(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)

நான்காம் பாகம்

46. கட்சிக்காரர்கள் சகாக்களாயினர்

     நேட்டாலில் வக்கீல் தொழில் நடத்துவதற்கும், டிரான்ஸ்வாலில் அத்தொழிலை நடத்துவதற்கும் வித்தியாசம் உண்டு. நேட்டாலில் வக்கீல் தொழில் கூட்டானது. ஓர் அட்வகேட்டின் ஸ்தானத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பாரிஸ்டர், அட்டர்னியாகவும் அங்கே தொழில் நடத்தலாம். ஆனால், டிரான்ஸ்வாலிலோ பம்பாயில் இருப்பதைப்போல, அட்டர்னிகளுக்கும் அட்வகேட்டுகளுக்கும் உள்ள பொறுப்புக்கள் வெவ்வேறானவை. ஒரு பாரிஸ்டர், தம் இஷ்டப்படி அட்டர்னியாகவோ, அட்வகேட்டாகவோ தொழிலை நடத்தலாம். ஆகவே, நேட்டாலில் நான் அட்வகேட்டாக ஏற்றுக் கொள்ளப் பட்டேன். ஆனால், டிரான்ஸ்வாலில் அட்டர்னியாக இருக்க அனுமதிக்குமாறு கோரினேன். ஏனெனில், அட்வகேட் என்ற முறையில் நான் இந்தியருடன் நேரடியான தொடர்பு வைத்துக் கொள்ளுவதற்கில்லை. தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வெள்ளைக்கார அட்டர்னிகள் என்னை வக்கீலாக அமர்த்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.

     ஆனால், டிரான்ஸ்வாலில் கூட அட்டர்னிகள், மாஜிஸ்டிரேட்டுகளுக்கு முன்னால் ஆஜராகி விவாதிக்கலாம். ஒரு சமயம் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு மாஜிஸ்டிரேட்டின் முன்னால் நான் ஒரு வழக்கை நடத்திக்கொண்டிருக்கையில், என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்பதைக் கண்டுகொண்டேன். சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரித்தபோது அவர் திக்குமுக்காடியதைப் பார்த்தேன். ஆகவே, அந்த வழக்கின்மீது நான் விவாதிக்காமல் அவ்வழக்கைத் தள்ளி விடுமாறு மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். இதைப் பார்த்து எதிர்த்தரப்பு வக்கீல் ஆச்சரியப்பட்டுப் போனார். மாஜிஸ்டிரேட் திருப்தியடைந்தார். என்னிடம் பொய் வழக்கைக் கொண்டு வந்ததற்காக என் கட்சிகாரரைக் கண்டித்தேன். பொய் வழக்குகளை நான் எடுத்துக் கொள்ளுவதே இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவருக்கு நான் எடுத்துச் சொன்னபோது அவர் தமது தவறை ஒப்புக்கொண்டார். தனக்கு விரோதமாகத் தீர்ப்புக் கூறி விடும்படி நான் மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டதைக் குறித்தும் அவர் என்மீது கோபம் அடையவில்லை என்பது எனக்கு ஞாபகம். அது எப்படியாயினும் இந்த வழக்கில் நான் நடந்து கொண்ட விதத்தினால் என் தொழிலுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டு விடவில்லை. உண்மையில் இதனால் என் வேலை மிக எளிதாயிற்று. உண்மையினிடம் நான் கொண்டிருந்த பற்று மற்ற வக்கீல்களிடையே என் மதிப்பை அதிகப்படுத்தியது என்பதையும் கண்டேன். நிறத்தின் காரணமாக எனக்கு இடையூறுகள் இருந்தபோதிலும், சில சந்தர்ப்பங்களில் அவர்களுடைய அன்பைப் பெறுவதும் எனக்குச் சாத்தியமாயிற்று.

     வக்கீல் தொழில் சம்பந்தமான வேலையில் கட்சிகாரர்களிடமும் சகாக்களிடமும் என் அறியாமையை ஒளிக்கும் வழக்கமே எனக்கு இல்லை. எனக்குத் தெரியாது என்று நான் உணரும் போது வேறு யாராவது வக்கீலிடம் கலந்து ஆலோசிக்கும்படி கட்சிக்காரரிடம் கூறிவிடுவேன். என்னையே வக்கீலாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று கட்சிக்காரர் பிடிவாதமாக விரும்பினால் பெரிய வக்கீலை உதவிக்கு வைத்துக் கொள்ள அக்கட்சிக்காரரிடம் அனுமதி கேட்பேன். ஒளிவு மறைவில்லாத என்னு டைய இந்த நடத்தையினால் கட்சிக்காரர்களின் அளவற்ற அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானேன். பெரிய வக்கீலின் யோசனையைக் கேட்பது அவசியம் என்று இருக்கும் போதெல்லாம் அதற்குள்ள கட்டணத்தைக் கொடுக்க அவர்கள் எப்பொழுதும் தயாராய் இருந்தார்கள். இந்த அன்பும் நம்பிக்கையும் பொது வேலைகளில் எனக்கு அதிக உதவியாக இருந்தன.

     தென்னாப்பிரிக்காவில் நான் வக்கீல் தொழில் செய்து வந்ததன் நோக்கம் சமூகத்திற்குச் சேவை செய்வதே என்பதை முந்திய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இக்காரியத்திற்கும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இன்றியமையாததாகும். பணத்திற்காக வக்கீல் தொழில் நான் செய்த வேலைகளையும், சேவை என்றே, பெரிய மனம் படைத்த இந்தியர் மிகைப்படுத்திக் கொண்டனர். தங்களுடைய உரிமைகளுக்காகச் சிறைவாசக் கஷ்டத்தையும் ஏற்குமாறு நான் அவர்களுக்கு யோசனை கூறிய போது, அவர்களில் அநேகர் என் யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் இவ்விதம் செய்தது, என் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையினாலும் அன்பினாலுமே அன்றி, அம் முறையே சரியானது என்று அவர்கள் ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வந்ததனால் அன்று.

     இதை நான் எழுதும்போது இனிமையான நினைவுகள் எத்தனையோ என் உள்ளத்தில் எழுகின்றன. நூற்றுக்கணக்கான கட்சிக்காரர்கள் என் நண்பர்களாகவும் பொதுச் சேவையில் சக ஊழியர்களாகவும் ஆயினர். துன்பங்களும் அபாயங்களும் நிறைந்திருந்த வாழ்க்கையை அவர்களின் கூட்டுறவு இனிதாக்கியது.