வெள்ளை மாளிகையில்

2

     வெள்ளை மாளிகையில் அமர்ந்து அரசோச்ச ஒரு 'கருப்பர்' அதிபரானது பற்றி படித்ததும் உனக்கோ எனக்கோ, ஒரு மகிழ்ச்சி துள்ளிடுமேயன்றி அச்சம் எழாதல்லவா? நிறம் எதுவாக இருந்தால் என்ன, தகுதியும் திறமையும் இருந்திட வேண்டும், அஃதன்றோ முக்கியம், இந்த நாட்களிலா நிறம் என்ன என்று பத்தாம்பசலிப் பேச்சுப் பேசுவார்கள்! என்று கூறுவோம். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற எண்ணம் கிடையாது, மன உளைச்சல் ஏற்படாது, மருட்சி கொண்டிட மாட்டோம்.

     கதைதானே!- என்று கூறிடுவர், பழமைப் பிடிப்பினர் கூட, உண்மையில் இதுபோல எங்கே நடைபெறப் போகிறது என்ற நம்பிக்கை கலந்த தைரியத்துடன்.

     டில்மன் எனும் நீக்ரோ, அமெரிக்கக் குடியரசுத் தலைவரானார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டதும், அமெரிக்க மக்களிடம் என்னென்ன விதமான உணர்ச்சிகள் கொந்தளித்துக் கிளம்பியிருந்திருக்கும் என்பது பற்றி யூகித்தறிந்து கொள்ள முடிகிறதல்லவா!

     முட்டாள்! முரடன்! ஏய்! கருப்புப்பயலே! கண் மண் தெரியவில்லையா! எச்சில்பட்ட கோப்பையை எடுத்துக் கொண்டு போய்க் கழுவிவரக்கூட மறந்து விட்டாயா, மடையா!

     அவன் ஏன் இனி எச்சில் கோப்பையைக் கழுவப் போகிறான் அன்பே! அவனை இனி கருப்பா என்று கூடக் கூப்பிடக்கூடாது! டில்மன் யார் தெரியுமா! குடியரசுத் தலைவர் யார் தெரியுமா, கருப்புதான்! கருப்பன் ஆள்கிறான், வெள்ளையர் நாட்டை!! என்று பேசுவாள்... காலம் மாறிவிட்டது, கண்ணாளா! கருப்பு வெளுப்பாகி விட்டது!

     இந்தப் பயல்களுக்கு மண்டைக்கனம் ஏறிவிட்டுத்தான் இருக்கும், புரிகிறது... ஆனால் கருப்பு வெளுப்பு ஆகிவிடாது, ஆகிவிட மாட்டார்கள்.

     வெள்ளை மாளிகைக்குள்ளேயே நுழைந்தாகிவிட்டதே, இன்னும் என்ன விபரீதம் நேரிட வேண்டும், இது போதாதா...!

     என்னமோ சட்டமாம்! மரபாம்! இப்படி ஒரு இழிவைச் சுமத்திவிட்டார்கள். கருப்பு நிறத்தான் குடியரசுத் தலைவராகக் கூடாது என்றல்லவா சட்டம் இருக்க வேண்டும். ஏமாளித்தனமான ஒரு சட்டத்தை வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு இழிவைச் சுமத்தி விட்டார்கள்.

     கேட்பார் எவரும் இல்லையா, அமெரிக்காவிலே அறிவாளர்களே இல்லையா...

     தம்பி, நிறவெறி பிடித்தவர்கள் இல்லங்களிலே இது போன்ற அளவு அல்ல, இதைவிட மோசமான முறையிலும் அளவிலும் பேச்சு எழாமலிருந்திருக்க முடியுமா? மாளிகைக்காரர்கள், வெள்ளையர்; அங்கு தோட்டக்காரன், வண்டி ஓட்டி, சமையற்காரன், பணியாள் நீக்ரோக்கள்! அடிமைகள் என்ற நிலை இல்லை, ஆனால் கூலிக்காரர்களாக, குற்றேவல் புரிபவர்களாக உள்ளனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேண்டும், இடப்பட்ட வேலையைச் செய்திட வேண்டும், ஏன் என்ற கேள்வியை எழுப்பக்கூடாது. இது அவர்கள் நிலைமை! அவர்களிலே ஒருவர் அமெரிக்க அதிபர்! விந்தை என்பர் மற்றையோர், விபரீதம் என்று தானே கூவுவர் கொதிப்படைந்த வெள்ளையர்.

