(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)

நான்காம் பாகம்

47. கட்சிக்காரரைக் காப்பாற்றிய விதம்

     பார்ஸி ருஸ்தம்ஜியின் பெயர் இதற்குள் வாசகருக்குப் பழக்கமான பெயராகியிருக்கும். அவர் உடனடியாக என் கட்சிக்காரராகவும் சக ஊழியராகவும் ஆகிவிட்டவர்களில் ஒருவர். முதலில் அவர் என் சக ஊழியராகி, அதன் பிறகு என் கட்சிக்காரரானார் என்று சொல்வதே உண்மையாகவும் இருக்கலாம். அதிக அளவு நான் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி விட்டேன். அதனால், அவர் தமது சொந்தக் குடும்ப விஷயங்களில் கூட என் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து வந்தார். எங்கள் இருவரின் வாழ்க்கை முறைக்கும் அதிக வித்தியாசம் இருந்த போதிலும் அவர் நோயுற்றிருக்கும்போது, என் உதவியைத் தான் நாடுவார். அரை குறை வைத்தியனான என்னுடைய சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்குவதில்லை.

     இந்த நண்பர் ஒரு சமயம் பெரிய சங்கடத்தில் சிக்கிக் கொண்டார். அநேகமாக தாம் செய்துவரும் காரியங்களை எல்லாம் அவர் என்னிடம் கூறி வந்தாரெனினும், ஒரு விஷயத்தை மாத்திரம் என்னிடம் சொல்லாமல் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருந்தார். பம்பாயிலிருந்தும், கல்கத்தாவில் இருந்தும் ஏராளமாகச் சாமான்களைத் தருவித்து வரும் பெரிய வியாபாரி அவர். அடிக்கடி சுங்கவரி கொடுக்காமல் திருட்டுத்தனமாகச் சாமான்களை அவர் கடத்திவிடுவதும் உண்டு. ஆனால், சுங்க அதிகாரிகளுடன் நல்ல நட்பிருந்ததால் அவர்மீது யாரும் சந்தேகப்படுவதில்லை. தீர்வை விதிக்கும் போது அவர் காட்டும் பட்டியல்களை நம்பி, அதன்படியே தீர்வையும் விதிப்பார்கள். அவருடைய திருட்டுத்தனம் தெரிந்தும் சிலர் அதற்கு உடந்தையாகவும் இருந்திருக்கக் கூடும்.

     குஜராத்திக் கவியான அகோ என்பவர் கூறியிருக்கும் சிறந்த உவமையோடு சொல்லுவதென்றால் பாதரசத்தைப் போலவே திருட்டையும் வெகுநாளைக்கு மறைத்துவிட முடியாது. பார்ஸி ருஸ்தம்ஜி விஷயத்திலும் அது உண்மையாயிற்று. அந்த நல்ல நண்பர் ஒருநாள் என்னிடம் ஓடி வந்தார். கன்னத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “பாய்! நான் உங்களை ஏமாற்றி விட்டேன். என் குற்றத்தை இன்று கண்டுபிடித்து விட்டார்கள். நான் திருட்டுத்தனமாகச் சாமான்களை இறக்குமதி செய்து அகப்பட்டுக் கொண்டேன். என் கதி அதோகதிதான். நான் சிறைசென்று அழிந்தே போய் விடுவேன். இந்த ஆபத்திலிருந்து நீங்கள் ஒருவர்தான் என்னைக் காப்பாற்றக் கூடும். இதைத் தவிர வேறு எதையுமே உங்களிடம் கூறாமல் நான் ஒளித்ததில்லை. ஆனால், வியாபார தந்திரங்களைப் பற்றிய இந்த விஷயங்களை எல்லாம் உங்களிடம் சொல்லி, உபத்திரவப்படுத்த வேண்டாம் என்று எண்ணியே இந்தக் கள்ளக் கடத்தலைப்பற்றி உங்களுக்கு நான் சொல்லவில்லை. அதற்காக நான் இப்பொழுது மிகமிக வருந்துகிறேன்” என்றார்.

     அவரைச் சாந்தப்படுத்தினேன். “உங்களைக் காப்பதும் காவாததும் கடவுள் கையில் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் என் வழி இன்னது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுவதன் மூலமே உங்களைக் காப்பாற்ற நான் முயலக் கூடும்” என்று அவருக்குக் கூறினேன்.

