அந்தாதி நூல்கள்

     அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது 'முடிவு' என்றும் ஆதி என்பது 'முதல்' என்றும் பொருள்படும். முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.

     அந்தாதி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே காணப்படுவது. இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர். தமிழ் இலக்கியப் பரப்பில் அந்தாதித் தொடை அமைப்பே அந்தாதிச் செய்யுள் அமைப்பிற்கு வழி காட்டியது எனலாம். அந்தாதி அமைப்பு, மனப்பாடம் செய்வதற்கும் எளிதாக நினைவு கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் புலவர்களால் அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன.

ஒலியந்தாதி (ஒலி ஈற்றுமுதலி)
பதிற்றந்தாதி (பதிற்ற ஈற்றுமுதலி)
நூற்றந்தாதி (பதிற்ற ஈற்றுமுதலி)
கலியந்தாதி (கலி ஈற்றுமுதலி)
கலித்துறை அந்தாதி (கலித்துறை ஈற்றுமுதலி)
வெண்பா அந்தாதி (வெண்பா ஈற்றுமுதலி)
யமக அந்தாதி (யமக ஈற்றுமுதலி)
சிலேடை அந்தாதி
திரிபு அந்தாதி
நீரோட்ட யமக அந்தாதி

     சங்க இலக்கியங்களிலேயே அந்தாதி அமைப்பு உண்டு. பதிற்றுப்பத்து நான்காம் பத்தினை இதற்குச் சான்றாகக் கூறலாம். இன்று கிடைக்கும் அந்தாதி இலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டது, காரைக்கால் அம்மையார் பாடிய 'அற்புதத் திருவந்தாதி' ஆகும்.

     சைவத்தின் 12 திருமுறைகளில் 11-ஆம் திருமுறையில் மட்டும் 8 அந்தாதி நூல்கள் அடங்கியுள்ளன. பதினோராம் திருமுறையை ‘அந்தாதி மாலை’ என்று கூறும் வழக்கு உண்டு. 11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்

1. அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்
2. சிவபெருமான் திருவந்தாதி - கபிலதேவ நாயனார்
3. சிவபெருமான் திருவந்தாதி - பரணதேவ நாயனார்
4. கயிலைபாதி காளத்தி பாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
5. திருவேகம்பமுடையார் திருஅந்தாதி - பட்டினத்தடிகள்
6. திருத்தொண்டர் திருஅந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
7. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
8. பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்

     ஆழ்வார்களில் தலைசிறந்த நம்மாழ்வாரும் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும் அந்தாதித் தொடையில் அமைத்துள்ளார்.

     மாணிக்கவாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகியவற்றிலும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களைக் காண முடியும். இவை தவிர பிரபந்த வகையைச் சேர்ந்த நான்மணிமாலை, இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணிமாலை, கலம்பகம் என்பவை அந்தாதியாக அமைகின்றன.

     19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றின. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர்.

புகழ் பெற்ற அந்தாதி நூல்கள்

முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார்
இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார்
கந்தரந்தாதி - அருணகிரிநாதர்
அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்
திருக்குறள் அந்தாதி - இராசைக் கவிஞர்
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - அதிவீரராம பாண்டியர்