உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ரங்கோன் ராதா 16 எந்தத் தங்கத்தால் என் வாழ்வு சீர்குலைக்கப்பட்டதோ அவளிடமே சென்று குறையைக் குறி உதவி கோரினேன். அவள் இதனால் கர்வம் கொண்டாலும் சரி, மேலும் என்னைக் கொடுமைக்காளாக்கினாலும் சரி என்று துணிந்தே இதைச் செய்தேன். ஆனால் நான், சிந்தாமணி விஷயமாகக் கூறியதும் தங்கம் என்னைவிட அதிகமாகத் திகிலடைந்தாள் என்பது அவள் பேச்சிலேயே நன்கு தெரிந்தது. கண்களில் நீர் ததும்ப அவள் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அவள் மனதிலே என்னென்ன எண்ணினாளோ? ஏறக்குறைய என் நிலைக்கு அவள் வந்து கொண்டிருந்தாள். தங்கமும் ரங்கமாகித்தானே தீர வேண்டும், புதியவள் வந்து சேர்ந்தால்! தங்கம், ரங்கம் என்று தனிப்பட்ட பெயர்களைக்கூடத் தள்ளிவிடு தம்பி! பொதுவாகவே பெண்களுக்கு நிலைமை இதுதானே. ஒரு நாள் ராதா, ரங்கோனில் யாரோ ஒரு புலவர் எழுதிய பாட்டைப் படித்துக் கொண்டிருந்தாள். "என்னடி எழுதியிருக்கு அதிலே? அவ்வளவு சுவாரஸ்யமாகப் படிக்கிறாய்" என்று கேட்டேன். "பெண்களின் முகத்தைச் சந்திரபிம்பம் என்று வர்ணிக்கிறார்களே அதைப்பற்றி ஒரு புலவர் அழகாக எழுதி இருக்கிறார்" என்றாள். "இதிலே என்ன புது அதிசயம் கண்டுவிட்டாயடி; நாம் கூடத்தான் சின்னக் குழந்தைகளை ஏதேதோ சொல்லிக் கொஞ்சுகிறோம். நமக்கு ஏதெது கிடைக்கவேண்டுமென்று எண்ணுகிறோமோ, எவை எவை விலையுயர்ந்தவை, மதிக்கத்தக்கவை என்று எண்ணுகிறோமோ அந்தப் பொருளின் பெயரை வைத்துக் குழந்தையைக் கூப்பிட்டுக் கொஞ்சுகிறோம். இது போலவே, பெண்களைப் பல காலமாகப் புகழ்ந்து வருகிறார்கள்" என்றேன். "அம்மா! நீ சொல்வதுதான் உண்மை. ஆனால் இதைப் படிக்கும்போது எனக்கு வேறோர் விஷயம் புலப்பட்டது. முகம் சந்திரபிம்பம் என்கிறார்களே அது சரியோ, தவறோ? பெண்களின் வாழ்வு சந்திரன் போலத்தான் இருக்கிறது. இருண்ட இடத்துக்கு ஒளி, வெப்பம் நீக்கும் குளிர்ச்சி, பார்க்க ஆனந்தம், இவ்வளவும் நிலவும் தருகிறது; நாமும் தருகிறோம். ஆகையால் பெண்களின் முகத்துக்கு நிலாவை ஈடாகக் கூறுவதைவிட, பெண்களுக்கே நிலவை உவமை கூறலாம்" என்றாள். "ஆமாடி அம்மா! நிலவுக்கு இருப்பது போலத்தான் நமது வாழ்விலும் தேய்பிறையும் வளர்பிறையும் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு நான் வேதனையை மறைத்துக் கொள்வதற்காகச் சிரித்தேன். "அம்மா! அதை நான் அறியாமல் இல்லை. வளர்பிறை தேய்பிறை சந்திரனுக்கு இருப்பதுபோலத்தான் வனிதையர் வாழ்விலும் இருக்கிறது. வளர்பிறை, பூலோகத்துக்கு மகிழ்ச்சி தருகிறது. முழு நிலவு காண எவ்வளவோ ஆனந்தமாக இருக்கிறது. அதன் அழகிலே சொக்காதவர்கள் கிடையாது. கவி பாடுகிறான் களிப்புடன். பாமரருக்கும் ஏதோ ஓர் வகையான களிப்பு. நிலாக்காலம் - முழுநிலவு நாள் - இவைகளையே பல கதைகளிலே அழகாகத் தீட்டுகிறார்கள். அது போலத்தானம்மா, பெண்களின் வாழ்விலும் முழுத் திருப்தியும் மகிழ்ச்சியும் நிரம்பி, ஒளி