(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)

மூன்றாம் பாகம்

3. சோதன

     கப்பல்களைக் கரையோரமாகக் கொண்டு போய் நிறுத்தினர்; பிரயாணிகளும் இறங்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஸ்ரீ எஸ்கோம்பு, காப்டனுக்கு ஒரு சமாசாரம் சொல்லியனுப்பியிருந்தார்: வெள்ளைக்காரர்கள் என்மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் என்றும், அதனால் என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்றும், நானும் என் குடும்பத்தினரும் இருட்டிய பிறகு கப்பலிலிருந்து இறங்கும்படி சொல்லுமாறும், அப்பொழுது துறைமுக சூப்பரிண்டெண்டென்டு ஸ்ரீ டாட்டம், எங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்ப்பார் என்றும் சொல்லி எச்சரித்தார். அப்படியே செய்வதாக நானும் ஒப்புக்கொண்டேன். அரை மணி நேரம்கூட ஆகியிராது. ஸ்ரீ லாப்டன், காப்டனிடம் வந்தார். அவர் சொன்னதாவது: “ஸ்ரீ காந்திக்கு ஆட்சேபம் இல்லையென்றால் அவரை என்னுடன் அழைத்துப்போக விரும்புகிறேன். ஸ்ரீ எஸ்கோம்பு உங்களுக்குச் சொல்லியனுப்பியிருப்பதை நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை. கப்பல் ஏஜெண்டான கம்பெனியின் சட்ட ஆலோசகன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்”.

     பிறகு அவர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார்: “நீங்கள் பயப்படவில்லையானால், நான் ஒரு யோசனை கூறுகிறேன். ஸ்ரீமதி காந்தியும் குழந்தைகளும் ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டிற்கு, வண்டியில் முன்னால் போகட்டும். அவர்களுக்குப் பின்னால் நீங்களும் நானும் நடந்தே போவோம். இரவில் திருடனைப்போல் நகருக்குள் நீங்கள் பிரவேசிப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. உங்களைத் துன்புறுத்தி விடுவார்கள் என்று அஞ்சுவதற்கு இடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இப்பொழுது எல்லாம் அமைதியாக இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கலைந்து போய்விட்டனர். ஆனால், எப்படியும் நீங்கள் ஒளிந்துகொண்டு நகருக்குள் வரக்கூடாது என்று மாத்திரம் நான் உறுதியாக எண்ணுகிறேன்.” இதற்கு நான் உடனே ஒப்புக்கொண்டேன். என் மனைவியும் குழந்தைகளும் வண்டியில் பத்திரமாக ஸ்ரீ ருஸ்தம்ஜியின் இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டனர். காப்டனின் அனுமதியின் பேரில் ஸ்ரீ லாப்டனுடன் நான் கப்பலிலிருந்து இறங்கினேன். துறைமுகத்திலிருந்து ஸ்ரீ ருஸ்தம்ஜி வீடு இரண்டு மைல் தூரம்.

     நாங்கள் கீழே இறங்கியதும், சில சிறுவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். “காந்தி, காந்தி” என்று சப்தம் போட்டனர். இதைக் கேட்டதும் ஐந்தாறு பேர் அங்கே ஓடி வந்தார்கள். அவர்களும் சேர்ந்து கூச்சல் போட்டனர். கூட்டம் பலத்துவிடக் கூடும் என்று ஸ்ரீ லாப்டன் பயந்தார். பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூப்பிட்டார். ரிக்ஷாவில் ஏறுவது என்பதே எனக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. அப்படி ஏறியிருந்தால் அதுவே எனக்கு முதல் அனுபவமாக இருந்திருக்கும். ஆனால், நான் ரிக்ஷாவில் ஏறச் சிறுவர்கள் விடவில்லை. ரிக்ஷாக்காரனைக் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். அவன் ஓட்டம் எடுத்துவிட்டான். நாங்கள் போக ஆரம்பித்தோம். கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. மேற்கொண்டும் போக முடியாத அளவுக்குக் கூட்டம் பெருகிவிட்டது. முதலில் ஸ்ரீ லாப்டனைப் பிடித்து அப்புறப்படுத்தி எங்களைத் தனித் தனியாகப் பிரித்துவிட்டனர். பிறகு என்னைக் கற்களாலும் அழுகிய முட்டைகளாலும் அடித்தார்கள். ஒருவர் என் தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண்டார். மற்றவர்கள் என்னை அடிக்கவும் உதைக்கவும் ஆரம்பித்தனர். உணர்வு இழந்து சோர்ந்து விட்டேன். கீழே விழுந்து விடாமல் இருக்க ஒரு வீட்டின் முன்புறக் கிராதியைப் பிடித்துக் கொண்டேன். சற்று மூச்சுவிடலாம் என்று அங்கே நின்றேன். ஆனால், முடியவில்லை. அங்கே வந்ததும் என்னை முஷ்டியால் குத்தினர்; அடித்தனர். எனக்குத் தெரிந்தவரான போலீஸ் சூப்பரிண்டெண்டென்டின் மனைவியார் அப்பக்கம் வந்தார். அந்த வீரப் பெண்மணி என்னிடம் வந்தார். அப்பொழுது வெயில் இல்லை என்றாலும், தம் கைக்குடையை விரித்துக் கொண்டு எனக்கும் கூட்டத்திற்கும் நடுவில் நின்றுகொண்டார். ஜனக்கூட்டத்தின் கோப வெறியை இது தடுத்தது. போலீஸ் சூப்பிரிண்டெண்டென்டான ஸ்ரீ அலெக்ஸாண்டரின் மனைவிக்குத் துன்பம் இழைக்காமல் அந்த வெறியர்கள் என்னை அடிப்பது சிரமம் ஆகிவிட்டது.

     இதற்கு மத்தியில் இச்சம்பவத்தைப் பார்த்த ஓர் இந்திய இளைஞர், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். என்னைச் சுற்றி நின்று கொண்டு, நான் போக வேண்டிய இடத்தில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வருமாறு கூறிப் போலீஸ் சூப்பரிண்டெண்டென்டான ஸ்ரீ அலெக்ஸாண்டர், போலீஸ்காரர்களை அனுப்பினார். நல்ல சமயத்தில் அவர்களும் வந்து சேர்ந்தனர். போலீஸ் ஸ்டேஷன், நாங்கள் போகும் வழியில் இருந்தது. நாங்கள் அங்கே போனதும், ஸ்டேஷனிலேயே பத்திரமாகத் தங்கிவிடுமாறு சூப்பரிண்டெண்டென்டு கூறினார். அவர் யோசனைக்கு நன்றி கூறினேன். ஆனால், அங்கே தங்க மறுத்துவிட்டேன். “தங்கள் பிழையை உணரும்போது அவர்கள் சாந்தம் அடைந்துவிடுவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றேன். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன், மேற்கொண்டு எவ்விதத் துன்பமும் இல்லாமல் ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டை அடைந்தேன். உடம்பெல்லாம் இசிவு, ஊமைக்காயம் ஓர் இடத்தில் மாத்திரம் தோல் பெயர்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. அங்கே இருந்த கப்பலின் டாக்டர் தம்மால் சாத்தியமான எல்லா உதவிகளையும் செய்தார்.

     வீட்டிற்குள் அமைதியாக இருந்தது; ஆனால், வெளியிலோ வெள்ளையர், வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். இரவும் வந்து, ‘காந்தியை வெளியே அனுப்பு!’ என்று அந்த ஆவேசக்கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. நிலைமையை உடனே அறிந்துகொண்ட போலீஸ் சூப்ரிண்டெண்டென்டு, கூட்டம் கட்டுக் கடங்காது போய்விடாதபடி ஏற்கனவே வந்து சமாளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தை அவர் விரட்டவில்லை. அவர்களிடம் தமாஷ் செய்தே சமாளித்து வந்தார். என்றாலும், நிலைமை அவரும் கவலைப் பட வேண்டியதாகவே இருந்தது. பின்வருமாறு எனக்குச் செய்தி அனுப்பினார்: “உங்கள் நண்பரின் வீட்டையும் சொத்துக்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் பாதுகாக்க விரும்பினால், என் யோசனைப்படி மாறுவேடத்துடன் நீங்கள் வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்துவிட வேண்டும்.”

     இவ்விதம் ஒரே நாளிலேயே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு நிலைமைகளை நான் சமாளிக்க வேண்டியதாயிற்று. உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கற்பனையில் மாத்திரமே பயந்த ஸ்ரீ லாப்டன், என்னைப் பகிரங்கமாக வெளியில் வருமாறு யோசனை கூறினார். அந்த யோசனையை ஏற்று நடந்தேன். ஆபத்து முற்றும் உண்மையாகவே இருந்த சமயத்தில், மற்றொரு நண்பர் அதற்கு நேர்மாறான யோசனையைக் கூறினார். அதையும் ஏற்று நடந்தேன். என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதனால் அப்படிச் செய்தேனா, அல்லது என் நண்பரின் உயிருக்கும் சொத்துக்கும் என் மனைவி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட வேண்டாம் என்பதற்காக அப்படிச் செய்தேனா என்பதை யார் கூற முடியும்? மேலே கூறியது போல், முதலில், கூட்டத்தை நான் தைரியமாக எதிர்த்து நின்றது, பின்னால் மாறுவேடத்துடன் நான் தப்பியது ஆகிய இரண்டிலும் நான் செய்தது சரிதான் என்று யாரால் நிச்சயமாகச் சொல்ல முடியும்?