     'டிரம்' என்பானுடையதை பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே தம்பி! அந்த அடிமையை ஒரு உற்பத்திப் பண்ணைக்காரனல்லவா விலை கொடுத்து வாங்கி 'தரமான' நீக்ரோக்களை உற்பத்தி செய்து வந்தான் என்று சொன்னேன், அந்த வெள்ளை முதலாளிக்கு ஒரு வெள்ளை மாது 'தொடர்பு' - அந்த வெள்ளை மாது 'டிரம்' என்ற நீக்ரோவுக்குத் தன் உடலை ஒப்படைத்தாள், அவன் கேட்டதால் அல்ல, அவள் விரும்பியதால்! கருவுற்றாள். இது தெரிந்த வெள்ளை முதலாளி 'டிரம்' என்பானை அடித்துக் கொன்று போட்டான்; அவளை விரட்டி விட்டான். அவள் வேறு ஊர் சென்று ஒரு காமக் களியாட்டக் கூடம் நடத்தி வந்தாள். அங்கு வேலைக்காரனானான், அவள் பெற்றெடுத்த 'டிரம்சன்'.

     தாயிடம் மகன் பணியாள்! தாய் அறிவாள் அந்தப் பணியாள் தன் மகன் என்பதை. அவன் அறியான், எஜமானி தன் தாய் என்பதை.

     மகன் என்ற பாசம், அன்பு, துளியாவது அந்த வெள்ளை மாதுக்கு இருந்ததோ? இருந்தால், அவனைக் கடுமையாக மட்டுமல்ல, கேவலமான முறையிலும் வேலை செய்யச் சொல்லிக் கட்டளையிட்டிருப்பாளா! மாடாக உழைத்து வந்தான்! நாய்போல நடத்தப்பட்டான்; பெற்றவளால். ஏன்? அவள் ஒரு வெள்ளைமாது; இவனோ கருநிறத்தான்; நீக்ரோ! தன் களியாட்டக் கூடத்தில் வேலை பார்த்து வந்த ஒரு நீக்ரோ கிழவியின் மகனே, 'டிரம்சன்' என்று சொல்லி வைத்தாள்.

     கடைசிக் கட்டத்தில், மரணப்படுக்கையில் இருந்தபோது, உண்மையைக் கூறினாளாம்; 'அம்மா!' என்று ஒரு தடவை கூப்பிடும் 'உரிமை'யை வழங்கினாளாம்.

     இந்த நிலையில் தள்ளப்பட்டிருந்த நீக்ரோ இனத்தவரில் ஒருவன் அமெரிக்க அதிபதி ஆகிவிட்டதால், நிற வெறியர் அதிர்ச்சி அடைந்திடாமலிருக்க முடியுமா!

     டில்மன், பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கிறான். கண்டனம்! குமுறல்! மிரட்டல்! எரிச்சல்! ஏளனம்; எச்சரிக்கை! இவைகளே மிகுதியாகக் காணப்பட்டன! படித்த டில்மன் மனம் என்னபாடு பட்டிருக்கும்! கர்த்தரே! என்னைக் கருப்பனாகவும் படைத்து, அதிபதியும் ஆக்கி, இத்தனைக் கண்டனமும் என் தலையில் விழவைக்க வேண்டுமா! என்று மனம் உருகித் துதித்திடாமல் இருந்திருக்க முடியுமா?

