உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 5. ஆன்ம சோதனையின் பலன் 1893-இல் கிறிஸ்தவ நண்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டபோது நான் ஒன்றும் தெரியாதவனாகவே இருந்தேன். ஏசுவின் உபதேச மேன்மையை நான் உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டு விடும்படி செய்வதற்கு அவர்கள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். நானோ, திறந்த மனத்துடன் அவர்கள் கூறியதையெல்லாம் அடக்கத்தோடும் மரியாதையோடும் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் என் சக்திக்கு எட்டிய வரையில் இயற்கையாகவே ஹிந்து சமயத்தைக் குறித்து நான் படித்து வந்ததோடு மற்றச் சமயங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முயன்று வந்தேன். 1903-ஆம் ஆண்டிலோ, நிலைமை ஓரளவுக்கு மாறுதல் அடைந்துவிட்டது. பிரம்மஞான சங்க நண்பர்கள், என்னை அச்சங்கத்திற்குள் இழுத்துவிட நிச்சயமாக முயன்றே வந்தனர். ஹிந்து என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தின் பேரிலேயே அவ்வாறு முயன்றார்கள். பிரம்மஞான சங்க நூல்களில் ஹிந்து தருமத்தைப் பற்றிய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஆகையால், நான் அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்று இந்த நண்பர்கள் கருதினார்கள். சமஸ்கிருத மொழி எனக்கு அவ்வளவாக நன்றாகத் தெரியாது என்றும், ஹிந்து சமய நூல்களை நான் மூலமொழியில் படித்ததில்லை என்றும், மொழிபெயர்ப்புக்களை நான் படித்ததுகூட மிகக்குறைவே என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். ஆனால், சமஸ்காரம் அல்லது பூர்வஜன்ம வாசனை, மறுபிறப்பு ஆகியவைகளில் அவர்கள் நம்பிக்கையுள்ளவர்களாகையால், நான் கொஞ்சமாவது தங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே, ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பது போலானேன். இந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சுவாமி விவேகானந்தரின் ‘ராஜ யோகம்’ என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். எம்.என். துவிவேதி எழுதிய ‘ராஜயோகம்’ என்ற நூலை, வேறு சிலருடன் சேர்ந்து படித்தேன். ஒரு நண்பருடன் பதஞ்சலியின் யோக சூத்திரங்களையும், மற்றும் பலருடன் பகவத் கீதையையும் நான் படிக்க வேண்டியதாயிற்று. ஒருவகையான மெய் நாடுவோர் சங்கத்தை நாங்கள் அமைத்துக்கொண்டு ஒழுங்காக நூல்களைப் படித்து வந்தோம். கீதையினிடம் இதற்கு முன்பே எனக்குப் பக்தி இருந்தது; அது என் உள்ளத்தைக் கவர்ந்தும் இருந்தது. அதை ஆழ்ந்து படிக்க வேண்டியதன் அவசியத்தை இப்பொழுது உணர்ந்தேன். என்னிடம் கீதையின் இரண்டொரு மொழிபெயர்ப்புக்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சமஸ்கிருத மூலநூலைப் புரிந்து கொள்ள முயன்றேன். தினம் இரண்டொரு சுலோகத்தை மனப்பாடம் செய்துவிடுவது என்றும் தீர்மானித்தேன். எனது காலைக் கடன்களைச் செய்யும் நேரத்தை இதற்குப் பயன்படுத்திக் கொண்டேன். இவ்வேலைகளை முடிப்பதற்கு எனக்கு முப்பத்தைந்து நிமிடங்களாகும். பல் துலக்குவதற்குப் பதினைந்து நிமிடங்கள்; குளிக்க இருபது நிமிடங்கள். மேனாட்டு வழக்கத்தை அனுசரித்து, நின்று கொண்டே பல் துலக்குவேன். அப்போது எதிரேயுள்ள சுவரில் கீதையின் சுலோகங்களை எழுதிய காகிதத்தை ஒட்டி விடுவேன். நினைவுபடுத்திக் கொள்ள அவ்வப்போது அதைப் பார்த்துக் கொள்ளுவேன். அன்றாடம் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டிய சுலோகங்களை மனப்பாடம் செய்து கொள்வதற்கும், முன்னால் மனப்பாடம் செய்திருந்த சுலோகங்களை நினைவுபடுத்திக் கொள்ளுவதற்கும் எனக்கு