     நடந்து போய்விட்ட சம்பவங்களைக் குறித்து, அவை சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்குவது வீண் வேலை, அவைகளைப் புரிந்துகொள்ளுவதும், சாத்தியமானால் அவைகளிலிருந்து அனுபவம் பெறுவதும் பயன் உள்ளதே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஒருவர், இவ்வாறுதான் நடந்து கொள்ளுவார் என்று நிச்சயமாகச் சொல்லுவது கஷ்டம். அதோடு, ஒருவருடைய வெளிப்படையான காரியங்களிலிருந்து, அவருடைய குணத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டு அறிந்துவிட முடியாது என்பதையும் நாம் காணலாம். ஏனெனில், அவருடைய குணத்தைக் கண்டு அறிந்துவிட, அவருடைய வெளிப்படையான காரியங்கள் மாத்திரம் போதுமான ஆதாரங்கள் ஆகிவிடா.

     அது எப்படியாவது இருக்கட்டும். தப்பிப் போய் விடுவதற்குச் செய்த ஏற்பாடுகளில் என் காயங்களை மறந்து விட்டேன். சூப்பரிண்டெண்டென்டின் யோசனைப்படி, இந்தியக் கான்ஸ்டபிளின் உடையைப் போட்டுக்கொண்டேன். ஒரு சட்டி மீது மதராஸி அங்கவஸ்திரத்தைச் சுற்றிக் கவசமாகத் தலையில் வைத்துக்கொண்டேன். என்னுடன் இரண்டு துப்பறியும் போலீஸார் வந்தனர். அவர்களில் ஒருவர், இந்திய வர்த்தகர் வேஷம் போட்டுக்கொண்டார். இந்தியரைப்போல் தெரிய வேண்டும் என்பதற்காக அவர், தம் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டார். மற்றொருவர் என்ன வேடம் போட்டுக் கொண்டார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு குறுக்குச் சந்தின் வழியாகப் பக்கத்துக் கடைக்குள் புகுந்தோம். அங்கே அடுக்கிக் கிடந்த சாக்குக் கட்டுகளின் ஊடேசென்று, அக் கடையின் வாசலை அடைந்தோம். அங்கிருந்து கூட்டத்திற்குள் புகுந்து, தெருக்கோடிக்குப் போனோம். அங்கே ஒரு வண்டி எங்களுக்குக்கென்று தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி, போலீஸ் ஸ்டேஷனை அடைந்தோம். எனக்கு அடைக்கலம் தருவதாக ஸ்ரீ அலெக்ஸாண்டர், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னதும், அதே போலீஸ் ஸ்டேஷன்தான். அவருக்கும் துப்பறியும் அதிகாரிகளுக்கும் நன்றி கூறினேன்.

     இவ்வாறு நான் தப்பி வந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீ அலெக்ஸாண்டர் ‘புளிப்பு ஆப்பிள் மரத்தில், கிழட்டுக் காந்தியைத் தூக்கில் போடு!’ என்று பாட்டுப்பாடி, அவர்களுக்குச் சுவாரஸ்யம் அளித்துக் கொண்டிருந்தார். நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டேன் என்பது தெரிந்ததும், அவர், பின்வரும் செய்தியைக் கூட்டத்தினருக்கும் வெளியிட்டார். “சரி நீங்கள் தேடும் ஆசாமி, பக்கத்துக் கடைவழியாகத் தப்பிப் போய்விட்டார். ஆகையால், இப்பொழுது நீங்கள் வீட்டுக்குப் போகலாம்”. இதைக் கேட்டுச் சிலர் கோபம் அடைந்தனர். மற்றவர்களோ சிரித்தனர். இக்கதையைச் சிலர் நம்பவே மறுத்துவிட்டனர்.

     சூப்பரிண்டெண்டென்டு கூறியதாவது: “நான் சொல்லுவதை நீங்கள் நம்பவில்லையென்றால், உங்கள் பிரிதிநிதியாக ஒருவரை அல்லது இருவரை நியமியுங்கள். அவர்களை வீட்டுக்குள் அழைத்துப் போக நான் தயார். அவர்கள் காந்தியை அங்கே கண்டுபிடித்து விட்டால் அவரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்கள் கண்டுபிடிக்கவில்லை யென்றால் நீங்கள் கலைந்து போய்விட வேண்டும். ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டை நாசப்படுத்த வேண்டும் என்பதோ, ஸ்ரீ காந்திஜியின் மனைவியையும் குழந்தைகளையும் துன்புறுத்த வேண்டும் என்பதோ உங்கள் நோக்கம் அல்ல என்று நம்புகிறேன்.”

     வீட்டைச் சோதிக்கக் கூட்டத்தினர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினார்கள். ஏமாற்றச் செய்தியுடன் அவர்கள் சீக்கிரமே திரும்பிவிட்டனர். கடைசியாகக் கூட்டமும் கலைந்தது. அவர்களில் பெரும்பாலானவர் சூப்பரிண்டெண்டென்டு சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்திருப்பதைப் பாராட்டினர். மற்றும் சிலரோ, ஆத்திரத்தினால் குமுறிக் கொண்டே போனார்கள்.

     காலஞ்சென்ற ஸ்ரீ சேம்பர்லேன், அப்பொழுது குடியேற்ற நாடுகளின் மந்திரியாக இருந்தார். என்னைத் தாக்கியவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடருமாறு நேட்டால் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு அவர் தந்தி கொடுத்தார். ஸ்ரீ எஸ்கோம்பு என்னைக் கூப்பிட்டனுப்பினார். எனக்கு ஏற்பட்ட காயங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாவது: “உங்கள் உடம்புக்கு மிகச் சொற்ப தீங்கு இழைக்கப்படினும் அதற்காக நான் வருந்தாமல் இருக்க முடியாது. இதை நீங்கள் நம்புங்கள். என்ன வந்தாலும் சரி என்று ஸ்ரீ லப்டனுடைய யோசனையை ஏற்கு கொள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் யோசனையை நீங்கள் கொஞ்சம் கவனித்திருப்பீர்களாயின், இந்தத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தே இரா என்பது நிச்சயம். அவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர நான் தயாராக இருக்கிறேன். நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்றே ஸ்ரீ சேம்பர்லேனும் விரும்புகிறார்.”

     அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “யார் மீதும் குற்றஞ்சாட்டி, வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. அவர்களில் இரண்டொருவரை நான் அடையாளம் கண்டுபிடிப்பதும் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தண்டனை அடையும்படி செய்வதால் என்ன பயன்? மேலும் அடித்தவர்களே குற்றஞ் செய்தவர்கள் என்று நான் கருதவில்லை. நேட்டால் வெள்ளையரைக் குறித்து, இந்தியாவில் இல்லாதது பொல்லாததை எல்லாம் நான் கூறி, அவர்களை அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் எண்ணும்படி செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு கூறப்பட்டதை அவர்கள் நம்பினார்கள் என்றால், அவர்கள் ஆத்திரம் அடைந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர்களைப் பற்றியும் நான் இப்படிக்கூறுவதை நீங்கள் அனுமதிப்பதாக இருந்தால், உங்களையும்தான் இதற்கெல்லாம் குற்றஞ் சொல்ல வேண்டும். மக்களைச் சரியான வழியில் நீங்கள் நடத்திச் சென்றிருக்கலாம். ஆனால், ராய்ட்டரின் செய்தியை நீங்களும் நம்பிவிட்டீர்கள். இல்லாததையெல்லாம் நான் கூறியிருப்பேன் என்று நீங்களும் எண்ணிக் கொண்டீர்கள். யார்மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. உண்மை தெரிந்ததும், தாங்கள் நடந்து கொண்டு விட்டதற்கு அவர்களே வருந்துவார்கள் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்.”

     “நீங்கள் கூறியதைத் தயவு செய்து எழுத்து மூலம் கொடுக்கிறீர்களா?” என்று ஸ்ரீ எஸ்கோம்பு கேட்டார். அவர் மேலும் கூறியதாவது: “ஏனெனில், அப்படியே நான் ஸ்ரீ சேம்பர்லேனுக்குத் தந்தி மூலம் அறிவித்துவிட வேண்டியிருக்கிறது. அவசரத்தில் நீங்கள் எதையும் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. திட்டமான ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், நீங்கள் விரும்பினால், ஸ்ரீ லாப்டனையும் மற்ற நண்பர்களையும் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒன்றை மாத்திரம் உங்களிடம் ஒப்புக்கொண்டு விடுகிறேன். உங்களைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ்சாட்டி, வழக்குத் தொடரும் உரிமையை நீங்கள் விட்டுக் கொடுத்து விடுவீர்களாயின், அமைதியை நிலைநாட்டுவதற்கு அதிக அளவு எனக்கு உதவி செய்தவர்கள் ஆவீர்கள். அதோடு உங்கள் பெருமையையும் உயர்த்திக் கொண்டவர்கள் ஆவீர்கள்”.

     “உங்களுக்கு நன்றி. நான் யாரையும் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. உங்களிடம் வருவதற்கு முன்னாலேயே இது சம்பந்தமாக நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்னைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ் சாட்டி, வழக்குத் தொடரக்கூடாது என்பது என் கொள்கை. என் தீர்மானத்தை இப்பொழுதே எழுத்து மூலம் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்.” இப்படிக் கூறி அவசியமான அறிக்கையை எழுதிக் கொடுத்தேன்.