உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அபிதா 7 “அடாடா, எனக்கு இப்போத்தான் நினைப்பு வந்தது. சித்தி அவளாத்துக்குப் போயிட்டாளே! பக்கத்து கிராமத்தில் அவள் தம்பி ‘டேரா சினிமா’ நடத்தறார். படம் மாறும்போதெல்லாம், பையன் ‘பாஸ்’ கொடுத்துட்டுப் போவான். சித்தி படம் பார்த்துட்டு நாளைக்குக் காலையிலேதான் வருவாள். அப்பா இன்னும் வரல்லேன்னா எப்போ வராரோ? ஒரொரு சமயம் வரவழியிலே திண்ணையில் சீட்டுக் கச்சேரி கண்டுட்டார்னா இப்படித்தான் - ராத்ரி பன்னிரண்டோ, மறுபகலோதான். ராச்சோறுக்கு அப்பாவின் கை நைவேத்ய மூட்டையை நம்பமுடியாது. அது வேளையில்லா வேளையில் ஜலம் விட்டு, சரியாகவும் ஊறாமல் மறுநாள் பழையதுக்குத்தான் சரி. சித்தியின் திட்டு, வெசவுக்கு கட்டுப்படற கட்டமெல்லாம் அப்பா எப்பவோ தாண்டியாச்சு. இத்தனைக்கும் தான் ஆடுவதாகவும் தெரியல்லே. பக்கத்துக் கையைப் பார்த்துண்டிருக்கிறதுலே என்ன அவ்வளவு சுவாரஸ்யமோ? எங்களுக்கென்ன தெரியும்? உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கும் தெரியாதா? சரி, உங்களை நிக்க வெச்சுட்டு, நான் என்னத்தையோ பேசிண்டிருக்கேன். உக்காருங்கோ. ஒரு பிடி களைஞ்சு வெச்சுடறேன். நிமிஷமா ஆயிடும்.” கூடத்தில் குத்துவிளக்கு, கால் வெளிச்சமும் முக்கால் சாந்துமாக இழைத்த கலவையிலே அவள் நிறம் பளிச்சிடுகிறாள். நாகப்பழம் போல விழிகள் கறுகறுவென உள்ளத்தைத் துருவுகின்றன. பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு வாலைச் சுழற்றிக்கொண்டு தரையில் கால் பாவாமல் பரபரத்துக்கொண்டு மொழுமொழுவெனப் புத்தம் புதிது கடிவாளம் இன்னும் விழாத கன்னிவாய் வெள்ளைக் குதிரைக் குட்டி. இன்று முழுதும் அதன் துள்ளல் பார்த்துக் கொண்டிருக்கலாம். பார்த்துக் கொண்டிருக்கிறேன். “உங்களுக்கென்ன பிடிக்கும் சொல்லுங்கோ. பருப்புத் துவையலரைக்கட்டுமா? துவையலரைச்சு சீரக ரஸம்? ரஸம் எனக்கு நன்னாப் பண்ணவரும். இல்லை, கூடையில் நாலு கத்தரிக்காய் கிடக்கு. அப்படியே எண்ணெயில் வதக்கட்டுமா? சிவப்புக் கத்தரிக்காய். இல்லே இரண்டுமே பண்ணட்டுமா? என்ன, எல்லாத்துக்குமே சும்மா இருக்கேள்? மனசுக்குள்ளே சிரிப்பாயிருக்கா? அதென்னமோ வாஸ்தவந்தான். ராத்ரி அனேகமா மோருஞ்சாதம்தான். ஏதோ உங்கள் சாக்கில் எங்களுக்குத்தான், வெச்சுக்கோங்கோளேன். ஆனால் அது பெரிசு இல்லை. பண்ணிப் போடுவதில் எப்படியும் ஒரு சந்தோஷம் இருக்கே! அதுக்காகன்னு வெச்சுக்கோங்கோளேன். ஏது நீங்கள் எல்லாத்துக்குமே ‘கம்’முனு இருக்கறதைப் பார்த்தால் எதைப் போட்டாலும் சாப்பிடத் தயார் போலிருக்கே! அதற்காக நான் எதையேனும் போடமாட்டேன். அப்பாவே திட்டுவா. சரி எனக்குத் தோணினதைப் பண்ணறேன். நீங்கள் திண்ணையில் கொஞ்ச நேரம் காத்தாட உட்காந்திருங்கோ. இலையைப் போட்டு நான் கூப்பிடறேன்.” அபிதா, என்னைத் திண்ணைக்குப் போகச் சொல்லாதே. தசரதன் கெஞ்சின மாதிரி உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். அபிதா, அடியே கைகேசி, அது மாத்திரம் கேளாதடி, நான் அபிதாவைப் பார்த்துக் கொண்டேயிருக்கணும். திண்ணை வேண்டாம். நினைத்தாலே தொண்டை வரள்றது. நினைத்ததை நினைந்ததும் தொண்டை உலர்ந்தது என்று உணர்ந்ததும் தொண்டை உலர்ந்தது. “குடிக்கத் தீர்த்தம் கொடேன்.” பூமியில் கிழித்த கோட்டினின்று தற்செயலில் எழுந்து பூக்கொட்டும் ஜலமத்தாப்புப் போல் அவள் உருவம், கூடத்தில் இறக்கிய குடத்தை நெருங்குகையில் அவள் எனக்குப் புதுமையாயிருக்கிறாள். வியப்பாயிருக்கிறாள். விக்ரஹம் உயிர்த்தது போல் பயம் தருகிறாள். மூச்சை மூச்சென்று உணர்ந்து மூச்சை மூச்சாக ஒரு கணம் சிந்தித்தாலே மூச்சு திணறுகிறது. கண்ணைப்பெற்ற திருதராட்டிரன் போல் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன். பெற்ற பார்வையை இழக்க மனமில்லை. பட்ட தரிசனம் காணவும் திடமில்லை. கண்களை மெதுவாய்த் திறக்கிறேன். எதிரே, தம்ளரை என்னிடம் நீட்டிய வண்ணம், தன் புன்னகையில் திவ்யத்தில் ஒளி வீசிக்கொண்டு நிற்கிறாள். தம்ளரை வாங்கிக் கொள்கையில், என் விரல் அவள் மேல் படாதா? No. எண்ணத்தையும் செயலையும் இம்மியிலிருந்து எல்லை வர, நம் அறிவுக்கெட்டாது தன் வழியில் ஆளும் ஆதிக்கத்தின் கட்டளையில், பாத்திரம் கைமாறும் தருணம், எங்கள் விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டாற்போல் எவ்வளவு நெருக்கமாய் தம்ளரைப் பற்றியும் - தொட்டுக்கொள்ளவில்லை. அவள் ஏந்தி வந்த ஜலமே, அவள் கன்னித் தூய்மையை, தன் சத்தியத்தின் சக்தி கொண்டு, அவளுக்குக் காப்பாற்றித் தருவதாய் எனக்குத் தோன்றுகிறது. கானலின் நலுங்கல் போல் என் ஏக்கம், கண்கூடாய் என் முன் எழுகிறது. பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால் - பற்று, ஆசை, அன்பு, பாசம், பக்ஷம், காதல், காமம், வேகம், விரகம், ஏக்கம், இன்பம், வேதனை, சோகம், சுகம், சொர்க்கம், நரகம், உயிர், ஊசல், கூடல், பிரிதல் - இன்னும் எத்தனை எத்தனையோ. அத்தனையும் ஒரே சாயம் பிடித்துக் கொண்ட கெட்டியின் ரகங்களைக் காட்டும் பெயர்கள்தானே! பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால், தொடல் என்பது ஏன் அவ்வளவு அவசியமாகிவிடுகிறது? தொடல். உடைமையின் முத்திரை. உறவின் வழித் துணை. உணர்வின் பழி ரேகைக்கு ரேகை பாயும் மந்த்ர சக்தி என்ன? அவன் கொடுத்த ஜலம் தொண்டை அடியில் உவர்த்தது. அந்தக் கிணற்று ஜலம் கற்கண்டாய்த் தித்துக்குமே, இதற்கு இந்த உவர்ப்பு எப்படி வந்தது? ஒருவேளை என் தாபம் தான் கொடுமையோ? சக்கு, நீ சாகவில்லை. உன்னையே பலிகொடுத்து என்னை வாங்கும் பழியைக் கரடிமலைக் கருவேலநாதனிடம் வரமாக வாங்கிக் கொண்டாயா? நீ வாங்கும் பழி இவ்வளவு பயங்கரமா? சக்கு என்னால் தாங்க முடியல்லேடி! சக்கு என்னை மன்னிச்சூடடி! மன்னிப்பு. இது ஒரு பெரும் பொய். மன்னித்ததால், தீங்கின் பங்கு குறைந்து விடுமா? வேதனையிலிருந்து விடுதலை கிடைத்து விடுமா? நினைவால் இன்னும் கூடுதலேயன்றி குறைவு ஏது? மார் வெடிக்க அழுகை பீறிடுகிறது. அபிதாவுக்குக் கேட்டுவிட்டால்? கேட்டுவிட்டதா? பயந்து சுற்றுமுற்றும் பார்க்கிறேன். திண்ணையில் உட்கார்ந்திருக்கிறேன். இங்கு எப்போது வந்தேன்? வந்ததும் நல்லதுதான். என் அழுகை அவளுக்குத் தெரியாது அல்லவா? கரையோரம் ஜலம் பருகிக் கொண்டிருக்கும் விலங்குக்குக் கால் சறுக்கி விட்டாற் போல், வெட்கமற்ற அழுகையில் விழுந்துவிடுகிறேன். மண்டையுள் நரம்புகள் தீய்கின்றன. செவி, மூக்கு, கண்களில் ஆவி பறக்கிறது. மன்னிப்பு கிடையாது. உண்டு, உண்டு என்பது நம்பிக்கையானால். இல்லை, இல்லை என்பது உண்மை. இல்லை நெற்றியில் இடது கையில் வலது கையில் விண் விண் மார்பில் ஆணி தெறித்தது. சக்கு, என்னைச் சிலுவையில் ஏற்றிவிட்டாய். “சாப்பிட வரேளா?” உள்ளேயிருந்து அவள் குரல் கணீரென்று அழைத்தது. பழைய நாள் திரும்பி வந்துவிட்டது. கூடத்தில் குத்துவிளக்கடியில் தையல் இலை போட்டிருக்கிறது. அதில் ஈர்க்குத் தையல் பாதை பாதையாய் எவ்வளவு அழகாய் ஓடுகின்றது! ரஸம் புளித்தது. சாதத்தைக் குழைத்து விட்டாள். கத்தரிக்காய் சரியாக வேகவில்லை. “நன்னாயிருக்கா?” நன்றாய்த்தானிருக்கிறது. நிஜமாகவே, ரஸத்தைக் கையில் ஏந்திக் கப்புகிறேன். அன்பிட்டவர்களின் குறைகளே, அவர்களிட்ட அன்பின் விசேஷ ருசி. எப்பவுமே பசிக்காகவா சாப்பிடுகிறோம்? சமைத்ததற்காகவா சாப்பிடுகிறோம்? வாசற் கதவை யாரோ படபடவெனத் தட்டுகிறார்கள். அபிதா போய்க் கதவைத் திறக்கிறாள். “வாங்கோ மாமி.” சாவித்ரி கூடத்துள் வருகிறாள். அவளுடன் வந்த துணை ரேழியிலேயே தயங்கி நிற்கிறான். என் மாமாவின் பல பேரன்களில் ஒருவன். சாவித்ரிக்குக் கோபத்தில் கண்கள் கடுக்கின்றன. “எங்கே போறேள்னு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா? இங்கே வந்தேள்னு கண்டேனா? வயல் காட்டில் பாம்பு பூச்சி பிடுங்கியெடுத்து விழுந்து கிடக்கேள்னு கண்டேனா? உங்கள் ஊருக்கு வந்ததுக்குக் கை மேல் பலனா? உங்களை எங்கேன்னு போய் தேடறது?” கையும் களவுமாய்ப் பிடிப்பட்ட மாதிரி நான் ஈரம் காயும் கையுடன் இலையெதிரில் உட்கார்ந்திருக்கிறேன். இலையில் சாதம் குவித்து சத்தியமாய் வெண்மை துலங்குகிறது. அபிதா மிரண்டு நிற்கிறாள். சாவித்ரியின் கோபம் அவளுக்குப் பயமாயிருக்கிறது. சாவித்ரியின் கோபம் எனக்குப் புரிகிறது. அவள் சொல்லும் நியாயம் புரிகிறது. ஆனால் சாவித்ரியைத்தான் புரியவில்லை. சக்கு எழுதிவிட்டுப் போயிருக்கும் சித்திரத்தின் பக்கத்தில் அதன் கேலிபோல் நிற்கும் இந்தத் தடித்த உருவம் யார்? விளக்குச் சுடர் கூடத்துச் சுவர்களில் வீசிய எங்கள் நிழல்கள் பெரிதாய், ஒன்றையொன்று ஊமைப் பயமுறுத்தலில் சிலிர்த்துக் கொண்டு, எங்களுக்குப் புரியாது, தங்களுக்கே புரிந்த சடங்குக் கூத்தில் ஆடுகின்றன. என்றும் எங்களுக்கு விடுதலையில்லாமல் எங்களைத் தங்களுடன் கவ்விக்கொண்ட எங்கள் நிழல்கள். |