திருக்குறள் குமரேச பிள்ளை

     நீங்கள் பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது என்று சொல்லுகிறார்களே, 'உயிர்க் காலேஜ்', 'செத்தக் காலேஜ்' என்று - சென்னையில் அவை இரண்டிற்கும் அதிகமான வித்தியாசம் ஒன்றுமில்லை, - அதில் இரண்டாவதாக ஒரு காலேஜ் சொன்னேனே, அதில் அவசியமாக இருக்க வேண்டிய பொருள், எங்களின் அதிர்ஷ்டத்தாலும், சென்னையின் துரதிர்ஷ்டத்தாலும், எங்களூரிலேயே இருக்கிறது. அதுதான் எங்களூர் திருக்குறள் குமரேச பிள்ளை.

     இந்தத் திருவாளர் தமது திவ்ய சரீரத்திலேயே இந்த உலகத்துப் 'பென்ஷனையும்' காருண்ய அரசாங்கத்தின் பென்ஷனையும் சுமந்து மகிழும் பெரியார். இவரைப் பார்க்கும்பொழுதெல்லாம், குறள் ஒன்றும் எனக்கு ஞாபகம் வராவிட்டாலும், 'பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க' என்று வரும் பாட்டு எனது மனதில் கிடந்து கொம்மாளம் அடிக்கும்.

     கொஞ்சம் வருணிக்கலாமா? உச்சிக்குடுமி. சிவனைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வைத்த 'இமிடேஷன்' நெற்றிக்கண்; கொசுவைக்கூடக் கொல்லச் சக்தியற்ற சந்தனப் பொட்டு. அதற்குப் பகைப்புலமாக விபூதி. கழுத்தில் தங்க நாண் இட்ட ருத்ராக்ஷம்... தப்பு, உருத்திராக்கம். அதை மறைக்க முடியாமல் நாணமுற்றுத் தவிக்கும் காலர்களுள்ள நாகரிகச் சீமை 'டுவில்' ஷர்ட், அதற்குமேல் நாஸுக்காகப் போடப்பட்ட டர்க்கி துண்டு, இடையில் தூய லங்காஷர் மல். இடது கையில் பொடி டப்பி, வலது கையில் மடித்த குட்டிக் குறளும், ருத்திராக்ஷ மாலையும் - இம்மாதிரி இவர் 'வெள்ளைக் கலையுடுத்து', 'புத்தகம் பொடிகை மாலை' இத்யாதி சின்னங்களுடன் தோன்றும் ஓர் ஆண் சரஸ்வதியாகவே (விஷ்ணு பெண்ணுரு எடுத்தால் சரஸ்வதி ஏன் ஆணுரு எடுக்கக் கூடாது?) தோன்றுவார். இது அவர் நமக்குச் சாதாரண நேரங்களில் சாதித்தருளும் திவ்விய சேவை. விசேஷ காலங்களில்... ஐயோ, என்னால் முடியாது.

     இவர் பேச்செல்லாம் சிறு பிரசங்கங்கள். இவரைக் காணும்பொழுது எல்லாம் எனக்கு ஒரே ஒரு எண்ணம் தோன்றும். இவர் மூளையில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டு இருக்கும் குறள் எல்லாம், இவர் வாயைத் திறந்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வருகிற மாதிரித் தெரியும். எத்தனையோ வருஷங்களாகியும் இந்தத் திருக்குறளுக்கு விடுதலை என்ற சுய ஆட்சி கிடைத்த பாடு இல்லை.

     உயர் திருக்குறள் குமரேச பிள்ளைக்கு மூன்றில் எப்பொழுதும் நம்பிக்கை. தெய்வங்களும் மூன்று. இலக்கியமும் மூன்று. ஒன்று சிவஞானபோதம், இரண்டு காஞ்சி புராணம், மூன்று பெரிய புராணம். இவை மூன்றின் கருத்தையும் கலந்து பொருந்தியது திருக்குறள் என்ற தமிழ்மறை.

