'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

2

     பெரும்பாலும் ஒருவர் எந்த இனத்தைச் சார்ந்தவராகப் பிறக்கிறாரோ அதே இனத்தவராகத் தான் தன் வாழ்நாளைக் கழிக்கிறார். ஒரு சிலர் வேண்டுமானால் இடையிலே இனம் மாறினாலும், அவர்களும் தாங்கள் புதிதாக மாறிய இனத்தவராகவே தன் மீதி வாழ்நாளைக் கழிக்கிறார்கள். அதே போல் தான் நமது 'அரசு ஊழியர்' இனத்தவரும். அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து அவர்கள் இறக்கும் நாள் வரையில் அவர்கள் அரசு ஊழியர்களாகத் தான் உடலாலும் உள்ளத்தாலும் விளங்குகிறார்கள்.

     பல அரசு ஊழியர்களின் வீடுகளில் அவர்களின் பெயர் பலகைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் அவர்களின் பெயருக்குக் கீழே அவர்களின் பதவி கட்டாயம் இருக்கும். அதில் தான் எத்தனை வினோதங்கள்!

     தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் யாரும் தங்கள் வீட்டின் முன்னால் தங்களின் நிறுவனப் பெயரை எழுதி வைத்து நான் பார்த்ததில்லை. தனியார் துறையில் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களைத் தவிர பிறர் அவ்வாறு எழுதுவதில்லை.

     அதே போல் பொது நிகழ்ச்சிகளிலோ, அல்லது ஊடகங்களில் பங்கேற்கும் போதோ கூட அரசுத் துறையினர் மட்டுமே தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களோ தங்கள் அடையாளத்தை வெளியிட அவர்களும் விரும்புவதில்லை, பிறரும் அவர் அவ்வாறு வெளியிடுவதை அனுமதிப்பதும் இல்லை. (உதாரணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்).

     அதே போல் வாகனங்களில் பெயர் எழுதுவது. அரசு ஊழியர்களில் பலரின் வாகனங்கள் அவர்களின் பெயரைத் தாங்கி நிற்கின்றனவோ இல்லையோ, கட்டாயம் அவர்களின் துறையின் பெயரை அல்லது அவர்களது பதவியின் பெயரைத் தாங்கி நிற்கும். இத்தனைக்கும் அது அவர்களின் சொந்த வாகனமாக இருக்கும். உதாரணமாக 'போலீஸ்' 'வருமான வரித்துறை', 'டெலிபோன்', 'மின்துறை'.

     இவர்களின் பதவிக்காலத்தில் மட்டும் தான் இவர்கள் இதனைப் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தால், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இவை ஒட்டிக் கொண்டு இருக்கும். பெரும்பாலோர் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு 'ஓய்வு' என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்வர். ஆனால் ஒரு சிலரோ அதைக் கூட சேர்க்க மாட்டார்கள். கல்யாணப் பத்திரிக்கையிலோ அல்லது பிறவற்றிலோ அவர்களின் பெயருக்குப் பின்னால் மற்றவர்கள் ஓய்வு என்று போட விரும்பினால் கூட இவர்கள் அவ்வாறு போட வேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் உடலால் ஓய்வு பெற்றுவிட்டாலும், மனத்தால் இன்னும் ஓய்வு பெறவில்லையாம்...

     வெளியிடத்தில் எங்கேயாவது தங்களின் பெயரைத் தெரிவிக்க வேண்டிய போது கூட அவர்கள் தங்களின் பெயரை மட்டும் கூறமாட்டார்கள், தேவையிருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் தங்களின் பதவியையும் சேர்த்துத்தான் சொல்வார்கள். நேற்று கூட நான் வங்கிக்கு சென்றிருந்த போது, என் அருகில் இருந்தவர், வங்கி அலுவலரிடம் அவருடைய புதிய வங்கிக் கணக்கிற்கு ஏடிஎம் கார்டு வந்துவிட்டதா என விசாரித்தார். வங்கி அலுவர் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கிறேன் என்றதும் அவர் 'மணிகண்டன், ரிடையர்டு போஸ்டு மாஸ்டர்' என்றாரே பார்க்கலாம். பாவம் அவர் என்ன செய்வார், எல்லா இடத்திலும் அவருக்கும் அப்படிச் சொல்லிச் சொல்லியே பழகிவிட்டது.

     இன்னும் சிலருக்கோ அவரின் பெயரையோ உறவு முறையையோ சொல்லி கூப்பிடுவதை விட அவர் வகித்த பதவியின் பெயரை சொல்லிக் கூப்பிட்டால்தான் சந்தோஷமாக இருக்கும். உதாரணமாக, ஏ.ஓ. சார், சூப்பிரண்டு சார், தாசில்தார் சார், அக்கவுண்டண்ட் சார் என்று. என்ன மனதுக்குள் சிரிக்கிறீர்கள்... உங்களுக்கும் அப்படிப்பட்ட ஒருவரைத் தெரியுமா?

     நான் சில ஆண்டுகளுக்கு முன் குடியிருந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி அரசுத் துறையில் வேலை பார்த்து வந்தார். ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் நான் அந்த வீட்டில் குடியிருந்தும் அடுத்த வீட்டுககார பெண்மணி எந்த துறையில் என்ன வேலை பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அவர் வீட்டு வாயிலிலும் ஒரு பெயர்ப் பலகை இருந்தது. அதில் அவர் பெயருக்குக் கீழே என்ன எழுதியிருந்தது தெரியுமா?

     "Govt Officer"



'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13