உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
புரட்சி மனப்பான்மை அன்று என் நண்பரின் பத்திரிகை ஆபீஸிற்குப் போயிருந்தேன். அங்கே ஓர் புரட்சிக்காரர் - அசல், 'அப்படமானவர்', கொஞ்சம் கூடக் கலப்புக் கிடையாது - நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மாஜி - ஏதோ ஓர் - சதிக் கைதி. என் நண்பர் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். "நம் போன்றவர்கள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டியவராக்கும்" என்றார் என் நண்பர். புரட்சிக்காரர் 'ஓய், உமக்கு வெள்ளைக்காரனைச் சுடத் தெரியுமாங்காணும்' என்ற ஒரு பார்வை பார்த்தார். சரி, இதுதான் ஸ்ரீமான் புரட்சியா என்று நிர்ணயித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். புரட்சிக்காரர் அணிய வேண்டிய அசல் விதேசிச் சரக்கு, யாரையும் எடுத்தெறிந்து பேசும் தன்மை... சர்வ லட்சணமும் பொருந்தியிருந்தது. சாட்சாத் புரட்சிக்காரர் தரிசனத்திற்காக என் முன்னோர்கள் வழிபட்டுவந்த கடவுளை நான் கும்பிட்டுக்கொண்டேன். பாட்லிவாலா, பண்டார சன்னிதி, கங்காரு, 1939 மாடல் மோட்டார் கார், இரட்டைப் பெண்கள், ஸினிமா ஸ்டார் காந்தாமணி பாய், உயர்திரு தேசபக்தர், இத்யாதி இத்யாதி ரகத்தைப் பார்க்க மனுஷருக்கு சுபாவமாக உள்ள ஆசையை என் விஷயத்தில் திருப்தி செய்துவைத்த அந்த ஸ்ரீமான் இன்குவிலாப் ஜிந்தா பாத்துக்கு என் மனமார்ந்த வந்தனம். என் நண்பரும் சிறைசென்ற தேசபக்தர். கார்ல் மார்க்ஸ் பாராயணமும் கொஞ்சம் உண்டு. சுருங்கச் சொல்லுகிறேனே - வெகு தீவிரம். குசலப் பிரச்னங்களுடன் பரஸ்பர போலீஸ் காவல், சிறையில் கசையடி, இடைமறிக்கப்பட்ட கடிதங்கள், சமீபத்தில் வெளியான விக்டர் கொலான்ஸின் தீவிரவாத கிரந்தம் - சுங்க அதிகாரிகள் கண்ணில் பிஸ்கோத்து டின் மாதிரி இந்தியாவிற்குள் நுழைந்தது - எல்லாம் சேர்த்து அந்தச் சமயத்தில் ஸ்ரீமான் எழுத்தாளரைச் சென்ற வருஷத்துப் பஞ்சாங்கமாக, அதாவது சமயா சமயங்களில் திருப்பிப் பார்க்க வேண்டிய விஷயமாக ஆக்கியது. வேண்டாத இடங்களில், வெற்றிலைப் பாக்கு + புகையிலை என்ற அழுத்தமான வாய்ப்பூட்டை - (144 உத்திரவைவிடக் கடுமையானது) - பிரயோகித்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியாது... எனது நண்பரை இப்படிப் புரட்சி சக்தி அமுக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. லாட்டியடி முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கோபம் வரை தாலுகா