     எங்களூரின் கிழக்குப் பக்கத்தில் ஒரு வெளியுண்டு. அதில் ஒரு கட்டிடம். வாரத்தில் ஐந்தரை நாட்கள் ஆரம்பப் பள்ளிக் கூடமாகவும், ஒன்றரை நாட்கள் உபாத்தியாயரின் மனைவி நெல் காயப்போடும் ஸ்தலமாகவும், மார்கழி மாதத்தில் பஜனை மடமாகவும், முக்கியமாக எங்களூர் கோகலே ஹாலாகவும் திகழ்ந்தது. அதில்தான் நமது குமரேச பிள்ளையின் 'அரங்கேற்று காதை' நடிக்கப்படும்.

     வீட்டில் ஒரு பாகத்தைக் கோவிலாக்கி, கலைத்திறன் ஜலத்திற்கும் இல்லாத படங்களின் முன் புஷ்பங்களையும் மருந்தையும் வாரித் தெளித்து, பூஜை என்ற மகத்தான பொழுதுபோக்கு யக்ஞத்தைச் செய்தும், கழிக்க முடியாத மணிச் சங்கிலிகளை, இந்தத் திருச்சபையில் கழிக்க முயலும் பெரியவர்களும், பத்து ரூபாய்களுக்காக, 'பானா' 'ழானா' 'இம்மன்னா' 'பழம்', 'இரண்டும் இரண்டு நான்கு' என்ற அஸ்திவாரக் கப்பிகளை, கல்வி என்ற பெருங்கோவிலைக் கட்டுமாறு, சிறுவர் மூளை என்ற திவ்வியப் பிரதேசத்திலே நாள் முழுவதும் இடித்துச் செலுத்தும் திருப்பணியில் அயர்ந்து தளர்ந்து நித்திரை சுவானுபூதியை விரும்பும் மூளையின் கொற்றர்களும், வாழைப்பழத் தோலில் சறுக்கி விழுவதிலிருந்து, இரண்டு நாய்களின் குருக்ஷேத்திரம்வரை, இமைகொட்டாமல் பொறுமையுடன் பார்க்கச் சக்தி வாய்ந்த, குளிக்காத நாயனார்களும், - இவர்களுக்குத்தான் குமரேச பிள்ளையின் சண்டமாருதத்தைத் தாங்கும் எஃகினாலான மூளைகள் உண்டு.

     சாயங்காலம் ஐந்து மணிக்கு ஆரம்பித்து, மேஜையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இருக்கும்வரை, அல்லது குமரேச பிள்ளைக்குப் பசி எடுக்கும்வரை, இந்தச் திருச்சபை நடக்கும். கேட்க வந்தவர்களைப் பற்றி அவருக்குக் கவலை என்ன? செவிக்குணவு இல்லாத போதன்றோ சற்று வயிற்றுக்கும் ஈயவேண்டும்!

     ஒருநாள் எக்கச்சக்கமாக அங்கு அகப்பட்டுக்கொண்டேன்.

     குமரேச பிள்ளை எழுந்து, 'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்' என்று கண்ணை மூடியவண்ணம் பிலாக்கணம் வைத்துவிட்டுப் பேசலானார்:

     "சென்ற ஆனித் திங்கள் பதினெட்டாம் நாள் அன்று எனது கெழுதகை நண்பர் கலசை உயர்திரு இளவழகனார், 'வள்ளுவனாரும் மேனாட்டு உடற்கூறு நூலும்' என்ற பொருள் பற்றி ஓர் பேருரை நிகழ்த்துமாறு வேண்டினர். யாமும் உடன் பட்டனம். புகழ் பற்றியோ எனின், அற்றன்று! நந்தெய்வத் திருமறையை இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் வகுத்தருளிய செந்நாப்போதார்,

     'புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
     நட்பாங் கிழங்கு தரும்'

என்றும்,

     'உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
     இடுக்கண் களைவதாம் நட்பு'

என்றும் அருளிப் போந்தார். ஆகலின், யாமும் உடன்பட்டனம்.