வீசினால், அதனால் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆடவர் உலகுக்கும் நன்மைதான் ஏற்படும். தேய்பிறையின் போது தெருவும் வீடும் சாலையும் இருண்டு விடுகின்றன. மக்கள் பாழாய்ப்போன இருட்டுக்குப் பயந்து வீட்டோ டு இருப்பார்கள். அருவருப்பு, பயம் இவைகளால் பீடிக்கப்படுகிறார்கள். முன் இருட்டு, பின் இருட்டு, முழு இருட்டு, மை இருட்டு என்று விதவிதமாகப் பிரித்துக் காட்டி வருத்தப்படுகிறார்கள். வெளியிலே உல்லாசமாக உலவவோ ஒளி இல்லை - வீட்டுக்குள்ளே இருந்தாலோ நிம்மதி இல்லை; இருட்டுக் காலமே கள்ளருக்கு வேலை மிகுதியான நாள். ஆகவே, வீட்டிலே உறக்க முற்றுக் கிடப்பர். இவ்வளவும் நிலவு இல்லாததால் வரும் கேடு. அதுபோலவே, பெண்ணின் வாழ்வு இருண்டு கிடந்தால், கஷ்டம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆடவருக்குத்தான்" என்றாள் என் மகள். "ராதா! நீ சொல்வது சரி. ஆனால், பெண்களின் வாழ்வு ஏன் இப்படி வளர்பிறை தேய்பிறையாகவே இருக்கிறது? இதற்கு ஒரு மாற்றம் கிடையாதா? தேய்வது, வளர்வது மீண்டும் தேய்வது அடியோடு இருண்டுபோவது, முழு அழகுடன் பிரகாசிப்பது என்றுள்ள இந்த முறை மாறக்கூடாதா? இதன் காரணத்தை அந்தப் புலவர் ஏதாவது கூறியிருக்கிறாரா?" என்று கேட்டேன். "அவர் ஏனம்மா அதைக் கூறப்போகிறார்? முகம் சந்திரபிம்பம் என்று ஆரம்பித்தவர், பாட்டின் நாலாவது அடி வருவதற்குள், கைலாயத்துக்கு அல்லவா போய்விட்டார்! நிலவின் அழகைக் கண்டு மயங்காதவர் இல்லை. மன்மதனையே சுட்டெரித்த சிவபெருமானே நிலவின் அழகிலே இலயித்து, பிறைச் சந்திரனைத் தமது ஜடையிலே சூட்டிக் கொண்டாரென்றால், நிலவின் அழகை விளக்கவும் வேண்டுமோ என்று அவர் ரொம்ப உயரம் போய்விட்டாரே! எப்படி அவர் பெண்ணினத்தின் வாழ்வு நிலவு போல் இருக்கிறது என்பது பற்றியோ, குறித்தோ எழுதப் போகிறார்? சொல்லப்போனால், அம்மா! அவர் நிலவைப்பற்றிக் கூற ஆரம்பித்த நோக்கமே அதே சாக்காகச் சிவபெருமானைப் பற்றிப் பாடலாம் என்றுதான் எனக்குத் தெரிகிறது. புலவர்கள் மிக உயரமாக அல்லவா போகிறார்கள். தங்கள் காலடியில் காணப்படும் எந்த விஷயம் தான் அவர்களின் கண்ணுக்குத் தெரிகிறது" என்று கேட்டாள். ராதாவுக்கு, தம்பி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதென்றால் ரொம்பப் பிரியம். அதே போது, புலவர்கள் எதை எதையோ எழுதுகிறார்களே யொழிய, வாழ்க்கையிலே காணப்படும் விஷயங்களை மறந்து விடுகிறார்களே என்று கோபிப்பாள். "போகட்டும் ராதா! புலவர் கைலாயமோ வைகுந்தமோ போகட்டும். நீதான் சொல்லு, ஏன் பெண்களின் வாழ்வு இப்படி வளர்பிறை தேய்பிறையாக இருக்கிறது?" என்று நான் கேட்டேன். "அம்மா! நிலவுபோல இருக்கிறது நமது வாழ்வு என்றேனே, அதிலேயே சகல விளக்கமும் இருக்கிறதே! நிலவு தன்னாலே பிரகாசிப்பதில்லையே! சூரியனிடம் வெளிச்சத்தைக் கடன் வாங்கித்தானே பிரகாசிக்கிறது. கடன்பட்டு வாழ்பவர்கள் வளர்வதும் தேய்வதுமாகத் தானே இருக்க