(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)

நான்காம் பாகம்

41. கோகலேயின் தாராளம்

     இங்கிலாந்தில் எனக்கு நுரையீரலுக்குப் பக்கத்தில் ரணமாகி நான் நோயுற்றிருந்ததைக் குறித்து முன்பே கூறியிருக்கிறேன். சில நாட்களுக்கெல்லாம் கோகலே லண்டனுக்குத் திரும்பிவிட்டார். கால்லென்பாக்கும் நானும் தவறாமல் அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் யுத்தத்தைக் குறித்தே பேசுவோம். கால்லென்பாக், ஜெர்மனியின் நாட்டு அமைப்பு முழுவதையும் வெகு நன்றாக அறிந்திருந்தாலும் ஐரோப்பாவில் அதிகமாகச் சுற்றுப்பிரயாணம் செய்து இருந்தாலும், யுத்தம் சம்பந்தப்பட்ட பல இடங்களையும் பூகோளப் படத்தில் கோகலேக்குக் காட்டுவது வழக்கம்.

     எனக்கு இந்த நோய் வந்த பிறகு இதைக் குறித்துத் தினந்தோறும் பேசுவோம். எனது உணவுப் பரிசோதனைகள் அப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தன. அப்பொழுது நான் மற்றவைகளுடன் நிலக்கடலை, பழுத்த, பழுக்காத வாழைப்பழங்கள், எலுமிச்சம்பழம், ஆலிவ் எண்ணெய், தக்காளி, திராட்சைப் பழங்கள் ஆகியவைகளையும் சாப்பிட்டு வந்தேன். பால், தானியங்கள், பருப்பு வகைகள் முதலியவைகளை அடியோடு தள்ளிவிட்டேன்.

     டாக்டர் ஜீவராஜ மேத்தா எனக்கு வைத்தியம் செய்து வந்தார். பாலும் தானியங்களும் சாப்பிடும்படி என்னை அவர் வற்புறுத்தி வந்தார். ஆனால், அதற்குச் சம்மதிக்கப் பிடிவாதமாக மறுத்து வந்தேன். இவ்விஷயம் கோகலேயின் காதுக்கு எட்டியது. பழ உணவுதான் சிறந்தது என்று நான் கொண்டு இருந்த கொள்கையில் அவருக்கு அவ்வளவாக மதிப்பில்லை. என் தேக நிலைக்குச் சரியானது என்று டாக்டர் என்ன சொல்லுகிறாரோ அதை நான் சாப்பிடவேண்டும் என்றார் கோகலே.

     கோகலேயின் வற்புறுத்தலுக்கு நான் இணங்காமல் இருப்பதென்பது எனக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான் மறுதலிப்பதை அவர் ஒப்புக்கொள்ளாத போது அவ் விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க எனக்கு இருபத்து நான்கு மணி நேர அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அன்று மாலை நானும் கால்லென்பாக்கும் வீடு திரும்பிய போது என் கடமை என்ன என்பதைக் குறித்து விவாதித்தோம். என்னுடைய சோதனைகளில் அவரும் என்னுடன் ஈடுபட்டு வந்தார். அதில் அவருக்குப் பிரியமும் இருந்தது. ஆனால், என் தேக நிலைமைக்கு அவசியம் என்றிருந்தால் உணவுச் சோதனையைக் கைவிடுவது அவருக்கும் சம்மதமே என்பதைக் கண்டேன். ஆகவே, என் அந்தராத்மா இடும் ஆணைக்கு ஏற்ப இதில் எனக்கு நானே முடிவு செய்து கொள்ள வேண்டியிருந்தது.

