உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வெள்ளை மாளிகையில் 10 மனிதன் மிருகமல்ல! வழக்கறிஞரின் திறமை எதற்குப் பயப்படவேண்டும்? பெண் உள்ளம் பெரிய உள்ளம் 'நல்ல நாடு' என்ற பெயரே ஒரு நாட்டுக்கு வேண்டும்! ஐந்தாவது 'குற்றச்சாட்டு!' ஏடு காட்டும் நன்முடிவு நாட்டிலே ஏற்படுமா? இன்ப வாழ்க்கைக்கான அழைப்பு ஒரு புறத்திலிருந்து. செல்வம்! செல்வாக்கு! மாளிகை! மலர்த்தோட்டம்! துணைவியாரின் மனம் மகிழ்ச்சியால் துள்ளிடும் நிலை! குடும்பத்துக்கு நிம்மதி! இவையாவும் எதிரே நிற்கின்றன! எங்கோ நெடுந்தொலைவிலிருந்து ஒரு பெருமூச்சு ஒலி கிளம்புகிறது! வழக்கறிஞர் நாட் ஆபிரகாம்ஸ் செவியிலே அந்தப் பெருமூச்சு புகுந்ததும், இன்ப வாழ்க்கைக்கான அழைப்பை அவர் உதறித் தள்ளுகிறார். வழக்கறிஞர் திறமையைக் காட்டி வெற்றி பெற்றிடுவதை மட்டுமே கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட 'மரபு', மனிதத்தன்மையை மாய்த்திடும் நிலைக்கு அந்த வழக்கறிஞரை இழுத்துச் செல்லுமானால், அந்த 'மரபு' மாண்பானதாக முடியாது. வழக்கறிஞரின் திறமை எதற்குப் பயன்படுதல் வேண்டும்? எதிர்த்தரப்பினர் எந்த இடத்திலே இடருவார், எந்தக் குறிப்பிலே குழம்புவார், எந்தக் கட்டத்திலே குளறுவார், எந்த வாதத்தை மறந்திடுவார், எந்த சட்ட நுணுக்கத்தை வலியுறுத்தத் தவறிவிடுவார் என்று கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்து, தக்க சமயமாகப் பார்த்து பாய்ந்து தாக்கி வீழ்த்துவது மட்டுந்தானா! நாட் அவ்விதம் எண்ணவில்லை. வழக்கறிஞர், நீதிக்காகப் பரிந்து பேசவேண்டும்; சட்டத்தைக் கொண்டு எவரேனும் எவரையேனும் வாட்டி வதைத்திட முனைந்தால், அவர்களைக் காத்திட முனைய வேண்டும். எத்தனை சட்ட நுணுக்கங்கள், சான்றுகள், விளக்கப்பட்ட போதிலும் அவையாவும், நீதியை நிலைநாட்ட மட்டுமே பயன்படுதல் வேண்டும்; அதற்கான முறையிலே வழக்கு நடத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிவதே வழக்கறிஞரின் தனித் திறமையாக இருக்க வேண்டும் என்று நாட் கருதினார். குற்றவாளிக் கூண்டிலே கொண்டு வந்து நிறுத்தப்படுபவர், தமது நண்பர் என்பதாலேயே, அவர் காப்பாற்றப்பட்டாக வேண்டியவர் என்ற கோணல் வாதத்தை நாட் ஆபிரகாம் மேற்கொள்ளவில்லை. தனது நண்பர், ஓர் மனிதர்! நிறம் கருப்பு. ஆனால் நெஞ்சம் தூய்மையானது! அவர் மீது பழி சுமத்தப்படுகிறது என்று நம்பினார். அவர் மீது குற்றம் சாட்டும் வெள்ளை இனத்தவர் பல நூற்றாண்டுகளாகக் கருப்பர் மீது பகை, வெறுப்பு கக்கி வருபவர். கருப்பர்களைக் கொடுமை செய்வது அறமல்லவே முறையல்லவே என்ற உணர்வே அற்றவர்கள். அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், பகை காரணமாகத்தான் இருக்க முடியும் என்று நாட் திடமாக நம்பினார். எல்லாவற்றையும் விட, தன்னை எத்தனை