     இதைக் கேட்டதும் அந்த நல்ல பார்ஸி அடியோடு மனம் இடிந்து போய்விட்டார். “உங்கள் முன்பு நான் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டது போதாதா?” என்று கேட்டார்.

     “நீங்கள் தவறிழைத்தது அரசாங்கத்திற்கேயன்றி எனக்கு அன்று. அப்படியிருக்க என்னிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ளுவது மாத்திரம் எப்படிப் போதும்?” என்று சாந்தமாக அவருக்குப் பதில் சொன்னேன்.

     “உங்கள் புத்திமதியின்படியே நடக்கிறேன். ஆனால், என்னுடைய பழைய வக்கீலான ஸ்ரீ ...... என்பவரிடம் நீங்கள் கலந்து ஆலோசிப்பீர்களா? அவரும் நண்பரே” என்றார் பார்ஸி ருஸ்தம்ஜி.

     விசாரித்ததில், திருட்டுத்தனமாகச் சரக்குகளை இறக்குமதி செய்வது நீண்ட காலமாகவே நடந்து வந்திருக்கிறது என்பது தெரிந்தது. ஆனால், இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது ஒரு சிறு தொகையைப் பொறுத்ததேயாகும். அவருடைய வக்கீலிடம் போனோம். அவர் தஸ்தாவேஜுகளைப் படித்துப் பார்த்தார். அவர் கூறியதாவது: “இந்த வழக்கு ஜூரிகளின் முன்னால் விசாரிக்கப்படும். நேட்டால் ஜூரிகள் இந்தியரைத் தண்டிக்காமல் விட மாட்டார்கள். ஆயினும், நான் நம்பிக்கையை இழந்து விடவில்லை” என்றார்.

     இந்த வக்கீலை எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. பார்ஸி ருஸ்தம்ஜி குறுக்கிட்டு, “உங்களுக்கு என் நன்றி. இந்த வழக்கில் ஸ்ரீ காந்தி கூறும் யோசனையின்படி நான் நடந்து கொள்ள விரும்புகிறேன். அவர் என்னை நன்றாக அறிவார். அவசியமாகும்போது நீங்கள் அவருக்கு ஆலோசனை கூறுங்கள்” என்றார். வக்கீல் விஷயத்தை இவ்விதமாக முடிவுசெய்து கொண்டு நாங்கள் பார்ஸி ருஸ்தம்ஜியின் கடைக்குச் சென்றோம்.

     இது சம்பந்தமாக என் கருத்தை விளக்கி அவரிடம் பின் வருமாறு கூறினேன்: “இந்த வழக்குக் கோர்ட்டுக்கே போகக் கூடாது என்று நினைக்கிறேன். உங்கள் மீது வழக்குத் தொடருவதோ, தொடராமல் விட்டுவிடுவதோ சுங்க அதிகாரியைப் பொறுத்திருக்கிறது. அவரோ, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியவராக இருக்கிறார். இந்த இருவரையும் சந்தித்துப் பேச நான் தயாராயிருக்கிறேன். அவர்கள் விதிக்கும் அபராதத்தைச் செலுத்திவிட நீங்கள் தயாராயிருக்க வேண்டும். அநேகமாக இந்த ஏற்பாட்டிற்கு அவர்கள் சம்மதித்து விடக்கூடும். இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் சிறை செல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டியதுதான். அவமானம் குற்றம் செய்வதில்தான் இருக்கிறதேயன்றி, அக்குற்றத்திற்காகச் சிறை செல்லுவதில் அல்ல என்பதே என் அபிப்பிராயம். அவமானத்திற்கான காரியமோ முன்பே செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பிராயசித்தம் என்றே சிறைவாசத்தை நீங்கள் கருத வேண்டும். இதில் உண்மையான பிராயச்சித்தம், இனி திருட்டுத் தனமாகச் சரக்குகளைக் கடத்துவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டு விடுவதேயாகும்.”

     நான் கூறிய இந்தப் புத்திமதி முழுவதையும் பார்ஸி ருஸ்தம்ஜி சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார் என்று நான் சொல்லுவதற்கில்லை. அவர் மிகுந்த தைரியசாலியே. ஆனால், அந்தச் சமயத்தில் அவருக்குத் தைரியமே இல்லை. அவருடைய நற்பெயருக்கும் கீர்த்திக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. எவ்வளவோ கவனமாகவும் சிரமப்பட்டும் அவர் கட்டியிருந்த அக்கட்டிடம் சுக்குச்சுக்காகச் சிதறிவிடுவதென்றால் பிறகு அவர் கதி என்ன?