டிவிஷன்களில் ஏற்றுத் தாங்கியவர். அவர் தாலுகா பிராந்தியம் என்று நான் விசேஷமாகக் குறிப்பிடுவதின் காரணம், அங்குள்ள மலையாளத்து ரிஸர்வ் போலீஸ்காரர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் தங்கள் சொந்த பாங்கியில் இருக்கும் கரண்ட் டெபாஸிட்டாகக் கருதி அதில் அத்து மீறித் தலையிடுகிறவர்களைத் தங்கள் சொந்தக் கோபாவேசத்திற்கு ஆளாக்குகின்றனர். பட்டணத்துப் போலீஸ்காரன் என்றால் கொஞ்சம் தாராள புத்தியுண்டு. இப்படி எல்லாம் அனுபவமுள்ள ஒரு மனிதன் சர்வசூன்யமாகத் தன்னை யிகழ்ந்துகொள்ளுவார் என்று நான் நினைக்கவேயில்லை. வெற்றிலையில் நரம்பைக் கீறி எறிந்தேன். அது 'பினாமி' (காரமில்லாத மெட்ராஸ்) வெற்றிலை. வெறுப்புடன் சுண்ணாம்பைத் தடவினேன். சுவரில் சுரண்டி எடுத்தது போல உருண்டு உருண்டு வெற்றிலையை ஓட்டை போட்டது. இந்த சம்பிரமத்தில் களிப்பாக்கு. அதற்கு மேலாக முகப் பவுடர், செண்டு இவைகளில் நம்பிக்கை வைத்து ஆட்களை மயக்கிவரும் குரூபியான விபச்சாரிக்கு உதாரணம் போன்ற புகையிலை. இவை போதாதென்பது போல "ஸ்ரீமான் வெங்கு ராவைத் தெரியுமோ, கவர்னர் ஸ்பெஷல் வெடிகுண்டு வழக்குக் கைதி; பெல்லாரி ஜெயிலிலே தனி வார்டில் போட்டு அடித்தார்களே. ஓகோ, அப்பொழுது உங்களை திருச்சி ஜெயிலுக்கு மாற்றி விட்டார்களோ - வீரன்னா வீரன் தான் சார் - என்ன வேலைகளெல்லாம் பண்ணியிருக்கிறான் தெரியுமோ..." "அவரைப் பார்க்க உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமே? பாவிப்பயல்கள் என்னை மாத்திப் போட்டானே!" என்று பரிதவித்தார் புரட்சி மோகன லாகிரியில் சிக்கிய என் நண்பர். "மூவ்மெண்ட் டயம்ல என்ன செய்தார் தெரியுமா... செப்டம்பர் நடுராத்திரி ரூம்ல டார்ச்கூட இல்லை. வெளியிலே சடபுடவென்று கதவு தட்ற சப்தம் கேட்டது - என்ன செய்தார் தெரியுமா?" என்று ஒரு ஆணித்தரமான கேள்வி போட்டார்... "தெரியாது, அதற்கப்புறம்" என்றேன் நான். அரிச்சந்திரன் மயான காண்டத்தில் ஊன்றிக்கொண்டு நிற்க வேண்டிய தடி சடக்கென்று ஒடிந்துவிட்டால் எப்படியிருக்கும்? 'பின் - அரிச்சந்திரன்' அந்த சமயத்தில் சோகம் குலைய மிருதங்கக்காரனைப் பார்த்து உறுமுவது போலிருந்தது என் நண்பரின் பார்வை. ஸ்ரீமான் புரட்சியின் ரசனை கொஞ்சம் கட்டை போலும் "அவர் அசல் கோதுமை சப்பாத்திதான் சார். பஞ்சாபிக்காரன் மாதிரிச் சாப்பிடுவார்" என்றார், பாவம் ஸ்ரீமான் புரட்சி. சரி, நேரம் சரியில்லை என்று நினைத்துக்கொண்டு, "உம்மிடம் ரெண்டு ரூபாய் கடன் வாங்க வேண்டுமென்று வந்தேன். நாளைக்கும் வருவேன். உம்மால் என்னை