நம்பிக்கையுடன், நட்புணர்ச்சியுடன் அழைத்தார் டில்மன் என்பதை எண்ணும் போது, எதை இழப்பதாயினும் சரி, எத்தனை இன்னலை ஏற்க வேண்டி நேரிடினும் சரி, நண்பன் பக்கம் நின்றாக வேண்டும் என்ற உறுதி பிறந்தது. துணைவியாரின் பேச்சும் கண்ணீரும், தன் நெஞ்சை உருக்கிவிடுவதை உணர்ந்தார். பேதைப் பெண்! என்னைக் கணவனாகப் பெற்றதால், சீமாட்டியாகலாம், சிங்கார வாழ்விலே புரளலாம் என்று எண்ணிக் கொண்டாள். பெருத்த ஏமாற்றம், பாவம்! எறிச்சலாகத்தான் இருக்கும். இத்தனைக் காலமாகத்தான் ஏழை எளியோர்களுக்காக வேலை செய்து, வாழ்க்கையைப் பாலையாக்கிக் கொண்டார்! இப்போது ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது - பெரிய வணிகக் கோட்டம் அழைக்கிறது - கேட்கும் பணம் தரச் சம்மதிக்கிறது - இதையும் உதறித் தள்ளிவிடுவதா! குடும்பம் எக்கேடோ கெடட்டும் என்றா இருப்பது! நான் வேண்டுகிறேன், கெஞ்சுகிறேன், கண்ணீர் வடிக்கிறேன்! கவலைப்படக் காணோமே!! என்று பாபம், அவள் பதறுகிறாள். என் எண்ணத்தை அவள் ஏற்க மறுக்கிறாள். அவள் மீது கோபித்து என்ன பயன்? எந்த மனைவியும் தன் கணவனிடம் எதை எதிர்பார்ப்பாளோ அதைத்தான் அவள் எதிர்பார்க்கிறாள்! நான் தான் அவளுக்கு ஏமாற்றத்தைத் தருகிறேன். நான் வேறென்ன செய்ய முடியும்... நாட் ஆபிரகாம்ஸ் இவ்விதமாகவெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகிறார். உட்கார்ந்தபடியே உறங்கிவிடுகிறார். வெகுண்டு வெளியே சென்ற அவர் மனைவி வருகிறாள்; மெள்ளத் தன் கணவன் தோளைத் தொட்டு எழுப்புகிறாள். வேறு ஏதோ ஓர் உலகு சென்று திரும்பியவன் போன்ற நிலையில் ஆபிரகாம் இருக்கக் காண்கிறாள். தழதழத்த குரலில் அவள் பேசுகிறாள்! "அன்பே! என்னை மன்னித்து விடு! ஏதோ மனக் குழப்பம். என்னென்னமோ பேசிவிட்டேன், கோபமாக. உங்கள் முடிவுதான் சரியானது, நியாயமானது, டக்ளஸ் டில்மனை நாம் கைவிடக்கூடாது. அவருக்காக வாதாட வேண்டியது தான் கடமை..." "என்ன சொல்லுகிறாய் அன்பே! டக்ளஸ் டில்மனிடம் இத்தனைப் பரிவு எப்படி ஏற்பட்டது." "பாவம்! அத்தனைப் பெரிய மாளிகையில், தன்னந்தனியாகத் தானே டில்மன் தவித்துக் கொண்டிருப்பார்; தனக்காகப் பரிந்து பேச, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்ய ஒருவரும் இல்லையே என்ற துக்கம் துளைத்திடும் நிலையில், அதை எண்ணிக்கொண்டால், மனம் என்ன பாடுபடுகிறது தெரியுமா..." "இந்த மனமாற்றம் ஏற்படக் காரணம்?" "உண்மையை உணர்ந்ததால்; டக்ளஸ் டில்மன் எந்த நிலைமையில் இருக்கிறார்; அவரைச் சுற்றிலும் எத்தனைப் பகை கப்பிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்ததால், அன்பே! கோபமாகச் சென்றேனல்லவா வெளியே; சிறிது தூரம் சுற்றிவிட்டு, அந்த மாளிகைக்கு எதிர்ப்புறம் நின்றேன்; வெள்ளை மாளிகைக்கு எதிர்ப்புறம் உள்ள சாலையில் அகமகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே அவ்விடம் வந்த ஓர் ஆரணங்கையும் அவள் மணவாளனையும் கண்டேன்! புது மணமக்கள் போல இருக்கிறது. அந்தப் பெண் அவனைக் கேட்டாள், "அதோ அதுதானே வெள்ளை மாளிகை?" என்று; ஆம் என்றான் அவன்; "உள்ளே போய்ப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது" என்றாள் அந்தப் பெண், அவனோ ஓர் ஏளனச் சிரிப்புடன் கூறினான்: "அங்குதானே! போகலாம்; ஆனால் இப்போது வேண்டாம்; இப்போது அங்கு ஒரு கருப்பன் அல்லவா இருக்கிறான்!! ஆனால் அவன் அங்கே அதிக நாட்கள் இருக்கப் போவதில்லை; வெளியே துரத்தப் போகிறார்கள். வழக்குத் தொடுத்தாகிவிட்டது; கருநிறத்தான் வெளியே சென்றதும், நாம் உள்ளே போய்ப் பார்க்கலாம், வெள்ளை மாளிகையைக் கழுவிச் சுத்தப்படுத்தி விடுவார்கள்" என்றான்; அவள் சிரித்தாள். அன்பே! அப்போது தான் எனக்கு டக்ளஸ் டில்மனுடைய நிலைமை புரிந்தது! சட்டப்படி குடியரசுத் தலைவராக அமர்ந்திருக்கிறார். ஆனால் நிறவெறி காரணமாக அவரை அவ்வளவு வெறுக்கிறார்கள்; கேவலமாக பேசுகிறார்கள்; ஒழித்துக் கட்டவே முனைகிறார்கள். அவ்வளவையும் தாங்கிக் கொண்டல்லவா அவர் தத்தளிக்கிறார். நீதி அறிந்தவர்கள் அவர் பக்கமாக நிற்க வேண்டும்! அதனை உணர்ந்தேன், ஓடோடி வந்தேன்; என்ன தவறான காரியம் செய்துவிட்டேன் என்பதை எண்ணியபடி. அன்பே! உடனே குடியரசுத் தலைவரிடம் கூறிவிடு, வழக்கு மன்றம் வரத் தயார் என்று; நீதிக்காக வாதாடத் தயார் என்று." "அன்பே, உன் மனம் மாறும் என்பதை நான் அறிவேன். அதனை எதிர்பார்த்து, நான் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டேன், அவர் சார்பில் வழக்கை நடத்துவதாக!" தம்பி! இதுபோல இருவரும் உரையாடி மகிழ்கின்றனர். குடும்பம் நிம்மதியாக வாழ்ந்திட வேண்டும் என்ற இயற்கையான, தேவையான, நியாயமான எண்ணத்தின் காரணமாகச் சிறிதளவு 'மாசு' மனத்திலே புகுந்தது; எனினும் மீண்டும் தூய்மைப்பட்டு விட்டது. அப்போது அந்த மாது கூறுவதாக நூலாசிரியர் ஓர் கருத்தைத் தருகிறார்; அது என் மனதை வெகுவாக நெகிழச் செய்தது. பெரிய வணிகக் கோட்டத்தின் வழக்கறிஞரானால், பணம் ஏராளமாகக் கிடைக்கும்; சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிற்றூரில் ஓர் சிங்கார இல்லம், சாலையும் சோலையும் சூழ்ந்த இடத்தில் ஒரு பண்ணை அமைத்திடலாம்; அங்கு நிம்மதியாகக் குதூகலமாக வாழ்ந்திடலாம்; குழந்தைகளுக்கு அந்த எழிலகத்தைத் தந்திடலாம் என்றல்லவா ஆசைப்பட்டாள் வழக்கறிஞரின் மனைவி; அதை மீண்டும் நினைவுபடுத்திவிட்டுச் சொல்கிறாள்; நாம் நினைத்தபடி சிற்றூரில் எழிலகம்! சாலையும் சோலையும் அமைந்த ஒரு பண்ணை! இவைகளை நமது குழந்தைகளுக்கு நாம் பெற்றளிக்க முடியாது, ஆனால் அன்பே! நீதிக்கு இடமளிக்கும் நாட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்லும் பாக்கியம் கிடைக்குமல்லவா! அது