     இனத்தின் மீது வீசப்பட்ட இழிவு பெருமளவு தன் மீது விழாதபடி, ஒரு தகுதியை உழைத்துப் பெற்றுக் கொண்டு, நிம்மதியாக வாழ்ந்து வந்தான்; எதிர்பாராத முறையில், அதிபதி ஆக்கப்பட்டதால், வெள்ளை இனத்தவரின் வெறுப்பை அல்லவா பெற்றிட வேண்டியதாயிற்று. முள்முடி!

     முற்போக்குக் கருத்தினைப் பரப்பிடும் ஓரிரு ஏடுகள், நிறபேதம் பார்க்கக் கூடாது, தகுதி திறமை பற்றி மட்டுமே பார்க்க வேண்டும், டில்மன் நீக்ரோவாக இருந்தால் என்ன, அமெரிக்கன், வழக்கறிஞர் துறையில் பெயர் பெற்றவன், நல்ல இயல்பினன், ஆகவே அவனுடைய ஆட்சி சிறப்பாகவே அமையும்; அனைவரும் ஆதரவு அளித்திட வேண்டும் என்று எழுதியிருந்த அந்தப் பாலைவன மலர் எழிலாக இருந்தது கருதி டில்மன் மகிழ்ச்சியுற்றான்; ஆனால் மறுகணமே அத்தகைய இதழ்கள், அமெரிக்க மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவை அல்ல என்ற உண்மை உள்ளத்தைத் தாக்கிற்று. செல்வாக்குப் படைத்த பத்திரிகைகளோ? நெருப்பையும் நாராசத்தையும் வார்த்தைகளாக்கி எழுதின! உண்மை அமெரிக்கா இதில்தான் தெரிந்தது - இதை எதிர்த்து நின்று வெற்றி பெற வேண்டும்; எதிர்ப்பதாக அறிவிக்காமலே இந்த நிலை டில்மன் பெற்றான்.

     டில்மன் குடியரசுத் தலைவரானது சட்டப்படி மரபின்படி என்பதால், ஒப்புக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்கள் கூட, எந்தச் சிறிய தவறு செய்தாலும் போதும், தன் மீது பாய்ந்து தாக்கித் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்பது புரிந்தது. நடுக்கம் பிறந்தது.

     தவறுகள் செய்திடும் தலைவர்களைக் கூடத் தாங்கிக் கொள்வார்கள், ஆனால் ஒரு நீக்ரோ! தலைவன் ஆகி, அவன் தவறுகளையும் செய்தால், எப்படி தாங்கிக் கொள்வார்கள்! எரிமலை வெடிக்கும்.

     எரிமலை குமுறிற்று! வெள்ளை இனத்தின் உரிமை மறுக்கப் பட முடியாத ஒன்று என்பதிலே அழுத்தமான நம்பிக்கையும் நிறவெறியும் கொண்ட இதழாசிரியன் ஒருவன், கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நின்றான், இந்தக் கருநிறத்தானை வெள்ளை மாளிகையிலிருந்து விரட்டி அடித்தே தீருவேன் என்று!

     சட்டம், மரபு, முறை என்று எதை எதையோ கருதிக் கொண்டுதானே இந்தக் கருநிறத்தானை கொலு மண்டபத்தில் அமரச் செய்தீர்கள்; அந்தச் சட்டமே தவறு! அதிலே ஓட்டை இருக்கிறது! அந்த நியமனமே செல்லாது; சட்ட நிபுணர் கூறுகிறார்; டில்மன் குடியரசுத் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்; ஆகிவிடவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வரையில் டில்மன் வேலை பார்க்கலாம்; அவ்வளவுதான்; ஆகவே உடனடியாகக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும்; அது முடிந்ததும், இவனை வெளியேற்ற வேண்டும்; என்று அவன் வாதிடலானான். அரசு அமர்த்தியிருந்த சட்ட நிபுணன் அதற்கு ஆதரவான சட்ட நுணுக்கங்களை விவரிக்கலானான். அந்த விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த பேரதிகாரிகள், டில்மனுக்கு அடுத்தபடியில் இருந்தவர்கள், அந்த இதழாசிரியன் கூறிய ஏற்பாட்டுக்கு இணங்க மறுத்தனர்; நிறவெறி கூடாது. நியாயம் அல்ல என்பதால் அல்ல. வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர் ஆட்சி செய்தால் என்ன என்பதால் அல்ல; வழக்காடப் போதுமான ஆதாரம் இல்லை என்பதால்!!

     ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்த அந்த இதழாசிரியன் தன் பேனாமுனையினாலேயே டில்மனைக் குத்திக் கொடுமை செய்து, அவனே மிரண்டோடும்படிச் செய்திடத் திட்டமிட்டான். தொடர்ந்து தொல்லைகளை உருவாக்கியபடி இருந்தான். ஆனால் டில்மன் கலங்கவில்லை. வெள்ளையர் என்னைவிட எந்த வகையில் மேலானவர், கருநிறம் எந்த வகையில் தாழ்வானது என்றெல்லாம் வாதாடவுமில்லை, வம்புகள் பேசவுமில்லை. ஒரேவித உறுதியைத்தான் தெரிவித்தான், நான் சட்டப்படி குடியரசுத் தலைவராக அமர்ந்திருக்கிறேன்; என் கடமையைச் செய்து வருவேன்; நான் எந்த இனம், என்ன நிறம் என்பது பற்றிய விவாதம் பொருளற்றது; நான் அமெரிக்கக் குடியரசுத் தலைவன்! இது டில்மன் கொண்ட உறுதி; கூறிய உறுதி என்றுகூடச் சொல்வதற்கில்லை.

     தம்பி! நாட்டிலே ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஆக்கிவைத்துவிட்டால், பிறகு ஓர் நாள் அவர்களிலே ஒருவன், எக்காரணம் பற்றியோ, 'உயர் பதவி'யில் அமர்ந்துவிட்டால், தம்மை உயர்வகுப்பு என்று எண்ணிக் கொள்பவர்கள், அவனுக்குக் கீழே வேலை செய்பவர்களாக இருப்பினும், அவன் நமக்குக் கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி, விருப்பம் அறிந்து நடந்து கொள்ளத்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். டில்மன், குடியரசுத் தலைவராக இருக்கட்டும்; சுவையைப் பெறட்டும். வெள்ளை மாளிகையில் உலவட்டும்! ஆனால், எமது விருப்பம் அறிந்து நடந்து கொண்டு வர வேண்டும்; சுய சிந்தனை, தனி நடவடிக்கை, புதிய போக்கு துளி தலை தூக்கினாலும், தூக்கி வெளியே எறிந்து விடுவோம் என்றுதான் அமைச்சர் நிலையினர் கருதிக் கொண்டனர். டில்மன் உயர் மண்டபத்தில் அமரட்டும், அதன் தகத் தகாயத்தைக் கண்டு களிக்கட்டும், ஆனால் தன் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நம் குறிப்பறிந்து நடந்து கொள்ள வேண்டும்... மீறினால்...

     டில்மன் அலங்கரிக்கப்பட்ட ஒரு அடிமையாக இருந்து வர வேண்டும் என்று விரும்பினார்கள்; குறிப்பும் காட்டினார்கள்.

     வெள்ளை மாளிகையிலே நுழைந்த கருநிறத்தான், தன் உண்மையான 'எஜமானர்கள்' யார் என்பதை அறிந்து அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

     அவர்களின் எண்ணத்தின்படி நடந்துகொண்டால், குடியரசுத் தலைவர் என்ற நிலையையே கேலிக்கூத்து ஆக்குவதாகிவிடும்.

     அவர்களின் எண்ணத்துக்கு மாறாக நடந்தால், பதவி பறிபோய்விடும்!

     பதவி பறிக்கப்பட்டு விடுவது கூட அல்ல பயமளிக்கத்தக்கது; ஒரு கருநிறத்தவனால், அத்தனை உயரிய பதவியைச் சரியான முறையிலே நடத்திச் செல்ல முடியவில்லை! என்ற பழி சுமத்தப்படும்; இனத்துக்கே இழிவு ஏற்படும்.