ஏமாற்ற முடியாது" என்று சொல்லிக்கொண்டு வெளியேறினேன். உப்பங்காற்று மட்டிலும் வீசும் சமுத்திரக் கரைக்குப் போகும் பொழுதுதான் விஷமத்தனமான என் கசப்பு என்னைவிட்டு அகன்றது. அப்பொழுது அங்கு வந்தான் ஸ்ரீ பாலு; மெஸர்ஸ் பீபரிவாலா ஹுக்கும் சந்த் அண்ட் சன்ஸ் கம்பெனியின் பல ஜோலி குமாஸ்தா. கம்பெனியில் காப்பிக் கொட்டை கேஸ்களுக்கு ஆணியடித்து விலாசம் ஒட்டுவது முதல் வரவு செலவு கணக்கு தயாரிப்பது, சேட்ஜி மகள் ஸோனியாவுக்கு வர்ணப் பென்ஸில் வாங்கிக் கொடுப்பதுவரை உள்ள வேலைகள் எல்லாவற்றையும் விரக்தியுடன் செய்யும் அபேதவாதி அவன். "என்ன சார் இப்படி உட்கார்ந்திருக்கேள்! ஹி! ஹி! போன வாரம் நீங்க எழுதின கதை ரொம்ப ஜோர் சார், வாழ்க்கையின் நுணுக்கங்களை அப்படியே எழுத்தோவியமா பண்ணியிருக்கேள் சார், ஹி! ஹி!" என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவன் அடிக்கடி என் கதைகளைப் படிப்பான். அதைவிட என் விமர்சனங்களைப் படிப்பான். முக்கால்வாசி என் கைச்சரக்கே என் தலைமேல் தூக்கிப்போட்டு உடைக்கப்படும். என்ன இருந்தாலும் புகழல்லவா சார்? யாருக்குத்தான் இழக்க மனசு வரும். வர்ணக் கடுதாசி ஒட்டிய ஜப்பான் விளக்கு மாதிரியான சுடாத புகழ் வெளிச்சத்தில் உடம்பைக் கொஞ்சம் காயவைத்துக் கொண்டேன். '...' என்ற பத்திரிகையைக் குறிப்பிட்டு "போன வருஷம் மே மாசப் பிரதியைப் பார்த்தீர்களா?" என்றான். "எதற்கு?" என்றேன். "அதிலே ஓர் ஆழ்ந்த உண்மை இருக்கு; பார்த்தேன் சார். நேற்று இப்படி மூர் மார்க்கெட் பக்கம் போனேன். இதை அடுக்கியிருந்தான். அட்டைப் படம் எல்லாம் கிழிஞ்சு போச்சு. காலணாவுக்கு ரெண்டுன்னான். ஏன் சார் நமக்கு விஷயந்தானே வேணும். அப்படியே ஒரு ரெண்டணாவுக்கு ஒரு கத்தை வாங்கினேன். நம்ம வீட்டுக்காரி இருக்காளே, அவளுக்குக் காகிதக் கூடை பண்ணணுமாம், அப்படியே குடுத்துடுன்னு வாதாடினாள். அதிலே ரொம்ப விஷயங்கள் இருக்கு, படிச்சுட்டுத்தான் தருவேன்னுட்டென். எப்பப் பார்த்தாலும் இந்தத் தொந்திரவுதான் சார். நல்ல கோட் சார், மூணா வருஷந்தான் வாங்கினது. கை ஓரத்திலேதான் கொஞ்சம் கிழிசல். அதைக் கொடுத்து ஒரு கண்ணாடி ஜாடி வாங்கிப்பிட்டாள் சார். என்ன பண்ணச் சொல்ரேள், என்னெ?" என்று ஒரு மூச்சு பேசி முடித்தான். நான் எப்பொழுது ஓயப் போகிறதோ என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். "ஏன் சும்மா ஒரு மாதிரி இருக்கேள்? கொஞ்சம் வெத்திலெயேப் போடுங்களேன்" என்று விதேசி டப்பி நாசூக் வெற்றிலைச் செல்லத்தை