போதும்! அது பண்ணையை விட எவ்வளவோ மேலானது." இரும்புப் பெட்டியிலே எண்பது இலட்சம்! கரும்புத் தோட்டத்திலே வருட வருமானம் பல இலட்சம்! ஆலை! சோலை! சாலை! ஆள் அம்பு! கோட்டம்! மாடம்! கூடம்! எல்லாம் தன் பிள்ளைகளுக்குத் தரவேண்டும்! எத்தனைப் பாடுபட்டாகிலும் அந்தச் செல்வநிலையைப் பெற வேண்டும். பிறகு! அந்த மாளிகையிலே மந்தகாசம்! மலர்த்தோட்டத்திலே காதல் கீதம்! ஊரிலே பெருமதிப்பு! செல்வாக்கு! உயர்நிலை!! பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் - வழிவழி வந்தோர் மகிழ்ச்சிப் பொங்கிடும் நிலையில் வாழ்ந்திடுவர்! என் முன்னோர் எனக்காக இத்தனை செல்வத்தைச் சம்பாதித்து வைத்தார் என்று பேசுவர்; போற்றுவர்; வழிபடக்கூடச் செய்வர். ஆனால், ஒரு தந்தை தன் மகனுக்கு இத்தகைய செல்வத்தை மட்டும் சேர்த்து வைத்துவிட்டால் போதுமா? செல்வத்தைக் குவித்து வைத்துக் கொள்வதாலே மட்டுமே இன்ப வாழ்வு கிடைத்துவிடுமா? பொறாமை! வஞ்சகம்! பொல்லாங்கு! பகை! சூது! சூழ்ச்சி! மாச்சரியம்! - இவை நெளியும் நிலையில் நாடு இருந்திடின், அந்த நாட்டிலே மாளிகை உண்டு மந்தகாச வாழ்வு உண்டு என்று கூறி இருந்திட முடியுமா! நீதி! நேர்மை! பண்பு! அறம்! அறிவு! இவைகளற்ற நிலையில் ஒரு நாடு இருந்திடின்... அங்கு கோடி கோடியாகப் பணம் குவிந்திருந்திடினும், வாழ்விலே ஒரு நிம்மதி கிடைத்திடுமா! நல்ல நாடு! என்பதைக் காட்டிலும் மேலான செல்வம், நிலையான செல்வம் வேறு எதுவும் இல்லை. நல்ல நாடு! ஒருவரை ஒருவர் தாழ்த்திடும் இழித்தன்மை இல்லாத நாடு! நிறம், மதம், மொழி, குலம், எனும் எதன் காரணமாகவும் பேதமும் பிளவும் ஏற்படாமல், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிறை என்ற முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இடமே நல்ல நாடு! என் மக்கள் வாழ்வதற்காக அத்தகைய நல்ல நாடாக இந்நாட்டை ஆக்கிட உழைப்பேன்; இதனைக் காட்டிலும் நான் என் பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய நன்மை - தரக்கூடிய செல்வம் - விட்டுச் செல்லக் கூடிய வரலாறு - வேறு என்ன இருக்க முடியும். செல்வம் சேர்த்துக் கொடுத்திடலாம் - எதற்கு அது பயன்பட வேண்டும்? நிறவெறி தலைக்கேறி ஆட்டமாடுகிறார்களே அதற்காகவா! ஆளப்பிறந்த இனம் என்ற செருக்கை மூட்டிவிடவா செல்வம்!! பூங்கொடியாளிடம் ஓர் பேழை! பேழை நிறைய வைரக் கற்கள்!! ஆனால் அவள் இருக்கும் இடமோ, வழிப்பறிக்காரர்கள் தங்கும் குகை!! படுத்துத் தூங்க மலர் தூவப்பட்ட படுக்கை!! ஆனால் எந்த இடத்தில்! பாம்புப் புற்றின் பக்கத்தில்!! இவ்விதமல்லவா இருந்திடும் நமது மக்களுக்குச் சுகமளித்திடும் என்ற நம்பிக்கையில் சொத்து மட்டும் சேர்த்துக் கொடுத்துவிட்டு, நாட்டை நயவஞ்சகர் கொட்டமடிக்கும் காடாக இருக்க விட்டு விட்டால்! தம்பி! இதுபோலப் பலப்பல