உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 8. ஓர் எச்சரிக்கை அடுத்த அத்தியாயத்திற்கு வரும் வரையில் நான் வேறு விஷயத்திற்குத்தான் போய்க்கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறேன். மண், நீர் சிகிச்சை முறைகளில் நான் சோதனை நடத்தியதோடு உணவு சம்பந்தமான சோதனைகளையும் சேர்த்துச் செய்துகொண்டிருந்தேன். அதைப்பற்றிப் பின்னால் குறிப்பிட எனக்குச் சமயம் இருக்குமென்றாலும், உணவுச் சோதனையைக் குறித்து இங்கே சில விஷயங்களைக் கூறுவது பொருத்தமற்றதாகாது. நான் நடத்திய உணவுச் சோதனைகளைக் குறித்து இப்பொழுதோ அல்லது இனிமேலோ நான் விவரமாகக் கூறிக்கொண்டிருக்க வேண்டியிராது. ஏனெனில், இதைக் குறித்துக் குஜராத்தியில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவை பல ஆண்டுகளுக்கு முன்னால் ‘இந்தியன் ஒப்பீனியனி’ல் வெளிவந்தன. பின்னர் அவை ‘ஆரோக்கிய வழி’ என்ற பெயருடன் புத்தக ரூபமாகவும் வெளிவந்து இருக்கின்றன. என்னுடைய சிறிய நூல்களில் அதுவே கீழை நாடுகளிலும் மேலை நாடுகளிலும் ஏராளமானவர்களால் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் ரகசியம் என்ன என்பதை இது வரையிலும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கட்டுரைகள் ‘இந்தியன் ஒப்பீனியன்’ வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. ஆனால், ‘இந்தியன் ஒப்பீனியனை’ப் பார்த்தேயிராத கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் உள்ள அநேகருடைய வாழ்க்கையில் அச்சிறு பிரசுரம் பிரமாதமான மாறுதலை உண்டாக்கியிருக்கிறது என்பதை அறிவேன். ஏனெனில், இவ்விஷயத்தைக் குறித்து அநேகர் என்னுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆகையால், அச்சிறு புத்தகத்தைப்பற்றிச் சில விஷயங்களை இங்கே கூறவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், அதில் நான் கூறியிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் காணவில்லை யாயினும், என் நடைமுறைப் பழக்கத்தில் சில பெரிய மாறுதல்களைச் செய்து கொண்டிருக்கிறேன். அப்புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அது தெரிந்திருக்காது. அதை அவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எழுதியிருக்கும் மற்றெல்லாவற்றையும் போலவே அச்சிறு புத்தகத்தையும் ஆத்மார்த்த நோக்கத்துடனேயே எழுதியிருக்கிறேன். அந்த நோக்கமே என் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஆக்கம் அளித்திருக்கிறது. ஆகையால், அப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் சில தத்துவங்களை இன்று நான் அனுசரிக்க முடியாமல் இருப்பது எனக்கு ஆழ்ந்த துயரத்தை அளித்துவருகிறது. குழந்தையாக இருக்கும்போது உண்ணும் தாய்ப்பாலைத் தவிர மனிதன் பால் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. சூரிய வெப்பத்தினால் பக்குவமான பழங்களையும் கொட்டைகளையும் தவிர மனிதனுடைய உணவில் வேறு எதுவுமே இருக்கக்கூடாது. திராட்சை போன்ற பழங்களிலிருந்தும், பாதாம் பருப்புப்போன்ற கொட்டைகளிலிருந்தும் மனிதன் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் வேண்டிய போஷணையைப் போதுமான அளவு பெற முடியும். இத்தகைய உணவோடு இருக்கும் ஒருவருக்குச் சிற்றின்ப இச்சை போன்ற இச்சைகளை அடக்குவது எளிதாகிறது. “ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான்” என்ற இந்தியப் பழமொழியில் அதிக உண்மை இருக்கிறது என்பதை நானும் என் சக ஊழியர்களும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். இக் கருத்தே அப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் என்னுடைய கொள்கைகளில் சிலவற்றை, என் நடைமுறையில் எனக்கு நானே மறுத்துக்கொள்ள வேண்டியவனாகிறேன். போருக்காகப் படைக்கு ஆள் சேர்க்கும் பிரச்சாரத்தில் கேடாவில் நான் ஈடுபட்டிருந்த சமயத்தில் உணவில் ஏற்பட்ட ஒரு தவறு, என்னைப் படுக்க வைத்துவிட்டது. இறக்கவேண்டிய நிலைமைக்கும் வந்துவிட்டேன். அதனால், சிதைந்து போன உடலைப் பால் சாப்பிடாமலேயே தேற்றிக் கொண்டு விட நான் வீணில் முயன்றேன். பாலுக்குப் பதிலாக வேறு ஒன்றை எனக்குக் கூறுமாறு எனக்குத் தெரிந்த டாக்டர்கள், வைத்தியர்கள், விஞ்ஞானிகள் ஆகியவர்களையெல்லாம் கேட்டேன். மூங்கு நீர், மௌரா எண்ணெய், பாதாம்-பால் ஆகியவைகளைச் சாப்பிட்டுச் சோதனை செய்து என் உடல் நிலையை மேலும் கெடுத்துக் கொண்டேன். நோயிலிருந்து எழ எதுவும் எனக்கு