என்னிடம் நீட்டிவிட்டு, "நீங்கள் என்ன நினைக்கிறேள் - எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சால் உடம்புக்கு நல்லதா சார்?" என்றான். "எனக்கெப்படி தெரியும்? நான் தேய்ச்சுக்காம இருந்ததில்லையே" என்றேன். "சும்மாத்தான் கேட்டேன். அதிலே போட்டிருக்கான், எண்ணெய் தேய்ச்சுண்டா கெடுதல்னு. கெடுதல் எப்படின்னா ஜன்னி வந்துவிடுமாம். பாம்பு கீம்பு கடிச்சா விஷத்தோட ரோஷம் (உக்கிரம் - மெட்ராஸ் வார்த்தை) ரொம்ப ஜாஸ்தியாம். இந்தக் கெடுதல்கள் எல்லாம் எதற்கு? அவன் ஒரு மருந்து சொல்றான். அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை - வெல ஜாஸ்தி - அது மட்டுமா (காதோடு காதாக) சுக ஜன்னி வந்திடுமாம். இன்னிக்கு ஒரு காரியம் செய்ரதுன்னு தீர்மானம் பண்ணிப்புட்டேன். இனிமே எண்ணெயே தேய்ச்சுக்கறதில்லென்னு. வீட்ல ஏக ரகளை. இன்னிக்கு என்ன கிழமை தெரியுமா - புதன்! ஒரே பாட்டா முடியாதின்னுப்பிட்டேன். தலைலே கூட எண்ணெயைக் கொண்டுவந்து வச்சிப்பிட்டா. நான் தீரமா உதறித் தள்ளிட்டு ஆபீஸுக்கு வந்துட்டேன். இன்னும் வீட்டுக்குப் போகல்லே. இப்படியே பீச்சுக்கு வந்திட்டு பூ வாங்கிக்கிண்டு போகலாமுன்னு வந்தேன்..." "ஏன் ஓய், உம்ம வீட்டு மூலக்கிரகத்து சமாசாரத்தை வெளியில் போட்டு உடைக்கிறீர்? என்ன சமரசக் கமிட்டி ஏற்படுத்தணுமா?" என்றேன். "போமையா! உங்களைப் பார்த்ததும், ரொம்ப நாளாச்சே, வீட்டுக்கு வாருங்களேன் காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம் என்று கூப்பிடலாம்னு வந்தேன்" என்றான் பாலு. "வீட்லே காப்பி சாப்பிடரதிருக்கட்டும். என் கூட ஹோட்டல்லே காப்பி சாப்பிடுமே!" என்றேன். "ஹுஹும்! வீட்லெ காப்பி பாழாப் போச்சேன்னு கத்துவா. வாருங்கள் போகலாம்" என்றான் பாலு. "பாலு நீ... பார்த்திருக்கையா" என்றேன். "புரட்சிக் கைதி! அவரையா... நான் எப்படிப் பார்த்திருக்க முடியும்?" "இல்லெ பாக்கணும்னு ஆசை இருக்கா?" "ஆசையா! மனசு அப்படியே துடிதுடிக்கிறது. ஆமாம்; புரட்சிக்காரரா? எப்படி இருப்பார்? ரொம்பத் தீவிரமாக இருப்பாரோ?" "பாக்கணும்ன்னா கூட்டிண்டு போறேன்" என்று புதிய சிஷ்யன் சேர்த்துக்கொடுக்கும் சேவையில் இறங்க முயன்றேன். "இல்லே, வீட்லெ காப்பி ஆறிப் போய்விடும். சுருக்க போவோம் வாருங்க. இல்லாட்டா ஒரே தொல்லைதான்" என்று எட்டி நடந்தான் பாலு. இரண்டு தெய்வங்களுக்கு ஒரே சமயத்தில் சிஷ்யனாகும் திண்டாட்டத்தை பாலுவுக்கு ஏற்படுத்தக்கூடாது என்ற ஜீவகாருண்ய சேவையில் ஈடுபட்டேன். ஜோதி, ஜுலை 1938 |