     ஆக தலையாட்டியாகவும் இருக்கக்கூடாது, தன்னிச்சையாகவும் நடந்து கொள்ளக்கூடாது. அப்படியானால் எந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும்?

     டில்மனுக்கு மிகவும் வேண்டியவர் கீர்த்தி வாய்ந்த ஒரு வழக்கறிஞர்; வெள்ளையர் இனம்; ஆனால் நிறவெறி அற்றவர். அவருடன் டில்மன் பேசுகிற ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அப்போது இந்தப் பிரச்சினை எழுகிறது. டில்மன் அந்தப் பேச்சின்போது வெளியிட்ட ஒரு கருத்து, தம்பி! படிக்கும்போது, கண்கலங்க வைக்கிறது. நண்பருக்கு உற்சாகமூட்ட, உறுதி பெற்றிட வைக்க, அந்த வெள்ளை இன வழக்கறிஞர் கூறுகிறார், "டில்மன்! ஏன் கலக்கம்? உன் நிறம் கருப்பாக இருந்தால் என்ன! நீ ஒரு மனிதன்!" என்று கூறுகிறார், மனித மேம்பாடு என்பது இனம், மதம், நிறம் ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டது என்ற அருங்கருத்தினை விளக்கிடும் முறையில். அப்போது டில்மன் வருத்தம் தோய்ந்த முறையில் "நண்பரே! என் நிறம் கருப்பு எனினும் நான் மனிதன்! அந்த உணர்வைப் பெற வேண்டும் என்கிறீரே... எப்படி முடியும்... கருப்பர் மனிதரல்லவே..." என்று கூறுகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர்! அதிலே ஐயமில்லை!! ஆனால் கருப்பர், மனிதரா? இல்லையா!! - டில்மன் கூறுவது அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுக்கிடந்த மனப்போக்கை அப்படியே எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. மனதை உருகச் செய்திடும் நிலை; ஆனால் உண்மை! அமெரிக்க நிறவெறியர், கருப்பரை மனிதர் என்று ஒப்புக் கொள்வதில்லை; அவர்கள் அடிமைகள் அல்ல என்று சட்டம் வந்த பிறகும்! அந்த சட்டம் வருவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் தீர்ப்பே அளித்திருக்கின்றன, நீக்ரோக்கள் மனிதர் அல்ல; வெறும் உடமைகள் என்பதாக.

     1781-ம் ஆண்டு, ஒரு வழக்கு நடைபெற்றது. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜமய்க்காவுக்கு 400 நீக்ரோக்கள் அடிமைகளாக விற்பதற்காகக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டார்கள். வழியிலே பலருக்கு நோய் கண்டு விட்டது. கப்பல் தலைவன் நோயால் பாதிக்கப்பட்ட நீக்ரோக்களில் 132 பேர்களை (உயிரோடு) கடலிலே எறிந்துவிட்டு, மற்றவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்ததுடன் கடலிலே எறியப்பட்ட 132 நீக்ரோக்களின் மார்க்கட் மதிப்புக்கு ஏற்ற பணத்தை இன்ஷியூரன்ஸ் கம்பெனிதான் கட்டித் தீர வேண்டும் என்று வழக்குத் தொடுத்தான். அதற்கு அவன் கூறிய வாதம் தம்பி! இப்போது நமது மக்களுக்குக் காட்டுமிராண்டிப் பேச்சாகப்படும்; கொண்டு செல்லும் சரக்கிலே கெட்டுப்போன பகுதிகளை அப்புறப்படுத்தி விடுவதன் மூலமே மற்ற சரக்கைக் கெடாதபடி பாதுகாத்திட முடியும் என்ற நிலையில் சரக்கிலே ஒரு பகுதியை அப்புறப்படுத்த நேரிட்டால் அதற்கான மதிப்புள்ள பணத்தை இன்ஷியூரன்ஸ் கம்பெனி தர வேண்டும் என்ற 'விதி'யைக் காட்டினான் வாதமாக! உயிரோடு தூக்கி எறிகிறான் நூற்றுக்கு மேற்பட்ட நீக்ரோக்களை, பதறப்பதற; ஈவு இரக்கமின்றி; வழக்குமன்றத்திலே அவன் படுகொலை செய்தான் என்று அல்ல, சரக்கை இழந்ததற்கு அவனுக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று வழக்கு! கேட்டனையா, தம்பி! இந்த விபரீதத்தை. கேளேன் முழுவதையும், அட கொலைகாரா! நூறு பேர்களைப் படுகொலை செய்த பாதகனா நீ! உன்னைச் சித்திரவதை அல்லவா செய்ய வேண்டும், உன்னைப் போன்ற மனிதர்கள், கடவுளின் குழந்தைகள், அவர்களைக் கடலிலே தூக்கி எறிந்த காதகனே! உன்னை வெட்டித் துண்டுகளாக்கிக் கழுகுக்கு விருந்தளிக்க வேண்டும் என்றெல்லாம் நீதிபதி சீறிக் கூறினாரா? அதுதான் இல்லை!! கேட்கக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆயினும் என்ன செய்வது? ஆடுமாடுகள், குதிரைகள் கொண்டு செல்லப்படும் போது நோய் வந்துவிட்டால், நோயுற்றவைகளை அப்புறப்படுத்தி மற்றவற்றைக் காத்திடுவது போன்ற முறைப்படிதான் கப்பல் தலைவன் நடந்து கொண்டான். ஆகவே அவனுக்குக் கம்பெனி நஷ்ட ஈடு தரத்தான் வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீக்ரோ மனிதன் அல்ல! சரக்கு!! பொருள்!! உடைமை! நீதிமன்றத் தீர்ப்பு!