     இரவெல்லாம் இந்த விஷயத்தைக் குறித்தே சிந்தித்தேன். உணவுச் சோதனையைக் கைவிடுவது என்றால் அத்துறையில் எனக்குள்ள கருத்துக்களை யெல்லாம் கைவிடவேண்டி வரும். ஆனால், அந்தச் சோதனைகளில் எந்தக் குறைபாடுகளையும் நான் காணவில்லை. இப்பொழுது பிரச்னையெல்லாம், கோகலேயின் அன்பான வற்புறுத்தல்களுக்கு எந்த அளவுக்கு நான் உடன்படுவது; என் தேக நிலையின் நன்மையை முன்னிட்டு என்னுடைய சோதனைகளை எந்த அளவுக்கு மாற்றிக் கொள்ளுவது என்பதே. கடைசியாக இதில் ஒரு முடிவுக்கு வந்தேன். முக்கியமாக ஆன்மிகத்தையே நோக்கமாகக் கொண்டு நான் கைக்கொண்ட உணவுச் சோதனைகளை மட்டும் பின்பற்றி வருவது; வேறு நோக்கம் கொண்டதான உணவுச் சோதனைகளை வைத்தியரின் ஆலோசனையின்படி விட்டு விடுவது என்பதே நான் செய்து கொண்ட முடிவு. பால் சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான நோக்கம் ஆன்மிகமானதேயாகும். பசுக்கள், எருமைகளின் மடிகளிலிருந்து கடைசிச் சொட்டு வரையிலும் பாலைக் கறந்து விடுவதற்குக் கல்கத்தாவில் மாட்டுக்காரர்கள் அனுசரித்த கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன. மாமிசம் எவ்விதம் மனிதனின் உணவல்லவோ, அதேபோல மிருகங்களின் பாலும் மனிதனின் உணவாக இருப்பதற்கில்லை என்ற ஓர் எண்ணமும் எனக்கு இருந்துவந்தது. ஆகையால், பால் சாப்பிடுவதில்லை என்ற என் தீர்மானத்தில் உறுதியுடன் இருந்துவருவது என்ற முடிவுடனேயே காலையில் படுக்கையிலிருந்து எழுந்தேன். இது என் மனத்திற்கும் அதிக ஆறுதலாக இருந்தது. கோகலேயிடம் போவதற்கே எனக்குப் பயமாக இருந்தது. ஆனால், என் தீர்மானத்தை அவர் மதிப்பார் என்று நம்பினேன்.

     மாலையில் கால்லென்பாக்கும் நானும் நாஷனல் லிபரல் கிளப்புக்குப் போய்க் கோகலேயைப் பார்த்தோம். அவர் கேட்ட முதல் கேள்வி, “டாக்டரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டீர்களா?” என்பதே.

     மரியாதையோடு, ஆனால் உறுதியோடு, நான் கூறியதாவது: “ஒன்றைத் தவிர மற்றவைகளிலெல்லாம் இணங்கிவிட நான் தயாராக இருக்கிறேன். அந்த ஒன்றைப்பற்றி மாத்திரம் என்னை வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். பாலையும், பாலிலிருந்து தயாரானவைகளையும், மாமிசத்தையும் மாத்திரம் நான் சாப்பிடமாட்டேன். இவைகளைச் சாப்பிடாததனால் நான் சாக நேருமாயின், அதற்கும் தயாராவது நல்லதே என்று கருதுகிறேன்.”

     “இதுவே உங்கள் முடிவான தீர்மானமா?” என்று கோகலே கேட்டார்.

     “வேறுவிதமான முடிவுக்கு நான் வருவதற்கில்லை என்றே அஞ்சுகிறேன். என்னுடைய இத்தீர்மானம் தங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் என்பதை அறிவேன் அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” என்றேன்.

     கொஞ்சம் மனவருத்தத்துடன், ஆனால் மிகுந்த அன்போடும் கோகலே கூறியதாவது: “உங்கள் தீர்மானம் சரி என்று நான் ஒப்புக் கொள்ளுவதற்கில்லை. இதில் ஆன்மிக அவசியம் எதுவும் இருப்பதாகவும் நான் கருதவில்லை. ஆனால், மேற்கொண்டும் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்.” இவ்விதம் என்னிடம் கூறிவிட்டு, டாக்டர் ஜீவராஜ மேத்தாவைப் பார்த்து அவர் சொன்னதாவது: “தயவுசெய்து இனி அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர் தமக்கென வகுத்துக் கொண்டிருக்கும் வரம்புக்கு உட்பட்டு அவருக்கு உணவைப் பற்றிய ஏதாவது யோசனை கூறுங்கள்.”

     என் தீர்மானத்தைத் தாம் ஒப்புக் கொள்ளுவதற்கில்லை என்றார், டாக்டர். என்றாலும், அவர் வேறு எதுவும் செய்வதற்கில்லை. பச்சைப் பயற்றுச் சூப்பில் கொஞ்சம் பெருங்காயம் போட்டுச் சாப்பிடும்படி அவர் எனக்கு யோசனை கூறினார். இதற்கு நான் சம்மதித்தேன். இரண்டொரு நாள் அதைச் சாப்பிட்டேன். ஆனால், எனக்கிருந்த வலி அதிகமாயிற்று. அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதைக் கண்டதும், திரும்பவும் பழங்களையும் கொட்டைகளையும் சாப்பிட ஆரம்பித்தேன். மேலுக்குச் செய்து வந்த சிகிச்சையை டாக்டர் தொடர்ந்து செய்துவந்தார். இதனால், வலி கொஞ்சம் குறைந்தது. ஆனால், என்னுடைய கட்டுப்பாடுகள் இடையூறாக இருந்தன என்று அவர் எண்ணினார். இதற்கிடையில் லண்டனில் அக்டோபர் மாத மூடுபனியைச் சகிக்க முடியாததனால் கோகலே தாய்நாட்டுக்குத் திரும்பினார்.