங்கிவிடுகிறான். வழி நெடுக அவள் புன்சிரிப்புத்தான்... அவன் உதட்டில் ஒரு புன்சிரிப்பு... "கமலா! கமலா!!" "யாரது! நீங்களா?" என்று கதவைத் திறக்கிறாள் கமலம். வீடு என்ற ஹோதாவில் இருக்கும் காற்றற்ற சிறு அறையில் மேஜையிலே மங்கிய விளக்கு, துணிமணி சிதறிய கொடி, சுவரோரம் பூராவும் டிரங்குப் பெட்டியும், தட்டுமுட்டுச் சாமான்களும், படுக்கையும். கமலா சிரித்துக்கொண்டு கதவைத் திறக்கிறாள். அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் கண்கள் எதையோ எதிர்பார்ப்பவை போல் தோன்றின. அவ்வளவுடனும் ஒரு மகிழ்ச்சியிருந்தது. மகிழ்ச்சியை விட எதிர்பார்த்த ஆசை அதிகம். "கமலா! உனக்கு ஒன்று கொண்டுவந்திருக்கிறேன். என்ன, சொல் பார்ப்போம்!" என்றுகொண்டே கொடிப்பக்கம் திரும்பிச் சட்டையைக் கழற்றினான். கமலத்தின் முகத்தில் ஒரு சமாதானம், மகிழ்ச்சி பொங்கியது. விசுவம் அதைக் கவனிக்கவில்லை. அவசர அவசரமாக, "கமலா, இன்று சம்பளம் போடவில்லை. அதற்கென்ன நாளை போடுவார்கள். நான் உனக்கு என்ன கொண்டுவந்திருக்கிறேன், தெரியுமா?" என்றான். குரல், அவன் மனத்திலிருந்த கஷ்டத்தைப் பொருட்படுத்தாத மாதிரி பாவனை செய்து தேற்றியது. "என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்று தளர்ந்த குரலில் கேட்டாள். "இதோ பார்!" என்று அவள் பின்புறமிருந்துகொண்டு, அவளுக்குச் சிரிக்கும் முல்லையைக் காண்பித்துவிட்டு, அவள் தலையில் சூட்டி, அவள் தோள்களைப் பிடித்து உடலைத் திருப்பிய வண்ணம் முத்தமிட எத்தனித்தான். கமலாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது. முகத்தை அவன் மார்பில் மறைத்துக் கொண்டு பொருமி, விம்மி விம்மியழுதாள். விசுவத்தின் மனத்தில் கதையைக் கொண்டடித்தது போல் ஓர் உணர்ச்சி! கண்களில் என்ன கோழைத்தனம்! "அசடே! அசடே! இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு வருகிறது. அதற்காக அழுவாளோ! மண்டூகம்!" என்றான் விசுவம். "அதற்காக இல்லை!" என்றாள் கமலம். அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. கண்களிலே ஒரு பரிதாபம், ஏக்கம், மகிழ்ச்சி கலந்திருந்தது. "பின் எதற்கு?" "தோணித்து; அழுதேன். என்னமோ அப்படி வந்தது!" என்று அவன் அதரத்தில் முத்தமிட்டாள். முத்தம் அந்த மலர்ந்த முல்லையின் ஸ்பரிசம் போலும், கனவின் நிலவு போலும் மென்மையாக இருந்தது. விசுவம் அவளை அணைத்து, முகத்திலும் அதரத்திலும் முத்தமிட்டான். சோர்ந்தவள் போல் அவன் தோள்களில் சாய்ந்த அவள் மெதுவாகக் கையை நீக்கி விலக்கிவிட்டு, "சாயங்காலம் உங்கள் நண்பர் அம்பியும், லட்சுமியும் வந்திருந்தார்கள்" என்றாள். "என்ன விசேஷம்?" "இன்றைக்குக் கொலுவுக்கு என்னைக் கூப்பிட வந்தாள். உங்களையும் நேரே வந்து அழைக்க அவரும் வந்திருந்தார். கட்டாயம் வரவேண்டுமாம்!" "கொலுவில் நான் எதற்கு?" என்று சிரித்தான் விசுவம். "அதுமட்டுமில்லையாம், இன்னிக்கு ஒரு விருந்தாம். எல்லா