     “சரி, என்னை உங்களிடம் முற்றும் ஒப்படைத்துவிட்டேன் என்று உங்களிடம் சொல்லிவிட்டேன். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்” என்றார்.

     பிறரிடம் விவாதித்து என் பக்கம் திருப்புவதற்கு எனக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவையும் நான் இந்த வழக்கில் உபயோகித்தேன். சுங்க அதிகாரியைப் போய்ப் பார்த்தேன். அவரிடம் முழுவதையும் தைரியமாக எடுத்துக் கூறினேன். கணக்குப் புத்தகங்கள் முழுவதையும் அவரிடமே ஒப்படைத்து விடுவதாகவும் வாக்களித்தேன். தாம் செய்து விட்ட தவறுக்காகப் பார்ஸி ருஸ்தம்ஜி எவ்வளவு வருத்தப்படுகிறார் என்பதையும் எடுத்துக்கூறினேன்.

     சுங்க அதிகாரி கூறியதாவது: “அந்தப் பார்ஸியிடம் எனக்குப் பிரியம் உண்டு. இவ்விதம் முட்டாள்தனமான காரியத்தை அவர் செய்துவிட்டதற்காக வருந்துகிறேன். இதில் என் கடமை இன்னது என்பது உங்களுக்கே தெரியும். அட்டர்னி ஜெனரல் கூறும் வழியில் நான் நடக்க வேண்டியவன். ஆகவே, உங்கள் முயற்சியையெல்லாம் அவரிடம் செய்யும்படி உங்களுக்கு யோசனை கூறுகிறேன்.”

     “பார்ஸி ருஸ்தம்ஜியைக் கோர்ட்டுக்கு இழுத்து விடவேண்டும் என்று நீங்கள் பிடிவாதம் செய்யாமல் இருந்தால் நன்றியறிதல் உள்ளவனாவேன்” என்றேன்.

     இந்த வாக்குறுதியை அவரிடம் பெற்றுக்கொண்டு பிறகு அட்டர்னி ஜெனரலுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினேன். அவரை நேரிலும் போய்ப் பார்த்தேன். நான் கபடமின்றி நடந்து கொண்டதை அவர் பாராட்டினார் என்று கூறச் சந்தோஷமடைகிறேன். நான் எதையுமே மறைக்கவில்லை என்பதை அவர் நிச்சயமாக அறிந்துகொண்டார். “இல்லை என்ற பதிலை நீங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டீர்கள் என்பதைக் காண்கிறேன்” என்று அவர் சொன்னார். என்னுடைய விடாமுயற்சியையும் கபடமின்மையையும் குறித்து அவர் இவ்விதம் கூறியது, இந்த வழக்கில்தானா அல்லது வேறு வழக்கிலா என்பது இப்பொழுது எனக்கு ஞாபகமில்லை.

     பார்ஸி ருஸ்தம்ஜி மீதிருந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டது. தீர்வை செலுத்தாமல் கடத்தியதாக அவர் ஒப்புக்கொண்ட தொகைக்கு இரு மடங்கான தொகையை அவர் அபராதமாகச் செலுத்தினார். இந்த வழக்குச் சம்பந்தமான முழு விவரங்களையும் அவர் எழுதினார். அப்படி எழுதியதைக் கண்ணாடி போட்டுத் தமது அலுவலகத்தில் தொங்கவிட்டார். தமது சந்ததியாருக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் நிரந்தரமான எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவே அவர் இவ்விதம் செய்தார்.

     செய்துவிட்ட குற்றத்திற்காகப் பார்ஸி ருஸ்தம்ஜி வருந்துவது தாற்காலிகமானதே அன்றி நிரந்தரமானதாக இராது என்று அவருடைய நண்பர்கள் என்னை எச்சரிக்கை செய்தனர். இந்த எச்சரிக்கையைக் குறித்து நான் ருஸ்தம்ஜியிடம் கூறியபோது, “உங்களை நான் ஏமாற்றினால் என் கதி என்ன ஆவது?” என்று கூறினார்.