எண்ணிடத் தோன்றுகிறது. அந்த மாது கூறிய, நமது மக்கள் வாழ ஒரு நல்ல நாடு கிடைத்திடச் செய்திடுவோம்! என்ற அருமை மிகு கருத்து, நாம் வாழும் நாட்டில் நாம் காணும் கொடுமைகளில், அநீதிகளில், ஒரு சிறு அளவினையாகிலும் நாம் நமது அறிவாற்றலால், உழைப்பால், தன்னல மறுப்பால், போக்கிடுவது தான் நாம் முதல் கடமையாகக் கொண்டிடுவது என்ற நெறி, நடைமுறையாகிடுமானால், தம்பி! உலகு புன்னகைப் பூங்காவாக அல்லவா வடிவம் கொள்ளும். ஆனால் மிகப் பெரும்பாலோரின் எண்ணம், தன் வீடு, தன் குடும்பம், தன் மக்கள், அவர்களின் எதிர்காலம் என்ற அளவோடு அல்லவா நின்றுவிடுகிறது. தன் பிள்ளைகளின் எதிர்காலம் இன்பமுள்ளதாக இருந்திட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, காலமெல்லாம் அதற்காகவே கடுமையாக உழைத்துவிட்டு, நிம்மதியான வாழ்வையே கெடுத்திடத்தக்க அக்கிரம புரியாக நாடு இருந்திடுவதை மாற்றி அமைக்காவிட்டால் என்ன பயன்? ஒரு தலைமுறை மற்றோர் தலைமுறைக்காக, தனித் தனி இல்லங்கள், செல்வம் என்ற இன்றைய முறையைக் காட்டிலும், ஒரு தலைமுறை தன் காலத்தில் காணப்படும் கேட்டினைக் களைந்தெறிந்து தன் நாட்டைத்தான் காண்பதைக் காட்டிலும் சிறிதளவேனும் நல்ல நாடு ஆக்கி அளித்துவிட்டுச் சென்றிடவேண்டும் என்ற முறை எத்துணை நேர்த்தியானது! பலப்பல எண்ணம் என் மனதிலே மலர்ந்தது தம்பி! அந்த வழக்கறிஞரின் மனைவி கூறிய கருத்தைக் கேட்டு. தான் மேற்கொள்ளும் காரியத்தைத் தன் மனைவியும் வரவேற்று ஆதரிக்கிறாள் என்பதைத் தவிர மகிழ்ச்சியையும் எழுச்சியையும் மிஞ்சக் கூடியதாக வேறு எதுவும் இருக்க முடியாதல்லவா! என்னமோ போக்கு! வீட்டை கவனிக்காமல் குடும்பத்தைக் கெடுத்துக் கொண்டு ஊருக்கு உழைக்கிறாராம் ஊருக்கு!! என்ற சலிப்பும் வேதனையும் நிரம்பிய பேச்சைத் தாங்கிக் கொண்டபடி பொதுத் தொண்டாற்றுவது காதுக்குள் ஓர் வண்டு புகுந்து கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வாட்போரில் ஈடுபட்டு வெற்றி பெற முனைவதற்கு ஒப்பானதாகும். ஆனால் நமது கழகத் தோழர்களிலே மிகப் பலர் அத்தகைய பேச்சையும் தாங்கிக் கொண்டுதான் தொண்டாற்றுகிறார்கள். அவர்களின் தொண்டு மிகச் சிறந்தது என்ற நேர்த்திக்கு உரியதாவதன் காரணமே அதுதான். மாலை நேரப் பூப்பந்தாட்டம் அல்ல, பொதுத் தொண்டு. வழக்கறிஞர் ஆபிரகாம்ஸ் தன் துணைவியின் எண்ணம் தூய்மைப்பட்டு விட்டதனால், புதிய எழுச்சி பெற்றிருக்க வேண்டும் - நிச்சயமாக. வழக்கு மன்றத்திலே அவர் அதே எழுச்சியுடன் பேசுகிறார். வாதத் திறமையால் குற்றச்சாட்டுகளை உடைத்தெறிவது, குறுக்குக் கேள்விகளால் சான்றுகளைப் பிளந்தெறிவது, சட்ட நுணுக்க விளக்கத்தால் வழக்கின் அடித்தளத்தைப் பெயர்த்திடுவது என்ற இவைகளிலே சுவை உண்டு; இந்தச் சுவை கிடைத்திடத்தக்க வழக்குப்பற்றிய ஏடுகள் பல படித்திருக்கிறேன். இந்த