உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ரங்கோன் ராதா 22 ராதாவின் 'அன்பை' நான் பெற்றுவிட்டேன் - இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் 'தூது'. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் 'நாயுடு' குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் பரந்தாமன் என்று சொன்னதும், அப்பா சம்மதித்துவிட்டார். திருமண நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. கடைசியில், தன் மகள் சுகப்பட, கௌரவப்பட, வழி கிடைத்ததே என்ற மகிழ்ச்சி ரங்கம்மாளுக்கு! தன் தங்கைக்குத் தகுந்த 'வரன்' கிடைத்ததுபற்றி நாகசுந்தரத்துக்குக் களிப்பு! எனக்கும் ஆனந்தம்! ராதா? ஒரே குதூகல மயம்! இவ்வளவையும் 'பாழ்' செய்யக் கிளம்பினான், பர்மா நாயுடு! கலியாணத்துக்கு இரண்டே நாட்கள் உள்ளன. நேரே என் வீடு வந்தான். மாடியில், என் தனி அறையில் நான் இருந்தேன்... புதிதாகத் தைத்து வந்த, கோட்டு ஒன்றை போட்டுக்கொண்டு, 'கண்ணாடியில்' பார்த்தபடி. "மாப்பிள்ளையாகப் போகிறாயோ, மாப்பிள்ளை!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலிலே கேட்டான் - கதவை, உட்புறம் தாளிட்டுக் கொண்டான். "இதோ பார்! எனக்கு இப்போதே ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டும். இல்லையானால் இந்தக் கலியாணம் நடைபெறாது - கண்டிப்பாக நடைபெறாது" என்று கூறினான். எனக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது. "ஆயிரம் ரூபாயா? ஏன்? பெண்ணை விற்கிறாயா அந்த விலைக்கு?" என்று நான் கேட்டேன், கோபமாகத்தான். "பெண்ணை விற்பது அல்ல! அந்த "இளித்தவாய்ச் சிறுக்கி" யார் தடுத்தாலும், உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வாள். நான் கேட்கும் ஆயிரம், ராதாவுக்காக அல்ல! இரகசியத்தை வெளியிடாமலிருக்க! உன் அப்பாவுக்கு, ரங்கத்தின் "பூர்வீகம் தெரியாதிருக்கவேண்டுமே, அதற்காக! தெரிந்தால், ஊர் சிரிக்குமே. ஒப்புக்கொள்வாரா, உன் தந்தை. அதற்காக, நான் வாயை மூடிக் கொண்டிருப்பதற்காக. 'ஆயிரம்' தரவேண்டும் என்றான். எனக்கு வந்த கோபத்தில், அப்படியே அந்தக் குடிகாரனின் கழுத்தைப் பிடித்து நெரித்து விடலாமா என்று கூடத் தோன்றிற்று. அடக்கிக் கொண்டு, சாந்தமாக ஆனால் உறுதியுடன் கூறினேன் - அரை ரூபாய்கூடக் கொடுக்க முடியாது என்று. "கலியாணத்தைத் தடுக்க, உன்னால் முடியாது. ஊரிலே ஒரு சமயம், உன் உளறல் கேட்டுச் சில பேர் இழிவாகப் பேசக்கூடும். அதுதான் நடைபெறுமேயொழிய, கலியாணம் நின்றுவிடாது" என்று நான் சொன்னேன். "கோட்டையூராரின் முதல் மனைவிதான் ரங்கம் என்பது தெரிந்தால் கூடவா, உன் அப்பா சம்மதிப்பார் இந்தக் கலியாணத்துக்கு?" என்று முடுக்குடன் கேட்டான் பர்மா நாயுடு. "கலியாணம் எனக்கு! அப்பாவுக்கு அல்ல" - என்று நான் வெடுக்கெனப் பதில் சொன்னேன். பர்மா நாயுடு, ஆயிரத்தை ஐந்நூறு ஆக்கினான் - நான் முறைத்துப் பார்த்தேன், இருநூறுக்கு இறங்கினான் - எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "மிரட்டிப் பணம் வாங்குவது முடியாது, மாமா! ஆயிரம் கூடத் தந்துவிடுவேன், அன்புடன் கேட்டால்" என்று சொன்னேன் - இளித்தான். ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தேன். அவைகளை வாங்கிக்கொண்ட பிறகு சொன்னான். "தம்பி! ஏன் தெரியுமா இது! கலியாணத்தின் போது, உன் அந்தஸ்துக்கு ஏற்றபடி நான் உனக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதற்காகத்தான்!" திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பர்மா நாயுடு, நானூறு ரூபாயில் எனக்கு 'ரிஸ்ட் வாட்ச்' வாங்கித் தந்தார்! கோட்டையூரார் 'ராதாவுக்கு' ஆசீர்வாதமும், அழகான வைர நெக்லெசும் பரிசளித்தார் - பகிரங்கமாக அல்ல. எப்படியோ பெரியதோர் 'பொய்' சொல்லி, என் தகப்பனாரை ஏமாற்றியாகிவிட்டது. அந்தப் பொய் சொல்லாவிட்டால், உண்மையைக் கூறி இருந்தால், ராதாவை நான் மனைவியாகக் கொள்வதை எப்படி என் அப்பா