முடியும்? இரவில் வெளிச்சம், எப்போதும் ஒரே விதமாக இருக்க முடியாதே! பெண்களின் வாழ்வு ஆடவரால் தானே அமைக்கப்படுகிறது? அவர்களாகத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் சௌகரியம், சக்தி, உரிமை இருந்தாலல்லவா, ஏன் தேய வேண்டும், ஏன் குன்ற வேண்டும், என்றும் ஒரே அளவு களிப்புடன் இருக்கும்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமே என்ற எண்ணம் ஏற்படும். எண்ணம் பலிக்கவும் வழி பிறக்கும். நிலவுக்கென்று தனி ஒளி இல்லை. அதுபோலவே நமக்கென்று தனி வாழ்வு இல்லை. அண்ணன், அப்பா, புருஷன், மகன், பேரன் என்று இப்படித் தானே இரவல் வெளிச்சத்தில் வாழவேண்டி இருக்கிறது; ஆடவரிடமிருந்து நாம் வாழ்வுக்கு ஒளி தேடுகிறோம். எனவே அவர்கள் இஷ்டப்பட்டு எந்தெந்தச் சமயத்தில் எந்தெந்த அளவு வெளிச்சம் தருகிறார்களோ அந்த அளவுக்குத்தான் நாம் பிரகாசிக்க முடிகிறது. நமது எதிர்வீட்டுக்காரர், மேயர் ஆனாரல்லவா? அதுவரையில் அவர் தமது மனைவியை, வீட்டுக்குள்ளேயேதான் வைத்திருந்தார். மேயரான பிறகு, அவர் விருந்து வைபவம் எதற்காவது போனால் மனைவியுடன் வரவேண்டும், அதுதான் முறை, நாகரிகம் என்று தெரிந்தது. உடனே அவர் தம் மனைவிக்குக் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தந்தார் - அம்மா இப்போது, பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்கிறார்கள் - பிள்ளைகளுக்குப் பரிசளிக்கிறார்கள் - எங்கோ ஓர் கல்நாட்டு விழாக்கூடச் செய்தார்கள். இந்த 'வெளிச்சம்' சொந்தமல்லவே! அவர் கொடுத்த 'இரவல்'. எவ்வளவு காலத்துக்குப் பயன்படும்! உரியவர் கேட்டுப் பெற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? எங்கள் பள்ளிக்கூடத்திலே ஒரு வேடிக்கை நடந்ததம்மா போன வாரம். மீனா ஒரு 'ப்ரோச்' போட்டுக் கொண்டு வந்தாள். வாத்தியாரம்மா அதிகக் கஷ்டமான கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், கொஞ்சம் கோபத்துடன். ஏனெனில் கணக்கு மிகச் சுலபம் என்று கூறி எங்களை எல்லாம் திட்டிவிட்டு, அவர்கள் அதைப் போட்டுக் காட்ட ஆரம்பித்தார்கள். மூன்று தடவை கணக்கு தவறாகவே முடிந்தது. நாலாவது முறை கோபத்துடன் அந்தக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று மீனாவைப் பார்த்துவிட்டு, கணக்கையும் நிறுத்திக்கொண்டு, அவளை அருகே அழைத்து 'ப்ரோச்'சை ஆசையுடன் பார்த்து, "ரொம்ப அழகாக இருக்கு மீனா" என்று புகழ்ந்தார்கள். மீனா பெருமையடைந்தாள். இதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் கமலா. மறுநாளே 'ப்ரோச்' கமலாவுக்குப் போய்ச் சேர்ந்தது. மீனாவின் முகம் வாடி விட்டது. கமலாவின் தங்கை காந்தா மீனாவுக்கு இரவல் கொடுத்தது அந்த 'ப்ரோச்'. இரவல் பொருள் எவ்வளவு அழகாக இருந்தால் என்ன? அதுபோல் இருக்கிறது பெண்ணின் வாழ்வு. நிலவுக்கு ஒளிதரும் சூரியன் இயற்கை நியதிப்படி, அளவும் காலமுமறிந்து ஒளி தருகிறான். பெண்ணுக்கு வாழ்வு அமைக்கும் ஆடவனோ எந்த நீதிக்கும் கட்டுப்பட்டவனல்ல. அவன் இஷ்டம்! இது மாறவேண்டுமானால், பெண்களுக்குத் தங்கள் வாழ்வைத் தாங்களே அமைத்துக்கொள்ளக்கூடிய திறமை, வசதி, உரிமை ஏற்படவேண்டும். சுலபத்தில் ஏற்படக் கூடியதா" என்று ராதா சொன்னாள். அவள் சொன்னது அவ்வளவும் உண்மைதானே. உன் அப்பா எனக்கு மகிழ்ச்சியும் பிறக்கச் செய்தார். அவரே அதனை மங்கவும் செய்தார். பௌர்ணமி அமாவாசை இரண்டும் ஏற்பட்டுவிட்டது என் வாழ்வில். தங்கம் மட்டும் எப்படித் தப்புவாள்? ராதா சொன்னது போல் அவளும் நிலவுதானே! சொந்தத்தில் வாழ்வு ஏது? இரவல் பிழைப்புத்தானே! அதற்குச் சிந்தாமணியால் சீரழிவு வருமா என்று எண்ணி அவள் யோசித்ததிலே ஆச்சரியமில்லை. உண்மையிலேயே தங்கம் திகைத்துத்தான் போனாள். தேம்பி அழவில்லை என் எதிரில். ஆனால் வந்துவிட்ட பிறகு நிச்சயம் அழுதுதான் இருப்பாள். தங்கத்திடம் நான் கொண்டிருந்த கோபம் கூடக் கொஞ்சம் குறைந்தது. பாவம்! அவள் மட்டும் என்ன சுகப்பட்டாள்! எப்படிச் சுகம் கிடைக்கும் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன். அதுகூட வேடிக்கையல்ல தம்பி! சிந்தாமணியின் மீது இருந்த சீற்றம்கூட எனக்குக் குறையலாயிற்று. நானே எண்ணிப் பார்த்தேன். நாம் அவளைத் திட்டுகிறோம், சபிக்கிறோம்; வாழ்வைக் குலைக்க வந்தாளே சண்டாளி என்கிறோம். எல்லாம் சரி. ஆனால் பாவம், அவள் மீது மட்டுமா குற்றம்? அவர் அவளிடம் என்னென்ன பசப்பினாரோ, என்னென்ன ஆசை வார்த்தைகள் சொன்னாரோ, யார் கண்டார்கள்? அவளை எப்படி எப்படியோ சொல்லி நம்ப வைத்ததாலேதானே, அவள் இரண்டு மனைவிமார் இருந்தாலும் பரவாயில்லை, நாம் அவருடைய ஆதரவைப் பெறலாம் என்று எண்ண முடிந்தது. ஆண்கள் இந்த வித்தையிலே தேர்ச்சி பெற்றவர்களாயிற்றே. "உனக்கு ஒரு குறைவும் வராது" என்ற பேச்சு அவர்களிடம் கிளம்பாத நேரம் ஏது! உன் அப்பாவாவது பணத்தாசை பிடித்தவர். பரமசாது போல நாணயஸ்தர் போல வெளிவேஷம் போட்டுக் கொண்டு ஊரை ஏய்த்தவர். அவருடைய சொல்லைக் கூடத் தள்ளிவிடு. ராதாதான் சொன்னாள் தசரத சக்ரவர்த்தி எவ்வளவு பெரியவர்! கடவுளுக்கே தகப்பனார் ஆகக்கூடிய யோக்யதை அவருக்கு இருக்கத்தானே கதை எழுதினார்கள். அப்படிப்பட்டவர் பெண்கள் விஷயத்திலே எப்படி நடந்து கொண்டார். கௌசலை, சுமத்திரை ஆகியவர்களிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தவர், கைகேயி வேண்டும் என்று கிளம்பினாரே; நியாயமா? ராதா எனக்கு முழு உண்மையும் சொன்னாள், ஏதோ ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தைப் படித்துவிட்டு. கிழவராம் தசரதர், ஏற்கெனவே இரண்டு மனைவிகளாம். கைகேயி நல்ல பருவம், நல்ல அழகு; அவளும் ஒரு ராஜகுமாரிதான். அவளைத் தனக்குக் கலியாணம் செய்துதரச் சொன்னாராம், கிழவர். கைகேயின் தகப்பனார், தங்களுக்குத்தான் இரண்டு தேவிமார்கள் இருக்கிறார்களே, மூத்த மனைவி தானே பட்டமகிஷி; அவளுக்குப் பிறக்கும் மகனுக்குத்தானே பட்டம். என் மகளை