பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 8 ...

701 இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே. 62

702 எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
எழுநூற்று இருபத்தொன்பான் அது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்தது இவ்வாறே. 63

703 ஆறு அது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழு அது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால்கொண்டு இடவகை *ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. 64

* ஏற்றபின்

704 சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான் ஆம் சகமுகத்து
உந்திச் சமாதி உடை ஒளி யோகியே. 65

705 அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மா ஞான மிகுத்தல்
*சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்
நுணங்கற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே. 66

* சிணங்குற்ற வாயர் சித்திதாங் கேட்டல்

706 மரணஞ் *சரைவிடல் வண்பர காயம்
இரணஞ்சேர் பூமி இறந்தோர்க் களித்தல்
அரணன் #திருவுற வாதன் மூவேழாங்
$கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே. 67

* சிறைவிடல்
# திருவுரு
$ கரணுறு

707 ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே. 68

708 மூல முதல் வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே. 69

709 ஆதார யோகத்து அதிதேவொடும் சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி ஈரெண் கலை செல்ல மீது ஒளி
ஓதா அசிந்தம் இது ஆனந்த யோகமே. 70

710 மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித்
துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய்யடியார்க்குப்
பதி அது காட்டும் பரமன் நின்றானே. 71

711 கட்ட வல்லார்கள் *கரந்து எங்கும் தான் ஆவர்
மட்டு அவிழ் தாமரையுள்ளே மணம் செய்து
பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டு இட்டு
#நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே. 72

* கலந்தெங்குந்
# நட்டிடு

12. கலை நிலை

712 காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழி தருங்
காதல் வழிசெய்து காக்கலு மாமே. 1

713 காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலை பதினாறையும்
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே. 2

714 நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
* அலைவற வாகும் வழியிது வாமே. 3

* மலைவறி

715 புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றில் ஏறியே வீற்றிருந்தானே. 4

716 இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே. 5

717 சாதகமான அத்தன்மையை நோக்கியே
மாதவமான வழிபாடு செய்திடும்
போதகமாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதகமாக விளைந்து கிடக்குமே. 6

718 கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடி உள்நோக்கிப்
படர்ந்தது தானே பங்கயம் ஆகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே. 7

719 தானே எழுந்த அத்தத்துவ நாயகி
ஊனே வழிசெய்து எம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலயம் ஆகுமே. 8

720 திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே. 9

721 சோதனை தன்னில் துரிசு அறிக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும் நாள்
* சாதனம் ஆகும் குருவை வழிபட்டு
மாதனமாக மதித்துக் கொள்ளீரே. 10

* சாதக மாகுங் குருவழி பட்டு

722 ஈர் ஆறு கால் கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லிரேல்
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்தாண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே. 11

723 ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியில் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனும் தன்னிற் பிரியும் நாள்
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே. 12

13. காயசித்தி உபாயம்

724 உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. 1

725 உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. 2

726 * சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே. 3

* சுழித்துக்

727 அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே. 4

728 மூன்று மடக்கு உடைப் பாம்பு இரண்டு எட்டு உள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
* நான்ற இம் முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றியிருக்க உடம்பு அழியாதே. 5

* நான்றவிழ்

729 நூறும் அறுபதும் ஆறும் வலம் வர
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. 6

730 சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியானத்திலே * வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும்
சத்தியம் #சொன்னோம் சதாநந்தி ஆணையே. 7

* வாக்கியங்
# சொன்னேன்

731 திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெறவே நினைந்து ஓதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே. 8

732 உந்திச் சுழியி * னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே. 9

* உடனே

733 மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே. 10

734 நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 11

735 அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே. 12

736 பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே. 13

737 சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே. 14

738 நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட * வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 15

* வாயுவுய் சரீர

739 ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
* நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே. 16

* நீர்க்கொள நெல்லின்

14. கால சக்கரம்

740 மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு
மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே. 1

741 உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
* அற்ற தறியா தழிகின்ற வாறே. 2

* அற்றறியா

742 அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே. 3

743 திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே. 4

744 மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே. 5

745 நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே. 6

746 ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே. 7

747 விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி * பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 8

* பத்தெட்டுப்

748 முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே. 9

749 முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே. 10

750 நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்
சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே * நின்றிடும்
உன்னி # யுணர்ந்திடும் ஓவியந் தானே. 11

* நின்றிடில்
# அணைந்திடும்

751 ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 12

752 தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று * மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே. 13

* மகிழ்ந்துடன்

753 பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. 14

754 சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே. 15

755 கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே. 16

756 ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே. 17

757 கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே. 18

758 சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் * கோடி யுகமது வாமே. 19

* கூடி

759 உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி * கண்டு ளயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டல் குயருறு வாரே. 20

* கண்டு ளயர்வறக்

760 உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே. 21

761 காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமற் கழிகின்ற வாறே. 22

762 கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே. 23

763 கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி * யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. 24

* யாய்நிற்கும்

764 நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே. 25

765 கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே. 26

766 அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே. 27

767 அவனிவ நாகும் பரிசறி வாரில்லை
அவனிவ நாகும் பரிசது கேள்நீ
அவனிவ நோசை ஒளியினுள் ஒன்றிடும்
அவனிவன் வட்டம தாகிநின் றானே. 28

768 வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே. 29

769 காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 30

15. ஆயுள் பரிட்சை

770 வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா
மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. 1

771 ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை * யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த உணர்விது வாமே. 2

* பிறந்தவர்

772 ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை யளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந்
தாமே யுலகில் தலைவனு மாமே. 3

773 தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்
தலைவ நிடம்வலந் தன்வழி நூறே. 4

774 ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளியிவ் வகையே. 5

775 இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை * ஐம்பதே யென்ன அறியலாஞ்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே. 6

* யையொன்பதே; யொன்பதே; யன்பதே

776 மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்
* எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே. 7

* எண்முன் றினாலும்

777 பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருந்திய பத்தே. 8

778 ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே. 9

779 அளக்கும் வகைநாலும் அவ்வழியே * ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே. 10

* ஓடிடில்

780 காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் * கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே. 11

* கலப்புற மூவைந்தேழ்

781 கருதும் இருபதிற் * காண ஆறாகும்
கருதிய # ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடனாறு காணிற்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே. 12

* ஈராறாகும்
# ஐந்திற்

782 காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே. 13

783 ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற * வகையாறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே. 14

* வகையான்ய் சமாதியில்

784 ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே. 15

785 மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வெளிச்செய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே. 16

786 ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியார் அறிவறிந் தேனே. 17

787 அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயி ரத்தின்
பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற்
செறிவது நின்று திகழு மதுவே. 18

788 அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறையவ னாமே. 19

789 பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலு மதியே. 20

16. வாரசரம்

790 வௌளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்
தௌளிய தேய்பிறை தான்வல மாமே. 1

791 வௌளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 2

792 செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே. 3

793 மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியுந் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே. 4

794 உதித்து வலத்திடம் போகின்ற போது
* அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே. 5

* அதிற்கஞ்சி; அதிற்றுஞ்சி

795 நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே. 6

796 ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயவு நாளு * முகுர்த்தமு மாமே. 7

* முகுத்தமு

17. வாரசூலம்

797 வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வௌளி குடக்காக நிற்குமே. 1

798 தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. 2

18. கேசரி யோகம்

799 கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே. 1

800 வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
* விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை # நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே. 2

* விண்ணாற்றைத் தேக்கிக்
# நிரப்பிட்டு