     "பேரறிவாளர் குழுமியுள்ள மன்றத்தின்கண், நும் போன்றோர் மாட்டு அறைதற் கொன்றிலதாயினும், என் சிற்றறிவுக்கெட்டிய பொருளை வகுத்துரைக்குமாறு பெரிதும் விழைகின்றேன். இன்றைக்கு எனக்கு உரை செய்யுமாறு அருளப்பட்ட பொருள் நந்தொல்லறிவாளர் வள்ளுவ நாயனார் மேனாட்டு உடற்கூறு நூல்களை இற்றைக்கு ஐயாயிர வருடத்திற்கு முன்னரே எவ்வாறு தெள்ளிதில் அறிந்திருந்தார் என்பான் மொழிதல் பற்றி.

     "துளாயிரத்து இருபத்தியாறாம் குறள் முதலடியில் ஓர் பெரும் உண்மையைக் கூறிப் போந்தார்.

     'துஞ்சினார் செத்தாரில் வேறல்லர்'. இறந்தவர்கள் மாண்டவர்களில் வேறு அன்று என்ற உயர்ந்த கருத்தை எளிதாக நயம்பட செய்விதிறக் கூறியருளினார். உரையாசிரியர் பரிமேலழகர் 'துஞ்சினார்' என்னும் பதத்திற்கு உறங்கினவர்கள் என்று வகுக்கிறார். அஃது ஒரு பெரும் வழு. அன்னார் அறியாமையை எள்ளி நகையாடுகின்றேன். இறந்தவர் என்று பொருள் கோடல் சாலப் பொருந்தும். பரிமேலழகனார் அவ்வாறு கூறிப்போந்தார் எனின், அது ஓர் பெரும் ஆரியக்கூற்று. சூழ்ச்சி!

     "நிற்க. கவரிமான் விலங்கினங்களில் கானில் உலவா நிற்கும் நாற்காற் பிராணி என்று பொருள் கோடல் தகும். அதன் உயிர் அதன் வாலில் இருப்பது மேல் நாட்டார் கண் கூடாகக் கண்ட காட்சி. அவர் அதைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். வேட்டையாடுங்கால் பையப் பையச் சென்று அதன் வாலில் ஓர் சிகையைப் பிடுங்கி விடுவார்களாம். இதை நம் நல்லிசைப் புலவன் தமிழ்மறை தந்த பெம்மன் அறிந்தன்றோ,

     'மயிர்நீப்பின் வாழாக் கவரிமான்' என்று அருளிப் போந்தார். என்னே!

     "இன்று இப்பொருள் பற்றி வலியுறுத்துவான் அவாய், உரையாசிரியர் பரிமேலழகனாரால் ஏற்பட்ட பெரும் பிழைகளைக் கண்டிப்பான் மிகுதியும் வேட்கையுடையேன் எனின் சாலப் பொருந்தும்.

     "அவர் 'கண்ணோட்டம்' என்ற பதப் பிரயோகத்திற்கு அருள் என்று வகுக்கிறார். அஃதன்று. கண் அசைவு என்பதுதான் பொருள்.

     'கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம், அஃதின்றேல்
     புண் என்று உணரப்படும்.'

     "கண்ணில் அசைவு இன்றேல் புண் போன்ற அஞ்சத் தக்கவாறு இருக்கும் என்பது மேனாட்டுத் தொன்னூல் வலியுறுத்தும் உண்மை. அது நாம் இற்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே யறிந்த செம்பொருள் என்னின், என்னே தமிழுலகம்! தமிழ் நாகரிகம்! அவை வாழ்க! அவை வெல்க!

     "நிற்க. இற்றைக்கு..."

     என்னால் பொறுக்க முடியவில்லை. ஓடிவந்துவிட்டேன்.

(நடைச்சித்திரம் என்ற தலைப்பில் வெளியானது)