ஏட்டிலே என் மனதை மிகவும் ஈர்த்த பகுதி, வழக்கறிஞர் தமது திறமையை விளக்கிய பகுதி அல்ல; இதயத்தைத் தொட்டிடும் பகுதியே. தம்பி! டக்ளஸ் டில்மன் மீது நான்கு குற்றச்சாட்டுகள், அவைகளில் ஒன்று கூட இறுதியில் மெய்ப்பிக்கப்படவில்லை, ஆதாரமற்றவை என்பதால்; இட்டுக் கட்டப்பட்டவை என்பதால். அந்தக் குற்றச்சாட்டுகளை உடைத்தெறிவதிலே அல்ல, வழக்கறிஞர் என் மனதைக் கவர்ந்தது. நான்கு குற்றச்சாட்டுகளை வெறியர் டில்மன் மீது சுமத்தினர், இவரோ, ஐந்தாவது குற்றச்சாட்டு ஒன்றைச் சேர்த்துக் கொண்டார். ஐந்தாவது குற்றம் - பட்டியலிலே சேர்க்கப்படாதது - வெளிப்படையாக எடுத்துச் சொல்லப்படாதது - ஆனால் மற்ற நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது - அதுதான் அவர் ஓர் நீக்ரோ என்ற குற்றச்சாட்டு!! - என்று வழக்கறிஞர் ஆபிரகாம்ஸ் எடுத்து விளக்குகிறார்; ஆனால் மனதிலே நியாய உணர்ச்சிக்கு இடமளித்திடுவோர் அனைவரும் உருகிடும் நிலை பெறுகின்றனர். குற்றம் சாட்டுகிறார்கள்! யார்! யார் மீது? வெள்ளையர்! கருப்பர் மீது! ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்? கருப்பன் அரசாள்வதா என்பதால்! குடிவெறி! காமச் சேட்டை; திறமைக் குறைவு, கற்பழிக்க முயற்சித்தது! மகனுக்கு உடந்தையாக இருந்தது! வெள்ளை இனம் என்று ஏய்த்துத் திரியும் மகளுக்குத் தந்தையாக இருப்பது; - இவை குற்றச்சாட்டுகள். இவைகள் எப்போது கிளம்புகின்றன? எப்போது கிளப்பப்படுகின்றன! வெள்ளையரின் தலையாட்டிப் பொம்மையாக டில்மன் இருக்க மறுத்திடும்போது! கிடைத்த பதவி போதும், சுகபோகம் போதும் என்று இருந்திருந்தால்? வழக்கு எழாது! வாழ்த்துக் கிடைத்திடும், ஆனால் அந்த வாழ்த்திலே கூட விஷம் கலந்திருக்கும்; கருப்பர் இனத்தவராக இருப்பினும் கண்ணியமாக, திறமையுடன் நடந்து கொண்டார்! கருப்பு இனத்தவர் கண்ணியமாக நடந்து கொள்ளமாட்டார்கள், திறமையாக நடந்திட மாட்டார்கள், என்ற பொதுவான குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். கருப்பு இனத்தில் தவறிப் பிறந்தவர்! என்ற பட்டம் தரப்படும்; சூட்டிக் கொள்ளலாம். இனத்தை இழிவுபடுத்துபவர்; ஏன் என்று கேட்கக் கூடாது. தனி மனிதருக்கு புகழ் தரும் என்று மகிழலாம்! இந்த நிலையினை உணர்ந்த ஆபிரகாம்ஸ், வழக்கு மன்றத்திலே கூடி டில்மனை ஒழித்துக்கட்ட ஏன் விரும்புகிறார்கள் என்ற இரகசியத்தை அம்பலப்படுத்த முனைந்தார். அதனால்தான், ஐந்தாவது குற்றம் அடிப்படைக் குற்றம் - என்பது பற்றிப் பேசுகிறார். தம்பி! அவருடைய விளக்கத்தில், நூலுடைய தலைப்பு இருக்கிறதே மனிதன் என்ற தலைப்பு - அதனையே எடுத்து ஒரு தத்துவமாக்கிக் காட்டுகிறார். மனிதன்! மனிதன்! என்று தம்பி! எல்லோருந்தான் பேசுகிறோம்; என்ன எண்ணிக் கொண்டு பேசுகிறோம்? எண்ணிப் பார்த்திடும்போதுதான் விந்தையான