நண்பர்களையும் கூப்பிட்டிருக்காளாம். அவசியம் வரணும் என்று சொன்னார்கள்!" என்றாள் கமலம். இப்படியாவது அவளை அழைத்துச் சென்று சற்று அவளுக்குக் களிப்பூட்டலாமே என்று நினைத்தான் விசுவம். "கமலா, நீயும் புறப்பட்டேன், போகலாம்" என்றான். கமலம் தயங்கினாள். "சீ, அசடு! முகத்தைக் கழுவிவிட்டு அந்தச் சுதேசிப் புடவை வாங்கினோமே - அதுதான் வெளுப்பாகி வந்திருக்கிறதே! - அதை எடுத்துக் கட்டிக்கொள். நானும் புறப்படுகிறேன்" என்று துரிதப் படுத்தினான் விசுவம். அவளும் அவன் இஷ்டத்தைப் பூர்த்திசெய்ய முகத்தைக் கழுவி, சிறு குங்குமப் பொட்டிட்டுக்கொண்டு தயாரானாள். "கமலா! இங்கே வா!" என்று அவளை மடிமீதிருத்திக் கொண்டு, "கண்ணாடியில் பார்!" என்று சிரித்தான். "போங்கள், உடை கசங்கிவிட்டால்?..." என்று எழுந்திருக்க முயன்றாள். அவள் எவ்வளவு விடுவித்துக்கொள்ள முயன்றும் அவன் அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டான். "பாருங்கோ! கசங்கிவிட்டதே!" என்றாள் கமலம். இருவருக்கும் கண்ணாடியில் சிறு பாகத்தைத் தவிர மற்றதெல்லாம் வெறும் பலகை என்பது ஞாபகத்திலில்லை. ***** அம்பி விசுவத்தின் பால்யத் தோழன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். ஆனால் அம்பி பணக்காரன். சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அவனும் அவன் மனைவி லட்சுமியும் வாழ்க்கை என்பது இன்பமயமான மோட்சம் என்றுதான் அறிந்தவர்கள். அம்பிக்கும், லட்சுமிக்கும், விசுவமும் கமலமும் வராத ஒரு விசேஷம் விசேஷமில்லை. அன்று ஒரு விருந்து நடத்தவேண்டுமென்று தோன்றியது அம்பிக்கு. அத்துடன் நவராத்திரிக் கொலுவும் சேர்ந்துவிட்டால் கேட்பானேன்! வீட்டு உள்ஹாலில் பொம்மைகள், விக்ரகங்கள் வைத்துக் கொலு அடுக்கியிருக்கிறது. லட்சுமியும் அவள் தோழிகளும் கம்பளத்தில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர். கிராமபோனில் முசிரி இவர்களுடைய மனத்தைக் கவர முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், வெறுப்புத் தோன்றாமல் பாட அவர் கிராமபோன் ப்ளேட்டாக மாறினால்தான் முடியும். அது அங்கு நடந்துகொண்டிருக்கிறது. "அதோ, கமலா வந்துவிட்டாள்!" என்று எழுந்து ஓடினாள் லட்சுமி. "வாருங்கோ!" என்று சிரித்துக்கொண்டு கமலத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றான். "அம்பி எங்கே?" என்றான் விசுவம். "அவர் மச்சில்லே இருக்கார்!" என்று கூறிவிட்டு உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள் லட்சுமி. "அதார் விசுவமா? வாடா! ஏண்டா இவ்வளவு நேரம்? யூஸ்லெஸ் பெல்லோ! அப்படி என்ன ஆபீஸ் கேடு? வா உயர!" என்று கத்தினான் அம்பி. மெத்தை வராந்தாவில் நாலைந்து நாற்காலிகளிடையே பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. இரண்டிலும் நண்பர்கள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அம்பி மட்டும் ஒரு