அந்த நேரம் போதுமானதாக இருந்தது. இவ்வாறு பதின்மூன்று அத்தியாயங்களை மனப்பாடம் செய்துவிட்டதாக எனக்கு ஞாபகம். ஆனால், வேறு வேலைகள் அதிகமாகிவிட்டபோது கீதையை மனப்பாடம் செய்வதை விட்டுவிட வேண்டியதாயிற்று. சிந்திப்பதற்கு எனக்கு இருந்த நேரத்தையெல்லாம், சத்தியாகிரகத்தின் பிறப்பும் அதன் வளர்ச்சியும் கிரகித்துக் கொண்டு விட்டன. இன்றுவரை நிலைமை அவ்வாறே இருந்து வருகிறது எனலாம். கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூறமுடியும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாகக் கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைபோல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். அபரிக்கிரகம் (உடைமை வைத்துக் கொள்ளாமை), சமபாவம் (சமத்துவம்) போன்ற சொற்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்தச் சமபாவத்தை எப்படி வளர்ப்பது, எப்படிப் பாதுகாப்பது என்பதே பிரச்னை. சிலர் நம்மை அவமதிப்பவர்கள்; மற்றும் சிலர் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்; நேற்றுச் சக ஊழியர்களாக இருந்தவர்கள் இன்று அர்த்தமில்லாத எதிர்ப்புகளை எல்லாம் கிளப்புகிறார்கள்; இவர்களல்லாமல் எப்பொழுதுமே நல்லவர்களாக இருந்து வருபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையுமே ஒருவர் சமபாவத்துடன் நோக்குவது எப்படி? உடைமையெதுவுமே இல்லாதிருப்பதும் எவ்வாறு? நம் உடம்பே ஓர் உடைமை அல்லவா? மனைவியும் குழந்தைகளும் உடமைகளல்லவா? என்னிடம் அலமாரி நிறைய இருக்கும் புத்தகங்களையெல்லாம் நான் கொளுத்திவிட வேண்டுமா? எனக்கு இருப்பவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் கடவுளைப் பின்பற்ற வேண்டுமா? இதற்கெல்லாம் உடனே நேரான பதில் கிடைத்தது. ‘என்னிடம் இருப்பவைகளை யெல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது’ என்பதே அந்தப் பதில். ஆங்கிலச் சட்டத்தைக் குறித்து நான் படித்திருந்ததும் எனக்கு உதவி செய்தது. சமநீதியின் தத்துவத்தைக் குறித்து ஸ்னெல் எழுதியிருந்த விளக்கம் என் நினைவுக்கு வந்தது. கீதையின் உபதேசத்தை அனுசரித்துக் கவனித்தபோது ‘தருமகர்த்தா’ என்ற சொல்லின் பொருள் எனக்கு மிகத் தெளிவாக விளங்கியது. நீதி சாத்திரத்தினிடம் எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது. மத தருமத்தை நான் அதில் கண்டேன். உடைமை கூடாது என்று கீதை உபதேசிப்பதன் உண்மைக் கருத்தையும் உணர்ந்தேன்.’ மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் தருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தருமகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான் சொத்துக்களிருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதுபோல எண்ண வேண்டும்’ என்பதே அதன் பொருள் எனக்கண்டேன். உடைமையின்மைக்கும் எல்லோரையும் சமமாகப் பாவிப்பதற்கும், மனமாற்றமும், நடத்தையில் மாறுபாடும் ஏற்படுவது முதல் அவசியம் என்று பட்டப் பகல் போல எனக்கு வெட்ட வெளிச்சமாகப் புலனாயிற்று. என் மனைவியையும் குழந்தைகளையும் என்னையும் படைத்த கடவுள், எங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவார் என்பதில் திடமான உறுதி கொண்டேன். உடனே நான் ரேவா சங்கர் பாய்க்கு எழுதி, இன்ஷூரன்ஸூக்கு மேற்கொண்டு பணம் கட்டவேண்டாம் என்று அறிவித்தேன். இதுவரை கட்டிய பணத்தில் கிடைக்கக் கூடியதைப் பெறப் பார்க்கும்படியும், இல்லா விட்டால் அத்தொகையைப் போனதாகவே வைத்துக்கொள்ளும் படியும் எழுதினேன். எனக்குத் தந்தையைபோல் இருந்துவந்தவரான என் சகோதரருக்கும் கடிதம் எழுதினேன். அதுவரையில் நான் மிச்சமாக