பல உண்மைகள் நமக்குத் தோன்றிடும். நானும் மனிதன் தான்! அவன் ஒரு மனிதனா? எல்லோரும் மனிதர்கள் தானய்யா! மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம்? மனிதனாகப் பிறந்துவிட்டால் போதுமா! அவன் மனிதன் அல்லய்யா...! மனிதன் செய்கிற காரியமா இது! இப்படிப் பல்வேறு நிலைகளில் பல்வேறு முறையாகப் பேசுகிறோம். மனிதன் என்றால் என்ன பொருள்? - இது பற்றியே வழக்கு மன்றத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது. பல்வேறு சிந்தனையாளர்கள் தந்துள்ள விளக்கங்களை எடுத்துக் காட்டிவிட்டு, இறுதியாகக் கூறுகிறார். மனிதன் மிருகமல்ல! இதைக் கூடச் சொல்லவேண்டுமா என்று கேட்கத் தோன்றும், தம்பி! ஆனால் நீக்ரோக்களை, 'மிருகம்' என்று கூட அல்ல, 'உடைமை' என்றே அமெரிக்க 'நீதி' மன்றங்கள் கூறியுள்ளன என்பதை மறந்து விடக்கூடாது. இங்கு மட்டும் என்ன!! ஜாதியால், பொருளாதார நிலையால் மூட்டப்பட்டுவிடும் வெறுப்பும் கேவல உணர்ச்சியும் ஆட்டிப் படைக்கும் நிலையில் உள்ளவர்கள், தம்மிலும் தாழ்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களை மனிதர்களாகவா நடத்துகிறார்கள். மிருகமாக! மிருகத்தை விடக் கேவலமாக!! டாக்டர் அம்பேத்கார் ஒரு முறை கூறினார், ஒரு உயர் ஜாதி இந்து தன்னுடைய நாயிடம் பரிவு காட்டித் தொட்டு விளையாடுவான், ஒரு தாழ்த்தப்பட்டவனைத் தொடமாட்டான் என்று. மிருகங்கள் பல உள; சிங்கம், புலி, நாய், நரி, ஓநாய்! - இப்படி. ஆனால் பித்துப்பிடித்தவனன்றி மற்ற எவனும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குளற மாட்டான். ஆனால் நமது நாட்டிலே சிலர், கருப்பு நிறம் கொண்டவர்களை அந்த நிறம் காரணமாகவே, மிருகம் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். இது மடத்தனம் அல்லது வெறுப்பு என்பதும், இந்த முட்டாள்தனத்தைப் போக்கவல்லது கல்வி அறிவு என்பதையும் உணர்ந்திருக்கிறேன். மனிதன் - மிருகம் - இவை பற்றிய விளக்கம் கூறுவதற்காகப் பொறுத்திட வேண்டுகிறேன்; ஆனால் இந்த வழக்கு நடைபெறும் போது இந்த விளக்கத்தை மறந்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். வழக்கு நடப்பது, நாற்கால் பிராணி மீது அல்ல! ஒரு மனிதன் மீது! உங்களைப் போன்ற ஒரு மனிதன் மீது! அதை மறந்துவிடாதீர்கள்! நான் குறிப்பிடும் ஐந்தாவது குற்றச்சாட்டு என்னவென்றால் டக்ளஸ் டில்மன் நீக்ரோ என்பதை மறந்து அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அமருவதற்கு இணங்கினார் அல்லவா, அதுதான்! நீக்ரோ யார்? முழுமனிதன் அல்லவே! மட்டம்! இரண்டாந்தரக் குடிமகன்! மிருகம்! - அப்படித்தானே நிற வெறியர்கள் கருதுகின்றனர், பேசுகின்றனர். நீக்ரோ முழு மனிதன் அல்ல! ஆகவே அறிவுள்ளவனாக இருக்க முடியாதே! ஆகவே அடக்கி வைக்கப்பட வேண்டியவன்!! இல்லையென்றால், குடித்துவிட்டு