குழந்தையைத் தோளில் சாத்தியவண்ணம் நடந்துகொண்டு அத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். விசுவம் உயர வந்ததும், "அந்தப் பயலை இங்கு கொண்டு வா!" என்றவண்ணம் நெருங்கினான். குழந்தை அந்தப் பாதி இருளில் அடையாளம் தெரியாததால் அம்பியைப் பிடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்தது. "அடே, திரும்பிப் பாரடா, விஸ்வ மாமா வந்திருக்கார்! அழலாமோ? பிஸ்கோத்து வாங்கித் தருவார். அன்னிக்கித் தரலே! ஏண்டா வாங்கித் தருவாயோ இல்லையோடா?" என்று குழந்தையைச் சமாதானப்படுத்தினான். விசுவத்திற்கு குழந்தைக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தாக வேண்டும் என்று பட்டது. "மாமா, பிஸ்கோத்து!" என்றது குழந்தை. விசுவம் மனத்தில் ஏற்பட்ட நினைவை மறைத்துக்கொண்டு, கையிலிருந்த சாவிக் கொத்தை எடுத்துக் குலுக்கி, வேறு விளையாட்டில் அதன் மனத்தைத் திருப்பினான். அதற்குள் கீழேயிருந்து வீணையின் தொனி கேட்க ஆரம்பித்தது. பிறகு கமலத்தின் குரல் - 'சாந்தமுலேக' என்ற தியாகராஜ கீர்த்தனம். "அடே, உன் 'ஒய்ப்' (மனைவி) பாடுகிறாள்டா! கேளு!" என்று கத்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தான் அம்பி. திடீரென்று பாட்டு பாதியில் நின்றது. "அம்மாமி கொஞ்சம் ஜலம்" என்ற தனது மனைவியின் குரல் விசுவத்தின் காதில் மட்டும் விழுந்தது. மத்தியானம் என்ன சாப்பிட்டாளோ? "டேய் விசுவம்! நீ அந்தக் கீர்த்தனத்தை முடி!" என்றான் அம்பி. "உனக்கு வேலையில்லை!" "ஸார்! இந்தப் பயல் நல்லாப் பாடுவான் ஸார்! நீங்கதான் கேளுங்கோ! இல்லாவிட்டால் நான் பாட ஆரம்பித்துவிடுவேன்!" என்றான் அம்பி. அம்பியின் சங்கீத ஞானத்திலும் குரல் இனிமையிலும் அவன் நண்பர்களுக்கெல்லாம் பயம். ஏன்? கேட்கத் துர்ப்பாக்கியம் பெற்ற எல்லோருக்கும் அப்படித்தான். விசுவத்திற்கு மனத்தில் குதூகலம் இல்லை. உடலில் சோர்வு. ஆனால் அவன் கேட்டதற்குத் தான் கடமைப்பட்டவன் போலிருந்தது. ஏன் வந்தோம் என்ற நினைப்பு. கமலம் என்ன நிலையில் இருக்கிறாளோ? "பாடுடா!" விசுவம் அந்தக் கீர்த்தனத்தை எடுத்துப் பாட ஆரம்பித்தான். அதைக் கீழேயிருந்த பெண்கள் கேட்டுவிட்டார்கள். உடனே கமலத்தை, 'இன்னொரு பாட்டு, இன்னொரு பாட்டு' என்றார்கள். அம்பியும் இவனைச் சும்மா விடவில்லை. கமலம் தனது கணவர் குரலைக் கேட்டவுடன், அவர் மனத்திற்குச் சாந்தியும் சந்தோஷமும் அளிக்கிறதென்று, இவர்களுக்காக அல்லாமல் அவருக்காகப் பாடினாள். எப்படியிருந்தாலும் மனித தேகந்தானே! ஆனால், களைப்பைக் காண்பிக்கவும் முடியவில்லை. மரியாதைக் குறைவல்லவா? அம்பி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "நேரமாகிவிட்டதே! எனக்காக இல்லாவிட்டாலும் உன் நண்பர்களுக்காகவாவது கொஞ்சம் போஜனத்தைப் பற்றிக் கிருபை செய்யக் கூடாதா?" என்றான். உடனே மங்களம் பாடி முடித்துவிட்டு, மற்றப் பெண்கள் எல்லாரும் ஏதேதோ சாக்குகளுடன் தாம்பூலம் வாங்கிக்கொண்டு புறப்பட்டு விட்டனர். லட்சுமியும் கமலமும் தவிர வேறு பெண்கள் இல்லை. கமலத்திற்கு என்னவோ அங்கு அன்று சாப்பிட மனமில்லை. ஆனால் கணவர் என்ன சொல்லுவாரோ? ஐந்தாறு இலை போட்டு இருவரும் பரிமாறினார்கள். அம்பியும் அவன் நண்பர்களும் சாப்பிட வந்து உட்கார்ந்தார்கள். "கமலா! நீ நெய்யைப் பரிமாறு. நான் பப்படத்தைப் போடுகிறேன்!" என்றாள் லட்சுமி. "நான் எதற்கு?" என்றாள் கமலம். "இதென்ன கூச்சம்! எடுத்துக்கொண்டு..." என்று அவள் கையில் நெய்க் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு, பப்படத்தை எடுத்துக் கொண்டுவர உள்கட்டிற்குச் சென்றாள் லட்சுமி. கமலம் கூசிக் கூசிப் பரிமாறிக்கொண்டு சென்றாள். அம்பிக்கும் பரிமாறியாய்விட்டது. வரிசையாக அவர்கள் நண்பர்களுக்குப் பரிமாறிக்கொண்டு அந்தக் கோடியில் உட்கார்ந்திருந்த விசுவத்திடம் சென்றாள். அம்பி உடனே சிரித்துக்கொண்டு, "ஊரார் வீட்டு நெய்யே! பெண்டாட்டி கையே" என்று பாட ஆரம்பித்தான். "அந்தப் பழமொழி பொய்த்துப் போகாமல் ஊற்றுங்கள்!" என்று உரக்கச் சிரித்தான். கமலத்தின் மண்டையில் பின்புறத்திலிருந்து யாரோ அடித்த மாதிரி இருந்தன இந்த வார்த்தைகள். அவள் கைகள் நடுங்கின! இருவர் கண்களும் கலந்தன. கை நடுக்கத்தில் விழுந்த இரண்டு துளிகளுடன் ஒரு கண்ணீர்த் துளியும் கலந்தது. கமலம் ஜாடையாகச் சமாளித்துக் கொண்டாள். மற்றவர்கள் கவனிக்கவில்லை. எப்படி முடியும்? இதற்குள் லட்சுமி பப்படத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். "என்னடா விசுவம். சுத்த அசடனாக இருக்கிறாய்! அவளுக்கு ஏதாவது டோ லக் கீலக் வாங்கக் கூடாதா? லட்சுமி போட்டிருக்கிறாள் பார்த்தாயா? அவள் முகத்திற்குச் சரியாக இருக்கும். ஏண்டி, நீ அந்தப் புடவை என்னமோ வாங்கினாயே, அதை அவாளிடம் காண்பி!" என்று அடித்து வெளுத்துக்கொண்டு போனான் அம்பி. "வாங்க வேண்டும் என்றுதான் உத்தேசித்திருக்கிறேன்" என்றான் அம்பி. போஜனம் ஒருவாறு முடிந்தது. தாம்பூலம் வாங்கிக்கொண்டு இருவரும் திரும்பினார்கள். விசுவத்தின் வீட்டில் மங்கிய விளக்கு. அவன் படுக்கையில் சாய்ந்திருக்கிறான். பக்கத்தில் கமலம் உட்கார்ந்திருக்கிறாள். வெற்றிலையை மடித்துக் கொடுத்தவள், அவன் முகத்தைப் பார்த்ததும் 'கோ!'வென்று கதறிக்கொண்டு அவன் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள். சிறைப்பட்ட துக்கம் பீரிட்டுக் கொண்டு வருவது போல் இருந்தது. "சீ, அசடு! ஏன் அழுகிறாய்! அம்பி ஒரு அசட்டுப் பயல். அவன் வார்த்தைக்கு ஒரு மதிப்பு வைக்கலாமா? உலகம் தெரியாமல், குடி முழுகிப் போன மாதிரி... அசடு!... அசடு!" என்று தேற்றினான். "அதற்கல்ல..." என்றாள் கமலா. "பின் என்னவோ துக்கம்!" "இன்றைக்கு மனசே ஒரு நெலை கொள்ளல்லெ!" "சீ! நான் செய்தது முட்டாள்தனம்! கமலா!" என்று அவள் அதரத்தில் முத்தமிட்டான். கண்ணீரின் ருசி உப்பு மட்டும் கரிக்கவில்லை. 'ஆறு கதைகள்', தொகுப்பு -1941 |