சம்மதிப்பார்! நானும் நாகுவும், இதைப் பேசிக்கொண்டே சிரித்துக் கொண்டிருந்தோம், ஒரு நாள் மாலையில், என் மாடி அறையில். "அண்ணா! அப்பாவை ஏமாற்றிவிட்டதாகத்தானே அத்தான், 'கித்தாப்பு'ப் பேசுகிறார்" என்றாள் ராதா. "ஆமாம் - சாமர்த்தியமாக நான் காரியத்தைச் சாதித்துக் கொண்டேன் - அப்பா, கர்நாடகப் பேர்வழி - கலப்பு மணத்துக்குத் துளியும் சம்மதிக்கமாட்டார்" என்றேன். "தங்களைவிடத் தங்கள் அப்பாதான் சாமர்த்தியசாலி" என்றாள் ராதா. "எப்படி?" என்று நாகு கேட்டான். "அண்ணா! இவர் அவருடைய மகன் அல்ல! இவர் மனித குலம் - செட்டியாரோ, நாயுடுவோ, முதலியாரோ, பிள்ளையோ, என்னவோ தெரியாது" என்றாள் ராதா. எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. "விளங்காது, நானாக விளக்கினாலொழிய! எனக்கும் உங்கள் அப்பா சொன்னதால்தான் தெரிந்தது" என்றாள். என் உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது. "பரமா, பயப்படாதே! பழங்கதை - இனிக் கூறித்தான் தீரவேண்டும், அதை" என்று கூறிக்கொண்டே என் அப்பா, அறைக்குள் வந்தார். "எனக்குக் கல்யாணமாகிப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை - கவலைப்பட்டேன் - பிறகு, 'கர்ப்பம்' தரித்தது - அதாவது கர்ப்பம் தரித்ததாக, என் மனைவி 'பாசாங்கு' செய்தாள். தாய் வீடு சென்றாள் - அங்கு ஒரு லேடி டாக்டரின் உதவியால், என்னை நம்பவும் வைத்தாள். லேடி டாக்டர் ஏழைகளுக்காக ஒரு பிரசவ விடுதி நடத்தி வந்தார்கள் - அங்கு பிறந்த ஒரு குழந்தையின் தாய் இறந்துவிடவே, அந்தக் குழந்தையை என் மனைவியுடையதாக்கினார்கள் - நீதான் அந்தக் குழந்தை!" என்றார். எனக்கு பேச்சு எழவில்லை. "அந்தக் குழந்தைதான் தாங்கள். அந்த லேடி டாக்டர்தான், கல்லூரியில் நாடகமாடினேனே, 'தாரா' நாடகம், அப்போது தலைமை வகித்த திலகவதி" என்று ராதா விளக்கம் கூறினாள். "கொஞ்சம் துப்பறியும் வேலை செய்தேன் - திலகவதியும் துணை செய்தார்கள் - கண்டுபிடித்தேன் உண்மையை" என்று ராதா கூறினாள். "எனக்குத் தெரியாது, இந்த ரகசியம் ராதாவுக்குத் தெரியும் என்று. கலியாணத்துக்குப் பிறகு, ராதாவே என்னிடம் ஆதாரத்துடன் கேட்கவே, நான் உண்மையை ஒப்புக்கொண்டேன்" என்று மேலும் விளக்கம் கூறலானார் என் தகப்பனார். எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் தோன்றித் தோன்றிக் கலைந்தன. நாகசுந்தரம், சாமர்த்தியமாகப் பேச்சை வேறு பக்கம் திரும்பினான். பல நாட்களாயின, என் மனம் ஒரு நிலையை அடைய. "இப்போது கூறுங்கள், யார் சாமர்த்தியசாலி? உங்கள் அப்பாதானே! நீங்கள், நான் யார் என்பதை அவர் அறிந்து கொள்ளாதபடி சாமர்த்தியமாகக் காரியம் செய்தீர். அவரோ நீங்கள் யார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியாதபடி, இவ்வளவு வருஷங்களாக மறைத்து வைத்தார். அவர்தானே உண்மையில் சாமர்த்தியசாலி" என்று ராதா கேட்டாள். அவளை என் அருகே இழுத்து முத்தமிட்டுக் கூறவேண்டும் என்று எண்ணினேன் - அதை எப்படித்தான் என் ராதை தெரிந்து கொண்டாளோ தெரியவில்லை; தளிர்போலச் சாய்ந்தாள் என் மீது. அவளுடைய கன்னங்களில் - ஆமாம் - என் கரம்தான் முதலில் விளையாடிற்று - பிறகு அதரம். "கிளியே! மறைந்துபோயிருந்த 'இரகசியத்தைக்' கண்டறிந்த, நீதான் எங்களிருவரை விடச் சாமர்த்தியசாலி" என்றேன் நான். "சந்தேகமென்ன அதிலே! பொதுவாகவே, ஆண்களை விடப் பெண்கள்தான் சாமர்த்தியசாலிகள்" என்றாள் என் ராதா. 'எப்படி?' என்று நான் கேட்கவில்லை. நான் அவள் கூந்தலைக் கோதினேன் - களித்தேன். "எப்படி என்று கேட்கிறீர்களா கண்ணாளா! எவ்வளவு பெரிய சாமர்த்தியசாலியான ஆடவனாக இருப்பினும் அவனைப் பெற்றெடுத்தவள் ஒரு பெண்தானே! அவள் தானே சிறப்புக்குக் காரணம்" என்றாள். "இன்பமே" என்றேன் நான். கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தாள் - செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள், வசந்தம் வீசிற்று! புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்! முற்றும் |