வைக்க முடிந்ததையெல்லாம் நான் அவருக்கே கொடுத்து விட்டதாகவும், இனி என்னிடமிருந்து அவர் வேறு எதுவும் எதிர்பார்ப்பதற்கு இல்லை என்றும், மேற்கொண்டும் என்னிடம் ஏதாவது மீதமிருக்குமானால் அதை இந்திய சமூகத்தின் நன்மைக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்றும் அவருக்கு விளக்கினேன். என் சகோதரர் இதை எளிதாக அறிந்துகொள்ளும்படி செய்ய என்னால் ஆகவில்லை. அவருக்கு நான் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விளக்கி அவர் எனக்குக் கடுமையான பாஷையில் கடிதம் எழுதினர். எங்கள் தந்தையைவிட நான் அதிகப் புத்திசாலியாகி விட்டதாக எண்ணிக்கொண்டு விட வேண்டாம் என்றார். தாம் செய்வதைப் போன்றே நானும் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்று எழுதினார். தந்தையார் என்ன செய்தாரோ அதையே நான் செய்து வருகிறேன் என்பதைக் குறிப்பிட்டு, அவருக்கு எழுதினேன். ‘குடும்பம்’ என்பதன் பொருளைக் கொஞ்சம் விரிவுபடுத்திக் கொண்டால், நான் மேற்கொண்ட காரியத்தின் விவேகம் நன்கு தெளிவாகும். என் சகோதரர் என்னைக் கைவிட்டுவிட்டார். கடிதம் எழுதுவதைக்கூட அடியோடு நிறுத்திவிட்டார். இதனால், அதிகமான வருத்தம் அடைந்தேன். ஆனால், என் கடமை என்று நான் கருதியதைக் கைவிடுவதென்பதோ இன்னும் அதிக மன வேதனையைத் தருவதாகிவிடும். ஆகையால், குறைவான மனக்கஷ்டத்தை அளிப்பதாக இருப்பதைச் செய்தேன். ஆனால், அது என் சகோதரரிடம் எனக்கு இருந்த பக்தியைப் பாதிக்கவில்லை. அது எப்பொழுதும் போல் தூயதாகவும் அதிகமாகவுமே இருந்து வந்தது. என்மீது அவர் வைத்திருந்த அபாரமான அன்பே அவருடைய துயரத்திற்கெல்லாம் காரணம். குடும்பத்தின் விஷயத்தில் நான் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாரேயன்றி என் பணத்தைப் பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அவருடைய வாழ்நாளின் அந்திய காலத்தில் என்னுடைய கருத்தின் சிறப்பை அவர் உணர்ந்தார். மரணத் தறுவாயிலிருந்த சமயம், நான் செய்ததே சிறந்த காரியம் என்பதைத் தெரிந்துகொண்டு எனக்கு உருக்கமான கடிதம் ஒன்றும் எழுதினார். தந்தை தனயனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதைப் போல் அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். தமது புதல்வர்களை என்னிடம் ஒப்படைப்பதாகவும், எனக்குச் சரி என்று தோன்றும் வழியில் அவர்களை வளர்க்குமாறும் அறிவித்தார். என்னைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தால் துடித்துக் கொண்டிருப்பதாகவும் எழுதினார். தென்னாப்பிரிக்காவுக்கு வரத்தாம் விரும்புவதாகத் தந்தி கொடுத்தார். அவரை வருமாறு பதிலுக்குத் தந்தி கொடுத்தேன். ஆனால், கடவுள் சம்மதம் இல்லாமல் போயிற்று. அவருடைய புதல்வர்களைக் குறித்து அவர் விரும்பியதும் நிறைவேறவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அவருடைய குமாரர்கள் பழைய சூழ்நிலையில் வளர்ந்தவர்கள். ஆகையால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களை என்பால் இழுத்துக்கொள்ளவும் என்னால் ஆகவில்லை. அது அவர்கள் குற்றமன்று. இயற்கையான குணத்தை மாற்றிவிட யாரால் தான் முடியும்? பிறப்போடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டுவிட முடியும்? தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே தம் புதல்வர்களும், தமது பராமரிப்பில் இருப்போரும் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை. பெற்றோராயிருப்பது எவ்வளவு பயங்கரமான பொறுப்பு என்பதைக் காட்டுவதற்கு இந்த உதாரணம் ஓரளவுக்குப் பயனுள்ளதாகிறது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |