பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 30 ...

2901 கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 36

2902 பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்
கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 37

2903 கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 38

2904 தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 39

2905 ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே. 40

2906 கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 41

2707 ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே. 42

2908 ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 43

2909 கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 44

2910 கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 45

2911 கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 46

2912 கொல்லைமுக் காதமும் காடுஅரைக் * காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் # லார்கட்
$ கொல்லை கடந்துசென் @ றூர்புக லாமே. 47

* காதம்
# லார்க்கு
$ எல்லை
@ றெய்தலுமாமே

2913 உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி
* தழுவி வினைசெய்து தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே. 48

* தழுவணைச் சென்று தாம் பயவாது

2914 பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய் * வளைத் தானே. 49

2915 தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50

2916 முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த * திரிமலம் காய்த்தன
# பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு $ மலருண்டு நடுவுநின் றாரே. 51

* திரிமாங்கா யற்றது
# அக்க ணரிகாயி லடங்கினர்
$ மலரடி நடுவில் நின்றானே

2917 அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 52

2918 * பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த # சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
$ குன்றி @ நிறையைக் குறைக்கின்ற வாறே. 53

* குன்றியும்
# சிவகரிக்
$ பன்றி
@ யறிவை

2919 மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
* பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 54

* பட்டுவிட்

2920 நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 55

2921 கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 56

2922 * வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
# வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு $ வாழ்கின்ற வாறே. 57

* வாழையைச் சூரை வலிந்திடங் கொண்டது
# வாழையின் சூரையை
$ வாழலுமாமே

2923 நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 58

2924 தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 59

2925 குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 60

2926 போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 61

2927 பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 62

2928 கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 63

2929 வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 64

2930 கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 65

2931 போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன் இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 66

2932 கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே. 67

2933 தோட்டத்தில் மாம்பழம் * தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் # நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 68

* தூங்கி
# நரிகளே தின்றிடும்

2934 புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 69

2935 தோணி ஒன்று உண்டு துறையில் * விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே. 70

* விடுவன

18. மோன சமாதி

2936 நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 1

2937 காட்டும் குறியும் * கடந்தவர் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் # அதர்கிடந் தற்றே. 2

* கடந்தவக்
# அதர்கறந் தற்றே

2938 உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 3

2939 மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்பிடை * யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. 4

* யாள் திரு

2940 துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 5

2941 உருவிலி * யூனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 6

* ஊணிலி ஒன்று மொன்றிலி

2942 கண்டறி * வாரில்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த # துறையறி யோமே. 7

* யாரிந்தக் காயத்துள்
# துறையறிவோமே; துறையறியாரே

2943 தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 8

2944 முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு * காண்பதே ஆனந்தம்
மகட்குத் # தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. 9

* பார்ப்பதே
# தாயர்

2945 அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே. 10

2946 கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே. 11

2947 நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. 12

2948 விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 13

2949 வாடா * மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் # அமுதமே. 14

* மலர்ப்புனை
# அமுதே

2950 அதுக்கென்று * இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
# சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. 15

* இருந்தார்
# அதுக்கென்று

2951 தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே. 16

2952 இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கன்மனம் உற்றுநின் * றேனே. 17

* றானே

2953 ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 18

19. வரையுரை மாட்சி

2954 தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது
தான்அவ னானபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1

2955 உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
* புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 2

* புரையற்று நின்றான்

2956 மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான் * மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 3

* மாயு

20. அணைந்தோர் தன்மை

2957 மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி * யன்பில் பதித்துவைப் போர்க்கே. 1

* யாங்கே மதித்துவைப் பார்க்கே

2958 ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2

2959 ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. 3

2960 ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. 4

2961 பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லு நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. 5

2962 ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர் * நல் நமசிவா யப்பழம்
தின்றுகண் # டேற்கிது தித்தித்த வாறே. 6

* இனி
# டாற்குத்

2963 சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. 7

2964 பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. 8

2965 அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. 9

2966 கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே
* உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. 10

* உண்டென நாமினி

2967 தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே * வடவரை ஆதியுமாய நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே. 11

* தடவரை

2968 நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே. 12

2969 சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. 13

2970 * நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. 14

* நினைப்பு மறப்பு மிலாத விட்டதே

2971 சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. 15

2972 பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. 16

2973 என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. 17

2974 பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. 18

2975 சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. 19

2976 கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. 20

2977 உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. 21

2978 மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே. 22

2979 ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. 23

2980 * அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் # திருத்துவன் தானே. 24

* அன்பும்
* திருத்தலு மாமே

2981 மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது * வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. 25

* வாயுவு, மனம்வி

21 தோத்திரம்

2982 மாயனை நாடி மனநெடும் தேரெறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்
காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. 1

2983 மன்னு * மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே. 2

* மலையோன்

2984 முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே. 3

2985 புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. 4

2986 பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5

2987 நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. 6

2988 போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. 7

2989 நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. 8

2990 வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. 9

2991 மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. 10

2992 மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 11

2993 அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. 12

2994 வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோ என்று
உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. 13

2995 ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. 14

2996 விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. 15

2997 வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. 16

2998 விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. 17

2999 மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதுஅனங்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும்என் ஆருயிர் தானே. 18

3000 சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. 19