உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சகோதரர்கள் யூஜோ யாம மோட்டோ - ஜப்பான் 'அண்ணா, இது நல்லதுதானே?' 'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில்லை; நான் பிடுங்குவது போல் இருக்க வேண்டும்.' தான் பிடுங்கிய காளானைச் சின்னவனிடம் காட்டினான். 'இல்லியா?' என்றான் சின்னவன். அவன் குரலில் ஏமாற்றம் தொனித்தது. கையிலிருந்த நாய்க்குடையைப் பார்த்தபடியே நின்றான். 'அதில்லை' என்றான் மூத்தவன். 'குடைக்குக் கீழே துணி கொசுவி வைத்த மாதிரி இருக்கணும். நீ பிடுங்கியது வெறும் நாய்க்குடை.' இவனுக்கு வயசு பதினொன்றுதான். என்றாலும் தம்பியுடைய அறியாமையைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை இருந்தது. அவனுக்காக இவன் மனசும் கஷ்டப்பட்டது. இவர்கள் இருவரும் நடந்து வந்ததும் வெகு தொலைவு. சின்னவனுக்குக் கால் கடுத்துவிட்ட மாதிரி தெரிந்தது. அதனால் மஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்த செடிகளினூடே எதுவும் இருப்பது தெரிந்தால், 'ஷின்சான், இங்கே பாரு ஒனக்கு இதோ ஒண்ணு இருக்கு' என்று குரல் கொடுத்தான். குழந்தையும் தன்னால் முடிந்தவரை தேடியது. அதன் கண்களுக்கு வாடி மஞ்சளேறிப் போன இலைகள்தான் பட்டது. 'அதோ உன் காலடியில் இருக்கு பாரு. உனக்குத் தெரியலே' என்றான் அண்ணன். 'எங்கே?' 'அங்கேதான்.' கடைசியில் அவன் தான் தொட்டுக் காண்பிக்க வேண்டும். 'எலை நெரையா இருக்கு பாரு. அதான் எனக்குத் தெரியலை. இதுதானே' என்றது குழந்தை. அண்ணன் 'ஆமாம்' என்ற பிற்பாடு குழந்தை செத்தை குப்பைகளைத் தள்ள ஆரம்பித்தது. 'இது நாய்க்கொடெ இல்லியே?' 'நெசமா அதுதான் காளான்.' 'அதெப் பிடுங்கிட்டா.' 'உம்.' சிறுவன் அதைப் பிடுங்கினான். ஆனால் அதை உடனே கீழே எறிந்து விட்டான், அசிங்கத்தைத் தொட்ட மாதிரி. 'ஏண்டா? ஏன் எறிஞ்சுட்டே?' 'அசிங்கமா இருக்கு.' 'ஏன்?' குழந்தை பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது. அண்ணனுக்குப் புரிந்ததினால் புன்சிரிப்பு வந்தது. 'அது அப்படித்தான். நீ தொட்டதும் அதன் வர்ணம் மாறினதைப் பார்த்துத்தானே ஆச்சரியப்பட்டே? காளானைத் தொட்டா அப்படித்தான் வர்ணம் மாறும்' என்றான் அண்ணன். 'அப்படின்னா ஒண்ணுஞ் செய்யாதே?' 'ஒன்றும் பண்ணாது.' சிறுவன் பயம் தெளிந்து சிரித்தான். 'எல்லாத்தோடையும் அதைப்போட்டு வச்சுக்கோ' என்று தரையில் வைத்திருந்த தொப்பியைக் காட்டினான் அண்ணன். அது நிறைய அவன் சேகரித்த காளான்கள் நிறைந்திருந்தன. குழந்தை அந்தக் காளானை எடுத்து அந்தத் தொப்பியில் போட்டு வைத்தது. அண்ணன் கண்டுபிடித்த காளான்கள் எத்தனை என்று அவன் எண்ண ஆரம்பித்தான். மூத்தவன் செத்தை குப்பைகளை எல்லாம் தள்ளித் தள்ளி, காளான் முளைத்திருக்கிறதா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தான். கழுத்தை நீட்டிக்கொண்டு அவன் நிற்பதைப் பார்த்தால், அவனுடைய பாட்டியார் மாதிரி இருந்தது. அதுவும் அவள் விடியற்காலையில் எழுந்து நின்றுகொண்டு தன் படுக்கையில் மொய்க்கும் ஈக்களை விரட்டுவது போல இருந்தது. அவன் அப்படித் தலையை நீட்டிக்கொண்டு தேடுவதைப் பார்க்கத் தம்பிக்கு வேடிக்கையாக இருந்தது. தனக்கும் அப்படித் தேட முடியும் என்று அவன் நினைத்தான். அவனும் குனிந்தபடி கண்ணைச் சாயவைத்துக் கொண்டு பைன் மரத்தினடியில் (குளிர்ப் பிரதேசங்களில் வளரும் ஒரு விதமான சவுக்கு மரம்) தேட ஆரம்பித்தான். கண்ணுக்குக் காளான் எதுவும் தென்படவில்லை என்றாலும் மனசில் மட்டும் குதூகலம் குதிபோட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று தொப்பெனக் காதில் விழுந்த சத்தம் மூத்தவனைத் திடுக்கிட வைத்தது. அவன் நிமிர்ந்து பார்க்கும் போது சின்னவன் லேசான சரிவில் சற்று தூரத்தில் விழுந்து உருண்டுருண்டு செல்வதைப் பார்த்தான். ஒரு வேளை காலில் வேர் எதுவும் தடுக்கியிருக்கும். அதைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவனுடைய உதவிக்குப் போகாமல் குழந்தையைக் கேலி பண்ண விரும்பினான். இருந்தாலும் மறுநிமிஷம் அவன் சின்னவனருகில் சென்றுவிட்டான். அதற்குள் மற்றொரு வேர் உருண்டு சென்ற குழந்தையைத் தடுத்துவிட, எழுந்திருந்து நிற்க அதற்கு ஒத்தாசை செய்தான். அவன் கண்களில் தேங்கிய கவலை அவனுடைய உள்ளப் பரிவைக் காட்டியது. அவனைக் கண்டவுடன் சின்னவன் சிரிக்க ஆரம்பித்தான். பெரியவனும் சிரித்தான். கண்ணீருக்கு அவசியமில்லை. எனவே மனச்சுமை அகன்றது. சிரிக்க முடிந்தால் அவனுக்கு அடிபடவில்லை என்று தான் அர்த்தம். ஆனால் அந்தச் சிரிப்புச் சற்றுக் கோணியிருந்தது. அது என்னமோ விபரீதமாக இருந்தது. இளையவன் கன்னத்தில் மண் ஒட்டியிருப்பது மூத்தவன் கண்ணில் விழுந்தது. கீழே விழுந்தபோது ஒருவேளை ஒட்டிக் கொண்டிருக்கக்கூடும். கையால் தேய்த்துத் துடைத்துவிட முயன்றான். அது போகவில்லை. பிறகு சட்டைக்குள் கையை இழுத்துக் கொண்டு, அந்தத் துணியைப் பிடித்துக் கன்னத்தில் வைத்துத் துடைத்தான். அப்படியும் போகவில்லை. கடைசியாகச் சட்டைத் துணியில் எச்சிலை உமிழ்ந்து அந்த ஈரத்தைக் கொண்டு சின்னவன் கன்னத்தில் சுத்தமாகத் துடைத்து விட்டான். இத்தனைக்கும் சின்னவன், கொஞ்சங்கூடப் புகார் பண்ணாமல் பேசாமல் நின்று கொடுத்தான். பிறகு இருவரும் மறுபடியும் காளான்கள் சேகரிக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரம் கழித்துப் பெரியவன் தன்னுடைய தொப்பியை நிறைத்து அம்பாரமாகக் காளான்களை ஏற்றிக் கொண்டிருந்தான். 'ஷின் - சான் போதும் போதும், நெறையப் பறிச்சாச்சு' என்றான் மூத்தவன். 'டேய், பசங்களா, அந்தக் காளான்களை அப்படியே கீழே வச்சுடுங்க' என்று ஒரு இடிக்குரல் கேட்டது. பையன்கள் பயந்தே போனார்கள். அவர்கள் திரும்பிப் பார்க்க பின்புறம் காவல்காரன் நிற்பதைக் கண்டார்கள். கண்ணி வைத்துப் பிடித்தவனுடைய நிச்சயம் அந்தக் கிழவனுடைய கண்களில் ஜொலித்தது. தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு பெரியவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். 'திருட்டுக் கழுதைங்களா!' மூத்தவன் அழவில்லை, வெட்கத்தால் தலை குனிந்தான். மேலே விரல் படாதுபோனாலும் வீச்சென்று குரலெடுத்தான் சின்னவன். தோட்டத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக அவர்களிருவரையும் மூச்சு விடாமல் வைது கொண்டிருந்தான் தோட்டக்காரன். 'இந்தப் பக்கத்திலே காலெட்டி வச்சிங்களோ முறிச்சுத் தொங்க விட்டுடுவேன்' என்று கூவிக்கொண்டே கிழவன் அவர்களை விரட்டிக் கொண்டு சென்றான். தோட்டத்தின் எல்லையை அடைந்ததும், தொப்பியிலிருந்த காளான்களைத் தன் கூடையில் போட்டுக்கொண்டு குல்லாவை அவர்கள் பக்கமாக விட்டெறிந்தபின் 'லொங்கு லொங்'கென்று வேறு திசை சென்றுவிட்டான். சின்னவன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே விழுந்த குல்லாயைத் தரையிலிருந்து எடுத்து அண்ணனிடம் நீட்டினான். அண்ணன் அதை வாங்கிக் கொள்ளாமல் அவனுடைய கன்னத்தில் பளீரென்று அறைந்தான். கிழவன் மேலிருந்த ஆத்திரத்தைக் காட்ட வேறு ஒரு ஆள் கிடைத்தது என்ற நினைப்பில் அவன் அடிக்கவில்லை. தனக்கும் சின்னவன் வந்து தன்னைப் பார்த்துக் கொள்வதா என்ற கோபந்தான். வலியாலும் திக்பிரமையாலும் சின்னவன் இன்னும் உரக்க வீரிட்டழ ஆரம்பித்தான். பிறகு மூத்தவன் கண்களும் கலங்கின. அவனும் அழ ஆரம்பித்தான். இருவரும் வாய்விட்டு உரக்க அழுது கொண்டு நின்றார்கள். சிறிது நேரம் கழித்துக் கண்ணீர்ப் பிரவாக வேகம் குறைந்து நின்றது. 'அண்ணே தெரியாமச் செஞ்சிட்டேன்' என்றது குழந்தை. 'உம்' என்று ஒப்புக்கொண்டான் மூத்தவன், தன்னுடைய விம்மலுக்கிடையில். கீழே விழுந்த மண் படிந்த குல்லாயையெடுத்துத் தன் முழங்காலில் நாலைந்து தடவை தூசி தட்டினான். அதையொரு கையிலும் சின்னவனையொரு கையிலும் பிடித்துக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான். வழியெல்லாம் விம்மி விம்மிக் குமுறிக் கொண்டு நடந்தார்கள். |