உருளுவான், குமரிப் பெண்களைக் கெடுத்திடத் துடிப்பான்! - அப்படித்தானே வெள்ளை இனத்தின் உயர்வு பற்றிய வெறியுணர்ச்சி கொண்டோர் கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கருப்பன், உயர்ந்த இனமான வெள்ளையர்களையும் சேர்த்து ஆளத்தக்க நினைப்பு கொள்ளலாமா! குடியரசுத் தலைவர் ஆகலாமா!! பெரிய குற்றமல்லவா! மன்னிக்கப்பட முடியாத குற்றமல்லவா! டக்ளஸ் டில்மன் செய்த குற்றம் இதுதான் - அடிமை இனத்தவன் இவன்! ஆளப்பிறந்தவர் வெள்ளையர்! இந்த நியதியை மறந்தானே!! குடியரசுத் தலைவன் என்றானானே, அதுதான் அவன் செய்த குற்றம். குற்றப் பட்டியலில் அது இல்லை; வெள்ளை வெறியரின் உள்ளத்தில் அதுதான் மேலோங்கி நிற்கிறது. அந்தக் குற்றத்தை வெளியே கூறக் கூச்சப்பட்டுக் கொண்டு வேறு பலவற்றை இட்டுக் கட்டியிருக்கிறார்கள். நான் ஒரு மனிதனுக்காக வாதாடுகிறேன் - மனிதன் மிருகமல்ல என்ற தூய கருத்துக்காக வாதாடுகிறேன். தம்பி! வழக்கறிஞரின் இந்தப் பேச்சு உள்ளத்தைத் தொடுகிறது; ஆனால் வெள்ளையர் தலைவர் ஒருவர் வெகுண்டெழுந்து இது வழக்குக்குத் தொடர்பற்ற பேச்சு, விபரீதப் பேச்சு, இதனை மேலும் அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் கூறுகிறார். நீதிபதியும், மேற்கொண்டு இது பற்றிப் பேச அனுமதி கிடையாது என்று அறிவித்து விடுகிறார். மேலும் பேசுவானேன் தம்பி! மனிதன் மிருகமல்ல! அந்த ஒரு வாக்கியமே போதுமே; அதிலே பொதிந்துள்ள பொருள் ஏடு பல கொள்ளுமே! நல்லவர் உள்ளத்தை உருக்குமே; அதுபோதும்! மனிதன் மிருகமல்ல! என்பது மட்டும் தம்பி! உலகிலே அதிலே குறிப்பாக 'உயரிடங்களிலே' ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டால்! மனிதன், மிருகமல்ல! என்பது மட்டும், அது எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைந்து விட்டால்!! மனிதன், மிருகமல்ல! இதனை மட்டும் ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டால்! நாடு, காடு ஆகிடாது! நல்ல நாடு கண்டிடலாம். தம்பி! வழக்கிலே டில்மன் குற்றமற்றவர் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது என்பது பற்றியும், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டிய சாலி வாட்சன் எனும் மாது, உண்மையை எடுத்துரைத்து, டில்மன் மீது ஏற்றப்பட்ட பழியைத் துடைத்திட்டாள் என்பதையும் முன்பே குறிப்பிட்டுக் காட்டினேன்; நினைவிலிருக்கும் என்று நம்புகிறேன். வழக்கு முடிகிறது; டில்மன் குற்றமற்றவர் என்ற தீர்ப்புக் கிடைக்கிறது; வழக்கறிஞரும் அவர் போன்றோரும் மகிழ்கின்றனர்; குடியரசுத் தலைவர் டில்மன் தமது 'கடமை'யைக் கவனிக்கச் செல்கிறார் என்ற முறையில் ஏடு முடிகிறது. ஏடு, ஒரு நல்ல முடிவைக் காட்டுகிறது. நாடு? அது பற்றித் தம்பி! எண்ணிப் பார்த்திடத்தான் இவ்வளவும் சொல்லி வைத்தேன். முற்றும்
|