உமக்குக் கொடுத்தால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு என்ன நிலை இருக்க முடியும்? வேண்டாம் இந்தக் கலியாணம். கைகேயியைப் பட்டமகிஷியாக்கிக் கொள்ளக்கூடிய, மணமாகாத மன்னருக்குத் தருவேன். அவளுடைய மைந்தன் மகுடம் பூண்டு அரசனாக வேண்டும் என்பது என் ஆசை என்றானாம். இந்தக் கிழ ராஜா கைகேயிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே அயோத்யா ராஜ்யம் கிடைக்கச் செய்கிறேன் என்று கூறிச் சத்யமே செய்து விட்டாராம். பார் தம்பி! சமயத்திற்கு ஏற்றபடி நடக்கும் தந்திரத்தை. கைகேயி அதே எண்ணத்தோடுதானே இருந்திருப்பாள். பிறகு மூத்த மகனுக்குத்தானே பட்டம் என்று அதே ராஜா சட்டம் பேச ஆரம்பித்து விட்டாரல்லவா? கைகேயி, என் தங்கை தங்கம் போல, கிழட்டு அரசனின் காமப் போக்கை உணர்ந்தவள் ஆட்டிப் படைத்தாள். இன்று வரையிலே உலகம் கைகேயியைக் கண்டிக்கிறதே தவிர, இந்த அரசன் ஒரு இளம் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையால், இது தருவேன் அது தருவேன் என்று சொல்லி நம்ப வைத்தானே, ஆசை காட்டினானே, பிறகு அவனே மோசம் செய்யத் துணிந்தானே; இது சரியா என்று உலகம் கேட்கிறதா? இல்லையே! அதுபோலத்தான் இந்தச் சிந்தாமணியை வசியப் படுத்த இவர் என்னென்ன ஆசை காட்டினாரோ? நம்பும்படி செய்வதற்காக எவ்வளவோ வாக்குறுதிகள் தந்துதான் இருப்பார். அந்தப் பேதையும் அதனை நம்பி ஏமாந்துதான் போயிருப்பாள். ஆயிரம் தடவை ராமாயணம் படித்தாலும் இந்தச் சூட்சமத்தை எங்கே உணரப் போகிறார்கள் பெண்கள். ராதா அடிக்கடி சொல்லுவாள், ராமாயணத்தை தான் புதிய முறையில் எழுதப் போவதாக! இதை எல்லாம் எண்ணினதால் எனக்குச் சிந்தாமணி மீது இருந்த கோபம்கூடக் கொஞ்சம் குறைந்தது. வீட்டிற்குள் சென்றதும் கிழவி, என் முகத்திலே முன்புபோலக் கோபக்குறி அதிகம் இல்லாததைக் கண்டு, "என்ன விஷயம்? அக்காவும் தங்கையும் சேர்ந்துவிட்டீர்களா? சரி! சிந்தாமணி இனித் தொலைந்தமாதிரிதான்" என்று கேலியாகக் கூறினாள். "இதற்குள் சொல்லிவிட முடியுமா? தங்கம், இனிமேல்தானே பேச ஆரம்பிப்பாள்!" என்று நான் சொன்னேன். "நீயும் கூடச் சேர்ந்தே போர் நடத்தினாலும் உங்கள் எதிரே சிந்தாமணி வரமாட்டாள்" என்றாள் கிழவி. "ஏன்?" என்று கேட்டேன். "அடி பைத்தியக்காரி! நானும் பைத்தியம் தான். சிந்தாமணியும் கிந்தாமணியும்; வேடிக்கை, வேடிக்கை" என்று கூறிக்கொண்டே சிரித்தாள் கிழவி. "என்ன வேடிக்கை; என்ன பைத்தியம்! என்ன சொல்கிறாய்?" என்று பதைபதைத்துக் கேட்டேன். "இவ்வளவு சிரமமும் வீண். சோகமடைந்ததும் வீண் வேலை, தங்கத்திடம் போனதும் வீண் வேலை" என்று கிழவி கூறினாள். "வீண் வேலையா? எப்படி? சிந்தாமணி ஏற்கெனவே வந்தாகி விட்டதா?" என்று நான் சீற்றத்துடன் கேட்டேன். "உட்காரம்மா உட்கார்! சிந்தாமணிமீது போர் தொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. சக்களத்தியும் அல்ல, சாகசக் காரியுமல்ல, சிந்தாமணி பெண்ணல்லடி, பைத்தியமே!" என்றாள் கிழவி. |