சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 2 ...

16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி,
நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்,
துஞ்சுமரக் குழாஅம் துவன்றி, புனிற்று மகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு, 5
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்,
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
மரம் கொல் மழ களிறு வழங்கும் பாசறை,
நீடினை ஆகலின், காண்கு வந்திசினே:
ஆறிய கற்பின், அடங்கிய சாயல், 10
ஊடினும் இனிய கூறும் இன் நகை,
அமிர்து பொதி துவர் வாய், அமர்த்த நோக்கின்,
சுடர் நுதல், அசைநடை உள்ளலும் உரியள்;
பாயல் உய்யுமோ-தோன்றல்! தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும் பொன் 15
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும், கொளாலும் வல்லோய்! நின்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே? 20

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துயிலின் பாயல்

17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே-
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்-
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை, 5 ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின், 10 அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம்படு வியன் பணை

18. கொடைச் சிறப்பு

உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!
வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,
ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல், 5
கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!
பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்-
மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,
மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி, 10
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே!

துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கூந்தல் விறலியர்

19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்
கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப,
ஒண் பொறிக் கழற் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5
உருவச் செந் தினை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,
கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச,
வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து,
அவ் வினை மேவலை: ஆகலின், 10
எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற
அரிது பெறு பாயற் சிறு மகிழானும்
கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய
நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு
யார் கொல்? அளியை- 15
இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து;
நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின; பழனம் தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து, 20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த,
'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை
நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி, 25
காணுநர் கை புடைத்து இரங்க,
மாணா மாட்சிய மாண்டன பலவே!

துறை : பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வளன் அறு பைதிரம்

20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்

'நும் கோ யார்?' என வினவின், எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று,
கடம்பு முதல் தடிந்த கடுஞ் சின முன்பின்,
நெடுஞ்சேரலாதன்; வாழ்க அவன் கண்ணி! 5
வாய்ப்பு அறியலனே, வெயில் துகள் அனைத்தும்,
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே;
கண்ணின் உவந்து, நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே,
கனவினும்; ஒன்னார் தேய, ஓங்கி நடந்து, 10
படியோர்த் தேய்த்து, வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற,
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து,
புலவர் ஏத்த, ஓங்கு புகழ் நிறீஇ,
விரிஉளை மாவும், களிறும், தேரும், 15
வயிரியர், கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
நெடு மதில், நிலை ஞாயில்,
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை, அட்டு மலர் மார்பன்; 20
எமர்க்கும், பிறர்க்கும், யாவர்ஆயினும்,
பரிசில் மாக்கள் வல்லார்ஆயினும்,
கொடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்;
மன் உயிர் அழிய, யாண்டு பல மாறி,
தண் இயல் எழிலி தலையாது ஆயினும், 25
வயிறு பசி கூர ஈயலன்;
வயிறு மாசு இலீயர், அவன் ஈன்ற தாயே!

துறை : இயல் மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : அட்டு மலர் மார்பன்

பதிகம்

மன்னிய பெரும் உகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்-
அமைவரல் அருவி இமையம் விற் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,
நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,
அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு,
பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்-
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்: புண் உமிழ் குருதி, மறம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டு யாண்டு வீற்றிருந்தான்.

இரண்டாம் பத்து முற்றும்