உதவி செய்யவில்லை. ஆயுர்வேத வைத்தியர்கள், சரகர் வைத்திய சாத்திரத்திலிருந்து சில பாடல்களை எனக்குப் படித்துக் காட்டினர். நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதில் மதக் கோட்பாடுகளைக் கவனிக்கக் கூடாது என்று அவை கூறின. ஆகவே பால் சாப்பிடாமலேயே வாழ்வதற்கு எனக்கு உதவி செய்ய அவர்களை எதிர்பார்த்துப் பயனில்லை. மாட்டு மாமிச சூப்பையும் பிராந்தியையும் சாப்பிடுமாறு தயக்கமின்றிச் சிபாரிசு செய்கிறவர்கள், பால் இல்லாத ஆகாரத்தைக் கொண்டு நான் உயிர்வாழ உதவி செய்வார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பசுவின் பாலையோ, எருமைப் பாலையோ நான் சாப்பிடுவதற்கில்லை. ஏனென்றால், அவற்றைச் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டுவிட்டேன். எந்தப் பாலையுமே சாப்பிடுவதில்லை என்பது தான் விரதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நான் இந்த விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் தாய்ப் பசுவும் தாய் எருமையுமே என் மனத்தில் இருந்ததாலும், உயிர்வாழ நான் விரும்பியதாலும், விரதத்தின் தன்மையை வற்புறுத்துவதில் எப்படியோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டு ஆட்டுப்பால் சாப்பிடத் தீர்மானித்தேன். ஆட்டுப் பாலை நான் சாப்பிட ஆரம்பித்தபோது என்னுடைய விரதத்தில் அடங்கியிருந்த உணர்ச்சி நாசமாக்கப்பட்டு விட்டது என்பதை நான் முற்றும் உணர்ந்தே இருந்தேன். ரௌலட் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்த வேண்டும் என்ற எண்ணமே அப்பொழுது என்னை ஆட்கொண்டிருந்தது. அதோடு உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. இதன் விளைவாக என் வாழ்க்கையின் மிகப் பெரிய சோதனை ஒன்று அதோடு நின்று போயிற்று. ஆன்மா, எதையும் சாப்பிடுவதுமில்லை; குடிப்பதும் இல்லை. ஆகையால், ஒருவர் எதைச் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்பதற்கும் ஆன்மாவுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்று விவாதிக்கப்படுகிறது என்பதை அறிவேன். நாம் எதை உள்ளே போடுகிறோம் என்பது முக்கியம் அல்ல; உள்ளிருந்து - பேச்சினாலும் நடவடிக்கையினாலும் - எதை வெளியே விடுகிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த வாதத்தில் ஓரளவு அர்த்தம் இருக்கிறது, என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த வாதத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட என்னுடைய உறுதியான நம்பிக்கை இன்னது என்பதைத் தெரிவிப்பதோடு திருப்தியடைகிறேன். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்து அதன் மூலம் கடவுளை நாடுபவருக்கும், கடவுளை நேருக்கு நேராகக் காண விரும்புகிறவருக்கும், எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுத்திட்டம் இருக்கவேண்டியது எப்படி அவசியமோ அதே போல அவருடைய சாப்பாட்டின் அளவிலும் தன்மையிலுங் கூடக் கட்டுத் திட்டம் இருக்கவேண்டியது முக்கியம் என்பதே எனது திடமான நம்பிக்கை. என்றாலும், என்னுடைய தத்துவத்தை நானே நடத்திக் காட்டமுடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தில், அத் தகவலை நான் கூறி விடுவதோடு அதைக் கையாளுவதைக் குறித்துக் கடுமையான எச்சரிக்கையையும் நான் செய்யவேண்டும். ஆகையால், நான் கூறிய தத்துவத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு பால் சாப்பிடுவதை விட்டுவிட்டவர்கள், ஒவ்வொரு வகையிலும் அது அனுகூலமாக இருப்பதாக அவர்களே கண்டாலன்றி, அனுபவமுள்ள வைத்தியர்கள் அவர்களுக்கு ஆலோசனை கூறியிருந்தாலொழிய அந்தப் பரிசோதனையில் பிடிவாதமாக இருக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறேன். இதுவரையில் என்னுடைய அனுபவம் ஒரு விஷயத்தைக் காட்டிவிட்டது. ஜீரண சக்தி பலமாக இல்லாதவர்களுக்கும், படுத்த படுக்கையாக இருக்கிறவர்களுக்கும், பாலுக்கு இணையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய போஷாக்குள்ள ஆகாரம் வேறு எதுவுமே இல்லை என்பதுதான் அது. இந்த அத்தியாயத்தைப் படிக்க நேரும் இத்துறையில் அனுபவமுள்ளவர்கள் யாராவது, தாம் படித்ததனால் அல்லாமல் அனுபவத்தின் மூலம் பாலைப்போலப் போஷிக்கக் கூடியதும், போஷாக்குள்ளதுமான ஒரு தாவரப் பொருளைப் பாலுக்குப் பதிலாகக் கூறுவாராயின் அப்படிப்பட்டவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனாவேன். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |