(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)

நான்காம் பாகம்

3. அவமதிப்புக்கு உட்பட்டேன்

     அந்த அவமரியாதை என் மனத்தை அதிகமாக வருத்தியது. ஆனால், இதற்கு முன்னால் இத்தகைய அவமரியாதைகள் பலவற்றை சகித்திருக்கிறேனாகையால், அவைகளால் நான் பாதிக்கப்படாதவன் ஆகிவிட்டேன். எனவே, இப்பொழுது கடைசியாக ஏற்பட்ட இந்த அவமதிப்பையும் மறந்து விடுவதெனத் தீர்மானித்தேன். இவ்விஷயத்தில் விருப்பு வெறுப்பின்றிக் கவனித்து, எந்த வழி சரியெனத் தோன்றுகிறதோ அதன்படி நடப்பதென்றும் முடிவு செய்தேன்.

     ஆசியாக்காரர்கள் இலாகாவின் பிரதம அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. ஸ்ரீ சேம்பர்லேனை நானே டர்பனில் கண்டிருக்கிறேனாகையால், அவரைச் சந்திக்கப் போகும் தூது கோஷ்டியிலிருந்து என் பெயரை நீக்கிவிட வேண்டியது அவசியமாகிறது என்று அக்கடிதம் கூறியது. அக்கடிதத்தை என் சகாக்களினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தூது போவது என்ற யோசனையையே அடியோடு கைவிட்டு விடுவது என்று அவர்கள் அபிப்பிராயப் பட்டார்கள். அதனால், சமூகத்திற்கு ஏற்படக்கூடிய சங்கடமான நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.

     “ஸ்ரீ சேம்பர்லேனிடம் நீங்கள் உங்கள் குறைகளை எடுத்துக் கூறாது போனால், உங்களுக்குக் குறைகளே இல்லை என்று கருதப்பட்டுவிடும். எப்படியும் நாம் சொல்லப் போவதை எழுத்து மூலமே சொல்லப் போகிறோம். அதையும் நாம் தயாரித்திருக்கிறோம். அதை அவர் முன்பு நான் படிக்கிறேனா, வேறு ஒருவர் படிக்கிறாரா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமே அல்ல. ஸ்ரீ சேம்பர்லேன் இந்த விஷயத்தைக் குறித்து நம்மிடம் விவாதிக்கப் போவதில்லை. இந்த அவ மரியாதைக்கு உட்பட்டுத் தீரவேண்டியது தான் என்று எண்ணுகிறேன்” என்றேன்.

     நான் இவ்விதம் சொல்லி முடிப்பதற்குள் தயாப் சேத் பின்வருமாறு ஆத்திரத்தோடு கூறினார்: “உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை சமூகத்திற்கேற்பட்ட அவமரியாதை அல்லவா? நீங்கள் எங்கள் பிரதிநிதி என்பதை நாங்கள் எப்படி மறந்து விட முடியும்?”

     “உண்மையே. சமூகம்கூட இது போன்ற அவமரியாதைகளுக்கு உட்பட்டுவிட வேண்டியே இருக்கிறது. இதைத்தவிர நமக்கு வேறுவழி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டேன்.

     “என்ன வந்தாலும் வரட்டும். புதிதாக ஓர் அவமரியாதைக்கு நாம் உட்படுவானேன்? இதையும் விட மோசமானது எதுவும் நமக்கு நேர்ந்துவிடப் போவதில்லை. மேற்கொண்டும் நாம் இழந்து விடுவதற்கு நம்மிடம் இன்னும் ஏதாவது உரிமை பாக்கி இருக்கிறதா?” என்று கேட்டார் தயாப் சேத்.

     அது ரோஷமான பதில்தான். ஆனால், அதனால் என்ன பிரயோசனம்? இந்திய சமூகத்தினிடமுள்ள சக்தி இன்னது தான் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். நண்பர்களைச் சாந்தப்படுத்தினேன். அத்தூதுக் குழுவில் எனக்குப் பதிலாக இந்தியப் பாரிஸ்டரான ஸ்ரீ ஜார்ஜ் காட்பிரேயைச் சேர்த்துக் கொள்ளுமாறு யோசனை கூறினேன்.

     ஆகவே, ஸ்ரீ காட்பிரே தூதுக் குழுவுக்குத் தலைவராகச் சென்றார். ஸ்ரீ சேம்பர்லேன் தமது பதிலில், நான் தூதுக் குழுவிலிருந்து விலக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் சொன்னார். “திரும்பத் திரும்ப அதே பிரதிநிதி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை விடப் புதிதாக ஒருவர் இருப்பது நல்லதல்லவா?” என்று கூறி, இந்தியருக்கு ஏற்பட்டிருந்த மனப்புண்ணை ஆற்ற முயன்றார்.

     ஆனால், இவைகளினாலெல்லாம் காரியம் சரியாக முடிந்துவிடவில்லை. ஆனால், சமூகமும் நானும் செய்ய வேண்டிய வேலையையே இவை அதிகப்படுத்தின. நாங்கள் அடியிலிருந்து வேலையைத் தொடங்க வேண்டியிருந்தது. “நீங்கள் சொன்னதன் பேரில் தானே சமூகம் யுத்தத்தில் உதவி செய்தது! அதன் பலனை இப்பொழுது நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று சிலர் என்னைக் குத்திக் காட்டினார்கள். அதனால் நான் பாதிக்கப்பட்டுவிடவில்லை. “அப்பொழுது நான் கூறிய யோசனைக்காக இப்பொழுது நான் வருத்தப்பட வில்லை” என்றேன். “யுத்தத்தில் நாம் பங்கெடுத்துக் கொண்டதில் நாம் சரியான காரியத்தையே செய்தோம் என்பதை நான் இப்பொழுதும் கூறுகிறேன். அப்படிச் செய்ததில் நம் கடமையைத்தான் நாம் நிறைவேற்றினோம். கடமையை முன்னிட்டுச் செய்த பணிக்கு நாம் வெகுமதியை எதிர் பார்க்கக் கூடாது. என்றாலும்,எந்த நல்ல காரியமும் முடிவில் பலனளித்தே தீரும் என்பது என் திடமான நம்பிக்கை. நடந்து போனதை மறந்துவிட்டு நம் முன்னால் இப்பொழுது இருக்கும் வேலை என்ன என்பதைக் கவனிப்போம்” என்று நான் கூறியதை மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

     நான் மேலும் கூறியதாவது: “உண்மையைச் சொன்னால், நீங்கள் எந்த வேலைக்காக என்னை அழைத்திருந்தீர்களோ அந்த வேலை இப்பொழுது முடிந்துவிட்டது. நான் தாய் நாடு திரும்புவதற்கு என்னை நீங்கள் அனுமதிப்பது சாத்தியமே என்று இருந்தாலும் நான் டிரான்ஸ்வாலை விட்டுப் போகக் கூடாது என்று எண்ணுகிறேன். முன்போல நேட்டாலில் இருந்துகொண்டு என் வேலையைச் செய்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, இங்கிருந்து கொண்டே நான் அதைச் செய்து வரவேண்டும். ஓர் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் திரும்புவது என்று நான் இனியும் எண்ணிக் கொண்டிருப்பதற்கில்லை. டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக நான் பதிவு செய்து கொள்ள வேண்டியதே. இப்புதிய இலாகாவைச் சமாளித்துக்கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இதை நாம் செய்யவில்லை என்றால், சமூகம் அடியோடு கொள்ளையடிக்கப் பட்டு விடுவதோடு இந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப் பட்டும் விடும். ஒவ்வொரு நாளும் புதுப்புது அவமரியாதைகள் சமூகத்தின்மீது வந்து குவிந்து கொண்டும் இருக்கும். ஸ்ரீ சேம்பர்லேன் என்னைப் பார்க்க மறுத்ததையும், அந்த அதிகாரி என்னை அவமதித்ததையும், இந்தியச் சமூகம் முழுமைக்கும் இருந்து வரும் அவமதிப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கேவலம் நாயின் வாழ்வை நாம் நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கப் படுகிறோம். இதைச் சகித்துக் கொண்டிருக்கவே முடியாது.”

     எனவே, நான் வேலையைச் செய்துகொண்டு போக ஆரம்பித்தேன். பிரிட்டோரியாவிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் இருக்கும் இந்தியருடன் விஷயங்களை விவாதித்தேன். முடிவாக ஜோகன்னஸ்பர்க்கில் எனது அலுவலகத்தை அமைப்பது என்று தீர்மானித்தேன்.

     டிரான்ஸ்வால் சுப்ரீம் கோர்ட்டில் என்னை வக்கீலாகப் பதிவு செய்துகொள்ளுவார்களா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனால், வக்கீல்கள் சங்கம் என் மனுவை எதிர்க்கவில்லை. கோர்ட்டும் அங்கீகரித்துவிட்டது. தகுதியான இடத்தில் அலுவலகத்திற்கு அறைகளை அமர்த்திக் கொள்வது என்பது இந்தியருக்குக் கஷ்டமானதாகவே இருந்தது. ஸ்ரீ ரிச் என்பவர் அப்பொழுது அங்கே வர்த்தகராக இருந்தார். அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவருக்குத் தெரிந்த வீட்டுத் தரகர் ஒருவருடைய முயற்சியின் பேரில் நகரில் வக்கீல்கள் இருக்கும் பகுதியில் என் அலுவலகத்திற்குத் தகுதியான அறைகள் எனக்குக் கிடைத்தன. என் தொழில் சம்பந்தமான வேலையையும் தொடங்கினேன்.