     டில்மன், கருப்பர், மனிதர் அல்லவே என்று கூறியபோது, இந்த வழக்கு அவருடைய மனக்கண் முன் நிழலுருவமாகத் தெரிந்திருக்கும் போலும்!

     அரசியல் தத்துவத்துக்கே வித்து அளித்த அரிஸ்டாடில், அடிமை எனும் சொல்லுக்குப் பொருள் அளிக்கும்போது உயிருள்ள கருவி, அடிமை என்றார்.

     டில்மன் ஒரு கருவி! யாருடைய கருவி? யாருக்குப் பயன்பட வேண்டிய கருவி? என்பதே பிரச்சினை என்று ஆகிவிட்டது. டில்மனைச் சூழ இருந்து வந்த அரசு அவையினர், வெள்ளையரின் விருப்பத்தை அறிந்து, அதற்குத் தக்கபடி பயன்பட்டுத் தீர வேண்டிய கருவி என்று உறுதியாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால் தங்கள் இனத்தவர் ஒருவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவரானார் என்ற உடன், மகிழ்ச்சியால் துள்ளினது மட்டுமல்ல, நீக்ரோ மக்கள் மனதிலே புதியதோர் நம்பிக்கை மலர்ந்தது. இனி நமது இன்னல் தீரும், இழிவு துடைக்கப்படும்; நிலை உயரும், வாழ்வு தழைக்கும்; வெள்ளை மாளிகையிலே நமது இனத்தவர்; இனி நம்மைக் கப்பிக் கொண்டுள்ள இருளை ஓட்டி வாழ்விலே புத்தொளி கண்டிட வழி பிறந்திடும் என்று திடமாக நம்பினர். அவர்களின் கண்களிலே எத்தனை ஒளி பூத்திருக்கும்! முகத்திலே எத்தகைய ஒளி மலர்ந்திருக்கும்! பேச்சிலே என்னவிதமான இன்பம் கலந்திருக்கும் என்பது பற்றி எண்ணிடும் போது இனிதாக விளங்குகிறதல்லவா, தம்பி!

     நாசரின் கரத்தை நமது அப்துல்காதர், சென்னை மேயர் என்ற முறையில், குலுக்கி வரவேற்ற செய்தியை இதழில் படித்தபோது, எனக்குத் தம்பி நானே நாசரின் கரங்களைப் பிடித்துக் குலுக்கியது போன்ற ஒரு மகிழ்ச்சி உணர்ச்சி பிறந்தது.

     நாம் நகராட்சி மன்றத்தில் அரசோச்ச வாய்ப்புப் பெற்றது, நடைபெறவே முடியாத, அதிர்ச்சி தரத்தக்க, தலைகீழ் மாற்றமான நிகழ்ச்சியல்ல, மிகச் சாதாரணமான ஒரு அரசியல் நிகழ்ச்சி. அதற்கே நமக்கு அகமகிழ்ச்சி எத்துணை ஏற்பட்டது! டில்மன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரானது என்பது சாதாரணம் அல்ல; அடிமைப்படுத்தப்பட்ட இனம், இழிவாக நடத்தப்பட்டு வரும் இனம், நீக்ரோ இனம்; அதிலே ஒருவர் எஜமானர்கள் என்ற நிலையில் உள்ள வெள்ளையர்களும் அடங்கி நடந்தாக வேண்டிய 'அதிபர்' நிலை பெறுவது என்றால், மகிழ்ச்சி, கொந்தளிப்பாக அல்லவா இருக்கும்!

     டில்மன் குடியரசுத் தலைவராகிவிட்டதால், ஒரே வரியில், தங்கள் இழிவுகளைப் போக்கிவிட முடியும் என்று நம்பினர், கருநிறத்தவர்.

     டில்மன் இதனை அறியாமலிருந்திருக்க முடியாது.

     கதிர் குலுங்குவது காணும் உழவன் மனம் மகிழ்ச்சியால் துள்ளுவதுபோலத் தன் இனத்தவர் இருப்பார்கள் என்பதை உணர்ந்தார்; புன்னகை பூத்ததா? இல்லை! பெருமூச்சு!

     அப்பா! அப்பா எனதருமை அப்பா! என் வாழ்த்துக்கள்! பாராட்டுதல்கள்! இங்கு ஒரே கொண்டாட்டம்! கோலாகலம்! எல்லோரும் என்னை வாழ்த்துகிறார்கள்! வந்து வந்து பார்க்கிறார்கள், புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள், நமது இனத்தவர் ஒரே ஆனந்தத் தாண்டவ மாடுகிறார்கள்! பல்கலைக் கழகமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது!

     தொலைபேசி தந்திடும் இந்தத் தேன் துளிகள் செவியிலே பாய்கின்றன. டில்மன் கேட்கிறார்? இன்பமாகத்தான் இருக்கிறது; இனிப்பான பேச்சுதான்.

     சரி! சரி! சந்தோஷம்!

     அப்படியா ஓஹோ!

     நல்லது! ஆமாம்! சரி, சரி.

     இப்படிப் பதில் பேசுகிறார் டில்மன்.

     மகிழ்ச்சிக் கொந்தளிப்புடன் பேசுபவன், டில்மன் மகன், கல்லூரி மாணவன்!!

     இருக்குமல்லவா மகிழ்ச்சி, தந்தை, நாட்டை ஆளுந் தலைவராக அமர்ந்திருக்கிறார் என்பதால். எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய 'வாய்ப்பா' இது, வெள்ளை மாளிகையில் அதிபராக அமருவது! அதிலும் ஒரு நீக்ரோவுக்கு அந்த வாய்ப்பு!

     மகன் பேச்சிலே களிப்பு, பெருமிதம் ததும்பிடுவது தெரிகிறது. என் மகன் மகிழ்கிறான்! பெருமிதம் கொண்டுள்ளான்! நேற்று வரையில் அவன் எத்தனையோ ஆயிரம் மாணவர்களிலே ஒருவன்; அதிலும் ஒரு நீக்ரோவின் மகன். கருப்பன்! இன்று? அவன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் மகன்! பெருமிதம் கொள்ளத்தானே செய்வான், தம்பி! அந்த மாணவன் பெற்ற மகிழ்ச்சியை மாய்த்திட விருப்பம் எழவில்லை.



வெள்ளை மாளிகையில் : 1 2 3 4 5 6 7 8 9 10